30 Oct 2020

அவனவனும் வெட்டிக் கொள்கின்ற குழிகள்!

அவனவனும் வெட்டிக் கொள்கின்ற குழிகள்!

செய்யு - 610

            உள்ளூர்ல கெடந்துக்கிட்டு உள்ளூரு சங்கதிகளெ தெரியாத ஆளுகளும் இருக்காம். வெளிநாட்டுல இருந்துகிட்டு உள்ளூர்ல நடக்குற சின்ன சின்ன சங்கதிகளையும் அங்கேயிருந்தே புட்டு புட்டு வைக்குற ஆளும் இருக்காம். புனிதாவோட புருஷங்கார்ரேம் அப்படிப்பட்ட ஆளு. துபாய்ல இருந்தாலும் திட்டையில நடக்குற ஒவ்வொண்ணுத்தையும் தெரிஞ்சிக்க ஆளுகள வெச்சிருந்தாம். திட்டையில எந்தச் சங்கதி நடந்தாலும் ஒடனே அவனுக்குக் கடுதாசியோ, போனோ போயிடும். அந்தத் தகவலெ கொடுக்குற ஆளுங்களுக்குன்னே வெளிநாட்டுச் சாமானுங்கள வர்றப்போ கொடுத்துத் தாசா பண்ணி வெச்சிருந்தாம். அத்தோட ஊருக்கு வந்தப் பெற்பாடு ஊரு முக்கியஸ்தர்கள ஒரு பெரிய ஆளா தலையெடுக்கணுங்ற ஆர்வமும் அவருக்கு இருந்ததால இந்த வேலையத் தொடந்தாப்புல பண்ணிட்டு இருந்தாம்.

            பட்டாமணிக்கும், புனிதாவுக்கும் இருந்த பழக்கம் தம்மேந்தி ஆத்தாவுக்கோ, பட்டறையில வேல பாக்குற கோதண்டத்துக்கோ, கிராமத்துல இருக்குற வேற யாருக்கும் தெரியாட்டியும் புனிதாவோட புருஷங்கார்ரேம் போட்டு வெச்சிருந்து ஆளுங்க மோப்பம் புடிச்சி சேதிய துபாய்க்குப் போட்டு வுட்டுடுச்சுங்க. பொண்டாட்டி மேல ஆத்திரம் ஆத்திரமா வருதுன்னாலும் நெதானமா அதெ யோசிச்சுப் பாத்த புனிதாவோட புருஷங்காரனுக்குக் குடும்பத்தெ வுட்டுபபுட மனசில்ல. கட்டுன பொண்டாட்டிய நேத்தி வந்தவேம் தூக்கிட்டுப் போன கதையா ஆச்சுதேன்னு நெனைச்ச புனிதாவோட புருஷங்கார்ரேம் துபாய்ல இருந்தபடிக்கே தன்னோட ஆளுகளுக்குப் பட்டாமணியப் பத்தி முழுசா வேவு பாத்துச் சேதிய அனுப்பச் சொன்னாம். அதுல கவர்மெண்டுக்குச் சொந்தமான ஆத்தங்கரை தேக்கம் மரத்தெ கள்ளத்தனமா அறுத்து, கள்ளத்தனமா விக்கற சேதி தெரிஞ்சதும் மொத வேலையா தன்னோட ஆளுகள வெச்சி கலெக்டருக்கு, போலீஸ் ஸ்டேஷனுக்கு, பாரெஸ்ட் டிபார்ட்மெண்டுக்குன்னு மொட்ட பெட்டிஷன ஒண்ணு மேல ஒண்ணா போட வெச்சாம். 

