31 Oct 2019

11.0




Zero To Infinity
அத்தியாயம் : 2
            11 = 11
            1+1 = 2
            ஆர்குடி தேரடித் திடல்.
            கோபாலபெருமாள் கோயிலுக்கு எதிர்புறமாக இருக்கிறது. ஆர்குடி பெருமாள் கோயிலும், தாயார் சந்நிதியும் அவ்வளவு சிறப்பு. புளியோதரை ஏகச் சுவையாக இருக்கும். கெளரிவிரத நாட்களில் அப்படியொரு கூட்டத்தைப் பார்க்கலாம். இப்போது அநேகமாக கெளரி விரதம் மறந்து விட்டது. மறந்தது மறந்ததாகவே இருக்கட்டும். இப்போது கூட்டம் அதிகமில்லை. புளியோதரையின் சுவை குறைந்ததும் காரணமாகவும் இருக்கலாம்.
            தேரடித் திடலில் எப்போதும் கூட்டம். கூட்டம் நடந்து கொண்டிருப்பதால் அப்படி ஒரு கூட்டம். பொதுக்கூட்டம், சங்கக் கூட்டம், அரசியல் கூட்டம், இலக்கியக் கூட்டம் இப்படி ஏதாவது ஒரு கூட்டம் நடந்து கொண்டே இருக்கும். கூட்டம் நடக்கும் காலங்களில் மக்கள் வரிசைகட்டி நிற்பார்கள், உட்கார்ந்திருப்பார்கள். மற்ற நாட்களில் வேன்கள், லாரிகள் வரிசைகட்டி உட்கார முடியாத அவஸ்தையில் நின்று கொண்டிருக்கும். ஆர்குடி டவுன் மாடுகள் அனைத்தும் கூடும் இடமும், சாணி போடும் இடமும் அதுதான். மனித மூத்திர நாற்றத்துக்குப் பஞ்சம் இருக்காது. டவுனில் எங்கு சாணி கிடைக்கா விட்டாலும் அங்குக் கிடைக்கும். அதற்கென ஓரு கூட்டம் தேரடித் திடலைச் சுத்திக் கிடக்கும். கூட்டம் நடக்கும் காலங்களில் மாடுகளுக்கு அவஸ்தை. அவை வேறு எங்காவது இடம் தேடிக் கொள்ள வேண்டியதுதான். எது எப்படியோ கூட்டம் நடக்கும் நாட்களில் திடல் சுத்தமாகி விடும். வேன்கள், லாரிகள் வேறு இடம் பார்த்துப் போய் விடும்.
*****
            கவிஞர் தீக்காபி விகடுவின் நண்பர்.
            கவிஞர் - அவர் படித்து வாங்கியப் பட்டமா? படிக்காததால் வாங்கிய பட்டமா? கவிஞர் தீக்காபியே விளக்க கடமைப்பட்டவர். படிக்க விருப்பம் இல்லாதவர்கள் பெரும்பாலும் கவிஞர்கள் ஆகி விடுகிறார்கள் என்பது உலக பொதுவான சாத்தியக்கூறு. படித்தவர்களும் பொதுவாக கவிஞர்கள் ஆகிறார்கள் என்பது கால பொதுவான சிறப்பான சாத்தியக்கூறு.
            கவிஞர்களின் பெயர்களில் இப்படி ஓர் அநாதேயமான பேரைக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பெயர்க்காரணம் விளக்க கடமைப்பட்டது.
            கவிதைகள் எப்போதும் சூடாக இருக்க வேண்டும். அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்று அக்கினியைக் கலந்து பாரதி எழுதியது கவிதை எப்போதும் சூடாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆரம்பத்தில் அக்கினிபுத்திரனாகத்தான் இருந்தார் கவிஞர் தீக்காபி. அக்கினியின் புத்திரனாக இருப்பதில் என்ன வெறுப்பு தட்டியதோ தெரியவில்லை. தீக்காபியாக மாறி விட்டார் அக்கினிபுத்திரன். இப்படி மாறியதில் அக்கினிக்கு வருத்தம் இருந்திருக்கக் கூடும். மேற்கொண்டு அது அக்கினியைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்.
            டீயோ, காப்பியோ மக்கள் சூடாக இருந்தால்தான் விரும்புவார்கள். ஆறிய டீக்கு, ஆறிய காபிக்கு குப்பைத் தொட்டியே மவுசு. மக்கள் விரும்பும் சூடான டீயும், காபியுமாக இருக்க வேண்டும் என்று டீக்காபியாக மாறியவர் தீக்காபி. டீக்காபி என்று சொல்வதில் ஒரு சந்தநயம் இல்லாமல் இருப்பதாகப் பட்டதால் டீக்காபியிலிருந்து தீக்காபியாக அவதாரம் கொண்டார் கவிஞர். அத்துடன் தீக்காபியில் தீ இருக்கிறதா! எழுதும் கவிதையில் சூடு இல்லாவிட்டாலும், தன் பெயரில் இருக்கும் தீயில் கவிதை சூடாகி விடும் என்ற ஐதீக நம்பிக்கை ஏற்பட்டு விட்டது கவிஞருக்கு. கவிஞர் கடைசிவரை தீக்காபியாக இருப்பதற்கு தீர்மானம் பூண்டு விட்டார். நாவல் முடிவுறும் காலத்திற்குள் ஜாதக மற்றும் நியூமரலாஜி சித்துபித்துக்குள் அகப்பட்டு கவிஞர் வேறு பெயருக்கு மாறினால் நாவலாசிரியர் அதற்குப் பொறுப்பாக மாட்டார்.
            தீக்காபியைப் பற்றிச் சுட சுட பார்ப்போம்.
            புலனாய்வு பத்திரிகை விசயங்களில் இருக்கும் சூடு கவிஞரின் விசயத்திலும் இருக்கும். அதற்கு நாவலாசிரியர் மனமுவந்து பொறுப்பேற்கிறார்.
*****


30 Oct 2019

தராசுக்கு ரெண்டு தொங்கல்




செய்யு - 254
            சமையலு கட்டு மேல உள்ள உத்தரத்துல சேலையைக் கட்டி தூக்குல தொங்குது அத்தைக்காரி. இது சின்னவரு எதிர்பார்க்காதது. பார்த்த சின்னவருக்கு வெலவெலத்துப் போவுது. தன்னால ரெண்டு உசுரு போயிட்டேங்ற குத்த உணர்ச்சி இப்பதாம் லேசா அவருக்கு தலைதூக்குது. "எலே இஞ்ஞ வாங்கடா! யத்தேயும் தூக்குல தொங்குதடா!"ன்னு குரலு நடுங்க சத்தம் போடுறாரு. சத்தம் போட்டவரு அப்படியே சமையலுகட்டுக்கு முன்னாடியே உக்காந்துட்டாரு.
            அங்க சுத்துகட்டுலயும், இங்க சமையலுகட்டு அத்தைக்காரியும் தொங்குறது ஒரு தராசுல ரெண்டு பக்கமும் ரெண்டு தட்டும் தொங்குறது போல சின்னவருக்கு மனசுல ஒரு காட்சியா விரியுது. தாம் பண்ண தப்புக்கு ரெண்டு பேரும் தராசு போல நின்னு ஞாயம் பண்ணிட்டதா ஒரு நெனைப்பு அவருக்கு வருது.
            கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சேதி கேள்விப்பட்டு அக்கம் பக்கத்து சனங்கள்லாம் வூட்டுக்குள்ள ஓடி வர்றாங்க. வந்தவங்க விடுவிடுன்னு தொங்கிட்டு இருக்கிறவங்கள இறக்கிப் போடுறாங்க. மாமாங்காரரு சுத்துகட்டுலயும், அத்தைக்காரி சயைமலுகட்டுலயும் ஏம் தூக்குல தொங்குறாங்கன்னு எல்லாருக்கும் கேள்வியாயிப் போவுது. பேச்சு பல விதமா போவ ஆரம்பிக்குது.
            "ரொம்ப நாளா கொழந்த இல்லேங்ற கொறைதாம். அந்த ஏக்கத்த வெளியில சொல்லவும் முடியாம, மனசுக்குள்ள வெச்சிக்கவும் முடியாம போயி சேந்துட்டுங்க!" அப்பிடின்னு பேசுதுங்க சில சனங்க.
            "ஏதோ ரெண்டு பேருக்கும் தீராத வெயாதி கியாதி இருந்திருக்கும். வெளியில சொல்லி அசிங்கப்பட முடியான்னு இப்படி தொங்கிட்டுங்க!" அப்பிடின்னு சில சனங்க பேசுதுங்க.
            "மாமங்காரருக்கு வெவகாரமான வெசயம் ஏதோ வெளியில ஆயி அவரு தொங்கிருப்பாரு. அதெ பாத்து அத்தைக்காரியும் தொங்கிருப்பா!" அப்பிடின்னு இன்னும் சில சனங்க பேசுதுங்க.
            "அத்தைக்காரி மேலதாம் ஏதோ தப்பு இருக்கணும். அது தெரிஞ்சு மாமாங்காரரு தொங்கப் போயி, அதெ பாத்து அந்தத் தப்புக்கு நாம்மதாம் காரணம்னு நெனச்சிகிட்டு அவ்வே தொங்கிட்டா!" அப்பிடின்னு சில சனங்க பேச, அதெ கேட்குற சின்னவருக்கு சொரெர்ங்குது. இப்படி சில சனங்க பேசுறத கேக்கிறப்ப விசயம் வெளியில வந்துடுமோங்ற பயம் அவருக்குள்ள வந்துடுது. இங்க இருந்தா அப்பிடி இப்பிடின்ன சனங்க முடிச்சுப் போட்டுப் பேசி எப்படியும் கண்டுபிடிச்சிடுங்ற யோசனையில பெருங்குரலெட்டு அழுதுகிட்டு இதப் பாத்து தாங்க முடியாத ஆளு மாதிரி ஒரு கைய நெஞ்சுல வெச்சுகிட்டு, மறு கையில துண்டைக் கொடுத்து வாயில அடைச்சுகிட்டு சமையலுகட்டுப் பக்கத்து குந்திக் கெடந்தவரு எழுந்து மாமங்காரரு வீட்டை விட்டு ஓடுறாரு.
            "பாவம்யா கிட்டான்! சாவப் போற கடைசி காலத்துல புள்ள மாரில்லா இருந்தாம். யத்தே புள்ள மாரில்ல சோறு போட்டு வளத்தது. மாமாதாம்ல அவனெ திருத்தி வழிக்குக் கொண்டாந்தது. அவனால தாங்க முடியல! அதாங் இருக்க முடியாம ஓடுறாம்!" அப்பிடிங்குது சில சனங்க.
            "ம்ஹீம்! அவனா புள்ள மாரி? செரியான மொள்ளமாரி! இவ்வேம் ஏத்தோ பண்ணிருக்காம். அதுலதாம் இவிய்ங்க தொங்கிருக்கணும்!" சில சனங்க பேச்செடுத்துக் கொடுக்குது. இப்படி அப்படியும் இப்படியுமா பேசி விசயம் கொஞ்சம் வெளியில வரத்தாம் செய்யுது. ஆனா எல்லாம் அவங்கவங்களோட ஊகத்துலல்லா வெளியில வர்ருது. இப்பிடித்தாம் நடந்துச்சுன்னு உறுதியா சொல்ல முடியாமப் போவுது. இப்படித்தாம் நடந்துச்சுதுங்றது உறுதியா தெரிஞ்ச ஒரே ஆளு இப்ப சின்னவருதாம். அவரு சொன்னாத்தாம் உண்டு. அவரு எப்படிச் சொல்வாரு? விசயம் வெளியில தெரியக் கூடாதுன்னு செத்துப் போயிக் கெடந்த மாமங்காரரையே வெறகுக் கட்டையால பொளக்க பொறப்பட்ட ஆளாச்சே!

