28 Oct 2019

அத்தைக்காரியின் புருஷங்காரன்!



செய்யு - 251
            ஆவணி அவிட்டத்து அன்னிக்கு ஆரம்பிச்ச அந்த உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ற வேலையைத் தொடர்ந்து பண்ண ஆரம்பிக்கிறாரு வேலங்குடி சின்னவரு. மூணு வேள சாப்பாடும் அங்கதான்னு ஆகிப் போவுது அவருக்கு. எப்படியோ பையன் திருந்துனா போதும்னு நெனைக்கிறாரு இவரப் பத்தித் தெரியாத அந்த மாமங்காரரு.
            வேலங்குடி சின்னவரு அத்தைக்காரிகிட்ட கொழைஞ்சி கொழைஞ்சிப் பேசுற பேச்சென்ன? நின்னு வழியுற வழியலு என்ன? எதையும் தப்பா நெனைக்கல மாமங்காரரு. அத்தைக்காரியும் அப்படியே கொழைஞ்சிப் பேசுறதையும், வழியுறதையும் சின்னவரைத் திருத்துற மார்க்கமா பாக்குறாரு அவரு. எப்படியோ பையன் திருந்துன்னா அது நல்ல விசயந்தானேன்னு பாக்குறாரு அந்த நல்ல மனுஷன். அத்தோட நல்ல பொண்ணா பாத்து சின்னவருக்கு நாமத்தாம் முன்னாடி நின்னு கலியாணத்த பண்ணி வைக்கணும்னு பொண்டாட்டிகாரிகிட்ட வேற சொல்றாரு மாமங்காரரு.
            ஊரு சுத்திகிட்டு, பொம்பளைங்கப் பின்னாடி பொறுக்கிகிட்டு இருந்த சின்னவரு அத்தைக்காரி ஒரு பொம்பளையே போதும்னு இப்போ ஒழுங்கா வேலைக்குப் போக ஆரம்பிச்சாரு. அது ஏங்கிறத கதையைப் பின்னாடிப் படிச்சீங்கன்னா ஒங்களுக்கே தெரியும். வேலையை அவரு போல விடுவிடுன்னு செய்யுறதுல அவர அடிச்சிக்க ஆளில்லங்ற சங்கதி நாம்ம அறிஞ்சதுதானே. அதால இவரு வேலைக்குக் கிளம்புனா நானு நீயின்னு இவர்ர ஆளா வெச்சி வேலை கொடுக்க ஆளுங்க தயாரா இருக்குங்க. ஆளு வேலையை ஆரம்பிச்சார்ன்னா அப்போ ஒரு நாளுல்ல முடியுற வேலையை அரை நாளுல்ல அடிச்சி முடிச்சிடுவாரு. அடிச்சி முடிச்சிட்டு அவ்வளவுதான்னு கெளம்பிடுவாரு. வேலைதாம் அன்னிய பொழுத்துக்கு முடிஞ்சிட்டேன்னு வேலை கொடுக்குறவங்களாலும், வூட்டக்காரங்களாலும் ஒண்ணும் சொல்ல முடியாது. வேலையைத்தாம் அரை நாளுல்ல முடிச்சிட்டாரே. மிச்ச அரை நாளு சும்மா போகக் கூடாதுல்ல! அத்தைக்காரியப் பாக்க வந்திடுவாரு. மாமங்காரரு வேலைக்குப் போயிருப்பாரு இல்லியா. அத்தைக்காரி வூட்டுல தனியாத்தாம் இருப்பாங்க. ரொம்ப வசதியா போயிடுச்சு சின்னவருக்கு.
            சின்னவரு அத்தைக்காரிகிட்ட பேச ஆரம்பிச்சார்ன்னா தேனும், பாலும் ஒழுகிற மாதில்லா பேசுவாரு. "பாக்குறதுக்கு அப்படியே செல மாதிரில்லா இருக்கீங்க யத்தே!" அப்பிடிம்பாரு.
            "நெசமாத்தாம் சொல்றீயளா? ஊருல நம்மள எல்லாமும் கருப்பின்னுல்ல மூஞ்சியைச் சுளிச்சுக்குதுங்க!" அப்பிடிங்கும் அது.
