30 Oct 2019

உத்திரத்துல ஒரு சுமை




செய்யு - 253
            மூணு அடி நீட்டு இருக்குற வெறகுக்கட்டை முண்டும் முடிச்சுமா இருக்கு. மாமங்காரரு பக்கத்துல அடிக்கிறதுக்குத் தோதா வந்த சின்னவரு அந்த வெறகுக்கட்டையை அப்படியே மாமங்காரரோடு வலப்பக்க செவுளுல அடிக்கிறதுக்காக ஓங்குறாரு. அவரு அடிச்சி அவர்ர கொலைகாரரா ஆக்கிடக் கூடாதுன்னோ என்னவோ மாமங்காரரு இடப்பக்கமா சாயுறாரு. சின்னவரு அடிச்ச அடி காத்துக்கு விழுந்ததோடு சரி. வெறகுக்கட்டையை அப்படியே போட்டுட்டு மாமங்காரரோடு ஒடம்பைத் தொட்டுப் பார்த்தா சில்லுன்னு இருக்கு. மூக்குல வெரல வெச்சுப் பார்த்தா மூச்சும் ஓடல, ஒண்ணும் ஓடல. பாக்கக் கூடாத அந்தக் காட்சியைப் பாத்த நேரத்துல மாரடைச்சு அவரோட உசுரு பிரிஞ்சிருக்கணும்.
            கொலை செய்யணும்னு வந்தருவதாம் சின்னவரு. கொலையைப் பண்ணியிருந்தா கூட ஒடம்பு அவ்வளவு வெடவெடக்காது போலருக்கு. மாமங்காரரு அவரா செத்துக் கெடக்கிறதுப் பார்த்து ஒடம்பு அப்படியே அவருக்கு வெடவெடத்துப் போவுது. வியர்த்து விறுவிறுத்துப் போவுது. அத்தைக்காரி ஓடிப் போயி அவர்ர் கட்டிப் பிடிச்சிகிட்டு, "என்னங்க! போய்டீங்களா?"ன்னு கதறுது. சின்னவரு ஓடிப் போயி அத்தைக்காரியோட வாயைப் பொத்துறாரு.
            "யத்தே அழுது ஊரக் கூட்டிப்புடாதே! ஊருக்குள்ள சந்தேகம் வந்துப் போச்சுன்னா சரிபெட்டு வராது. சித்தே சும்மாயிரு!" அப்பிடிங்கிறாரு.
            "பாவி! கொலகாரப் பாவி! எம் புருஷம் செத்ததுக்கு வாய் விட்டு அழ முடியாதபடி பண்ணிட்டீயேடா மாபாவி! நீயி நல்லா இருப்பீயா? ஒங் குடும்பம் வெளங்குமா? ஒன்னாலத்தாம்டா அவரு செத்தாரு! கொன்னுபுட்டீயேடா பாவி!" அப்பிடிங்குது அத்தைக்காரி.
            "பேயாம இரு! ஆனது ஆயிப் போச்சு! இதுலேந்து வெளில வரணும். இப்டி இவரு கெடந்தா எப்படிச் செத்தாரு? ஏஞ் செத்தாரு?ன்ன கேள்வி வரும். நீயும் மாட்டிப்பே! நாமளும் மாட்டிப்பேம்! கொல பண்ணிட்டுக் கூட செயிலுக்குப் போயிட்டு வந்து வாழ்ந்துப்புடலாம். இந்த மாதிரி சங்கதின்னு ஊரு பேச ஆரம்பிச்சுன்னா ஊரு ஒலகத்துல வாழ முடியாது. அதால நாம்ம சொல்றதக் கேளு!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "கொலகார பாவிப் பயலே! இப்டி பொம்ம மாரி ஆட்டி வைக்கிறீயே? நீயி நல்லா இருப்பீயா? ஒனக்கு நல்ல சாவு வருமா? இன்னும் பண்ணுறதுக்கு ன்னா இருக்குன்ன தெரியலீயே?" அப்பிடிங்குது அத்தைக்காரி.
            "இந்தச் சாவ ஊருல எவனும் நம்ப மாட்டாம். பெரிய கயிறு இருந்தா கொண்டா யத்தே!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "பெரிய கவுத்த வெச்சு ன்னடா பண்ணப் போறே?" அப்பிடிங்குது அத்தைக்காரி.
