31 Oct 2020

இரகசியமாய் இரு கடிதங்கள்!

இரகசியமாய் இரு கடிதங்கள்!

செய்யு - 611

            மூணாவது பஞ்சாயத்து முடிஞ்சு ஒரு வாரம் கழிஞ்சிருக்கும். பஞ்சாயத்துக ஒவ்வொண்ணும் மனசெப் போட்டு ரொம்பவே கொழப்பியிருந்துச்சு. ஊருக்குள்ளயும் பஞ்சாயத்துல நடந்ததெப் பத்தி பல வெதமா சனங்கப் பேசிட்டு இருந்தாங்க. பொண்ண வெச்சுக்கிட்டு எத்தனெ காலம் சொமக்க முடியும்? உசுரோட இருக்குதோ, அங்கப் போயி செத்துப் போவுதோ? பொண்ண அனுப்பி விட்டுருந்தா ஒரு பாரம் கொறைஞ்சிருக்கும் சுப்பு வாத்தியாருக்குன்னு ஒரு பக்கத்துச் சனங்கப் பேசிட்டுக் கெடந்துச்சுங்க. நம்ம ஊரு பஞ்சாயத்துலயே வந்து அன்ன மெரட்டு மெரட்டுறானுவோ, அடிக்கப் பாயுறானுவோ, அவனுககிட்டெ பொண்ண வுட்டா அவ்வளவுதாங் காலி பண்ணிட்டுத்தாம் மறுவேல பாப்பானுவோன்னு இன்னொரு பக்கத்துச் சனங்க பேசிக்கிட்டுக் கெடந்துச்சுங்க.

            இதுக்கு இடையில சுப்பு வாத்தியாருக்கு ஒரு கடுதாசி வந்திருச்சு. ஒரு காக்கிக் கலரு கவர்ல அவரோட விலாசம் எழுதி பாக்குக்கோட்டையிலேந்து ஒரு கடுதாசி. ராசாமணி தாத்தாதாம் அந்தக் கடுதாசிய எழுதியிருந்துச்சு. அத்தோட செராக்ஸ் செய்யப்பட்ட ஒரு கடுதாசியையும் இணைச்சு அனுப்பியிருந்துச்சு. சுப்பு வாத்தியாரு அதைப் பிரிச்சுப் படிச்சுப் பாத்தாரு. 

பிரியமுள்ள மாப்புள்ளை சுப்புவுக்கு,

                                    அநேக நமஸ்காரங்கள். இது ஜோதிட சிகாமணி சிவஸ்ரீ பாக்குக்கோட்டை ராசாமணி எழுதிக் கொள்வது. செளக்கியங்களை விசாரிப்பதற்கு முன்பாக இரண்டு பக்கமும் கிரகச்சாரங்கள் சரியில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிரகநிலைகள் சரியில்லாமல் போகும் போது அது குடும்பத்தை மிகவும் பாதிப்படையச் செய்து விடுகிறது என்ற உண்மையை உனக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது உன் கூடவே இருப்பவர்களை நீ நம்பக் கூடாது. மோசம் போய் விடுவாய். அவர்கள் உன்னை தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். நீயும் தவறான வழியில் போவதற்கேற்ற வகையிலேயே உனது கிரக நிலைகளும் இருக்கின்றன.

            பஞ்சாயத்தில் அப்பிடி நிகழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பஞ்சாயத்தில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. உறவுகளின் வற்புறுத்தலால் நிகழ்ந்த எதிர்பாராத நெருக்கடி அது. அப்படியும் நீ வந்து ஒரு வார்த்தை என்னிடம் பேசியிருந்தால் பஞ்சாயத்தே நடைபெறாத அளவுக்குப் பண்ணியிருப்பேன். நீ என் பக்கம் வரவேயில்லை. அது குறித்து நான் வருந்தவில்லை. உன் கிரக நிலைகள் அப்படித்தான் இருக்கின்றன. நல்லவைகளிடமிருந்து விலகி தீயவைகளை நோக்கிச் செல்லும் நிலையில் நீ இருக்கிறாய். பஞ்சாயத்தில் என் மகன் பாலாமணியை நீ ஆண்மை இல்லாதவன் என்று சொன்னதை நான் மன்னித்து விடுகிறேன். ஒரு கோபத்தில் அப்பிடி ஒரு பேச்சு வரத்தான் செய்யும். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

