31 Oct 2020

இரகசியமாய் இரு கடிதங்கள்!

இரகசியமாய் இரு கடிதங்கள்!

செய்யு - 611

            மூணாவது பஞ்சாயத்து முடிஞ்சு ஒரு வாரம் கழிஞ்சிருக்கும். பஞ்சாயத்துக ஒவ்வொண்ணும் மனசெப் போட்டு ரொம்பவே கொழப்பியிருந்துச்சு. ஊருக்குள்ளயும் பஞ்சாயத்துல நடந்ததெப் பத்தி பல வெதமா சனங்கப் பேசிட்டு இருந்தாங்க. பொண்ண வெச்சுக்கிட்டு எத்தனெ காலம் சொமக்க முடியும்? உசுரோட இருக்குதோ, அங்கப் போயி செத்துப் போவுதோ? பொண்ண அனுப்பி விட்டுருந்தா ஒரு பாரம் கொறைஞ்சிருக்கும் சுப்பு வாத்தியாருக்குன்னு ஒரு பக்கத்துச் சனங்கப் பேசிட்டுக் கெடந்துச்சுங்க. நம்ம ஊரு பஞ்சாயத்துலயே வந்து அன்ன மெரட்டு மெரட்டுறானுவோ, அடிக்கப் பாயுறானுவோ, அவனுககிட்டெ பொண்ண வுட்டா அவ்வளவுதாங் காலி பண்ணிட்டுத்தாம் மறுவேல பாப்பானுவோன்னு இன்னொரு பக்கத்துச் சனங்க பேசிக்கிட்டுக் கெடந்துச்சுங்க.

            இதுக்கு இடையில சுப்பு வாத்தியாருக்கு ஒரு கடுதாசி வந்திருச்சு. ஒரு காக்கிக் கலரு கவர்ல அவரோட விலாசம் எழுதி பாக்குக்கோட்டையிலேந்து ஒரு கடுதாசி. ராசாமணி தாத்தாதாம் அந்தக் கடுதாசிய எழுதியிருந்துச்சு. அத்தோட செராக்ஸ் செய்யப்பட்ட ஒரு கடுதாசியையும் இணைச்சு அனுப்பியிருந்துச்சு. சுப்பு வாத்தியாரு அதைப் பிரிச்சுப் படிச்சுப் பாத்தாரு. 

பிரியமுள்ள மாப்புள்ளை சுப்புவுக்கு,

                                    அநேக நமஸ்காரங்கள். இது ஜோதிட சிகாமணி சிவஸ்ரீ பாக்குக்கோட்டை ராசாமணி எழுதிக் கொள்வது. செளக்கியங்களை விசாரிப்பதற்கு முன்பாக இரண்டு பக்கமும் கிரகச்சாரங்கள் சரியில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிரகநிலைகள் சரியில்லாமல் போகும் போது அது குடும்பத்தை மிகவும் பாதிப்படையச் செய்து விடுகிறது என்ற உண்மையை உனக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது உன் கூடவே இருப்பவர்களை நீ நம்பக் கூடாது. மோசம் போய் விடுவாய். அவர்கள் உன்னை தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். நீயும் தவறான வழியில் போவதற்கேற்ற வகையிலேயே உனது கிரக நிலைகளும் இருக்கின்றன.

            பஞ்சாயத்தில் அப்பிடி நிகழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பஞ்சாயத்தில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. உறவுகளின் வற்புறுத்தலால் நிகழ்ந்த எதிர்பாராத நெருக்கடி அது. அப்படியும் நீ வந்து ஒரு வார்த்தை என்னிடம் பேசியிருந்தால் பஞ்சாயத்தே நடைபெறாத அளவுக்குப் பண்ணியிருப்பேன். நீ என் பக்கம் வரவேயில்லை. அது குறித்து நான் வருந்தவில்லை. உன் கிரக நிலைகள் அப்படித்தான் இருக்கின்றன. நல்லவைகளிடமிருந்து விலகி தீயவைகளை நோக்கிச் செல்லும் நிலையில் நீ இருக்கிறாய். பஞ்சாயத்தில் என் மகன் பாலாமணியை நீ ஆண்மை இல்லாதவன் என்று சொன்னதை நான் மன்னித்து விடுகிறேன். ஒரு கோபத்தில் அப்பிடி ஒரு பேச்சு வரத்தான் செய்யும். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

            பஞ்சாயத்துகளால் நீயும் உனது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதை அறிகிறேன். இந்தப் பஞ்சாயத்துகளால் தனது தங்கை வாழாவெட்டியாகப் போய் விட்டதாகக் கருதிக் கொண்டு உனது மகன் விகடு ஆத்திரம் கொண்டு திரிவதாகக் கேள்விப்படுகிறேன். அதற்குக் காரணமான பெருமாள்சாமியையும், எனது மருமகன் சித்துவீரனையும் உனது மகன் கூலிப்படையை வைத்துக் கொல்வதற்குத் திட்டம் தீட்டி வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து எனக்குத் தகவல்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. வெகு முக்கியமாக அதற்காகத்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உனது மகனின் அத்தகைய செயல்பாட்டை உடனே தடுத்து நிறுத்து. அது நல்லதல்ல. எதுவும் நிகழ்ந்து விடவில்லை. சில தோஷ நிவர்த்திகள் செய்ய வேண்டியது இருக்கின்றன. சில பல பரிகாரங்கள் மூலமாக அதை அகற்றி விட முடியும்.

            கலியாணத்திற்காகக் கொடுத்த பணம், நகை குறித்து தேவையில்லாமல் குழம்பிக் கொண்டிருக்கிறாய். தேவையில்லாத பயங்களையும் மனதில் வளர்த்துக் கொண்டிருக்கிறாய். அவையெல்லாம் தேவையற்றது. உன்னிடம் உன் உறவினர்கள் அது குறித்து தேவையில்லாத சந்தேகம் கொள்ளும் அளவிற்குப் பேசி வருவதை நான் அறிகிறேன். பணமும் நகையும் பத்திரமாக பாங்கியில் டிபாசிட்டிலும், லாக்கரிலும் இருக்கின்றன. நீ இது சம்பந்தமாக நேரில் வந்தால் அந்த விவரங்களை ஆதாரங்களோடு காட்ட தயாராக இருக்கிறேன். வருவதாக இருந்தால் நீ மட்டுமே நேரில் வர வேண்டும். கூட உன்னுடன் யாரும் வருவதை நான் விரும்பவில்லை. காரணம் நம் இரு குடும்பத்து விசயங்களை உன்னாலும், என்னாலும் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்பதோடு, வேறு எவரேனும் உடன் வந்தால் அவர்கள் தேவையற்ற குழப்பங்களையும் உண்டு பண்ணி விடுவார்கள்.

            உனக்குச் சந்திக்க விருப்பமில்லை என்றால் உடன் போனில் பேசு. அல்லது பதில் கடுதாசி போடு. எந்த இடத்தில் நாம் ரகசியமாகச் சந்திக்கலாம் என்பதை அப்போது உனக்குத் தெரிவிக்கிறேன். இது மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும். மிகவும் கவனம் யாருக்கும் இது தெரிந்து விடக் கூடாது. பத்திரம் பத்திரம் என்று திரும்ப கூறிக் கொள்கிறேன். நான் இந்தக் கடிதத்தை உனக்கு எழுதக் காரணம் உன்னைப் பற்றியும், உன் குடும்பத்தைப் பற்றியும் எனக்கு வந்த ஒரு மொட்டைக் கடுதாசிதான். உனக்கு உன்னைச் சுற்றி எத்தனை எதிரிகள் இருக்கிறார்கள் என்பதை அந்தக் கடிதத்தை முழுமையாக ஒரு வரி விடாமல் படித்துப் பார்த்தால் உணர்ந்து கொள்வாய். நீ நம்பாமல் இருந்து விடக் கூடாது என்பதற்காக அந்தக் கடிதத்தையும் இத்துடன் சிராக்ஸ் செய்து அனுப்பியிருக்கிறேன். படித்துப் பார்க்கவும். படித்துப் பார்த்து விட்டு உடனே அதைக் கிழித்து விடவும். அந்த அளவுக்கு மோசமாக அந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது என்பதை முன்கூட்டியே உனக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

            நாம் ரகசியமாகச் சந்திக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை உனக்குக் கூறிக் கொள்கிறேன். இந்தத் தகவல்கள் மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதை மறுபடியும் வலியுறுத்திக் கூறிக் கொள்கிறேன். நாம் ரகசியமாகச் சந்தித்துப் பேசினால்தான் பல பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க முடியும். அப்பிடிப் பேசுவதற்கு உனது மகன் கூட தடைதான் என்பதால் நீ மட்டும் வருவதே உசிதம். நாம் ரகசியமாக எப்போது சந்தித்துப் பேசலாம் என்பதற்காக உடனே போனிலோ, கடிதம் மூலமோ தொடர்பு கொள். மீண்டும் நான் கூறிக் கொள்வது என்னவென்றால் ரகசியம் காக்கப்பட வேண்டும். அதுதான் நம் இரு குடும்பத்துக்கும் நல்லது. உன்னை விட வயதில் மூத்தவன் என்பதாலும், இரு குடும்ப நலனில் உன்னை விட அதிக அக்கறையுள்ளவன் என்பதாலும் இந்தக் கடிதத்தை மிகுந்த நம்பிக்கையுடன் எழுதுகிறேன். உனது முடிவை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். மலையாள பகவதி என்றும் துணையிருப்பாள். இதையெல்லாம் எனது மலையாள மாந்திரீக ஞான திருஷ்டியால் அறிந்து எழுதுகிறேன் என்பதை மறந்து விட வேண்டாம்.

இப்படிக்கு

அன்பு மாமன்

ஜோதிட சிகாமணி சிவஸ்ரீ ராசாமணி,

பாக்குக்கோட்டை.

            அந்தக் கடுதாசியோட செராக்ஸ் செய்யப்பட்ட ஒரு இன்லேண்ட் லெட்டரும் இணைஞ்சிருந்துச்சு. பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தாவோட விலாசம் எழுதி, அனுப்புறவங்க விலாசம் இல்லாம வடவாதி தபாலாபீசிலேர்ந்து அனுப்பப்பட்டிருந்துச்சு அந்தக் கடுதாசி. அந்தக் கடுதாசியில இருந்த விவரங்களையும் சுப்பு வாத்தியாரு படிச்சிப் பாத்தாரு.

