செய்யு - 254
சமையலு கட்டு மேல உள்ள உத்தரத்துல சேலையைக்
கட்டி தூக்குல தொங்குது அத்தைக்காரி. இது சின்னவரு எதிர்பார்க்காதது. பார்த்த சின்னவருக்கு
வெலவெலத்துப் போவுது. தன்னால ரெண்டு உசுரு போயிட்டேங்ற குத்த உணர்ச்சி இப்பதாம் லேசா
அவருக்கு தலைதூக்குது. "எலே இஞ்ஞ வாங்கடா! யத்தேயும் தூக்குல தொங்குதடா!"ன்னு
குரலு நடுங்க சத்தம் போடுறாரு. சத்தம் போட்டவரு அப்படியே சமையலுகட்டுக்கு முன்னாடியே
உக்காந்துட்டாரு.
அங்க சுத்துகட்டுலயும், இங்க சமையலுகட்டு
அத்தைக்காரியும் தொங்குறது ஒரு தராசுல ரெண்டு பக்கமும் ரெண்டு தட்டும் தொங்குறது
போல சின்னவருக்கு மனசுல ஒரு காட்சியா விரியுது. தாம் பண்ண தப்புக்கு ரெண்டு பேரும்
தராசு போல நின்னு ஞாயம் பண்ணிட்டதா ஒரு நெனைப்பு அவருக்கு வருது.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சேதி கேள்விப்பட்டு
அக்கம் பக்கத்து சனங்கள்லாம் வூட்டுக்குள்ள ஓடி வர்றாங்க. வந்தவங்க விடுவிடுன்னு தொங்கிட்டு
இருக்கிறவங்கள இறக்கிப் போடுறாங்க. மாமாங்காரரு சுத்துகட்டுலயும், அத்தைக்காரி சயைமலுகட்டுலயும்
ஏம் தூக்குல தொங்குறாங்கன்னு எல்லாருக்கும் கேள்வியாயிப் போவுது. பேச்சு பல விதமா
போவ ஆரம்பிக்குது.
"ரொம்ப நாளா கொழந்த இல்லேங்ற கொறைதாம்.
அந்த ஏக்கத்த வெளியில சொல்லவும் முடியாம, மனசுக்குள்ள வெச்சிக்கவும் முடியாம போயி
சேந்துட்டுங்க!" அப்பிடின்னு பேசுதுங்க சில சனங்க.
"ஏதோ ரெண்டு பேருக்கும் தீராத வெயாதி
கியாதி இருந்திருக்கும். வெளியில சொல்லி அசிங்கப்பட முடியான்னு இப்படி தொங்கிட்டுங்க!"
அப்பிடின்னு சில சனங்க பேசுதுங்க.
"மாமங்காரருக்கு வெவகாரமான வெசயம்
ஏதோ வெளியில ஆயி அவரு தொங்கிருப்பாரு. அதெ பாத்து அத்தைக்காரியும் தொங்கிருப்பா!"
அப்பிடின்னு இன்னும் சில சனங்க பேசுதுங்க.
"அத்தைக்காரி மேலதாம் ஏதோ தப்பு
இருக்கணும். அது தெரிஞ்சு மாமாங்காரரு தொங்கப் போயி, அதெ பாத்து அந்தத் தப்புக்கு
நாம்மதாம் காரணம்னு நெனச்சிகிட்டு அவ்வே தொங்கிட்டா!" அப்பிடின்னு சில சனங்க
பேச, அதெ கேட்குற சின்னவருக்கு சொரெர்ங்குது. இப்படி சில சனங்க பேசுறத கேக்கிறப்ப
விசயம் வெளியில வந்துடுமோங்ற பயம் அவருக்குள்ள வந்துடுது. இங்க இருந்தா அப்பிடி இப்பிடின்ன
சனங்க முடிச்சுப் போட்டுப் பேசி எப்படியும் கண்டுபிடிச்சிடுங்ற யோசனையில பெருங்குரலெட்டு
அழுதுகிட்டு இதப் பாத்து தாங்க முடியாத ஆளு மாதிரி ஒரு கைய நெஞ்சுல வெச்சுகிட்டு, மறு
கையில துண்டைக் கொடுத்து வாயில அடைச்சுகிட்டு சமையலுகட்டுப் பக்கத்து குந்திக் கெடந்தவரு
எழுந்து மாமங்காரரு வீட்டை விட்டு ஓடுறாரு.