            மாமங்காரரு வூட்ட வுட்டு வெளியில புறப்பட்ட ஆளு அடுத்துப் போயி நின்ன எடம் வேலங்குடி. வேலங்குடிக்கும், புகழூருக்கும் பன்னெண்டு மைலுக்கு மேல இருக்கும். கிலோ மீட்டரு கணக்குல பத்தொம்பது, இருவதாவது வரும். அவ்வளவு தூரமும் நடந்தே போனாரு. போறப்ப அங்கங்க மரத்தடியில உக்காந்து அழுவுறாரு. யாரும் இல்லன்னு தெரிஞ்சா அப்படியே உருண்டு பெரளுறாரு. தன்னோட தலையில தானே அடிச்சிக்கிறாரு. தோளுல போட்டுருக்குற துண்டால நெஞ்சுல கட்டி இறுக்கிக்கிறாரு. இறுக்கம் அதிகமாயி வலி காணுறப்ப இளக்கிக்கிறாரு. "யத்தே ஒன்னோட எப்டியெல்லாம் வாழணும்னு நெனச்சிட்டு இருந்தேம்! குறுக்கால நந்தி மேரி நின்னவனும் போயிச் சேந்துட்டாம்னுல்ல இருந்தேம். நீயும் போயிச் சேந்துட்டீயே! இனுமே நாம்ம எப்படி வாழப் போறேம்?"னு பொலம்புறாரு. கொஞ்சம் பொலம்பல் ஆச்சுன்னா எழுந்து விடுவிடுன்னு நடக்குறாரு. மறுக்கா எங்காவது தோதான மரத்தடிக் கெடைச்சா அழுவுறதும், பெரளுறதும், புலம்புறதுமா பண்றாரு. பெறவு நாலஞ்சு மைலுக்குக் கிறுக்குப் பிடிச்சவன் மாதிரி நடக்குறாரு. வழியல கல்லு, சில்லு எதாச்சிம் கெடந்தா எத்தி எத்தி உதைக்குறாரு. அப்படி நடந்து நடந்து பொழுது மசங்குற நேரத்துல வேலங்குடிக்கு வந்து நிக்குறாரு.
            வேலங்குடியில அப்போ பெரிசா வூடுக எதுவும் கெடையாது. திருவாரூரு திருத்துறைப்பூண்டி ரோட்டுலேந்து ரெண்டு கிலோ மீட்டரு வடக்கால நடந்துதாம் உள்ள வரணும். உள்ள வரப்ப கொஞ்ச தூரத்துக்கு வூடுக நெருங்க இருக்கும். பெறவு வயக்காடுதாம். அதுல போற மண்ணு ரோடுதாம். மழைக்காலத்துல காலு வெச்சி நடக்க முடியாது. களிமண்ணு ஒலை அது பாட்டுக்கு காலை இழுத்து வாங்கும். அந்த ரோட்டுலத்தாம் சின்னவரு நடந்துப் போனாரு. அப்போ பெரிசா மழையேதும் இல்லாததால ரோடு நடக்குறதுக்கு எந்தச் செரமும் இல்லாமத்தாம் இருந்துச்சு. மண்ணு ரோட்டோட ரெண்டு பக்கமும் வயலுகளா இருக்கு. இந்த நேரத்துக்கு நரிங்க கூட்டமா சேந்து ஆள அடிச்சுப் போட்டாலும் கேக்க நாதியில்லாம இருக்கு அந்த ரோடு.
            கொஞ்ச தூரம் நடந்த பின்னே வேலங்குடி கிராமம் வருது. கொஞ்ச தூரத்துக்கு கிராமம் வூடுகளா இருக்குது. அதுக்கு அப்புறம் கருவக்காடுகளா இருக்குது. அதுக்கு இடையில பாதை போவுது. அந்தப் பாதை முடியுற வரைக்கும் போனா கடைசியில மேற்கால திரும்புது. அங்க திரும்பினா ஐம்பது, அறுவது அடி தள்ளி வேலங்குடி பெரியவரு வீடு இருக்குது. அவரு வூட்டுக்கு எதுத்தாப்புல கொஞ்சம் தள்ளி தம்புசெட்டி வூடு இருக்குது. அவரு வூட்டோட வூடா சின்ன பெட்டிக்கடை வெச்சிருக்காரு. பெரியவரு வூடு இருக்குற அதே வரிசையில கொஞ்சம் கருவக்காடு இருக்குது. அதைத் தாண்டி காக்காபுள்ள வூடு இருக்குது. இந்த தம்புசெட்டியும், காக்கபுள்ளயும்தாம் பெரியவருக்கு சிநேகிதருங்க. ஆத்திர அவசரத்துக்கு இவங்கதாம் ஒருத்தருக்கொருத்தர் ஓடிக்கணும், உதவிக்கணும். அவ்வளவுதாம் அப்போ அங்க வூடுக. அதைத் தாண்டுனா வெறும் கருவக் காடுகத்தான். அப்படியே ஒரு நடை நடந்து வடக்கால திரும்புனா அந்த முக்குல ஒரு கொளம். கொளத்துக்குப் பக்கத்துல அம்மன் கோயிலு ஒண்ணு. அதெத் தொடர்ந்து பாதையில நெறைய வயலுங்க. வயலுங்க வழியே வுழுந்துப் போற பாதை வழியே போனாக்கா வயலுகள்ல வேலைப் பாக்குற சனங்களோட வூடுக பத்து பன்னெண்டு இருக்கு. அவ்வளவுதாம் அப்போ வேலங்குடி கிராமம்.
            அப்போ பெரியவருக்கு மூத்தது ஒரு பொண்ணும், ரெண்டாவது ஒரு பையனும் பொறந்து, செயா அத்தை வயித்துல நெற மாசமா இருக்கு.
            வேலிப்படல தொறந்துகிட்டு உள்ளார முப்பது அடி தூரம் உள்ள வந்தாத்தாம் வூடு. நொழைஞ்சு உள்ள வர்றாரு சின்னவரு. இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமா மாடுக கட்டிக் கெடக்குங்க. பசு மாடு, எருமை மாடு, காளை மாடுன்னு கணக்கில்லாம கலந்து கட்டி கட்டிக் கெடக்குதுங்க. எப்பிடியும் பத்து பன்னெண்டு உருப்படிக  நிக்குது.
            செயா அத்தை கால நீட்டிப் போட்டுகிட்டு உக்காந்துகிட்டு ஒரு பலவாக் கட்டையை வெச்சுகிட்டு பயிறுல கல்ல பாத்து உருட்டிகிட்டு இருக்கு. பெரியவரு பொண்ண மடியில வெச்சுகிட்டு, தொட்டியில படுத்துகிட்டு இருக்குற பையன ஆட்டிகிட்டுக் கதை பேசிட்டு இருக்காரு. வேலங்குடி பெரியவருங்ற பெரிய மாமா கதெ பேச ஆரம்பிச்சார்ன்னா அம்புட்டு ஆசையா இருக்கும் கேக்குறதுக்கு. அப்போ பொழுது போவறதுக்கு டி.வி.யா? ரேடியோவா? என்னா இருந்திச்சி. ரேடியோ ஒண்ணுத்தாம் கிராமத்துல வசதியான யாரோ ஒருத்தரு வூட்டுல மட்டுந்தாம் இருந்துச்சி. பொழுது போவறதுக்குப் பேச்சுத்தாம். அதுவும் வேலங்கடி பெரியவரு பேச்சுக்குன்னே தம்புசெட்டியும், காக்காபுள்ளயும் வடக்கால இருக்கற அம்மன் கோயிலுக்குப் பொழுது மசங்குனா போதும் வந்து உக்காந்துடுவாங்க. பொழுது போறது தெரியாம பேசிக்குவாங்க. கொழந்தைங்க பொறந்த பின்னாடி பெரியவரால முன்ன மாதிரி கோயிலுக்குப் போயி குந்திகிட்டு பேச முடியல. அதுக்காக போவாமலும் இருக்கிறதில்ல. வாரத்துக்கு ஒரு தடவையோ, ரெண்டு தடவையோ கோயில்ல போயி உக்காந்து பேசலன்னா மனுஷனுக்குத் தூக்கம் வராது. இன்னிக்குப் போகாம வூட்டுலத்தாம் இருக்காரு. அவரு எல்லாத்தையும் பாயிண்டு போட்டு வெரல நீட்டில்ல ஒவ்வொண்ணா ஞயாம் பேசுவார்ன்னு முன்னமே நாம்மதாம் அவரப் பத்தி பாத்திருக்கோமே!
            இதாருடா புது ஆளா இந்த நேரத்துக்கு வூட்டுக்குள்ள நொழையுறானேன்னு பெரியவரு பாக்கறதுக்குள்ள உள்ள நொழைங்ச சின்னவரு படார்னு அப்படியே குப்புற மளார்னு விழுந்து கெடக்குறாரு.
            "அட இவம் ன்னா தம்பிக்காரம்ல. இந்நேரதுக்கு இஞ்ஞ வந்து ஏம் வுழுறாம்?"ன்னு தடார்னு மடியில இருக்குற பொண்ண அந்தாண்ட உக்கார வெச்சிட்டு படார்னு எழுந்திரிச்சி தம்பிக்காரன தூக்குறாரு. செயா அத்தையும் பதறி அடிச்சிட்டு இடுப்ப பிடிச்சுக்கிட்டு எழும்புது.
*****


