பட்டாமணியின் கதை
செய்யு - 608
இருவத்து அஞ்சு வருஷத்துக்கு மின்னாடி
நடந்த கதெ. சுப்பு வாத்தியாரு இந்த ஊருக்கு வர்ற எடம் பாத்துட்டுக் கெடந்தப்போ நடந்தது
அத்து. அப்போ மூர்த்தியப்பரு கோயிலுக்கு எதுத்தாப்புல இன்னிக்கு வாள்பட்டறை இருக்குற
எடத்தெ வாங்குறாப்புல அவருக்குத்தாம் தோது வந்துச்சு. அதெ வாங்கிப்புடலாம்ன்னு அவரு
நெனைச்சப்போ சாமியாத்தா அதுக்கு ஒத்துக்கிடல. மூர்த்தியப்பரு உக்கிரமான தெய்வம்ன்னும்,
மூர்த்தியப்பரு கோயிலுக்கு அந்தாண்ட கரையில இருக்குறப்போ, கோயிலுக்கு இந்தாண்ட கரையில
அப்பிடி வூடு கட்டி குடியிருக்கக் கூடாதுன்னும் சொன்னுச்சு. அதுக்கு சுப்பு வாத்தியாரு
கோயிலுக்கு எதுத்தாப்புலத்தாம் வூடு இருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க, ஆத்தோட அந்தாண்ட
கரையில மூர்த்தியப்பரு கோயிலு, இந்தாண்ட கரையில வூடு, குறுக்க ஆறு வேற இருக்குறதால
குத்தம் ஒண்ணுமில்லன்னுச் சொல்லிப் பாத்தாரு. சாமியாத்தா கேக்குறாப்புல யில்ல.
“எம் பொண்ண அஞ்ஞக் கொண்டுப் போயி குடி
வெச்சிக்கிட்டு நம்மாள கண்ணால காங்க முடியாது”ன்னு சாமியாத்தா அழுகாச்சிய வெச்சதுல
சுப்பு வாத்தியாரு அந்த எடத்தெ வாங்குற முடிவெ அத்தோட வுட்டுப்புட்டாரு. ஒருவேள அன்னிக்கு
அந்த எடத்தெ சுப்பு வாத்தியாரு வாங்கியிருந்தார்ன்னா இந்த ஊருக்கு வாள்பட்டறையும் வந்திருக்காது,
பட்டறைக்கார்ரேம் பட்டாமணியும் அங்க குடி வந்திருக்க மாட்டாம், அப்பிடி அந்தப் பயெ
குடி வந்து பஞ்சாயத்துல பட்டச் சாராயத்தக்கு ஆசைப்பட்டு சுப்பு வாத்தியாருக்கு எதிர்ப்பா
ஒரு வேலையை பண்ணிருக்கவும் மாட்டாம். சுப்பு வாத்தியாரு அந்த எடத்தெ வாணாம்ன்னு சொன்னவுடனெ
அந்த எடத்தெ அடுத்ததா வெலை பேசுறதுக்கு ஆளெ தேடுனப்போ சிக்குனவந்தாம் பட்டாமணி.
பட்டாமணி இந்த ஊருக்கார பயெ கெடையாது.
அந்தப் பயெ காரைக்கால்லேந்து ஒரு பொண்ண இழுந்தாந்துகிட்டு இந்த ஊருக்கு ஒதுக்குப்பொறந்துல
ஒளிஞ்சிட்டுக் கெடந்தாம். பொண்ணு எப்பிடின்னா கலியாணம் ஆயி ஒருத்தனோட குடித்தனம்
பண்ணிட்டு இருந்த பொண்ணு. அந்தப் பொண்ணைத்தாம் இழுத்துக்கிட்டு ஓடி வந்திருந்தாம்.
