29 Oct 2019

சிலையா சமைஞ்சவரு!



செய்யு - 252
            முழு பூசணிக்காய சோத்துல மறைக்க முடியாதும்பாங்க. அதைத் துண்டு துண்டா போட்டு குழம்புலத்தாம் மறைக்க முடியும்பாங்க. வேலங்குடி சின்னவரு பண்ண விசயத்தை யோக்கியத்தால மறைக்க முயலல. அவரோட யோக்கியந்தாம் ஊரறிஞ்ச ரகசியமாச்சே. உறவு மொறைகள சொல்லிச் சொல்லித்தாம் யாருக்கும் எந்த சந்தேகமும் வராதபடி மறைச்சாரு. யத்தே யத்தேன்னு கொழந்தை போல கொஞ்சுறவன் அத்தைகிட்ட தப்பா நடந்துப்பான்னு யாரு நெனைக்க முடியும் சொல்லுங்க. ஆனா தப்பு இருக்குப் பாருங்க அது ரொம்ப நாளு மறைஞ்சிருக்காது. அசந்தர்ப்பமா அதுவா ஒரு நாளு வெளிச்சத்துல வந்து மாட்டிக்கும். வயித்துப்புள்ளகாரி வயித்த போலத்தாம் அது. மொத ரெண்டு மாசத்துல வயித்துல எந்த மாத்தமும் தெரியாது. போவப் போவ வயித்துல கொஞ்சம் கொஞ்சமா மாத்தம் வந்துகிட்டேதானே இருக்கும். வயிறும் வளந்துகிட்டே இருக்கும். தப்பும் அப்படித்தாம். சின்னதா ஆரம்பிச்சு அது பெரிசா வளந்துகிட்டே போவும்.
            சின்னதா தப்புப் பண்ணணும்னு ஆசை கெளம்பி பெரிசா தப்பு பண்ணணுங்ற ஆசை தானாவே வந்துடும். சின்ன சின்ன தப்புல மாட்டிக்காத தெம்பு இருக்கே, அது பெரிசா தப்பு பண்ணுனாலும் மாட்டிக்க மாட்டோம்ங்ற தெனவெட்டுல கொண்டு போயி விட்டுடும். அதுல பல விசயங்கள கவனிக்க மனசு மறந்துப் போயிடும். அப்படி முக்கியமான விசயமே மறந்து போயி அதுல கோட்டை விட்டுத்தாம் தப்புப் பண்றவேம் மாட்டிப்பாம்.
            ஆரம்பத்துல மாமங்கார வூட்டக்குள்ள யாருக்கும் தெரியாம கொல்லைப் பக்கமா நோழையுறப்ப வாசக்கதவு அந்தக் கதவுன்னு எல்லாத்தையும் தாழ்ப்பாளு போட்டு சமையல்கட்டுக்குக் கீழண்டையில இருக்குற அறைக்குள்ள அங்கயும் தாழ்பபாள போட்டுகிட்டுத்தாம் சல்லாபிச்சுகிட்டுக் கெடந்தாங்க சின்னவரும் அத்தைக்காரியும். போகப் போக ஒரே எடத்துல ஒரே மாதிரியா செஞ்சு அலுத்துப் போச்சோ என்னவோ? வூட்டுல ஒரு எடம் பாக்கி இல்லாம அங்கங்க கொஞ்சுறதும் கொலாவுறதுமா சல்லாபிக்க ஆரம்பிச்சிட்டாங்க. வாரத்துல ஒரு நாளு, ரெண்டு நாளுன்னு இருந்த பழக்கம் சின்னவருக்கு நித்தமும்னு ஆக ஆரம்பிச்சுச்சு. அத்தைக்காரி இவருகிட்ட ஒரு அளவா நிறுத்திப்போம்னு கெஞ்சிப் பாக்குறா. இவர கேட்குற பாடாயில்ல. ஆசைக்கு என்ன அளவிருக்குன்னு இஷ்டத்துக்கு ஆட்டத்தைப் போடுறாரு.
            பல நாளு திருடன் ஒரு நாளு அகப்படுவாங்ற கணக்கா ஒரு நாளு சின்னவரு மாட்டுனாரு. மாட்டுனா திருடன்தானே சாவணும். வூட்டக்காரன் செத்த கொடுமை நடந்ததுதான் வேதன.
            அன்னிக்கு வேலைக்குப் போன மாமங்காரரு ஒடம்பு வெடவெடன்னு வருதுன்னு வூட்டுக்காரங்கள கூப்புடுறாரு. "யய்யா! ஒடம்புக்குச் சொகமில்லீங்க! படபடன்னு இருக்கு. வேலைக்காரங்க நம்ம ஆளுங்க வேலய பாப்பாங்க. நமக்கு இன்னிக்கு ஒரு நாளு மாப்பு கொடுங்க. இன்னிக்கு நமக்கு சஞ்சாரம் வாணாம். வூட்டுக்குக் கெளம்புறேம்ங்க!"ன்னு சொல்லிட்டுக் கெளம்பிட்டாரு.