உத்திரத்துல ஒரு சுமை




செய்யு - 253
            மூணு அடி நீட்டு இருக்குற வெறகுக்கட்டை முண்டும் முடிச்சுமா இருக்கு. மாமங்காரரு பக்கத்துல அடிக்கிறதுக்குத் தோதா வந்த சின்னவரு அந்த வெறகுக்கட்டையை அப்படியே மாமங்காரரோடு வலப்பக்க செவுளுல அடிக்கிறதுக்காக ஓங்குறாரு. அவரு அடிச்சி அவர்ர கொலைகாரரா ஆக்கிடக் கூடாதுன்னோ என்னவோ மாமங்காரரு இடப்பக்கமா சாயுறாரு. சின்னவரு அடிச்ச அடி காத்துக்கு விழுந்ததோடு சரி. வெறகுக்கட்டையை அப்படியே போட்டுட்டு மாமங்காரரோடு ஒடம்பைத் தொட்டுப் பார்த்தா சில்லுன்னு இருக்கு. மூக்குல வெரல வெச்சுப் பார்த்தா மூச்சும் ஓடல, ஒண்ணும் ஓடல. பாக்கக் கூடாத அந்தக் காட்சியைப் பாத்த நேரத்துல மாரடைச்சு அவரோட உசுரு பிரிஞ்சிருக்கணும்.
            கொலை செய்யணும்னு வந்தருவதாம் சின்னவரு. கொலையைப் பண்ணியிருந்தா கூட ஒடம்பு அவ்வளவு வெடவெடக்காது போலருக்கு. மாமங்காரரு அவரா செத்துக் கெடக்கிறதுப் பார்த்து ஒடம்பு அப்படியே அவருக்கு வெடவெடத்துப் போவுது. வியர்த்து விறுவிறுத்துப் போவுது. அத்தைக்காரி ஓடிப் போயி அவர்ர் கட்டிப் பிடிச்சிகிட்டு, "என்னங்க! போய்டீங்களா?"ன்னு கதறுது. சின்னவரு ஓடிப் போயி அத்தைக்காரியோட வாயைப் பொத்துறாரு.
            "யத்தே அழுது ஊரக் கூட்டிப்புடாதே! ஊருக்குள்ள சந்தேகம் வந்துப் போச்சுன்னா சரிபெட்டு வராது. சித்தே சும்மாயிரு!" அப்பிடிங்கிறாரு.
            "பாவி! கொலகாரப் பாவி! எம் புருஷம் செத்ததுக்கு வாய் விட்டு அழ முடியாதபடி பண்ணிட்டீயேடா மாபாவி! நீயி நல்லா இருப்பீயா? ஒங் குடும்பம் வெளங்குமா? ஒன்னாலத்தாம்டா அவரு செத்தாரு! கொன்னுபுட்டீயேடா பாவி!" அப்பிடிங்குது அத்தைக்காரி.
            "பேயாம இரு! ஆனது ஆயிப் போச்சு! இதுலேந்து வெளில வரணும். இப்டி இவரு கெடந்தா எப்படிச் செத்தாரு? ஏஞ் செத்தாரு?ன்ன கேள்வி வரும். நீயும் மாட்டிப்பே! நாமளும் மாட்டிப்பேம்! கொல பண்ணிட்டுக் கூட செயிலுக்குப் போயிட்டு வந்து வாழ்ந்துப்புடலாம். இந்த மாதிரி சங்கதின்னு ஊரு பேச ஆரம்பிச்சுன்னா ஊரு ஒலகத்துல வாழ முடியாது. அதால நாம்ம சொல்றதக் கேளு!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "கொலகார பாவிப் பயலே! இப்டி பொம்ம மாரி ஆட்டி வைக்கிறீயே? நீயி நல்லா இருப்பீயா? ஒனக்கு நல்ல சாவு வருமா? இன்னும் பண்ணுறதுக்கு ன்னா இருக்குன்ன தெரியலீயே?" அப்பிடிங்குது அத்தைக்காரி.
            "இந்தச் சாவ ஊருல எவனும் நம்ப மாட்டாம். பெரிய கயிறு இருந்தா கொண்டா யத்தே!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "பெரிய கவுத்த வெச்சு ன்னடா பண்ணப் போறே?" அப்பிடிங்குது அத்தைக்காரி.
            "இவர்ர தொங்க வுட வேண்டியதுத்தாம். வேற வழியில்ல."
            "ஏம் தொங்குனார்னு ஊருல கேள்வி எழும்புனா ன்னாடா பண்ணுவே?"
            "கொன்னே புடுவேம் ஒன்னய. அதெல்லாம் ஏம் தொங்குனார்ன்னு ஊருகாரனே காரணத்த கண்டுபிடிச்சுச் சொல்லுவாம். நீயே எடுத்துக் கொடுக்காதே."
            "அவர்ரா செத்தவரை மறுபடியும் தொங்க வைக்குறீயேடா பாவி! கொலைக்கு அஞ்ச மாட்டாத பயலாலடா இருந்திருக்கே. ஒங்கிட்ட போயா முந்தி விரிச்சிப் படுப்பேம்?"ன்னு தலையில அடிச்சிக்குறா அத்தைக்காரி.
            "ஒங்கிட்ட கேட்டா வேலைக்கி ஆவாது!"ன்னு சின்னவரே வூடு முழுக்க தேடிப் பார்த்து ‍தோதா கயித்து ஒண்ண எரவானத்துலேந்து கொண்டு வந்து ஒரு முனைய மாமங்காரரோட கயித்துல சுருக்கப் போட்டு, மறுமுனைய உத்திரத்துல தூக்கிப் போட்டு, மாமங்காரது ஒடம்ப கட்டில்ல தூக்கி நிறுத்தி கிணத்துல வாளிய இழுக்குறாப்புல இழுக்குறாரு. ஒடம்பு நேரா நின்னதும் கயித்த அப்படியே பிடிச்சுகிட்டு உத்திரத்தை நோக்கி ஒரு எம்பு எம்பி அது மேல ஏறிகிட்டு மறுமுனை கயித்துல வாகா முடிச்சப் போட்டுட்டு கீழே இறங்கி, கட்டில்ல அப்படியே உடம்பு தொங்குற அளவுக்கு அந்தாண்ட பக்கத்துல இழுத்து வுடறாரு. பாக்குறவங்களுக்கு கட்டில்ல நின்னு சுருக்குப் போட்டுகிட்டு அப்படியே கட்டிலுக்குப் பக்கத்துல தொங்குற மாதிரி இருக்கணும்னு ஒரு யோசனையில செஞ்சு முடிக்கிறாரு.

