கோடைக் காலத் தாகக் குறிப்புகள்
கோடைக்காலம் துவங்கி விட்டது. கோடை வெப்பம் வாட்டி வதைத்துக்
கொண்டிருக்கிறது. வழக்கமான தாகத்தை விட கோடைக்கால தாகம் அதிகமாகத்தான் இருக்கும்.
இரண்டு லிட்டருக்குள் தாகம் தணித்துக் கொண்டிருந்த பலரும் ஐந்து
லிட்டருக்கு மாற வேண்டியிருக்கும். அதைத் தாண்டியும் தண்ணீரைப் பருக வேண்டியிருக்கும்.
கோடை தாகத்தைத் தணித்துக் கொள்ள தண்ணீரே உகந்த பொருள் மற்றும்
பொருத்தமான பொருள். அதற்கு மாற்றான வேறு பொருள் இந்த உலகில் வேறு எதுவுமில்லை.
தண்ணீர் எனும் போது சாதாரண தண்ணீரே பொருத்தமானதும் உகந்ததும்
ஆகும். அதாவது ‘பச்சைத் தண்ணீர்’ என்று குறிப்பிடும் தண்ணீரே சரியானது ஆகும். குளிர்சாதனப்
பெட்டிலியிருந்து எடுத்துப் பருகும் குளிர்ந்த நீர் கோடை தாகத்திற்குப் பொருத்தமான
ஒன்றாகாது.
இந்தக் குளிர் நீரைக் குழந்தைகள் ‘பனி நீர்’ (ஐஸ் வாட்டர்)
என்று எடுத்துப் பருகுகிறார்கள். பெரியவர்கள் ‘குளிர் நீர்’ (கூலிங் வாட்டர்) என்று
கேட்டு வாங்கிப் பருகுகிறார்கள். பனி நீரோ, குளிர் நீரோ கொண்டு கோடை தாகத்தைத் தணிக்க
முற்படக் கூடாது என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டிய உடல்நலக் குறிப்பு.
கோடையின் வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படும் தாகத்தைக் குளிர்ந்த
நீரைக் கொண்டு தணிக்க முற்படும் போது இரு விதமான தவறான விளைவுகள் உண்டாகின்றன.
1. சூட்டைத் திடீரென அதீத குளிர்ச்சியை ஊற்றி சரி செய்ய முயல்வது
என்பது சூடான கண்ணாடிப் பொருளில் தண்ணீரைத் தெளிப்பது போலாகும்.
2. சாதாரண பச்சைத் தண்ணீரைக் குடிப்பதற்குப் பதில் குளிர் நீரைக்
குடிப்பது என்பது ஒரு வாளி தண்ணீர் தேவைப்படும் செடிக்கு அரை வாளி தண்ணீரை ஊற்றுவதைப்
போலாகும்.
இந்த இரண்டு விளைவுகளாலும் உடல் பாதிக்கப்படும். உடல் என்றால்
உடல் தசைகள், உள்ளுறுப்புகள் மற்றும் எலும்புகள் திடீர் குளிர்ச்சியால் பாதிக்கப்படலாம்.
மற்றும் அதீத குளிர்ந்த நீரைக் குடிப்பதால் உடலுக்குத் தேவையான நீர் கிடைக்காமல் உடல்
சூடு அதிகமாகலாம். விரைவில் சளிப்பிரச்சனை, நீர்க்கோர்வை போன்ற உடல் உபாதைகளும் ஏற்படலாம்.
சாதாரண பச்சைத் தண்ணீரைக் குடிக்கும் போது தாகம் தணியாமல் நீங்கள்
அதிகமாகத் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருப்பீர்கள். இதுவே அதீத குளிர்ந்த நீர் என்றால்
முன்பு குடித்ததில் பாதியளவு தண்ணீரிலேயே தாகசாந்தி அடைந்து விடுவீர்கள். உங்கள் உடலுக்கு
இப்போது ஒரு லிட்டர் தண்ணீர் வேண்டும் என்ற நிலையில் அரை லிட்டர் தண்ணீரிலே தாக சாந்தி
அடைய வைப்பதுதான் குளிர்ந்த நீர் செய்யும் மோசமான வேலையாகும்.
குளிர்சாதனப் பெட்டியின் குளிர்ந்த நீருக்கு ஒரு மாற்று வேண்டும்
என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் மண்பானைத் தண்ணீரை நாடலாம். அதுவே இயல்பான குளிர்ச்சியைத் தரும் தண்ணீராகும்.
குளிர்சாதனப் பெட்டி என்பது அதைத் தாண்டிய அதீத குளிர்ச்சியைத் தருவதால் அது உடலுக்கும்
உள்ளுறுப்புகளுக்கும் எப்போதும் கேடு விளைவிக்கும் ஒன்றாகும்.
கோடைக்காலத்தில் உங்களது தாகமானது சாதாரண தண்ணீருக்கு அடங்காத
தாகமாக இருந்தால் நீங்கள் இன்னொன்றையும் செய்யலாம். தண்ணீரைச் சற்று வெதுவெதுப்பான
சூட்டிற்கு உள்ளாக்கிக் குடிக்கலாம். இது உங்களுக்குத் தாக சாந்தியைத் தரும், நெருப்பை
நெருப்பால் அணைப்பது போல.