ஓடியாந்த பொண்ணு சும்மா ஓடி வாரல, கை நெறைய நகெ நட்டு, பணங்காசின்னு வூட்டுல இருந்தெ
அத்தனையையும் தொடைச்சி அள்ளிட்டுத்தாம் ஓடி வந்திருந்துச்சு. அத்தோட வயித்துல ஒரு
புள்ளையையும் சொமந்துகிட்டு புள்ளதாச்சியாவும் ஓடி வந்திருச்சு. பொண்ணு அள்ளிட்டு
வந்தப் பணங்காசிய வெச்சி பட்டாமணி கருப்பத் தேவரு காய்ச்சின அத்தன சரக்கையும் மொத்தமா
வாங்கி வெச்சி ஊருக்குள்ள இருந்த ஆளுகளுக்கு விநியோகம் பண்ணிட்டுக் கெடந்ததுல ஊருல
ஆளாளுக்கு பட்டாமணிக்குச் சாதகமா மாற ஆரம்பிச்சிட்டானுவோ.
ஊருக்குள்ள ஒளிஞ்சிக்க வந்தப் பயெ, அப்பத்தாம்
ஊருக்குள்ள சண்டியரு கணக்கா திரிய ஆரம்பிச்சாம். பட்ட சாராயத்துக்கும் பணங்காசிக்கும்
கறிசோறுக்கும் மயங்காத ஆளு ஊருல யாரு இருக்காம்? இப்போ பட்ட சாராயங்றது குவார்டடராவும்,
பணங்காசிங்றது ரண்டாயிரம் நோட்டாவும், கறிசோறுங்றது பிரியாணியாவும் அவதாரம் மாறி எடுத்தாலும்
அன்னிக்கும் என்னிக்கும் இன்னிக்கும் அதானெ நெலமெ. கையில இருந்த பணங்காசி, நகெ நட்ட
வெச்சி ஊருக்குள்ள கோதாவா எதையாச்சும் பண்ணிக்கிடம்ன்னு
நெனைச்சப்பத்தாம் மூர்த்தியப்பரு கோயிலுக்கு எதுத்தாப்புல இருந்த நெலத்த வெல பேசி
வாங்குனா, அதுல ஒரு வாள்பட்டறையப் போட்டு, ஆத்தங்கரையில இருக்குற அத்தனெ தேக்கம் மரத்தையும்
யாருக்கும் தெரியாம ரகசியமா அறுத்து வித்தா செம காசிப் பொரளும்ன்னு குடிகார பக்கிக
சொன்ன யோஜனையெ கேட்டுக்கிட்டு, ஒண்ணுக்கு ரண்டா திட்டைப் பண்ணையில பணத்தெ கொடுத்து
எடத்தெ வாங்கிப் போட்டாம் பட்டாமணி. ஊருக்கு ஒதுக்குப்பொறமா ஒண்டிக்கிட்டுக் கெடந்த
பயெ இப்பிடியா ஊருக்குள்ள வந்தாம். கோயிலு திருவிசான்னா பணத்தெ வாரிக் கொடுத்தாம்.
அத்தோட ஊருக்குள்ள யாருக்காச்சும் பணங்காசித் தேவைன்னா இவனா தேடிப் போயிக் கொடுக்க,
ஊருக்கு இப்பிடி ஒரு ஆளு தேவைங்றதால யாரும் அவனோட பூர்வாங்கத்தப் பத்திப் பெரிசா கண்டுக்கிடல.
அதுக்காக பூர்வாங்கம் வெளிப்படாம இருந்திடுமா?
பட்டாமணிகிட்டெ பொண்டாட்டியப் பறி கொடுத்தவம் அங்க இங்க ஆள வெச்சி தேடிட்டு இருந்ததுல
பயெ திட்டையில எடத்தெ வாங்கி, வாள்பட்டறைப் போடுற நெலையில இருந்ததெ கண்டுபிடிச்சிட்டாம்.
