30 Apr 2023

பாரதியார் கதைகள் – ஓர் எளிய அறிமுகம்


பாரதியார் கதைகள் – ஓர் எளிய அறிமுகம்

பாரதியாரின் கதைகளைப் பொருண்மையின் அடிப்படையில் பின்வருமாறு வகைபடுத்திக் கொள்ளலாம்.

1)      தத்துவக் கதைகள்

2)      வேடிக்கைக் கதைகள்

3)      எதார்த்தக் கதைகள்

4)      சுய சரிதத் தோற்றம் தரும் கதைகள்

5)      அறிவுரைக் கதைகள்

6)      கற்பனை மற்றும் பக்தி மீளுருவாக்கக் கதைகள்

7)      பத்தி அல்லது துணுக்குக் கதைகள்

கதைகளின் அளவைப் பொருத்து அவற்றைக் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1)      பெருங்கதைகள்

2)      சில பக்கக் கதைகள்

3)      ஒரு பக்கக் கதைகள்

4)      அரை பக்கக் கதைகள்

5)      சில வரிக் கதைகள்

கதைகளைப் பாரதியார் கைக்கொண்டு முடித்த வகையில் அவர் கதைகளை

1)      முற்றுப் பெற்ற கதைகள்

2)      முற்றுப் பெறாத கதைகள்

என்றும் வகைப்படுத்தலாம்.

பாரதியாரின் தத்துவக் கதைகள் பொதுவாக வேதாந்தப் பின்புலம் கொண்டவையாக இருக்கின்றன. தத்துவக் கதைகளில் ஆழ்ந்த தத்துவ விசாரத்தைச் செய்கிறார். இக்கதைகளில் பிராமணியமும் சத்திரியமும் கலந்த ஓர் எதிர்பார்ப்பை முன் வைக்கிறார். நால்வர்ண பின்னணியில் அவற்றில் இரண்டான பிராமணியத்தை ஞானத்திற்கான வாயிலாகவும் சத்திரியத்தை வீரத்திற்கான வாயிலாகவும் அவர் கருதுகிறார். அவர் தனது வாழ்க்கையில் பிராமணியமும் சத்திரியமும் கலந்த கலவையாக வாழ விரும்பியதன் அடிப்படையில் இக்கதைகளைக் கட்டமைக்க முயல்கிறார். அவருடைய வாழ்க்கைக்கான தத்துவப் புரிதலை நோக்கிய முயற்சியாகவும் அக்கதைகளை அணுக முடிகிறது. ஞானரதம், உபசாந்தி லோகம் போன்ற கதைகளில் கதையை விடவும் அவரது தத்துவ விளக்கத்தையே அதிகம் காண முடிகிறது. இக்கதைகளில் அவர் ஓரு பாத்திரமாக இடம்பெறாமல் போயிருந்தால் இக்கதைகளை அவரது உரைநடைக்கான தேர்ந்த கட்டுரைகளாகக் கருத நேரிடும்.

வேடிக்கைக் கதைகள் அவரது நகைச்சுவை உணர்வை அந்தக் கால நடையில் வெளிப்படுத்துகின்றன. ஆனைக்கால் உதை, அந்தரடிச்சான் சாகிப் கதை போன்ற கதைகள் மூலமாக ஹாசியத்தை நிலைநிறுத்த விரும்புகிறார். ஹாசியத்திலும் சமூக நிலையின் தவறான கற்பிதங்களை உட்பொருளாகப் பொருத்தி வைத்திருக்கிறார். தவறான கற்பிதங்களால் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு நகைப்புக்கு இடமாக இருக்கிறது என்பதை நுட்பமாகக் காட்டுகிறார்.

அன்றைய சமூக எதார்த்தத்தைக் காட்டும் வகையில் பாரதியாரது எதார்த்த கதைகள் அமைகின்றன. அந்தக் காலத்து மனிதர்களின் குணாதிசயங்களை வெகு நேர்த்தியாகக் காட்சிப்படுத்துகிறார். அவரது காலத்தில் பிரம்ம சமாஜத்தின் தாக்கம், பிராமணப் பெண்களுக்கு இருந்த சிரமங்கள், ஏழைப் பிராமணர்கள் பட்ட பொருளாதாரக் கஷ்டங்கள் போன்றவற்றை அக்கதைகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. சந்திரிகையின் கதை, ஆறில் ஒரு பங்கு, ஸ்வர்ண குமாரி போன்ற கதைகளில் இதைக் காண முடிகிறது. கிளிக் கதை, மிளகாய்ப்பழச் சாமியார் போன்ற கதைகளில் அன்றைய காலத்துச் சாமியார்களையும் அவர்களிடம் மக்கள் காட்டிய கண்மூடித்தனமான நம்பிக்கையையும் காட்டுகிறார்.

