31 May 2021

கொரோனா கண்டுபிடித்தால் என்ன செய்வாய்?

ஒளிந்துப் பிடித்து விளையாடுதல்

ஊரடங்கு சாலையில்

ஒளிந்துப் பிடித்து விளையாடலாம் என்கிறான்

காவலர்கள் வந்தாலும்

கண்டுபிடிக்க முடியாது என்கிறான்

கொரோனா கண்டுபிடித்து விட்டால்

என்ன செய்வாய் என்றேன்

பதிலில்லை

*****

பெரியவனும் சின்னவனும்

கொரோனாவால்

பள்ளிக்கூடம் இல்லையே

சந்தோஷந்தானா என்றால்

என்ன பெரிய சந்தோஷம்

தினந்தோறும்

மெக்கானிக் கடைக்கு

வேலைக்கு அனுப்புகிற

அப்பாவுக்குத்தான் சந்தோஷம்

வேலைக்குப் போகாமலே

குவார்ட்டருக்குக்

காசு தேறி விடுகிறது என்கின்றனர்

பெரியவனும் சின்னவனும்

*****

மாவிளக்கு

மாரியம்மனுக்கு

மாவிளக்குப் போட்டால்

எல்லாம் சரியாகி விடும் என்பாள்

பெரியாயி

ஊரடங்கில் பூட்டிக் கிடக்கிறது

மாரியம்மன் கோயில்

*****

30 May 2021

இது ஒரு கொரோனா காலம்

பல வண்ண முகக்கவசங்கள்

நிறைய முகக்கவசங்கள் வாங்கலாம்

பல வண்ணங்களில் வாங்கும் அவை

ஆடைகளின் நிறங்களோடு பொருந்துவதற்கானவை

*****

கடன்படுதல்

படிப்பைப் பற்றி

இரண்டு நண்பர்கள்

பேசிக் கொண்டதிலிருந்து அறிய வந்தது

நன்றாகப் படித்தால்

கல்விக்கடன் வாங்கிக் கொள்ளலாம்

சுமாராகப் படித்தால்

சிரமங்களில் சிக்கிக் கொள்ளாமலிருக்கலாம்

*****

இது ஒரு கொரோனா காலம்

இன்னும் சிலிண்டர் டெலிவர் ஆகவில்லை

என்ற வருத்தம் எதிர்வீட்டுக்காரருக்கு

என் வீட்டில் உள்ளதை

எடுத்துக் கொள்ளுங்கள் என்றதற்கு

இண்டேன் சிலிண்டரை வைத்துக் கொண்டு

என்ன செய்வது

எனக்கு வேண்டியது ஆக்சிஜன் சிலிண்டர் என்கிறார்

வதங்கிப் போன குரலில்

*****

29 May 2021

முடிவுகளும் குழப்பங்களும்

முடிவுகள்

என் முடிவுகளை என்னிடம் கேட்காதீர்கள்

நாளை மாறும்

என் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்

என் முடிவைக் கேட்டு

என்னை சிறைபடுத்த நினைக்காதீர்கள்

என் விருப்பம் போல என்னை இருக்க விடுங்கள்

என்னிடம் உங்களுக்கான முடிவுகள் எதுவும் இல்லை

*****

குழப்பத்தின் நன்மை

இன்னும் ஒரு முடிவாகவில்லை

ஆனால் அவர்கள்

பயந்து கொண்டிருக்கிறார்கள்

இந்தப் போராட்டம்

இன்னும் நீண்டால் கூட பரவாயில்லை

இன்னும் குழம்ப அதுவே வாய்ப்பு

இறுகிப் போய் விட்டால்

யோசிப்பதற்கு என்ன வாய்ப்பிருக்கிறது

அது ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது

ஒரு முடிவுக்கு வந்து விட்ட அதனிடம்

பேச என்ன இருக்கிறது

குழப்பத்தின் நன்மை

யோசிக்க இடம் கொடுக்கிறது

*****


28 May 2021

நண்பர்

நண்பர்

கோடியக்கரை போகையில்

பறவைகளைச் சுட்டுப் போட்டு