            பஞ்சாயத்துகளால் நீயும் உனது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதை அறிகிறேன். இந்தப் பஞ்சாயத்துகளால் தனது தங்கை வாழாவெட்டியாகப் போய் விட்டதாகக் கருதிக் கொண்டு உனது மகன் விகடு ஆத்திரம் கொண்டு திரிவதாகக் கேள்விப்படுகிறேன். அதற்குக் காரணமான பெருமாள்சாமியையும், எனது மருமகன் சித்துவீரனையும் உனது மகன் கூலிப்படையை வைத்துக் கொல்வதற்குத் திட்டம் தீட்டி வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து எனக்குத் தகவல்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. வெகு முக்கியமாக அதற்காகத்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உனது மகனின் அத்தகைய செயல்பாட்டை உடனே தடுத்து நிறுத்து. அது நல்லதல்ல. எதுவும் நிகழ்ந்து விடவில்லை. சில தோஷ நிவர்த்திகள் செய்ய வேண்டியது இருக்கின்றன. சில பல பரிகாரங்கள் மூலமாக அதை அகற்றி விட முடியும்.

            கலியாணத்திற்காகக் கொடுத்த பணம், நகை குறித்து தேவையில்லாமல் குழம்பிக் கொண்டிருக்கிறாய். தேவையில்லாத பயங்களையும் மனதில் வளர்த்துக் கொண்டிருக்கிறாய். அவையெல்லாம் தேவையற்றது. உன்னிடம் உன் உறவினர்கள் அது குறித்து தேவையில்லாத சந்தேகம் கொள்ளும் அளவிற்குப் பேசி வருவதை நான் அறிகிறேன். பணமும் நகையும் பத்திரமாக பாங்கியில் டிபாசிட்டிலும், லாக்கரிலும் இருக்கின்றன. நீ இது சம்பந்தமாக நேரில் வந்தால் அந்த விவரங்களை ஆதாரங்களோடு காட்ட தயாராக இருக்கிறேன். வருவதாக இருந்தால் நீ மட்டுமே நேரில் வர வேண்டும். கூட உன்னுடன் யாரும் வருவதை நான் விரும்பவில்லை. காரணம் நம் இரு குடும்பத்து விசயங்களை உன்னாலும், என்னாலும் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்பதோடு, வேறு எவரேனும் உடன் வந்தால் அவர்கள் தேவையற்ற குழப்பங்களையும் உண்டு பண்ணி விடுவார்கள்.

            உனக்குச் சந்திக்க விருப்பமில்லை என்றால் உடன் போனில் பேசு. அல்லது பதில் கடுதாசி போடு. எந்த இடத்தில் நாம் ரகசியமாகச் சந்திக்கலாம் என்பதை அப்போது உனக்குத் தெரிவிக்கிறேன். இது மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும். மிகவும் கவனம் யாருக்கும் இது தெரிந்து விடக் கூடாது. பத்திரம் பத்திரம் என்று திரும்ப கூறிக் கொள்கிறேன். நான் இந்தக் கடிதத்தை உனக்கு எழுதக் காரணம் உன்னைப் பற்றியும், உன் குடும்பத்தைப் பற்றியும் எனக்கு வந்த ஒரு மொட்டைக் கடுதாசிதான். உனக்கு உன்னைச் சுற்றி எத்தனை எதிரிகள் இருக்கிறார்கள் என்பதை அந்தக் கடிதத்தை முழுமையாக ஒரு வரி விடாமல் படித்துப் பார்த்தால் உணர்ந்து கொள்வாய். நீ நம்பாமல் இருந்து விடக் கூடாது என்பதற்காக அந்தக் கடிதத்தையும் இத்துடன் சிராக்ஸ் செய்து அனுப்பியிருக்கிறேன். படித்துப் பார்க்கவும். படித்துப் பார்த்து விட்டு உடனே அதைக் கிழித்து விடவும். அந்த அளவுக்கு மோசமாக அந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது என்பதை முன்கூட்டியே உனக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

