29 Oct 2020

நெருப்பில்லாம வெறுப்பில்லாம புகைச்சலும் பகைச்சலும் இல்ல!

நெருப்பில்லாம வெறுப்பில்லாம புகைச்சலும் பகைச்சலும் இல்ல!

செய்யு - 609

            பட்டறைக்காரரு பட்டாமணிக்குச் சுப்பு வாத்தியாரு மேல கோபம் வர்றதுக்கும், பழி தீத்துக்குறதுக்கும் ஒரு காரணம் இருக்கத்தாம் செஞ்சது. அவரு வூடு கட்டுறப்பவும் செரி, பீரோலு கோக்குறப்பவும் செரி மரத்தெ அறுக்குறதுக்கு உள்ளூரு பட்டறைய வுட்டுப்புட்டு கமலாபுரத்துப் பட்டறைக்குத்தாம் போனாரு. அவரு மட்டுமல்ல ஊர்ல அநேகம் பேரு பட்டாமணியோட பட்டறையில மரத்தெ அறுக்குறதில்ல. அப்பிடி தன்னோட பட்டறையில அறுக்க வராத ஆளுகளெ கணக்குப் பண்ணி வெச்சிக்கிட்டு, அவுகளுக்கு நேரம் வர்றப்போ குழியத் தோண்டி வைக்குற வேலைய பட்டாமணி பாத்துட்டு இருந்தாம். உள்ளூர்லயே பட்டறைய வெச்சிக்கிட்டுச் சனங்க வெளியூர்ல அறுக்கப் போறப்ப மரத்தெ கொண்டுப் போயி போட, அறுத்ததெ எடுத்துக்கிட்டு வரன்னு வண்டி வாடகெய கூடுதலா கொடுக்க வேண்டியிருக்கும். அப்பிடி இருந்தும் வண்டி வாடகெ போனாலும் போவட்டும்ன்னு சனங்க உள்ளூர்ல பட்டறைய வெச்சிகிட்டு வெளியூர்ல மரத்தெ அறுக்கப் போறதுக்குப் பின்னாடியும் ஒரு காரணம் இருக்கத்தாம் செஞ்சது.

            பட்டாமணி பட்டறைய ஆரம்பிச்சி ஆரம்ப நாள்கள்ல ஓகோன்னுத்தாம் ஓடுனுச்சு. எங்கிருந்தோ எல்லாம் கரும்பெ போட்டு வடவாதி ஆலைக்குக் கொண்டு வர்றதெப் போல, எங்கெங்கயோ இருந்தெல்லாம் மரங்கள இந்தப் பட்டறையில கொண்டாந்துப் போட்டுத்தாம் அறுத்தாங்க. அது ராவும், பகலுமா பட்டறை எந்நேரத்துக்கும் ர்ர் ர்ர்ன்னு பட்டறை ஓடிக்கிட்டுக் கெடந்த நாளுக. ஆர்குடி டவுனு, திருவாரூரு டவுன்லல்லாம் பட்டறையப் போட்டவேம் தலையில துண்டப் போட்டுகிட்டு ஓடிடுற அளவுக்கு திட்டையோட வாள்பட்டறை ஓடுன நேரம் அது. அந்த ஓட்டத்துக்குக் காரணம் பட்டாமணி பிடிச்சிப் போட்ட போர்மேன். அறுத்தா அறுப்பு அப்பிடியே நூல பிடிச்சாப்புல இருக்கும். தெண்டாம ஒதுங்குற மரம் கம்மியா இருக்குறாப்புல திட்டம் பண்ணி அறுக்குறதுல அந்த போர்மென் அசாத்தியமான தெறமெ பிடிச்சவனா இருந்தாம். பட்டறைக்குப் பக்கத்துலயே ஒரு ஓட்டு வூட்டக் கட்டிக் கொடுத்து போர்மேன கூடவே வெச்சிருந்தால எந்நேரத்துக்கும் அறுப்பு வேல பட்டறையில நடந்துக்கிட்டு இருந்துச்சு.

