31 Jul 2019

உலகப் போரை நிறுத்தியவர்கள்!



செய்யு - 162
            நாம்ம ஒண்ணு நெனைச்சா தெய்வம் ஒண்ணு நெனைக்குதா? தெய்வம் ஒண்ணு நெனைச்சா நாம்ம ஒண்ணு நெனைக்கிறோமான்னு தெரியல. ஒவ்வொருத்தரு மனசுலயும் ஒவ்வொரு நெனைப்பு ஓடுது. அதாலதாம் பாருங்க ஒருத்தருக்கு ஒருத்தரு இங்க மனசு ஒத்துக்கிறதில்ல. மனசு ஒத்துக்காததால ரெண்டு பேரும் கெட்டவங்க இல்ல. அவரு மனசுல வேற நெனைப்பு ஓடுது, இவரு மனசுல வேற நெனைப்பு ஓடுது அவ்வளவுதான். இது வெளியாளு ரெண்டு பேருக்கும்ன்னா எந்தப் பிரச்சனையும் இல்ல. இவரு பாட்டுக்கு இவரு பக்கம் ஒதுங்கிப்பாரு. அவரு பாட்டுக்கு அவரு பக்கம் ஒதுங்கிப்பாரு. பெறவு மனசு மாறுனா சேர்ந்துப்பாங்க. இல்லேன்னா ஒதுங்கியே இருந்துப்பாங்க.
            அதே ரெண்டு பேரு உறவு முறையிலயோ, கிராமத்துக்குள்ளயோ வாராங்கன்னு வையுங்களேன் முட்டிப்பாங்க! மோதிப்பாங்க! ஊருலயும் உறவுலயும் வெலக்கி விட ஆளு இருக்கும். ஒரு மாதிரியா ரெண்டு பேரையும் அசமடக்கி வெச்சிப்புடுவாங்க.
            அதே ரெண்டு பேரு ஒரு குடும்பத்துக்குள்ள இருந்தாங்கன்னா வெச்சுக்குங்களேன்! நிலைமை கொஞ்சம் கஷ்டந்தான் இல்லீங்களா! எப்பப் பார்த்தாலும் குடும்பத்துக்குள்ள புகைஞ்சிகிட்டே இருக்கும். இது குடும்பத்துக்குள்ள இருக்குற மத்தவங்களுக்கு ரொம்பப் பெரிய ரோதனையாப் போயிடும்.
            அதே ரெண்டு பேரு கணவனும் மனைவியுமா அமைஞ்சிட்டாங்கன்னா வையுங்க ... அதுலயும் ஒருத்தரோட நெனைப்பும் போக்கும் சரியில்லன்னா வெச்சிக்குங்க ... என்னாகும்னு நீங்கதான் சொல்லணும்!
            அப்படிதான் ஆகிப் போச்சி தேசிகாவோட நிலைமை. தேசிகா ஒரு பக்கம்னா அதெ கட்டிக்கிட்ட மாப்பிள்ளை இன்னொரு பக்கம். ரெண்டுக்கும் முட்டிக்குது, மொறைச்சிக்கிது, உரசிக்கிது, பத்திக்கிது.
            கல்யாணம் பண்ண கொஞ்ச நாளு வரைக்கும் அதுக மாதிரி ஒரு ஜோடிய நீங்க ஒலகத்திலேயே பார்க்க முடியாது. உசரம், நெறம், ஒடம்பு கனம்னு ரெண்டுக்கும் நல்ல பொருத்தம். அவ்ளோ அம்சமா ஜோடி அமையாது. ஜோடில்ல ஒண்ணு நெட்டையா, இன்னொன்னு குட்டையா, ஒண்ணு சிவப்பா, இன்னொன்னு கருப்பா, ஒண்ணு அழகா, இன்னொன்னு சுமாரா, ஒண்ணு குண்டா, இன்னொன்னு ஒல்லியா இப்படி அமைஞ்ச சோடிங்கதான் இங்க அதிகம். அதாலயே அந்த ஜோடிய பார்க்க பார்க்க அதிசயமா இருக்கு. ரெண்டும் சேர்ந்துகிட்டு சினிமாவுக்குப் போறதும், உறவு முறைங்க வீடுகளுக்கு விருந்துக்குப் போறதும், ஊர சுத்தி டூருக்குப் போறதும்னு பார்த்தவங்க கண்ணெல்லாம் பூத்துதான் போச்சுது. எல்லாம் கொஞ்ச நாளுதான். இப்போ பாருங்க யாரு கண்ணு பட்டுச்சுதோ, எவங் கண்ணு பட்டுச்சுதோன்னு கணக்கா அடிச்சிக்குதுங்க. அடி அடின்னா அப்படி அடி. ஆம்பள கணக்கா தேசிகாவும் மல்லுக்கு நிக்குது. பொம்பளைங்க சண்டைய ஆரம்பிச்சா விடாத கணக்கா தொணதொணன்னு பேசிட்டு இருப்பாங்களே! அந்த மாதிரி மாப்பிள்ளையும் பேசிகிட்டு நிக்குது. இதுங்க ரெண்டுக்கும் பஞ்சாயத்துப் பண்றதே பெரியவங்களுக்குப் பெரிய வேலையா போவுது.
            பஞ்சாயத்துப் பண்ண பெரியவங்க போறப்பதான் நிறைய விசயம் விளங்குது. மொத ரெண்டு முறை பஞ்சாயத்துப் பண்ணப்போ வரைக்கும் மாப்பிள்ளையோட வீடு திருவாரூர்ல நாகப்பட்டிணம் ரோட்டுல இருக்குற அந்த பெரிய வீடுதான். நாலைஞ்சு மாசம் கழிச்சி பஞ்சாயத்துப் பண்ணப் போறப்ப வீடு அந்த ரோட்டிலேர்ந்து அப்படியே வடக்கே போயி மேற்கே திரும்புனா ஒரு பக்கமாக சாய்ப்பா இருக்குற ரயிலு ஓடு போட்ட வீடா இருக்கு. ரெண்டாயிரம் சதுர அடியில அந்த வீடு எங்கே? எரநூறு சதுர அடியில இந்த வீடு எங்கேங்ற மாதிரி இருக்கு. என்னடா இது! ஒரு நாலைஞ்சு மாசத்துல இப்படியே வீடு இடம் விட்டு இடம் ஓடி இளைச்சா போகும்னு பார்த்தா, அதுதாங் மாப்பிள்ளையோட உண்மையான வீடாம். அந்த வீடும் சொந்த வீடு இல்லையாம். வாடகை வீடாம். அப்போ நாகப்பட்டிணம் ரோட்டுல இருந்த வீடு டூப்ளிகேட் வீடா? இல்ல மாயமந்திரம் செஞ்சு வெச்சா வீடான்னா கேட்டா... அது மாப்பிள்ளையோட பிரெண்டு வீடாம்.
            ரொம்ப நாளா நம்ம மாப்பிள்ளைப் பையனுக்கு பொண்ணு தேடியிருக்காங்க! சொந்த வீடும் சுய தொழிலும் இல்லாதவனுக்கு எவன் பொண்ணு கொடுப்பான். அதாம் மாப்பிள்ள திருச்சியில நகைக்கடையில வேலையில இருக்காரே! அவர எப்டி சுயதொழில் இல்லாதவரன்னு சொல்லலாம்னு ஒங்களுக்குத் தோணலாம். அது எப்டிங்றத கொஞ்சம் பின்னால சொல்றேன். இப்ப விசயத்து வந்திடலாம். ஒண்ணும் இல்லாதவன்னு ஒருத்தனும் பொண்ணு கொடுக்கலன்னதும் வெறுத்துப் போயிருக்கானுவோ மாப்பிள்ளை வீட்டு சனங்க. அப்பதாம் யோசனைப் பண்ணியிருக்கானுங்க அவனுங்க. இப்படி இருந்தா எவனும் பொண்ணு கொடுக்க மாட்டானுங்கன்னு, மாப்பிள்ளைப் பையனோட பள்ளியோடத்திலேர்ந்து படிச்ச பால்ய சிநேகிதனோட கையில காலுல விழுந்து அந்த வீட்டை மூணு நாளு மாசத்துக்குக் கொடுப்பா! கல்யாணத்த நடத்தி முடிச்சிட்டு கொடுத்துடறோம்னு மன்றாடியிருக்கானுங்க.
            கூட படிச்ச பால்ய சிநேகிதனாச்சே! மனசு உருகிப் போயி கொடுத்துட்டான். அந்த வீட்டை மாப்பிள்ளையோட வீடுன்னு சொல்லி கல்யாணத்த முடிச்சிப்புட்டானுங்க அவனுங்க. அந்த வீட்டையும்தான் இந்த முருகு மாமாவும், லாலு மாமாவும் போயிப் பார்த்தா... மாப்பிள்ளை வீட்டுக்காரனுங்க சந்தேகப்படறதா நெனைச்சிப்பாங்கன்னு நெனைச்சிகிட்டு போயி பார்க்காம விட்டுட்டாங்க இல்லீயா! போயிப் பார்த்து கொஞ்சம் அக்கம் பக்கத்துல சாதி சனத்துகிட்ட நல்லா விசாரிச்சிருந்தா உண்மையைக் கண்டுபிடிச்சிருக்கலாம். இந்த ரெண்டு மாமாக்களுக்குமே அவங்க நெனைக்கிறதுதாம் சரி, மத்தவங்க நெனைக்கிறதெல்லாம் தப்புங்ற மாதிரி எப்போதும் ஒரு மனக்கிறுக்கு இருக்கே. அப்புறம் எப்பிடி விசாரிக்கப் போறாங்க? இந்த ரெண்டு பேருமே ஆளு பார்த்து பேசுற ஆளுங்க. கொஞ்சம் பொருளாதாரத்துல இறக்கமா இருந்தா அந்த ஆளுங்களோட மூஞ்சியை உடைக்கிற மாதிரிப் பேசுவாங்க. அவங்கள விட பொருளாதாரத்துல ஏத்தமா இருக்குற ஆளுங்ககிட்ட அப்படியே பம்மிப் போவாங்க.
            மாப்பிள்ளை வீட்டோட அத்தனை ஜகஞ்ஜால வேலைகளைத் தெரிஞ்சிருந்து எவனாவது சொன்னாலும், "எங்களுக்குத் தெரியாத விசயமா? நாங்க அறியாத சங்கதியா? எங்க வூட்டுப் பொண்ணுக்கு ந்நல்ல எடத்துல கல்யாணம் ஆகப் போவுதுங்ற பொறாமையில சொல்றீயா?"ன்னு கேட்கக் கூடிய ஆளுங்கதான் ரெண்டு பேரும். அதிசயமா அஞ்சு காலு முயல்ல ஒண்ணு பிடிச்சாங்கன்னா வெச்சிக்குங்க ஒலகத்துல இருக்குற எல்லா முயலுமே அஞ்சு காலு முயல்னு சொல்ற ஆளுங்க வேற. அதுவும் அவுங்க வீட்டுக்கு காருல வந்து எறங்குனா போதும். அவங்கல்லாம் அவங்கள பொருத்தமட்டில்ல நல்லவங்க மற்றும் யோக்கியனுங்க. பஸ்லேயோ, நடந்தோ, சைக்கிள்ளயோ போயி எறங்குறவங்க அவங்கள பொருத்தமட்டில் கெட்டவங்க, மட்டமானவங்க, ‍அயோக்கியனுங்க, லாயக்கு இல்லாதவங்கதான். அப்படித்தான் அவங்களோட நெனைப்பு இருந்திச்சி.
            மாப்பிள்ளைத் திருச்சியில வேற வேலைப் பார்க்கிறார்ல. திருவாரூர்லேந்து திருச்சிப் போயி வேலைப் பார்க்கிறார்னா சும்மாவா? அவரோட திறமைக்கு திருவாரூ பத்தாதுங்ற போல அப்படின்னுல்ல அவங்க நெனைச்சிகிட்டு இருந்துட்டாங்க. அதுலயும் ஒரு விசயம் இருந்திச்சிப் பாருங்க! முன்னாடி பேசுனோமோ மாப்பிள்ளையோட சுயதொழிலு பத்தி ...