பாரதியாரின் கதைகளில் அவருடைய கதைகளைப் போலத் தோற்றம் தருபவற்றை சுயசரிதத் தோற்றக் கதைகளாகக் கொள்ளலாம். பாரதியாரின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு அந்தக் கதைகள் எவை என்பதை அடையாளம் காண முடியும். அக்கதைகளில் அவருடைய பெயரைக் காளிதாசன் என்பதாக அனுமானிக்கவும் முடிகிறது. அவருக்குக் காளிதாசன் மீதிருந்த அபிமானத்தால் தன்னைக் காளிதாசன் என்ற பாத்திரம் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று கருதவும் இடம் இருக்கிறது. புதிய கோணங்கி, சும்மா, செய்கை, கடல், பிங்கள வருஷம், சின்ன சங்கரன் கதை போன்ற பல கதைகளில் அவர் வாழ்ந்த வாழ்க்கை மற்றும் சூழல்களை அப்படியேயும் சிறிது மாற்றியும் அல்லது முற்றிலும் மாற்றியும் புனைவாகப் பதிந்திருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக பேய்க்கூட்டம் என்ற கதை அவருடைய ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே’ என்ற பாடலுக்கான சுய பகடி போலத் தோற்றம் தருகிறது.

நாட்டு மக்களுக்கு அறிவுரை தரும் வகையில் பாரதியார் படைத்துள்ள கதைகளைப் அறிவுரைக் கதைகள் என்ற வகையில் கொண்டு வரலாம். அவற்றை அறிவு விளக்கம் தரும் வகையில் அனைவருக்கும் புரிய வேண்டும் என்ற மெனக்கெடல்களோடு எழுதியுள்ளார். கடல், கடற்கரை ஆண்டி போன்ற கதைகளில் இத்தகு தன்மையைக் காண முடிகிறது. அவருடைய சமூக எதிர்பார்ப்பைப் பல கதைகளிலும் அறிவு விளக்க உரைகளாகவே வெளிப்படுத்த முயல்கிறார். பெரும்பாலான கதைகளில் இத்தகைய அறிவு விளக்கத்தை அல்லது அறிவுரைக்காகப் பகடி செய்யும் தன்மையைத்தான் பாரதியாரின் கதைகளில் காண முடிகிறது.

புராணங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனை மற்றும் பக்தி மீளுருவாக்கங்களைச் செய்யும் கதைகளைக் கற்பனை மற்றும் பக்தி மீளுருவாக்கக் கதைகள் என வகைபடுத்திக் கொள்ளலாம்.  குதிரைக்கொம்பு, தேவ விகடம், அர்ச்சுன சந்தேகம் போன்ற கதைகள் பாரதியாரின் மனதிற்குத் தோன்றுகிற அடிப்படையில் மீளுருவாக்கம் ஆகின்றன. அவரது நவதந்திரக் கதைகள் பஞ்ச தந்திரக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட மீளுருவாக்கக் கதைகளாக அமைகின்றன. காக்காய் பார்லிமெண்ட் என்ற கதை அவரது கற்பனையின் மாறுபட்ட கோணத்தைக் காட்டுவதாக அமைகிறது.  

பாரதியாரின் சிறு சிறு கதைகளைப் பத்திகள் அல்லது துணுக்குக் கதைகள் என்ற வகையில் பார்க்கலாம். கவிராயனும் கொல்லனும், அமெரிக்கா போன சீனராஜகுமாரன், ஓர் வியாதிக்கு ஓர் புதிய காரணம் போன்ற கதைகளில் இத்தகைய பத்திகள் மற்றும் துணுக்குத் தன்மையைக் காண முடிகிறது.

அளவைப் பொருத்த வரையில் பாரதியாரின் கதைகளில் பெருங்கதைகள் என்றால் ஞானரதம், நவதந்திரக் கதைகள், சந்திரிகையின் கதை, சின்ன சங்கரன் கதை போன்றவற்றைக் குறிப்பிடலாம். மற்ற கதைகள் சில பக்க அளவிலோ ஒரு பக்க அளவிலோ முடியக் கூடிய கதைகள். அவரது வேடிக்கைக் கதைகள் சில வரிகளில் முடியக் கூடியவை.

பெரும்பாலான முற்றுப் பெற்ற கதைகள் மத்தியில் சந்திரிகையின் கதை, நவதந்திரக் கதைகள் போன்றவை முற்றுப் பெறுவதற்கு முன்பே பாரதி அமரத்துவம் எய்தி விடுகிறார். அக்கதைகளின் முடிவின்மை வாசிப்போரை ஓர் எதிர்பார்ப்புக்குத் தூண்டுகிறது. கதைகளில் வாசிப்போரை ஆழமாக உள்ளிழுத்துக் கொள்ளும் ஒரு வசிகரத் தன்மை பாரதியின் கதைகளுக்கு இருக்கிறது.