            அடுக்கடுக்கா பட்டாமணி மேல போன பெட்டிஷன் தெரியாமலே பட்டாமணி தேக்கம் மரத்தெ அறுக்குறதும், புனிதாவோட வூட்டுக்குப் போயி குடி கெடுக்குறதுமா இருந்துட்டு இருந்தாம். யாரும் எதிர்பாக்காத ஒரு நாளு நடுராத்திரியில பாரெஸ்ட் டிரபார்ட்மெண்டுலேந்து வந்து பட்டறையில தேக்கம் மரத்தெ அறுக்குறதெ கையும் களவுமா பிடிச்சப்ப பட்டாமணி வசமா மாட்டுனாம். பட்டறைய இழுத்து மூடி சீல் வைக்கப் போறப்ப கட்சிக்கார பெரும்புள்ளிக பட்டாமணியக் காப்பாத்தி வுட முயற்சிப் பண்ணாங்க. பட்டாமணி கையும் களவுமா மாட்டியிருக்கிறதால யாராச்சும் ஒருத்தரு அரெஸ்ட் ஆவாம இதெ தடுக்க முடியாதுன்னு தெரிஞ்சதும், பட்டாமணி கோதண்டத்துக் கால்ல பட்டுன்னு வுழுந்தாம். இந்த நெலையில கோதண்டம் தன்ன காப்பாத்தலன்னா குடும்பத்தோட தற்கொல பண்ணிக்கிடுறதெ தவுர வேற வழியில்லன்னு ஒரு பிட்ட எடுத்து வுட்டாம் பட்டாமணி. கோதண்டம் இந்தத் தப்பு தாம் பண்ணதா ஒத்துக்கிட்டு கைதாயிப் போனா, அவ்வேம் குடும்பத்தெ தாங் காப்பாத்துறதாவும், மாசா மாசம் பணத்தெ கொடுக்குறதாவும், கொஞ்ச நாள்லயே நல்ல வக்கீலா வெச்சி வெளியில ஜாமீன்ல எடுத்து, கேஸ்ஸ ஒண்ணுமில்லாம அடிச்சிடுறதாவும் பட்டாமணி அவ்வேம் பாட்டுக்கு சத்தியம் மேல சத்தியமா அடிச்சி விட்டாம். அதுக்கு அச்சாரமா ரண்டாயிரம் பணத்தெ வேற கோதண்டத்துக்கு மின்னாடி எடுத்து வெச்சாம்.

            கோதண்டத்துக்கு அந்த நேரத்துல சட்டுன்னு என்னா முடிவு எடுக்குறதுன்னு புரியல. மொதலாளியா போயிட்ட பட்டாமணி கால்ல வுழுந்தது கோதண்டத்தோட மனசப் போட்டு வாளைப் போல அறுஅறுன்னு அறுத்துச்சு. நம்மளயும் ஒரு மனுஷனாக்கி, ஒரு போர்மேன் நெலைக்கு உயர்த்துன பட்டாமணிக்கு இதெ கூட செய்யலன்னு எப்பிடின்னு கோதண்டம் நொடியில முடிவெடுத்து கைதாயிப் போனுச்சு. கவர்மெண்டோட தேக்கம் மரத்த அறுத்ததுல பட்டாமணிக்கும் பட்டறைக்கும் எந்தச் சம்பந்தம் இல்லன்னும், தாந்தாம் திருட்டுத்தனமா தேக்க மரத்தெ வெட்டி, பட்டறைக்காரருக்குத் தெரியாம அறுத்ததா வாக்குமூலம் கொடுத்ததன் பேர்ல எல்லா தப்பையும் கோதண்டம் ஏத்துக்கிட்டு பட்டாமணியையும், பட்டறையும் காப்பாத்தி வுட்டுச்சு.

            கோதாண்டம் பட்டாமணிக்குக் கொடுத்த வாக்கெ காப்பாத்தி வுட்டாலும், பட்டாமணி கோதண்டத்துக்குக் கொடுத்த வாக்குறுதிய ரொம்ப காலத்துக்குக் காப்பாத்த முடியல. காப்பாத முடியாத அளவுக்கு பட்டாமணிக்கு அடுத்த சோதனெ காத்திருந்துச்சு. இவ்வளவு நடந்தும் பட்டாமணி புனிதாவோட வூட்டுக்குப் போறதெ விடாமத்தாம் வெச்சிருந்தாம். பாத்தாம் துபாய்ல இருந்த புனிதாவோட புருஷங்கார்ரேம். அங்கேயிருந்தே தன்னோட ஆளுகளுக்குப் பணத்தெ கொடுத்து பட்டாமணிய அடிக்க ஆளுகளத் தயார் பண்ணச் சொல்லிட்டாம். நடுராத்திரி நேரத்துல புனிதாவோட வூட்டுக்குப் போனப்ப தயாரா இருந்த அடியாளுங்க பட்டாமணிய கையும் காலையும் கட்டி, வெண்ணாத்துக்கு அந்தாண்ட கொண்டாந்து மூர்த்தியப்பரு கோயிருக்கு வடக்கால இருக்குற தெடல்ல வெச்சி உசுர மட்டும் ஒடம்புல வெச்சி வெளுத்து எடுத்துட்டுப் போனானுவோ.