"பாவம்யா கிட்டான்! சாவப் போற கடைசி
காலத்துல புள்ள மாரில்லா இருந்தாம். யத்தே புள்ள மாரில்ல சோறு போட்டு வளத்தது. மாமாதாம்ல
அவனெ திருத்தி வழிக்குக் கொண்டாந்தது. அவனால தாங்க முடியல! அதாங் இருக்க முடியாம ஓடுறாம்!"
அப்பிடிங்குது சில சனங்க.
"ம்ஹீம்! அவனா புள்ள மாரி? செரியான
மொள்ளமாரி! இவ்வேம் ஏத்தோ பண்ணிருக்காம். அதுலதாம் இவிய்ங்க தொங்கிருக்கணும்!"
சில சனங்க பேச்செடுத்துக் கொடுக்குது. இப்படி அப்படியும் இப்படியுமா பேசி விசயம் கொஞ்சம்
வெளியில வரத்தாம் செய்யுது. ஆனா எல்லாம் அவங்கவங்களோட ஊகத்துலல்லா வெளியில வர்ருது.
இப்பிடித்தாம் நடந்துச்சுன்னு உறுதியா சொல்ல முடியாமப் போவுது. இப்படித்தாம் நடந்துச்சுதுங்றது
உறுதியா தெரிஞ்ச ஒரே ஆளு இப்ப சின்னவருதாம். அவரு சொன்னாத்தாம் உண்டு. அவரு எப்படிச்
சொல்வாரு? விசயம் வெளியில தெரியக் கூடாதுன்னு செத்துப் போயிக் கெடந்த மாமங்காரரையே
வெறகுக் கட்டையால பொளக்க பொறப்பட்ட ஆளாச்சே!
மாமங்காரரு வூட்ட வுட்டு வெளியில புறப்பட்ட
ஆளு அடுத்துப் போயி நின்ன எடம் வேலங்குடி. வேலங்குடிக்கும், புகழூருக்கும் பன்னெண்டு
மைலுக்கு மேல இருக்கும். கிலோ மீட்டரு கணக்குல பத்தொம்பது, இருவதாவது வரும். அவ்வளவு
தூரமும் நடந்தே போனாரு. போறப்ப அங்கங்க மரத்தடியில உக்காந்து அழுவுறாரு. யாரும் இல்லன்னு
தெரிஞ்சா அப்படியே உருண்டு பெரளுறாரு. தன்னோட தலையில தானே அடிச்சிக்கிறாரு. தோளுல
போட்டுருக்குற துண்டால நெஞ்சுல கட்டி இறுக்கிக்கிறாரு. இறுக்கம் அதிகமாயி வலி காணுறப்ப
இளக்கிக்கிறாரு. "யத்தே ஒன்னோட எப்டியெல்லாம் வாழணும்னு நெனச்சிட்டு இருந்தேம்!
குறுக்கால நந்தி மேரி நின்னவனும் போயிச் சேந்துட்டாம்னுல்ல இருந்தேம். நீயும் போயிச்
சேந்துட்டீயே! இனுமே நாம்ம எப்படி வாழப் போறேம்?"னு பொலம்புறாரு. கொஞ்சம் பொலம்பல்
ஆச்சுன்னா எழுந்து விடுவிடுன்னு நடக்குறாரு. மறுக்கா எங்காவது தோதான மரத்தடிக் கெடைச்சா
அழுவுறதும், பெரளுறதும், புலம்புறதுமா பண்றாரு. பெறவு நாலஞ்சு மைலுக்குக் கிறுக்குப்
பிடிச்சவன் மாதிரி நடக்குறாரு. வழியல கல்லு, சில்லு எதாச்சிம் கெடந்தா எத்தி எத்தி
உதைக்குறாரு. அப்படி நடந்து நடந்து பொழுது மசங்குற நேரத்துல வேலங்குடிக்கு வந்து நிக்குறாரு.