            முடிஞ்ச பின்னாடி அத்தைக்காரியப் பார்த்து, "யத்தே! நாம்ம அப்டியே கொல்லப் பக்கமா வெளியில போயி ஊருல சகஜமா பேசிகிட்டே மாமங்காரர்ர ஒரு பார்வைப் பாக்க வர்ற மாதிரி, ஊருல ரெண்டு மூணு பேர் அழைச்சிட்டு வர்ரேம். நீயி ஒண்ணும் தெரியாத மாதிரி, சமையலுகட்டுல வேல பாத்துட்டு இருக்குறாப்புல, வேல பாத்துட்டு இரு. யய்யோ மாமா போயிட்டீங்களேன்னு ஊரு காரங்களோட நாம்ம சத்தம் கொடுத்து அழுவேம். அப்ப சமையலு கட்டுலேந்து சத்தங் கேட்டு ஓடி வர்றாப்புல ஓடி வந்துடு. நெலமையச் சமாளிச்சுப்புடலாம். நாம்ம ஊருக்குள்ளப் போயி அழைச்சிட்டு சகஜமா பேசி அழைச்சுப்புட்டு வாரத்துக்கு அர மணி நேரத்துக்கு மேல ஆவும் பாத்துக்கோ!" அப்பிடிங்கிறாரு சின்னவரு அத்தைக்காரியோட காதோரமா குசுகுசுன்னு.
            அத்தைக்காரி ஒண்ணும் பேசல. கயித்துல தொங்கிகிட்டு இருக்கற புருஷங்காரனை வெறிக்கப் பாக்குது.
            "அதாங் சொல்றேம்ல. சமையலுகட்டுப் பக்கம் போ! இஞ்ஞ இருக்காதே. தெருக்கதவு லேசா தொறந்து இருக்கட்டும்"ன்னு தெருபக்க கதவைப் பாக்கறாரு. அது லேசா தொறந்துதாம் இருக்கு. ஆனா அத்தைக்காரி உக்காந்த எடத்தை விட்டு நகர்றாப்புல தெரியல. இவரே அத்தைக்காரிய கக்கத்துல கையைக் கொடுத்து அதைத் தூக்கி இழுத்துகிட்டு சமையலுகட்டுப் பக்கமா கொண்டாந்து வுடுறாரு. வுட்டுப்புட்டு, "சொன்னதெல்லாம் ஞாபவம் இருக்கட்டும். இதெ நல்லபடியா சமாளிச்சபுட்டா ஒன்னய நல்லபடியா வெச்சு எப்டியோ காபந்து பண்ணுவேம் பாத்துக்கோ! கைவுட்டுப்புடுவேன்னு நெனைச்சிப்புடாதே! மாமங்கார்ரேம் செத்ததும் நல்லதாத்தாம் போச்சு!"ங்றாரு சின்னவரு. அதுக்கும் அத்தைக்காரிகிட்ட எதுவும் தெரியல. அது பேயடிச்ச மாதிரி அப்படியே அது சயைமலுகட்டுப் பக்கமா உக்காந்தது உக்காந்தபடி உக்காந்திருக்கு.
            "சூதானமா இருந்தாகணும். சொதப்பிடப்படாது. சொதப்புன்னா ரண்டு பேருந்தாம் மாட்டிக்குவேம். ரெண்டு பேருக்குத்தாம் அசிங்கம். புத்தியா இருந்துக்கணும். அதாங் நல்லது. இதுலேந்து வெளியாகணும்!"ங்றாரு சின்னவரு. சொல்லிப்புட்டு இதுக்கு மேல தாமசம் பண்ண முடியாதுன்னு கொல்லைப்பக்கம் வழியா கொல்லைக்கதவ திறந்துகிட்டு சுத்திலும் முத்திலும் ஒரு பார்வையைப் பாத்துகிட்டு கொல்லைக்காட்டு வழியா யாருக்கும் தெரியாம வெளியில போறாரு.
            வெளியில போன சின்னவரு மாமங்காரரு வேலைப் பாக்குற எடத்துக்கு ஒண்ணும் தெரியாத ஆளு போல போவுறாரு. அங்கப் போயி வூட்டுக்கு முன்னாடி நின்னுகிட்டு, "மாமா! மாமா!"ன்னு சத்தம் கொடுக்குறாரு. இவரு சத்தம் கேட்டு வேலை பாத்துகிட்டு இருக்குற ஆளுங்க, "யாரது கிட்டுவா? மாமா இப்பதாம் சித்த நேரத்துக்கு மின்னாடி ஒடம்புக்கு ஆகலன்னு வூட்டுப்பக்கம் கெளம்பிப் போனாரு!"ன்னு பதில் குரல் கொடுக்குறாங்க. இந்தப் பதில் சின்னவரோட மூளையில நல்லா வேலை செய்யுது. வேக வேகமா வேலை பாத்துகிட்டு இருந்த ஆட்கள் பக்கமா ஓடியாந்து, "அடப் பாவிகளா! ஒடம்புக்கு முடியலன்னு கெளம்புனாரா? யாருடா தொணைக்குப் போனது?" அப்பிடிங்கிறாரு.
            "யாரும் போவலயே கிட்டு! என்னவோ ஒடம்பு வெடவெடன்ன வருது. நீஞ்ஞ வேலயப் பாருங்க. நாம்ம வூட்டுக்குக் கெளம்புறேம்ன்னு சொல்லிட்டுக் கெளம்புனாரு. யாரும் தொணைக்கு வர்றணுமான்னு கேக்கத் தோணலேயே கிட்டு!" அப்பிடிங்கிறாங்க வேலை பார்க்குற ஆளுங்க.
            "ஒடம்புக்கு முடியலன்னு சொன்னா யாராச்சிம் ஒருத்தராவது தொணைக்குப் போயி கொண்டு வுட்டுப்புட்டு வாரணும். இப்டியா அலட்சியமா இருக்குறது? மனுஷம் வூடு போயிச் சேர்ந்தாரா? வழியில எங்காணும் வுழுந்தாரான்னு யாருக்கு ன்னா தெரியும்? ஒண்ணு கெடக்கு ஒண்ணு ஆயிப் போனா யாருடா என்னாடா பண்றது? ஒரு வேல விசயமா மாமா கூட பேசலாம்னு வந்தா இப்பிடி ஒரு குண்டத் தூக்கிப் போடுறீங்களேடா மட சாம்புராணிப் பயலுகளா? நாம்ம ஒரு ஆளு இல்லேன்னா இப்பிடித்தாம். நீஞ்ஞ ஒரு பயலும் அந்தாண்ட இந்தாண்ட நகர மாட்டீங்க. நாமளே போயிப் பாக்குறேம்!" அப்பிடின்னு கெளம்ப எத்தனிக்குறாரு சின்னவரு.
            "யய்யா கிட்டு! சித்தே இரு. வூட்டுக்காரங்ககிட்ட சொல்லிட்டு இஞ்ஞ ரெண்டு பேராவது வர்றேம்!" ன்னு ரெண்டு ஆளுங்க வூட்டுக்காரரைத் தேடிகிட்டு கொல்லைப் பக்கமா ஓடிப் போயிச் சொல்லிட்டு வருது.
            வர்றப்ப ரெண்டு பேரா வர்றதா சொன்ன ஆளுங்க மூணு பேர்ரா வர்றாங்க. சின்னவரு இதைத்தானே எதிர்பார்த்தாரு. அவங்கள அழைச்சுகிட்டு வேக நடையில போறாரு. இவரு முன்னால நடக்க அவங்க இவரோட நடைக்கு ஈடு கொடுக்க முடியாம ஓட்டமும் நடையுமா ஓடி வர்றாங்க. நாலு தெரு தள்ளி இருக்குற மாமாங்காரரு வூட்டுல நொழைஞ்சதும், "யத்தே! மாமா!"ன்னு ஒப்புக்கு ஒரு குரல கொடுத்துப்புட்டு, "உள்ள இருக்காங்க போலருக்கு. கதவு லேசா தொறந்துதான இருக்கு! வாங்க உள்ள போயிப் பாப்பேம்! மாமாக்கு என்னாச்சோ ஏதாச்சோ? எப்பிடிருக்கோ?"ன்னு அவங்களையும் அழைச்சுகிட்டு திண்ணைப் படிகட்டுகள்ல ஏறி உள்ள நுழையுறாரு சின்னவரு.
            அடுத்துப் பண்ண வேண்டிய சங்கதிங்க எல்லாம் சின்னவரோட மனசுல தயாராத்தானே இருக்கு. சுத்துக்கட்டுல முத்ததுக்கு எதித்தாப்பு தென்னண்டையில கட்டிலு பக்கமா போறவரு, "யய்யோ மாமா!"ன்னு அடிவயித்துலேந்து குரலு எடுத்துக் கொடுக்குறாரு. அதைப் பாத்துப்புட்டு மத்த மூணு பேரும், "யய்யயோ மாமா! போயிட்டீங்களா!"ன்னு மேலும் குரல எடுத்துக் கொடுக்குறாங்க. ஆளாளுக்கு தலையிலயும் மாருலயும் அடிச்சிகிட்டு அழ ஆரம்பிக்கிறாங்க.
            "எலே அழுதுட்டு இருந்தா சரிபெட்டு வராது. நீயி போயி ஊருல நாலு பேர்ர கூப்புட்டு வா! நீயி உத்தரத்துல ஏறி கவுத்த அவுறு."ன்னு சொல்லிகிட்டு இருக்கிறப்பவே சின்னவரு மனசுக்குள்ள இன்னும் அத்தைக்காரி ஏம் வரலேங்ற சந்தேகம் தட்டுது. உடனே சின்னவரு, "நாம்ம வூட்டுக்குள்ளாரப் போயி யத்தே எங்கண்ணு பாக்குறேம்!"ன்னு சொல்லிட்டு சமையலுகட்டுப் பக்கம் ஓடுறாரு. சயைமலுகட்டுப் பக்கம் ஓடிப் போயி சமையலுகட்டுக்குள்ள பாத்தா...
*****


10.10




            காலம்.
            இலக்கியம்.
            காலம் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. கடிகாரத்தைக் கவனித்தால் டக் டக் என்ற சத்தம் கேட்கிறது. இதயத்தில் காது வைத்துக் கேட்டால் அல்லது ஸ்டெத்தாஸ்கோப்பை வைத்துக் கேட்டால் லப் டப் என்கிறது. அது காலத்தின் சத்தம். சத்தத்தோடு காலத்தைக் கடந்து கொண்டோ, கடத்திக் கொண்டோ இருக்கிறது கடிகாரம். சத்தத்தோடு உயிர்த்துடிப்பு முடிய வேண்டிய காலத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது இதயம். சத்தம் காலத்தின் கணக்கீடு. சத்தம் நின்றால் எல்லாம் நின்று விடுகிறது. காலம் நிற்காது. கணக்கிடப்பட வேண்டிய ஒரு மனிதர் கணக்கிட இல்லாமல் போகிறார் அல்லது எண்ணிக்கையில் ஒன்று குறைகிறார்.
            காலம் ஒவ்வொன்றாக சாகடிக்க நினைக்கிறது. இலக்கியம் காலம் சாகடிப்பதை உலாத்தி விட நினைக்கிறது. கண்ணகியின் அறப்பாட்டு அப்படித்தான் உலவிக் கொண்டிருக்கிறது. பாண்டவர்களும், கெளரவர்களும் அப்படித்தான் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இராமனது வில் மறைந்திருந்து அப்படித்தான் வாலியின் நெஞ்சைப் பதம் பார்க்கிறது. ஏகலைவனின் கட்டைவிரல் அறுந்து தொங்குகிறது.
            காலம் எதையும் கணக்கில் வைத்து அழிப்பதில்லை. அது அழிக்கும். அது அழிப்பதற்கு நாம் ஒரு காலக்கணக்கைத் தருகிறோம். மனிதர் தரும் இந்தக் காலக்கணக்கு நாவலாசிரியருக்குப் பிடிப்பதில்லை. காலத்தின் கணக்குப்படி தர்மம் முடிந்து விட்டதாக, அதர்தம் தொடங்கி விட்டதாக ஒரு தவறான கணக்கு தரப்படும். அதை நாவலாசிரியர் நிராகரிக்கிறார். காலத்தில் அப்படி எந்தக் கணக்கும் இல்லை. காலத்திற்குத் தெரிந்தது ஆக்குவதும் அழிப்பதும்தாம். அது ஆக்கும், அழிக்கும். காரணத்தை மனிதர்கள் கற்பிப்பார்கள்.
            எது நியாயம்? எது நேர்மை? எது தர்மம்? எது அறம்? அப்படியெல்லாம் எதுவுமில்லை. மனிதர்கள் ஆக்குவார்கள் அல்லது ஆகுவார்கள். அழிப்பார்கள் அல்லது அழிவார்கள். விருப்பமான ஆக்கத்தை நேர்மை என்றோ, விருப்பமான அழிவை நியாயம் என்றோ பிரஸ்தாபிக்கலாம். அது யாருடைய விருப்பம்? அது யாருக்கான விருப்பம்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு நேர்மை இருக்கிறது. ஆளாளுக்கு வேறுபடும் நியாயம், நேர்மை, தர்மம், அறம் இருக்கிறது.
            உயிரை எடுப்பது சட்டத்தின்படி சரியாக இருக்கலாம். உயிர்நேயத்தின்படி தவறாக இருக்கலாம். எந்தப் பக்கம் நிற்பது? எதற்காகப் பேசுவது? காலந்தோறும் நாம் சரிசெய்து கொண்டே இருக்கப் போகிறோம். ஒவ்வொரு சரிசெய்தலுக்கும் உள்ளே தவறான ஒன்று நடந்து கொண்டே இருக்கப் போகிறது. அதற்கென அதற்கேற்றப்படி புதிய நியாயங்கள், புதிய தர்மங்கள் பிறந்து கொண்டே இருக்கப் போகின்றன. புதிது புதிதாக மனிதர்கள் பிறந்து நியாயங்களையும், தர்மங்களையும் உருவாக்கிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். இன்று தவறாகத் தெரிந்த நியாயமும், தர்மமும் நாளைச் சரியாகத் தெரியலாம். இன்று சரியாகத் தெரிந்த நியாயமும், தர்மமும் நாளைத் தவறாகத் தெரியலாம். மனிதர்கள் மனநிலைகளால் அதை மாற்றிப் பிடிப்பார்கள் மற்றும் மாற்றிச் செய்வார்கள். ஒருவர் எழுதிய நியாயத்தை இன்னொருவர் மாற்றுவார். இன்னொருவர் எழுதிய நியாயத்தை மற்றொருவர் மாற்றுவார். அவரவர்க்கு ஒரு நியாயம், ஒரு தர்மம் தேவைப்படுகிறது.
            அவரவர் எத்தனை நியாயங்களை, தர்மங்களை வேண்டுமானாலும் தோற்றுவித்துக் கொள்ளுங்கள். காலத்திற்குத் தெரிந்த ஒரே நியாயமும், தர்மமும் அழிவுதாம். அதை அது இறுதியில் செய்யும். அதுவரை நமது நியாயங்களை உலவ விடலாம்.
            இப்படியாக,
            இவ்வாறாக,
            நாவலின் முதல் அத்தியாயத்தை நாம் வெற்றிகரமாக நிறைவு செய்கிறோம். நாவலின் இரண்டாவது அத்தியாயத்தை நாளைத் தொடங்குவோம்.
            காலத்தைக் கட்டுடைக்க நினைக்கும் நாம் காலத்தின் பிடியில் சிக்குகிறோம்.
*****