            அங்கேயே அடிபட்டு மொனகிட்டுக் கெடந்த பட்டாமணிய காலையில வெளிக்கிப் போறதுக்குப் போன ஆளுங்கப் பாத்துட்டு தூக்கிக் கொண்டாந்து வூட்டுல போட்டாங்க. ஆர்குடி, திருவாரூரு ஆஸ்பத்திரியில வெச்சிப் பாத்தும் கொணம் காணாம, தஞ்சாவூரு ஆஸ்பிட்டல்ல வெச்சித்தாம் கொணம் காண வைக்க முடிஞ்சது பட்டாமணிக்கு. காசு போன சம்பாதிச்சிடலாம், உசுருப் போன சம்பாதிச்சிட முடியுமான்னு உசுர காப்பாத்துறதுக்காக அதுல பெருங்காசிய வுடறாப்புல ஆச்சுது பட்டாமணிக்கு. அத்தோட தேக்கம் மரத்தெ அறுத்த வெவகாரத்துலயும் பெரும்பணத்தெ வுட்டுத்தாம் பட்டறைக்கு வெச்ச சீல எடுக்க முடிஞ்சது. கோர்ட்டு, கேஸூன்னு கணிசமாவும் பணம் போயிட்டு இருந்துச்சு. பட்டாமணியால சமாளிக்க முடியாமப் போனதுல கோதண்டத்தெ சுத்தமா மறந்துப் போனாம். கோதண்டத்தோட குடும்பம் நெலைகொலைஞ்சுப் போச்சுது. தம்மேந்தி என்ன பண்டுறது, ஏது பண்டுறதுன்னு புரியாம துடியா துடிச்சுப் போனுச்சு.

            யார்ரப் பாத்து என்னத்தெ செய்யுறதுன்னு அதுக்குப் புரியல. கோதண்டம் மேல இருந்த குத்ததுக்குப் பக்கா சாட்சியம் இருந்ததால வெளியில கொண்டாரது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அந்த நேரத்துலத்தாம் புனிதாவோட புருஷங்கார்ரேம் துபாய்லேந்து நாடு திரும்பி திட்டையில இருந்த எடத்தெ வித்துப்புட்டு விளமல்ல ஒரு எடத்தெ வாங்கி கூறு கெட்ட பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு அங்க குடிப் போனாம். அத்தோட கோதண்டத்தெ வெளியில எடுக்க பெரிய பெரிய வக்கீல வெச்சி வாதாடி வெளியில கொண்டாந்தாம். அதுக்கு கைமாறா தம்மேந்தி ஆத்தா கையில காசில்லாததால ரோட்டுப்பாக்கமா இருந்த இருவது குழி எடத்தெ புனிதா புருஷனுக்கு எழுதிக் கொடுத்துச்சு. புனிதாவோட புருஷங்கார்ரேம் அந்த எடத்தை வித்துச் காசாக்கிட்டாம். அத்தோட கோதண்டத்துக்கு திருவாரூரு சிவசத்தி மரவாடியில ஒரு வேலைக்கும் சேத்து வுட்டாம். அன்னியிலேந்து பட்டாமணி மேல தம்மேந்தி ஆத்தாவுக்கு உண்டான வெறுப்ப மாத்த முடியல.

            இந்தச் சம்பவத்துக்குப் பெறவு தம்மேந்தி ஆத்தா பட்டாமணிய எதாச்சும் பண்ணி வுடனும்ன்னு நெனைச்சுச்சு. ஊருக்குள்ள பெரிய மனுஷனா இருக்குற அவனெ அதால எதையும் பண்ண முடியல. அதுக்கு சுப்பு வாத்தியார்ரு மவ விசயத்துல மூணாவது பஞ்சாயத்தப்போ ஆத்திரப்பட்டு விகடு போனதெப் பாத்ததும் நிச்சயம் பட்டாமணி விகடுகிட்டெ அடிய வாங்கிடுவாம்ன்னு எதிர்பாத்துச்சு. ஆன்னா அது நடக்காம அவ்வேம் தப்பிப் போயிருந்ததெ நெனைச்சி அதுக்கு ரொம்ப வருத்தமாப் ‍போச்சு. அதெ வெளிப்படையாவே சுப்பு வாத்தியாருகிட்டெ சொன்னுச்சு, "ஒம்மட மவ்வேம் அவனெ நாலு இழுப்பு இழுத்திருப்பான்னு பாத்தேம். தேவிடியாப் பயெ தப்பிச்சிட்டானே யம்பீ! அவனெ வுடக் கூடாதும்பீ! நீயாச்சும் எதாச்சும் பண்ணி வுடணும்பீ!"ன்னுச்சு தம்மேந்தி ஆத்தா.