            திருவாரூர்ல வேலைப் பார்த்த அத்தெனை நகைக் கடையிலயும் கை வெச்சிருக்காரு நம்ம மாப்பிள்ள. கை வைக்கிறதுன்னா நீங்க நெனைக்கிற மாதிரி கையை வெச்சிட்டு எடுக்குறது இல்ல. சாமர்த்தியமாக நகையை ஆட்டையைப் போடுறது அல்லது நகையை எடையைக் கொறைச்சிப் போட்டு அதுக்கு ஏத்த மாதிரி நகையை வாங்க வந்தவங்கிட்ட புற வாசல்லப் போயி நின்னு கமிஷன் காசு வாங்கிக்கிறது, எத்தனை நாளு இந்த வேலையைப் பண்ண முடியும் சொல்லுங்க! நகைக்கடைக்கார மொதலாளி எப்படியும் ஒரு நாளு இதைக் கண்டுபிடிச்சிடுவாரு. சாயுங்காலம் அவங்க வித்தது வாங்குனது எல்லாத்தியும் ஒரு கணக்கு வெச்சிகிட்டுதாம் போவாங்க. மாசக் கணக்குப் பார்க்கிறப்ப எவ்ளோ வித்திருக்கிறோம், நகை செய்ய எவ்ளோ வாங்கியிருக்கோம்னு கணக்குப் போட்டுப் பார்த்தா எப்படியும் கணக்குல இடிக்கும். அதுவும் நகைக்கடைக்காரங்க ஒரு பத்து பைசாவுக்கு சுண்ணாம்பு வாங்கினாலும் அதையும் கணக்குல எழுதி வெச்சிக்குவாங்க. மாப்பிள்ள மாட்டிகிட்டாரு. இப்படிதாம் திருவாரூர்லயே பத்துப் பதினைஞ்சி கடைங்க மாறி மாறி வேலை பார்த்திருக்காரு. அதுக்கு மேல இது தாங்குமா? திருவாரூரைச் சுத்திப் புகைய ஆரம்பிச்சி திருவாரூக்கே தெரிஞ்சிப் போயி நகைக்கடைக்கார மொதலாளிங்க எல்லாம் கூட்டம் போட்டு நம்ம மாப்பிள்ளையே திருவாரூர்ல யாரும் வேலைக்கே வெச்சிக்கக் கூடாதுன்னு தீர்மானமே போட்டுட்டாங்க.
            நம்ம மாப்பிள்ள விடாமுயற்சி உள்ளவரு. திருவாரூ போனா என்னான்ன தஞ்சாவூரு போனாரு. தஞ்சாவூர்ல ஒரு வருஷம் வரைக்கும் நல்லாத்தான் வேலை பார்த்திருக்காரு. ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்வாங்க இல்ல. அந்த பட்டியில நீங்க ஆட்டையப் போட்ட கையும் சும்மா இருக்காதுன்னு சேத்துக்கணும். அங்கயும் கையை வைக்க ஆரம்பிச்சிருக்காரு. திருவாரூ மாதிரி அதைக் கண்டுபிடிக்க அவங்களுக்கு ஒரு மாசம்லாம் தேவைப்படல. ரெண்டு மூணு நாளுல்லயே கண்டுபிடிச்சிட்டாங்க. கண்டுபிடிச்சா அது என்ன திருவாரூரா? சொந்த ஊருன்னு நெனைச்சிகிட்டுப் போனா போவுதுன்னு வுடறதுக்கு? அங்கேயே வெச்சி கும்மு கும்முன்னு கும்மி போலீஸ் கேஸா ஆக்கி விட்டுட்டாங்க. நம்ம மாப்பிள்ள அந்த வகையில ஜெயில்லயும் போயி இருந்துட்டுலாம் வந்திருக்கு.
            நாமதான் முன்னாடியே சொன்னோமே நம்ம மாப்பிள்ள விடாமுயற்சி உள்ளவர்னு! திருவாரூ போயி தஞ்சாரூ போனா என்னான்னு அப்டியே திருச்சிக்கு விட்ருக்காப்ல ரூட்ட. இப்போ திருச்சியிலதாம் மாப்பிள்ளைக்கு வேல அப்டின்னு சொற்கேள்வி அவ்வளவுதாம். அங்க இன்னும் வேலய ஆரம்பிக்கல போருக்கு மாப்பிள்ள. அங்கயும் எங்கயாவது மாப்பிள்ள வேலைப் பார்க்குறாரா? பொழுது போவாம போயிட்டு வாராரான்னு சர்வ நிச்சயமாக தெரியல. ஆனா உண்மை சங்கதி முழுக்கா தெரியல. ஆனா மாப்பிள்ளைக்கு ஒரு கொணம் என்னான்னா நெனைச்சா வாரத்துக்கு ரெண்டு மூணு நாளைக்கி வேலைக்குப் போகும். நெனைக்கலன்னா அந்த வாரம் முழுசுக்குமே வேலைக்கிப் போகாது. போதைத் தண்ணிய போட்டுட்டுப் படுத்திடும். தண்ணிய போட்டு படுக்கிறப்பவும் நல்ல மூடு இருந்தா பேசாம படுத்திடும். மூடு கொஞ்சம் மோசமா இருந்தா வாயில வர்ற அத்தனைக் கெட்ட வார்த்தைகளையும் பேசிட்டு தேசிகாவைப் போட்டு பொரட்டுப் போரட்டிட்டுதான் படுக்கும். இப்படியே எத்தனை நாளைக்கி வேலைக்குப் போகாம குடும்பத்த ஓட்ட முடியும் சொல்லுங்க!
            தேசிகாவுக்குப் போட்ட நகையை எல்லாம் பத்திரமா பேங்க் லாக்கர்ல வெச்சிகிறேன்னு சொல்லி வாங்கிட்டுப் போயி ஒவ்வொண்ணா வித்துத் தள்ளியிருக்கு மாப்பிள்ள. வேலை பார்த்தக் கடையிலயே யாரு நகையை இருந்தா எனக்கென்ன அப்டின்னு கை வைச்ச ஆளுல்ல நம்ம மாப்பிள்ள. சொந்தப் பொண்டாட்டி நகைன்னதும் சும்மா ஜிவ்வுன்னு ஏறியிருக்கு. நகையை வித்து வித்து ஒயின் ஷாப்புல பட்டாசு கொளுத்தாத கொறைதான்.
            உறவு முறையில ஒரு விஷேம்னு வந்துட்டா இந்தப் பொண்ணுங்களுக்கு இருக்குற நகையை எல்லாம் அள்ளிப் போட்டுட்டுப் போனாத்தானே ஒரு திருப்தி இருக்கும். அப்படி ஒரு விஷேசம் வந்தப்போ லாக்கர்லேந்து நகையை எடுத்துட்டு வாங்கன்னு தேசிகா சொல்லியிருக்கும் போலருக்கு. மாப்பிள்ள புள்ளயும் ரொம்ப சாமர்த்தியமா, "ஒங்க வூட்டுல கல்யாணத்துக்கு என்னா பண்ணாங்க! கல்யாணம் செலவுல்லாம் நாங்கதான்ன பண்ணோம். அதுல கொஞ்சம் கடனா ஆயிப் போச்சி. அந்தக் கடனெ அடைக்கிறதுக்கு நகையை அடவு வெச்சிருக்கேம்!" அப்பிடின்னு சொல்லிருக்கு.
            அது சரி! கல்யாணத்துக்கு அப்பிடியா அவங்க செலவு பண்ணாங்க? முப்பத்து எட்டுப் பவுனயும் அடகு வெச்சி கல்யாணக் கடன சமாளிக்கிறதுன்ன ஒடனே ஒரு சந்தேகம் வந்திருக்கு தேசிகாவுக்கு. அப்டியே மூட்டையை முடிச்சக் கட்டிட்டு எட்டாம் நம்பரு பஸ்ல ஏறி வடவாதி வந்து இறங்கிட்டு தேசிகா.
            ஆசை ஆசையா வருங்காலத்துல நகைக்கடை மொதலாளிய ஆகப் போற மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்த பொண்ணு இப்படி வந்து நின்னா எப்படி இருக்கும் முருகு மாமாவுக்கு சொல்லுங்க! அது லாலு மாமாவ அழைச்சிட்டுப் போயி மாப்பிள்ளகிட்டப் பேசுது. "எங்களுக்கு நெலம புரியுது மாப்ள. நீங்க அடகு வெச்சதுல ஞாயம் இருக்கு. எஞ்ஞ அடகு வெச்சீங்க சொல்லுங்க! அந்த நகையெ அப்படியே மீட்டுக் கொடுத்துடறேம்!" அப்டிங்குது.
            அடகு வெச்ச நகையை மீட்கலாம். வித்த நகையை எங்க மீட்குறது? அப்பதாம் மாப்பிள்ளைக்கு ரோஷம் வருது பாருங்க.
            "இந்தாருய்யா! நாம்ம அடகு வெச்ச நகையை மீட்க நமக்குத் தெரியும். நம்மள ன்னா பொட்டப் பயலுன்னு நெனைச்சீங்களா? ன்னம்மொ பெரிசா பேச வந்திட்டீங்க! ஊரு ஒலகத்துல நீயிதாம் அதிசயமா பொம்பள புள்ளைய பெத்து வெச்சிருக்கீயா? பொட்டப் புள்ள கோச்சிகிட்டு வருதுன்னா ஏத்தோ சமாதானம் பண்ணி அனுப்பி வைப்பியா? அதெ விட்டுபுட்டு நீயி ன்னம்மோ பொட்ட புள்ள மாதிரி ஒரு தொணைய அழைச்சுகிட்டு வந்து நிக்கிறே? ஒன்ன வெச்சி நாம்ம என்ன பாயில கட்டிப் பொரள முடியுமா? யில்ல ஒனக்குப் புடவெ கட்டிக் குடும்பம் நடத்த முடியுமா? போங்கய்யா மொதல்ல பொண்ண கூப்புட்டு கொண்டாந்து விட்டுட்டுப் போங்கய்யா! இன்னிக்கு உள்ளார ஒம்ம பொண்ணு வூடு வரலேன்னா ஜென்மத்துக்கும் இந்த வூட்டுல காலடி எடுத்து வெக்க முடியாது!" என்கிறது மாப்பிள்ள.
            இந்த ரெண்டு மாமாக்களுக்கும் கொஞ்சமாவது ரோஷம் வந்துச்சா பாருங்க! இதே மத்தவங்க யாரும் பேசியிருந்தா அவ்வளவுதாம். அந்த ரெண்டும் சேர்ந்துகிட்டு மாப்பிள்ளகிட்ட, "தப்பு நடந்துப் போச்சி மாப்பிள்ள! அது தெரியாத்தனமா வந்துப் போச்சிட்டுது. ஒங்களப் பத்தித் தெரியாதா? குடும்பத்துல அப்டி இப்டிலாம் கொஞ்சம் காசு பணம் நெருக்கடில்லாம் வரும். அதெ நீங்க சமாளிச்சுப்பீங்க. இருந்தாலும் பாருங்க இப்போ கையில அறுபதாயிரம் பணம் கொண்டாந்திருக்கோம். இத்த வெச்சிக்குங்க. கையில இருக்குற பணங் காச வெச்சி அடகு வெச்ச நகையை மீட்டுக்குங்க!" என்று சொல்லிப் பார்க்கிறது லாலு மாமா.
            "செரி செரி! அத்தே அப்டி அஞ்ஞயே வெச்சிட்டுப் போங்க! ஒடனே பொண்ண அழச்சிட்டு வந்து விடணும்னு அவசியமில்ல. அதுக்கும் அப்பா அம்மாவப் பாக்கணும்னு ஆசெ இருக்கும் இல்ல. நீங்க ஒரு பத்தி பாஞ்சி நாளு ஆச தீர வெச்சிருந்து அழச்சிட்டு வந்து வுட்டுட்டுப் போங்க!" அப்டின்னு அப்படியே டிராக் மாறுன ரயில போல பேசுது மாப்ள.
            இதைக் கேட்டதும்தான் ரெண்டு மாமனுங்களுக்கும் போன உசுரு திரும்ப வந்திருக்கும் போல.
            பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் நடந்திருந்த உலகப் போரைத் தடுத்து நிறுத்திப்புட்ட மாதிரி அப்டியே சும்மா ஜம்முன்னு வாராங்க முருகு மாமாவும், லாலு மாமாவும்.
*****

உலகின் குப்பைத் தொட்டி!