ஜோதிட சிகாமணி சிவஸ்ரீ ராசாமணியனார் அவர்களுக்கு,

            அநேக வந்தனங்களோடு தங்கள் ஜோதிடத்தால் நலம் பெற்ற நலம் விரும்பி எழுதிக் கொள்வது. இந்தக் கடிதத்தை எழுவது யார் என்று ஆராய வேண்டாம். தங்கள் மற்றும் தங்களின் குடும்பத்தின் நலம் விரும்பும் திட்டைவாசிகளுள் ஒருவன் எழுதிக் கொள்வது. இந்தக் கடிதம் கண்டவுடன் உடன் நீங்கள் எப்பாடு பட்டாவது தங்களது மருமகளை அழைத்துக் கொண்டு வந்து விடவும். திரும்ப இந்த ஊர்ப்பக்கம் எட்டிப் பார்க்காதீர்கள். திட்டை கிராமத்திலேயே பரம்பரை பரம்பரையாக இருந்து வருபவன் என்கிற முறையில் சுப்பு வாத்தியார் என்ற கேடுகெட்ட மனிதரின் குடும்பத்தைப் பற்றி நான் அறிவேன். தரமான குடும்பத்தைச் சேர்ந்த தாங்கள் தரங்கெட்ட குடும்பத்தில் பெண் எடுத்து விட்டீர்கள். ஆனது ஆகி விட்டது. நமது இந்துத் தர்ம குடும்ப சாஸ்திரங்கள் எப்போதும் சிதைந்து விடக் கூடாது. நீங்கள் எப்பிடியாவது பஞ்சாயத்து செய்து உங்கள் மருமகளை அழைத்துக் கொண்டுச் சென்று விடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். தவறி விட்டீர்கள். பரவாயில்லை. இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்காதீர்கள். சுப்பு வாத்தியாரின் குடும்பம் முறையற்ற உறவில் உள்ள ஒரு குடும்பம். அவருக்கும் அவரது மருமகளுக்குமே முறையற்ற உறவு உள்ள குடும்பம். இந்தத் தகவல் ஊர் அறிந்து நாறிக் கிடக்கும் விசயம். அதை எப்பிடி தாங்கள் அறிந்து கொள்ளாமல் போனீர்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் இது தங்களது ஜோதிடப் பார்வையிலிருந்து தப்பியதற்கு அவர்கள் உங்களது உறவினர்களாக அமைந்து விட்டதுதான் காரணம் என்று நினைக்கிறேன். உறவினர்கள்தானே என்று அலட்சியமாக ஜாதகங்களை ஆராயாமல் விட்டு விட்டீர்கள். ஜாதகங்களைப் பாத்திருந்தால் கண்டறிந்திருப்பீர்கள். ஜோதிட முறைப்படியும், இந்துத் தர்மப்படியும் வாழ்ந்து வரும் தங்கள் குடும்பத்திற்கு இப்பிடி ஒரு நிலை கூடாது என எச்சரிக்கவே இந்தக் கடிதம். பரிபூரண சுத்தத்தோட தாங்கள் ஜோதிட சேவையும், தங்கள் மகன் மருத்துவச் சேவையும் ஆற்றி வரும் நிலையில் இப்படி ஒரு குடும்பத்தில் பெண் எடுத்திருக்கக் கூடாதுதான். எடுத்து விட்டீர்கள். பெண் மேல் குறையில்லை. குடும்பத்தில் குறையும், தகாக உறவுகளும் இருக்கின்றன. உடன் காத்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கை. எச்சரிக்கை. மிகவும் எச்சரிக்கை. மிக கவனமாகச் செயல்பட்டுத் தற்காத்துக் கொள்ளுங்கள்.

இப்படிக்கு,

தங்கள் ஜோதிடத்தால் பயன்பெற்று நல்ல விதமாக குடும்பம் நடத்தி வரும் திட்டைவாசிகளுள் ஒருவனும், பரம சாதுவான மகனைப் பெற்றெடுத்த தகப்பனும் ஆகிய ஒருவன்.

            இந்த ரண்டு கடுதாசிகளையும் படிச்சு முடிச்சதும் சுப்பு வாத்தியாருக்குக் கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சது. உடம்பெல்லாம் குப்புன்னு வியர்த்துடுச்சு. அப்பிடியே பச்சக்குன்னு தரையில உக்காந்துட்டாரு. அவரு அப்படி ஆனதப் பாத்து அந்தக் கடுதாசிய அவரு கையிலேந்து வாங்கிப் படிச்சுப் பாக்க நெனைச்சான் விகடு. சுப்பு வாத்தியாரு அந்தக் கடுதாசிய கொடுக்க முடியாதுங்றது போல அழுத்தமா பிடிச்சிருந்தார். அவ்வேம் பிடிவாதமா பிடுங்கி அதெ படிச்சிப் பாத்தாம். அவனுக்கு கலக்கமோ, நடுக்கமோ எதுவுமே யில்ல. அவ்வேம் பாட்டுக்குச் சிரிக்க ஆரம்பிச்சிட்டாம். மவ்வேம் சிரிக்கிறதெ அதிசயமா பாத்தாரு சுப்பு வாத்தியாரு.

            "யிப்பிடி ஒரு கடுதாசிய எழுதாம இருந்திருந்தா அவனுகள யோக்கியன்ங்கள்ன்னு நெனைக்குறாப்புல ஆயிடும். எழுதுனவாசித்தாம் அந்தப் பயலுகள அயோக்கியப் பயலுகன்னு முடிவு கட்ட முடியுது. எந்தப் பைத்தியங்கூலிப் பயலவாது எவ்வளவுதாங் பைத்தியம்னாலும் ரண்டு கடுதாசியையும் ஒரே கையெழுத்துல எழுதுவானுவோளா? அந்தக் கெழட்டுப் பய எழுதுனதா இருக்குற கடுதாசியில இருக்குற கையெழுத்தும், சிராக்ஸ் எடுத்தக் கையெழுத்தும் ஒரே மாரியால்லா இருக்கு. இவனுவோளாவே ஒரு கடுதாசிய வடவாதியிலேந்து அவனுகளுக்கு அனுப்பி வுட்டுப்புட்டு, அதுக்குத் தகுந்தாப்புல அதெ பாத்துப்புட்டு நமக்குக் கடுதாசி எழுதுறாப்புல எழுதிருக்கானுவோ. இதெப் போயா நம்புதீங்க? அந்தப் பயெ தனியா ரகசியமா வர்றச் சொல்றதிலேந்து புரியல. தீத்துக் கட்டணும்ன்னு முடிவெ பண்ணிட்டு நிக்குறானுவோ. இதெ கொண்டுப் போயி போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்து ஒரு கம்ப்ளெய்ண்ட்ட பண்ணாவே போதும். பயலுக ஒரு வழிக்கு வந்துப்புடுவானுவோ!"ன்னாம் விகடு.

            விகடு தெளிவா பேசுறதெ கேட்டதும், "போலீஸ் ஸ்டேசன்லாம் போவக் கூடாதுன்னுத்தாம் பஞ்சாயத்துல வெச்சே எதாச்சும் முடிச்சிப் புடலாம்ன்னு பாத்தேம். முடியல. போவணும்ன்னு நெனைச்சிருந்தா ஒந் தங்காச்சித் தூக்கு மாட்டுன அன்னிக்கே போயிருந்திப்பேம். பெறவு போலீஸ் ஸ்டேசன்லாம் போனதாலத்தாம் சேந்து வாழ முடியாதுன்னு அந்தக் கிறுக்குப் பயலுவோ நெலையா நிப்பானுவோன்னுத்தாம் யோஜனெ பண்ணிட்டு வுட்டேம். அப்பயே போவல. இப்பப் போயி என்னத்துக்கு ஆவப் போவுது. இந்தக் கடுதாசியத் தூக்கி அந்தாண்டப் போட்டுப்புட்டு பேயாம நாம்ம ஆவ வேண்டியதெ பாத்துட்டு இருந்தாலவே அடங்கிப் போயிடுவானுவோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு யிப்போ கொஞ்சம் நெதானமா.

            "பெறவு ஏம்ப்பா கலங்கிப் போயி உக்காந்திருக்கீயே?"ன்னாம் விகடு.

            "அதுக்கில்லடாம்பீ! இப்பிடி பழியக் கட்டி விட நிக்குறானுவோளே? இவுனுங்ககிட்டெ பொண்ண அனுப்பிச்சி வுட்டு என்னத்தடா பண்ணுறது? கொன்னு போட்டுப்புட்டு, ஒம் பொண்ணு தற்கொல பண்ணிட்டுன்னோ, பைத்தியமாக்கி வுட்டுப்புட்டு யிப்பிடி ஒரு பைத்தியங்கூலிப் பொண்ண கட்டி வெச்சிருக்கீயோன்னோ சொல்லிட்டுப் போயிட்டெ இருப்பானுவோடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அழுவாத கொறையா.

            "அதாங் தங்காச்சிய அனுப்பலயே!"ன்னாம் விகடு.

            "ஒருவேள அனுப்பியிருந்தா? அதெ நெனைச்சிப் பாத்தேம்டாம்பீ! நம்மளோட ஈரக்கொலைய நடுங்குதுடாம்பீ! அதெ நெனைச்சப்பத்தாங் அப்பிடியே கலங்கிப் போயி, உடம்பெல்லாம் நடுங்கிப் போயி உக்காந்துட்டேம்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. பெறவு அந்தக் கடுதாசிய வூட்டுல உள்ள அத்தனையும் படிச்சிப் பாத்து ஆத்திரம் அடங்காம பேசிக்கிட்டுக் கெடந்துச்சுங்க. ஆயிக்கு வந்த ஆத்திரத்துல அவனுகளப் பிடிச்சி கொன்னு போடணும்ன்னு நின்னா. செய்யு அதெப் படிச்சி படிச்சிப் பித்து பிடிச்சவ போல நின்னா. வெங்கு அதெ படிச்சிக் காட்டச் சொல்லி பைத்தியம் பிடிச்சது போல நின்னுச்சு. ஒரு கடுதாசிய அனுப்பி அடுத்த கட்ட வேலைய ஆரம்பிச்சிட்டானுவோளே பாக்குக்கோட்டையானுவோன்னு முணுமுணுத்துக்கிட்டெ கெடந்தாரு சுப்பு வாத்தியாரு.

*****

30 Oct 2020

தப்புத் தாளங்கள்

தப்புத் தாளங்கள்

பயந்து கொண்டுதான் தவறுகள் நிகழ்கின்றன

துணிந்தால் தவறலாமா என்று கேட்காதே

துணிந்த பின் தவறு செய்யத் தோன்றாது

மனபயத்துக்காக

எவ்வளவு துணிந்து செல்வார்கள் என்பதைக்

கணிக்க முடியாது

அவர்களின் பயத்துக்குக் காரணம் இருந்தது

செயல்களுக்குக் காரணம் இல்லை

பயத்தில் நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்க வேண்டும்

மென்மேலும் பயம் விதைக்கப்பட்ட போது

பயந்து பயந்து பயத்தில் மேலும்

துணிந்து சென்றார்கள்

அந்தத துணிச்சல் ஆபத்தானது என்று

பயம் காட்டியவர்களுக்குத் தெரியவில்லை

பயமுறுத்துவது வசதியாய் இருக்கிறது

அவர்களுக்கான ஆபத்தும் அடங்கியிருக்கிறது

*****

அவனவனும் வெட்டிக் கொள்கின்ற குழிகள்!

அவனவனும் வெட்டிக் கொள்கின்ற குழிகள்!