            "கருப்புதேம் அழகு. கோயிலு செலைகளா பாக்குறீகளே யத்தே! எப்டி இருக்கு? கருப்பாத்தான்னே இருக்கு. அதாலத்தாம் அதோட அழகு நெரந்தரமா இருக்கு. வெளியில பெயிண்டு அடிச்சு வெச்சிருக்கிறானுவோளே செலைக, அதோட அழகு அப்படியா? வருஷா வருஷம் பெயிண்டுல்ல அடிக்க‍ வேண்டிக் கெடக்கு. இல்லேன்ன நெறம் மங்கில்லா போவுது. நீயி கோயிலு உள்ள இருக்குற செல யத்தே. நீயி எத்தினி வயசானாலும் இப்படியேத்தாம் கிண்ணுன்னு இருப்பே யத்தே! செவத்த ஒடம்புக்காரிக அப்டியா? எளமையில நல்லா இருப்பாளுவோ! கொஞ்சம் வயசாச்சுன்னா தோலு சுருங்கிப் போயி வெளவெளத்துப் போயிடுவாளுவோ!" அப்பிடிம்பாரு சின்னவரு.
            அரைநாளு வேலைய முடிச்சிட்டு வர்ற சின்னவரு சும்மா வர மாட்டாரு. அல்வாவையும், மல்லிப்பூவையும் யாருக்கும் தெரியாம வாங்கி வேட்டியில் கட்டிக்கிட்டுத்தாம் வருவாரு. மனுஷன் வேலைக்குப் போயிச் சம்பாரிக்கிறதே அந்த அல்வா வாங்குறதுக்கும், மல்லியப்பூ வாங்குறதுக்குத்தாம்னு யாருக்குத் தெரியும்? கையில கொஞ்சம் சேர்ந்த பிற்பாடு நல்ல சேலையா ஒண்ணு வாங்கிக் கொடுத்தாரு அத்தைக்காரிக்கு. இப்ப புரியுதா அவரு ஏம் வேலைக்கிப் போவ ஆரம்பிச்சார்ன்னு?
            கொஞ்சம் கொஞ்சமா வெலகி நின்னு பேச ஆரம்பிச்சு அத்தைக்காரிய தொட்டு பேசுற அளவுக்கு முன்னேறுனாரு சின்னவரு. மாமங்காரரு வேலையை முடிச்சிட்டு வாரதுக்குள்ள கூத்தும் கும்மாளமும் ஆக ஆரம்பிச்சது. வீடு பெரிய சுத்துக்கட்டு வூடு இல்லையா. சின்னவரு ஜகத்தலபிரதாபன் இல்லையா. ரெண்டும் வசதியாப் போச்சு. இவரு வூட்டுக்கு வரதும் தெரியாம, போவதும் தெரியமா வந்துப் போயிட்டு இருந்தாரு.
            அப்பவே பள்ளியோடத்துக்குப் போயி நாலாப்பு வரை படிச்ச ஆளு நம்ம சின்னவரு. படிப்புலயும் பெரிய படிப்பாளியாத்தாம் இருந்திருக்காரு. ஆனா அடங்கி ஒடங்கி அவரால ஓரிடத்து உக்கார முடியாது. வாத்தியாரு பாடம் நடத்துனாலும் சும்மா இருக்க மாட்டாரு. அவரு பாக்காத நேரத்துல பக்கத்துல இருக்குற புள்ளைங்கள கிள்ளி விட்டிடுவாரு, தலையில குட்டி விட்டுடுவாரு. புள்ளைங்கன்னா பொம்பளைப் புள்ளைங்களத்தாம். ஆம்பளைப் புள்ளைங்க பக்கம் அந்த வயசுலயே நெருங்க மாட்டாரு, தல வெச்சுப் படுக்கவும் மாட்டாரு. அதுகளோட சடைகள சிண்டு முடிஞ்சி விட்டுடுவாரு. வாத்தியாரு இவரைக் கவனிச்சார்ன்னா எடக்கு மடக்கா கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவாரு. எத்தனை நாளைக்குத்தாம் விசயம் வெளியில தெரியாம இருக்கும்? ஒரு நாளு இவரு பொம்பளைப் புள்ளைங்ககிட்ட பண்ற சேட்டை வெளியில தெரிஞ்சிப் போயி வாத்தியாரு கூப்பிட்டு வெச்சி விசாரிக்கிறாரு. நம்ம ஆளு நல்லாவே மழுப்புறாரு.
            ‍"கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதிலச் சொல்லுடா கரிக்குஞ்சு!" அப்பிடிங்கிறாரு வாத்தியாரு.