            நிறைய தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து விட்டு எஸ்.கே. சொன்னார், "மதுரை என்றால் தூங்கா நகரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மதுரை என்றால் குண்டர்களின் நகரம்!" என்று.
*****
உலகின் குப்பைத்தொட்டி என்ற தலைப்பில் வைக்கப்பட்ட கட்டுரைப் போட்டிக்காக எஸ்.கே. முதல் பரிசு பெறும் நோக்கோடு எழுத ஆரம்பித்தார் -
            நம் நாட்டில் எதையெல்லாம் இறக்குமதி செய்கிறார்கள் என்று நீங்கள் ஒரு பட்டியல் எழுதினால் அந்தப் பட்டியலில் குப்பைக் கழிவுகள் என்ற ஒன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்குக் குப்பைக் கழிவுகள் கன்டெய்னர் கன்டெய்னர்களாக வெளிநாட்டிலிருந்து கப்பல்கள் மூலமாக இந்தியாவுக்கு வந்து இறங்குகின்றன. உலகின் அத்தனை எலெக்ட்ரானிக் வேஸ்டுகள், மருத்துவக் கழிவுகள், நாப்கின் கழிவுகள் அனைத்தும் ராணுவத்தாலேயே தடுக்க முடியாத அளவுக்கு இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.
            இங்கே நம் நாட்டிலேயே தரங்கெட்ட அளவிற்கு தரம் பிரிக்க முடியாத அளவுக்குக் குப்பைகள் குவிந்து கிடக்க, வெளிநாட்டுக் குப்பைகளை வேறு வாங்கி தரம் பிரிக்கும் தரம் கெட்ட வேலையில் இறங்கினால் இந்தியா வெகு விரைவில் குப்பைகளின் நாடாகவோ அல்லது உலகின் குப்பைத் தொட்டியாகவோ மாறி விடும்.
            வெளிநாட்டுக் குப்பைகளைக் காசு கொடுத்து வாங்கி இங்கே தரம் பிரிப்பது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வதை விட மோசமானது.
            உலக நாடுகள் எல்லாம் சுத்தமாக இந்தியா மட்டும் அசுத்தமாக வேண்டும் என்பது என்ன விதத்தில் நியாயம்? ஒவ்வொரு நாடும் தங்களுடைய நாட்டிலேயே தங்கள் குப்பைகளைக் கழிவுகளை தரம் பிரித்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொள்வதுதானே நியாயமாக இருக்கும்!
            தூய்மை பாரதம் என்பது நம் நாட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்வதோடு வெளிநாட்டுக் குப்பைகளை இங்கே கொண்டு வந்து நம் நாட்டைத் தூய்மையில்லாமல் செய்யாமல் இருப்பதிலும்தானே இருக்கிறது!
            என்ன உலக நாடுகளோ?
            இந்த நாட்டிலிருந்து கறுப்பு பணத்தை மட்டும் கொண்டு போகிறார்கள்!
            அதற்கு கைம்மாறாக குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டி விட்டுப் போகிறார்கள்!
            என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று பாடியதை மாற்றி என்ன குப்பை இல்லை இந்த திருநாட்டில் என்று பாடும் நிலைமைக்கு ஆளாகி விடுவோம் போலிருக்கிறது!
            - எழுதியது பிடிக்கவில்லையோ என்னவோ ஒரு முறை வாசித்துப் பார்த்தார் எஸ்.கே. அப்படியே சுருட்டி குப்பைத் தொட்டியில் வீசி விட்டார். குப்பைத் தொட்டி எஸ்.கே.வைப் பார்த்து அர்த்தமுடன் சிரித்தது. எஸ்.கே.வும் அதைப் பார்த்து அர்த்தமுடன் சிரித்துக் கொண்டார்.
*****
            எஸ்.கே. குழப்பத்தில் உட்கார்ந்திருந்தார். இந்தத் தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து விட்டு எந்தக் கடையில் நகை வாங்குவது? எந்தக் கடையில் துணி எடுப்பது? என்ற குழப்பம் அவரை ஆட்டிப் படைத்து விட்டது. எந்தக் கடையில் சேதாரம் ரொம்ப கம்மி என்று யோசித்து யோசித்து அவரது மூளையே சேதாரமாகி விட்டது. எந்தக் கடையில் டிஸ்கவுண்ட் ரொம்ப கம்மி என்று அலசி அலசி அவரது மனநிலையே மிஸ்கவுண்ட் ஆகி விட்டது.
            ஒரு மனநல மருத்துவரைப் பார்த்து மனநிலை சரியானவுடன் நகை வாங்குவதையும், துணி எடுப்பதையும் செய்வதென்று முடிவில் நட்ட நடு சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார் எஸ்.கே.
*****