தின்னுபுட்டு வருவார்

அவர்தான் கைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார்

செல்போன் டவரால்

சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டதாக

*****

ப்ளாட் புரோக்கராகி விட்ட

நண்பர் சொன்னதிலிருந்து

ப்ளாட்டிலிருந்து

நூறடித் தூரத்தில்

மயானம்

மட்டும்தான் இல்லை

*****

எம் அவ்வினிய நண்பர்

வளர்ப்பதற்கு வாஸ்து மீன்

தின்பதற்கு வஞ்சிர மீன்

*****

குழந்தைகளைக் கொஞ்சி

கவிதை எழுதியது போதும்

முடிந்தால் நர்சரி ஸ்கூலுக்கு

அனுப்புவதை நிறுத்து

என்று சொன்னதும்

அடிக்க வந்து விட்ட நண்பர்

பாப்பா படிக்கவில்லை என்று

சைக்கியாஸ்ட்ரிட்டிடம்

அழைத்துப் போய்க் கொண்டிருக்கிறார்

*****

ஆர்.சி.புக்

டிரைவிங் லைசென்ஸ்

இன்ஷ்யூரன்ஸ்

எதுவும் வைத்துக் கொள்ளாத நண்பர்

போலீஸ்காரர் என் மாமா என்பார்

*****

27 May 2021

யாருக்கோ சொந்தமான முகம்

 யாருக்கோ சொந்தமான முகம்

கண்ணாடியில் பார்க்கும் முகம்

சத்தியமாய் என்னுடையது

ஆனால் பாருங்கள்

கண்ணாடியில் இருக்கும் முகம்

எனக்குச் சொந்தமானதல்ல

***

காதல் சங்கடம்

காதல் சங்கடம் என்று சொன்னால்

நம்ப மாட்டீர்கள்

நான் காதல் சொல்ல நினைக்கும்

பெண்ணிடம்

எல்லாரும் காதல் சொல்ல

நினைக்கிறார்கள்

***

சுத்தியலால் அடிக்கப்படாத ஆணி

கொடரி தந்த

தேவதையிடம் சொன்னான்

மரவெட்டி

வெட்டுவதற்கு மரமொன்றுமில்லை

***

உன் கடன் முடிந்தது

உனக்கென்ன

ஒரு மரக்கன்றை நட்டு விடுவாய்

நான் தினந்தோறும்

தண்ணீர் ஊற்றியாக வேண்டும்

***

26 May 2021

கொரோனா தேவியைக் கும்பிடுதல்

பல்லியின் பலன்

பல்லி விழும் பலன் தெரியுமாடா

என்றார் பெரியப்பா

மேலே விழும் பல்லியைப்

பிடித்து அப்படியே சாப்பிட்டிடுவேன்

என்றான் அப்புக்குட்டி

*****

பாசக்கார மக்கள்

மக்களாம் மக்கள்

பாசக்கார மக்கள்

கொரோனாவால்

ஆஸ்பத்திரிப் படுக்கையில் இருக்கும்

பிரசிடென்டை

ஊர் கூடிப் போய்க்

கூட்டமாய்ப் பார்த்து வரும்

பாசக்கார மக்கள்

*****

கொரோனாவின் பதில்

கொரோனாவைப் பார்த்து

கவிஞர்கள் எல்லாம்

கொரோனா கொரோனா கொல்லாதே

என்கிறார்கள்

நீங்கள்தான் கொல்கிறீர்கள்

தடுப்பூசிப் போட்டு

என்கிறது கொரோனா

***

செய்கைகள்

கடவுளைச் செய்கிறார்கள்

மக்கள்

கொரோனா தேவி பொம்மை கேட்கிறாள்

மகள்

***

25 May 2021

மேலும் சில சாத்தியக்கூறுகள்

 மேலும் சில சாத்தியக்கூறுகள்

            புதிய இஸ கவிதைகளில் அறிவியல் கவிதைகள் எழுத முடியுமா என்கிறார்கள். ஏன் முடியாது? சான்றுக்குச் சில. நான் உடனடியாக எழுதிப் பார்த்தது.