29 Oct 2019

சிலையா சமைஞ்சவரு!



செய்யு - 252
            முழு பூசணிக்காய சோத்துல மறைக்க முடியாதும்பாங்க. அதைத் துண்டு துண்டா போட்டு குழம்புலத்தாம் மறைக்க முடியும்பாங்க. வேலங்குடி சின்னவரு பண்ண விசயத்தை யோக்கியத்தால மறைக்க முயலல. அவரோட யோக்கியந்தாம் ஊரறிஞ்ச ரகசியமாச்சே. உறவு மொறைகள சொல்லிச் சொல்லித்தாம் யாருக்கும் எந்த சந்தேகமும் வராதபடி மறைச்சாரு. யத்தே யத்தேன்னு கொழந்தை போல கொஞ்சுறவன் அத்தைகிட்ட தப்பா நடந்துப்பான்னு யாரு நெனைக்க முடியும் சொல்லுங்க. ஆனா தப்பு இருக்குப் பாருங்க அது ரொம்ப நாளு மறைஞ்சிருக்காது. அசந்தர்ப்பமா அதுவா ஒரு நாளு வெளிச்சத்துல வந்து மாட்டிக்கும். வயித்துப்புள்ளகாரி வயித்த போலத்தாம் அது. மொத ரெண்டு மாசத்துல வயித்துல எந்த மாத்தமும் தெரியாது. போவப் போவ வயித்துல கொஞ்சம் கொஞ்சமா மாத்தம் வந்துகிட்டேதானே இருக்கும். வயிறும் வளந்துகிட்டே இருக்கும். தப்பும் அப்படித்தாம். சின்னதா ஆரம்பிச்சு அது பெரிசா வளந்துகிட்டே போவும்.
            சின்னதா தப்புப் பண்ணணும்னு ஆசை கெளம்பி பெரிசா தப்பு பண்ணணுங்ற ஆசை தானாவே வந்துடும். சின்ன சின்ன தப்புல மாட்டிக்காத தெம்பு இருக்கே, அது பெரிசா தப்பு பண்ணுனாலும் மாட்டிக்க மாட்டோம்ங்ற தெனவெட்டுல கொண்டு போயி விட்டுடும். அதுல பல விசயங்கள கவனிக்க மனசு மறந்துப் போயிடும். அப்படி முக்கியமான விசயமே மறந்து போயி அதுல கோட்டை விட்டுத்தாம் தப்புப் பண்றவேம் மாட்டிப்பாம்.
            ஆரம்பத்துல மாமங்கார வூட்டக்குள்ள யாருக்கும் தெரியாம கொல்லைப் பக்கமா நோழையுறப்ப வாசக்கதவு அந்தக் கதவுன்னு எல்லாத்தையும் தாழ்ப்பாளு போட்டு சமையல்கட்டுக்குக் கீழண்டையில இருக்குற அறைக்குள்ள அங்கயும் தாழ்பபாள போட்டுகிட்டுத்தாம் சல்லாபிச்சுகிட்டுக் கெடந்தாங்க சின்னவரும் அத்தைக்காரியும். போகப் போக ஒரே எடத்துல ஒரே மாதிரியா செஞ்சு அலுத்துப் போச்சோ என்னவோ? வூட்டுல ஒரு எடம் பாக்கி இல்லாம அங்கங்க கொஞ்சுறதும் கொலாவுறதுமா சல்லாபிக்க ஆரம்பிச்சிட்டாங்க. வாரத்துல ஒரு நாளு, ரெண்டு நாளுன்னு இருந்த பழக்கம் சின்னவருக்கு நித்தமும்னு ஆக ஆரம்பிச்சுச்சு. அத்தைக்காரி இவருகிட்ட ஒரு அளவா நிறுத்திப்போம்னு கெஞ்சிப் பாக்குறா. இவர கேட்குற பாடாயில்ல. ஆசைக்கு என்ன அளவிருக்குன்னு இஷ்டத்துக்கு ஆட்டத்தைப் போடுறாரு.
            பல நாளு திருடன் ஒரு நாளு அகப்படுவாங்ற கணக்கா ஒரு நாளு சின்னவரு மாட்டுனாரு. மாட்டுனா திருடன்தானே சாவணும். வூட்டக்காரன் செத்த கொடுமை நடந்ததுதான் வேதன.
            அன்னிக்கு வேலைக்குப் போன மாமங்காரரு ஒடம்பு வெடவெடன்னு வருதுன்னு வூட்டுக்காரங்கள கூப்புடுறாரு. "யய்யா! ஒடம்புக்குச் சொகமில்லீங்க! படபடன்னு இருக்கு. வேலைக்காரங்க நம்ம ஆளுங்க வேலய பாப்பாங்க. நமக்கு இன்னிக்கு ஒரு நாளு மாப்பு கொடுங்க. இன்னிக்கு நமக்கு சஞ்சாரம் வாணாம். வூட்டுக்குக் கெளம்புறேம்ங்க!"ன்னு சொல்லிட்டுக் கெளம்பிட்டாரு.
            வூட்டுக்கு வந்து படியேறி லேசா சாத்தியிருக்கிற ஒத்தக் கதவ தெறந்துகிட்டு உள்ள நொழையுறாரு மாமங்காரரு. இந்த சுத்துக்கட்டு ஓட்டு வீடெல்லாம் தெருவுலேந்து மூணு அடி, நாலு அடி, அஞ்சு அடி உயரத்துலன்னு கணக்கு வழக்கில்லாம உசரத்துல  இருக்கும். ஊருக்குள்ள வெள்ளந்தண்ணின்னு வந்ததாலும் வூட்டுக்குள்ள நொழையக்கூடாதுன்னு அப்படிக் கட்டியிருப்பாங்க. அதால வூட்டுக்குள்ள நுழையுறத்துக்கு ஏறணும்னா நாலு படி, ஆறு படின்னு படி ஏற வேண்டியிருக்கும். வழக்கமா மாமாங்காரரு ஏறுற படிகள்னாலும் அன்னிக்கு ஒடம்பு முடியாம ஆறு படி ஏறி கதவ தொறக்குறதுக்குள்ள அவருக்கு மேலு மூச்சு, கீழ மூச்சு வாங்க போதும் போதும்னு ஆவுது. வழக்கமா தெருக்கதவ சாத்தித் தாழ்ப்பாளு போடுற சின்னவரும் அத்தைக்காரியும் ஆசை நெனைப்புலயோ, ஏதோ நெனைப்புலயோ தெரியல அதெ மறந்துட்டாங்க. மாமங்காரரு உள்ள நொழையுறதுக்கு தடையில்லாம அது கொஞ்சம் வசதியாப் போச்சுது.
            வழக்கமா உள்ள நொழையுற மாமங்காரரு, "ஏ ஆயி!"ன்னு குரலு கொடுத்துட்டுத்தாம் உள்ள நொழைவாரு. அப்படி நுழையுறப்ப அவரு கதவத் தொறக்குற சத்தமும் கிறீச்சுன்னு நல்லாவே கேட்கும். அன்னிக்கு ஒடம்புக்கு முடியாம போனதுல அலுங்காம கொள்ளாம நளியாம கொள்ளாம கதவத் தொறந்து அடி மேல அடி வெச்சி எடப்பக்கமா இருக்குற சுவத்தைப் பிடிச்சிகிட்டே நுழைஞ்சி உள்ள வராரு. உள்ள வந்து சுத்துகட்டுல தென்னண்டைப் பக்கம் போட்டிருக்குற கட்டில்ல உக்காருராரு. உக்காந்த பின்னாடித்தாம், "ஏ ஆயி! நெஞ்சு படபடன்னு வருது! தண்ணி கொண்டு வா ஆயி!"ன்னு சொல்லிகிட்டே முத்தத்தப் பாக்குறாரு.
            முத்தத்தப் பார்த்தா...
            முத்தத்துல சின்னவரும் அத்தைக்காரியும் ஒடம்புல ஒட்டுத் துணியில்லாம பொறந்த மேனிக்குக் கெடக்குறாங்க. நல்ல வெயிலு நேரம். ரெண்டு பேரு ஒடம்பு வியர்த்து விறுவிறுத்து கரும்பு ஒடம்புக்கும் அதுக்கும் பளபளன்னு மின்னுது.  அந்த வூட்டுல எங்ககெங்கேயோ படுத்துக் கெடந்து அன்னிக்குன்னு பாத்து சின்னவருக்கு முத்தத்துல படுத்துக் கெடக்கணும்னு ஆசெ வந்ததுல ரெண்டும் முத்தத்துல அப்படிக் கெடக்குதுங்க, அதுவும் பொட்ட வெயிலுன்னு கூட பார்க்காம.
            இதெப் பார்த்த மாமங்காரரு, "ம்ஹா!"ன்னு மூச்ச இழுத்து வுடுறாரு. மாமங்காரரப் பார்த்த சின்னவரும், அத்தைக்காரியும் அரக்கப் பரக்க எழுந்திரிச்சவங்க சமையக்கட்டுப் பக்கத்துல இருக்குற அறையில கெடக்கற துணியை எடுக்க ஓடுறாங்க. மாமங்காரரு எடத்தை விட்டு எழும்பல.
            அவசர அவசரமா துணியை உடுத்திக்கிட்டவங்களோட ஒடம்பெல்லாம் நடுங்குது. "யய்யோ ந்நல்லா மாட்டிக்கிட்டேம். முத்தத்துல வாணாம் வாணாம்னு சொன்னேம்ல. கேட்டீயா? பாத்தீயா! எம்மட மானம் போச்சி. கொல பண்ணிப் போடப் போறாம் மனுஷம். எம்மட வாழ்க்கப் போச்சி. அசிங்கம் பண்ணப் போறாம். இஞ்ஞயே இப்டியே தொங்கிட்டா தேவலாம்!"ன்னு அழுவுது அத்தைக்காரி.
            "வெசயம் வெளில தெரிஞ்சா ஒனக்கும் அசிங்கம். நமக்கும் அசிங்கம். பேயாம இரு. நாம்ம ஒரு வழிப் பண்றேம்!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "இனுமே என்ன வழியப் பண்ணுவே! பண்றதெல்லாம் பண்ணிப்புட்டே!தலைக்கு மேல வெள்ளம் போயாச்சி!"ன்னு உடம்பெல்லாம் நடுங்குது அத்தைக்காரிக்கு.
            "அதாங்! அதாங்! தலைக்கு மேல வெள்ளம் போனா சாண் போனா ன்னா? மொழம் போனா ன்னா? கதயெ முடிச்சிடறேம்!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "அட மாபாவி! ஆசைக்கி கையப் பிடிச்சன்னு பாத்தா... கொல பண்ணப் போறேங்றீயடா எமகாதகா! ஏம்டா ஒம் புத்தி இப்பிடிப் போவுது? ஒம் வாழ்க்கயயும் சீரழிச்சி, எம்மட வாழ்க்கயும் சீரிழிச்சி, அவரு ன்னடா தப்பு பண்ணாரு? அவரப் போயிக் கொல்லப் போறேங்றீயேடா துரோகீ!"ன்னு அத்தைக்காரி சீறுது.
            "பேயாம இரு! பேசுறதுக்க நேரமில்ல!"ன்னு வேட்டியை அரையில முடிஞ்சு கட்டுனவரு பக்கத்தால இருக்குற சமையலு கட்டுல நொழைங்சி நல்ல வெறவு கட்டையா ஒண்ண எடுத்துக்கிறாரு. அவரு பின்னாடியே ஓடி வந்த அத்தைக்காரி அவரு காலப் பிடிச்சி, "இந்த ஒரு தப்போட போவட்டம்டா மாபாவி! அவரு எந்த தண்டனெ கொடுத்தாலும் நாம்ம ஏத்துக்கிறேம். நீயி இப்டியே கொல்லப் பக்கமா ஓடிப் போயிடா மாபாவீ! அவரு ஒரு சின்ன ஈ, எறும்புக்குக் கூட துரோகம் நெனைக்காத உத்தமருடா! சொன்னா கேளுடா! இத்தோட வுட்டுடா! ஓடிப் போயிடுடா மாபாவீ!"ன்னு கெஞ்சுது அது.
            "வெளியில விசயம் தெரிஞ்சா எம்மட மானமுல்ல போவும்!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "ஏம்டா இந்த மான மருவாதியில்லாம் பாத்துதாம் எம் மேல கைய வெச்சியாடா?" அப்பிடிங்குது அத்தைக்காரி.
            "நாம்ம கைய வெச்சேம் செரி! ஒங் கையி பூப்பறிக்க போச்சுதா? தட்டி விட வேண்டியத்தான்னே? அப்பல்லாம் கட்டிப் பிடிச்சுப்புட்டு ன்னா கேள்வி கேக்கற நம்பள? மருவாதியா கால விடு. இல்லே ஒம் தலையில ஒரே போடா போட்டுட்டுப் போயிட்டே இருப்பேம்."ங்றதோட வெறகுக் கட்டைய அத்தைக்காரி தலையில போடுறதுக்கு ஓங்குறாரு சின்னவரு. அவரு ஓங்குன வேகத்துல பயந்து காலை விடுது அத்தைக்காரி.
            வேக வேகமா சுத்துக்கட்டுல வெறகுக் கட்டையோட நொழையுறாரு சின்னவரு. அவர பின்னாடியே அத்தைக்காரியும் எழுந்திரிச்சி ஓடி வருது. அங்க உக்காந்தது உக்காந்தபடியே வெறிச்சிப் பாத்துகிட்டு இருக்காரு மாமங்காரரு. அவர்ர பாக்குறதுக்கு அப்படியே செலையா சமைஞ்ச மாதிரி இருக்குது. ஒரு மனுஷன் பாக்கக் கூடாத காட்சியையெல்லாம் பார்த்தா செலையா சமைஞ்சிடுவாங்றது உண்மைத்தாம் போலருக்கு.
*****