30 Jul 2019

கல்யாணக் கூத்து



செய்யு - 161
            மாப்பிள்ளை வீட்டைக் கூட போயி பார்க்காம ஒரு கல்யாணம் நடந்திச்சின்னா அது தேசிகாவோட கல்யாணத்துலதான் நடந்திச்சி. கேட்குற ஒங்களுக்கு இது ரொம்ப தெகைப்பதாம் இருக்கும். முருகு மாமாவுக்கும், லாலு மாமாவுக்கும் மாப்பிள்ளை வூட்டு மேல அவ்வளவு நம்பிக்கை. அவங்களும் திருவாரூர்ல நாகப்பட்டிணம் ரோட்டுக்குப் பக்கத்துல ஏதோ ஒரு விலாசத்தைக் கொடுத்து இங்கதாம் இருக்கோம்னு கொடுத்துதான் பார்த்தாங்க. இவங்கப் போயி பார்க்கணுமே! அந்த ஏரியான்னதுமே ரெண்டு பேரும் வாயப் பொளந்துட்டாங்க!
            அத்தோட மனுஷனுக்கு நம்பிக்கைதாம் முக்கியம்னு அதெ பத்தி கவனத்துல வைக்காமலே இருந்துட்டாங்க. இவ்வளவு பெரிய சம்பந்தம் கிடைக்குமான்னு அதுக்கு மேல ஒரு ஆச்சரியம் அவங்களுக்கு. எல்லாம் சேர்ந்து அவங்கள திக்கு முக்காட வெச்சிடுச்சி.
            அதுக்கு மேல மாப்பிள்ளை வூட்டுக்காரங்க வாரத்துக்கு ஒரு தடவெ கார வெச்சிகிட்டு வடவாதிக்கு வந்து தேசிகாவ பாக்கிறது என்ன! கல்யாணத்துக்குப் பண்ற ஏற்பாடுகள ஆகா ஓகோன்னு சொல்றது என்ன! பத்திரிகையைக் கூட பொண்ணு வூட்டுல அச்சடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு ரெண்டு வீட்டுக்கும் சேர்த்து அவங்கள அச்சடிச்சிக் கொண்டாந்து கொடுக்குறது என்ன! இப்படிப்பட்டவங்கள சந்தேகப்பட்டு எப்படிப் போயி பார்க்க முடியும் சொல்லுங்க!
            மாப்பிள்ளை அழைப்பு, பொண்ணு அழைப்புன்னு வந்தப்பதான் மாப்பிள்ளை வீட்டைப் போயி பார்க்குற மாதிரி ஒரு நிலைமை பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு வருது. போயிப் பார்த்தா வீடு ரொம்ப பிரமாதமா பிரமாண்டமா இருக்கு. அடேங்கப்பா இந்த வீட்டை முன்னாடியே வந்து பார்க்காம போயிட்டேமேன்னு பார்த்தவங்களுக்கு ஒரே அங்கலாய்ப்புதாம் போங்க! வீட்டுக்கு முன்னாடி காம்பெளண்ட் சுவரு இருக்கு. முன்னாடி இருக்கற இடத்துல குரோட்டன்ஸ் செடிகளும், பூச்செடிகளுமா இருக்குது. வீடு எப்படியும் ரெண்டாயிரம் சதுர அடிக்கு மேல இருக்கும். நல்ல அம்சமான வீடு. தரையெல்லாம் புள்ளி புள்ளியா மொசைக்கு போட்டிருக்கு. நடுக்கூடத்துல பெரும் டி.வி. இருக்கு. அதுக்கு முன்னாடி அந்த டி.வி.ய பெரிசா காட்டுற மாதிரி ஒரு கிளாஸூ இருக்குப் பாருங்க. அது அப்போதாம் வந்ததுன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க.
            கல்யாணத்துக்குப் போற சனத்துக்காவே முருகு மாமா ஏற்பாடு பண்ணியிருந்த பஸ்ஸூல கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம். முழி பிதுங்கி வெளியில வ்நது விழுந்துடும் போலருக்கு. காலை டிரிப்புக்கு எட்டாம் நம்பர் பஸ்ஸூம், ரெண்டாம் நம்பர் பஸ்ஸூம் அப்படியே பிதுங்கிகிட்டு டவுனுக்குப் போகும் பாருங்க! அதுங்க தோத்துடும் போங்க! முருகு மாமா ரெண்டு மூணு டிரிப்பு அடிக்க வெச்சிச்சி. அதுவும் இல்லாமல காலையில வேற ஒரு ரெண்டு டிரிப்பு. அடேங்கப்பா ஒரு கிராமத்தையே ஒவ்வொரு டிரிப்புக்கும் வெச்சி அடிக்கிற மாதிரிதாம் பஸ்ஸூ போனிச்சி.
            இப்படி சொந்தக்கார சனம், வடவாதி சனம்னு எல்லாம் போயி கல்யாணத்துக்கு மொத நாளு சாயுங்காலமா நாகப்பட்டிணம் ரோட்டுல இருக்குற அந்த மண்டபத்துல எறங்குனா அது சாதாரண சத்திரம் மாதிரி இருக்கு. நாட்டு ஓடு போட்ட சத்திரம். கிராமத்துல இருக்கும்ல பெரிய சுத்துக்கட்டோட நாட்டு வீடு போட்ட வீடா அந்த மாதிரிதாம் இருக்கு. அட என்னடா இது! அம்மாம் பெரிய பணக்காரங்கன்னு சொல்றாங்க! இப்படி ஒரு மண்டபத்தயா ஏற்பாடு பண்ணுவாங்கன்னு எல்லாருக்கும் ஒரு யோசனையா போயிடுச்சி. பொண்ணு வீட்டுக்காரங்க மனநிலையைப் கப்புன்னு பிடிச்சிகிட்டு புரிஞ்சுகிட்ட மாதிரி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அப்போ ஒரு பதிலைச் சொன்னாங்க பாருங்க! "கல்யாணத் தேதி நல்ல முகூர்த்த நாளா போயிடுச்சி. நாங்களும் திருவாரூ முழுக்க மண்டபத்த சல்லடை போட்டு தேடாத கொறைதாம். எல்லா மண்டபமும் புக் ஆயிடிச்சி. பெறவு யோசனைப் பண்ணி தஞ்சாரூ, திருச்சின்னு வைக்கலாம்னு பார்த்தா சனங்க வந்துட்டுப் போறதுக்குச் செரமமா போயிடும்னே யோசிச்சி, அந்தச் செரமத்துக்கு இந்தச் செரமமே பரவாயில்லன்னு கெடைச்ச இந்த மண்டபத்துலயே வெச்சாச்சி!" அப்படிங்றாங்க.
            இந்தப் பதிலைக் கேட்டதும் முருகு மாமாவுக்கும், லாலு மாமாவுக்கும் டான்ஸ் ஆடாத கொறையா சந்தோஷம் பொத்துகிட்டு வருது. "அட மண்டபத்துல என்னங்க இருக்கு? ஒங்களப் பத்தித் தெரியாதா?  ஒரு நாளு கூத்துக்கு ஏம் அவ்வளவு செலவு பண்ணிட்டுங்றேம்? அந்தக் காசை பொண்ணு மாப்பிள்ளைங்கிட்ட கொடுத்தா நல்ல விதமா குடித்தனம் பண்ணிட்டுப் போறாங்க!" என்று மாப்பிள்ளை வீட்டை விட்டுக் கொடுக்காமல் தாங்குகிறார்கள்.
            இந்தக் கல்யாணத்துக்கு லைட்ட கையில பிடிச்சிகிட்டு வீடியோல்லாம் வேற எடுக்குறாங்க. வழக்கமா கல்யாணத்துக்கு அப்போ போட்டோ மட்டுந்தாம் எடுக்குறது வழக்கம். ரொம்ப வசதிப்பட்டவங்கதாம் வீடியோல்லாம் எடுப்பாங்க. அந்த வீடியோல நான் தெரியணும்னு, நீ தெரியணும்னு அதுக்கு வேற கூட்டம் அலை மோதிக்குது பாருங்க. இந்தக் கூட்டத்தைச் சரி பண்ணி வீடியோ எடுக்குறது வீடியோகாரங்களுக்குக் கஷ்டமா போவுது.
            பொண்ணையும், மாப்பிள்ளையையும் சோடிச்சி அலங்கார ஜீப்புல உட்கார வெச்சி திருவாரூ தெரு முழுக்க ஊர்வலம் வந்தாகுது. அதுவும் வசதிப்பட்டவங்க செய்யுற காரியந்தாம். இதுல மாப்பிள்ளை வூட்டுக்காரங்க பண்ணுன ஒரு நல்ல விசயம், கல்யாணச் சத்திரத்துல ராப் பொழுது முழுக்க டி.வி.யைக் கொண்டாந்து வெச்சி படம் படமா போட்டுத் தள்ளுறாங்க. கல்யாணத்துக்கு வந்தக் கூட்டம் எல்லாம் தூங்காம படத்தையே பார்த்துகிட்டு உட்கார்ந்து கெடக்குதுங்க. இந்தக் கொசுகடியில தூங்க முடியாதுன்னு தெரிஞ்சிகிட்டு மாப்பிள்ள வூட்டுல நல்ல ஏற்பாடா பண்ணியிருக்காங்கன்னு அதுக்கும் சனங்க மனசுக்குள்ள மெச்சிக்குதுங்க.
            அந்தக் கல்யாணத்துல போட்ட சாப்பாடப் பத்தி ஒரு வார்த்தைச் சொல்லலண்ணா கதைய கேட்குற நீங்க ரொம்பவே கோச்சுக்குவிங்க. எலையைப் போட்டு பொங்கல்னு ஒண்ண வைக்குறாங்க பாருங்க! எலையில நிக்காம அப்படியே தரதரன்னு ஓடுது வயித்துக்குப் பேதி வந்தவன் கழியுற கணக்கா! இட்டிலி ஒவ்வொண்ணும் கல்லு கணக்கா கல்குவாரியில ஒடைச்சி எடுத்து வந்த மாதிரி இருக்கு. இந்தச் சட்டினி சாம்பாரு! இதாச்சிம் கொஞ்சம் வாயில வைக்கிற மாதிரி இருக்கான்னா? வாயில வெச்சா மொட்டத் தண்ணிய மெளகா தண்ணியா வாயில கரைச்சி வுட்ட மாதிரி ஒரே காருன்னா காரு அப்படி ஒரு காருது. தேங்கா சட்டினிய வெறும் பொட்டுக் கல்லயப் போட்டு அரைச்சிருப்பானுவோ போலருக்கு! பொட்டுக்கல்லய போட்டு கரைச்சி வெச்ச மாதிரி இருக்கு. எலையில ஸ்வீட்டுங்கற பேருக்கு வெச்சத எடுத்து வாயில வெச்சா அப்படியே வாயில கோந்து மாதிரி ஒட்டிக்குது. அது பேரு அசோகாங்றாங்க. இதுல சப்பாத்தி குருமா வேற. சப்பாத்திய பிய்க்க முடியல. குருமாவ வாயில வைக்க முடியல. சரியில்லாத சாப்பாடுன்னாலும் ராத்திரி முழுக்க டி.வி.யில படத்து போட்டு விட்டு சனங்கள நல்லாவே சமாளிச்சிட்டாங்க மாப்பிள்ள வூட்டக்காரங்க.
            "பொண்ணு வூட்டுக்காரனுக்கு பைசா செலவில்லாம கல்யாணத்த நடத்துறவேம் வேற என்னப்பா பண்ணுவாம்? அதாம் சாப்பாட்ட இப்பிடிப் போடுறான்! சத்திரத்த இந்த மாதிரி ஏற்பாடு பண்றாம்!" அப்பிடின்னு டி.வி.யைப் பார்க்கப் பிடிக்காத ஒண்ணு ரெண்டு சனம் மட்டும் சாப்பாட பத்தியும், சத்திரத்த பத்தியும் பேசுது. நல்ல வேளை அன்னிக்குன்னு பார்த்து மழை தண்ணி இல்லாமப் போச்சுது. மழை தண்ணியா ஆயிருந்துச்சுன்னா அவ்ளதாம் கல்யாணத்துக்கு வந்த சனமெல்லாம் மழை மோட்சமாக ஆயிப் போயிருக்கும்.
            லாலு மாமாவுக்குச் சாப்பாடு சரியில்லங்றது மனசுல ஒரு கொறையாத்தான் நிற்குது. இருந்தாலும் இது கல்யாணத்து மொத நாளு ராத்திரிச் சாப்பாடுதானே. அதாங் கொஞ்சம் அலட்சியமா இருக்காங்க போல அப்பிடின்னு நெனச்சிக்கிது. இருந்தாலும் இதெப் பத்தி மாப்பிள வூட்டுல ஒரு வார்த்த பேச்சு வாக்குலயாவது கேட்டுப்புடணும்னு ஒரு யோசனையைப் பண்ணிகிட்டு லாலு மாமா கேட்குது பாருங்க! "கல்யாணத்துல கால சாப்பாடு, மதியானச் சாப்பாடுலாம் ஜமாய்ச்சுடலாம்ல!"
            மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இந்தக் கேள்வியைப் புரிஞ்சிக்காம இருப்பாங்களா! "ராத்திரிச் சாப்பாடு கொஞ்சம் அப்படி இப்பிடி ஆயிப் போச்சிங்க. நம்ம வெச்ச கல்யாண நாளு ஹெவியான முகூர்த்த நாளா போயிடுச்சிப் பாருங்க. நல்ல சமையல்காரனா கெடைக்காமப் போயிடுச்சி. இந்த சமையல்காரந்தாம் கெடைச்சாம். ஒங்ககிட்டயாவது ஒரு வார்த்தைச் சொல்லியிருக்கலாம் பாருங்க. அங்க இங்க கிராமத்துலயாவது ஒரு நல்ல ஆளா பிடிச்சிக் கொண்டாந்திருக்கலாம். பொண்ணு வூட்டுக்காரங்க தலையில வேலைய கட்டுறாப்புல ஆயிடுமேன்னு யோசிச்சிட்டு இருந்துட்டோம்!" அப்படிங்றாங்க. இந்தப் பதிலு போதாதா லாலு மாமாவுக்கு அப்படியே உச்சிக் குளிந்து போவுது.
            "என்னாங்க! ரெண்டு மூணு வேளைச் சாப்பாடு! அவ்வளதானே. பாத்துப்போம் வுடுங்க. நீங்களும் எவ்வளவுதாம் மெனக்கெடுவீங்க. நீங்க சொல்ற மாதிரி இந்த அளவுக்கு முகூர்த்த நாளு அமையாது. நாளுங் கெழமையும் அமைஞ்சிடுச்சி. சாப்பாடு ன்னா சாப்பாடு. ரெண்டு வேள சாப்புடாமலேயே கெடக்கலாம்!" என்கிறது லாலு மாமா.
            லாலு மாமா என்ன நேரத்தில் அப்படிச் சொன்னதோ! அப்படித்தான் கல்யாணத்துக்கு வந்த பெரும்பாலான ஆட்களுக்கு நிலைமை ஆனது. ராத்திரிச் சாப்பாடு சரியில்லை என்றால் காலைச் சாப்பாடும், மதியானச் சாப்பாடும் பல பேருக்கு இல்லாமலே போனது. ஊரடைத்துப் பத்திரிகைக் கொடுத்து எப்படியும் பொண்ணு வீட்டு வகையில் மட்டும் ஐநூறு அறுநூறு பேருக்கு மேல் பத்திரிகை கொடுத்து விட்டு சாப்பாட்டை இருநூறு பேருக்கும் இருநூத்து ஐம்பது பேருக்கும் செய்தால் எப்படிப் பத்தும்?
            இந்த விசயம் நல்லா தெரிஞ்சோ என்னவோ மாப்பிள்ளை வூட்டக்காரங்க எல்லாம் பந்திக்கு முந்தி சரியில்லாத சாப்பாடுன்னாலும் அதை வழிச்சி அள்ளி உள்ளே போட்டுகிட்டு அப்படியே தொந்தியைத் தள்ளிட்டு நிக்குறாங்க. வெவரம் பத்தாத பொண்ணு வீட்டுக்காரனுங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தவங்களுக்குதான் வாயிலேய வைக்க முடியாத அந்தக் காலைச் சாப்பாடு கெடைச்சிச்சு. காலைச் சாப்பாடு இப்படி ஆனதுல மதியானச் சாப்பாட்டுக்கு அவனவனும் உஷாராயிட்டாம். இதையும் எப்பிடியோ மாப்பிள்ளை வூட்டுக்காரனுங்க மோப்பம் பிடிச்சிருப்பானுங்க போலருக்கு. மதியானப் பந்தி எப்போ போடணும்ங்றத ரகசிய வெச்சி அவனுங்க சாப்பிட்டு முடிச்சி பிற்பாடு ‍ஒப்புக்கு "பந்திப் போட்டாச்சி வந்து சாப்பாடுங்க!" அப்பிடின்னு சவுண்ட விடறானுங்க. காலயில ஏமாந்த மாரி மதியானமும் ஏமாந்திடக் கூடாதுன்னு பொண்ணு வூட்டுக்காரனுங்க அடிச்சுக்காத கொறையா பந்தியில உட்கார்ந்துப் பார்க்கறானுங்க. கால்வாசி சனங்க சாப்பிட்டு முடிச்சா முக்கால்வாசி சனங்களுக்கு சாப்பாடு யில்ல. போறப் போக்கப் பார்த்தா பொண்ணு வீட்டக்காரனுங்களுக்குள்ள அடிதடி வர்றாத கொறைதான். பந்தியில சாமர்த்தியமாக எடம் பிடிச்சி சாப்பிடத் தெரியலன்னு ஒருத்தன ஒருத்தன் பேசி அலமலந்துக்கிறானுங்க. பொண்ணு வீட்டுக்காரனுங்க நிலைமையே இப்படி இருக்குன்னா பொண்ணு வீட்டுக்காரனுங்க சார்பா கல்யாணம் விசாரிக்க வந்த மத்தவனுங்க நிலைமைய என்ன சொல்றது? அவனுங்களுக்குக் காலைச் சாப்பாடும் கெடைக்காம, மதியானச் சாப்பாடும் கெடைக்காமல கொலைப் பட்டினியா ஆகிப் போச்சி அன்னைக்கு.
            இவ்வளவு கூத்துக்கும் மத்தியில இந்த வீடியோகாரனுங்க வளைச்சி வளைச்சி வெளிச்சத்தை அடிச்சி படத்த மட்டும் பிடிச்சிட்டு இருக்கானுங்க பாருங்க! ராத்திரி வந்ததும் வீடியோ கவரேஜூக்கு அடிச்சிகிட்ட சனங்க எல்லாம் அதெ ஒரு பொருட்டாவே மதிக்காத மாதிரி இப்போ சோத்துக்கு அடிச்சிகிட்டு நிக்குதுங்க. ந்நல்லா சோத்தப் போட்டிருந்தா வீடியோ கவரேஜூக்காக அடிச்சிகிட்டு நின்னுருக்கும்ங்க. வீடியோகாரனுக்கு அந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் வந்திடக் கூடாதுன்னு இப்பிடிச் சோத்துப் பிரச்சனையை உருவாக்கி விட்டுட்டாங்க போலருக்கு மாப்பிள்ளை வூட்டுக்காரங்க.
            என்னடா நெலைமை இப்படி ஆகிப் போச்சின்னு சனங்க ஒவ்வொண்ணும் அதுக பாட்டுக்கப் பிரிஞ்சி ஒட்டல்ல கிடைக்குற டீயையும் பன்னையும், கெடைச்ச தயிரு சாதத்தையும் தின்னுட்டு பொண்ணு வூடுக்காரன் பஸ்ஸூம் வேணாம், அவ்வேம் கல்யாணச் சாப்பாடும் வேணாம்னு எட்டாம் நம்பரூ பஸ்ல ஏறி ஊரு திரும்புதுங்க. கல்யாணத்துக்காக ஏற்பாடு பண்ண பஸ்ஸூ ஊரு திரும்புறப்ப அதுல பாதி சனம் இல்லாமப் போச்சி. அவ்வளவு குதூகலமா கல்யாணத்துக்குக் கிளம்புன பஸ்ஸா இதுங்ற மாதிரி பசியில சோர்ந்த சொங்கிப் போயி இளைச்சிப் போயி வர்றவன் கணக்கா அது வடவாதி திரும்புது.
            என்னதாம் இப்படிக் கஷ்ட காலமா போனாலும், பொண்ணு மாப்பிள்ளையும் நல்ல விதமா இருந்தாச் சரிதாம்னு கல்யாணத்துக்குப் போன சனங்க பெருந்தன்மையா நெனச்சிட்டு வீட்டுக்கு வந்தா அப்படிதாம் நடக்குதா என்னான்னு பாருங்களேன்!
*****

கழிவுகளால் ஆகிய நான்...