செய்யு - 610

            உள்ளூர்ல கெடந்துக்கிட்டு உள்ளூரு சங்கதிகளெ தெரியாத ஆளுகளும் இருக்காம். வெளிநாட்டுல இருந்துகிட்டு உள்ளூர்ல நடக்குற சின்ன சின்ன சங்கதிகளையும் அங்கேயிருந்தே புட்டு புட்டு வைக்குற ஆளும் இருக்காம். புனிதாவோட புருஷங்கார்ரேம் அப்படிப்பட்ட ஆளு. துபாய்ல இருந்தாலும் திட்டையில நடக்குற ஒவ்வொண்ணுத்தையும் தெரிஞ்சிக்க ஆளுகள வெச்சிருந்தாம். திட்டையில எந்தச் சங்கதி நடந்தாலும் ஒடனே அவனுக்குக் கடுதாசியோ, போனோ போயிடும். அந்தத் தகவலெ கொடுக்குற ஆளுங்களுக்குன்னே வெளிநாட்டுச் சாமானுங்கள வர்றப்போ கொடுத்துத் தாசா பண்ணி வெச்சிருந்தாம். அத்தோட ஊருக்கு வந்தப் பெற்பாடு ஊரு முக்கியஸ்தர்கள ஒரு பெரிய ஆளா தலையெடுக்கணுங்ற ஆர்வமும் அவருக்கு இருந்ததால இந்த வேலையத் தொடந்தாப்புல பண்ணிட்டு இருந்தாம்.

            பட்டாமணிக்கும், புனிதாவுக்கும் இருந்த பழக்கம் தம்மேந்தி ஆத்தாவுக்கோ, பட்டறையில வேல பாக்குற கோதண்டத்துக்கோ, கிராமத்துல இருக்குற வேற யாருக்கும் தெரியாட்டியும் புனிதாவோட புருஷங்கார்ரேம் போட்டு வெச்சிருந்து ஆளுங்க மோப்பம் புடிச்சி சேதிய துபாய்க்குப் போட்டு வுட்டுடுச்சுங்க. பொண்டாட்டி மேல ஆத்திரம் ஆத்திரமா வருதுன்னாலும் நெதானமா அதெ யோசிச்சுப் பாத்த புனிதாவோட புருஷங்காரனுக்குக் குடும்பத்தெ வுட்டுபபுட மனசில்ல. கட்டுன பொண்டாட்டிய நேத்தி வந்தவேம் தூக்கிட்டுப் போன கதையா ஆச்சுதேன்னு நெனைச்ச புனிதாவோட புருஷங்கார்ரேம் துபாய்ல இருந்தபடிக்கே தன்னோட ஆளுகளுக்குப் பட்டாமணியப் பத்தி முழுசா வேவு பாத்துச் சேதிய அனுப்பச் சொன்னாம். அதுல கவர்மெண்டுக்குச் சொந்தமான ஆத்தங்கரை தேக்கம் மரத்தெ கள்ளத்தனமா அறுத்து, கள்ளத்தனமா விக்கற சேதி தெரிஞ்சதும் மொத வேலையா தன்னோட ஆளுகள வெச்சி கலெக்டருக்கு, போலீஸ் ஸ்டேஷனுக்கு, பாரெஸ்ட் டிபார்ட்மெண்டுக்குன்னு மொட்ட பெட்டிஷன ஒண்ணு மேல ஒண்ணா போட வெச்சாம். 

            அடுக்கடுக்கா பட்டாமணி மேல போன பெட்டிஷன் தெரியாமலே பட்டாமணி தேக்கம் மரத்தெ அறுக்குறதும், புனிதாவோட வூட்டுக்குப் போயி குடி கெடுக்குறதுமா இருந்துட்டு இருந்தாம். யாரும் எதிர்பாக்காத ஒரு நாளு நடுராத்திரியில பாரெஸ்ட் டிரபார்ட்மெண்டுலேந்து வந்து பட்டறையில தேக்கம் மரத்தெ அறுக்குறதெ கையும் களவுமா பிடிச்சப்ப பட்டாமணி வசமா மாட்டுனாம். பட்டறைய இழுத்து மூடி சீல் வைக்கப் போறப்ப கட்சிக்கார பெரும்புள்ளிக பட்டாமணியக் காப்பாத்தி வுட முயற்சிப் பண்ணாங்க. பட்டாமணி கையும் களவுமா மாட்டியிருக்கிறதால யாராச்சும் ஒருத்தரு அரெஸ்ட் ஆவாம இதெ தடுக்க முடியாதுன்னு தெரிஞ்சதும், பட்டாமணி கோதண்டத்துக் கால்ல பட்டுன்னு வுழுந்தாம். இந்த நெலையில கோதண்டம் தன்ன காப்பாத்தலன்னா குடும்பத்தோட தற்கொல பண்ணிக்கிடுறதெ தவுர வேற வழியில்லன்னு ஒரு பிட்ட எடுத்து வுட்டாம் பட்டாமணி. கோதண்டம் இந்தத் தப்பு தாம் பண்ணதா ஒத்துக்கிட்டு கைதாயிப் போனா, அவ்வேம் குடும்பத்தெ தாங் காப்பாத்துறதாவும், மாசா மாசம் பணத்தெ கொடுக்குறதாவும், கொஞ்ச நாள்லயே நல்ல வக்கீலா வெச்சி வெளியில ஜாமீன்ல எடுத்து, கேஸ்ஸ ஒண்ணுமில்லாம அடிச்சிடுறதாவும் பட்டாமணி அவ்வேம் பாட்டுக்கு சத்தியம் மேல சத்தியமா அடிச்சி விட்டாம். அதுக்கு அச்சாரமா ரண்டாயிரம் பணத்தெ வேற கோதண்டத்துக்கு மின்னாடி எடுத்து வெச்சாம்.

            கோதண்டத்துக்கு அந்த நேரத்துல சட்டுன்னு என்னா முடிவு எடுக்குறதுன்னு புரியல. மொதலாளியா போயிட்ட பட்டாமணி கால்ல வுழுந்தது கோதண்டத்தோட மனசப் போட்டு வாளைப் போல அறுஅறுன்னு அறுத்துச்சு. நம்மளயும் ஒரு மனுஷனாக்கி, ஒரு போர்மேன் நெலைக்கு உயர்த்துன பட்டாமணிக்கு இதெ கூட செய்யலன்னு எப்பிடின்னு கோதண்டம் நொடியில முடிவெடுத்து கைதாயிப் போனுச்சு. கவர்மெண்டோட தேக்கம் மரத்த அறுத்ததுல பட்டாமணிக்கும் பட்டறைக்கும் எந்தச் சம்பந்தம் இல்லன்னும், தாந்தாம் திருட்டுத்தனமா தேக்க மரத்தெ வெட்டி, பட்டறைக்காரருக்குத் தெரியாம அறுத்ததா வாக்குமூலம் கொடுத்ததன் பேர்ல எல்லா தப்பையும் கோதண்டம் ஏத்துக்கிட்டு பட்டாமணியையும், பட்டறையும் காப்பாத்தி வுட்டுச்சு.

            கோதாண்டம் பட்டாமணிக்குக் கொடுத்த வாக்கெ காப்பாத்தி வுட்டாலும், பட்டாமணி கோதண்டத்துக்குக் கொடுத்த வாக்குறுதிய ரொம்ப காலத்துக்குக் காப்பாத்த முடியல. காப்பாத முடியாத அளவுக்கு பட்டாமணிக்கு அடுத்த சோதனெ காத்திருந்துச்சு. இவ்வளவு நடந்தும் பட்டாமணி புனிதாவோட வூட்டுக்குப் போறதெ விடாமத்தாம் வெச்சிருந்தாம். பாத்தாம் துபாய்ல இருந்த புனிதாவோட புருஷங்கார்ரேம். அங்கேயிருந்தே தன்னோட ஆளுகளுக்குப் பணத்தெ கொடுத்து பட்டாமணிய அடிக்க ஆளுகளத் தயார் பண்ணச் சொல்லிட்டாம். நடுராத்திரி நேரத்துல புனிதாவோட வூட்டுக்குப் போனப்ப தயாரா இருந்த அடியாளுங்க பட்டாமணிய கையும் காலையும் கட்டி, வெண்ணாத்துக்கு அந்தாண்ட கொண்டாந்து மூர்த்தியப்பரு கோயிருக்கு வடக்கால இருக்குற தெடல்ல வெச்சி உசுர மட்டும் ஒடம்புல வெச்சி வெளுத்து எடுத்துட்டுப் போனானுவோ.

            அங்கேயே அடிபட்டு மொனகிட்டுக் கெடந்த பட்டாமணிய காலையில வெளிக்கிப் போறதுக்குப் போன ஆளுங்கப் பாத்துட்டு தூக்கிக் கொண்டாந்து வூட்டுல போட்டாங்க. ஆர்குடி, திருவாரூரு ஆஸ்பத்திரியில வெச்சிப் பாத்தும் கொணம் காணாம, தஞ்சாவூரு ஆஸ்பிட்டல்ல வெச்சித்தாம் கொணம் காண வைக்க முடிஞ்சது பட்டாமணிக்கு. காசு போன சம்பாதிச்சிடலாம், உசுருப் போன சம்பாதிச்சிட முடியுமான்னு உசுர காப்பாத்துறதுக்காக அதுல பெருங்காசிய வுடறாப்புல ஆச்சுது பட்டாமணிக்கு. அத்தோட தேக்கம் மரத்தெ அறுத்த வெவகாரத்துலயும் பெரும்பணத்தெ வுட்டுத்தாம் பட்டறைக்கு வெச்ச சீல எடுக்க முடிஞ்சது. கோர்ட்டு, கேஸூன்னு கணிசமாவும் பணம் போயிட்டு இருந்துச்சு. பட்டாமணியால சமாளிக்க முடியாமப் போனதுல கோதண்டத்தெ சுத்தமா மறந்துப் போனாம். கோதண்டத்தோட குடும்பம் நெலைகொலைஞ்சுப் போச்சுது. தம்மேந்தி என்ன பண்டுறது, ஏது பண்டுறதுன்னு புரியாம துடியா துடிச்சுப் போனுச்சு.

            யார்ரப் பாத்து என்னத்தெ செய்யுறதுன்னு அதுக்குப் புரியல. கோதண்டம் மேல இருந்த குத்ததுக்குப் பக்கா சாட்சியம் இருந்ததால வெளியில கொண்டாரது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அந்த நேரத்துலத்தாம் புனிதாவோட புருஷங்கார்ரேம் துபாய்லேந்து நாடு திரும்பி திட்டையில இருந்த எடத்தெ வித்துப்புட்டு விளமல்ல ஒரு எடத்தெ வாங்கி கூறு கெட்ட பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு அங்க குடிப் போனாம். அத்தோட கோதண்டத்தெ வெளியில எடுக்க பெரிய பெரிய வக்கீல வெச்சி வாதாடி வெளியில கொண்டாந்தாம். அதுக்கு கைமாறா தம்மேந்தி ஆத்தா கையில காசில்லாததால ரோட்டுப்பாக்கமா இருந்த இருவது குழி எடத்தெ புனிதா புருஷனுக்கு எழுதிக் கொடுத்துச்சு. புனிதாவோட புருஷங்கார்ரேம் அந்த எடத்தை வித்துச் காசாக்கிட்டாம். அத்தோட கோதண்டத்துக்கு திருவாரூரு சிவசத்தி மரவாடியில ஒரு வேலைக்கும் சேத்து வுட்டாம். அன்னியிலேந்து பட்டாமணி மேல தம்மேந்தி ஆத்தாவுக்கு உண்டான வெறுப்ப மாத்த முடியல.