10.0



            அந்தந்த நேரத்துக்கு நடப்பது என்ற ஒன்று இருக்கிறது. அதை யாரும் எதுவும் செய்ய முடியாது. எழுத்து திருத்த முயலலாம். விளைவை மாற்றி எழுத முயற்சிக்கலாம். வேடிக்கைப் பார்க்கும் உரிமை மட்டும் அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆதலால் எழுத்து அதைக் காத்திரமாக பதிவு செய்யலாம். உணர்ச்சிகரமாக மீண்டும் அது நிகழக் கூடாது என சத்தமிடலாம்.
            எழுத்து அதுவரை மனதில் உருவாக்கி வைத்திருந்த தாக்கமெல்லாம் அந்த ஒரு நொடியில் உடைந்து போகலாம். மனிதன் எந்த நொடியிலும் எப்படி வேண்டுமானாலும் மிருகமாகலாம். மிருகமானவன் எந்த நொடியிலும் அதற்கு நேர்மாறாகவும் திசை மாறலாம்.
            ஒரு நொடி பின்னோக்கிப் பார்க்க வைக்கவோ, முன்னோக்கி பார்க்க வைக்கவோ செய்வதைத் தவிர எழுத்தால் ஆகப் போவது எதுவுமில்லை.
            நடந்த ஒன்றுக்கு சாட்சி எழுத்து. அதன்பின் எழுத்து செய்தி ஆகலாம். வாத, பிரதிவாதங்கள் ஆகலாம். நீதிபதியின் கரங்களில் தீர்ப்பாகலாம். நிகழ்ந்து விட்ட ஒன்றை எழுத்து என்னதான் செய்ய முடியும்?
            நிகழ்ந்து விட்ட ஒன்றை எழுத்து மீண்டும் நிகழாமல் தடுக்கும் என்பீர்கள். உலகில் எத்தனையோ கொலைகள் நிகழ்ந்து விட்டன. தற்கொலைகளுக்குக் குறைச்சல் இல்லை. வன்முறைகள் எத்தனை எத்தனை என்று எண்ணிச் சொல்லுங்கள். கொலைகள் நின்று விட்டதா? தற்கொலைகள் நின்று விட்டனவா? வன்முறைகள் முடிந்து விட்டதா? அவையினைத் தொடர்கதைளாக்கி எழுத்து எழுதிக் கொண்டே இருக்கிறது. எழுதும் ஆட்கள் மாறலாம். விசயம் அதேதான். எழுத்து எழுதிக் கொண்டே இருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் எழுத்து களைப்படைந்து அதை எழுதுவதை நிறுத்த முடியாது.
            எழுத்தின் சோக நிழல் படிவதை இப்போதாவது உணர்கிறீர்களா? நீங்கள் உலகை மாற்றப் பிறந்தவர் என்ற எண்ணத்தை இப்போதாவது கைவிடுங்கள். அப்படி நினைத்தவர்களால் உலகில் நிகழ்த்தப்பட்ட உயிர்ப்பலிகள் அநேகம். மனிதகுல நன்மைக்கு என்ற வார்த்தையைத் தயவு செய்து உச்சரிக்காதீர்கள். அந்த வார்த்தை முடை நாற்றமெடுக்கிறது. ஒரு ‍பெருங்கூட்ட மனித குலத்துக்காக சிறுகூட்ட மனித குலத்தை அழித்தொழிப்பதுதாம் மனிதகுல நன்மையா என்ற கேள்விக்கு முன் நீங்கள் வாயடைத்துப் போவீர்கள்.
            எழுத்து தவறானதிலிருந்து சரியானதைப் பார்க்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களை உத்தமர் என்று காட்டி ஏமாற்றாதீர்கள். உங்களின் அயோக்கியத்தனங்கள்தாம் உங்களை உத்தமராகக் காட்டுகிறது என்பதை உணருங்கள். இவ்வளவு கெட்டவராக இருந்தவர் இவ்வளவு நல்லவராக மாறி விட்டாரே என்பதற்கு அல்லவா உலகம் மூக்கில் மேல் விரலை வைத்து ஆச்சரியப்படுகிறது என்பதை அறியுங்கள்.
            நீங்கள் நல்லவர் என்பதற்காக தயவுசெய்து பெருமை கொள்ளாதீர்கள். உங்கள் நற்பெயரில் புதுப்புது கெட்டவர்களை உருவாக்குகிறீர்கள். அப்படி உருவாக்கி  உங்கள் பெருமையில் நீங்கள் கெட்டவர்களை நசுக்குகிறீர்கள். நல்லவர் என்ற கருத்தாக்கம் பெருபான்மையோ, கெட்டவர் என்ற கருத்தாகம் சிறுபான்மையோ கிடையாது. நீங்கள் நல்லவர் எனும் போது உங்களிடம் இருக்கும் கெட்டவரைச் சாமர்த்தியமாக மறைக்கிறீர்கள். ஒருவரைக் கெட்டவர் எனும் போது அவரிடம் இருக்கும் நல்லவரை காணாமல் போகச் செய்கிறீர்கள்.
            நீங்கள் நல்லவருமில்லை. கெட்டவருமில்லை. இரண்டுமாக சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல இருக்கிறீர்கள். உங்களைக் கெட்டவர் என்ற சொல்லிக் கொள்வதில் வெட்கம். அதில் ஒரு அசிங்கம் பார்க்கிறீர்கள். நீங்கள் எப்படி கெட்டவராக இல்லாமல் இருக்க முடியும்? நீங்கள் குவித்து வைத்திருக்கும் பணமதிப்பு எவ்வளவு கெட்டவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது தெரியுமா? உங்களின் ஒவ்வொரு துளி கூடுதல் பண மதிப்பாலும் துளிதுளியாய் கொள்ளையர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
            எழுத்து என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்! நீங்கள் எழுத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். எங்கள் புலவர்கள் உங்களைப் பாடுவார்கள். நீங்கள் பராக்கிரமர் என்று புகழ்வார்கள். நீங்கள் எழுத்துகளுக்குப் பொற்காசுகள் தருவீர்கள். உங்கள் காசுகளால் எழுத்து உங்கள் செவியை நிறைக்கும் பாடலாக ஒலிக்கும், காற்றைக் கிழிக்கும். பேனர்களாய், பிளக்ஸ்களாய் வாசகங்களாய்ச் சிரிப்பீர்கள். எழுத்து கைகட்டி உங்களின் நாமகரணங்களுக்காக வேலை பார்க்கும்.
            ஆனால்...
            விதி
            விதியைப் பாருங்கள்!
எழுத்து ஒரு நாள் சம்மட்டியால் அடிக்கும். தயவுசெய்து எழுத்தைக் குறை சொல்லாதீர்கள். ஒவ்வொரு புகழ்ச்சிக்கும் சமமான இகழ்ச்சி உண்டு. நீங்கள் எந்த எழுத்தைக் கொண்டு உங்களைப் புகழ வைத்தீர்களோ, அதே எழுத்தைக் கொண்டு இன்னொருவர் உங்களை இகழ வைப்பார். அது எழுத்தின் பிழையன்று. எழுத்து எல்லாருக்கும் சேவை செய்யும், துப்பாக்கி யார் சுட்டாலும் சுடும் என்பது போல.
            எழுத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அது கைப்பாவையாக இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் நாம் நாவலுக்குள் நுழைந்து விட்டதையும் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஒரே அரிசியில் இட்டிலி சுடுவதைப் போல, தோசை வார்ப்பதைப் போல, இடியாப்பம் போடுவதைப் போல, சோற்றை வடித்துக் கொட்டுவதைப் போல எப்படி வேண்டுமானால் எழுத்துகளைச் சேர்த்து சமைக்கலாம். இடியாப்பமும், துவையலும் பொருந்தாதைப் போல இந்த உவமை அவ்வளவு பொருத்தமில்லைத்தான். எழுத்தின் மூலம் இதை வாசிப்பவர் வருங்காலத்தில் பொருத்தமான உவமையைக் கண்டுபிடிக்காமல் இருக்க மாட்டார். எழுத்து வருங்கால சாத்தியம் உள்ளது மற்றும் கொண்டது.
            எழுத்தின் முன்னால் ஒருவர் துரோகியாகலாம், வீரர் ஆகலாம், பழிவாங்கலாம், புகழ் ஏணியில் ஏறலாம். 
            இந்த எழுத்துதானே நம்மை வழிநடத்துகிறது என்பதை நாவலாசிரியர் வாசகர்களுக்கு அழுத்தமாகப் புரிய வைக்க விரும்புகிறார். அதற்காக இவ்வளவு அத்தியாயப் பத்திகளை நாவலைத் துவக்குவதற்கு முன் எடுத்துக் கொண்டதற்காக மன்னிப்புக் கோருகிறார். அந்த மன்னிப்பைக் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் வாசகர்களின் சுதந்திரம்.
*****