அவ்வேம் ஒரு செட்டு ஆளுகளோட வந்து திட்டையில பட்டாமணியப் பிடிச்சி அடிச்சி ஒதைச்சிக்
கொன்னு போடுற நெலையில நின்னாம். ஊருல பட்டாமணி கொலயுண்டா யாருகிட்டெ பணங்காசின்னா
போயி நிக்குறது? கோயிலு திருவிசான்னா எவ்வேங்கிட்டெ பல்க்கா போயி பணத்தெ கேக்குறதுன்னு
நெனைச்ச நியாயஸ்தருங்க அப்போ சொட்டெ கொஞ்சமா இருந்து, முடி கொஞ்சம் இருந்த கண்ணுராசு
தலைமையில ஒரு பஞ்சாயத்தப் போட்டானுங்கோ.
கண்ணுராசு மாடி வூடு கட்டிக்கிட்டு இருந்த
நேரம் அத்து. மாடி வூடு கட்ட நெனைச்சி காசிப் பணம் இல்லாமப் போயி வூட்டுக்கு மேல காங்கிரீட்டு
மச்செ போடாம, கீத்துக் கொட்டகெ போட்டு வெச்சிருந்தாரு சொட்டெ கண்ணுராசு. அதுவரைக்கும்
கண்ணுராசு கட்டுன வூட்டுக்கு வாங்குன கடன்ல, கடன் கொடுத்தவேம் வேற துண்ட கழுத்துலப்
போட்டு வூட்டுக்கு மின்னாடியே சண்டெ வெச்சிட்டுப் போயிருந்தாம். பண மொடையில இருந்த
கண்ணுராசுக்கு இந்தப் பஞ்சாயத்துக் கொண்டாட்டமா போயிடுச்சு. பட்டாமணிக்கு இதுல மாட்டுன்னா
செத்தேம்ங்ற நெலமெ. கண்ணுராசுவும், பட்டாமணியும் ஒருத்தருக்கொருத்தரு தொணையாகிட்டாங்க.
பஞ்சாயத்தெ சமாதானமா பேசி வுட்டாக்கா, வூடு கட்ட கண்ணுராசு வாங்குன கடனெ பட்டாமணி அடைச்சி
வுடுறதாவும் அத்தோட ஊருக்குள்ள வாள்பட்டறையெ கொண்டாந்து நாலு பேத்துக்கு வேலை கொடுக்குறதாவும்
பேச்சு நடந்திருக்கு.
பட்டறைக்குன்னு வாங்கிப் போட்ட எடத்துலயே
பஞ்சாயத்து நடந்துச்சு. அப்போ முச்சந்தியில வரசித்தி விநாயகரு கோயிலு வர்றாத நேரம்.
அப்பிடி வந்திருந்து அஞ்ஞ பஞ்சாயத்த வெச்சிருந்தா பஞ்சாயத்து செய்யுவுக்கு வெச்ச பஞ்சாயத்தப்
போலக் குந்தாங் கூறா முடிஞ்சிருக்குமோ என்னவோ தெரியல. ஒரு ஆறு தாண்டி கரை அந்தாண்டப்
போனதால தன்னோட எல்லை ஆத்துக்கு இந்தாண்டயே முடிஞ்சிட்டதா மூர்த்தியப்பரும் அந்தப்
பஞ்சாயத்தப் பத்தி பெரிசா கண்டுக்கிடல போலருக்கு.
பொண்டாட்டியப் பறிகொடுத்தவம், கண்ட நாய
இழுத்துட்டு ஓடுன நாய வெச்சி இனுமே நாம்ம குடித்தனம் நடத்த முடியாதுன்னும், அந்த நாயி
கெளப்பிட்டு வந்த பணங்காசியையும், நகெ நட்டையும் வாங்கிக் கொடுத்துட்டு, இனுமே அந்த
நாயிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லன்னு காயிதத்துல எழுதிக் கையெழுத்துப் போட்டுக்
கொடுத்தா போதும்ன்னு நின்னாம். கண்ணுராசுவோட மூளெ பலமா வேல செஞ்சது. பொண்டாட்டியப்
பறி கொடுத்தவனெ நைசா இழுத்தாந்து, ஓடியாந்த பொண்டாட்டியும் பட்டாமணியும் இருந்த காசியையெல்லாம்
வெச்சுச் செலவானதுல பாதிக் காசித்தாம் இருக்குன்னு ஒரு பொய்ய அடிச்சி வுட்டாரு கண்ணுராசு.