            இந்தச் சம்பவத்துக்குப் பெறவு தம்மேந்தி ஆத்தா பட்டாமணிய எதாச்சும் பண்ணி வுடனும்ன்னு நெனைச்சுச்சு. ஊருக்குள்ள பெரிய மனுஷனா இருக்குற அவனெ அதால எதையும் பண்ண முடியல. அதுக்கு சுப்பு வாத்தியார்ரு மவ விசயத்துல மூணாவது பஞ்சாயத்தப்போ ஆத்திரப்பட்டு விகடு போனதெப் பாத்ததும் நிச்சயம் பட்டாமணி விகடுகிட்டெ அடிய வாங்கிடுவாம்ன்னு எதிர்பாத்துச்சு. ஆன்னா அது நடக்காம அவ்வேம் தப்பிப் போயிருந்ததெ நெனைச்சி அதுக்கு ரொம்ப வருத்தமாப் ‍போச்சு. அதெ வெளிப்படையாவே சுப்பு வாத்தியாருகிட்டெ சொன்னுச்சு, "ஒம்மட மவ்வேம் அவனெ நாலு இழுப்பு இழுத்திருப்பான்னு பாத்தேம். தேவிடியாப் பயெ தப்பிச்சிட்டானே யம்பீ! அவனெ வுடக் கூடாதும்பீ! நீயாச்சும் எதாச்சும் பண்ணி வுடணும்பீ!"ன்னுச்சு தம்மேந்தி ஆத்தா.

            சுப்பு வாத்தியாரு யிப்போ ஒரு சிரிப்ப சிரிச்சாரு. "அவனெ நாம்ம என்னத்தெ பண்டுறது? அவனெ அடிபட்டுட்டுத்தாம் கெடக்காம். அவனெ அடிக்கப் போயி நாம்ம ஒரு அடியாளு ஆயிடக் கூடாது. அவனெ கொலை பண்ணப் போயி நாம்ம கொலகாரனா ஆயிடக் கூடாது. அவ்வவ்வேம் பண்டுற தப்புக்கு அவனவனும் அனுபவிக்கணும்ன்னு கணக்கு இருக்குறப்போ, அந்தக் கணக்கெ நாம்ம ஏம் நம்மட தலையிலப் போட்டுக்கிடணும்? ஊரான் வூட்டு உத்திரத்தெ உலுக்க நெனைச்சா அவ்வேம் வூடுதாம் அவ்வேம் தலையில புழுத்துப் போயி வுழுவப் போவுது! அவனெல்லாம் என்ன கதிக்குப் போவப் போறாங்றது அந்த ஆண்டவனுக்கே தெரியும். அவவனனும் பண்டுறதெ அவனவனும் அனுபவிக்கட்டும். நாம்ம ஒரு தண்டனெயெ கொடுத்து அதெ கொறைச்சிட விரும்பல!"ன்னாரு ரொம்பவே நெதானமா.

            "நீஞ்ஞல்லாம் இப்பிடி இருக்குறதாலத்தாம் தப்பு பண்ணுறவனெல்லாம் பெரிய ஆளா போறாம். நல்லது பண்ணுறவனெல்லாம் ஒண்ணும் தெரியாமப் போறாம். அவனையெல்லாம் நாலு பேரு தலையில தட்டணும்பீ! என்னடா நெனைச்சிக்கிட்டு இருக்குறேன்னு ஊர்ல நாலு பேரு கேள்வியக் கேக்கணும்பீ?"ன்னுச்சு தம்மேந்தி ஆத்தா அழுதுகிட்டெ.

            "ஒருத்தனோட வயித்தெரிச்சல வாங்கிக்கிட்டு எந்தப் பயலும் நல்லா இருந்துட முடியாது. ஊருல பல பேத்தோட வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டுக் கெடக்காம் அந்தப் பயெ. அத்து அவனெ சும்மா வுடாது. நல்லா நடக்குறவனே தடுமாறி வுழுறப்போ, கோணலும் மாணலுமா நடக்குறவனப் பத்தி என்னத்தெ சொல்லுறது? ஒழைச்சிச் சாப்புடுற காசிய ஒட்ட மாட்டேங்குங்றப்போ, ஊர்ர சொரண்டிச் சாப்புடுற காசியில என்னத்தெ வெளங்கப் போறானுவோ? என்னவோ வாழ்ந்துக்கிட்டு இருக்கானுவோ! எப்பிடியோ தொலையட்டும்! நமக்கு ஒரு குத்தம் வந்துட்டுதுங்றதால நாம்ம ஒரு குத்தம் பண்ணி குத்தவாளியா ஆயிடக் கூடாது. ஏம் பொண்ணு புள்ளியோ அந்த வெதத்துல ஆத்திரப்படாம அவ்சரப்படாம குத்தம் பண்ணாம எறங்காம இருந்தாலே போதும். இந்தக் குத்தம்ல்லாம் கஷ்ட்டம்ன்னாலும் காலப்போக்குல தானா சரியாயிடும். நாம்ம ஒண்ணும் இதெ பண்ட வேண்டியதில்ல. தானாவே வெலகிப் போயிடும். ஒரு மனுஷனால எத்தனெ காலத்துக்கு ஒருத்தனுக்குக் குத்தம் பண்ணிட்டெ இருக்க முடியும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு விரக்தியா சிரிச்சிக்கிட்டெ. தம்மேந்தி யாத்தாவுக்கு அதுக்கு மேல ஒண்ணும் சொல்ல முடியல. அத்து சேலைத் தலைப்பால வாயைப் பொத்திக்கிட்டு, “நல்லாயிருக்கணும்பீ ஒங் குடும்பம்”ன்னு சொன்னமேனிக்கு அழுதடிபடிக்குக் கௌம்புனுச்சு.

            பட்டாமணியோட நெலமையும் இப்போ மின்னாடிப் போல இல்ல. தொடந்தாப்புல பட்டறைய நல்ல வெதமா நடத்த முடியாம ரொம்பவே தடுமாறிப் போனாம். அவனும் மவனுமா கொஞ்சம் காலம் வாள்பட்டறையில கெடந்து மரங்கள அறுத்துப் பாத்தானுவோ. தண்டத்துக்கு வெறவுக்குன்னுப் போயி அறுத்தாலும் மரம் தேறாதுங்ற அளவுக்குப் பட்டறையோட நெலமெ மோசமாயிட்டே இருந்துச்சு. ஆனாலும் திட்டையில பட்டறை இருந்துச்சு. பட்டறைக்கார்ரேம்ங்ற பேரு பட்டாமணிக்கு இருந்துச்சு. பட்டறையிலத்தாம் மரம் அறுக்குற வேல சுத்தமா இல்லாம இருந்துச்சு. நட்டாம்புட்டி வேலைக்குன்னு ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம் யாரச்சும் மரத்தெ வந்து அறுத்துக்கிட்டுக் கெடந்தாங்க. ஒரு கட்டத்துக்கு மேல பட்டறைய வெச்சி சமாளிக்க முடியாதுங்ற நெலமெ வந்தப்போ, மூணு லட்சத்துக்கு அட்வான்ஸ் பண்ணி, மாசத்துக்கு அதெ இருவாதினாயிரத்துக்கு லீசுக்கு வுட்டுச் சம்பாதிக்கலாம்ன்னு பாத்தாம் பட்டாமணி. விகடுவோட தாய்மாமனான வீயெம் மாமா ஒரு லட்சத்தெ அட்வான்ஸ் பண்ணிப்புட்டு, மாசத்துக்குப் பாஞ்சாயிரத்து பட்டறைய லீசுக்குக் கேட்டுப் பாக்கலாம்ன்னு கேட்டுப் பாத்துச்சு. பட்டாமணி ஒத்துக்கிடல. கடெசீயா ஒத்தக்கடைங்கற ஊர்லேந்து ரண்டு பேரு வந்து பட்டாமணி சொன்ன தொகை்குக்குப் பட்டறைய எடுத்து நடத்திட்டு இருக்காங்க.

            பட்டறைக்குன்னு வாங்குன அட்வான்ஸ்ல பட்டாமணி பட்டறைக்கு மின்னாடி காம்ப்ளக்ஸ் மாதிரி நாலு கடைகளக் கட்டிப் போட்டாம். அதுல ஒண்ணுத்துல அவ்வேம் ஒரு ஹார்டுவேர்ர கடைய வெச்சிக்கிட்டாம். ஒண்ணுத்தெ மளிகெ கடைக்கும், ரண்டாவதெ செராக்ஸ், கம்ப்யூட்டரு கடைக்கும், மூணாவதெ தச்சுப் பட்டறைக்கும் வாடகைக்கு வுட்டுப்புட்டு காம்ப்ளக்ஸ்க்கு மின்னாடி நாற்காலியப் போட்டுக்கிட்டு உக்கார ஆரம்பிச்சாம். அத்தோட ஊரு வெவகாரங்கள்ல மூக்க நொழைச்சிக்கிட்டும் இருந்தாம். அவ்வேம் காம்ப்ளக்ஸ்ல கடையப் போட்டவனோளோட யேவாரம் சரியாப் போவாம கடைய வேற அடிக்கடி மாத்திக்கிட்டெ இருந்தானுவோ. பட்டாமணி போட்ட ஹார்டுவேர்ஸ் கடையிலயும் சாமாஞ் செட்டு அரதப்பழசா போயி கெடக்க ஆரம்பிச்சது. பட்டறைக்குப் பக்கத்துல போர்மேனுக்குன்னு கட்டுன வூட்டயும் பட்டறைய லீசுக்கு எடுத்தவனுங்களுக்கே வாடகைக்கு விட்டு வெச்சிருந்தாம்.

            கால ஓட்டத்துல வீயெம் மாமா, பட்டாமணி, சித்துவீரன் இவனுவோ எல்லாம் சேந்து ஒண்ணா குடிக்கவும் ஆரம்பிச்சி குடிகாரப் பட்டாளமா ஆனானுவோ. இதுக்குன்னே வீயெம் மாமாவோட பட்டறைக்கு டிவியெஸ் சாம்ப்ல சீரெட்ட புஸ் புஸ்ன்னு ஊதிட்டு ராத்திரியா ஆனா மேற்கால போவ ஆரம்பிச்சாம் பட்டாமணி. டிவியெஸ் எக்செல்ல கெழக்காலேந்து வர்ற ஆரம்பிச்சாம் சித்துவீரன். அந்த வகையில சுப்பு வாத்தியாரு மவள வெச்சி நடந்த மூணு பஞ்சாயத்துக்குமான டிசைனே வீயெம் மாமாவோட பட்டறையிலத்தாம் தயாரானுச்சு. அந்த மூணு பஞ்சாயத்துக்கு மட்டுமில்லாம சுத்துப்பட்டு ஊர்ல நடக்குற பல பஞ்சாயத்துகளுக்கான டிசைன் வீயெம் மாமாவோட பட்டறையில உருவாவ ஆரம்பிச்சிது. இவனுக அப்பிடி கூட கூத்தடிச்சிக்கிட்டுக் குடிக்குறதுக்கும் அளவில்லாமப் போச்சு. அத்தோட ஊர்ல இருக்குற குடும்பங்கள குடி கெடுக்குறதுக்கான டிசைன உருவாக்குறதுக்கும் ஓர் அளவில்லாமப் போச்சு. அதுல வீயெம் மாமா, பட்டாமணி இந்த ரண்டு பேரும் கோர்ட்டு, கேஸூ, போலீஸ்ன்னு பல வெசயங்களப் பாத்துட்டதால இவனுகளப் பெரிய வஸ்தாத்துப் போல சனங்கப் பாக்க ஆரம்பிச்சிதுங்க. இவனுக கூட சுத்துனவங்களெ பெரிய போக்கிரிகளாப் பாக்கவும் ஆரம்பிச்சதுங்க.