வியாதி தீர்த்த மருந்து பாட்டிலை
குப்பைத் தொட்டியில்தான் போட வேண்டியிருக்கிறது
காயம் ஆற்றிய பஞ்சை
காயம் ஆற்றக் குத்திய ஊசியை
குப்பைத் தொட்டியில் போட்டு
காயம் ஆற்ற உட்செலுத்திய மருந்தையெல்லாம்
மலமாய் கழிவறையில் கழிக்க வேண்டியிருக்கிறது
குப்பைத் தொட்டிகளை நிரப்பிய பிறகு
கழிவறையை நிரப்பிய பிறகு
குணமாகி வெளிவருகிறேன் என்று
அறிவிக்க வேண்டியிருக்கிறது
நலம் பெற பிரார்த்தித்தவர்கள்
மாலையோடு நிற்கிறார்கள்
வாடிய பிறகு குப்பைத் தொட்டியில்
வீச வேண்டும்
பாவம் குப்பைத் தொட்டிக்கு அதிக வேலை
*****

29 Jul 2019

குளம் செத்து மிதந்த கதை



செய்யு - 160
            இங்கே மனுஷன் ரெண்டு விசயங்களுக்காகத்தான் வாழ்கிறான். ஒன்று கல்யாணம், மற்றொன்று பிழைப்பு. வாழ்க்கையில் தப்பிப் பிழைக்க வேண்டுமே என்று கல்யாணத்தைச் செய்து கொள்கிறான் மற்றும் செய்விக்கிறான். அந்தக் கல்யாணத்தைச் செய்ய வேண்டுமே, செய்விக்க வேண்டுமே என்று வாழ்நாள் முழுவதும் பிழைக்கிறான். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி கல்யாணத்துக்காக வாழ்நாள் முழுவதும் சேமிக்கிறான். கல்யாணம் என்ற ஒரு நாள் கூத்தில் அத்தனையையும் பந்தயப் பொருளாய் வைத்து விளையாடுகிறான்.
            ஒரு நல்ல சாப்பாடு ஒரு நாளாவது சாப்பிட்டிருப்பானா இந்த மனுஷன்? கல்யாணத்து அன்று பார்த்தால் நல்ல சாப்பாடு அவ்வளவு வீணாய்ப் போய், மீந்துப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் கிடக்கும்.
            இப்படித்தான் நம்ம திட்டையில் சாம்பமூர்த்தி வீட்டுக் கல்யாணம் நடந்தப்போ நடந்த செய்தியைக் கேள்விப்பட்டிங்கன்னா இதென்னப்பா பைத்தியக்காரதனமான கூத்தா இருக்குன்னு நீங்களே சொல்லிப்புடுவீங்க! சாம்பமூர்த்திக்கு ஒரே பொண்ணு. அதிலும் ஆம்பளப் புள்ளைங்கள பெத்தவங்கள காட்டிலும், பொம்பள புள்ளைங்கள பெத்தவங்க இருக்காங்களே அவங்க பொண்ணு பொறந்த அடுத்த நிமிஷத்துலேந்து பொண்ணோட கல்யாணத்த நெனைச்சிப் பணத்த சேர்க்க ஆரம்பிச்சிடுவாங்க. சாம்பமூர்த்தி பணத்தாளைக் கட்டு கட்டா சேர்த்தார்ன்னா அவரு பொண்டாட்டி கனகசுந்தரி பால் வித்த காசு, மோரு வித்த காசு, வறட்டி வித்த காசுன்னு காசுகள பாத்து ஒரு வாளியில போட்டு சேர்த்துச்சு. இதுக்குன்னே டவுன்ல போயி பத்து பதினைஞ்சு எவர்சில்வர் வாளிகளா பாத்து வாங்கி வந்து சேத்துச்சுன்னா பாத்துக்குங்க. யாராவது நெருங்குன சொந்தம் பந்தம் வந்தா காசு சேத்துருக்கிற அந்த வாளிய கூப்பிட்டுக் காட்டுறது அதுக்கு ஒரு சந்தோஷம். இதென்னப்பா ஒங்க கிராமத்துல இருக்குறதெல்லாம் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகமாக இருக்குன்னு கேட்டீங்கள்ன்னா... இப்படி நிறைய ரகம் ‍இருக்கு. அதை அப்போகைப்போ பாத்துக்கலாம். எல்லா ரகமும் கொஞ்சம் சீரியஸான வேடிக்கையான ரகம்தான்.
              கனகசுந்தரி ஒரு நல்ல சேலை கட்டிட்டு பார்க்க முடியாது. வெளுத்துப் போன சுருங்கிப் போன பார்க்க சகிக்காத கந்தல் சேலைகளாத்தான் பார்த்து கட்டும். வருஷத்துக்கு ரெண்டு புடவை எடுத்தா அதுல காசு கொறைஞ்சுப் போய் பொண்ணுக்கு கல்யாண முறை செய்யுறதுல குறை வந்துடுமோன்னு அதுக்கு ஒரு நெனைப்பு. வருஷா வருஷம் தீவாளிக்கு மட்டும் ஒரு பீத்த சேலையைப் பேருக்கு எடுத்துக் கட்டிக்கிறதோட சரி. சாம்பமூர்த்தி அதுக்கு மேல. வேட்டிய கட்டுனா அதுக்குத் தொவைக்கிறதுக்கு சவுக்காரம் செலவு ஆகும்னு ஒரு காக்கிக் கலரு டிராயர போட்டுட்டுத் திரிவாரு. அதையும் பத்து மாசத்துகு ஒரு தடவ தொவைக்கிறாரா, இருபது மாசத்துக்கு ஒரு தடவ தொவைக்கிறாரான்னு யாருக்குத் தெரியும் சொல்லுங்க. எப்பயாவது ரொம்ப அதிசயமாக ஊருல ஏதாச்சிம் விஷேசம்னா வேட்டிக் கட்டுவாரு. வேட்டின்னா அதுவும் அழுக்கு வேட்டியத்தான் கட்டுவாரு. மேலுக்கு ஒரு சந்த கலரு சட்டை. அது அழுக்கா இருக்கா சந்தன கலர்ல இருக்கான்னு ஊருக்குள்ள ஒரு சந்தேகம்தான். இந்த சந்தேகத்த யாருகிட்ட போயி தீர்க்க முடியும் சொல்லுங்க. அதனாலயே அவருக்கு அழுக்கு வேட்டி சாம்பமூர்த்தின்னு பேரு வந்திடுச்சுன்னா பாத்துக்குங்களேன். சில பேரு காக்கிக்காலு சட்ட சாம்பமூர்த்தின்னும் சொல்லுவாங்க. எப்படிச் சொன்னாலும் அது திட்டையில சாம்பமூர்த்திதான்.
            இந்த ரெண்டும் அதாங்க புருஷனும் பொண்டாட்டியும் சாப்புடுற கதையைச் சொன்னா வாயிலும் வயித்துலயும் அடிச்சிட்டு அழ மாட்டீங்க அப்படிச் சிரிப்பீங்க. ரெண்டு பேருக்கும் மூணு வேளைக்கும் சேர்த்து கைக்குள்ள வர்ற மாதிரி ஆறு சாப்பாட்டு டப்பா. காலயிலயே சோத்த வடிச்சி புளி சாதமா கெளறி வெச்சி என்னமோ வெளியூரு போற கணக்கா அதுல அடைச்சிக்கிறது. நாட்டுல வாழைக்காயைத் தவிர வேற காய்கறியே இல்லாத மாதிரி தெனமும் ஒரு வாழைக்காயில பாதிய வெட்டிப் போட்டு கறியா செஞ்சு ஆளுக்கு ரெண்டு துண்ட அதுலயே அப்படியே திணிச்சி வெச்சிக்கிறது. அதுதாம் நாளு மாறாம வாரம் எழு நாளைக்கும் சாப்பாடு. எங்கேயாவது கல்யாண கருமாதி விஷேசமோ இல்ல கோயிலு விஷேசம்னோ வெச்சிக்குங்க அப்ப மட்டும் வந்து மூக்கு முட்ட சாப்பிடுறது. சாப்பிடறதோட இல்லாம ரெண்டு மூணு நாளைக்கு அந்த டப்பாக்கள்ல வாங்கி அடைச்சிக்கிறது. இதுலயும் ஒரு வேடிக்கைப் பாருங்க. அவங்கதான் இப்படிச் சாப்பிட்டாங்களே தவிர பொண்ணுக்கு அளவா மூணு வேளைக்கும் அதுக்கு மட்டும் தனியா சமைச்சிப் போட்டுடுவாங்க. இட்டிலின்னா நாலு, தோசைன்னா மூணு, சோறுன்னா அதுக்கு ரெண்டு டபரா கணக்கு, கொழம்புன்னா அதுக்கு ஒன்றரைக் கரண்டின்னு அதுலயும் கணக்கு உண்டு. அதிகமாக சாப்பிட்டு பொண்ணு திம்சு கட்ட கணக்குக்குப் போய்ட்டா எந்தப் பய வந்து பொண்ணு கட்டுவான்னு அதுல ஒரு பயம். அதால டயட் கன்ட்ரோல் மாதிரி அப்பவே அந்த மாதிரி அவங்க பண்ணுனத பார்க்கும் போது இந்தக் காலத்து பொண்ணுங்களோட டயட் கன்ட்ரோலுக்கெல்லாம் அவங்கதான் முன்னோடின்னு ஒரு நெனைப்பு வந்து போறதைத் தடுக்க முடியல பாருங்க!
            இந்த டிரெஸ் போடுறது சாப்பிடுறதுல புருஷனும் பொண்டாட்டியும்தான் அப்படி இருந்தாங்களே தவிர பொண்ணு சுதந்திரமணியை அப்படியே தங்க விக்கிரகம் கணக்கா சோடிச்சு வெச்சிருப்பாங்க. பொண்ண பாத்துக்குறதுல ரெண்டு பேருக்கும் போட்டா போட்டிதாம். வயசுக்கு வந்ததும் பொண்ணோட படிப்ப நிப்பாட்டிட்டாங்க. சுதந்திரமணிக்கு ரொம்ப படிக்கணும்னு ஆசை. எங்க வயசுக்கு வந்தப் பொண்ண தொடர்ந்து படிக்க வெச்ச அது எவன் கூடயவாது ஓடிப் போச்சுன்னா என்னா ஆவுறதுன்னு ரெண்டு பேருக்கம் கவலை. அதாங் அந்த கவலைய தொடர விடவானேன்னு படிப்பை நிப்பாட்டிப் போட்டாங்க.
            பொண்ணு கல்யாண வயசு வந்து ச்சும்மா அப்படியே தளதளன்னு வளர்ந்து நிக்குது. ஊருல இருக்குற இளந்தாரிப் பசங்களுக்கு சாதி மாறி கல்யாணம் பண்ணாலும் பரவாயில்ல, கட்டுனா சுதந்திரமணியத்தான் கட்டணும்னு மனசுக்குள்ள ஒரு இது வந்துப் போவுது. அது என்னா இதுன்னு கேட்காதீங்க. சுதந்திரமணிய நீங்க நேர்ல பார்த்தாதாம் அது புரியும்.