பாரதியார் ‘கவிதை’ என்ற வடிவில் தமக்கு முன்பிருந்த இலக்கிய நோக்கிலிருந்து செய்த புதுமைகளும் புரட்சிகளும் ஏராளம். கவிதைகளின் உள்ளடக்கம், பாடுபொருள், ஆகியவற்றில் எளிமையாகப் புரிந்து கொள்ளும் தன்மையையும் இனிமையையும் யாவரும் ஏற்றுக் கொள்ளும் ஜனரஞ்சகத் தன்மையையும் பாரதிதான் தமிழ் கவிதை வரலாற்றில் வெற்றிக்கரமாகச் செய்ய முடிந்தது. வசன கவிதை எனும் புதுக்கவிதைக்கான தோற்றுவாயினையும் பாரதியாரால் நிகழ்த்த முடிந்திருக்கிறது.

தமிழ் நடை உரைநடைக்கு மாறிக் கொண்டிருந்த போது அதனையும் தன்னுடைய கட்டுரைகளில் பாரதியார் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார். கேலிச்சித்திரம் எனும் வடிவத்தையும் முதன் முதலாகப் பாரதியார் கையாண்டிருக்கிறார். சிறுகதையிலும் அவர் ஆழங்கால் படவே முயன்றிருக்கிறார். அவரது கதைகள் கதா ரச மஞ்சரியில் உள்ள கதைகள் போன்ற வடிவிலிருந்து மாற்றம் பெற்று புதிய சிறுகதைகளுக்கான அமைப்பை நோக்கி நரகத் துவங்கிய காலக்கட்டத்தில் அவர் இறந்து விடுகிறார்.

சந்திரிகையின் கதையில் முத்தம்மாவுக்கும் சோமநாத அய்யருக்கும் நடைபெறும் சம்பாஷணைகளை எழுதிச் செல்லும் போது எதார்த்த நடையின் அத்தனை கூறுகளையும் பாரதியார் வெளிப்படுத்துகிறார். சந்திரிகையின் அத்தையான விசாலாட்சியை அவர் புதுமைப் பெண்ணாகக் காட்ட முனைந்தாலும் கதையின் பல இடங்களை எதார்த்த பின்புலங்கள் கொண்டதாகவே கட்டமைக்கிறார். அக்கதையின் முடிவு பெறாத தன்மையும் கூட ஒரு நவீன சிறுகதைக்கான அவதானிப்பைத் தருகிறது.

ஒரு கதையாசிரியராக நின்று அக்கதை வாசகருக்குப் புரிய வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வது பாரதியாரின் அனைத்துக் கதைகளிலும் காணக் கிடைக்கும் அம்சமாக இருக்கிறது. பல கதைகளில் அவரது குரல் ஒலிப்பதும் தனித்துத் தெரிகிறது. அந்தக் கதைகளில் பாரதியார் எங்கிருக்கிறார் என்பதையும் அடையாளம் காண முடிகிறது.

கவலை இல்லாத மனம், உற்சாகமான சோர்வில்லாச் செயல்தன்மை, எதிர்காலத்தை எண்ணி பயம் கொள்ளாத மனோபாவம் ஆகிய மூன்றையும் பாரதியாரின் பெரும்பாலான கதைகள் எடுத்தோதுகின்றன. ஆழமான நகைச்சுவை உணர்வும், தத்துவார்த்த விசாரமும் அவருடைய கதைகளில் காணப்படும் மற்றைய சில பொதுபோக்குகள் எனலாம்.

கதைகளில் பல இடங்களில் அவர் ஒரு வேதாந்தியாகவும், பிராமண சமூகத்தின் மேல் தன்னுடைய கூரிய விமர்சனங்களை முன்வைப்பவராகவும் உள்ளார். தேச விடுதலையைக் கவிதைகளில் பேணினார் என்றால் மன விடுதலையைப் பெரும்பாலான கதைகளின் முன்வைப்பாக எடுத்து வைக்கிறார். அவருக்குப் பழக்கமாக இருந்த முதலியார், அய்யர், கோனார், சாமியார்களைப் புனைவுகளாக்கிச் சில இடங்களில் தன்னையும் ஒரு புனைவாக்கியும் உலவ விடுகிறார்.

மனதில் தோன்றுகிற அனைத்தையும் கலைத்துப் போட்டு இஷ்டம் போல எழுத கதையே வசதியானது. பாரதி தன் காலத்து கவிதைகளைக் கட்டுடைத்தவர் என்றாலும் கவிதையில் இன்னதைச் சொல்ல வேண்டும், இன்னதைச் சொல்லக் கூடாது என்ற நியமங்களுடன் கூடிய மரபார்ந்த பொதுப்போக்குக்கு ஒத்துப் போனவராகவே அவரது கவிதைகளைக் காண முடிகிறது. கதைகளில் எல்லாவற்றையும் சொல்கிற பாரதியைக் காண முடிகிறது.