            நாம் ரகசியமாகச் சந்திக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை உனக்குக் கூறிக் கொள்கிறேன். இந்தத் தகவல்கள் மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதை மறுபடியும் வலியுறுத்திக் கூறிக் கொள்கிறேன். நாம் ரகசியமாகச் சந்தித்துப் பேசினால்தான் பல பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க முடியும். அப்பிடிப் பேசுவதற்கு உனது மகன் கூட தடைதான் என்பதால் நீ மட்டும் வருவதே உசிதம். நாம் ரகசியமாக எப்போது சந்தித்துப் பேசலாம் என்பதற்காக உடனே போனிலோ, கடிதம் மூலமோ தொடர்பு கொள். மீண்டும் நான் கூறிக் கொள்வது என்னவென்றால் ரகசியம் காக்கப்பட வேண்டும். அதுதான் நம் இரு குடும்பத்துக்கும் நல்லது. உன்னை விட வயதில் மூத்தவன் என்பதாலும், இரு குடும்ப நலனில் உன்னை விட அதிக அக்கறையுள்ளவன் என்பதாலும் இந்தக் கடிதத்தை மிகுந்த நம்பிக்கையுடன் எழுதுகிறேன். உனது முடிவை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். மலையாள பகவதி என்றும் துணையிருப்பாள். இதையெல்லாம் எனது மலையாள மாந்திரீக ஞான திருஷ்டியால் அறிந்து எழுதுகிறேன் என்பதை மறந்து விட வேண்டாம்.

இப்படிக்கு

அன்பு மாமன்

ஜோதிட சிகாமணி சிவஸ்ரீ ராசாமணி,

பாக்குக்கோட்டை.

            அந்தக் கடுதாசியோட செராக்ஸ் செய்யப்பட்ட ஒரு இன்லேண்ட் லெட்டரும் இணைஞ்சிருந்துச்சு. பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தாவோட விலாசம் எழுதி, அனுப்புறவங்க விலாசம் இல்லாம வடவாதி தபாலாபீசிலேர்ந்து அனுப்பப்பட்டிருந்துச்சு அந்தக் கடுதாசி. அந்தக் கடுதாசியில இருந்த விவரங்களையும் சுப்பு வாத்தியாரு படிச்சிப் பாத்தாரு.

ஜோதிட சிகாமணி சிவஸ்ரீ ராசாமணியனார் அவர்களுக்கு,

            அநேக வந்தனங்களோடு தங்கள் ஜோதிடத்தால் நலம் பெற்ற நலம் விரும்பி எழுதிக் கொள்வது. இந்தக் கடிதத்தை எழுவது யார் என்று ஆராய வேண்டாம். தங்கள் மற்றும் தங்களின் குடும்பத்தின் நலம் விரும்பும் திட்டைவாசிகளுள் ஒருவன் எழுதிக் கொள்வது. இந்தக் கடிதம் கண்டவுடன் உடன் நீங்கள் எப்பாடு பட்டாவது தங்களது மருமகளை அழைத்துக் கொண்டு வந்து விடவும். திரும்ப இந்த ஊர்ப்பக்கம் எட்டிப் பார்க்காதீர்கள். திட்டை கிராமத்திலேயே பரம்பரை பரம்பரையாக இருந்து வருபவன் என்கிற முறையில் சுப்பு வாத்தியார் என்ற கேடுகெட்ட மனிதரின் குடும்பத்தைப் பற்றி நான் அறிவேன். தரமான குடும்பத்தைச் சேர்ந்த தாங்கள் தரங்கெட்ட குடும்பத்தில் பெண் எடுத்து விட்டீர்கள். ஆனது ஆகி விட்டது. நமது இந்துத் தர்ம குடும்ப சாஸ்திரங்கள் எப்போதும் சிதைந்து விடக் கூடாது. நீங்கள் எப்பிடியாவது பஞ்சாயத்து செய்து உங்கள் மருமகளை அழைத்துக் கொண்டுச் சென்று விடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். தவறி விட்டீர்கள். பரவாயில்லை. இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்காதீர்கள். சுப்பு வாத்தியாரின் குடும்பம் முறையற்ற உறவில் உள்ள ஒரு குடும்பம். அவருக்கும் அவரது மருமகளுக்குமே முறையற்ற உறவு உள்ள குடும்பம். இந்தத் தகவல் ஊர் அறிந்து நாறிக் கிடக்கும் விசயம். அதை எப்பிடி தாங்கள் அறிந்து கொள்ளாமல் போனீர்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் இது தங்களது ஜோதிடப் பார்வையிலிருந்து தப்பியதற்கு அவர்கள் உங்களது உறவினர்களாக அமைந்து விட்டதுதான் காரணம் என்று நினைக்கிறேன். உறவினர்கள்தானே என்று அலட்சியமாக ஜாதகங்களை ஆராயாமல் விட்டு விட்டீர்கள். ஜாதகங்களைப் பாத்திருந்தால் கண்டறிந்திருப்பீர்கள். ஜோதிட முறைப்படியும், இந்துத் தர்மப்படியும் வாழ்ந்து வரும் தங்கள் குடும்பத்திற்கு இப்பிடி ஒரு நிலை கூடாது என எச்சரிக்கவே இந்தக் கடிதம். பரிபூரண சுத்தத்தோட தாங்கள் ஜோதிட சேவையும், தங்கள் மகன் மருத்துவச் சேவையும் ஆற்றி வரும் நிலையில் இப்படி ஒரு குடும்பத்தில் பெண் எடுத்திருக்கக் கூடாதுதான். எடுத்து விட்டீர்கள். பெண் மேல் குறையில்லை. குடும்பத்தில் குறையும், தகாக உறவுகளும் இருக்கின்றன. உடன் காத்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கை. எச்சரிக்கை. மிகவும் எச்சரிக்கை. மிக கவனமாகச் செயல்பட்டுத் தற்காத்துக் கொள்ளுங்கள்.