            இவங்க இப்படிப் காசு பவுனு சேர்த்து பொண்ணு வளர்க்கிறத கேள்விப்பட்டு அவங்க வகையறாவுல நானு நீயின்னு பொண்ணெடுக்க ஓடி வார்றாங்க. அதுல ஒரு நல்ல மாப்பிள்ள பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சாங்க சாம்பமூர்த்தியும் கனகசுந்தரியும். பொண்ணு மாப்ள சோடிப் பொருத்தம் அப்படியே ஊரு கண்ணே படாத கொறைதாம். அட இந்தப் பொண்ண நாம்ம கட்ட முடியாமப் போச்சேன்னே இறுமாந்த இளந்தாரி பசங்கக் கூட அந்த சோடிய பார்த்த பின்னாடி சுதந்திரமணிக்கு அந்த மாப்பிள்ளதாம் சரிபட்டு வருவான்னு அடங்கிப் போயிட்டானுங்க. பொண்ணும் மாப்பிள்ளையும் நெறம்னா நெறம் அப்படி ஒரு நெறம். அது சிவப்பா ரோஸா இல்ல ரெண்டு கலந்த ஒரு புது நெறமான்னு ன்னு பட்டிமன்றம் நடத்திதாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.
            திங்கறதுலயும், உடுத்துறதலயும் பீத்தத் தனமா ரெண்டு பேரும் இருந்தாங்களே தவிர கல்யாணத்த நடத்துனாங்க பாருங்க! ஊருல அப்படி ஒரு கல்யாணம் நடக்கலேங்ற மாதிரி தெருவ அடைச்சிப் பந்தல் போட்டு, பொண்ணு மாப்பிள்ளை ஊர்வலம்னு குதிரை பூட்டுன சாரட் வண்டிய டவுன்லேந்து கொண்டு வந்து, கல்யாணத்துக்கு வந்த எல்லாருக்கும் தலைவாழை இலையில விருந்து பண்ணி... அடெங்கப்பா ஒரு வாரத்துக்கு அசத்தல்தான் பார்த்துக்குங்க. இந்த ஒரு வார காலத்துல திட்டையில எந்த வூட்டுலயும் அடுப்புப் புகையல. ஊரு மக்களுக்கு அவங்க அப்படிக் கல்யாண சாப்பாடு போட்டதுல அவங்க பீத்தாரித் தனமாக சாப்பிட்டு கிடந்தது, உடுத்திட்டுக் கிடந்தது எல்லாம் மறந்துப் போயி ரெண்டு பேரையும் தூக்கிக் கொண்டாடுறாங்க. அவங்க ரெண்டு பேரும் இப்போதான் பாத்தீங்கன்னா பட்டு வேட்டி, பட்டு சேலைன்னு கட்டிட்டு கலக்குறாங்க. இதென்னடா ஊருக்குள்ள வந்த மாயம்னு எல்லாரும் ஆச்சரியமா வேற பாத்துக்குறாங்க.
            இங்கதாம் நம்ம கதையில ஒரு டிவிஸ்ட் வருது பாருங்க!
            கல்யாணமெல்லாம் நல்லவிதமா முடிஞ்சி ஊருல இருக்குற குளங் குட்டைகளப் பாத்தா மீனெல்லாம் செத்து செத்து மிதக்குது. என்னடா இது ஊருல ஒரு குடும்பத்துல நல்ல காரியம் நடந்து முடிஞ்சி இந்த மாதிரி நடக்குதேன்னு எல்லாருக்கும் வருத்தமாப் போயிடுச்சி. சரி இதுக்கு என்னடா காரணம்னு ஆய்வு பண்ணிப் பார்த்தா அதுக்குக் காரணமே அந்தக் கல்யாணச் சாப்பாடுதாம்னு புரியுது. சாம்பமூர்த்தியும் கனகசுந்திரியும் ரொம்ப கட்டுப்பெட்டியா சாப்பிட்டு உடுத்தியிருந்தாலும் கல்யாணத்துல சாப்பாட்டுல யாருக்கும் எந்த கொறையும் வந்துடக் கூடாது, சாப்பாட்டுல யாருக்கும் எதுவும் இல்லாமப் போயிடக் கூடாதுன்னு அளவுக்கு அதிகமா சமைக்கச் சொல்லியிருக்காங்க. ஊரே இவங்க வூட்டுக் கல்யாணத்துல சாப்பிடறதால மீஞ்சிப் போனத யாருக்குக் கொண்டு போய்க் கெடக்குறதுன்னு தெரியாம அது பயன்படாமப் போயிடக் கூடாதுன்னு சேத்து சேத்து வெச்சி குளங் குட்டையில இருக்குற மீனுங்களாவது சாப்பிட்டுத் தொலயட்டும்னு கொண்டு போயி அஞ்ஞ கொட்டியிருக்காங்க. மீந்துப் போயி சேத்து சேத்து வெச்சதால அந்த சாப்பாட்டுல புட் பாய்சன் ஆயிருந்துச்சோ என்ன ஆயிருந்துச்சோன்னு தெரியல. அதுகள சாப்பிட்ட மீனுங்க செத்து செத்து மெதக்குதுங்க. இப்பிடி மீனு செத்து மெதக்கிறதப் பார்த்த ஊருகாரங்க சில பெருக்கு அந்தச் சாப்பாட்டதாமே நாம்ம சாப்பிட்டோம், நாமளும் மீனு மாதிரி குடும்பத்தோடு கொத்துக் கொத்தா செத்து மெதப்போமான்னு ஒரு பயம் வேற வந்து தொலைக்குது. நல்லவேளை அப்படில்லாம் நடக்கல.
            அடப்பாவிங்களா காலத்துக்கும் நல்ல சாப்பாடு சாப்பிடாம, கல்யாணத்துக்குன்னு இப்படிச் சேத்து வெச்சி ஊருக்கே நல்ல சாப்பாடு போட்டும் இப்படி அநியாயமா குளங் குட்டையில இருக்குற மீனுங்களெயெல்லாம் சாவடிச்சிப் போட்டீங்களேன்னு ஊரு சனம் வருத்தத்தோடு பேசிட்டுத் திரிஞ்சிது. அதுல என்ன கூடுதல் வருத்தம்னா அந்த வருஷ கோடையில ஊரு குளம் குட்டை மீனு பிடிக்கிறப்ப ஒவ்வொரு வூட்டுக்கும் ஒரு பங்கு வரும். அன்னிக்கு பாத்தீங்கன்னா ஊரே மீனு குழம்பு வாசமா மணக்கும். மீனு கொழம்பு வாசம் மட்டுமா வறுவல், பெரட்டல் அது இதுன்னு ஊரே சோத்தச் சாப்பிடாம பேருக்குத் தொட்டுக்கிறதுக்கு சோத்தப் போடடுகிட்டு மீனா மட்டும் சாப்பிட்டு ஏப்பம் விடும். இந்த வருஷத்துக்கு அது இல்லாம போயிட்டேங்ற வருத்தம்தான் ஊரு காரங்களுக்கு. ஒரு வாரத்துக்கு விருந்து போட்டுட்டு ஊரு பங்குல சாப்புடுற மீனு கொழம்ப இந்த வருஷத்துக்கு இல்லாம பண்ணிட்டான்னே சாம்பமூர்த்தின்னு அது ஒரு கெட்ட பேருதாம் சாம்பமூர்த்திக்கு.
            சரி இப்படிதாம் ஆயிப் போச்சேன்னு சாம்பமூர்த்தியும் கனகசுந்தரியும் கல்யாணத்துக்குப் பிற்பாடாவது திருந்தானுங்களான்னு பார்த்தீங்கன்னா, பொண்ணு சுதந்திரமணிக்கு பொண்ணு பொறந்தத பார்த்துட்டு திரும்பவும் பேத்திக்கு பொண்ண விட ரொம்ப சிறப்பா கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பழைய நிலையை விட ரொம்ப மோசமான நிலைக்கு எறங்கி உண்ணுறதுலயும், உடுத்துறதுலயும் கறார் காட்டி பணத்த சேத்துட்டு இருக்காங்க. இதுகள திருத்த முடியாதுன்னு ஊருல ஒரு பேச்சு இருந்தாலும் அவங்களோட பேத்தியோட கல்யாணம் எப்ப வரும்னு ஊருக்குள்ள அவனவனும் ஒரு கணக்குப் பண்ணிட்டுதான் இருக்கான். ஒரு வார விருந்து சாப்பாடுல்ல. அதால எவம் அதெ நெனக்காம கணக்கு பண்ணாம இருப்பாம் சொல்லுங்க. அதுல ஒரு விசயம் பாருங்க! அவங்களோட பேத்திக்குக் கல்யாணம் நடந்து விருந்து மீந்துப் போயி அத குளம் குட்டையில அதப் போட்டு வருங்காலத்துல மீனு செத்து மெதக்காதுங்றது மட்டும் உறுதி. அத எப்பூடி அவ்ளோ உறுதியா சொல்றேன்னு கேக்குறீங்களா? ஊருல இருந்த பண்ண குட்டை, பரியாரி குட்டை, செட்டியாரு கொளம், வாளவாய்க்கா கொளம், கோணகாத்தாங் கொளம், சாம்பாரு குட்டை, சவுக்கண்டி குட்டை, வழிச்சாங் கொளம், தேங்காதண்ணி குட்டை, எடத்தெரு கொளம்னு ஒரு குளம், குட்டை பாக்கியில்லாம எல்லாத்தையும் தூத்துப் புட்டுச்சுங்க ஊரு சனம். இதெ கேட்டாக்க சாம்பமூர்த்தியும், கனகசுந்தரியும் கல்யாண விருந்த‍ வெச்சு குளம் குட்டையில் இருக்குற மீனுங்களயெல்லாம் கொன்னுபுடும்னேதாம் குளம், குட்டையெல்லாம் தூர்த்து மூடியாச்சின்னு பிலாக்கணம் பேசும்ங்க இந்த ஊரு சனங்க. போனது போயிப் போச்சி. ஊருல இந்தப் பெருமாளு குளமும், ஈசுவரன் குளமும்தான் குளமா கொஞ்சம் நஞ்சம் திடகாத்திரமாக வெங்காயத் தாமரை மண்டிப் போயி ஏதோ உசுர கையில பிடிச்சிட்டு நின்னுட்டு இருக்குது. அதயாவது ஊரு சனம் ரொம்ப தூர்த்திடாம பாதுகாக்கணும். மீனு செத்து மெதந்தா பரவாயில்ல, மறுவருஷம் பார்த்துகலாம். குளம், குட்டைங்க செத்து மிதந்தா? அப்படி மிதக்கக் கூடாதுல்ல. அதையும் தாண்டி அப்படி நடந்தா ஊரு சனங்கல்ல கோடையில தண்ணிக்குத் தவிச்சிப் போயி நிக்கும்!
            அட பாத்தீங்களா! தேசிகாவோட கல்யாணத்தப் பார்க்க கூட்டிட்டு போறத விட்டுட்டு ஊருல நடந்த வேற ஒரு கல்யாணத்துக்கு உங்கள எல்லாத்தியும் கூட்டிட்டுப் போயி  அதெ விட்டாச்சி! சரி வாங்க! அதயும் ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்திடுவோம்! இந்தக் கதையை எல்லாம் வெங்குவும், தம்மேந்தி ஆத்தாவும் செய்யு வூட்டு பைப்படியில உட்கார்ந்துகிட்டு நேரம் தெரியாம பேசிட்டு இருக்காங்றது உங்களுக்கு ஞாபவம் இருக்கும்னு நெனைக்கிறேம். கதெ இன்னும் முடியலீயே! அதால அவங்க பேசிட்டு இருக்காங்க. முடியற வரைக்கும் கேட்டுட்டு இருப்போம்!
*****

நாமெல்லாம் திரைப்பட பிரதிகள்!