            அதுலப் பாத்தீங்கன்னா வீயெம் மாமா பழுப்பு நெறத்துல ஒரு ஹோண்டா ஆக்டிவாவ வாங்குனதப் பாத்துட்டு, பட்டாமணி சேப்பு நெறத்துல ஒரு ஹோண்டா ஆக்டிவாவ வாங்கிட்டு அதுலத்தாம் சீரெட்ட ஊதித் தள்ளிட்டுப் போறாம். இந்தக் குடிகார மனுஷங்களுக்குள்ள ஒரு நல்ல விசயம் என்னான்னா, பட்டறையிலத்தாம் கூடிட்டு பொழுது மசங்குற நேரமாவோ, ராத்திரியோ குடிப்பானுவோ. மித்த நேரத்துல குடிக்க மாட்டானுவோ. ஒருத்தனெ வுட்டுப்புட்டு இன்னொருத்தன் குடிக்க மட்டானுவோ. அப்பிடிக் குடிக்கிறதுக்கான தோது ஓசிக் காசியிலயே வர்றாப்புல வாரத்துக்கு ஒரு பஞ்சாயத்து அவனுக கைளுக்கு வந்து மாட்டிக்கிட்டே இருந்துச்சு. குவார்ட்டரும் ஆப்பும் அதுக்கான காசும் ன்னா சும்மாவா கெடைக்குது? அதுவும் ஓசிக்குடிக்கும் பிரியாணிக்கும் யிப்பிடி காசு வந்தா எங்க கசக்குது? பஞ்சாயத்து தனக்கு சாதவம் ஆவணும்ன்னு எதாச்சும் ஒரு பார்ட்டி அப்பிடி குவார்ட்டர் பாட்டில்களையும், பிரியாணியையும் வாங்கிக் கொடுத்து, கையில பணங்காசியையும் கொடுத்ததுல ஓசிக் குடியில ஒவ்வொரு குடியா கெடுக்குறது அவுங்களுக்கும் ரொம்ப வசதியாப் போயிடுச்சு.

*****

29 Oct 2020

அரியதொரு நிகழ்வு

அரியதொரு நிகழ்வு

வாழ்க்கையின் ஒட்டுமொத்த வெறுப்பையும்

உமிழும் கணங்கள் வாய்க்கும் போது

தேவ கணங்கள் சிதறுகின்றன

சாத்தானின் கரங்கள் நீள்கின்றன

வந்து விழும் நாசகாரச் சொற்களில்

கோபம் தணிகிறது

தணிய வைத்த நாசகாரச் சொற்களிலிருந்து

சங்கிலித்தொடர் வெறுப்பு புறப்படுகிறது

மனதின் ஒட்டு மொத்த வன்மத்தையும்

சுமந்து செல்லும் ரயிலென ஆகி

தடம் புரளும் வன்மங்கள் அபூர்வமாக

தண்டவாளத்தில் முளைவிடும்

அன்புச் செடியிலிருந்து அரிதாக நிகழலாம்

அரிதுதான் எனினும் அரிதுக்காகக்

காத்திருக்கிறது பூவுலகு

*****

நெருப்பில்லாம வெறுப்பில்லாம புகைச்சலும் பகைச்சலும் இல்ல!

நெருப்பில்லாம வெறுப்பில்லாம புகைச்சலும் பகைச்சலும் இல்ல!

செய்யு - 609

            பட்டறைக்காரரு பட்டாமணிக்குச் சுப்பு வாத்தியாரு மேல கோபம் வர்றதுக்கும், பழி தீத்துக்குறதுக்கும் ஒரு காரணம் இருக்கத்தாம் செஞ்சது. அவரு வூடு கட்டுறப்பவும் செரி, பீரோலு கோக்குறப்பவும் செரி மரத்தெ அறுக்குறதுக்கு உள்ளூரு பட்டறைய வுட்டுப்புட்டு கமலாபுரத்துப் பட்டறைக்குத்தாம் போனாரு. அவரு மட்டுமல்ல ஊர்ல அநேகம் பேரு பட்டாமணியோட பட்டறையில மரத்தெ அறுக்குறதில்ல. அப்பிடி தன்னோட பட்டறையில அறுக்க வராத ஆளுகளெ கணக்குப் பண்ணி வெச்சிக்கிட்டு, அவுகளுக்கு நேரம் வர்றப்போ குழியத் தோண்டி வைக்குற வேலைய பட்டாமணி பாத்துட்டு இருந்தாம். உள்ளூர்லயே பட்டறைய வெச்சிக்கிட்டுச் சனங்க வெளியூர்ல அறுக்கப் போறப்ப மரத்தெ கொண்டுப் போயி போட, அறுத்ததெ எடுத்துக்கிட்டு வரன்னு வண்டி வாடகெய கூடுதலா கொடுக்க வேண்டியிருக்கும். அப்பிடி இருந்தும் வண்டி வாடகெ போனாலும் போவட்டும்ன்னு சனங்க உள்ளூர்ல பட்டறைய வெச்சிகிட்டு வெளியூர்ல மரத்தெ அறுக்கப் போறதுக்குப் பின்னாடியும் ஒரு காரணம் இருக்கத்தாம் செஞ்சது.

            பட்டாமணி பட்டறைய ஆரம்பிச்சி ஆரம்ப நாள்கள்ல ஓகோன்னுத்தாம் ஓடுனுச்சு. எங்கிருந்தோ எல்லாம் கரும்பெ போட்டு வடவாதி ஆலைக்குக் கொண்டு வர்றதெப் போல, எங்கெங்கயோ இருந்தெல்லாம் மரங்கள இந்தப் பட்டறையில கொண்டாந்துப் போட்டுத்தாம் அறுத்தாங்க. அது ராவும், பகலுமா பட்டறை எந்நேரத்துக்கும் ர்ர் ர்ர்ன்னு பட்டறை ஓடிக்கிட்டுக் கெடந்த நாளுக. ஆர்குடி டவுனு, திருவாரூரு டவுன்லல்லாம் பட்டறையப் போட்டவேம் தலையில துண்டப் போட்டுகிட்டு ஓடிடுற அளவுக்கு திட்டையோட வாள்பட்டறை ஓடுன நேரம் அது. அந்த ஓட்டத்துக்குக் காரணம் பட்டாமணி பிடிச்சிப் போட்ட போர்மேன். அறுத்தா அறுப்பு அப்பிடியே நூல பிடிச்சாப்புல இருக்கும். தெண்டாம ஒதுங்குற மரம் கம்மியா இருக்குறாப்புல திட்டம் பண்ணி அறுக்குறதுல அந்த போர்மென் அசாத்தியமான தெறமெ பிடிச்சவனா இருந்தாம். பட்டறைக்குப் பக்கத்துலயே ஒரு ஓட்டு வூட்டக் கட்டிக் கொடுத்து போர்மேன கூடவே வெச்சிருந்தால எந்நேரத்துக்கும் அறுப்பு வேல பட்டறையில நடந்துக்கிட்டு இருந்துச்சு.

            திட்டை வாள்பட்டறைக்கு மரத்தெ கொண்டுப் போனா நொடியில அறுத்துப்புட்டு வந்துப்புடலாம்ங்ற பேரோட, அறுப்பு வேலையும் படுசுத்தமா இருக்குங்ற பேரும் வந்துப் போச்சுது. விகடு, சின்னு, மன்னு, பரமுவெல்லாம் சின்ன புள்ளையா இருந்த அந்தக் காலத்துல பட்டறைக்குப் போயி அடுப்பெரிக்க மரத்தூளு வாங்கியாறதும், அறுப்புல ஒதுங்குற கடப்படாத மரச் சட்டத்தெ வெறகுக்கு வாங்கியாறதும் அது ஒரு யேவாராம பட்டறையில படு ஜோரா நடக்கும். எங்கெங்கோயிருந்து சனங்க மரத்தூளுக்கும், வெறகுக்கான ஒதுங்குற மரச்சட்டத்தெ வாங்குறதுக்கும் நடந்தும், சைக்கிள்லயும் வரும். நடந்து வர்ற சனங்க தலையில கட்டிக்கிட்டும், சைக்கிள்ல வர்ற சனங்க கேரியர்ல வெச்சிக் கட்டிக்கிட்டும் வரிசெ வரிசெயா போயிகிட்டெ இருக்கும். மரத்தெ அறுத்துச் சம்பாதித்திகறதெ வுட மரத்தூள்லயும் வெறகுலயுமே அதிகமா பட்டறைக்கார்ரேம் சம்பாதிப்பாம் போலன்னு ஊரு சனங்களும் பேசிக்கிட்டுக் கெடக்குமுங்க.

            பட்டறைக்கு வெளியிலயும் உள்ளேயும் பெருங்காட்டை அழிச்சிப் போட்டா எவ்வளவு மரங்க கெடக்குமோ அந்த அளவுக்கு மரங்களா கெடக்கும். வெளியில கெடக்குற அந்த மரங்க மேல ஏறி எறங்கி வெளையாடுறது, ஒளிஞ்சி வெளையாடுறதுன்னு புள்ளீயோளுக்கு எந்நேரமும் ஒரே குஷிதாம். இவ்வளவு பெரிய மொத்தமான மரங்க எல்லாம் எங்கேயிருந்த வருதோன்னு அதெ பாக்குற புள்ளீயோளுக்கு ஆச்சரியமா இருக்கும். லாரி, டிராக்கடரு டிப்பரு, மாட்டு வண்டின்னு கணக்கில்லாம மரங்க வந்து எறங்குன பாடா இருக்கும். எத்தனெ மரங்கள வெட்டிக் கொண்டாந்தாலும் அதெ அறுத்துக் கொடுக்குறதுக்கு போர்மென் சலிச்சிக்கிட்டது இல்ல. மரங்கள யூகமா அறுக்குறதுக்குன்னே கடவுளு படைச்ச ஆளு போல அந்த ஆளு இருந்தாம்.

            பட்டறைக்குக் கலியாணம் ஆவாம வந்த போர்மேனுக்குக் கலியாணம் ஆன பெறவுதாம் பட்டறைக்கு மோசமான காலம் பிடிச்சிது. போர்மென் கலியாணம் ஆன பொண்டாட்டியோட பட்டாமணிக் கட்டிக் கொடுத்த ஓட்டு வூட்டுல குடியிருந்தாம். போர்மேன் எந்நேரமும் மரத்த அறுத்துக்கிட்டு மரத்தோட ஞாபவமாவே பட்டறையில கெடக்க, பட்டாமணி எந்நேரமும் போர்மென் பொண்டாட்டி ஞாபவமாவே ஓட்டு வூட்டுல கெடந்தாம். கலியாணம் ஆன பெற்பாடும் ராப்பகலா மரத்தெ அறுத்துக் கொடுக்குற வேலையில ஆளுங்கள வெச்சி அறுத்துக் கொடுக்குறதுல எந்தச் சுணக்கத்தையும் காட்டல போர்மென். மொதலாளிக்கு ரொம்ப விசுவாசமா இருக்கணும்ன்னே இருந்துட்டாம்.

