டிஜிட்டலில் கண்ணாமூச்சி ஆடும் வாழ்க்கை
கதை சொல்லும் பாட்டிக்கு
நெடுந்தொடர்கள் கதை சொல்லிக்
கொண்டிருக்கின்றன
நாள் தவறாது பேசிச் சிரித்த
நண்பர்கள்
வாட்ஸாப்பில் செய்தி பரிமாறிக்
கொள்கிறார்கள்
தீபாவளிக்கும் பொங்கலுக்கும்
சீர்வரிசை சுமந்து வந்த மாமன்கள்
ஜிபே செய்து விட்டு விவரம்
சொல்கிறார்கள்
பணவிடை கொண்டு வந்த தபால்காரர்
ப்ளூடூத்தில் பேசியபடி கடந்து
கொண்டிருக்கிறார்
வாஞ்சையுடன் பணம் எடுத்துக்
கொடுக்கும்
ஏடிஎம் காவலாளி இப்போதெல்லாம்
கூட்டம் அதிகமில்லை என்று
ஏதோ மொபைல் விளையாட்டில்
மூழ்கிக் கிடக்கிறார்
சாவகாசமாய் பயணச்சீட்டுக்
கொடுக்கும் நடத்துநர்
பேருந்தில் வருபவர்கள் எண்ணிக்கை
குறைந்து விட்டதாய்
ஹெட்போனை மாட்டிக் கொண்டிருக்கிறார்
வீடியோ அழைப்பில் பேசிப்
பேசி
அமெரிக்காவிலிருந்து ஏன்
அநாவசியமாக என்கிறாள் அம்மா
வாழ்க்கை ரொம்பதான் மாறி
விட்டது
டிஜிட்டலில் ஒளிந்து கொண்டு
கண்ணாமூச்சி ஆடும் அளவுக்கு
*****
புதிதுக்குப் பழையது
புதிது போல துலக்கிக் கொடுத்து
விடுகிறாள்
புதிது போல துவைத்து வைத்து
விடுகிறாள்
புதிது போல தூய்மையாக்கித்
தந்து விடுகிறாள்
எதைச் சொன்னாலென்ன
இன்று புதிதாய்ப் பிறந்தவளைப்
போல
எதையும் புதிதாய் முடித்துக்
கொடுத்து விடுகிறாள்
பழந்துணியையும் பழஞ்சோற்றையும்
வாங்கிக் கொண்டு
*****
No comments:
Post a Comment