            "இவர்ர தொங்க வுட வேண்டியதுத்தாம். வேற வழியில்ல."
            "ஏம் தொங்குனார்னு ஊருல கேள்வி எழும்புனா ன்னாடா பண்ணுவே?"
            "கொன்னே புடுவேம் ஒன்னய. அதெல்லாம் ஏம் தொங்குனார்ன்னு ஊருகாரனே காரணத்த கண்டுபிடிச்சுச் சொல்லுவாம். நீயே எடுத்துக் கொடுக்காதே."
            "அவர்ரா செத்தவரை மறுபடியும் தொங்க வைக்குறீயேடா பாவி! கொலைக்கு அஞ்ச மாட்டாத பயலாலடா இருந்திருக்கே. ஒங்கிட்ட போயா முந்தி விரிச்சிப் படுப்பேம்?"ன்னு தலையில அடிச்சிக்குறா அத்தைக்காரி.
            "ஒங்கிட்ட கேட்டா வேலைக்கி ஆவாது!"ன்னு சின்னவரே வூடு முழுக்க தேடிப் பார்த்து ‍தோதா கயித்து ஒண்ண எரவானத்துலேந்து கொண்டு வந்து ஒரு முனைய மாமங்காரரோட கயித்துல சுருக்கப் போட்டு, மறுமுனைய உத்திரத்துல தூக்கிப் போட்டு, மாமங்காரது ஒடம்ப கட்டில்ல தூக்கி நிறுத்தி கிணத்துல வாளிய இழுக்குறாப்புல இழுக்குறாரு. ஒடம்பு நேரா நின்னதும் கயித்த அப்படியே பிடிச்சுகிட்டு உத்திரத்தை நோக்கி ஒரு எம்பு எம்பி அது மேல ஏறிகிட்டு மறுமுனை கயித்துல வாகா முடிச்சப் போட்டுட்டு கீழே இறங்கி, கட்டில்ல அப்படியே உடம்பு தொங்குற அளவுக்கு அந்தாண்ட பக்கத்துல இழுத்து வுடறாரு. பாக்குறவங்களுக்கு கட்டில்ல நின்னு சுருக்குப் போட்டுகிட்டு அப்படியே கட்டிலுக்குப் பக்கத்துல தொங்குற மாதிரி இருக்கணும்னு ஒரு யோசனையில செஞ்சு முடிக்கிறாரு.

            முடிஞ்ச பின்னாடி அத்தைக்காரியப் பார்த்து, "யத்தே! நாம்ம அப்டியே கொல்லப் பக்கமா வெளியில போயி ஊருல சகஜமா பேசிகிட்டே மாமங்காரர்ர ஒரு பார்வைப் பாக்க வர்ற மாதிரி, ஊருல ரெண்டு மூணு பேர் அழைச்சிட்டு வர்ரேம். நீயி ஒண்ணும் தெரியாத மாதிரி, சமையலுகட்டுல வேல பாத்துட்டு இருக்குறாப்புல, வேல பாத்துட்டு இரு. யய்யோ மாமா போயிட்டீங்களேன்னு ஊரு காரங்களோட நாம்ம சத்தம் கொடுத்து அழுவேம். அப்ப சமையலு கட்டுலேந்து சத்தங் கேட்டு ஓடி வர்றாப்புல ஓடி வந்துடு. நெலமையச் சமாளிச்சுப்புடலாம். நாம்ம ஊருக்குள்ளப் போயி அழைச்சிட்டு சகஜமா பேசி அழைச்சுப்புட்டு வாரத்துக்கு அர மணி நேரத்துக்கு மேல ஆவும் பாத்துக்கோ!" அப்பிடிங்கிறாரு சின்னவரு அத்தைக்காரியோட காதோரமா குசுகுசுன்னு.
            அத்தைக்காரி ஒண்ணும் பேசல. கயித்துல தொங்கிகிட்டு இருக்கற புருஷங்காரனை வெறிக்கப் பாக்குது.