            திட்டை வாள்பட்டறைக்கு மரத்தெ கொண்டுப் போனா நொடியில அறுத்துப்புட்டு வந்துப்புடலாம்ங்ற பேரோட, அறுப்பு வேலையும் படுசுத்தமா இருக்குங்ற பேரும் வந்துப் போச்சுது. விகடு, சின்னு, மன்னு, பரமுவெல்லாம் சின்ன புள்ளையா இருந்த அந்தக் காலத்துல பட்டறைக்குப் போயி அடுப்பெரிக்க மரத்தூளு வாங்கியாறதும், அறுப்புல ஒதுங்குற கடப்படாத மரச் சட்டத்தெ வெறகுக்கு வாங்கியாறதும் அது ஒரு யேவாராம பட்டறையில படு ஜோரா நடக்கும். எங்கெங்கோயிருந்து சனங்க மரத்தூளுக்கும், வெறகுக்கான ஒதுங்குற மரச்சட்டத்தெ வாங்குறதுக்கும் நடந்தும், சைக்கிள்லயும் வரும். நடந்து வர்ற சனங்க தலையில கட்டிக்கிட்டும், சைக்கிள்ல வர்ற சனங்க கேரியர்ல வெச்சிக் கட்டிக்கிட்டும் வரிசெ வரிசெயா போயிகிட்டெ இருக்கும். மரத்தெ அறுத்துச் சம்பாதித்திகறதெ வுட மரத்தூள்லயும் வெறகுலயுமே அதிகமா பட்டறைக்கார்ரேம் சம்பாதிப்பாம் போலன்னு ஊரு சனங்களும் பேசிக்கிட்டுக் கெடக்குமுங்க.

            பட்டறைக்கு வெளியிலயும் உள்ளேயும் பெருங்காட்டை அழிச்சிப் போட்டா எவ்வளவு மரங்க கெடக்குமோ அந்த அளவுக்கு மரங்களா கெடக்கும். வெளியில கெடக்குற அந்த மரங்க மேல ஏறி எறங்கி வெளையாடுறது, ஒளிஞ்சி வெளையாடுறதுன்னு புள்ளீயோளுக்கு எந்நேரமும் ஒரே குஷிதாம். இவ்வளவு பெரிய மொத்தமான மரங்க எல்லாம் எங்கேயிருந்த வருதோன்னு அதெ பாக்குற புள்ளீயோளுக்கு ஆச்சரியமா இருக்கும். லாரி, டிராக்கடரு டிப்பரு, மாட்டு வண்டின்னு கணக்கில்லாம மரங்க வந்து எறங்குன பாடா இருக்கும். எத்தனெ மரங்கள வெட்டிக் கொண்டாந்தாலும் அதெ அறுத்துக் கொடுக்குறதுக்கு போர்மென் சலிச்சிக்கிட்டது இல்ல. மரங்கள யூகமா அறுக்குறதுக்குன்னே கடவுளு படைச்ச ஆளு போல அந்த ஆளு இருந்தாம்.

            பட்டறைக்குக் கலியாணம் ஆவாம வந்த போர்மேனுக்குக் கலியாணம் ஆன பெறவுதாம் பட்டறைக்கு மோசமான காலம் பிடிச்சிது. போர்மென் கலியாணம் ஆன பொண்டாட்டியோட பட்டாமணிக் கட்டிக் கொடுத்த ஓட்டு வூட்டுல குடியிருந்தாம். போர்மேன் எந்நேரமும் மரத்த அறுத்துக்கிட்டு மரத்தோட ஞாபவமாவே பட்டறையில கெடக்க, பட்டாமணி எந்நேரமும் போர்மென் பொண்டாட்டி ஞாபவமாவே ஓட்டு வூட்டுல கெடந்தாம். கலியாணம் ஆன பெற்பாடும் ராப்பகலா மரத்தெ அறுத்துக் கொடுக்குற வேலையில ஆளுங்கள வெச்சி அறுத்துக் கொடுக்குறதுல எந்தச் சுணக்கத்தையும் காட்டல போர்மென். மொதலாளிக்கு ரொம்ப விசுவாசமா இருக்கணும்ன்னே இருந்துட்டாம்.