            சுப்பு வாத்தியாரு யிப்போ ஒரு சிரிப்ப சிரிச்சாரு. "அவனெ நாம்ம என்னத்தெ பண்டுறது? அவனெ அடிபட்டுட்டுத்தாம் கெடக்காம். அவனெ அடிக்கப் போயி நாம்ம ஒரு அடியாளு ஆயிடக் கூடாது. அவனெ கொலை பண்ணப் போயி நாம்ம கொலகாரனா ஆயிடக் கூடாது. அவ்வவ்வேம் பண்டுற தப்புக்கு அவனவனும் அனுபவிக்கணும்ன்னு கணக்கு இருக்குறப்போ, அந்தக் கணக்கெ நாம்ம ஏம் நம்மட தலையிலப் போட்டுக்கிடணும்? ஊரான் வூட்டு உத்திரத்தெ உலுக்க நெனைச்சா அவ்வேம் வூடுதாம் அவ்வேம் தலையில புழுத்துப் போயி வுழுவப் போவுது! அவனெல்லாம் என்ன கதிக்குப் போவப் போறாங்றது அந்த ஆண்டவனுக்கே தெரியும். அவவனனும் பண்டுறதெ அவனவனும் அனுபவிக்கட்டும். நாம்ம ஒரு தண்டனெயெ கொடுத்து அதெ கொறைச்சிட விரும்பல!"ன்னாரு ரொம்பவே நெதானமா.

            "நீஞ்ஞல்லாம் இப்பிடி இருக்குறதாலத்தாம் தப்பு பண்ணுறவனெல்லாம் பெரிய ஆளா போறாம். நல்லது பண்ணுறவனெல்லாம் ஒண்ணும் தெரியாமப் போறாம். அவனையெல்லாம் நாலு பேரு தலையில தட்டணும்பீ! என்னடா நெனைச்சிக்கிட்டு இருக்குறேன்னு ஊர்ல நாலு பேரு கேள்வியக் கேக்கணும்பீ?"ன்னுச்சு தம்மேந்தி ஆத்தா அழுதுகிட்டெ.

            "ஒருத்தனோட வயித்தெரிச்சல வாங்கிக்கிட்டு எந்தப் பயலும் நல்லா இருந்துட முடியாது. ஊருல பல பேத்தோட வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டுக் கெடக்காம் அந்தப் பயெ. அத்து அவனெ சும்மா வுடாது. நல்லா நடக்குறவனே தடுமாறி வுழுறப்போ, கோணலும் மாணலுமா நடக்குறவனப் பத்தி என்னத்தெ சொல்லுறது? ஒழைச்சிச் சாப்புடுற காசிய ஒட்ட மாட்டேங்குங்றப்போ, ஊர்ர சொரண்டிச் சாப்புடுற காசியில என்னத்தெ வெளங்கப் போறானுவோ? என்னவோ வாழ்ந்துக்கிட்டு இருக்கானுவோ! எப்பிடியோ தொலையட்டும்! நமக்கு ஒரு குத்தம் வந்துட்டுதுங்றதால நாம்ம ஒரு குத்தம் பண்ணி குத்தவாளியா ஆயிடக் கூடாது. ஏம் பொண்ணு புள்ளியோ அந்த வெதத்துல ஆத்திரப்படாம அவ்சரப்படாம குத்தம் பண்ணாம எறங்காம இருந்தாலே போதும். இந்தக் குத்தம்ல்லாம் கஷ்ட்டம்ன்னாலும் காலப்போக்குல தானா சரியாயிடும். நாம்ம ஒண்ணும் இதெ பண்ட வேண்டியதில்ல. தானாவே வெலகிப் போயிடும். ஒரு மனுஷனால எத்தனெ காலத்துக்கு ஒருத்தனுக்குக் குத்தம் பண்ணிட்டெ இருக்க முடியும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு விரக்தியா சிரிச்சிக்கிட்டெ. தம்மேந்தி யாத்தாவுக்கு அதுக்கு மேல ஒண்ணும் சொல்ல முடியல. அத்து சேலைத் தலைப்பால வாயைப் பொத்திக்கிட்டு, “நல்லாயிருக்கணும்பீ ஒங் குடும்பம்”ன்னு சொன்னமேனிக்கு அழுதடிபடிக்குக் கௌம்புனுச்சு.