வேலங்குடியில அப்போ பெரிசா வூடுக எதுவும்
கெடையாது. திருவாரூரு திருத்துறைப்பூண்டி ரோட்டுலேந்து ரெண்டு கிலோ மீட்டரு வடக்கால
நடந்துதாம் உள்ள வரணும். உள்ள வரப்ப கொஞ்ச தூரத்துக்கு வூடுக நெருங்க இருக்கும். பெறவு
வயக்காடுதாம். அதுல போற மண்ணு ரோடுதாம். மழைக்காலத்துல காலு வெச்சி நடக்க முடியாது.
களிமண்ணு ஒலை அது பாட்டுக்கு காலை இழுத்து வாங்கும். அந்த ரோட்டுலத்தாம் சின்னவரு
நடந்துப் போனாரு. அப்போ பெரிசா மழையேதும் இல்லாததால ரோடு நடக்குறதுக்கு எந்தச் செரமும்
இல்லாமத்தாம் இருந்துச்சு. மண்ணு ரோட்டோட ரெண்டு பக்கமும் வயலுகளா இருக்கு. இந்த
நேரத்துக்கு நரிங்க கூட்டமா சேந்து ஆள அடிச்சுப் போட்டாலும் கேக்க நாதியில்லாம இருக்கு
அந்த ரோடு.
கொஞ்ச தூரம் நடந்த பின்னே வேலங்குடி கிராமம்
வருது. கொஞ்ச தூரத்துக்கு கிராமம் வூடுகளா இருக்குது. அதுக்கு அப்புறம் கருவக்காடுகளா
இருக்குது. அதுக்கு இடையில பாதை போவுது. அந்தப் பாதை முடியுற வரைக்கும் போனா கடைசியில
மேற்கால திரும்புது. அங்க திரும்பினா ஐம்பது, அறுவது அடி தள்ளி வேலங்குடி பெரியவரு
வீடு இருக்குது. அவரு வூட்டுக்கு எதுத்தாப்புல கொஞ்சம் தள்ளி தம்புசெட்டி வூடு இருக்குது.
அவரு வூட்டோட வூடா சின்ன பெட்டிக்கடை வெச்சிருக்காரு. பெரியவரு வூடு இருக்குற அதே
வரிசையில கொஞ்சம் கருவக்காடு இருக்குது. அதைத் தாண்டி காக்காபுள்ள வூடு இருக்குது.
இந்த தம்புசெட்டியும், காக்கபுள்ளயும்தாம் பெரியவருக்கு சிநேகிதருங்க. ஆத்திர அவசரத்துக்கு
இவங்கதாம் ஒருத்தருக்கொருத்தர் ஓடிக்கணும், உதவிக்கணும். அவ்வளவுதாம் அப்போ அங்க
வூடுக. அதைத் தாண்டுனா வெறும் கருவக் காடுகத்தான். அப்படியே ஒரு நடை நடந்து வடக்கால
திரும்புனா அந்த முக்குல ஒரு கொளம். கொளத்துக்குப் பக்கத்துல அம்மன் கோயிலு ஒண்ணு.
அதெத் தொடர்ந்து பாதையில நெறைய வயலுங்க. வயலுங்க வழியே வுழுந்துப் போற பாதை வழியே
போனாக்கா வயலுகள்ல வேலைப் பாக்குற சனங்களோட வூடுக பத்து பன்னெண்டு இருக்கு. அவ்வளவுதாம்
அப்போ வேலங்குடி கிராமம்.
அப்போ பெரியவருக்கு மூத்தது ஒரு பொண்ணும்,
ரெண்டாவது ஒரு பையனும் பொறந்து, செயா அத்தை வயித்துல நெற மாசமா இருக்கு.
