29 Jul 2023

உங்கள் ஆசை உண்மையானதா?

உங்கள் ஆசை உண்மையானதா?

நீங்கள் எதற்கு ஆசைப்பட்டாலும் அதை அடைந்தே தீருவீர்கள். மனதின் சுபாவம் அப்படி. உங்கள் ஆசை நிறைவேறும் வரை மனம் சும்மா இருக்காது. ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும்.

படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அந்த ஆசையை உங்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அந்த ஆசை உண்மையானதாக இருக்க வேண்டும். போலித்தனமானதாக இருக்கக் கூடாது. மற்றவர்கள் ஆசைப்படுகிறார்களே என்பதற்காக ஆசைப்படுவதாக இருக்கக் கூடாது. பெற்றோர்கள் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்களே என்பதற்காக ஆசைப்படுவதாகவும் இருக்கக் கூடாது. ஆசிரியர்கள் நெருக்கடி கொடுக்கிறார்களே என்பதற்காக ஆசைப்படுவதாகவும் இருக்கக் கூடாது.

நீங்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்படலாம். பொறியியல் படிக்க வேண்டும் என்று ஆசைப்படலாம். போட்டித் தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படலாம். அதற்கெல்லாம் நம்மால் படிக்க முடியுமா என்ற தயக்கமும் உங்களுக்கு இருக்கலாம்.

உங்கள் ஆசை உண்மையானதாக இருந்தால் உங்களால் உங்கள் ஆசையில் வெற்றி பெற முடியும். மருத்துவம் படிக்கச் சொல்கிறார்களே என்பதற்காகப் படிக்க நினைத்தால் அது உங்களுடைய ஆசை அன்று. உங்களை மருத்துவத்திற்குப் படிக்கச் சொல்பவரின் ஆசை அது. அதில் உங்களால் வெற்றி பெற முடியாது. உங்களால் உங்களுடைய ஆசையை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்ள முடியுமே தவிர மற்றவர்களின் ஆசையை அன்று. ஆகவே உங்கள் ஆசை என்னவோ அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு வணிகம் படிக்கத்தான் ஆசை என்றால் நீங்கள் வணிகத்தைத்தான் படிக்க வேண்டும். வணிகத்தை விட தகவல் தொழில்நுட்பத்தில் வாய்ப்புகள் அதிகம் என்று மற்றவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக ஆசைப்பட்டெல்லாம் அதில் உங்களால் வெற்றி பெற முடியாது. உங்களுடைய உள்ளார்ந்த ஆர்வம் எதுவோ அந்த ஆர்வத்தை அடைய ஆசைப்பட்டீர்கள் என்றால் உங்களால் அந்த ஆசையை அடைய முடியும். இதுதான் ஆசை நிறைவேறுவதில் உள்ள சூட்சமம்.

குழந்தைகள் பொதுவாகப் பொம்மைகள் மீது ஆசைப்படுவார்கள். அந்த ஆசையை எப்படியும் அடைந்தே தீருவார்கள். தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முதலில் அப்பாவிடம் பொம்மை வாங்கித் தரச் சொல்வார்கள். அப்பா முடியாதென்றால் அம்மாவிடம் செல்வார்கள். அம்மாவும் மாட்டேன் என்று விட்டால் மாமாவிடம் காரியம் நடக்குமா என்று பார்ப்பார்கள். மாமாவிடமும் ஆகாது என்றால் சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டி என்று ஒவ்வொரு உறவாகச் சாத்தியமாகும் அத்தனை வழிகளிலும் முயன்று பார்ப்பார்கள். எந்த வழியிலும் முடியவில்லை என்றால் முடிவில் தாமே காசு சேர்த்து வாங்கிப் பார்ப்போம் என்றும் முயல்வார்கள். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் வரை குழந்தைகள் ஓய மாட்டார்கள். ஆசை என்பது இதுதான். அதை நிறைவேற்றிக் கொள்ளும் வரை ஓயாது இருப்பது. அப்படி இருப்பதுதான் ஆசை.