            பட்டாமணியோட நெலமையும் இப்போ மின்னாடிப் போல இல்ல. தொடந்தாப்புல பட்டறைய நல்ல வெதமா நடத்த முடியாம ரொம்பவே தடுமாறிப் போனாம். அவனும் மவனுமா கொஞ்சம் காலம் வாள்பட்டறையில கெடந்து மரங்கள அறுத்துப் பாத்தானுவோ. தண்டத்துக்கு வெறவுக்குன்னுப் போயி அறுத்தாலும் மரம் தேறாதுங்ற அளவுக்குப் பட்டறையோட நெலமெ மோசமாயிட்டே இருந்துச்சு. ஆனாலும் திட்டையில பட்டறை இருந்துச்சு. பட்டறைக்கார்ரேம்ங்ற பேரு பட்டாமணிக்கு இருந்துச்சு. பட்டறையிலத்தாம் மரம் அறுக்குற வேல சுத்தமா இல்லாம இருந்துச்சு. நட்டாம்புட்டி வேலைக்குன்னு ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம் யாரச்சும் மரத்தெ வந்து அறுத்துக்கிட்டுக் கெடந்தாங்க. ஒரு கட்டத்துக்கு மேல பட்டறைய வெச்சி சமாளிக்க முடியாதுங்ற நெலமெ வந்தப்போ, மூணு லட்சத்துக்கு அட்வான்ஸ் பண்ணி, மாசத்துக்கு அதெ இருவாதினாயிரத்துக்கு லீசுக்கு வுட்டுச் சம்பாதிக்கலாம்ன்னு பாத்தாம் பட்டாமணி. விகடுவோட தாய்மாமனான வீயெம் மாமா ஒரு லட்சத்தெ அட்வான்ஸ் பண்ணிப்புட்டு, மாசத்துக்குப் பாஞ்சாயிரத்து பட்டறைய லீசுக்குக் கேட்டுப் பாக்கலாம்ன்னு கேட்டுப் பாத்துச்சு. பட்டாமணி ஒத்துக்கிடல. கடெசீயா ஒத்தக்கடைங்கற ஊர்லேந்து ரண்டு பேரு வந்து பட்டாமணி சொன்ன தொகை்குக்குப் பட்டறைய எடுத்து நடத்திட்டு இருக்காங்க.

            பட்டறைக்குன்னு வாங்குன அட்வான்ஸ்ல பட்டாமணி பட்டறைக்கு மின்னாடி காம்ப்ளக்ஸ் மாதிரி நாலு கடைகளக் கட்டிப் போட்டாம். அதுல ஒண்ணுத்துல அவ்வேம் ஒரு ஹார்டுவேர்ர கடைய வெச்சிக்கிட்டாம். ஒண்ணுத்தெ மளிகெ கடைக்கும், ரண்டாவதெ செராக்ஸ், கம்ப்யூட்டரு கடைக்கும், மூணாவதெ தச்சுப் பட்டறைக்கும் வாடகைக்கு வுட்டுப்புட்டு காம்ப்ளக்ஸ்க்கு மின்னாடி நாற்காலியப் போட்டுக்கிட்டு உக்கார ஆரம்பிச்சாம். அத்தோட ஊரு வெவகாரங்கள்ல மூக்க நொழைச்சிக்கிட்டும் இருந்தாம். அவ்வேம் காம்ப்ளக்ஸ்ல கடையப் போட்டவனோளோட யேவாரம் சரியாப் போவாம கடைய வேற அடிக்கடி மாத்திக்கிட்டெ இருந்தானுவோ. பட்டாமணி போட்ட ஹார்டுவேர்ஸ் கடையிலயும் சாமாஞ் செட்டு அரதப்பழசா போயி கெடக்க ஆரம்பிச்சது. பட்டறைக்குப் பக்கத்துல போர்மேனுக்குன்னு கட்டுன வூட்டயும் பட்டறைய லீசுக்கு எடுத்தவனுங்களுக்கே வாடகைக்கு விட்டு வெச்சிருந்தாம்.