வேலிப்படல தொறந்துகிட்டு உள்ளார முப்பது
அடி தூரம் உள்ள வந்தாத்தாம் வூடு. நொழைஞ்சு உள்ள வர்றாரு சின்னவரு. இந்தப் பக்கமும்,
அந்தப் பக்கமுமா மாடுக கட்டிக் கெடக்குங்க. பசு மாடு, எருமை மாடு, காளை மாடுன்னு கணக்கில்லாம
கலந்து கட்டி கட்டிக் கெடக்குதுங்க. எப்பிடியும் பத்து பன்னெண்டு உருப்படிக நிக்குது.
செயா அத்தை கால நீட்டிப் போட்டுகிட்டு
உக்காந்துகிட்டு ஒரு பலவாக் கட்டையை வெச்சுகிட்டு பயிறுல கல்ல பாத்து உருட்டிகிட்டு
இருக்கு. பெரியவரு பொண்ண மடியில வெச்சுகிட்டு, தொட்டியில படுத்துகிட்டு இருக்குற
பையன ஆட்டிகிட்டுக் கதை பேசிட்டு இருக்காரு. வேலங்குடி பெரியவருங்ற பெரிய மாமா கதெ
பேச ஆரம்பிச்சார்ன்னா அம்புட்டு ஆசையா இருக்கும் கேக்குறதுக்கு. அப்போ பொழுது போவறதுக்கு
டி.வி.யா? ரேடியோவா? என்னா இருந்திச்சி. ரேடியோ ஒண்ணுத்தாம் கிராமத்துல வசதியான யாரோ
ஒருத்தரு வூட்டுல மட்டுந்தாம் இருந்துச்சி. பொழுது போவறதுக்குப் பேச்சுத்தாம். அதுவும்
வேலங்கடி பெரியவரு பேச்சுக்குன்னே தம்புசெட்டியும், காக்காபுள்ளயும் வடக்கால இருக்கற
அம்மன் கோயிலுக்குப் பொழுது மசங்குனா போதும் வந்து உக்காந்துடுவாங்க. பொழுது போறது
தெரியாம பேசிக்குவாங்க. கொழந்தைங்க பொறந்த பின்னாடி பெரியவரால முன்ன மாதிரி கோயிலுக்குப்
போயி குந்திகிட்டு பேச முடியல. அதுக்காக போவாமலும் இருக்கிறதில்ல. வாரத்துக்கு ஒரு
தடவையோ, ரெண்டு தடவையோ கோயில்ல போயி உக்காந்து பேசலன்னா மனுஷனுக்குத் தூக்கம் வராது.
இன்னிக்குப் போகாம வூட்டுலத்தாம் இருக்காரு. அவரு எல்லாத்தையும் பாயிண்டு போட்டு
வெரல நீட்டில்ல ஒவ்வொண்ணா ஞயாம் பேசுவார்ன்னு முன்னமே நாம்மதாம் அவரப் பத்தி பாத்திருக்கோமே!
இதாருடா புது ஆளா இந்த நேரத்துக்கு வூட்டுக்குள்ள
நொழையுறானேன்னு பெரியவரு பாக்கறதுக்குள்ள உள்ள நொழைங்ச சின்னவரு படார்னு அப்படியே
குப்புற மளார்னு விழுந்து கெடக்குறாரு.
"அட இவம் ன்னா தம்பிக்காரம்ல. இந்நேரதுக்கு
இஞ்ஞ வந்து ஏம் வுழுறாம்?"ன்னு தடார்னு மடியில இருக்குற பொண்ண அந்தாண்ட உக்கார
வெச்சிட்டு படார்னு எழுந்திரிச்சி தம்பிக்காரன தூக்குறாரு. செயா அத்தையும் பதறி அடிச்சிட்டு
இடுப்ப பிடிச்சுக்கிட்டு எழும்புது.
*****
No comments:
Post a Comment