ருஷ்யப் புரட்சியைப் பற்றி உயர்வாகக் கவிதை எழுதிய பாரதி பொதுபோக்கான மனநிலையில் அன்றைய மக்களின் மனதில் என்ன தோன்றியிருக்கும் அல்லது அவர்கள் அதை எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்கள் என்பதைக் கதைகளில் பதிவு செய்கிறார். அப்படி ருஷ்ய புரட்சி பற்றி எழுதும் போது ‘எக்கேடு கேட்டால் என்ன’ என்று எழுதுகின்ற கட்டுடைப்பைக் கதைகளிலே கையாளுகிறார். கவிதைகளில் ஓர் லட்சியவாதியாய்த் தோற்றும் தரும் பாரதியை, லெனினுமாயிற்று வெங்காயமாயிற்று என்று சொல்லுமிடத்தில் ஓர் எதார்த்த மனிதராக லௌகிகத்தின் கட்டுண்ட சலிப்பில் உரைப்பதைக் காண முடிகிறது.

பாரதியின் லட்சியவாதமான சாதி பேதமற்ற சமூக நோக்கின் பிரதிபலிப்பையும் பிரம்ம சமாஜத்தின் கருத்துகளை மக்களிடம் ஊடுபாவாகக் கொண்டு சேர்க்கும் ஊடகத் தன்மையையும் அவரது கதைகளில் காண முடிகிறது. பண்டைய இந்தியாவின் பெருமைகளுக்கு ரிஷிகளின் ஆழ்ந்த ஞானமும் பண்டைய மன்னர்களின் வீரமும் காரணமாக இருந்திருப்பதாக ஒரு கருத்தாக்கமும் பாரதிக்கு இருந்திருப்பதை அவரது கதைகள் படிகம் போல வெளிப்படுத்துகின்றன. அதே போழ்தில் பாரதியார் காலத்துச் சமூகப் போக்கையும் பலதரப்பட்ட மக்களது மனப்போக்கையும் அறிந்து கொள்ளவும் அவரது கதைகள் சாளரமாக துணை புரிகின்றன.

1977 இல் சென்னை, மன்னார்சாமி கோவில் தெருவில் இருந்த பூம்புகார் பிரசுரத்தால் முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட ‘பாரதியார் கதைகள்’ என்ற கணினிக் கோப்பு வடிவம் (பி.டி.எப்.) இணையதளத்தில் கிடைக்கிறது. அக்கோப்பில் இடம் பெற்றுள்ள கதைகளை வாசித்த அளவில் எனக்குத் தோன்றிய கருத்துகளையே நான் மேலே முன்வைத்துள்ளேன். அக்கோப்பில் இடம் பெறாத பாரதியாரின் கதைகளும் இருக்கின்றன என்பதால் இத்தொகுப்பைப் பாரதியார் கதைகளின் முழுமையான தொகுப்பாகக் கொள்ள இயலாது என்ற புரிதலோடு அக்கதைகளை வாசிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொண்டு வாசித்துப் பார்க்கலாம்.

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp3juI8&tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#book1/ 