            ஒரு நாளு மரத்தெ அறுத்துக்கிட்டு இருந்தாரு போர்மேன். மரத்தை சுத்தி அறுத்துக்கிட்டு இருந்த வாளு பட்டுன்னு அறுந்துச்சுப் பாருங்க. வழக்கமா அதெ சரி பண்ணி பத்த வெச்சி வேலைய ஆரம்பிக்கிறவருக்கு அன்னிக்குன்னுப் பாத்து அலுத்துப் போயிடுச்சு. கொஞ்சம் வூட்டுக்குப் போயிட்டு வந்து வேலைய ஆரம்பிக்கலாம்ன்னு ஆளுங்களுக்கிட்டெ சொல்லிட்டு ஓட்டு வூட்டுக்குள்ள வந்தவரு பட்டாமணியும் பொண்டாட்டியும் ஒண்ணா படுத்துப் பெரண்டுட்டுக் கெடந்ததெ பாத்துட்டாரு. அவ்வளவுதாம். ஆளு அப்பிடியே பித்துப் பிடிச்சாப்புல ஆயிட்டாரு. பட்டாமணி ஒண்ணும் தெரியாத அப்பாவிப் போல எழுந்துப் போயிட்டாம். மறுநாளு விடிஞ்சிப் பாத்தப்போ போர்மேனும், பொண்டாட்டியும் அந்த வூட்டுல இல்ல. அவுங்க எங்கப் போனாங்க, என்ன ஆனாங்கங்றது அதுக்குப் பெறவு யாருக்கும் தெரியல. ஒருவேள அவுங்க போன எடம் பட்டாமணிக்குத் தெரிஞ்சிருக்குமோ என்னவோ?

            அந்தப் போர்மேன் அறுத்துப் போட்ட வேலைக அத்தனையும் அப்பிடியே கெடந்துச்சு. பட்டாமணியே பட்டறையில எறங்கி அறுத்துப் பாத்தாம். அறுப்பு கோணலும் மாணலுமா போச்சுது. போர்மென் அளவுக்கு அறுப்பச் சுத்தமா பிடிக்க முடியல. மரத்தெ அறுக்கக் கொண்டாந்துப் போட்டவ்வேம்லாம் மரம் போச்சேன்னு புலம்பிக்கிட்டெ போனாம். அதுக்குப் பெறவு என்னத்தெ முயற்சி பண்ணியும் மின்னாடி இருந்த போர்மென் அளவுக்கு அறுப்ப பட்டாமணியோட பட்டறையால கொடுக்க முடியல. மரத்தெ அறுக்குறதுக்காக ஆர்குடி, திருவாரூருலேந்து வந்த பார்ட்டியெல்லாம் நிறுத்திக்கிட ஆரம்பிச்சிதுங்க. வெவரம் தெரியாத ஒண்ணு ரெண்டு அசாமிங்கத்தாம் இங்க வந்து அறுத்துக்கிட்டுக் கெடந்ததுங்க.

            நல்ல போர்மேன் இல்லாம பட்டறைய ஓட்ட முடியாதுன்னு புரிஞ்சிக்கிட்ட பட்டாமணி எங்கெங்கேயே அலைஞ்சி ஒரு போர்‍மேனே பிடிச்சாந்தாம். அந்த ஆளு ஓரளவுக்குச் சரியா அறுத்தாலும் பட்டாமணியோட பழையக் கதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டுக் குடும்பத்தெ கொண்டாந்து இங்க வைக்க யோசிச்சாம். வாரத்துக்கு ரண்டு மூணு நாளு, மூணு நாளுன்னு வூட்டுக்குப் போயிட்டு வர்ற சாக்குல தங்கிட ஆரம்பிச்சாம். மின்னாடி இருந்த போர்மென் ராப்பகலுன்னு நேரம் காலம் பாக்காம வேலயப் பாத்ததுப் போல இந்தப் போர்மென் பாக்க முடியாதுன்னாட்டாம். ஒரு நாளுக்கு எட்டு மணி நேரத்துக்கு மேல வேலயப் பாக்க முடியாதுன்னு அடம் பிடிச்சி, அதுக்கு மேல கூடுதலா அறுக்குறதுக்கு எல்லாம் ஓவர்டைம் போட்டு காசிய வடிகட்டி வாங்க ஆரம்பிச்சாம். பட்டாமணியோட பட்டறையோட எறங்கு முகம் ஆரம்பிச்சிருந்துச்சு.

            இந்தக் கதையெல்லாம் ஊரறிஞ்ச பிற்பாடு பட்டாமணியோட பட்டறையில மரத்தெ அறுக்காமப் போனவங்களோட பட்டியல்ல சுப்பு வாத்தியாரும் இருந்தாரு. அப்படி, பட்டாமணிக்குச் சுப்பு வாத்தியார்ரப் பிடிக்காமப் போயி, பஞ்சாயத்தால சுப்பு வாத்தியாருக்கும் பட்டாமணியப் பிடிக்காமப் போச்சுன்னா, தம்மேந்தி ஆத்தாவுக்குப் பட்டாமணியப் பிடிக்காமப் போனதுக்கு ரெண்டு வெதமான காரணங்க இருந்துச்சு. 

            வெளியூரு போர்மென வெச்சிருக்கிறதாலத்தாம் வாரத்துல ரண்டு நாளு, மூணு நாளுன்னு அவ்வேம் கெளம்பிப் போறப்ப மர அறுவைய சரியா பண்ண முடியலன்னு நெனைச்ச பட்டாமணி உள்ளூர்லயே ஒரு போர்மேன உருவாக்கிப்புட்டா தேவலாம்ன்னு நெனைச்சாம். உள்ளூர்லயே இருக்குற ஆளுன்னா வூட்டுக்குப் போயிட்டு வர்றேம்ன்னு போயி தங்க முடியாது. அப்பிடியே தங்குனாலும் ஒடனே வூட்டுக்குப் போயிக் கொண்டாந்துப்புடலாம்ன்னு அவ்வேம் நெனைப்புக்குத் தோதா ஊள்ளூர்ல ஆள நோட்டம் வுட்டுக்கிட்டு இருந்தப்ப சிக்குன ஆளுதாம் கோதண்டம், தம்மேந்தி ஆத்தாவோட மூத்த மவ்வேன். கோதண்டத்துக்குக் கலியாணம் ஆயி கொழந்தை யில்லாம இருந்துச்சு. சரியான வேலையும் இல்லாம கெடைச்ச வேலையச் செஞ்சுக்கிட்டுக் கெடந்துச்சு.

            கோதண்டத்த வூட்டுல வந்துப் பாத்த பட்டாமணி ஒரு வலைய வீசுனாம். "போர்மேனோட தொணைக்கு நின்னு வேலையக் கத்துக்கோ. நீயி எப்போ வேலையக் கத்து முடிக்கிறீயோ, அன்னிக்கே அவனெ சீட்டக் கிழிச்சி வுட்டுப்புட்டு, ஒன்னயப் போர்மேனே ஆக்கிப் புடுறேம்! பட்டறையில வேல இருந்தாலும் செரித்தாம் ல்லன்னாலும் செரித்தாம் தெனமும் ஒனக்கு மட்டும் கூலியத் தந்துப்புடுறேம். அந்தக் கூலிய நெதமும் வாங்கிக்கிட்டாலும் செரித்தாம், வாரா வாரம் வாங்கிக்கிட்டாலும் செரித்தாம்!"ன்னு கோதண்டத்துக்குத் தூபத்தெ போட்டதுல கோதண்டமும் அதுக்கு ஒத்துக்கிடுச்சு. ஆறு மாச காலத்துல கோதண்டம் போர்மேன் ஆவுற அளவுக்கு அத்தனெ விசயங்களையும் கத்து முடிச்ச ஒடனே வெளியூர்லேந்து வந்துட்டுக் கெடந்த போர்மே‍னெ சீட்டக் கிழிச்சி வூட்டுக்கு அனுப்புனாம் பட்டாமணி. 

            மாவூர்ல ஒரு பட்டறை, கமலாபுரத்துல ஒரு பட்டறை, லட்சுமாங்குடியில ஒரு பட்டறைன்னு அங்கங்க பட்டறைக உருவாக ஆரம்பிச்ச ஒடனே திட்டைக்குப் பட்டாமணியோட பட்டறைக்கு வந்துகிட்டு அறுப்புக்கான மரங்களும் கொறைய ஆரம்பிச்சது. ஏற்கனவே கெட்டுப் போயிருந்த பேர்ல இது வேற சேந்துக்கிட்டதுல எந்நேரமும் திரி பேஸ் கரண்டு இருக்குறப்பல்லாம் ஓடிட்டு இருந்த பட்டறை இப்போ வாரத்துல மூணு நாளோ, நாலு நாளோ ஓடுனாவே பெரிசா இருந்துச்சு. மின்னாடி மாதிரி மரத்தூளும், ஒதுங்குன சட்டத்தெ வாங்க வர்ற சனங்களுக்குக் கொறைவில்லாம பட்டாமணியால கொடுக்க முடியாததால சனங்க ஏமாந்து திரும்பிப் போயிக்கிட்டு இருந்ததுல அந்தச் சனங்களோட வரத்தும் கொறைய ஆரம்பிச்சது.

            ஒரு கட்டத்துல பட்டறைய நடத்துறதுக்கும், கரண்டு பில்ல கட்டுறதுக்கும், வேலைக்கு வெச்சிருக்குற ஆளுங்களுக்கு பணத்தெ கொடுக்குறதுக்கும் செருமமான நெல வந்தப்போ பட்டாமணி எடுத்த முடிவுதாம், ஆத்தங்கரையில இருந்த தேக்கம் மரங்கள ராவோட ராவா வெட்டியாந்து அறுத்து எடுத்து கள்ளத்தனமா விக்குறதுங்ற முடிவு. மரத்தெ வெட்டுறதும், கொண்டாறதும் தெரியாம வேல கனஜோரா நடந்துக்கிட்டு இருந்துச்சு. மின்ன மாதிரி பட்டறை பகல்ல ஓடாம பெரும்பாலும் ராத்திரித்தாம் ஓடிட்டு இருந்துச்சு. இதுக்கிடையில பட்டாமணி ஒரு கட்சியில பெரும்புள்ளியா ஆயிருந்ததால அதெப் பத்தி யாரும் பெரிசா நடவடிக்கையும் எடுக்க முடியல. பட்டறையில மொறையா மர அறுப்பு நடந்தப்போ அள்ளுன காசிய வுட அதிகமாக காசிய அள்ள ஆரம்பிச்சாம் பட்டாமணி. பட்டாமணியோட ரண்டாவது எழுச்சி அந்த எடத்துல ஆரம்பிச்சிது. அத்தோட அவ்வேம் ஒழுங்கா இருந்திருந்தா அவ்வேம் போன போக்குக்குக் கோடீஸ்வரனாவே ஆயிருப்பாம். அந்த நேரத்துல தம்மேந்தி ஆத்தா மவ்வேம் கோதண்டத்தோட சம்பாத்தியமும் கொடி கட்டித்தாம் பறந்துச்சு.

            தப்பான வழியில போற மனுஷனோட முன்னேத்துக்கான ஆப்ப வேற யாரும் வந்து வைக்க வேண்டியதில்ல. அவனோட தப்பான வழிகள்ல ஒண்ணே அதெ வெச்சிடும். அப்பிடித்தாம் பட்டாமணியோட ஏறுமுகம் அவனோட தப்பான ஒண்ணாலயே எறங்குமொகம் ஆனுச்சு.

