அந்தந்த நேரத்துக்கு நடப்பது என்ற ஒன்று
இருக்கிறது. அதை யாரும் எதுவும் செய்ய முடியாது. எழுத்து திருத்த முயலலாம். விளைவை
மாற்றி எழுத முயற்சிக்கலாம். வேடிக்கைப் பார்க்கும் உரிமை மட்டும் அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆதலால் எழுத்து அதைக் காத்திரமாக பதிவு செய்யலாம். உணர்ச்சிகரமாக மீண்டும் அது நிகழக்
கூடாது என சத்தமிடலாம்.
எழுத்து அதுவரை மனதில் உருவாக்கி வைத்திருந்த
தாக்கமெல்லாம் அந்த ஒரு நொடியில் உடைந்து போகலாம். மனிதன் எந்த நொடியிலும் எப்படி
வேண்டுமானாலும் மிருகமாகலாம். மிருகமானவன் எந்த நொடியிலும் அதற்கு நேர்மாறாகவும் திசை
மாறலாம்.
ஒரு நொடி பின்னோக்கிப் பார்க்க வைக்கவோ,
முன்னோக்கி பார்க்க வைக்கவோ செய்வதைத் தவிர எழுத்தால் ஆகப் போவது எதுவுமில்லை.
நடந்த ஒன்றுக்கு சாட்சி எழுத்து. அதன்பின்
எழுத்து செய்தி ஆகலாம். வாத, பிரதிவாதங்கள் ஆகலாம். நீதிபதியின் கரங்களில் தீர்ப்பாகலாம்.
நிகழ்ந்து விட்ட ஒன்றை எழுத்து என்னதான் செய்ய முடியும்?
நிகழ்ந்து விட்ட ஒன்றை எழுத்து மீண்டும்
நிகழாமல் தடுக்கும் என்பீர்கள். உலகில் எத்தனையோ கொலைகள் நிகழ்ந்து விட்டன. தற்கொலைகளுக்குக்
குறைச்சல் இல்லை. வன்முறைகள் எத்தனை எத்தனை என்று எண்ணிச் சொல்லுங்கள். கொலைகள் நின்று
விட்டதா? தற்கொலைகள் நின்று விட்டனவா? வன்முறைகள் முடிந்து விட்டதா? அவையினைத் தொடர்கதைளாக்கி
எழுத்து எழுதிக் கொண்டே இருக்கிறது. எழுதும் ஆட்கள் மாறலாம். விசயம் அதேதான். எழுத்து
எழுதிக் கொண்டே இருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் எழுத்து களைப்படைந்து
அதை எழுதுவதை நிறுத்த முடியாது.
எழுத்தின் சோக நிழல் படிவதை இப்போதாவது
உணர்கிறீர்களா? நீங்கள் உலகை மாற்றப் பிறந்தவர் என்ற எண்ணத்தை இப்போதாவது கைவிடுங்கள்.
அப்படி நினைத்தவர்களால் உலகில் நிகழ்த்தப்பட்ட உயிர்ப்பலிகள் அநேகம். மனிதகுல நன்மைக்கு
என்ற வார்த்தையைத் தயவு செய்து உச்சரிக்காதீர்கள். அந்த வார்த்தை முடை நாற்றமெடுக்கிறது.
ஒரு பெருங்கூட்ட மனித குலத்துக்காக சிறுகூட்ட மனித குலத்தை அழித்தொழிப்பதுதாம் மனிதகுல
நன்மையா என்ற கேள்விக்கு முன் நீங்கள் வாயடைத்துப் போவீர்கள்.
எழுத்து தவறானதிலிருந்து சரியானதைப் பார்க்கிறது
என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களை உத்தமர் என்று காட்டி ஏமாற்றாதீர்கள். உங்களின்
அயோக்கியத்தனங்கள்தாம் உங்களை உத்தமராகக் காட்டுகிறது என்பதை உணருங்கள். இவ்வளவு கெட்டவராக
இருந்தவர் இவ்வளவு நல்லவராக மாறி விட்டாரே என்பதற்கு அல்லவா உலகம் மூக்கில் மேல் விரலை
வைத்து ஆச்சரியப்படுகிறது என்பதை அறியுங்கள்.
நீங்கள் நல்லவர் என்பதற்காக தயவுசெய்து
பெருமை கொள்ளாதீர்கள். உங்கள் நற்பெயரில் புதுப்புது கெட்டவர்களை உருவாக்குகிறீர்கள்.
