காலம்.
இலக்கியம்.
காலம் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது.
கடிகாரத்தைக் கவனித்தால் டக் டக் என்ற சத்தம் கேட்கிறது. இதயத்தில் காது வைத்துக் கேட்டால்
அல்லது ஸ்டெத்தாஸ்கோப்பை வைத்துக் கேட்டால் லப் டப் என்கிறது. அது காலத்தின் சத்தம்.
சத்தத்தோடு காலத்தைக் கடந்து கொண்டோ, கடத்திக் கொண்டோ இருக்கிறது கடிகாரம். சத்தத்தோடு
உயிர்த்துடிப்பு முடிய வேண்டிய காலத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது இதயம். சத்தம்
காலத்தின் கணக்கீடு. சத்தம் நின்றால் எல்லாம் நின்று விடுகிறது. காலம் நிற்காது. கணக்கிடப்பட
வேண்டிய ஒரு மனிதர் கணக்கிட இல்லாமல் போகிறார் அல்லது எண்ணிக்கையில் ஒன்று குறைகிறார்.
காலம் ஒவ்வொன்றாக சாகடிக்க நினைக்கிறது.
இலக்கியம் காலம் சாகடிப்பதை உலாத்தி விட நினைக்கிறது. கண்ணகியின் அறப்பாட்டு அப்படித்தான்
உலவிக் கொண்டிருக்கிறது. பாண்டவர்களும், கெளரவர்களும் அப்படித்தான் சண்டையிட்டுக்
கொண்டிருக்கிறார்கள். இராமனது வில் மறைந்திருந்து அப்படித்தான் வாலியின் நெஞ்சைப்
பதம் பார்க்கிறது. ஏகலைவனின் கட்டைவிரல் அறுந்து தொங்குகிறது.
காலம் எதையும் கணக்கில் வைத்து அழிப்பதில்லை.
அது அழிக்கும். அது அழிப்பதற்கு நாம் ஒரு காலக்கணக்கைத் தருகிறோம். மனிதர் தரும் இந்தக்
காலக்கணக்கு நாவலாசிரியருக்குப் பிடிப்பதில்லை. காலத்தின் கணக்குப்படி தர்மம் முடிந்து
விட்டதாக, அதர்தம் தொடங்கி விட்டதாக ஒரு தவறான கணக்கு தரப்படும். அதை நாவலாசிரியர்
நிராகரிக்கிறார். காலத்தில் அப்படி எந்தக் கணக்கும் இல்லை. காலத்திற்குத் தெரிந்தது
ஆக்குவதும் அழிப்பதும்தாம். அது ஆக்கும், அழிக்கும். காரணத்தை மனிதர்கள் கற்பிப்பார்கள்.
எது நியாயம்? எது நேர்மை? எது தர்மம்?
எது அறம்? அப்படியெல்லாம் எதுவுமில்லை. மனிதர்கள் ஆக்குவார்கள் அல்லது ஆகுவார்கள்.
அழிப்பார்கள் அல்லது அழிவார்கள். விருப்பமான ஆக்கத்தை நேர்மை என்றோ, விருப்பமான அழிவை
நியாயம் என்றோ பிரஸ்தாபிக்கலாம். அது யாருடைய விருப்பம்? அது யாருக்கான விருப்பம்?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் ஒரு நேர்மை இருக்கிறது. ஆளாளுக்கு வேறுபடும் நியாயம், நேர்மை, தர்மம்,
அறம் இருக்கிறது.
உயிரை எடுப்பது சட்டத்தின்படி சரியாக இருக்கலாம்.
உயிர்நேயத்தின்படி தவறாக இருக்கலாம். எந்தப் பக்கம் நிற்பது? எதற்காகப் பேசுவது? காலந்தோறும்
நாம் சரிசெய்து கொண்டே இருக்கப் போகிறோம். ஒவ்வொரு சரிசெய்தலுக்கும் உள்ளே தவறான
ஒன்று நடந்து கொண்டே இருக்கப் போகிறது. அதற்கென அதற்கேற்றப்படி புதிய நியாயங்கள்,
புதிய தர்மங்கள் பிறந்து கொண்டே இருக்கப் போகின்றன. புதிது புதிதாக மனிதர்கள் பிறந்து
நியாயங்களையும், தர்மங்களையும் உருவாக்கிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். இன்று தவறாகத்
தெரிந்த நியாயமும், தர்மமும் நாளைச் சரியாகத் தெரியலாம். இன்று சரியாகத் தெரிந்த நியாயமும்,
தர்மமும் நாளைத் தவறாகத் தெரியலாம். மனிதர்கள் மனநிலைகளால் அதை மாற்றிப் பிடிப்பார்கள்
மற்றும் மாற்றிச் செய்வார்கள். ஒருவர் எழுதிய நியாயத்தை இன்னொருவர் மாற்றுவார். இன்னொருவர்
எழுதிய நியாயத்தை மற்றொருவர் மாற்றுவார். அவரவர்க்கு ஒரு நியாயம், ஒரு தர்மம் தேவைப்படுகிறது.
அவரவர் எத்தனை நியாயங்களை, தர்மங்களை வேண்டுமானாலும்
தோற்றுவித்துக் கொள்ளுங்கள். காலத்திற்குத் தெரிந்த ஒரே நியாயமும், தர்மமும் அழிவுதாம்.
அதை அது இறுதியில் செய்யும். அதுவரை நமது நியாயங்களை உலவ விடலாம்.
இப்படியாக,
இவ்வாறாக,
நாவலின் முதல் அத்தியாயத்தை நாம் வெற்றிகரமாக
நிறைவு செய்கிறோம். நாவலின் இரண்டாவது அத்தியாயத்தை நாளைத் தொடங்குவோம்.
காலத்தைக் கட்டுடைக்க நினைக்கும் நாம்
காலத்தின் பிடியில் சிக்குகிறோம்.
*****
No comments:
Post a Comment