            கால ஓட்டத்துல வீயெம் மாமா, பட்டாமணி, சித்துவீரன் இவனுவோ எல்லாம் சேந்து ஒண்ணா குடிக்கவும் ஆரம்பிச்சி குடிகாரப் பட்டாளமா ஆனானுவோ. இதுக்குன்னே வீயெம் மாமாவோட பட்டறைக்கு டிவியெஸ் சாம்ப்ல சீரெட்ட புஸ் புஸ்ன்னு ஊதிட்டு ராத்திரியா ஆனா மேற்கால போவ ஆரம்பிச்சாம் பட்டாமணி. டிவியெஸ் எக்செல்ல கெழக்காலேந்து வர்ற ஆரம்பிச்சாம் சித்துவீரன். அந்த வகையில சுப்பு வாத்தியாரு மவள வெச்சி நடந்த மூணு பஞ்சாயத்துக்குமான டிசைனே வீயெம் மாமாவோட பட்டறையிலத்தாம் தயாரானுச்சு. அந்த மூணு பஞ்சாயத்துக்கு மட்டுமில்லாம சுத்துப்பட்டு ஊர்ல நடக்குற பல பஞ்சாயத்துகளுக்கான டிசைன் வீயெம் மாமாவோட பட்டறையில உருவாவ ஆரம்பிச்சிது. இவனுக அப்பிடி கூட கூத்தடிச்சிக்கிட்டுக் குடிக்குறதுக்கும் அளவில்லாமப் போச்சு. அத்தோட ஊர்ல இருக்குற குடும்பங்கள குடி கெடுக்குறதுக்கான டிசைன உருவாக்குறதுக்கும் ஓர் அளவில்லாமப் போச்சு. அதுல வீயெம் மாமா, பட்டாமணி இந்த ரண்டு பேரும் கோர்ட்டு, கேஸூ, போலீஸ்ன்னு பல வெசயங்களப் பாத்துட்டதால இவனுகளப் பெரிய வஸ்தாத்துப் போல சனங்கப் பாக்க ஆரம்பிச்சிதுங்க. இவனுக கூட சுத்துனவங்களெ பெரிய போக்கிரிகளாப் பாக்கவும் ஆரம்பிச்சதுங்க.

            அதுலப் பாத்தீங்கன்னா வீயெம் மாமா பழுப்பு நெறத்துல ஒரு ஹோண்டா ஆக்டிவாவ வாங்குனதப் பாத்துட்டு, பட்டாமணி சேப்பு நெறத்துல ஒரு ஹோண்டா ஆக்டிவாவ வாங்கிட்டு அதுலத்தாம் சீரெட்ட ஊதித் தள்ளிட்டுப் போறாம். இந்தக் குடிகார மனுஷங்களுக்குள்ள ஒரு நல்ல விசயம் என்னான்னா, பட்டறையிலத்தாம் கூடிட்டு பொழுது மசங்குற நேரமாவோ, ராத்திரியோ குடிப்பானுவோ. மித்த நேரத்துல குடிக்க மாட்டானுவோ. ஒருத்தனெ வுட்டுப்புட்டு இன்னொருத்தன் குடிக்க மட்டானுவோ. அப்பிடிக் குடிக்கிறதுக்கான தோது ஓசிக் காசியிலயே வர்றாப்புல வாரத்துக்கு ஒரு பஞ்சாயத்து அவனுக கைளுக்கு வந்து மாட்டிக்கிட்டே இருந்துச்சு. குவார்ட்டரும் ஆப்பும் அதுக்கான காசும் ன்னா சும்மாவா கெடைக்குது? அதுவும் ஓசிக்குடிக்கும் பிரியாணிக்கும் யிப்பிடி காசு வந்தா எங்க கசக்குது? பஞ்சாயத்து தனக்கு சாதவம் ஆவணும்ன்னு எதாச்சும் ஒரு பார்ட்டி அப்பிடி குவார்ட்டர் பாட்டில்களையும், பிரியாணியையும் வாங்கிக் கொடுத்து, கையில பணங்காசியையும் கொடுத்ததுல ஓசிக் குடியில ஒவ்வொரு குடியா கெடுக்குறது அவுங்களுக்கும் ரொம்ப வசதியாப் போயிடுச்சு.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...