            ஒரு நாளு மரத்தெ அறுத்துக்கிட்டு இருந்தாரு போர்மேன். மரத்தை சுத்தி அறுத்துக்கிட்டு இருந்த வாளு பட்டுன்னு அறுந்துச்சுப் பாருங்க. வழக்கமா அதெ சரி பண்ணி பத்த வெச்சி வேலைய ஆரம்பிக்கிறவருக்கு அன்னிக்குன்னுப் பாத்து அலுத்துப் போயிடுச்சு. கொஞ்சம் வூட்டுக்குப் போயிட்டு வந்து வேலைய ஆரம்பிக்கலாம்ன்னு ஆளுங்களுக்கிட்டெ சொல்லிட்டு ஓட்டு வூட்டுக்குள்ள வந்தவரு பட்டாமணியும் பொண்டாட்டியும் ஒண்ணா படுத்துப் பெரண்டுட்டுக் கெடந்ததெ பாத்துட்டாரு. அவ்வளவுதாம். ஆளு அப்பிடியே பித்துப் பிடிச்சாப்புல ஆயிட்டாரு. பட்டாமணி ஒண்ணும் தெரியாத அப்பாவிப் போல எழுந்துப் போயிட்டாம். மறுநாளு விடிஞ்சிப் பாத்தப்போ போர்மேனும், பொண்டாட்டியும் அந்த வூட்டுல இல்ல. அவுங்க எங்கப் போனாங்க, என்ன ஆனாங்கங்றது அதுக்குப் பெறவு யாருக்கும் தெரியல. ஒருவேள அவுங்க போன எடம் பட்டாமணிக்குத் தெரிஞ்சிருக்குமோ என்னவோ?

            அந்தப் போர்மேன் அறுத்துப் போட்ட வேலைக அத்தனையும் அப்பிடியே கெடந்துச்சு. பட்டாமணியே பட்டறையில எறங்கி அறுத்துப் பாத்தாம். அறுப்பு கோணலும் மாணலுமா போச்சுது. போர்மென் அளவுக்கு அறுப்பச் சுத்தமா பிடிக்க முடியல. மரத்தெ அறுக்கக் கொண்டாந்துப் போட்டவ்வேம்லாம் மரம் போச்சேன்னு புலம்பிக்கிட்டெ போனாம். அதுக்குப் பெறவு என்னத்தெ முயற்சி பண்ணியும் மின்னாடி இருந்த போர்மென் அளவுக்கு அறுப்ப பட்டாமணியோட பட்டறையால கொடுக்க முடியல. மரத்தெ அறுக்குறதுக்காக ஆர்குடி, திருவாரூருலேந்து வந்த பார்ட்டியெல்லாம் நிறுத்திக்கிட ஆரம்பிச்சிதுங்க. வெவரம் தெரியாத ஒண்ணு ரெண்டு அசாமிங்கத்தாம் இங்க வந்து அறுத்துக்கிட்டுக் கெடந்ததுங்க.