28 Oct 2019

அத்தைக்காரியின் புருஷங்காரன்!



செய்யு - 251
            ஆவணி அவிட்டத்து அன்னிக்கு ஆரம்பிச்ச அந்த உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ற வேலையைத் தொடர்ந்து பண்ண ஆரம்பிக்கிறாரு வேலங்குடி சின்னவரு. மூணு வேள சாப்பாடும் அங்கதான்னு ஆகிப் போவுது அவருக்கு. எப்படியோ பையன் திருந்துனா போதும்னு நெனைக்கிறாரு இவரப் பத்தித் தெரியாத அந்த மாமங்காரரு.
            வேலங்குடி சின்னவரு அத்தைக்காரிகிட்ட கொழைஞ்சி கொழைஞ்சிப் பேசுற பேச்சென்ன? நின்னு வழியுற வழியலு என்ன? எதையும் தப்பா நெனைக்கல மாமங்காரரு. அத்தைக்காரியும் அப்படியே கொழைஞ்சிப் பேசுறதையும், வழியுறதையும் சின்னவரைத் திருத்துற மார்க்கமா பாக்குறாரு அவரு. எப்படியோ பையன் திருந்துன்னா அது நல்ல விசயந்தானேன்னு பாக்குறாரு அந்த நல்ல மனுஷன். அத்தோட நல்ல பொண்ணா பாத்து சின்னவருக்கு நாமத்தாம் முன்னாடி நின்னு கலியாணத்த பண்ணி வைக்கணும்னு பொண்டாட்டிகாரிகிட்ட வேற சொல்றாரு மாமங்காரரு.
            ஊரு சுத்திகிட்டு, பொம்பளைங்கப் பின்னாடி பொறுக்கிகிட்டு இருந்த சின்னவரு அத்தைக்காரி ஒரு பொம்பளையே போதும்னு இப்போ ஒழுங்கா வேலைக்குப் போக ஆரம்பிச்சாரு. அது ஏங்கிறத கதையைப் பின்னாடிப் படிச்சீங்கன்னா ஒங்களுக்கே தெரியும். வேலையை அவரு போல விடுவிடுன்னு செய்யுறதுல அவர அடிச்சிக்க ஆளில்லங்ற சங்கதி நாம்ம அறிஞ்சதுதானே. அதால இவரு வேலைக்குக் கிளம்புனா நானு நீயின்னு இவர்ர ஆளா வெச்சி வேலை கொடுக்க ஆளுங்க தயாரா இருக்குங்க. ஆளு வேலையை ஆரம்பிச்சார்ன்னா அப்போ ஒரு நாளுல்ல முடியுற வேலையை அரை நாளுல்ல அடிச்சி முடிச்சிடுவாரு. அடிச்சி முடிச்சிட்டு அவ்வளவுதான்னு கெளம்பிடுவாரு. வேலைதாம் அன்னிய பொழுத்துக்கு முடிஞ்சிட்டேன்னு வேலை கொடுக்குறவங்களாலும், வூட்டக்காரங்களாலும் ஒண்ணும் சொல்ல முடியாது. வேலையைத்தாம் அரை நாளுல்ல முடிச்சிட்டாரே. மிச்ச அரை நாளு சும்மா போகக் கூடாதுல்ல! அத்தைக்காரியப் பாக்க வந்திடுவாரு. மாமங்காரரு வேலைக்குப் போயிருப்பாரு இல்லியா. அத்தைக்காரி வூட்டுல தனியாத்தாம் இருப்பாங்க. ரொம்ப வசதியா போயிடுச்சு சின்னவருக்கு.
            சின்னவரு அத்தைக்காரிகிட்ட பேச ஆரம்பிச்சார்ன்னா தேனும், பாலும் ஒழுகிற மாதில்லா பேசுவாரு. "பாக்குறதுக்கு அப்படியே செல மாதிரில்லா இருக்கீங்க யத்தே!" அப்பிடிம்பாரு.
            "நெசமாத்தாம் சொல்றீயளா? ஊருல நம்மள எல்லாமும் கருப்பின்னுல்ல மூஞ்சியைச் சுளிச்சுக்குதுங்க!" அப்பிடிங்கும் அது.
            "கருப்புதேம் அழகு. கோயிலு செலைகளா பாக்குறீகளே யத்தே! எப்டி இருக்கு? கருப்பாத்தான்னே இருக்கு. அதாலத்தாம் அதோட அழகு நெரந்தரமா இருக்கு. வெளியில பெயிண்டு அடிச்சு வெச்சிருக்கிறானுவோளே செலைக, அதோட அழகு அப்படியா? வருஷா வருஷம் பெயிண்டுல்ல அடிக்க‍ வேண்டிக் கெடக்கு. இல்லேன்ன நெறம் மங்கில்லா போவுது. நீயி கோயிலு உள்ள இருக்குற செல யத்தே. நீயி எத்தினி வயசானாலும் இப்படியேத்தாம் கிண்ணுன்னு இருப்பே யத்தே! செவத்த ஒடம்புக்காரிக அப்டியா? எளமையில நல்லா இருப்பாளுவோ! கொஞ்சம் வயசாச்சுன்னா தோலு சுருங்கிப் போயி வெளவெளத்துப் போயிடுவாளுவோ!" அப்பிடிம்பாரு சின்னவரு.
            அரைநாளு வேலைய முடிச்சிட்டு வர்ற சின்னவரு சும்மா வர மாட்டாரு. அல்வாவையும், மல்லிப்பூவையும் யாருக்கும் தெரியாம வாங்கி வேட்டியில் கட்டிக்கிட்டுத்தாம் வருவாரு. மனுஷன் வேலைக்குப் போயிச் சம்பாரிக்கிறதே அந்த அல்வா வாங்குறதுக்கும், மல்லியப்பூ வாங்குறதுக்குத்தாம்னு யாருக்குத் தெரியும்? கையில கொஞ்சம் சேர்ந்த பிற்பாடு நல்ல சேலையா ஒண்ணு வாங்கிக் கொடுத்தாரு அத்தைக்காரிக்கு. இப்ப புரியுதா அவரு ஏம் வேலைக்கிப் போவ ஆரம்பிச்சார்ன்னு?
            கொஞ்சம் கொஞ்சமா வெலகி நின்னு பேச ஆரம்பிச்சு அத்தைக்காரிய தொட்டு பேசுற அளவுக்கு முன்னேறுனாரு சின்னவரு. மாமங்காரரு வேலையை முடிச்சிட்டு வாரதுக்குள்ள கூத்தும் கும்மாளமும் ஆக ஆரம்பிச்சது. வீடு பெரிய சுத்துக்கட்டு வூடு இல்லையா. சின்னவரு ஜகத்தலபிரதாபன் இல்லையா. ரெண்டும் வசதியாப் போச்சு. இவரு வூட்டுக்கு வரதும் தெரியாம, போவதும் தெரியமா வந்துப் போயிட்டு இருந்தாரு.
            அப்பவே பள்ளியோடத்துக்குப் போயி நாலாப்பு வரை படிச்ச ஆளு நம்ம சின்னவரு. படிப்புலயும் பெரிய படிப்பாளியாத்தாம் இருந்திருக்காரு. ஆனா அடங்கி ஒடங்கி அவரால ஓரிடத்து உக்கார முடியாது. வாத்தியாரு பாடம் நடத்துனாலும் சும்மா இருக்க மாட்டாரு. அவரு பாக்காத நேரத்துல பக்கத்துல இருக்குற புள்ளைங்கள கிள்ளி விட்டிடுவாரு, தலையில குட்டி விட்டுடுவாரு. புள்ளைங்கன்னா பொம்பளைப் புள்ளைங்களத்தாம். ஆம்பளைப் புள்ளைங்க பக்கம் அந்த வயசுலயே நெருங்க மாட்டாரு, தல வெச்சுப் படுக்கவும் மாட்டாரு. அதுகளோட சடைகள சிண்டு முடிஞ்சி விட்டுடுவாரு. வாத்தியாரு இவரைக் கவனிச்சார்ன்னா எடக்கு மடக்கா கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவாரு. எத்தனை நாளைக்குத்தாம் விசயம் வெளியில தெரியாம இருக்கும்? ஒரு நாளு இவரு பொம்பளைப் புள்ளைங்ககிட்ட பண்ற சேட்டை வெளியில தெரிஞ்சிப் போயி வாத்தியாரு கூப்பிட்டு வெச்சி விசாரிக்கிறாரு. நம்ம ஆளு நல்லாவே மழுப்புறாரு.
            ‍"கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதிலச் சொல்லுடா கரிக்குஞ்சு!" அப்பிடிங்கிறாரு வாத்தியாரு.
            "இவ்ளோ கேள்விய கேட்டீயளே! ஒரு கேள்வி நாம்ம‍ கேக்குறேம். பதிலு சொல்லுங்க பாப்பேம்!" அப்பிடிங்கிறாரு நம்ம சின்னவரு.