            நாமெல்லாம் நாமாக இருக்கிறோமா? திரைப்படத்தின் பிரதிகளாக மாறிக் கொண்டிருக்கிறோமா?
            நாமெல்லாம் திரைப்படத்தின் பிரதிகள் என்றால் அதில் என்ன பிழை இருக்கிறது?
            திரைப்பட வசனங்களைத் தொடர்படுத்தாமல் வாழ்க்கையின் ஒரு உரையாடலை நம்மால் அமைத்துக் கொள்ள முடிகிறதா?
            காமெடி டயலாக்குகளிலும், பஞ்ச் டயலாக்குகளிலும் கரைத்துக் கொண்டு உரையாடிக் கொண்டு இருக்கிறது நம்முடைய வாழ்க்கை.
            இந்த வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கும் திரைப்படங்களே உதவியாக இருக்கின்றன நமக்கு. இதற்குச் சான்று காட்டவும் அதே திரைப்பட வசனத்தைத்தான் துணைக்கு வரவழைத்து, 'நல்லா வெச்சு செஞ்சிட்டாங்க!' என்று சொல்ல வேண்டியதாக இருக்கிறது நிலைமை.
            காலங்கள் எவ்வளவோ கடந்த போதும், மாற்றங்கள் எவ்வளவோ நிகழ்ந்த போதும் திரைநாயகர்கள் எல்லாம் உடல் வலிமையைக் காட்டிச் சண்டையிட்டுச் சாதிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சண்டைச் சமூகத்தின் தொடர்ச்சியாக நீள்கிறார்கள். அந்தச் சண்டை நமக்குப் பிடித்திருக்கிறது. மனித மனதில் இருக்கும் வெறியடங்காத அந்த வன்முறைக்கு தீனி போட வேண்டும் என்பது நம் கதைநாயகர்களுக்குத் தெரியும்.
            அதற்காக அவர்கள் பொறுக்கிகள், ரெளடிகள், சோம்பேறிகள், பொறுப்பற்றவர்கள் என்று எப்படி மாறியும் நடிக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் அப்படி நடிப்பதை ரசித்து மக்கள் தாங்களும் பொறுக்கிகள், ரெளடிகள், சோம்பேறிகள், பொறுப்பற்றவர்கள் என்று எப்படி மாறவும் தயாராக இருக்கிறார்கள்.
            அதற்கேற்ப கதைநாயகிகளும் ரெளடிகளை, பொறுக்கிகளை, சோம்பேறிகளை, பொறுப்பற்றவர்களை, வேலையற்றவர்களைக் காதலிக்கத் தொடங்குகின்றனர். முன்பு நாயகியர்கள் சமூகச் சிந்தனை உள்ளோர்கள், பொதுநலச் சேவகர்கள், வேலையில் இருப்போர், டாக்டராக இருப்போர், பேங்க் ஊழியராக இருப்போர், பாரின் மாப்பிள்ளையாக இருப்போர் என்று காதலித்தது மாறி இப்போது இது ஒரு புது டிரெண்டாக உருப்பெற்று வருகிறது. இது கதாநாயர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருவதைப் போல அதைப் பார்ப்பவர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.
            நடைமுறையில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ரெளடியாகவோ, பொறுக்கியாகவோ, சோம்பேறியாகவோ, பொறுப்பற்றவனவாகவோ, வேலையற்றவனாகவோ இருக்கும் ஆசை மனதின் ஓர் ஓரத்தில் இருக்கிறது. அந்த ஆசைக்கு நன்றாகவே தீனி போட்டு விடுகிறது திரைப்படங்கள்.
            திரைப்படங்கள் சமுதாயத்தில் நடக்காததைக் காட்டுவதில்லை. நடப்பதைத்தான் காட்டுகின்றன. ஏனென்றால் சமுதாயம் எப்படி நடக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்கும் திரைப்படத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை.
*****