            நல்ல போர்மேன் இல்லாம பட்டறைய ஓட்ட முடியாதுன்னு புரிஞ்சிக்கிட்ட பட்டாமணி எங்கெங்கேயே அலைஞ்சி ஒரு போர்‍மேனே பிடிச்சாந்தாம். அந்த ஆளு ஓரளவுக்குச் சரியா அறுத்தாலும் பட்டாமணியோட பழையக் கதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டுக் குடும்பத்தெ கொண்டாந்து இங்க வைக்க யோசிச்சாம். வாரத்துக்கு ரண்டு மூணு நாளு, மூணு நாளுன்னு வூட்டுக்குப் போயிட்டு வர்ற சாக்குல தங்கிட ஆரம்பிச்சாம். மின்னாடி இருந்த போர்மென் ராப்பகலுன்னு நேரம் காலம் பாக்காம வேலயப் பாத்ததுப் போல இந்தப் போர்மென் பாக்க முடியாதுன்னாட்டாம். ஒரு நாளுக்கு எட்டு மணி நேரத்துக்கு மேல வேலயப் பாக்க முடியாதுன்னு அடம் பிடிச்சி, அதுக்கு மேல கூடுதலா அறுக்குறதுக்கு எல்லாம் ஓவர்டைம் போட்டு காசிய வடிகட்டி வாங்க ஆரம்பிச்சாம். பட்டாமணியோட பட்டறையோட எறங்கு முகம் ஆரம்பிச்சிருந்துச்சு.

            இந்தக் கதையெல்லாம் ஊரறிஞ்ச பிற்பாடு பட்டாமணியோட பட்டறையில மரத்தெ அறுக்காமப் போனவங்களோட பட்டியல்ல சுப்பு வாத்தியாரும் இருந்தாரு. அப்படி, பட்டாமணிக்குச் சுப்பு வாத்தியார்ரப் பிடிக்காமப் போயி, பஞ்சாயத்தால சுப்பு வாத்தியாருக்கும் பட்டாமணியப் பிடிக்காமப் போச்சுன்னா, தம்மேந்தி ஆத்தாவுக்குப் பட்டாமணியப் பிடிக்காமப் போனதுக்கு ரெண்டு வெதமான காரணங்க இருந்துச்சு. 

            வெளியூரு போர்மென வெச்சிருக்கிறதாலத்தாம் வாரத்துல ரண்டு நாளு, மூணு நாளுன்னு அவ்வேம் கெளம்பிப் போறப்ப மர அறுவைய சரியா பண்ண முடியலன்னு நெனைச்ச பட்டாமணி உள்ளூர்லயே ஒரு போர்மேன உருவாக்கிப்புட்டா தேவலாம்ன்னு நெனைச்சாம். உள்ளூர்லயே இருக்குற ஆளுன்னா வூட்டுக்குப் போயிட்டு வர்றேம்ன்னு போயி தங்க முடியாது. அப்பிடியே தங்குனாலும் ஒடனே வூட்டுக்குப் போயிக் கொண்டாந்துப்புடலாம்ன்னு அவ்வேம் நெனைப்புக்குத் தோதா ஊள்ளூர்ல ஆள நோட்டம் வுட்டுக்கிட்டு இருந்தப்ப சிக்குன ஆளுதாம் கோதண்டம், தம்மேந்தி ஆத்தாவோட மூத்த மவ்வேன். கோதண்டத்துக்குக் கலியாணம் ஆயி கொழந்தை யில்லாம இருந்துச்சு. சரியான வேலையும் இல்லாம கெடைச்ச வேலையச் செஞ்சுக்கிட்டுக் கெடந்துச்சு.

