31 Oct 2019

11.0




Zero To Infinity
அத்தியாயம் : 2
            11 = 11
            1+1 = 2
            ஆர்குடி தேரடித் திடல்.
            கோபாலபெருமாள் கோயிலுக்கு எதிர்புறமாக இருக்கிறது. ஆர்குடி பெருமாள் கோயிலும், தாயார் சந்நிதியும் அவ்வளவு சிறப்பு. புளியோதரை ஏகச் சுவையாக இருக்கும். கெளரிவிரத நாட்களில் அப்படியொரு கூட்டத்தைப் பார்க்கலாம். இப்போது அநேகமாக கெளரி விரதம் மறந்து விட்டது. மறந்தது மறந்ததாகவே இருக்கட்டும். இப்போது கூட்டம் அதிகமில்லை. புளியோதரையின் சுவை குறைந்ததும் காரணமாகவும் இருக்கலாம்.
            தேரடித் திடலில் எப்போதும் கூட்டம். கூட்டம் நடந்து கொண்டிருப்பதால் அப்படி ஒரு கூட்டம். பொதுக்கூட்டம், சங்கக் கூட்டம், அரசியல் கூட்டம், இலக்கியக் கூட்டம் இப்படி ஏதாவது ஒரு கூட்டம் நடந்து கொண்டே இருக்கும். கூட்டம் நடக்கும் காலங்களில் மக்கள் வரிசைகட்டி நிற்பார்கள், உட்கார்ந்திருப்பார்கள். மற்ற நாட்களில் வேன்கள், லாரிகள் வரிசைகட்டி உட்கார முடியாத அவஸ்தையில் நின்று கொண்டிருக்கும். ஆர்குடி டவுன் மாடுகள் அனைத்தும் கூடும் இடமும், சாணி போடும் இடமும் அதுதான். மனித மூத்திர நாற்றத்துக்குப் பஞ்சம் இருக்காது. டவுனில் எங்கு சாணி கிடைக்கா விட்டாலும் அங்குக் கிடைக்கும். அதற்கென ஓரு கூட்டம் தேரடித் திடலைச் சுத்திக் கிடக்கும். கூட்டம் நடக்கும் காலங்களில் மாடுகளுக்கு அவஸ்தை. அவை வேறு எங்காவது இடம் தேடிக் கொள்ள வேண்டியதுதான். எது எப்படியோ கூட்டம் நடக்கும் நாட்களில் திடல் சுத்தமாகி விடும். வேன்கள், லாரிகள் வேறு இடம் பார்த்துப் போய் விடும்.
*****
            கவிஞர் தீக்காபி விகடுவின் நண்பர்.
            கவிஞர் - அவர் படித்து வாங்கியப் பட்டமா? படிக்காததால் வாங்கிய பட்டமா? கவிஞர் தீக்காபியே விளக்க கடமைப்பட்டவர். படிக்க விருப்பம் இல்லாதவர்கள் பெரும்பாலும் கவிஞர்கள் ஆகி விடுகிறார்கள் என்பது உலக பொதுவான சாத்தியக்கூறு. படித்தவர்களும் பொதுவாக கவிஞர்கள் ஆகிறார்கள் என்பது கால பொதுவான சிறப்பான சாத்தியக்கூறு.
            கவிஞர்களின் பெயர்களில் இப்படி ஓர் அநாதேயமான பேரைக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பெயர்க்காரணம் விளக்க கடமைப்பட்டது.
            கவிதைகள் எப்போதும் சூடாக இருக்க வேண்டும். அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்று அக்கினியைக் கலந்து பாரதி எழுதியது கவிதை எப்போதும் சூடாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆரம்பத்தில் அக்கினிபுத்திரனாகத்தான் இருந்தார் கவிஞர் தீக்காபி. அக்கினியின் புத்திரனாக இருப்பதில் என்ன வெறுப்பு தட்டியதோ தெரியவில்லை. தீக்காபியாக மாறி விட்டார் அக்கினிபுத்திரன். இப்படி மாறியதில் அக்கினிக்கு வருத்தம் இருந்திருக்கக் கூடும். மேற்கொண்டு அது அக்கினியைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்.
            டீயோ, காப்பியோ மக்கள் சூடாக இருந்தால்தான் விரும்புவார்கள். ஆறிய டீக்கு, ஆறிய காபிக்கு குப்பைத் தொட்டியே மவுசு. மக்கள் விரும்பும் சூடான டீயும், காபியுமாக இருக்க வேண்டும் என்று டீக்காபியாக மாறியவர் தீக்காபி. டீக்காபி என்று சொல்வதில் ஒரு சந்தநயம் இல்லாமல் இருப்பதாகப் பட்டதால் டீக்காபியிலிருந்து தீக்காபியாக அவதாரம் கொண்டார் கவிஞர். அத்துடன் தீக்காபியில் தீ இருக்கிறதா! எழுதும் கவிதையில் சூடு இல்லாவிட்டாலும், தன் பெயரில் இருக்கும் தீயில் கவிதை சூடாகி விடும் என்ற ஐதீக நம்பிக்கை ஏற்பட்டு விட்டது கவிஞருக்கு. கவிஞர் கடைசிவரை தீக்காபியாக இருப்பதற்கு தீர்மானம் பூண்டு விட்டார். நாவல் முடிவுறும் காலத்திற்குள் ஜாதக மற்றும் நியூமரலாஜி சித்துபித்துக்குள் அகப்பட்டு கவிஞர் வேறு பெயருக்கு மாறினால் நாவலாசிரியர் அதற்குப் பொறுப்பாக மாட்டார்.
            தீக்காபியைப் பற்றிச் சுட சுட பார்ப்போம்.
            புலனாய்வு பத்திரிகை விசயங்களில் இருக்கும் சூடு கவிஞரின் விசயத்திலும் இருக்கும். அதற்கு நாவலாசிரியர் மனமுவந்து பொறுப்பேற்கிறார்.
*****


No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...