பல பெயரில் உலாவுதல்
எனக்கொரு பெயர் வைத்தார்கள்
செல்லப் பெயரென வேறொரு பெயர்
வந்து சேர்ந்தது
பள்ளி வயதில் பட்டப்பெயர்கள்
பல தொற்றிக் கொண்டன
எழுதத் தொடங்கிய போது புனைப்பெயர்கள்
சேர்ந்து கொண்டன
பல பெயர்கள் புழங்கிய போதும்
குழறுபடியின்றிப் போய்க்
கொண்டிருந்தது வாழ்க்கை
ஒரு முறை ஆதாரில் இருப்பதற்கேற்ப
வங்கியில் பெயர் மாற்றச்
சொன்னார்கள்
சான்றிதழில் இருப்பதற்கேற்ப
பட்டாவில் பெயர் மாற்றச்
சொன்னார்கள்
தவறாகத் தட்டச்சு செய்திருந்த
முன்பதிவு பயணச்சீட்டிலிருந்து
பெயரை மாற்ற
பல மணி நேரங்கள் போராட வேண்டியிருந்தது
படிப்புச் சான்றிதழில் மாறிப்
போயிருந்த
ஒற்றை எழுத்திற்காக ஒரு நூறு
மனுக்கள் போட வேண்டியிருந்தது
பல தருணங்களில் ஒவ்வொரு முறையும்
திருத்த வேண்டியிருக்கும்
பெயரை நினைக்கையில்
ஒவ்வொரு பெயரிலும் உலவினால்தான்
என்ன
*****
வார்த்தையின் பாதை
ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்
உன் சொற்களுக்குள் சாத்தான்கள்
நுழைந்தது எப்படி
இனியொரு முறை உன்னைப் பார்க்க
மாட்டேன்
என்ற வாக்கியத்தை எப்படி
உன்னால்
எளிதாக வீசியெறிய முடிகிறது
மென்மையான மனங்கள்
தடித்த வார்த்தைகளைக் கேட்கும்
போது கனமாகின்றன
மென்மையையும் மேன்மையையும்
சுமந்ததால்
சோர்ந்து போகும் மனங்களை
அப்போது பார்த்திருக்கிறாயா
வாழ்க்கையின் கதை முக்கியம்
திரைக்கதை பின்னுவதோ புனைகதை
எழுதுவதோ
உன் நியாயப் பக்கத்திற்காக
நீ பின்னும் சாகசம்
கதை அதன் போக்கில் போகட்டும்
திருத்தியெழுதும் விருப்பமின்றி
விடுபடட்டும்
நெடுந்தூரம் சென்ற பிறகு
என்றாவது ஒரு நாள் எதேச்சையாகச்
சந்திக்கும் போது
உன் நினைவுகளோடு காத்திருக்கும்
என்னை உன் ஞாபகங்களுக்கு
ஒரு காலதேவனைப் போலக் கொணர்ந்து
தருவேன்
மிக்க அன்போடும் கடைவிழி
நனையும் கண்ணீரோடும்
*****
No comments:
Post a Comment