            "கேளுடா பாப்பேம்!" அப்பிடிங்கிறாரு வாத்தியாரு கெத்த வுட்டுடக் கூடாதுன்னு ஒரு மாதிரியாயி.
            "ஒத்த கல்லு தோட்டுல எத்தன கல்லு இருக்கும்?" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "ஒத்த கல்லு தோடுன்னா ஒண்ணுதான்னேடா இருக்கும். இதென்னடா கேள்வி கரிக்குஞ்சு?" அப்பிடிங்கிறாரு வாத்தியாரு.
            "‍அதெப்படி வாத்தியாரே? தோடுன்னா ஜோடியால்லா இருக்கும். அப்ப ரெண்டு தோடு. ஒரு தோட்டுல்ல ஒரு கல்லுன்னா ரெண்டு தோட்டுல்ல ரெண்டுல்ல இருக்கும்." அப்பிடிங்கிறாரு சின்னவரு. அதெக் கேட்டு புள்ளைங்க எல்லாம் கொல்லுன்னு சிரிக்கிதுங்க. வாத்தியாருக்கு அசிங்கமாப் போயிடுது. அவரு கையில வெச்சிருக்குற பெரம்பாலயே விளாசித் தள்ளுறாரு.
            "யோவ் வாத்தீ! பதிலு தெரியலன்னா கத்துக்கணும். பதிலு தெரியாதுக்காக நம்மள போட்டு அடிப்பீயா?"ன்னு அடிக்கிற பெரம்பை அப்படியே கையால பிடிச்சிடுறாரு சின்னவரு. வாத்தியாருக்கு ஒரு மாதிரியா போயிடுது. அவரு அனுபவத்துல இந்த மாதிரி பார்த்தது இல்ல. வெலவெலத்துப் போயி நிக்குறாரு வாத்தியாரு இப்போ.
            "ஓங்கிட்ட படிக்கிறதுக்கு நமக்கு ஒண்ணுமில்ல. யோவ் வாத்தீ நம்மகிட்ட படிக்க ஒமக்கு நெறய இருக்கு. போய்யா நீயும் ஒம்மட படிப்பும்!"ன்ன அன்னிக்குச் சொல்லிட்டு பள்ளியோடத்த விட்டு வந்தவர்தாம். அதுக்குப் பிற்பாடு பள்ளியோடத்துப் பக்கத்துக்குப் போவல. வூட்டுலயும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க. இதோட சுழித்தாம் எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதியாச்சே. "அந்த வாத்தீக்கே நாம்ம பாடம் சொல்லிக் கொடுப்பேம். ஒத்தக் கல்லு தோட்டுல எத்தன கல்லு இருக்கும்னே தெரியல அந்த வாத்தீக்கு. அதுக்கிட்ட போயி நம்மள பாடம் படிக்கச் சொல்றீயேளே?"ன்னு ஏறுனாரு இவரு.  ஒஞ் சுழி இப்படின்னா அப்படியே இருந்து தொலையட்டும்னு வூட்டுலயும் வுட்டுட்டாங்க. அன்னிக்கு ஊரு சுத்த ஆரம்பிச்சவர்தாம். ஊரு ஒலகமே பள்ளிக்கூடம், பொம்பளைகளே பாடங்கள்னு ஆரம்பிச்சிட்டாரு.
            இப்போ எதுக்கு இந்தப் படிப்புச் சங்கதின்னு கேக்குறீங்களா? இந்தப் படிப்புச் சங்கதிய வெச்சுத்தாம் ஆளு நெறைய விசயங்கள தெரிஞ்சுகிட்டாரு. பள்ளியோடத்துல படிக்க கத்துகிட்டத வெச்சி சின்னவரு நெறைய புத்தகங்கள வாங்கிப் படிச்சாரு. கடைக்குட்டிங்கிறதால இது கேக்குறப்பல்லாம் காசு கெடைக்கிறது ரொம்பவே வசதியாப் போயிடுச்சு. அந்தக் காசையெல்லாம் வெச்சி படிப்புங்றது பள்ளியோடத்தோட முடியறதில்லங்குற அளவுக்கு பொத்தகங்களா வாங்கிப் படிச்சாரு. அப்படி என்னாத்த படிச்சார்ன்னு ஒங்களுக்குள்ள கேள்வி வருதுல்ல. அதெ ஊருல அங்கங்க மறைவா இருக்குற மரப்பொந்துக்குள்ளத்தாம் தேடிப் போயிப் பாக்கணும். அத்தனையும் குஜிலிப் பத்திரிகைங்க. அந்த அஜால் குஜால் விசயங்களப் படிக்கிறதத்தாம் அவருக்கு வேல. அதத் தவிர வேற விசயம் எதையும் படிக்க மாட்டாரு. அதுலத்தாம் அவரு அத்தை, மாமின்னுல்லாம் பேதமில்ல, எல்லாரும் பொம்பளைங்கத்தாம்ங்ற ஏகத்துவத்த கத்துகிட்டு இருந்திருக்காரு. ஏற்கனவே பொம்பளப் பித்து அவருக்கு அதிகம். அந்தப் புத்தகங்களப் படிக்க படிக்க பொம்பளைங்க பின்னாடி சுத்துற கிறுக்கு ஏகத்துக்கும் அதிகமாயிப் போயிடுச்சு அவருக்கு. அந்தப் புத்தகங்கள ஒரு வரி, வார்த்தை வுடாம படிச்சி எந்தப் பொம்பள படியும், எது படியாதுங்ற விசயமெல்லாம் அவருக்கு அத்துப்படியாச்சி.
            அத்தைக்காரியப் பிடிக்குற வரைக்கும் ஒறவு மொறையில்லாத பொம்பளைங்கத்தாம் அவரோட பழக்கத்துல இருந்தாங்க. ஒறவு மொறையில அதுவும் அத்தைக்காரிய பிடிச்சுப் பழகணுங்ற எண்ணம் அந்தப் புத்தகத்த படிச்ச நாளிலேந்து அவருக்கு அதிகமா இருந்துச்சு. அதயே திரும்பத் திரும்ப வேற நெனைச்சுகிட்டு இருந்தாரு. நெனைக்கிறதோட விடாம சாமிகிட்டயும் வேண்டிக்க ஆரம்பிச்சாரு. இதையெல்லாம் சாமிகிட்ட வேண்டிக்குவாங்கன்னு கேட்டீங்கன்னா அவரு சொல்லுவாரு, "திருடனுங்களும்தாம் மாட்டிக்காம திருடணும்னு சாமி கும்பிடுறாம். கொலைகார கூட்டமும்தாம் மாட்டிக்காம கொலையப் பண்ணணும்னு சாமிய வேண்டிக்கிது. அப்போ நாம்ம மட்டும் இதெ வேண்டிக்கக் கூடாதா? ஒலகத்துல மொத மொதலா பொறந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் என்ன ஒறவு? அவங்க சேந்துதான கொழந்தைப் பொறந்திருக்கும்"ன்னு ஆரம்பிச்சிடுவாரு. அவர்ர பொருத்த மட்டில அவரு பண்றதைத் தப்புன்னு ஒப்புக்க வைக்கவே முடியாது. அதுக்கு ஏத்தது போல இந்த மாதிரி வாதங்களா கெளப்பி விடுவாரு.
            அவரு நேரம் பாருங்க! அவரு நெனைச்சுகிட்டு வேண்டிகிட்ட மாதிரி அத்தைக்காரி கெடைச்சதும் அதுதாங் ஒலகம்னு வாழ ஆரம்பிச்சாரு.
            இவரு வேலைக்குப் போற லட்சணத்தைத்தாம் நாம்ம பார்த்தோமே! வேலைக்கு இவரு போற நேரந்தாம். இவரு பாக்குற அளவுதாம். ஆனா ரெண்டு ஆளு வேலையை ஒத்தை ஆளா முடிப்பாரு. அதால இவருக்கு ஏக கிராக்கியாகிப் போச்சு. கிட்டு திருந்திட்டான்னும், ஒழுங்கா வேலைக்கிப் போறான்னு ஊரெல்லாம் பேச்சா போச்சு. அவனெ வூட்டுல வெச்சித் திருத்துனது மாமங்காரன்னும் வூட்டுக்கு வூடு பேச ஆரம்பிச்சிட்டாங்க. புள்ள இல்லாத மாமங்காரனுக்கு இவரு புள்ள மாதிரி ஆகிட்டதாகும் பேச்சாகிப் போவுது. ஆனா இவரு அத்தைக்காரிக்குப் புருஷங்காரனானது ரொம்ப காலத்துக்கு யாருக்கும் தெரியல.
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...