குழந்தைகள் நிஜமாகப் பொம்மைகள் மீது ஆசைப்படுகிறார்கள். அதனால் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் வழிமுறைகளை அவர்கள் யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வழியில் அவர்களின் ஆசை சாத்தியம் ஆகா விட்டாலும் வேறு சாத்தியமாகக் கூடிய வழிகளை நோக்கிப் போகிறார்கள். ஒன்றை அடைய வேண்டும் என்று ஆசை உண்டாகும் போது இப்படித்தான் நடக்கும். அவ்வளவு எளிதில் ஆசை நிறைவேறாது. தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அங்கு தோல்விகள் ஒரு பொருட்டே அல்ல.

உண்மையான ஆசையின் தன்மை என்னவென்றால் எத்தனை முறை தோற்றாலும் ஆசைப்பட்டதை அடையாமல் இருக்க முடியாது. அந்த நிஜமான ஆசை என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மற்றவை எல்லாம் போலித்தனமான ஆசைகள்தான். மற்றவர்களுக்காக அடுத்தவர்களுக்காக நாம் ஏற்படுத்திக் கொள்ளும் ஆசைகள்தான். அது போன்ற ஆசைகளில் ஒருவர் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. போலித்தனமான ஆசைகளில் வெற்றி பெறுவது ஒருவரைத் திருப்தி கொள்ளவும் செய்யாது.

இப்போது மீண்டும் படிப்பை எடுத்துக் கொள்வோம். ஆசை என்பது உண்மையாக இருந்தால் அதை அடைவதைத் தவிர வேறு வழியில்லை. படிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டால் படிப்பதைத் தவிர வேறு வழியில்லை. புரியவில்லை என்பதற்காக அந்தப் படிப்பு நிற்காது. புரிவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மனம் செய்யும். முடியவில்லை என்பதற்காகவும் அந்தப் படிப்பு நிற்காது. அதை முடிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மனம் செய்யும். சிரமம் என்பதற்காகவும் மனம் அந்த ஆசையை விட்டு விடாது. அதை அடைந்தே தீரும். அதுதான் உண்மையான ஆழ்மனதின் ஆசை.

உங்கள் ஆசைகள் உண்மையாக இருக்கிறதா என்பதை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள். ஒன்றில் உங்கள் ஆசை உண்மையானதாக இல்லை என்றால் உங்களுக்கு உண்மையில் எதில் ஆசை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதிலே உங்கள் முழு கவனத்தையும் நேரத்தையும் உழைப்பையும் செலுத்துங்கள்.

ஆசைப்படுவது முக்கியமில்லை. எதற்காக ஆசைப்படுகிறோம்? ஏன் ஆசைப்படுகிறோம்? எப்படி ஆசைப்படுகிறோம்? என்ற வினாக்கள் முக்கியமானவை. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ள ஆசைப்படுவதைப் போல ஆசைப்படுவதும் ஆசைதான். அந்த ஆசை ஒருபோதும் உங்கள் மதிப்பை உயர்த்தாது. ஒரு போலித்தனமான ஆசை உங்கள் மதிப்பை இறக்கி விடும். உங்களை உள்ளீடற்றவராக ஆக்கி விடும்.

இந்த உலகம் உண்மையும் போலியும் கலந்ததாக இருக்கிறது. ஆசைகளும் அப்படித்தான். உங்கள் ஆசை நிஜமானதா? எந்த அளவுக்கு உண்மையானது? என்பதை எல்லாம் யோசித்து உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் காரியத்தில் இறங்குங்கள்.

ஒரு போலித்தனமான ஆசையை நிறைவேற்றுகிறேன் என்றோ, யாரோ ஒருவரின் ஆசையை நிறைவேற்றுகிறேன் என்றோ உங்கள் நேரத்தையும் உழைப்பையும் வீணாக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் உள்ளார்ந்த ஆசையை அறிந்து முயற்சிக்கும் எதிலும் நீங்கள் சோர்ந்து போக மாட்டீர்கள், சோடை போகவும் மாட்டீர்கள். தோல்விகளைக் கண்டு துவண்டு விடவும் மாட்டீர்கள். நீங்கள் ஆசைப்பட்டதை அடையும் வரை ஓயவும் மாட்டீர்கள்.

உங்களது உண்மையான உள்ளார்ந்த ஆசைகளைக் கண்டறிந்து நிறைவேற்றிக் கொள்ள வாழ்த்துகள்!

*****

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...