அதெ வேணும்ன்னா வாங்கித் தர்றேம்ன்னும், பெரச்சனெ பண்ணாம போயிடுங்கன்னும் பேசிப் பாத்தாரு.
இப்போ பட்டாமணி கிராமத்துல முக்கியஸ்தர்ரு ஆயிட்டதால அவருக்கு எதுப்பா பெரச்சனெ பண்ணா
கிராமமே தெரண்டு நிக்கும்ன்னு ஒரு மெரட்டலையும் மெரட்டுனாரு. பொண்டாட்டி ஓடிப் போன
விசயத்தெ இப்பிடி கமுக்கமா முடிச்சிட்டுக் கெடைக்குறத வாங்கிட்டுப் போறதா இருந்தா
சுமூகமா பேசி வுடுறதா சொல்லி அடுத்தக் குண்டெ தூக்கிப் போட்டாரு சொட்டெ கண்ணுராசு.
பொண்டாட்டி ஓடிப் போன சேதி ஒரு ஊருக்குத்
தெரிஞ்சி அசிங்கப்பட்டது போதும்ன்னும், அது வேற இன்னும் பத்து ஊருக்குத் தெரிஞ்சி
கூடுதலாத் தேவையில்லாம இன்னும் எதுக்கு அசிங்கப்படணும்ன்னு நெனைச்ச அந்த ஆளு கண்ணுராசு
சொன்னதுக்குல்லாம் ஒத்துக்கிட்டு தலைய ஆட்டுனாம். கண்ணுராசு பட்டாமணிகிட்டெயிருந்து
பாதி பணங்காசி, நகைய வாங்கிக் கொடுக்குறாப்புல அதுல கொஞ்சம் லவுட்டிக்கிட்டதோடு,
அந்த ஆளுகிட்டெயும் கொஞ்சம் பணங்காசிய பஞ்சாயத்து பேசி வுட்டதுக்கு வாங்கிக்கிட்டு,
பட்டாமணிகிட்டெயும் பணத்தெ லம்பா வாங்க்கிட்டாரு.
அந்தப் பஞ்சாயத்துக்குப் பெறவு பட்டாமணிகிட்டெ
இருந்த பாதிக் காசியிலயே வாள்பட்டறைய வெச்சி, மாடி வூட்டையும் கட்டிக்கிட்டாம். அப்போ
முழு காசும் இருந்திருந்தா எம்மாம் பண்ணிருப்பாம்ன்னு ஊரு சனத்தால மூக்கு மேலத்தாம்
வெரல வைக்க முடிஞ்சதே தவுர வேற ஒண்ணுத்தையும் பண்ண முடியல. கண்ணுராசு அமுக்கி லவட்டுனப்
பணத்துல வாங்குன கடனையும் கொடுத்துட்டு, மேல இருந்த கீத்துக் கொட்டகையத் தாட்டி வுட்டுப்புட்டு
மச்செ வூடா காங்கிரீட்டப் போட்டு முடிச்சாரு. அத்தோட ஒரு கட்சியிலயும் சேந்து கட்சிக்காரரு
ஆயி மதகு கட்டுறது, படித்தொறை கட்டுறது, வயலுக்கு களம் கட்டுறது, சுடுகாடு கட்டறதுன்னு
கான்ட்ராக்டை எடுத்து திட்டையில இருந்த பாதி நெலபுலனுங்கள வளைச்சிப் போட ஆரம்பிச்சாரு.