            கோதண்டத்த வூட்டுல வந்துப் பாத்த பட்டாமணி ஒரு வலைய வீசுனாம். "போர்மேனோட தொணைக்கு நின்னு வேலையக் கத்துக்கோ. நீயி எப்போ வேலையக் கத்து முடிக்கிறீயோ, அன்னிக்கே அவனெ சீட்டக் கிழிச்சி வுட்டுப்புட்டு, ஒன்னயப் போர்மேனே ஆக்கிப் புடுறேம்! பட்டறையில வேல இருந்தாலும் செரித்தாம் ல்லன்னாலும் செரித்தாம் தெனமும் ஒனக்கு மட்டும் கூலியத் தந்துப்புடுறேம். அந்தக் கூலிய நெதமும் வாங்கிக்கிட்டாலும் செரித்தாம், வாரா வாரம் வாங்கிக்கிட்டாலும் செரித்தாம்!"ன்னு கோதண்டத்துக்குத் தூபத்தெ போட்டதுல கோதண்டமும் அதுக்கு ஒத்துக்கிடுச்சு. ஆறு மாச காலத்துல கோதண்டம் போர்மேன் ஆவுற அளவுக்கு அத்தனெ விசயங்களையும் கத்து முடிச்ச ஒடனே வெளியூர்லேந்து வந்துட்டுக் கெடந்த போர்மே‍னெ சீட்டக் கிழிச்சி வூட்டுக்கு அனுப்புனாம் பட்டாமணி. 

            மாவூர்ல ஒரு பட்டறை, கமலாபுரத்துல ஒரு பட்டறை, லட்சுமாங்குடியில ஒரு பட்டறைன்னு அங்கங்க பட்டறைக உருவாக ஆரம்பிச்ச ஒடனே திட்டைக்குப் பட்டாமணியோட பட்டறைக்கு வந்துகிட்டு அறுப்புக்கான மரங்களும் கொறைய ஆரம்பிச்சது. ஏற்கனவே கெட்டுப் போயிருந்த பேர்ல இது வேற சேந்துக்கிட்டதுல எந்நேரமும் திரி பேஸ் கரண்டு இருக்குறப்பல்லாம் ஓடிட்டு இருந்த பட்டறை இப்போ வாரத்துல மூணு நாளோ, நாலு நாளோ ஓடுனாவே பெரிசா இருந்துச்சு. மின்னாடி மாதிரி மரத்தூளும், ஒதுங்குன சட்டத்தெ வாங்க வர்ற சனங்களுக்குக் கொறைவில்லாம பட்டாமணியால கொடுக்க முடியாததால சனங்க ஏமாந்து திரும்பிப் போயிக்கிட்டு இருந்ததுல அந்தச் சனங்களோட வரத்தும் கொறைய ஆரம்பிச்சது.

            ஒரு கட்டத்துல பட்டறைய நடத்துறதுக்கும், கரண்டு பில்ல கட்டுறதுக்கும், வேலைக்கு வெச்சிருக்குற ஆளுங்களுக்கு பணத்தெ கொடுக்குறதுக்கும் செருமமான நெல வந்தப்போ பட்டாமணி எடுத்த முடிவுதாம், ஆத்தங்கரையில இருந்த தேக்கம் மரங்கள ராவோட ராவா வெட்டியாந்து அறுத்து எடுத்து கள்ளத்தனமா விக்குறதுங்ற முடிவு. மரத்தெ வெட்டுறதும், கொண்டாறதும் தெரியாம வேல கனஜோரா நடந்துக்கிட்டு இருந்துச்சு. மின்ன மாதிரி பட்டறை பகல்ல ஓடாம பெரும்பாலும் ராத்திரித்தாம் ஓடிட்டு இருந்துச்சு. இதுக்கிடையில பட்டாமணி ஒரு கட்சியில பெரும்புள்ளியா ஆயிருந்ததால அதெப் பத்தி யாரும் பெரிசா நடவடிக்கையும் எடுக்க முடியல. பட்டறையில மொறையா மர அறுப்பு நடந்தப்போ அள்ளுன காசிய வுட அதிகமாக காசிய அள்ள ஆரம்பிச்சாம் பட்டாமணி. பட்டாமணியோட ரண்டாவது எழுச்சி அந்த எடத்துல ஆரம்பிச்சிது. அத்தோட அவ்வேம் ஒழுங்கா இருந்திருந்தா அவ்வேம் போன போக்குக்குக் கோடீஸ்வரனாவே ஆயிருப்பாம். அந்த நேரத்துல தம்மேந்தி ஆத்தா மவ்வேம் கோதண்டத்தோட சம்பாத்தியமும் கொடி கட்டித்தாம் பறந்துச்சு.