            "அதாங் சொல்றேம்ல. சமையலுகட்டுப் பக்கம் போ! இஞ்ஞ இருக்காதே. தெருக்கதவு லேசா தொறந்து இருக்கட்டும்"ன்னு தெருபக்க கதவைப் பாக்கறாரு. அது லேசா தொறந்துதாம் இருக்கு. ஆனா அத்தைக்காரி உக்காந்த எடத்தை விட்டு நகர்றாப்புல தெரியல. இவரே அத்தைக்காரிய கக்கத்துல கையைக் கொடுத்து அதைத் தூக்கி இழுத்துகிட்டு சமையலுகட்டுப் பக்கமா கொண்டாந்து வுடுறாரு. வுட்டுப்புட்டு, "சொன்னதெல்லாம் ஞாபவம் இருக்கட்டும். இதெ நல்லபடியா சமாளிச்சபுட்டா ஒன்னய நல்லபடியா வெச்சு எப்டியோ காபந்து பண்ணுவேம் பாத்துக்கோ! கைவுட்டுப்புடுவேன்னு நெனைச்சிப்புடாதே! மாமங்கார்ரேம் செத்ததும் நல்லதாத்தாம் போச்சு!"ங்றாரு சின்னவரு. அதுக்கும் அத்தைக்காரிகிட்ட எதுவும் தெரியல. அது பேயடிச்ச மாதிரி அப்படியே அது சயைமலுகட்டுப் பக்கமா உக்காந்தது உக்காந்தபடி உக்காந்திருக்கு.
            "சூதானமா இருந்தாகணும். சொதப்பிடப்படாது. சொதப்புன்னா ரண்டு பேருந்தாம் மாட்டிக்குவேம். ரெண்டு பேருக்குத்தாம் அசிங்கம். புத்தியா இருந்துக்கணும். அதாங் நல்லது. இதுலேந்து வெளியாகணும்!"ங்றாரு சின்னவரு. சொல்லிப்புட்டு இதுக்கு மேல தாமசம் பண்ண முடியாதுன்னு கொல்லைப்பக்கம் வழியா கொல்லைக்கதவ திறந்துகிட்டு சுத்திலும் முத்திலும் ஒரு பார்வையைப் பாத்துகிட்டு கொல்லைக்காட்டு வழியா யாருக்கும் தெரியாம வெளியில போறாரு.
            வெளியில போன சின்னவரு மாமங்காரரு வேலைப் பாக்குற எடத்துக்கு ஒண்ணும் தெரியாத ஆளு போல போவுறாரு. அங்கப் போயி வூட்டுக்கு முன்னாடி நின்னுகிட்டு, "மாமா! மாமா!"ன்னு சத்தம் கொடுக்குறாரு. இவரு சத்தம் கேட்டு வேலை பாத்துகிட்டு இருக்குற ஆளுங்க, "யாரது கிட்டுவா? மாமா இப்பதாம் சித்த நேரத்துக்கு மின்னாடி ஒடம்புக்கு ஆகலன்னு வூட்டுப்பக்கம் கெளம்பிப் போனாரு!"ன்னு பதில் குரல் கொடுக்குறாங்க. இந்தப் பதில் சின்னவரோட மூளையில நல்லா வேலை செய்யுது. வேக வேகமா வேலை பாத்துகிட்டு இருந்த ஆட்கள் பக்கமா ஓடியாந்து, "அடப் பாவிகளா! ஒடம்புக்கு முடியலன்னு கெளம்புனாரா? யாருடா தொணைக்குப் போனது?" அப்பிடிங்கிறாரு.
            "யாரும் போவலயே கிட்டு! என்னவோ ஒடம்பு வெடவெடன்ன வருது. நீஞ்ஞ வேலயப் பாருங்க. நாம்ம வூட்டுக்குக் கெளம்புறேம்ன்னு சொல்லிட்டுக் கெளம்புனாரு. யாரும் தொணைக்கு வர்றணுமான்னு கேக்கத் தோணலேயே கிட்டு!" அப்பிடிங்கிறாங்க வேலை பார்க்குற ஆளுங்க.