            பட்டாமணியோட பட்டறை மட்டும் ராத்தரியெல்லாம் ஓடிட்டுக் கெடக்கல. பட்டாமணியும் ராத்திரியெல்லாம் வூடு மேய ஆரம்பிச்சாம். பட்டறையிலேந்து எறக்குத்துல திரும்புனா நாலாவது வூட்டுல இருந்த புனிதாவுக்கும் பட்டாமணிக்கும் பழக்கம் உண்டாவ ஆரம்பிச்சிது. புனிதா யாருன்னா தம்மேந்தி ஆத்தாவோட பங்காளி ஒறவு மொறையில வர்ற பொண்ணு. சாதி சனம்லாம் பக்கத்துல இருக்கேன்னு புனிதாவுக்குக் கலியாணத்த முடிச்சி திட்டையில குடி வெச்சாங்க. புனிதாவோட புருஷன் துபாய்ல வேல பாத்துட்டு இருந்தாரு. வருஷத்துக்கோ பாஞ்சு நாளு லீவ்லயோ, ஒரு மசா லீவ்லயோ ஊருக்கு வந்துட்டுப் போற ஆளு. அவரு வந்துட்டுப் போற மித்த நாள்களத் தவுத்துப் புனிதா தனியாத்தாம் வூட்டுல இருந்துச்சு. தம்மேந்தி ஆத்தா குடும்பம்தாம் அதுக்குத் தொணை. ஒதவி, ஒத்தாசைன்னா தம்மேந்தி ஆத்தா போயி பண்ணிக் கொடுக்கும். அதுக்கு உபகாரமா புனிதாவோட புருஷன் வெளிநாட்டுலேந்து ஊருக்கு வர்றப்பல்லாம் தம்மேந்தி ஆத்தாவுக்கு பொடவெ, துணிமணி, வெளிநாட்டு சாமாஞ் செட்டுக, செண்டு பாட்டிலு, தலைவலித் தைலம்ன்னு நெறைய செஞ்சிட்டுத்தாம் போவாரு.

            ஊர்ல இருந்த கூரை வூட்ட தாட்டி வுட்டுப்புட்டு, ஒரு மச்சு வூட்டக் கட்டி முடிச்சி, சின்னதா ஒரு மளிகெ கடைய வெச்சிட்டு உக்கார்ற அளவுக்குச் சம்பாதிச்சிப்புட்டு ஊர்லயே வந்து தங்கிப்புடுறதா புனிதாவோட புருஷங்காரரு ஒரு திட்டம் பண்ணி வெச்சிருந்தாரு. அதுவரைக்கும் சம்பாதிக்கணுமேன்னு துபாய்லேயே இருந்தாரு. வருஷத்துல பாஞ்சு நாளு, ஒரு மாசம்ன்னு வந்துட்டுப் போறதுல சிலவு பண்ணு காசிய சேத்து வெச்சா சீக்கிராமவே சம்பாதிச்சு நாடு திரும்பலாம்ன்னு வருஷத்துக்கு ஒரு தடவெ வந்துட்டு இருந்த அவரு ரண்டு வருஷத்துக்கு ஒரு தடவே வரலாம்ன்னு எடுத்த முடிவுல கெடைச்சா கேப்புலத்தாம் பூந்தாம் புனிதாவோட வாழ்க்கையில பட்டாமணி.

*****

28 Oct 2020

மரத்துக்குத் திரும்பாத இலை

மரத்துக்குத் திரும்பாத இலை

இலை மரத்தோடு இருக்கிறது

சருகாகிப் பிரிகிறது

காற்றில் அலைபாய்கிறது

மண்ணோடு மண்ணாகிறது

புழுக்களுக்கு உணவாகிறது

ஒரு போதும் மரத்துக்குத் திரும்பாத இலை

*****

பன்றிகளென ஓடுங்கள்

குண்டு விழும் போது

குப்பைக் குழிகளை நோக்கி ஓடுங்கள்

பன்றிகள் அதைத்தான்

செய்து கொண்டிருக்கின்றன

வேறு சிறந்த வழி என்ன இருக்கிறது

***** 

பட்டாமணியின் கதை

பட்டாமணியின் கதை

செய்யு - 608

            இருவத்து அஞ்சு வருஷத்துக்கு மின்னாடி நடந்த கதெ. சுப்பு வாத்தியாரு இந்த ஊருக்கு வர்ற எடம் பாத்துட்டுக் கெடந்தப்போ நடந்தது அத்து. அப்போ மூர்த்தியப்பரு கோயிலுக்கு எதுத்தாப்புல இன்னிக்கு வாள்பட்டறை இருக்குற எடத்தெ வாங்குறாப்புல அவருக்குத்தாம் தோது வந்துச்சு. அதெ வாங்கிப்புடலாம்ன்னு அவரு நெனைச்சப்போ சாமியாத்தா அதுக்கு ஒத்துக்கிடல. மூர்த்தியப்பரு உக்கிரமான தெய்வம்ன்னும், மூர்த்தியப்பரு கோயிலுக்கு அந்தாண்ட கரையில இருக்குறப்போ, கோயிலுக்கு இந்தாண்ட கரையில அப்பிடி வூடு கட்டி குடியிருக்கக் கூடாதுன்னும் சொன்னுச்சு. அதுக்கு சுப்பு வாத்தியாரு கோயிலுக்கு எதுத்தாப்புலத்தாம் வூடு இருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க, ஆத்தோட அந்தாண்ட கரையில மூர்த்தியப்பரு கோயிலு, இந்தாண்ட கரையில வூடு, குறுக்க ஆறு வேற இருக்குறதால குத்தம் ஒண்ணுமில்லன்னுச் சொல்லிப் பாத்தாரு. சாமியாத்தா கேக்குறாப்புல யில்ல.

            “எம் பொண்ண அஞ்ஞக் கொண்டுப் போயி குடி வெச்சிக்கிட்டு நம்மாள கண்ணால காங்க முடியாது”ன்னு சாமியாத்தா அழுகாச்சிய வெச்சதுல சுப்பு வாத்தியாரு அந்த எடத்தெ வாங்குற முடிவெ அத்தோட வுட்டுப்புட்டாரு. ஒருவேள அன்னிக்கு அந்த எடத்தெ சுப்பு வாத்தியாரு வாங்கியிருந்தார்ன்னா இந்த ஊருக்கு வாள்பட்டறையும் வந்திருக்காது, பட்டறைக்கார்ரேம் பட்டாமணியும் அங்க குடி வந்திருக்க மாட்டாம், அப்பிடி அந்தப் பயெ குடி வந்து பஞ்சாயத்துல பட்டச் சாராயத்தக்கு ஆசைப்பட்டு சுப்பு வாத்தியாருக்கு எதிர்ப்பா ஒரு வேலையை பண்ணிருக்கவும் மாட்டாம். சுப்பு வாத்தியாரு அந்த எடத்தெ வாணாம்ன்னு சொன்னவுடனெ அந்த எடத்தெ அடுத்ததா வெலை பேசுறதுக்கு ஆளெ தேடுனப்போ சிக்குனவந்தாம் பட்டாமணி.

            பட்டாமணி இந்த ஊருக்கார பயெ கெடையாது. அந்தப் பயெ காரைக்கால்லேந்து ஒரு பொண்ண இழுந்தாந்துகிட்டு இந்த ஊருக்கு ஒதுக்குப்பொறந்துல ஒளிஞ்சிட்டுக் கெடந்தாம். பொண்ணு எப்பிடின்னா கலியாணம் ஆயி ஒருத்தனோட குடித்தனம் பண்ணிட்டு இருந்த பொண்ணு. அந்தப் பொண்ணைத்தாம் இழுத்துக்கிட்டு ஓடி வந்திருந்தாம். ஓடியாந்த பொண்ணு சும்மா ஓடி வாரல, கை நெறைய நகெ நட்டு, பணங்காசின்னு வூட்டுல இருந்தெ அத்தனையையும் தொடைச்சி அள்ளிட்டுத்தாம் ஓடி வந்திருந்துச்சு. அத்தோட வயித்துல ஒரு புள்ளையையும் சொமந்துகிட்டு புள்ளதாச்சியாவும் ஓடி வந்திருச்சு. பொண்ணு அள்ளிட்டு வந்தப் பணங்காசிய வெச்சி பட்டாமணி கருப்பத் தேவரு காய்ச்சின அத்தன சரக்கையும் மொத்தமா வாங்கி வெச்சி ஊருக்குள்ள இருந்த ஆளுகளுக்கு விநியோகம் பண்ணிட்டுக் கெடந்ததுல ஊருல ஆளாளுக்கு பட்டாமணிக்குச் சாதகமா மாற ஆரம்பிச்சிட்டானுவோ.

            ஊருக்குள்ள ஒளிஞ்சிக்க வந்தப் பயெ, அப்பத்தாம் ஊருக்குள்ள சண்டியரு கணக்கா திரிய ஆரம்பிச்சாம். பட்ட சாராயத்துக்கும் பணங்காசிக்கும் கறிசோறுக்கும் மயங்காத ஆளு ஊருல யாரு இருக்காம்? இப்போ பட்ட சாராயங்றது குவார்டடராவும், பணங்காசிங்றது ரண்டாயிரம் நோட்டாவும், கறிசோறுங்றது பிரியாணியாவும் அவதாரம் மாறி எடுத்தாலும் அன்னிக்கும் என்னிக்கும் இன்னிக்கும் அதானெ நெலமெ. கையில இருந்த பணங்காசி, நகெ நட்ட வெச்சி ஊருக்குள்ள கோதாவா  எதையாச்சும் பண்ணிக்கிடம்ன்னு நெனைச்சப்பத்தாம் மூர்த்தியப்பரு கோயிலுக்கு எதுத்தாப்புல இருந்த நெலத்த வெல பேசி வாங்குனா, அதுல ஒரு வாள்பட்டறையப் போட்டு, ஆத்தங்கரையில இருக்குற அத்தனெ தேக்கம் மரத்தையும் யாருக்கும் தெரியாம ரகசியமா அறுத்து வித்தா செம காசிப் பொரளும்ன்னு குடிகார பக்கிக சொன்ன யோஜனையெ கேட்டுக்கிட்டு, ஒண்ணுக்கு ரண்டா திட்டைப் பண்ணையில பணத்தெ கொடுத்து எடத்தெ வாங்கிப் போட்டாம் பட்டாமணி. ஊருக்கு ஒதுக்குப்பொறமா ஒண்டிக்கிட்டுக் கெடந்த பயெ இப்பிடியா ஊருக்குள்ள வந்தாம். கோயிலு திருவிசான்னா பணத்தெ வாரிக் கொடுத்தாம். அத்தோட ஊருக்குள்ள யாருக்காச்சும் பணங்காசித் தேவைன்னா இவனா தேடிப் போயிக் கொடுக்க, ஊருக்கு இப்பிடி ஒரு ஆளு தேவைங்றதால யாரும் அவனோட பூர்வாங்கத்தப் பத்திப் பெரிசா கண்டுக்கிடல.