அப்படி உருவாக்கி உங்கள் பெருமையில் நீங்கள்
கெட்டவர்களை நசுக்குகிறீர்கள். நல்லவர் என்ற கருத்தாக்கம் பெருபான்மையோ, கெட்டவர்
என்ற கருத்தாகம் சிறுபான்மையோ கிடையாது. நீங்கள் நல்லவர் எனும் போது உங்களிடம் இருக்கும்
கெட்டவரைச் சாமர்த்தியமாக மறைக்கிறீர்கள். ஒருவரைக் கெட்டவர் எனும் போது அவரிடம் இருக்கும்
நல்லவரை காணாமல் போகச் செய்கிறீர்கள்.
நீங்கள் நல்லவருமில்லை. கெட்டவருமில்லை.
இரண்டுமாக சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல இருக்கிறீர்கள். உங்களைக் கெட்டவர் என்ற
சொல்லிக் கொள்வதில் வெட்கம். அதில் ஒரு அசிங்கம் பார்க்கிறீர்கள். நீங்கள் எப்படி
கெட்டவராக இல்லாமல் இருக்க முடியும்? நீங்கள் குவித்து வைத்திருக்கும் பணமதிப்பு எவ்வளவு
கெட்டவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது தெரியுமா? உங்களின் ஒவ்வொரு துளி கூடுதல்
பண மதிப்பாலும் துளிதுளியாய் கொள்ளையர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
எழுத்து என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்!
நீங்கள் எழுத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். எங்கள் புலவர்கள்
உங்களைப் பாடுவார்கள். நீங்கள் பராக்கிரமர் என்று புகழ்வார்கள். நீங்கள் எழுத்துகளுக்குப்
பொற்காசுகள் தருவீர்கள். உங்கள் காசுகளால் எழுத்து உங்கள் செவியை நிறைக்கும் பாடலாக
ஒலிக்கும், காற்றைக் கிழிக்கும். பேனர்களாய், பிளக்ஸ்களாய் வாசகங்களாய்ச் சிரிப்பீர்கள்.
எழுத்து கைகட்டி உங்களின் நாமகரணங்களுக்காக வேலை பார்க்கும்.
ஆனால்...
விதி
விதியைப் பாருங்கள்!
எழுத்து ஒரு
நாள் சம்மட்டியால் அடிக்கும். தயவுசெய்து எழுத்தைக் குறை சொல்லாதீர்கள். ஒவ்வொரு
புகழ்ச்சிக்கும் சமமான இகழ்ச்சி உண்டு. நீங்கள் எந்த எழுத்தைக் கொண்டு உங்களைப் புகழ
வைத்தீர்களோ, அதே எழுத்தைக் கொண்டு இன்னொருவர் உங்களை இகழ வைப்பார். அது எழுத்தின்
பிழையன்று. எழுத்து எல்லாருக்கும் சேவை செய்யும், துப்பாக்கி யார் சுட்டாலும் சுடும்
என்பது போல.
எழுத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
அது கைப்பாவையாக இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் நாம் நாவலுக்குள் நுழைந்து
விட்டதையும் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஒரே அரிசியில் இட்டிலி சுடுவதைப்
போல, தோசை வார்ப்பதைப் போல, இடியாப்பம் போடுவதைப் போல, சோற்றை வடித்துக் கொட்டுவதைப்
போல எப்படி வேண்டுமானால் எழுத்துகளைச் சேர்த்து சமைக்கலாம். இடியாப்பமும், துவையலும்
பொருந்தாதைப் போல இந்த உவமை அவ்வளவு பொருத்தமில்லைத்தான். எழுத்தின் மூலம் இதை வாசிப்பவர்
வருங்காலத்தில் பொருத்தமான உவமையைக் கண்டுபிடிக்காமல் இருக்க மாட்டார். எழுத்து வருங்கால
சாத்தியம் உள்ளது மற்றும் கொண்டது.
எழுத்தின் முன்னால் ஒருவர் துரோகியாகலாம்,
வீரர் ஆகலாம், பழிவாங்கலாம், புகழ் ஏணியில் ஏறலாம்.
இந்த எழுத்துதானே நம்மை வழிநடத்துகிறது
என்பதை நாவலாசிரியர் வாசகர்களுக்கு அழுத்தமாகப் புரிய வைக்க விரும்புகிறார். அதற்காக
இவ்வளவு அத்தியாயப் பத்திகளை நாவலைத் துவக்குவதற்கு முன் எடுத்துக் கொண்டதற்காக மன்னிப்புக்
கோருகிறார். அந்த மன்னிப்பைக் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் வாசகர்களின் சுதந்திரம்.
*****
No comments:
Post a Comment