மேலே போகாத ஆப்பிள்

எல்லா வினைக்கும்

எதிர்வினை உண்டு என்கிறார் நியூட்டன்

கீழே விழுந்த ஆப்பிள்

மேலே போகவில்லை

*****

ஆர்க்கிமிடிஸ் கண்டுபிடிக்காதது

யுரேகா

யுரேகா

கத்திக் கொண்டு ஓடுகிறார்

ஆர்க்கிமிடிஸ்

தன் உடலில்

பொட்டுத்துணி கூட இல்லை என்பதைக்

கண்டுபிடிக்க தெரியாமல்

*****

நடப்பு நிகழ்வுகளோடு தொடர்படுத்தி புதிய இஸ கவிதைகளை எழுத முடியுமா என்று யாராவது கேட்டு விடுவதற்கு முன் அப்படி சில பு.இ.கவிதைகளை எழுதி விடவும் உத்தேசம்.

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்

கொரோனா காலத்துக் கல்யாணம்

கூட்டமில்லாத கல்யாணம்

ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம்

அதே பறக்குற ஏரோப்ளேனில் கல்யாணம்

எங்க ஊரு மக்களுக்கெல்லாம்

பூட்டிய கோயில் முன்தான் கல்யாணம்

*****

வாங்கித் தந்தால் தின்பேன்

கொரோனா காலத்துல

சத்தா சாப்புடணும்ங்குது சித்தப்பு

மூட்டை ரெண்டைச் சேத்துக்கோங்குது பெரியப்பு

கறி மீனுன்னு திங்கணும்ங்குது நடு அப்பு

சரி வாங்கித் தா திங்குறேன் என்றால்

எல்லா அப்பும் எஸ்கேப்பு

*****

இதையெல்லாம் படித்த பின்பு உங்களுக்கும் புதிய இஸ கவிதைகள் எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்தால் மிகவும் மகிழ்வேன். சான்றுக்கு நீங்கள் எழுதியதைப் பகிர்ந்து கொண்டால் இன்னும் மகிழ்வேன். பார்க்கலாம் நாட்டில் என்ன நடக்கப் போகிறது என்பதை. நன்றி! மகிழ்ச்சி! நல்லதே நடக்கட்டும்!

*****

23 May 2021

மீண்டும் மறுபடியும் புதிய இஸ கவிதைகள்

மீண்டும் மறுபடியும் புதிய இஸ கவிதைகள்

நேற்று எழுதியிருந்து புதிய இஸ கவிதைகள் அநேகருக்குப் பிடித்துப் போனது போன ஜென்மத்தில் நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். இது போன்ற அநேகக் கவிதைகளை எழுதித் தள்ள வேண்டுமென்று பலர் விரும்புகிறார்கள். இந்தப் புதிய இஸ கவிதைகள் புதுக்கவிதை எழுதுவதை விட சுலபமானது. போகிற போக்கில் எழுதித் தள்ளி விடலாம். இதனால் நிறைய பேர் இந்த புதிய இஸ கவிதைப் பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அனைவரும் புதிய இஸ கவிதைகளை எழுத வேண்டும் என்று என்பதுதான் எனது விருப்பமும். இதற்கான இலக்கணம் என்னவென்று கேட்டு விடாதீர்கள். அப்படி எதுவும் இல்லாததுதான் இதன் இலக்கணம். இதற்கென இலக்கணம் எழுதி இக்கவிதைகளை எழுதுபவர்கள் குறைந்து விடக் கூடாது பாருங்கள். சான்றாகக் குழந்தைகளுக்கான பாடல் வடிவிலும் புதிய இஸ கவிதைகளை எழுதலாம். அப்படி ஒரு புதிய இஸ கவிதை.

எம்.எல்.ஏ.வாம் எம்.எல்.ஏ.

எம்.எல்.ஏ.வாம் எம்.எல்.ஏ.

நம்ம தொகுதி எம்.எல்.ஏ.