            அதுக்காக பூர்வாங்கம் வெளிப்படாம இருந்திடுமா? பட்டாமணிகிட்டெ பொண்டாட்டியப் பறி கொடுத்தவம் அங்க இங்க ஆள வெச்சி தேடிட்டு இருந்ததுல பயெ திட்டையில எடத்தெ வாங்கி, வாள்பட்டறைப் போடுற நெலையில இருந்ததெ கண்டுபிடிச்சிட்டாம். அவ்வேம் ஒரு செட்டு ஆளுகளோட வந்து திட்டையில பட்டாமணியப் பிடிச்சி அடிச்சி ஒதைச்சிக் கொன்னு போடுற நெலையில நின்னாம். ஊருல பட்டாமணி கொலயுண்டா யாருகிட்டெ பணங்காசின்னா போயி நிக்குறது? கோயிலு திருவிசான்னா எவ்வேங்கிட்டெ பல்க்கா போயி பணத்தெ கேக்குறதுன்னு நெனைச்ச நியாயஸ்தருங்க அப்போ சொட்டெ கொஞ்சமா இருந்து, முடி கொஞ்சம் இருந்த கண்ணுராசு தலைமையில ஒரு பஞ்சாயத்தப் போட்டானுங்கோ.

            கண்ணுராசு மாடி வூடு கட்டிக்கிட்டு இருந்த நேரம் அத்து. மாடி வூடு கட்ட நெனைச்சி காசிப் பணம் இல்லாமப் போயி வூட்டுக்கு மேல காங்கிரீட்டு மச்செ போடாம, கீத்துக் கொட்டகெ போட்டு வெச்சிருந்தாரு சொட்டெ கண்ணுராசு. அதுவரைக்கும் கண்ணுராசு கட்டுன வூட்டுக்கு வாங்குன கடன்ல, கடன் கொடுத்தவேம் வேற துண்ட கழுத்துலப் போட்டு வூட்டுக்கு மின்னாடியே சண்டெ வெச்சிட்டுப் போயிருந்தாம். பண மொடையில இருந்த கண்ணுராசுக்கு இந்தப் பஞ்சாயத்துக் கொண்டாட்டமா போயிடுச்சு. பட்டாமணிக்கு இதுல மாட்டுன்னா செத்தேம்ங்ற நெலமெ. கண்ணுராசுவும், பட்டாமணியும் ஒருத்தருக்கொருத்தரு தொணையாகிட்டாங்க. பஞ்சாயத்தெ சமாதானமா பேசி வுட்டாக்கா, வூடு கட்ட கண்ணுராசு வாங்குன கடனெ பட்டாமணி அடைச்சி வுடுறதாவும் அத்தோட ஊருக்குள்ள வாள்பட்டறையெ கொண்டாந்து நாலு பேத்துக்கு வேலை கொடுக்குறதாவும் பேச்சு நடந்திருக்கு.

            பட்டறைக்குன்னு வாங்கிப் போட்ட எடத்துலயே பஞ்சாயத்து நடந்துச்சு. அப்போ முச்சந்தியில வரசித்தி விநாயகரு கோயிலு வர்றாத நேரம். அப்பிடி வந்திருந்து அஞ்ஞ பஞ்சாயத்த வெச்சிருந்தா பஞ்சாயத்து செய்யுவுக்கு வெச்ச பஞ்சாயத்தப் போலக் குந்தாங் கூறா முடிஞ்சிருக்குமோ என்னவோ தெரியல. ஒரு ஆறு தாண்டி கரை அந்தாண்டப் போனதால தன்னோட எல்லை ஆத்துக்கு இந்தாண்டயே முடிஞ்சிட்டதா மூர்த்தியப்பரும் அந்தப் பஞ்சாயத்தப் பத்தி பெரிசா கண்டுக்கிடல போலருக்கு.

            பொண்டாட்டியப் பறிகொடுத்தவம், கண்ட நாய இழுத்துட்டு ஓடுன நாய வெச்சி இனுமே நாம்ம குடித்தனம் நடத்த முடியாதுன்னும், அந்த நாயி கெளப்பிட்டு வந்த பணங்காசியையும், நகெ நட்டையும் வாங்கிக் கொடுத்துட்டு, இனுமே அந்த நாயிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லன்னு காயிதத்துல எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா போதும்ன்னு நின்னாம். கண்ணுராசுவோட மூளெ பலமா வேல செஞ்சது. பொண்டாட்டியப் பறி கொடுத்தவனெ நைசா இழுத்தாந்து, ஓடியாந்த பொண்டாட்டியும் பட்டாமணியும் இருந்த காசியையெல்லாம் வெச்சுச் செலவானதுல பாதிக் காசித்தாம் இருக்குன்னு ஒரு பொய்ய அடிச்சி வுட்டாரு கண்ணுராசு. அதெ வேணும்ன்னா வாங்கித் தர்றேம்ன்னும், பெரச்சனெ பண்ணாம போயிடுங்கன்னும் பேசிப் பாத்தாரு. இப்போ பட்டாமணி கிராமத்துல முக்கியஸ்தர்ரு ஆயிட்டதால அவருக்கு எதுப்பா பெரச்சனெ பண்ணா கிராமமே தெரண்டு நிக்கும்ன்னு ஒரு மெரட்டலையும் மெரட்டுனாரு. பொண்டாட்டி ஓடிப் போன விசயத்தெ இப்பிடி கமுக்கமா முடிச்சிட்டுக் கெடைக்குறத வாங்கிட்டுப் போறதா இருந்தா சுமூகமா பேசி வுடுறதா சொல்லி அடுத்தக் குண்டெ தூக்கிப் போட்டாரு சொட்டெ கண்ணுராசு.

            பொண்டாட்டி ஓடிப் போன சேதி ஒரு ஊருக்குத் தெரிஞ்சி அசிங்கப்பட்டது போதும்ன்னும், அது வேற இன்னும் பத்து ஊருக்குத் தெரிஞ்சி கூடுதலாத் தேவையில்லாம இன்னும் எதுக்கு அசிங்கப்படணும்ன்னு நெனைச்ச அந்த ஆளு கண்ணுராசு சொன்னதுக்குல்லாம் ஒத்துக்கிட்டு தலைய ஆட்டுனாம். கண்ணுராசு பட்டாமணிகிட்டெயிருந்து பாதி பணங்காசி, நகைய வாங்கிக் கொடுக்குறாப்புல அதுல கொஞ்சம் லவுட்டிக்கிட்டதோடு, அந்த ஆளுகிட்டெயும் கொஞ்சம் பணங்காசிய பஞ்சாயத்து பேசி வுட்டதுக்கு வாங்கிக்கிட்டு, பட்டாமணிகிட்டெயும் பணத்தெ லம்பா வாங்க்கிட்டாரு.

            அந்தப் பஞ்சாயத்துக்குப் பெறவு பட்டாமணிகிட்டெ இருந்த பாதிக் காசியிலயே வாள்பட்டறைய வெச்சி, மாடி வூட்டையும் கட்டிக்கிட்டாம். அப்போ முழு காசும் இருந்திருந்தா எம்மாம் பண்ணிருப்பாம்ன்னு ஊரு சனத்தால மூக்கு மேலத்தாம் வெரல வைக்க முடிஞ்சதே தவுர வேற ஒண்ணுத்தையும் பண்ண முடியல. கண்ணுராசு அமுக்கி லவட்டுனப் பணத்துல வாங்குன கடனையும் கொடுத்துட்டு, மேல இருந்த கீத்துக் கொட்டகையத் தாட்டி வுட்டுப்புட்டு மச்செ வூடா காங்கிரீட்டப் போட்டு முடிச்சாரு. அத்தோட ஒரு கட்சியிலயும் சேந்து கட்சிக்காரரு ஆயி மதகு கட்டுறது, படித்தொறை கட்டுறது, வயலுக்கு களம் கட்டுறது, சுடுகாடு கட்டறதுன்னு கான்ட்ராக்டை எடுத்து திட்டையில இருந்த பாதி நெலபுலனுங்கள வளைச்சிப் போட ஆரம்பிச்சாரு. அத்தோட நல்ல இருந்த திட்டைக் கிராமத்தோட மண்ணு களத்தை, சிமெண்டு களமா போடுறதா சொல்லிக் கான்ட்ராக்ட்ட வாங்கிப் போட்டு அந்தாளு போட்ட சிமெண்டு களம் ரண்டெ மாசத்துல கப்பியும் திப்பியும் பேந்து போனதுல, சனங்களய வயல்லயே படுதாவ வாங்கிப் போட்டு களத்தப் பொழங்குறாப்புல பண்ணிப்புட்டாரு.

            பட்டாமணியும் ஊருல பெரிய ஆளா ஆவ ஆரம்பிச்சாம். வாள்பட்டறை வந்தப் பெறவு ஊருக்குன்னு டிரான்ஸ்பார்மரு வந்துச்சு. அதெப் பத்தி பெரிசா அலப்பல் வுட்டுக்கிட்டு பட்டாமணியோட பொண்டாட்டி ஊருக்குள்ள மவராசியப் போல யாரு வூட்டு தேவைன்னாலும் போயி மின்னாடி நிக்க ஆரம்பிச்சது. ஊர்லயும் அவனவனும் ஆத்திர அவசரத்துக்கு பட்டாமணிகிட்டெ பணத்தெ வாங்கிட்டுக் கெடந்ததால, பட்டாமணியோட பொண்டாட்டிய வூட்டுக்குள்ள வாரக் கூடாதுன்னு சொல்லுறதுக்கு நாக்கு எழும்பல. பட்டாமணியோட பொண்டாட்டியும் மொதக் கொழந்தைய மொதப் புருஷனுக்குப் பெத்துப்புட்டு, ரண்டாவது கொழந்தைய பட்டாமணிக்குப் பெத்துக் கொடுத்து, ரண்டு கொழந்தைகளையும் பட்டாமணிக்கே பெத்ததுப் போல வளக்க ஆரம்பிச்சது. ஊரு சனங்களுக்கு அத்து நல்லாவே தெரிஞ்சது. மொதப் பயெ மொத புருஷன் சாயலுக்கும், ரண்டாவது பயெ பட்டாமணி சாயலுக்கும் இருந்தானுவோ. இருந்தாலும் ரண்டு பயலுகளும் அண்ணன் தம்பியா ஒத்துமையா வளந்தானுவோ. பட்டாமணியும் ரண்டு பயலுகளுக்கு இடையிலயும் எந்த வேறுபாடும் பாக்காம நல்ல வெதமாவே ரண்டு புள்ளைகளையும் வளத்தாம்.

            கிராமமும் கொஞ்சம் கொஞ்சமா சொட்டெ கண்ணுராசு, பட்டாமணியோட பஞ்சாயத்துக் கட்டுக்குள்ள வந்துச்சு. ஆன்னா அந்தப் பஞ்சாயத்துக்குப் பெரிசா வேலைய வைக்காத அளவுக்கு இத்தனெ வருஷமா ஊருக்குள்ள எந்தக் குடும்பத்துலயும் பெரிசா எந்தப் பெரச்சனையும் இல்லாம எப்பிடியோ ஓடிட்டு இருந்துச்சு. அதுக்குல்லாம் சேத்து ஒரு பெரும் பஞ்சாயத்த வைக்குறாப்புல சுப்பு வாத்தியாரோட பொண்ணு செய்யுவோட பஞ்சாயத்து வந்தது அவுங்களுக்கு வாகாப் போயிடுச்சு. இந்தக் கதெதாம் இருவத்தஞ்சு வருஷத்துக்கு மிந்தி நடந்த கதெ. இதெ அப்பிடியே இருவத்தஞ்சு வருஷத்துக்கு மின்னாடிப் போயி இப்போ உள்ள காலத்துக்கு வந்து சொல்லி முடிச்சது தம்மேந்தி ஆத்தா.

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...