அத்தோட நல்ல இருந்த திட்டைக் கிராமத்தோட மண்ணு களத்தை, சிமெண்டு களமா போடுறதா சொல்லிக்
கான்ட்ராக்ட்ட வாங்கிப் போட்டு அந்தாளு போட்ட சிமெண்டு களம் ரண்டெ மாசத்துல கப்பியும்
திப்பியும் பேந்து போனதுல, சனங்களய வயல்லயே படுதாவ வாங்கிப் போட்டு களத்தப் பொழங்குறாப்புல
பண்ணிப்புட்டாரு.
பட்டாமணியும் ஊருல பெரிய ஆளா ஆவ ஆரம்பிச்சாம்.
வாள்பட்டறை வந்தப் பெறவு ஊருக்குன்னு டிரான்ஸ்பார்மரு வந்துச்சு. அதெப் பத்தி பெரிசா
அலப்பல் வுட்டுக்கிட்டு பட்டாமணியோட பொண்டாட்டி ஊருக்குள்ள மவராசியப் போல யாரு வூட்டு
தேவைன்னாலும் போயி மின்னாடி நிக்க ஆரம்பிச்சது. ஊர்லயும் அவனவனும் ஆத்திர அவசரத்துக்கு
பட்டாமணிகிட்டெ பணத்தெ வாங்கிட்டுக் கெடந்ததால, பட்டாமணியோட பொண்டாட்டிய வூட்டுக்குள்ள
வாரக் கூடாதுன்னு சொல்லுறதுக்கு நாக்கு எழும்பல. பட்டாமணியோட பொண்டாட்டியும் மொதக்
கொழந்தைய மொதப் புருஷனுக்குப் பெத்துப்புட்டு, ரண்டாவது கொழந்தைய பட்டாமணிக்குப்
பெத்துக் கொடுத்து, ரண்டு கொழந்தைகளையும் பட்டாமணிக்கே பெத்ததுப் போல வளக்க ஆரம்பிச்சது.
ஊரு சனங்களுக்கு அத்து நல்லாவே தெரிஞ்சது. மொதப் பயெ மொத புருஷன் சாயலுக்கும், ரண்டாவது
பயெ பட்டாமணி சாயலுக்கும் இருந்தானுவோ. இருந்தாலும் ரண்டு பயலுகளும் அண்ணன் தம்பியா
ஒத்துமையா வளந்தானுவோ. பட்டாமணியும் ரண்டு பயலுகளுக்கு இடையிலயும் எந்த வேறுபாடும்
பாக்காம நல்ல வெதமாவே ரண்டு புள்ளைகளையும் வளத்தாம்.
கிராமமும் கொஞ்சம் கொஞ்சமா சொட்டெ கண்ணுராசு,
பட்டாமணியோட பஞ்சாயத்துக் கட்டுக்குள்ள வந்துச்சு. ஆன்னா அந்தப் பஞ்சாயத்துக்குப்
பெரிசா வேலைய வைக்காத அளவுக்கு இத்தனெ வருஷமா ஊருக்குள்ள எந்தக் குடும்பத்துலயும் பெரிசா
எந்தப் பெரச்சனையும் இல்லாம எப்பிடியோ ஓடிட்டு இருந்துச்சு. அதுக்குல்லாம் சேத்து
ஒரு பெரும் பஞ்சாயத்த வைக்குறாப்புல சுப்பு வாத்தியாரோட பொண்ணு செய்யுவோட பஞ்சாயத்து
வந்தது அவுங்களுக்கு வாகாப் போயிடுச்சு. இந்தக் கதெதாம் இருவத்தஞ்சு வருஷத்துக்கு
மிந்தி நடந்த கதெ. இதெ அப்பிடியே இருவத்தஞ்சு வருஷத்துக்கு மின்னாடிப் போயி இப்போ
உள்ள காலத்துக்கு வந்து சொல்லி முடிச்சது தம்மேந்தி ஆத்தா.
*****
No comments:
Post a Comment