*****

28 Apr 2023

அலுத்துப் போகுதல்

விடுபடல்

இறைவனிடம் கையேந்தி

இல்லையென்று சொல்லாமலா

அமர்ந்திருக்கிறார்கள்

கோயில் முன் பிச்சைக்காரர்கள்

திக்கற்றவர்களுக்குத்

தெய்வமும் துணையில்லாமல் போகாமலா

வசித்துக் கொண்டிருக்கிறார்கள்

ப்ளாட்பாரவாசிகள்

நம்பியும் கைவிடப்படமலா

ஒட்டுமொத்த உடலையோ

உடல் உறுப்புகளில் ஒன்றையோ

விற்றுக் கொண்டிருக்கிறார்கள்

வீதியிலும் ஆஸ்பத்திரியிலும்

தட்டியும் திறக்கப்படாமலா

கேட்டும் கொடுக்கப்படாமலா

அலைந்து கொண்டிருக்கிறார்கள்

ஆயிரமாயிரம் அகதிகள்

*****

அலுத்துப் போகுதல்

ஏகப்பட்ட படங்களை டௌன்லோட்

பண்ணி வெச்சிருக்கேன்

பார்க்கத்தான் முடியல

என அலுத்துக் கொள்கிறார்

வெப் சீரிஸ்க்கு அப்டேட் ஆகி விட்ட

பக்கத்து வீட்டுக்காரர்

வாட்ஸாப்பே வரதில்லையே

ரொம்ப பிஸியோ என்ற கேள்விக்கு

இன்ஸ்டாவில் ரொம்ப பிஸி என்று

மறுசெய்தி போடுகிறார்

பார்வேர்டு பரமசிவம் எனப் பெயரெடுத்த

அலுவலக சகா

என்னமோடா சீரியலே பார்க்கிற

இஷ்டமே போயிடுச்சு என சலித்துக் கொள்கிறார்

யூடியூப் பிரியை ஆகி விட்ட எதிர்வீட்டு அத்தை

ப்ளேஸ்டேஸனை விட்டு விட்டான்னு

சந்தோசப்பட முடியல

மொபைல்ல எந்நேரமும் விளையாடிட்டுக் கிடக்கிறான் என

சலித்துக் கொள்கிறார் சந்தோஷ் சித்தப்பா

அமேசானிலும் பிளிப்கார்டிலும் பார்த்து முடித்துக் கொள்கிறார்

நேரில் பார்த்து வாங்குகிற மாதிரி வருமா என

கதையளந்த கருத்து கந்தசாமி மாமா

இன்னும் என்னென்ன வந்து அலுத்துப் போகுமோ என

எதிர்காலத்தில் வரப் போவதை நினைத்து

இப்போதே அலுத்துக் கொள்கிறார்

பெட்ரோல் ஸ்கூட்டரிலிருந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு

மாறி விட்ட மிலிட்டரி தாத்தா

*****

27 Apr 2023

சைபர் வீதி வாழ்க்கை

சைபர் வீதி வாழ்க்கை

RIP யும் ஸ்மைலியையும்

தட்டி விட்டு கடக்கின்றன துக்கங்கள்

காப்பி பேஸ்டில் லட்சம் கோடியாகத்

தயார் நிலையில் இருக்கின்றன வாழ்த்துகள்

அடடே என அசத்த நினைவகத்தில் தேங்கிக் கிடக்கின்றன

எப்போதோ எவரெவரோ அனுப்பிய பகிர்வுகள்

ஏகப்பட்ட படங்களை டௌன்லோட் செய்து

எதையும் பார்க்க முடியாமல் ஓடுகின்றன நேரங்கள்

எப்போ பார்த்தாலும் சீரியல்தானா என

அம்மாவிடம் அலுத்துக் கொண்டு

வெப் சீரிஸ்களில் மூழ்குகின்றன அறிவுரைகள்

வாட்ஸாப் வராமல் போவதற்கு

இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கின்றன காரணங்கள்

விஷேசங்கள் வந்து விட்டால்

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் வாழ்த்து சொல்ல

எப்போதும் தயாராக இருக்கின்றன 4K இதயங்கள்

மெய் நிகர் சைபர் வீதியில் எந்தக் குறையும் இல்லாமல்

ஒட்டும் உறவும் இல்லாமல் நிஜமாகச் சைபர் வீதியில்

ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை

*****

பாதியில் முடிந்து விடும் கடைசி

கடைசி தருணத்தில் சொட்டும்

அற்புத தருணங்களை ருசிப்பதற்குள்

மண்டையைப் போட்டு விடுகிறது வாழ்க்கை

மரத்தை வைத்தவர் கனியைப் புசிப்பதற்குள்

மரணித்து விடுவதைப் போல

இதுவரை எழுதப்பட்ட அத்தியாயங்களினின்று

அங்கொன்றும் இங்கொன்றுமாக

பிடுங்கிப் போட்டபடி

சாதனை விளக்கக் கூட்டத்தைப் போல

தொகுக்க வேண்டியிருக்கிறது

கடைசி அத்தியாயத்தை

பாதியில் நின்று விட்ட வண்டியை

வீடு வரை இழுத்து வராமல்

நிறைவடைந்து விடுமோ பயணம்

*****

26 Apr 2023

அற்புத ஆபர்களின் காலம்

எல்லா கசப்புக்கும் ஒரு வருகை

நேரில் ஒரு சண்டை இல்லை

ஒருவரை ஒருவர் திட்டி ஒரு வசவுச் சொல் இல்லை

வாட்ஸப் பகிர்வில் வந்த பிரதிவினைக்காக

பேசாமல் இருக்கிறார் சித்தப்பா

டிவிட்டரில் எதிர்கருத்துப் போட்டதற்காக

முகம் கொடுத்துப் பேசாமல் போகிறார் பெரியப்பா

பேஸ்புக்கில் லைக்ஸ் போடவில்லையென

முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு போகிறார் மாமா

ப்ரொபைல் படத்தைப் பார்த்து

ஒரு ஷொட்டு வைக்கவில்லையென