கோடைக்காலத்தின் கடுமையான தாகத்தைப் பலர் ரசாயன குளிர் பானங்களால்
எதிர்கொள்ளப் பார்க்கிறார்கள். அதீத குளிர் நீரைப் போல இதுவும் ஒரு தவறான உடலுக்கு
ஊறு விளைவிக்கும் எதிர்கொள்ளல் ஆகும். இதுபோன்ற கோடைக்கால தாகசாந்தி முறையால் குளிர்
நீர் உருவாக்கும் அத்தனைக் கேடுகளோடு ரசாயனங்களும் கூடுதலாகச் சேர்ந்து விளைவிக்கும்
கேடுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இரசாயன குளிர் பானங்களுக்குப் பதிலாக இயற்கையான குளிர் பானங்கள்
இருக்கின்றன. எலுமிச்சை, சாத்துகுடி, ஆரஞ்சு, நாரத்தை போன்ற உயிர்ச்சத்து சி நிறைந்த
பழங்களில் நீங்கள் குளிர்பானங்களை மண்பானை தண்ணீரைக் கொண்டு பனிக்கட்டிகளைப் போடாமல்
தயாரித்துக் கொள்ளலாம்.
மேலும் சில வழிமுறைகளாகக் கோடைச் சூட்டிற்கும் தாகத்திற்கும்
ஏற்ற முறைகளாக தண்ணீர்ப்பழம், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அப்படியே
பழச்சாறாக மாற்றாமல் சாப்பிடலாம். அவற்றைப் பழச்சாறாக்காமல் அப்படியே சாப்பிடும் போது
அது உடலுக்கு உகந்ததாகவும் ஏற்றதாகவும் இருக்கும்.
எண்ணெயில் பொரித்த பண்டங்களும் பொட்டலங்களில் காற்று புகாமல்
அடைக்கப்பட்ட பண்டங்களும் கோடைச் சூட்டோடு உங்கள் உடல் சூட்டையும் அதிகரிக்கக் கூடியவை.
ஆகவே உங்களது சிற்றுண்டி, தின்பண்டங்கள் கொரிக்கும் பழக்கத்தைக் கொய்யா, மாதுளை, திராட்சை,
வாழைப்பழம் என்ற பழங்களை உண்ணும் பழக்கமாக மாற்றிக் கொண்டால் இந்தக் கோடையை என்றில்லை
எந்தக் கோடையையும் உங்களால் எதிர்கொள்ள முடியும்.
பழங்கள், பழச்சாறுகள்தான் வேண்டும் என்றில்லை, நீர்மோர் கூட
கோடைக்காலத்திற்கான அருமையான பானமாகும், உணவும் ஆகும்.
பழையது எனப்படும் பழஞ்சோற்றிலிருந்து தயாரித்துக் கொள்ளப்படும்
நீராகாரம் மிகச் சிறந்த கோடைக்காலப் பானமாகும். உடல்சூடு, வயிற்றெரிச்சல் போன்றவற்றிக்கு
மருந்தைப் போலச் செயல்படும் ஆற்றல் நீராகாரத்திற்கு உண்டு.
கோடைக்காலம் முடியும் வரை பழைய சோற்றில் தயிர் கலந்து உண்பது
மிகச் சிறந்த கோடைக்காலத்திற்கு ஏற்ற காலை உணவாக அமையும்.
கோடைக்காலத்தில் வெளியில் செல்லும் போது நீங்கள் முக்கியமான
ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எங்கு சென்றாலும் இரண்டு புட்டிகளில் தண்ணீர் எடுத்துச்
செல்லுங்கள். அதில் ஒரு புட்டியில் நீரையும் இன்னொரு புட்டியில் நீராகாரத்தையும் எடுத்துச்
செல்வது இன்னும் சிறந்ததாகும்.
ஒரு நாளில் மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவைக் கஞ்சி உணவாக
எடுத்துக் கொள்வது நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுப்பதுடன் உணவுச் செரிமானத்தையும் எளிதாக்கும்.
கஞ்சி உணவையும் ஒரே மாதிரியான கஞ்சி உணவாக அல்லாமல் தினம் ஒரு சிறுதானியக் கஞ்சி உணவாக
உண்ணலாம். இக்கஞ்சி உணவு உங்களது கோடைக்காலத்திற்கான தாக சாந்தி நிறைந்த உணவாகவும்
தாதுச் சத்துகள் பற்றாக்குறையைப் போக்கும் சத்துணவாகவும் ஒரே நேரத்தில் இரு பயன்களைத்
தருவதாக இருக்கும்.
கோடைக்காலத்தில் அலைந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் சிலர்
இருப்பார்கள். அவர்கள் குளிர் நீரைப் பருகாமல், ரசாயன குளிர் பானங்களை அருந்தாமல்,
சாலையோரக் கடைகளில் கண்டபடி பொரித்த பண்டங்களைக் கொரிக்காமல் இருந்தால் கோடை வெயிலில்
அலைவதால் பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டியதில்லை.
சாலையோரக் கடைகளில் எதையாவது சாப்பிட வேண்டும் என்று நீங்கள்
நினைத்தால் இளநீரையும் நுங்கையும் தாராளமாகச் சாப்பிடுங்கள். எவ்வித உடல்கேடும் இன்றி
இந்தக் கோடையை மட்டுமல்ல ஒவ்வோர் ஆண்டும் வருகின்ற கோடையையும் நீங்கள் குளுமையாகவும்
இனிமையாகவும் எதிர்கொள்ளுங்கள். ஏனென்றால்கோடை வெப்பத்திலும் உடலுக்குத் தேவையான எவ்வளவோ
நன்மைகள் பெறப்படுகின்றன என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்
*****.
No comments:
Post a Comment