            தப்பான வழியில போற மனுஷனோட முன்னேத்துக்கான ஆப்ப வேற யாரும் வந்து வைக்க வேண்டியதில்ல. அவனோட தப்பான வழிகள்ல ஒண்ணே அதெ வெச்சிடும். அப்பிடித்தாம் பட்டாமணியோட ஏறுமுகம் அவனோட தப்பான ஒண்ணாலயே எறங்குமொகம் ஆனுச்சு.

            பட்டாமணியோட பட்டறை மட்டும் ராத்தரியெல்லாம் ஓடிட்டுக் கெடக்கல. பட்டாமணியும் ராத்திரியெல்லாம் வூடு மேய ஆரம்பிச்சாம். பட்டறையிலேந்து எறக்குத்துல திரும்புனா நாலாவது வூட்டுல இருந்த புனிதாவுக்கும் பட்டாமணிக்கும் பழக்கம் உண்டாவ ஆரம்பிச்சிது. புனிதா யாருன்னா தம்மேந்தி ஆத்தாவோட பங்காளி ஒறவு மொறையில வர்ற பொண்ணு. சாதி சனம்லாம் பக்கத்துல இருக்கேன்னு புனிதாவுக்குக் கலியாணத்த முடிச்சி திட்டையில குடி வெச்சாங்க. புனிதாவோட புருஷன் துபாய்ல வேல பாத்துட்டு இருந்தாரு. வருஷத்துக்கோ பாஞ்சு நாளு லீவ்லயோ, ஒரு மசா லீவ்லயோ ஊருக்கு வந்துட்டுப் போற ஆளு. அவரு வந்துட்டுப் போற மித்த நாள்களத் தவுத்துப் புனிதா தனியாத்தாம் வூட்டுல இருந்துச்சு. தம்மேந்தி ஆத்தா குடும்பம்தாம் அதுக்குத் தொணை. ஒதவி, ஒத்தாசைன்னா தம்மேந்தி ஆத்தா போயி பண்ணிக் கொடுக்கும். அதுக்கு உபகாரமா புனிதாவோட புருஷன் வெளிநாட்டுலேந்து ஊருக்கு வர்றப்பல்லாம் தம்மேந்தி ஆத்தாவுக்கு பொடவெ, துணிமணி, வெளிநாட்டு சாமாஞ் செட்டுக, செண்டு பாட்டிலு, தலைவலித் தைலம்ன்னு நெறைய செஞ்சிட்டுத்தாம் போவாரு.

            ஊர்ல இருந்த கூரை வூட்ட தாட்டி வுட்டுப்புட்டு, ஒரு மச்சு வூட்டக் கட்டி முடிச்சி, சின்னதா ஒரு மளிகெ கடைய வெச்சிட்டு உக்கார்ற அளவுக்குச் சம்பாதிச்சிப்புட்டு ஊர்லயே வந்து தங்கிப்புடுறதா புனிதாவோட புருஷங்காரரு ஒரு திட்டம் பண்ணி வெச்சிருந்தாரு. அதுவரைக்கும் சம்பாதிக்கணுமேன்னு துபாய்லேயே இருந்தாரு. வருஷத்துல பாஞ்சு நாளு, ஒரு மாசம்ன்னு வந்துட்டுப் போறதுல சிலவு பண்ணு காசிய சேத்து வெச்சா சீக்கிராமவே சம்பாதிச்சு நாடு திரும்பலாம்ன்னு வருஷத்துக்கு ஒரு தடவெ வந்துட்டு இருந்த அவரு ரண்டு வருஷத்துக்கு ஒரு தடவே வரலாம்ன்னு எடுத்த முடிவுல கெடைச்சா கேப்புலத்தாம் பூந்தாம் புனிதாவோட வாழ்க்கையில பட்டாமணி.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...