சித்திக்கும் அத்தைக்கும் கோபம்

இன்ஸ்டா பக்கம் வந்து பார்க்கவில்லை என

அண்ணிக்கு வருத்தம்

எல்லார் வீட்டிற்கும் திடுமென ஒரு நாள் போய்

ஒரு கோப்பை தேநீர் பருகி வந்தால்

எல்லா கசப்பும் ஒரு வழியாகத் தீர்ந்து விடும்

*****

அற்புத ஆபர்களின் காலம்

எல்லாரிடமும் ஒரு செல்பி எடுத்துக் கொண்டதும்

விழா நடந்து முடிந்து விடுகிறது

வாட்ஸாப் வாழ்த்து பரிமாற்றங்களுடன்

தீபாவளியும் பொங்கலும் கடக்கிறது

ஓடிடியில் பார்த்து

புதுப்படத்தைக் கொண்டாட முடிகிறது

பிடிஎப் ஆக வாசித்து

ஒரு புத்தகத்தை முடிக்க முடிகிறது

ஆன்லைனில் இரண்டு படிப்புகள்

ஆண்டுதோறும் முடித்தாகிறது

ஸ்விக்கி சொமோட்டோவில்

புசித்தலும் ருசித்தலும் முடிகிறது

காசி கங்கா தீர்த்தம்

ஆன்லைனில் பணம் கட்டிய

இரண்டு நாட்களில் வீடு தேடி வருகிறது

சுடுகாடு போய் வருவது வரை

அற்புத ஆபர்கள் பல இருக்கின்றன

*****

25 Apr 2023

ஜென் பரம்பரையின் ஒருவர்

கடைசி வரை திட்டம்

மகனுக்கு அரசு வேலை

மகளுக்கு அமெரிக்க மாப்பிள்ளை

பேரன் பேத்திகளுக்கு வங்கி வைப்பு

சந்ததிகளுக்கு ஆகட்டும் என்று

புறநகரில் ஒன்றுக்கு இரண்டாய்ப் ப்ளாட்டுகள்

அதற்கு மேலும் வருமானத்துக்கு உதவட்டும் என்று

மூன்று வாடகை வீடுகள் ஒரு வணிக வளாகம்

யாருக்கும் எந்தத் தொந்தரவும் வேண்டாம் என்று

அறுபதாம் கல்யாணம் முடிந்த ஆறு மாதத்தில்

தீர்க்க சுமங்கலியாய்ப் போய் சேர்ந்த துணைவி

எல்லாருக்கும் விட்டுச் சென்றது எண்பது சவரன்

இதற்கு மேல் வேறென்ன இருக்கிறது

பணத்தைக் கட்டி விட்டு

நிம்மதியாக ஓய்வெடுக்க இருக்கவே இருக்கிறது

முதியோர் இல்லம்

*****

ஜென் பரம்பரையின் ஒருவர்

பச்சை விளக்கு ஒளிரும் நேரம் பார்த்து

நின்று விடும் வாகனத்தைப் பார்த்து

ஏன்டா செல்லக்குட்டி இப்படி எனறு

செல்லமாகக் கோபித்துக் கொள்பவர்

ஜென் பரம்பரையில் பிறந்து வந்த

ஒருவராகவும் இருக்கக் கூடும்

*****

24 Apr 2023

டிஜிட்டலில் கண்ணாமூச்சி ஆடும் வாழ்க்கை

டிஜிட்டலில் கண்ணாமூச்சி ஆடும் வாழ்க்கை

கதை சொல்லும் பாட்டிக்கு

நெடுந்தொடர்கள் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றன

நாள் தவறாது பேசிச் சிரித்த நண்பர்கள்

வாட்ஸாப்பில் செய்தி பரிமாறிக் கொள்கிறார்கள்

தீபாவளிக்கும் பொங்கலுக்கும்

சீர்வரிசை சுமந்து வந்த மாமன்கள்

ஜிபே செய்து விட்டு விவரம் சொல்கிறார்கள்

பணவிடை கொண்டு வந்த தபால்காரர்

ப்ளூடூத்தில் பேசியபடி கடந்து கொண்டிருக்கிறார்

வாஞ்சையுடன் பணம் எடுத்துக் கொடுக்கும்

ஏடிஎம் காவலாளி இப்போதெல்லாம் கூட்டம் அதிகமில்லை என்று

ஏதோ மொபைல் விளையாட்டில் மூழ்கிக் கிடக்கிறார்

சாவகாசமாய் பயணச்சீட்டுக் கொடுக்கும் நடத்துநர்

பேருந்தில் வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதாய்

ஹெட்போனை மாட்டிக் கொண்டிருக்கிறார்

வீடியோ அழைப்பில் பேசிப் பேசி

அமெரிக்காவிலிருந்து ஏன் அநாவசியமாக என்கிறாள் அம்மா

வாழ்க்கை ரொம்பதான் மாறி விட்டது

டிஜிட்டலில் ஒளிந்து கொண்டு

கண்ணாமூச்சி ஆடும் அளவுக்கு

*****

புதிதுக்குப் பழையது

புதிது போல துலக்கிக் கொடுத்து விடுகிறாள்

புதிது போல துவைத்து வைத்து விடுகிறாள்

புதிது போல தூய்மையாக்கித் தந்து விடுகிறாள்

எதைச் சொன்னாலென்ன

இன்று புதிதாய்ப் பிறந்தவளைப் போல

எதையும் புதிதாய் முடித்துக் கொடுத்து விடுகிறாள்

பழந்துணியையும் பழஞ்சோற்றையும் வாங்கிக் கொண்டு

*****

23 Apr 2023

கோடைக் காலத் தாகக் குறிப்புகள்

கோடைக் காலத் தாகக் குறிப்புகள்

கோடைக்காலம் துவங்கி விட்டது. கோடை வெப்பம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வழக்கமான தாகத்தை விட கோடைக்கால தாகம் அதிகமாகத்தான் இருக்கும்.

இரண்டு லிட்டருக்குள் தாகம் தணித்துக் கொண்டிருந்த பலரும் ஐந்து லிட்டருக்கு மாற வேண்டியிருக்கும். அதைத் தாண்டியும் தண்ணீரைப் பருக வேண்டியிருக்கும்.