இப்படிக்கு,

தங்கள் ஜோதிடத்தால் பயன்பெற்று நல்ல விதமாக குடும்பம் நடத்தி வரும் திட்டைவாசிகளுள் ஒருவனும், பரம சாதுவான மகனைப் பெற்றெடுத்த தகப்பனும் ஆகிய ஒருவன்.

            இந்த ரண்டு கடுதாசிகளையும் படிச்சு முடிச்சதும் சுப்பு வாத்தியாருக்குக் கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சது. உடம்பெல்லாம் குப்புன்னு வியர்த்துடுச்சு. அப்பிடியே பச்சக்குன்னு தரையில உக்காந்துட்டாரு. அவரு அப்படி ஆனதப் பாத்து அந்தக் கடுதாசிய அவரு கையிலேந்து வாங்கிப் படிச்சுப் பாக்க நெனைச்சான் விகடு. சுப்பு வாத்தியாரு அந்தக் கடுதாசிய கொடுக்க முடியாதுங்றது போல அழுத்தமா பிடிச்சிருந்தார். அவ்வேம் பிடிவாதமா பிடுங்கி அதெ படிச்சிப் பாத்தாம். அவனுக்கு கலக்கமோ, நடுக்கமோ எதுவுமே யில்ல. அவ்வேம் பாட்டுக்குச் சிரிக்க ஆரம்பிச்சிட்டாம். மவ்வேம் சிரிக்கிறதெ அதிசயமா பாத்தாரு சுப்பு வாத்தியாரு.

            "யிப்பிடி ஒரு கடுதாசிய எழுதாம இருந்திருந்தா அவனுகள யோக்கியன்ங்கள்ன்னு நெனைக்குறாப்புல ஆயிடும். எழுதுனவாசித்தாம் அந்தப் பயலுகள அயோக்கியப் பயலுகன்னு முடிவு கட்ட முடியுது. எந்தப் பைத்தியங்கூலிப் பயலவாது எவ்வளவுதாங் பைத்தியம்னாலும் ரண்டு கடுதாசியையும் ஒரே கையெழுத்துல எழுதுவானுவோளா? அந்தக் கெழட்டுப் பய எழுதுனதா இருக்குற கடுதாசியில இருக்குற கையெழுத்தும், சிராக்ஸ் எடுத்தக் கையெழுத்தும் ஒரே மாரியால்லா இருக்கு. இவனுவோளாவே ஒரு கடுதாசிய வடவாதியிலேந்து அவனுகளுக்கு அனுப்பி வுட்டுப்புட்டு, அதுக்குத் தகுந்தாப்புல அதெ பாத்துப்புட்டு நமக்குக் கடுதாசி எழுதுறாப்புல எழுதிருக்கானுவோ. இதெப் போயா நம்புதீங்க? அந்தப் பயெ தனியா ரகசியமா வர்றச் சொல்றதிலேந்து புரியல. தீத்துக் கட்டணும்ன்னு முடிவெ பண்ணிட்டு நிக்குறானுவோ. இதெ கொண்டுப் போயி போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்து ஒரு கம்ப்ளெய்ண்ட்ட பண்ணாவே போதும். பயலுக ஒரு வழிக்கு வந்துப்புடுவானுவோ!"ன்னாம் விகடு.