            "இவ்ளோ கேள்விய கேட்டீயளே! ஒரு கேள்வி நாம்ம‍ கேக்குறேம். பதிலு சொல்லுங்க பாப்பேம்!" அப்பிடிங்கிறாரு நம்ம சின்னவரு.
            "கேளுடா பாப்பேம்!" அப்பிடிங்கிறாரு வாத்தியாரு கெத்த வுட்டுடக் கூடாதுன்னு ஒரு மாதிரியாயி.
            "ஒத்த கல்லு தோட்டுல எத்தன கல்லு இருக்கும்?" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "ஒத்த கல்லு தோடுன்னா ஒண்ணுதான்னேடா இருக்கும். இதென்னடா கேள்வி கரிக்குஞ்சு?" அப்பிடிங்கிறாரு வாத்தியாரு.
            "‍அதெப்படி வாத்தியாரே? தோடுன்னா ஜோடியால்லா இருக்கும். அப்ப ரெண்டு தோடு. ஒரு தோட்டுல்ல ஒரு கல்லுன்னா ரெண்டு தோட்டுல்ல ரெண்டுல்ல இருக்கும்." அப்பிடிங்கிறாரு சின்னவரு. அதெக் கேட்டு புள்ளைங்க எல்லாம் கொல்லுன்னு சிரிக்கிதுங்க. வாத்தியாருக்கு அசிங்கமாப் போயிடுது. அவரு கையில வெச்சிருக்குற பெரம்பாலயே விளாசித் தள்ளுறாரு.
            "யோவ் வாத்தீ! பதிலு தெரியலன்னா கத்துக்கணும். பதிலு தெரியாதுக்காக நம்மள போட்டு அடிப்பீயா?"ன்னு அடிக்கிற பெரம்பை அப்படியே கையால பிடிச்சிடுறாரு சின்னவரு. வாத்தியாருக்கு ஒரு மாதிரியா போயிடுது. அவரு அனுபவத்துல இந்த மாதிரி பார்த்தது இல்ல. வெலவெலத்துப் போயி நிக்குறாரு வாத்தியாரு இப்போ.
            "ஓங்கிட்ட படிக்கிறதுக்கு நமக்கு ஒண்ணுமில்ல. யோவ் வாத்தீ நம்மகிட்ட படிக்க ஒமக்கு நெறய இருக்கு. போய்யா நீயும் ஒம்மட படிப்பும்!"ன்ன அன்னிக்குச் சொல்லிட்டு பள்ளியோடத்த விட்டு வந்தவர்தாம். அதுக்குப் பிற்பாடு பள்ளியோடத்துப் பக்கத்துக்குப் போவல. வூட்டுலயும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க. இதோட சுழித்தாம் எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதியாச்சே. "அந்த வாத்தீக்கே நாம்ம பாடம் சொல்லிக் கொடுப்பேம். ஒத்தக் கல்லு தோட்டுல எத்தன கல்லு இருக்கும்னே தெரியல அந்த வாத்தீக்கு. அதுக்கிட்ட போயி நம்மள பாடம் படிக்கச் சொல்றீயேளே?"ன்னு ஏறுனாரு இவரு.  ஒஞ் சுழி இப்படின்னா அப்படியே இருந்து தொலையட்டும்னு வூட்டுலயும் வுட்டுட்டாங்க. அன்னிக்கு ஊரு சுத்த ஆரம்பிச்சவர்தாம். ஊரு ஒலகமே பள்ளிக்கூடம், பொம்பளைகளே பாடங்கள்னு ஆரம்பிச்சிட்டாரு.