கோடை தாகத்தைத் தணித்துக் கொள்ள தண்ணீரே உகந்த பொருள் மற்றும் பொருத்தமான பொருள். அதற்கு மாற்றான வேறு பொருள் இந்த உலகில் வேறு எதுவுமில்லை.

தண்ணீர் எனும் போது சாதாரண தண்ணீரே பொருத்தமானதும் உகந்ததும் ஆகும். அதாவது ‘பச்சைத் தண்ணீர்’ என்று குறிப்பிடும் தண்ணீரே சரியானது ஆகும். குளிர்சாதனப் பெட்டிலியிருந்து எடுத்துப் பருகும் குளிர்ந்த நீர் கோடை தாகத்திற்குப் பொருத்தமான ஒன்றாகாது.

இந்தக் குளிர் நீரைக் குழந்தைகள் ‘பனி நீர்’ (ஐஸ் வாட்டர்) என்று எடுத்துப் பருகுகிறார்கள். பெரியவர்கள் ‘குளிர் நீர்’ (கூலிங் வாட்டர்) என்று கேட்டு வாங்கிப் பருகுகிறார்கள். பனி நீரோ, குளிர் நீரோ கொண்டு கோடை தாகத்தைத் தணிக்க முற்படக் கூடாது என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டிய உடல்நலக் குறிப்பு.

கோடையின் வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படும் தாகத்தைக் குளிர்ந்த நீரைக் கொண்டு தணிக்க முற்படும் போது இரு விதமான தவறான விளைவுகள் உண்டாகின்றன.

1. சூட்டைத் திடீரென அதீத குளிர்ச்சியை ஊற்றி சரி செய்ய முயல்வது என்பது சூடான கண்ணாடிப் பொருளில் தண்ணீரைத் தெளிப்பது போலாகும்.

2. சாதாரண பச்சைத் தண்ணீரைக் குடிப்பதற்குப் பதில் குளிர் நீரைக் குடிப்பது என்பது ஒரு வாளி தண்ணீர் தேவைப்படும் செடிக்கு அரை வாளி தண்ணீரை ஊற்றுவதைப் போலாகும்.

இந்த இரண்டு விளைவுகளாலும் உடல் பாதிக்கப்படும். உடல் என்றால் உடல் தசைகள், உள்ளுறுப்புகள் மற்றும் எலும்புகள் திடீர் குளிர்ச்சியால் பாதிக்கப்படலாம். மற்றும் அதீத குளிர்ந்த நீரைக் குடிப்பதால் உடலுக்குத் தேவையான நீர் கிடைக்காமல் உடல் சூடு அதிகமாகலாம். விரைவில் சளிப்பிரச்சனை, நீர்க்கோர்வை போன்ற உடல் உபாதைகளும் ஏற்படலாம்.

சாதாரண பச்சைத் தண்ணீரைக் குடிக்கும் போது தாகம் தணியாமல் நீங்கள் அதிகமாகத் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருப்பீர்கள். இதுவே அதீத குளிர்ந்த நீர் என்றால் முன்பு குடித்ததில் பாதியளவு தண்ணீரிலேயே தாகசாந்தி அடைந்து விடுவீர்கள். உங்கள் உடலுக்கு இப்போது ஒரு லிட்டர் தண்ணீர் வேண்டும் என்ற நிலையில் அரை லிட்டர் தண்ணீரிலே தாக சாந்தி அடைய வைப்பதுதான் குளிர்ந்த நீர் செய்யும் மோசமான வேலையாகும்.

குளிர்சாதனப் பெட்டியின் குளிர்ந்த நீருக்கு ஒரு மாற்று வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் மண்பானைத் தண்ணீரை நாடலாம்.  அதுவே இயல்பான குளிர்ச்சியைத் தரும் தண்ணீராகும். குளிர்சாதனப் பெட்டி என்பது அதைத் தாண்டிய அதீத குளிர்ச்சியைத் தருவதால் அது உடலுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் எப்போதும் கேடு விளைவிக்கும் ஒன்றாகும்.

கோடைக்காலத்தில் உங்களது தாகமானது சாதாரண தண்ணீருக்கு அடங்காத தாகமாக இருந்தால் நீங்கள் இன்னொன்றையும் செய்யலாம். தண்ணீரைச் சற்று வெதுவெதுப்பான சூட்டிற்கு உள்ளாக்கிக் குடிக்கலாம். இது உங்களுக்குத் தாக சாந்தியைத் தரும், நெருப்பை நெருப்பால் அணைப்பது போல.