            வூட்டுக்கு வந்து படியேறி லேசா சாத்தியிருக்கிற ஒத்தக் கதவ தெறந்துகிட்டு உள்ள நொழையுறாரு மாமங்காரரு. இந்த சுத்துக்கட்டு ஓட்டு வீடெல்லாம் தெருவுலேந்து மூணு அடி, நாலு அடி, அஞ்சு அடி உயரத்துலன்னு கணக்கு வழக்கில்லாம உசரத்துல  இருக்கும். ஊருக்குள்ள வெள்ளந்தண்ணின்னு வந்ததாலும் வூட்டுக்குள்ள நொழையக்கூடாதுன்னு அப்படிக் கட்டியிருப்பாங்க. அதால வூட்டுக்குள்ள நுழையுறத்துக்கு ஏறணும்னா நாலு படி, ஆறு படின்னு படி ஏற வேண்டியிருக்கும். வழக்கமா மாமாங்காரரு ஏறுற படிகள்னாலும் அன்னிக்கு ஒடம்பு முடியாம ஆறு படி ஏறி கதவ தொறக்குறதுக்குள்ள அவருக்கு மேலு மூச்சு, கீழ மூச்சு வாங்க போதும் போதும்னு ஆவுது. வழக்கமா தெருக்கதவ சாத்தித் தாழ்ப்பாளு போடுற சின்னவரும் அத்தைக்காரியும் ஆசை நெனைப்புலயோ, ஏதோ நெனைப்புலயோ தெரியல அதெ மறந்துட்டாங்க. மாமங்காரரு உள்ள நொழையுறதுக்கு தடையில்லாம அது கொஞ்சம் வசதியாப் போச்சுது.
            வழக்கமா உள்ள நொழையுற மாமங்காரரு, "ஏ ஆயி!"ன்னு குரலு கொடுத்துட்டுத்தாம் உள்ள நொழைவாரு. அப்படி நுழையுறப்ப அவரு கதவத் தொறக்குற சத்தமும் கிறீச்சுன்னு நல்லாவே கேட்கும். அன்னிக்கு ஒடம்புக்கு முடியாம போனதுல அலுங்காம கொள்ளாம நளியாம கொள்ளாம கதவத் தொறந்து அடி மேல அடி வெச்சி எடப்பக்கமா இருக்குற சுவத்தைப் பிடிச்சிகிட்டே நுழைஞ்சி உள்ள வராரு. உள்ள வந்து சுத்துகட்டுல தென்னண்டைப் பக்கம் போட்டிருக்குற கட்டில்ல உக்காருராரு. உக்காந்த பின்னாடித்தாம், "ஏ ஆயி! நெஞ்சு படபடன்னு வருது! தண்ணி கொண்டு வா ஆயி!"ன்னு சொல்லிகிட்டே முத்தத்தப் பாக்குறாரு.
            முத்தத்தப் பார்த்தா...
            முத்தத்துல சின்னவரும் அத்தைக்காரியும் ஒடம்புல ஒட்டுத் துணியில்லாம பொறந்த மேனிக்குக் கெடக்குறாங்க. நல்ல வெயிலு நேரம். ரெண்டு பேரு ஒடம்பு வியர்த்து விறுவிறுத்து கரும்பு ஒடம்புக்கும் அதுக்கும் பளபளன்னு மின்னுது.  அந்த வூட்டுல எங்ககெங்கேயோ படுத்துக் கெடந்து அன்னிக்குன்னு பாத்து சின்னவருக்கு முத்தத்துல படுத்துக் கெடக்கணும்னு ஆசெ வந்ததுல ரெண்டும் முத்தத்துல அப்படிக் கெடக்குதுங்க, அதுவும் பொட்ட வெயிலுன்னு கூட பார்க்காம.
            இதெப் பார்த்த மாமங்காரரு, "ம்ஹா!"ன்னு மூச்ச இழுத்து வுடுறாரு. மாமங்காரரப் பார்த்த சின்னவரும், அத்தைக்காரியும் அரக்கப் பரக்க எழுந்திரிச்சவங்க சமையக்கட்டுப் பக்கத்துல இருக்குற அறையில கெடக்கற துணியை எடுக்க ஓடுறாங்க. மாமங்காரரு எடத்தை விட்டு எழும்பல.