வயிறு முட்ட தின்னவே

பிரியாணி வாங்கித் தந்தார்

தவிக்குது வாய் என்றதும்

குவார்ட்டர் வாங்கித் தந்தார்

ஓட்டுப் போட சொன்னார்

கேட்ட காசு தந்தார்

ஓட்டுப் போட்டு முடிந்ததும்

ஓடிப் போய் விட்டார்

அடுத்த தேர்தல் வந்தால்

அன்பாய் ஓடி வருவார்

கேட்டதெல்லாம் தருவார்

வாக்குறுதி கொடுப்பார்

வாக்குப்பதிவு முடிந்தால்

வந்தப் பாதை மறப்பார்

*****

கொஞ்சம் அதி தீவிரமாகத் தத்துவார்த்தமாகவும் புரியாதடிபயும் எழுதலாம். அப்படியொரு கவிதை கீழே உள்ளது. ஆக நீங்கள் எந்தத் திசையிலிருந்தும் புதிய இஸ கவிதைகளை எழுதத் தொடங்கலாம். புதிய இஸ கவிதைகளை எழுதுபவர்கள் இதை யார் பிரசுரிப்பார்கள் என்று கவலைப்பட வேண்டாம். இந்த வலைப்பூவில் பிரசுரிக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் பாட்டுக்கு எழுதித் தள்ளி அனுப்பிக் கொண்டிருங்கள். மற்றதை வலைப்பூவில் பார்த்துக் கொள்வோம்.

காலிக்குண்டான்

குண்டான் சோற்றைத்

தின்று முடித்து

வைத்திருந்தான் காலிக்குண்டானை

என்னடா இது என்றால்

காலிக்குண்டானைத் தின்னடா என்கிறான்

*****

இதைப் படித்ததும் இது போன்ற புதிய இஸ கவிதைகளை நிறைய எழுத முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வந்திருந்தால் அதற்கு ஆயிரம் நமஸ்காரங்கள். இறைவன் உங்கள் கையைப் பிடித்து எழுத உங்களுக்கு அருள் புரிவாராக!

*****

புதிய இஸ கவிதைகள்

புதிய இஸ கவிதைகள்

வெயிட்டுக்குப் போட மனசு

இந்த மனசுப் பிடிக்கவில்லை

பழைய பேப்பர்காரர் வருகிறாரா பாருங்கள்

கிலோ இரண்டு ரூபாய்க்குப் போட ரெடி

துரு பிடித்த பழைய ஞாபகங்கள் நிறைய இருக்கின்றன

பேரீச்சம்பழம் இரண்டு கிலோ வாங்கிப் போட வேண்டும்

*****

அப்பாவுக்கு வேலை இருக்கிறது

இடி இடித்தால் பயமாக இருக்கிறது

துப்பாக்கிகளைச் சுடச் சொல்லுங்கள்

மின்னல் ஒளியும் பயம் தருகிறது

வெளிச்சத்தோடு ஓர் அணுகுண்டு வெடிக்கட்டும்

பூத்திரி இருந்தால் தாருங்கள்

தீபாவளி பட்டாசு வாங்கித் தர மாட்டார் அப்பா

அவருக்கு டாஸ்மாக்கில் வேலை இருக்கிறது

*****

அம்மா நடந்து போகட்டும்

கூட்ட நெரிசலில் தொலைந்து விட்டால்

சந்தோசம் சந்தோசம் சந்தோசம்

வீட்டுக்குப் போனால்

பொம்மை வாங்கித் தர கேட்டதற்காக

அம்மா அடிப்பாளே என்ன செய்வது

அவள் பர்ஸைத் திருடியாயிற்று

நடந்தே ஊர் போய்ச் சேரட்டும்

*****

பேண்டுக்குப் பட்டாப்பட்டிக்குப் பிடிக்குமா

எல்லாருக்கும் பேண்ட்

பெரியப்பாவுக்கு மட்டும் வேட்டி

அவருக்குப் பேண்ட் போடத் தெரியாது

எனக்கு வேட்டிக் கட்ட தெரியாது

கைலி கட்டத் தெரியும்

பெர்முடாஸ் போடவும் தெரியும்

பெரியப்பா போடுவது பட்டாபட்டி

பேண்டுக்கு ஒத்து வருமா

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...