கோடைக்காலத்தின் கடுமையான தாகத்தைப் பலர் ரசாயன குளிர் பானங்களால் எதிர்கொள்ளப் பார்க்கிறார்கள். அதீத குளிர் நீரைப் போல இதுவும் ஒரு தவறான உடலுக்கு ஊறு விளைவிக்கும் எதிர்கொள்ளல் ஆகும். இதுபோன்ற கோடைக்கால தாகசாந்தி முறையால் குளிர் நீர் உருவாக்கும் அத்தனைக் கேடுகளோடு ரசாயனங்களும் கூடுதலாகச் சேர்ந்து விளைவிக்கும் கேடுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இரசாயன குளிர் பானங்களுக்குப் பதிலாக இயற்கையான குளிர் பானங்கள் இருக்கின்றன. எலுமிச்சை, சாத்துகுடி, ஆரஞ்சு, நாரத்தை போன்ற உயிர்ச்சத்து சி நிறைந்த பழங்களில் நீங்கள் குளிர்பானங்களை மண்பானை தண்ணீரைக் கொண்டு பனிக்கட்டிகளைப் போடாமல் தயாரித்துக் கொள்ளலாம்.

மேலும் சில வழிமுறைகளாகக் கோடைச் சூட்டிற்கும் தாகத்திற்கும் ஏற்ற முறைகளாக தண்ணீர்ப்பழம், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அப்படியே பழச்சாறாக மாற்றாமல் சாப்பிடலாம். அவற்றைப் பழச்சாறாக்காமல் அப்படியே சாப்பிடும் போது அது உடலுக்கு உகந்ததாகவும் ஏற்றதாகவும் இருக்கும்.

எண்ணெயில் பொரித்த பண்டங்களும் பொட்டலங்களில் காற்று புகாமல் அடைக்கப்பட்ட பண்டங்களும் கோடைச் சூட்டோடு உங்கள் உடல் சூட்டையும் அதிகரிக்கக் கூடியவை. ஆகவே உங்களது சிற்றுண்டி, தின்பண்டங்கள் கொரிக்கும் பழக்கத்தைக் கொய்யா, மாதுளை, திராட்சை, வாழைப்பழம் என்ற பழங்களை உண்ணும் பழக்கமாக மாற்றிக் கொண்டால் இந்தக் கோடையை என்றில்லை எந்தக் கோடையையும் உங்களால் எதிர்கொள்ள முடியும்.

பழங்கள், பழச்சாறுகள்தான் வேண்டும் என்றில்லை, நீர்மோர் கூட கோடைக்காலத்திற்கான அருமையான பானமாகும், உணவும் ஆகும்.

பழையது எனப்படும் பழஞ்சோற்றிலிருந்து தயாரித்துக் கொள்ளப்படும் நீராகாரம் மிகச் சிறந்த கோடைக்காலப் பானமாகும். உடல்சூடு, வயிற்றெரிச்சல் போன்றவற்றிக்கு மருந்தைப் போலச் செயல்படும் ஆற்றல் நீராகாரத்திற்கு உண்டு.

கோடைக்காலம் முடியும் வரை பழைய சோற்றில் தயிர் கலந்து உண்பது மிகச் சிறந்த கோடைக்காலத்திற்கு ஏற்ற காலை உணவாக அமையும்.

கோடைக்காலத்தில் வெளியில் செல்லும் போது நீங்கள் முக்கியமான ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எங்கு சென்றாலும் இரண்டு புட்டிகளில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள். அதில் ஒரு புட்டியில் நீரையும் இன்னொரு புட்டியில் நீராகாரத்தையும் எடுத்துச் செல்வது இன்னும் சிறந்ததாகும்.

ஒரு நாளில் மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவைக் கஞ்சி உணவாக எடுத்துக் கொள்வது நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுப்பதுடன் உணவுச் செரிமானத்தையும் எளிதாக்கும். கஞ்சி உணவையும் ஒரே மாதிரியான கஞ்சி உணவாக அல்லாமல் தினம் ஒரு சிறுதானியக் கஞ்சி உணவாக உண்ணலாம். இக்கஞ்சி உணவு உங்களது கோடைக்காலத்திற்கான தாக சாந்தி நிறைந்த உணவாகவும் தாதுச் சத்துகள் பற்றாக்குறையைப் போக்கும் சத்துணவாகவும் ஒரே நேரத்தில் இரு பயன்களைத் தருவதாக இருக்கும்.

கோடைக்காலத்தில் அலைந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் சிலர் இருப்பார்கள். அவர்கள் குளிர் நீரைப் பருகாமல், ரசாயன குளிர் பானங்களை அருந்தாமல், சாலையோரக் கடைகளில் கண்டபடி பொரித்த பண்டங்களைக் கொரிக்காமல் இருந்தால் கோடை வெயிலில் அலைவதால் பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டியதில்லை.

சாலையோரக் கடைகளில் எதையாவது சாப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இளநீரையும் நுங்கையும் தாராளமாகச் சாப்பிடுங்கள். எவ்வித உடல்கேடும் இன்றி இந்தக் கோடையை மட்டுமல்ல ஒவ்வோர் ஆண்டும் வருகின்ற கோடையையும் நீங்கள் குளுமையாகவும் இனிமையாகவும் எதிர்கொள்ளுங்கள். ஏனென்றால்கோடை வெப்பத்திலும் உடலுக்குத் தேவையான எவ்வளவோ நன்மைகள் பெறப்படுகின்றன என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்

*****.

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...