            "ஒடம்புக்கு முடியலன்னு சொன்னா யாராச்சிம் ஒருத்தராவது தொணைக்குப் போயி கொண்டு வுட்டுப்புட்டு வாரணும். இப்டியா அலட்சியமா இருக்குறது? மனுஷம் வூடு போயிச் சேர்ந்தாரா? வழியில எங்காணும் வுழுந்தாரான்னு யாருக்கு ன்னா தெரியும்? ஒண்ணு கெடக்கு ஒண்ணு ஆயிப் போனா யாருடா என்னாடா பண்றது? ஒரு வேல விசயமா மாமா கூட பேசலாம்னு வந்தா இப்பிடி ஒரு குண்டத் தூக்கிப் போடுறீங்களேடா மட சாம்புராணிப் பயலுகளா? நாம்ம ஒரு ஆளு இல்லேன்னா இப்பிடித்தாம். நீஞ்ஞ ஒரு பயலும் அந்தாண்ட இந்தாண்ட நகர மாட்டீங்க. நாமளே போயிப் பாக்குறேம்!" அப்பிடின்னு கெளம்ப எத்தனிக்குறாரு சின்னவரு.
            "யய்யா கிட்டு! சித்தே இரு. வூட்டுக்காரங்ககிட்ட சொல்லிட்டு இஞ்ஞ ரெண்டு பேராவது வர்றேம்!" ன்னு ரெண்டு ஆளுங்க வூட்டுக்காரரைத் தேடிகிட்டு கொல்லைப் பக்கமா ஓடிப் போயிச் சொல்லிட்டு வருது.
            வர்றப்ப ரெண்டு பேரா வர்றதா சொன்ன ஆளுங்க மூணு பேர்ரா வர்றாங்க. சின்னவரு இதைத்தானே எதிர்பார்த்தாரு. அவங்கள அழைச்சுகிட்டு வேக நடையில போறாரு. இவரு முன்னால நடக்க அவங்க இவரோட நடைக்கு ஈடு கொடுக்க முடியாம ஓட்டமும் நடையுமா ஓடி வர்றாங்க. நாலு தெரு தள்ளி இருக்குற மாமாங்காரரு வூட்டுல நொழைஞ்சதும், "யத்தே! மாமா!"ன்னு ஒப்புக்கு ஒரு குரல கொடுத்துப்புட்டு, "உள்ள இருக்காங்க போலருக்கு. கதவு லேசா தொறந்துதான இருக்கு! வாங்க உள்ள போயிப் பாப்பேம்! மாமாக்கு என்னாச்சோ ஏதாச்சோ? எப்பிடிருக்கோ?"ன்னு அவங்களையும் அழைச்சுகிட்டு திண்ணைப் படிகட்டுகள்ல ஏறி உள்ள நுழையுறாரு சின்னவரு.
            அடுத்துப் பண்ண வேண்டிய சங்கதிங்க எல்லாம் சின்னவரோட மனசுல தயாராத்தானே இருக்கு. சுத்துக்கட்டுல முத்ததுக்கு எதித்தாப்பு தென்னண்டையில கட்டிலு பக்கமா போறவரு, "யய்யோ மாமா!"ன்னு அடிவயித்துலேந்து குரலு எடுத்துக் கொடுக்குறாரு. அதைப் பாத்துப்புட்டு மத்த மூணு பேரும், "யய்யயோ மாமா! போயிட்டீங்களா!"ன்னு மேலும் குரல எடுத்துக் கொடுக்குறாங்க. ஆளாளுக்கு தலையிலயும் மாருலயும் அடிச்சிகிட்டு அழ ஆரம்பிக்கிறாங்க.
            "எலே அழுதுட்டு இருந்தா சரிபெட்டு வராது. நீயி போயி ஊருல நாலு பேர்ர கூப்புட்டு வா! நீயி உத்தரத்துல ஏறி கவுத்த அவுறு."ன்னு சொல்லிகிட்டு இருக்கிறப்பவே சின்னவரு மனசுக்குள்ள இன்னும் அத்தைக்காரி ஏம் வரலேங்ற சந்தேகம் தட்டுது. உடனே சின்னவரு, "நாம்ம வூட்டுக்குள்ளாரப் போயி யத்தே எங்கண்ணு பாக்குறேம்!"ன்னு சொல்லிட்டு சமையலுகட்டுப் பக்கம் ஓடுறாரு. சயைமலுகட்டுப் பக்கம் ஓடிப் போயி சமையலுகட்டுக்குள்ள பாத்தா...
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...