            அவசர அவசரமா துணியை உடுத்திக்கிட்டவங்களோட ஒடம்பெல்லாம் நடுங்குது. "யய்யோ ந்நல்லா மாட்டிக்கிட்டேம். முத்தத்துல வாணாம் வாணாம்னு சொன்னேம்ல. கேட்டீயா? பாத்தீயா! எம்மட மானம் போச்சி. கொல பண்ணிப் போடப் போறாம் மனுஷம். எம்மட வாழ்க்கப் போச்சி. அசிங்கம் பண்ணப் போறாம். இஞ்ஞயே இப்டியே தொங்கிட்டா தேவலாம்!"ன்னு அழுவுது அத்தைக்காரி.
            "வெசயம் வெளில தெரிஞ்சா ஒனக்கும் அசிங்கம். நமக்கும் அசிங்கம். பேயாம இரு. நாம்ம ஒரு வழிப் பண்றேம்!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "இனுமே என்ன வழியப் பண்ணுவே! பண்றதெல்லாம் பண்ணிப்புட்டே!தலைக்கு மேல வெள்ளம் போயாச்சி!"ன்னு உடம்பெல்லாம் நடுங்குது அத்தைக்காரிக்கு.
            "அதாங்! அதாங்! தலைக்கு மேல வெள்ளம் போனா சாண் போனா ன்னா? மொழம் போனா ன்னா? கதயெ முடிச்சிடறேம்!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "அட மாபாவி! ஆசைக்கி கையப் பிடிச்சன்னு பாத்தா... கொல பண்ணப் போறேங்றீயடா எமகாதகா! ஏம்டா ஒம் புத்தி இப்பிடிப் போவுது? ஒம் வாழ்க்கயயும் சீரழிச்சி, எம்மட வாழ்க்கயும் சீரிழிச்சி, அவரு ன்னடா தப்பு பண்ணாரு? அவரப் போயிக் கொல்லப் போறேங்றீயேடா துரோகீ!"ன்னு அத்தைக்காரி சீறுது.
            "பேயாம இரு! பேசுறதுக்க நேரமில்ல!"ன்னு வேட்டியை அரையில முடிஞ்சு கட்டுனவரு பக்கத்தால இருக்குற சமையலு கட்டுல நொழைங்சி நல்ல வெறவு கட்டையா ஒண்ண எடுத்துக்கிறாரு. அவரு பின்னாடியே ஓடி வந்த அத்தைக்காரி அவரு காலப் பிடிச்சி, "இந்த ஒரு தப்போட போவட்டம்டா மாபாவி! அவரு எந்த தண்டனெ கொடுத்தாலும் நாம்ம ஏத்துக்கிறேம். நீயி இப்டியே கொல்லப் பக்கமா ஓடிப் போயிடா மாபாவீ! அவரு ஒரு சின்ன ஈ, எறும்புக்குக் கூட துரோகம் நெனைக்காத உத்தமருடா! சொன்னா கேளுடா! இத்தோட வுட்டுடா! ஓடிப் போயிடுடா மாபாவீ!"ன்னு கெஞ்சுது அது.
            "வெளியில விசயம் தெரிஞ்சா எம்மட மானமுல்ல போவும்!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "ஏம்டா இந்த மான மருவாதியில்லாம் பாத்துதாம் எம் மேல கைய வெச்சியாடா?" அப்பிடிங்குது அத்தைக்காரி.
            "நாம்ம கைய வெச்சேம் செரி! ஒங் கையி பூப்பறிக்க போச்சுதா? தட்டி விட வேண்டியத்தான்னே? அப்பல்லாம் கட்டிப் பிடிச்சுப்புட்டு ன்னா கேள்வி கேக்கற நம்பள? மருவாதியா கால விடு. இல்லே ஒம் தலையில ஒரே போடா போட்டுட்டுப் போயிட்டே இருப்பேம்."ங்றதோட வெறகுக் கட்டைய அத்தைக்காரி தலையில போடுறதுக்கு ஓங்குறாரு சின்னவரு. அவரு ஓங்குன வேகத்துல பயந்து காலை விடுது அத்தைக்காரி.
            வேக வேகமா சுத்துக்கட்டுல வெறகுக் கட்டையோட நொழையுறாரு சின்னவரு. அவர பின்னாடியே அத்தைக்காரியும் எழுந்திரிச்சி ஓடி வருது. அங்க உக்காந்தது உக்காந்தபடியே வெறிச்சிப் பாத்துகிட்டு இருக்காரு மாமங்காரரு. அவர்ர பாக்குறதுக்கு அப்படியே செலையா சமைஞ்ச மாதிரி இருக்குது. ஒரு மனுஷன் பாக்கக் கூடாத காட்சியையெல்லாம் பார்த்தா செலையா சமைஞ்சிடுவாங்றது உண்மைத்தாம் போலருக்கு.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...