            விகடு தெளிவா பேசுறதெ கேட்டதும், "போலீஸ் ஸ்டேசன்லாம் போவக் கூடாதுன்னுத்தாம் பஞ்சாயத்துல வெச்சே எதாச்சும் முடிச்சிப் புடலாம்ன்னு பாத்தேம். முடியல. போவணும்ன்னு நெனைச்சிருந்தா ஒந் தங்காச்சித் தூக்கு மாட்டுன அன்னிக்கே போயிருந்திப்பேம். பெறவு போலீஸ் ஸ்டேசன்லாம் போனதாலத்தாம் சேந்து வாழ முடியாதுன்னு அந்தக் கிறுக்குப் பயலுவோ நெலையா நிப்பானுவோன்னுத்தாம் யோஜனெ பண்ணிட்டு வுட்டேம். அப்பயே போவல. இப்பப் போயி என்னத்துக்கு ஆவப் போவுது. இந்தக் கடுதாசியத் தூக்கி அந்தாண்டப் போட்டுப்புட்டு பேயாம நாம்ம ஆவ வேண்டியதெ பாத்துட்டு இருந்தாலவே அடங்கிப் போயிடுவானுவோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு யிப்போ கொஞ்சம் நெதானமா.

            "பெறவு ஏம்ப்பா கலங்கிப் போயி உக்காந்திருக்கீயே?"ன்னாம் விகடு.

            "அதுக்கில்லடாம்பீ! இப்பிடி பழியக் கட்டி விட நிக்குறானுவோளே? இவுனுங்ககிட்டெ பொண்ண அனுப்பிச்சி வுட்டு என்னத்தடா பண்ணுறது? கொன்னு போட்டுப்புட்டு, ஒம் பொண்ணு தற்கொல பண்ணிட்டுன்னோ, பைத்தியமாக்கி வுட்டுப்புட்டு யிப்பிடி ஒரு பைத்தியங்கூலிப் பொண்ண கட்டி வெச்சிருக்கீயோன்னோ சொல்லிட்டுப் போயிட்டெ இருப்பானுவோடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அழுவாத கொறையா.

            "அதாங் தங்காச்சிய அனுப்பலயே!"ன்னாம் விகடு.

            "ஒருவேள அனுப்பியிருந்தா? அதெ நெனைச்சிப் பாத்தேம்டாம்பீ! நம்மளோட ஈரக்கொலைய நடுங்குதுடாம்பீ! அதெ நெனைச்சப்பத்தாங் அப்பிடியே கலங்கிப் போயி, உடம்பெல்லாம் நடுங்கிப் போயி உக்காந்துட்டேம்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. பெறவு அந்தக் கடுதாசிய வூட்டுல உள்ள அத்தனையும் படிச்சிப் பாத்து ஆத்திரம் அடங்காம பேசிக்கிட்டுக் கெடந்துச்சுங்க. ஆயிக்கு வந்த ஆத்திரத்துல அவனுகளப் பிடிச்சி கொன்னு போடணும்ன்னு நின்னா. செய்யு அதெப் படிச்சி படிச்சிப் பித்து பிடிச்சவ போல நின்னா. வெங்கு அதெ படிச்சிக் காட்டச் சொல்லி பைத்தியம் பிடிச்சது போல நின்னுச்சு. ஒரு கடுதாசிய அனுப்பி அடுத்த கட்ட வேலைய ஆரம்பிச்சிட்டானுவோளே பாக்குக்கோட்டையானுவோன்னு முணுமுணுத்துக்கிட்டெ கெடந்தாரு சுப்பு வாத்தியாரு.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...