            இப்போ எதுக்கு இந்தப் படிப்புச் சங்கதின்னு கேக்குறீங்களா? இந்தப் படிப்புச் சங்கதிய வெச்சுத்தாம் ஆளு நெறைய விசயங்கள தெரிஞ்சுகிட்டாரு. பள்ளியோடத்துல படிக்க கத்துகிட்டத வெச்சி சின்னவரு நெறைய புத்தகங்கள வாங்கிப் படிச்சாரு. கடைக்குட்டிங்கிறதால இது கேக்குறப்பல்லாம் காசு கெடைக்கிறது ரொம்பவே வசதியாப் போயிடுச்சு. அந்தக் காசையெல்லாம் வெச்சி படிப்புங்றது பள்ளியோடத்தோட முடியறதில்லங்குற அளவுக்கு பொத்தகங்களா வாங்கிப் படிச்சாரு. அப்படி என்னாத்த படிச்சார்ன்னு ஒங்களுக்குள்ள கேள்வி வருதுல்ல. அதெ ஊருல அங்கங்க மறைவா இருக்குற மரப்பொந்துக்குள்ளத்தாம் தேடிப் போயிப் பாக்கணும். அத்தனையும் குஜிலிப் பத்திரிகைங்க. அந்த அஜால் குஜால் விசயங்களப் படிக்கிறதத்தாம் அவருக்கு வேல. அதத் தவிர வேற விசயம் எதையும் படிக்க மாட்டாரு. அதுலத்தாம் அவரு அத்தை, மாமின்னுல்லாம் பேதமில்ல, எல்லாரும் பொம்பளைங்கத்தாம்ங்ற ஏகத்துவத்த கத்துகிட்டு இருந்திருக்காரு. ஏற்கனவே பொம்பளப் பித்து அவருக்கு அதிகம். அந்தப் புத்தகங்களப் படிக்க படிக்க பொம்பளைங்க பின்னாடி சுத்துற கிறுக்கு ஏகத்துக்கும் அதிகமாயிப் போயிடுச்சு அவருக்கு. அந்தப் புத்தகங்கள ஒரு வரி, வார்த்தை வுடாம படிச்சி எந்தப் பொம்பள படியும், எது படியாதுங்ற விசயமெல்லாம் அவருக்கு அத்துப்படியாச்சி.
            அத்தைக்காரியப் பிடிக்குற வரைக்கும் ஒறவு மொறையில்லாத பொம்பளைங்கத்தாம் அவரோட பழக்கத்துல இருந்தாங்க. ஒறவு மொறையில அதுவும் அத்தைக்காரிய பிடிச்சுப் பழகணுங்ற எண்ணம் அந்தப் புத்தகத்த படிச்ச நாளிலேந்து அவருக்கு அதிகமா இருந்துச்சு. அதயே திரும்பத் திரும்ப வேற நெனைச்சுகிட்டு இருந்தாரு. நெனைக்கிறதோட விடாம சாமிகிட்டயும் வேண்டிக்க ஆரம்பிச்சாரு. இதையெல்லாம் சாமிகிட்ட வேண்டிக்குவாங்கன்னு கேட்டீங்கன்னா அவரு சொல்லுவாரு, "திருடனுங்களும்தாம் மாட்டிக்காம திருடணும்னு சாமி கும்பிடுறாம். கொலைகார கூட்டமும்தாம் மாட்டிக்காம கொலையப் பண்ணணும்னு சாமிய வேண்டிக்கிது. அப்போ நாம்ம மட்டும் இதெ வேண்டிக்கக் கூடாதா? ஒலகத்துல மொத மொதலா பொறந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் என்ன ஒறவு? அவங்க சேந்துதான கொழந்தைப் பொறந்திருக்கும்"ன்னு ஆரம்பிச்சிடுவாரு. அவர்ர பொருத்த மட்டில அவரு பண்றதைத் தப்புன்னு ஒப்புக்க வைக்கவே முடியாது. அதுக்கு ஏத்தது போல இந்த மாதிரி வாதங்களா கெளப்பி விடுவாரு.
            அவரு நேரம் பாருங்க! அவரு நெனைச்சுகிட்டு வேண்டிகிட்ட மாதிரி அத்தைக்காரி கெடைச்சதும் அதுதாங் ஒலகம்னு வாழ ஆரம்பிச்சாரு.
            இவரு வேலைக்குப் போற லட்சணத்தைத்தாம் நாம்ம பார்த்தோமே! வேலைக்கு இவரு போற நேரந்தாம். இவரு பாக்குற அளவுதாம். ஆனா ரெண்டு ஆளு வேலையை ஒத்தை ஆளா முடிப்பாரு. அதால இவருக்கு ஏக கிராக்கியாகிப் போச்சு. கிட்டு திருந்திட்டான்னும், ஒழுங்கா வேலைக்கிப் போறான்னு ஊரெல்லாம் பேச்சா போச்சு. அவனெ வூட்டுல வெச்சித் திருத்துனது மாமங்காரன்னும் வூட்டுக்கு வூடு பேச ஆரம்பிச்சிட்டாங்க. புள்ள இல்லாத மாமங்காரனுக்கு இவரு புள்ள மாதிரி ஆகிட்டதாகும் பேச்சாகிப் போவுது. ஆனா இவரு அத்தைக்காரிக்குப் புருஷங்காரனானது ரொம்ப காலத்துக்கு யாருக்கும் தெரியல.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...