28 Jul 2019

உதிர்ந்த பிறிதொரு கலெக்டர் கனவு



செய்யு - 159
            தேசிகாவை முருகு மாமா வீட்டில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடாத குறை. அதுவும் வீரனும் பிறந்த பிற்பாடுதான் முருகு மாமா தலையெடுத்ததாகவும், குடும்பம் விளங்கியதாகவும் பேசிக் கொள்வார்கள். வீரன் முருகு மாமாவின் மூன்றாவது பிள்ளை. தேசிகா நான்காவது பிள்ளை. இந்த இரண்டு பிள்ளைகள்தான் முருகு மாமாவுக்கு அடுத்தடுத்த ஒரு வருட இடைவெளியில் பிறந்த பிள்ளைகள். மற்றப் பிள்ளைகளுக்கு எல்லாம் நான்கைந்து வருட இடைவெளிகள் இருக்கும். இந்த இரண்டு பிள்ளைகளின் மேல் முருகு மாமாவுக்கும், நீலு அத்தைக்கும் தனி பிரியம்தான். அதனால்தான் முருகு மாமா தன் குலதெய்வமான வீரன் சாமி நினைவாக பையனுக்கு வீரன் என்றும், நீலு அத்தையின் குல தெய்வமான தேசிகாதேவி நினைவாக பெண் பிள்ளைக்கும் தேசிகா என்றும் பெயர் வைத்தானது. இதில் யாரைப் பற்றி முதலில் பார்ப்பது? யாரைப் பற்றி இரண்டாவது பார்ப்பது? இந்த ரெண்டு பிள்ளைகளும் உபரியான பாசம், செல்லம் கொடுத்து வளர்ந்த பிள்ளைகள். இதில் வீரனைப் பற்றி அடுத்தும், தேசிகாவைப் பற்றி முதலிலும் பார்த்து விடுவோம்.
            தேசிகாவை முருகு மாமா வீட்டில் தலையில் வைத்துக் கொண்டாடுவதில் காரணம் இல்லாமல் இருக்காது என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். தேசிகாவைப் போன்ற அழகானப் பெண்ணும் இந்த வகையறாவில் கிடையாது. அதைப் போன்று வாய் துடுக்கானப் பெண்ணும் இந்த வகையறாவில் கிடையாது. முருகு மாமா குடும்பத்தில் தேசிகாவை அப்படி வளர்த்ததால் என்னவோ அல்லது அதனுடைய இயல்போ அப்படியோ என்னவோ தேசிகாவின் பேச்சிலும் செயலிலும் ஒரு வித அலட்சியமும், மிடுக்கும் மற்றவர்களை செய்யும் அவமதிப்பும் தூக்கலாகவே தெரியும்.
            "ஏஞ் செல்லம்டா! நீ பேசுடா! நீ பண்ணுடா!" என்று தேசிகா எது பண்ணினாலும் முருகு மாமாவும் உசுப்பி விடும்.
            "ஒம் அழகுக்கு இந்த ஜில்லாவுல ஒன்னய கட்டிட்டுப் போறதுக்கு எவம்டி இருக்காம் எஞ் செல்லக்குட்டி! பொண்ணு அழகாவும், அறிவாவும் இருக்குன்னு அவளவளுக்கு ஒரு கண்ணு. ஒன்னய போல புள்ளையப் பெக்க முடியலேன்னு பொறாம பிடிச்சி அலயுறாளுவோ! இல்லாததயும் பொல்லாததயும் சொல்லிட்டு திரியுறாளுவோ! நிமிஷத்துக்கு நிமிஷம் சுத்திப் போட்டாலும் கண்ணு திருஷ்டி ஒனக்குக் கொறையாதுடி" என்று தேசிகாவைப் பற்றி பெரிதாகப் பேசிக் மருகிக் கொண்டிருக்கும் நீலு அத்தை.
            எல்லாருக்கும் தேசிகாவை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை. தேசிகாவுக்கும் ஆசைதான். படித்து கலெக்டராக வேண்டும் என்பதுதான் அதன் ஆசை. "ஒண்ணும் இல்லாம இருக்குறப்பவே இவ இந்த ராங்கு பண்றா! இதுல கலெக்டர் ஆயிட்டா ஊரு தாங்காதுடி ஆமா! இவ்வே பண்ற கோங்குக்கு பூமா தேவி ரண்டா வெடிச்சி செதறிப் போயிடுவா!" என்று தேசிகாவைப் பற்றிப் பேசாத சொந்தக்கார சனங்கள் கிடையாது.
            பஞ்சு மாமா உயிரோடு இருந்த வரை தேசிகாவுக்கு விளையாட்டுப் பொருளே பஞ்சு மாமாதான். பஞ்சு மாமா நடந்து போய்க் கொண்டிருக்கும் போது விருட்டென்று ஓடிப் போய் அதன் வேட்டியை அவிழ்த்து விடும். தோளில் துண்டோடு கவுட்டியில் கோவணத்தோடு பஞ்சு மாமா நிற்பதைப் பார்த்து, "இத்து ன்னா வேட்டி? ஒரே அழுக்கும் கரியுமா? இப்பதாம் நீயி பாக்குறதுக்கு ந்நல்லா இருக்கே சித்தப்பூ! இந்த கரி வேட்டிய கட்டுறதுக்கு கட்டாமலே இருக்கலாம்! செமயா இருக்கே சித்தப்பூ!" என்று சொல்லிக் கொண்டே உருவிய வேட்டியோடு ஓடும். வடவாதி நடுரோட்டில் கோவணத்தோடும், தோளில் துண்டோடும் நிற்கும் பஞ்சு மாமா தோளில் கிடக்கும் துண்டை உதறி கட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து வேட்டியைக் கட்டிக் கொண்டு போகும்.
            தூரத்தில் ஒளிந்தபடி பஞ்சு மாமா மேல் கல்லை வீசும் தேசிகா. சரியாக கல் போய் அதன் உடம்பில் பட்டு விட்டால், "ஒடம்பப் பாரேம் பெரிய பாறாங்கல்லு கணக்கா! தளக் புளக்னு ஆடிட்டு!  ரோட்டுல நடந்தா முக்காவாசி ரோடே மறஞ்சிடுதே! ச்சே! ஏய் ஊள சதெ சித்தப்பூ!" என்று ஊளையிடும் தேசிகா. பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பஞ்சு மாமாவுக்கு ஒரு எட்டுப் போய் சாப்பாடு கொடுத்து விட்டு வா என்றால், அந்தச் சாப்பாட்டை வாங்கி அப்படியே அதில் முகத்துக்கு அடிக்கும் பவுடரை அடித்து எடுத்துக் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்து விடும். அது புரியாமல் பஞ்சு மாமா சாப்பிட்டு முடித்தால், "சாப்பாடு ந்நல்லா வாசமா இருந்துதுல்ல! ஒம் மேல அடிக்கிற நாத்தத்துக்கு அதாஞ் சரி! நாளையிலேந்து நீ கமகமன்னு வாசமா அடிக்கப் போறப் பாரு!" என்று கெக்கலிக் கொட்டி சிரித்துக் கொண்டே ஓடி வரும்.
            இப்படி தேசிகா பஞ்சு மாமாவைப் படாத பாடு படுத்தி அடித்த லூட்டிகளைச் சொன்னால் அதற்கே நூறு அத்தியாயங்கள் எழுதினாலும் பத்தாது. தேசிகா இப்படியெல்லாம் பண்ணியதை யாராவது கண்டித்து இருக்கலாம் என்று இப்போதும் பேசிக் கொள்வதுண்டு. நீங்களும் கூட அப்படியே நினைக்கலாம். யார் கண்டிப்பது? அது செய்வதைக் கேள்விபடும் முருகு மாமாவாக இருந்தாலும் சரி, நீலு அத்தையாக இருந்தாலும் சரி, லாலு மாமாவாக இருந்தாலும் சரி விழுந்து விழுந்து சிரித்தார்கள். அவர்கள் சிரிப்பதைக் கேட்கும் போது தேசிகாவுக்கு சாதிக்க முடியாத எதையோ சாதித்து விட்ட மதப்பு வந்து விட்டது. முளையிலேயே கிள்ள வேண்டியதை செடி கிள‍வைிட்ட பிற்பாடும் அவர்கள் வளர்த்துக் கொண்டே போனார்கள்.
            மறுபடியும் தேசிகாவின் கலெக்டர் கனவுக்கு வந்தால் ...
            லாலு மாமா அப்போது வடவாதி பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக இருந்த போது தேசிகாவை அப்படி இப்படிச் சொல்லி பாஸாக்கிக் கொண்டே வந்தது. பின்பு அது வேற்குடிக்கு குடி வந்து, திட்டை பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு வந்த பிறகும் வடவாதி பள்ளிக்கூடத்தில் சொல்லி அப்படி இப்படியென்று எட்டாம் வகுப்பு வரையும் கொண்டு வந்தது. அப்போது வடவாதி பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு வரைதான் இருந்தது. ஒன்பதாவது மணமங்கலம் பள்ளிக்கூடத்தில்தான் சேர்க்க வேண்டும். அப்படி இப்படிச் சொல்லி மணமங்கலம் பள்ளிக்கூடத்திலும் ஒன்பதாவதைத் தேத்தி விடலாம் என நினைத்தது லாலு மாமா. மணமங்கலம் பள்ளிக்கூடத்தில் லாலு மாமாவின் பேச்சு எடுபடவில்லை. "அது ன்னா சாரு! ஏ, பி, சி, டி கூட தெரியாம எட்டாப்பு வரயில கொண்டாந்து இருக்கீங்க! கூட்டலு கழித்தலு தெரியுதா? தமிழுல வாசிக்கத் தெரியுதா? ஒம்பதாவுதுல பாஸூ போட்டா பத்தாவதுல பப்ளிக் எக்ஸாம் தெரியும்ல! அப்போ யாரப் போயி பாஸூ போடச் சொல்லுவீங்க! போங்க சாரு வேலய பாத்துட்டு!" என்று சொல்லியிருக்கிறார்கள். தேசிகாவும் அப்போது வயதுக்கு வந்திருந்தது. அத்தோடு ரெண்டு வருஷம் பெயிலாகி மூன்றாவது வருஷமாக ஒன்பதாவது வகுப்பிலேயே படித்துக் கொண்டிருந்தது. பெயிலானது குறித்தோ, ஒரே வகுப்பில் ரெண்டு வருஷத்துக்கு மேல் உட்காந்திருக்கிறோம் என்ற  வருத்தமெல்லாம் இல்லாமல்தான் அது மணமங்கலம் பள்ளிக்கூடத்துக்குப் போய்க் கொண்டிருந்தது.
            தேசிகாவின் நேரம் பாருங்கள்! அந்த வருஷம் தேசிகாவுக்கு ஒரு வரன் வந்தது. தேசிகாவையும் கேட்டுப் பார்த்தார்கள், "படிக்கிறீயா? கல்யாணத்த கட்டிக்கிறீயா?" என்று. தேசிகா கொஞ்சமும் யோசிக்காமல், "கல்யாணத்த கட்டிக்கிறேம்!" என்றது. இப்படியாக அதன் கலெக்டர் கனவு ஒரு முடிவுக்கு வந்தது.
            நீலு அத்தைக்கு தேசிகாவுக்குக் கல்யாணம் என்றதும் தாங்க முடியாத பெருமை. ரெண்டு பெண்களில் நாரங்குடி சந்திராவுக்குக் கல்யாணம் ஆகி தோள் உயரத்துக்கு நெருங்கி வளர்ந்து கொண்டிருந்த பேரன் பேத்திகள் இருக்க, இப்போது தேசிகாவின் கல்யாணத்தை முடித்து விட்டால் அதன் கடன் முடிந்தது விட்டது போலவும், பாக்கி இருப்பது ஆண் பிள்ளைகள் என்பதால் அவனுங்க பொழப்பை அவனுங்க எப்படியாவது பாத்துப்பானுங்க என்பது போலவும் பார்ப்போரிடமெல்லாம் நீலு அத்தை ரொம்ப விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்தது. அந்த அளவோடெல்லாம் விடக் கூடிய ஆளா நீலு அத்தை, "பொண்ணுன்னா என்னய போல பெக்கணும். ரெண்டுக்கும் நாம்ம எந்த மெனக்கெடலும் மெனக்கெடலயே. அவனுங்களா வந்தானுங்க. பொண்ணு பிடிச்சிருக்குன்னு கல்யாணத்த கட்டிட்டுப் போயிட்டே இருக்கானுங்க. இன்னும் பத்துப் பொண்ணுங்கன்னாலும் அப்படித்தாம் நம்ம வயத்துல வந்து பொறந்ததுக்கு நடக்கும். ஊரு ஒலகத்துல இருக்குற மாரியா? இருவது வயசுக்கு அப்புறமும் கல்யாணம் நடக்காம கெடக்குறதுக்கு? நாம்ம பெத்தது ஒவ்வொண்ணும் தங்க விக்ரகமில்ல. அள்ளிட்டுப் போயிடுவானுங்க!"
            தேசிகாவுக்குக் கல்யாணம் என்றதும் உடம்பு அப்போது ஒரு சுற்று பெருத்துதான் போனது. அதிகபட்சமாக அப்போது தேசிகாவுக்கு பதினாறு பதினேழு வயசுக்கு மேல் இருக்க முடியாது. பார்ப்பதற்கு அது இருபது வயசுக்கு மேலுள்ள கல்யாணம் ஆக வேண்டிய யுவதியைப் போலவே இருந்தது. நீலு அத்தைச் சொல்வது போல அது அழகு குறையாத தங்கச் சிலைதான். பார்ப்பவன் அப்படியே கொத்திக் கொண்டுதான் போவான்.
            முருகு மாமா தேசிகாவின் கல்யாணத்தை ரொம்பவும் தடபுடலாகப் பண்ணியது. கல்யாணம் திருவாரூரில் நாகப்பட்டிணம் ரோட்டில் இருந்த சத்திரம் போன்ற ஒரு கல்யாண மண்டபத்தில்தான் நடந்தது. இந்தக் கல்யாணதுக்காக சொந்த பந்தங்களை அழைத்துப் போவதற்காக பஸ் பிடித்தது முருகு மாமா. பொதுவாக வேன்தான் பிடிப்பார்கள். ஒரு வேன் போதவில்லை என்றால் ரெண்டு வேன் பிடிப்பார்கள். முதன் முதலாக இந்த வகையறாவில் பஸ் பிடித்து மூக்கின் மேல் விரலை வைக்க வைத்தது முருகு மாமா.
            தேசிகாவுக்கு ஏற்ற மாதிரியே மாப்பிள்ளையும் கொள்ளை அழகுதான். பார்க்க செக்கச் செவேலென்று அப்படி ஒரு சிவப்பை பார்க்க முடியாது என்பது போல இருந்தது. முகத்தை ஷேவிங் பண்ணாமல் முடியை டிரிம் செய்து விட்டிருந்தது. பின்னால் ஸ்டைலாக முடியைப் பின்னி ரிப்பன் போட்டிருந்தது. இந்த ஏரியாவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல கோர்ட் சூட்டில் காலில் ஷூவுடன் தேசிகாவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வந்து இறங்கிய போது சுற்றியிருந்த நாங்களெல்லாம் பெண் பார்க்க வருவதற்காகத்தான் மாப்பிள்ளை இந்தக் கோலத்தில் வந்திருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் மாப்பிள்ளை எந்நேரமும் இந்தக் கோலத்தில்தான் இருக்கும் என்று பேசிக் கொண்டதைக் கேட்ட போது அதுவும் ஓர் ஆச்சரியமாகத்தான் போனது.
            மாப்பிள்ளை திருச்சியில் இருந்த ஒரு பெரிய நகைக் கடையில் வேலை பார்ப்பதாகவும், தினமும் திருவாரூரிலிருந்து திருச்சிக்குப் போய் வரும் என்றும் பேசிக் கொண்டார்கள். அதென்ன தினமும் திருவாரூரிலிருந்து திருச்சிக்கு என்றால்... மாப்பிள்ளைக்கு திருவாரூர் வீட்டுக்கு வந்துப் படுத்தால்தான் தூக்கம் வருமாம்! அதனால் பயணம் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் தினமும் திருச்சி போய் வருமாம். இப்படி ஒன்றா இரண்டா? என்னென்னவோ பேசிக் கொண்டார்கள். மாப்பிளளை வேலை பார்க்கும் அந்த திருச்சி நகைக்கடைக்காரர்கள் கூடிய சீக்கிரத்தில் திருவாரூரிலும் ஒரு நகைக்கடை ஆரம்பிக்க இருப்பதாகவும், அப்படி ஆரம்பித்தால் அதற்கு மாப்பிள்ளையைத்தான் பொறுப்பாய் போட்டு ஆரம்பிப்பார்கள் என்றும் மாப்பிள்ளையைப் பற்றி ஏகத்துக்கும் பேசிக் கொண்டார்கள். மாப்பிள்ளை அந்தக் கடைக்கு வேலைக்குப் போகவில்லை என்றால் கடையில் எதுவும் நடக்காது என்றும் அளந்து கொட்டினார்கள்.
            ஆக சம்பந்தமும் பெரிய சம்பந்தமாகத்தான் அப்போது தெரிந்தது. முருகு மாமாவுக்கு ஏணி வைத்தாலும் எட்டாத சம்பந்தம் என்று பேசிக் கொண்டார்கள். தேசிகாவின் அழகைத் தவிர அந்த சம்பந்ததுக்கு வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது என்று வேறு இந்தச் சம்பந்தத்தைப் பற்றி பேச்சு அடிபட்டது. வந்திருந்த சொந்தப் பந்தங்களுக்கு அதுவும் ஒரு சந்தேகந்தான், "சொல்றதப் பாத்தா பெரும்புள்ளியா இருப்பாம் போலருக்கு! இவ்வேம் எப்டி முருகு மாமாவோட பொண்ண கட்டணும்னு ஒத்தக் கால்ல நிக்குறாம்? முருகு மாமாவுக்கு ஜாக்பாட்டுதாம்!" என்று வரிந்து கட்டிக் கொண்டு பேசிக் கொண்டன.
            பெண் பார்த்தலுக்குப் பிறகு மாப்பிள்ளை வீடு பார்க்கச் செல்லும் வழக்கம் உண்டு. அதற்குப் பின் கலந்து பேசி முகூர்த்த ஓலை எனும் நிச்சயதார்தத்தைச் செய்வது பழக்கம். மாப்பிள்ளையைப் பார்த்து பிரமித்துப் போய் விட்ட முருகு மாமாவும், லாலு மாமாவும் அவர்களாகவே தன்னார்வத்தோடு முன்வந்து, "எதுக்கு மாப்பிள்ளை பாக்குறது, நிச்சயம் பண்றதுன்னு காசிய கண்டமேனிக்கு செலவு பண்ணிட்டு! ரெண்டு பக்கத்துக்கும் எல்லாம் ஒத்துப் போச்சி. நேரா கல்யாணத்தயெ அந்த காசிக்கெல்லாம் சேத்து பிரமாதமா பண்ணிப் புடுவோம்!" என்றன.
            "கல்யாணத்த பொண்ணு வூட்டுல பண்ற வழக்கம் நம்மகிட்ட இல்லே. கல்யாணத்தெ நாங்கதாம் பண்ணுவோம்!" என்கின்றது மாப்பிள்ளை வீட்டு தரப்பு.
            முருகு மாமாவுக்குப் போதாதா றெக்கை கட்டிப் பறக்க? "அப்டின்னா பொண்ணுக்கு நாங்க ன்னா பண்ணணும்னு சொல்லுங்க!" என்கிறது முருகு மாமா.
            "கட்டுன பொடவையோட பொண்ணு வூட்டுக்கு வந்தா போதும்! அந்தப் பொடவைய கூட நாங்க எடுத்துத் தந்துடுவேம்!" என்கிறது மாப்பிள்ளை தரப்பு.
            "அட இது யென்ன பெருங்கூத்தால்ல இருக்கு! பொண்ணுக்கு நக நெட்டு சீரு சனத்தியப் பத்தி ஒரு வார்த்த சொல்லிட்டீங்கன்னா ந்நல்லா இருக்கும்!" என்றது லாலு மாமா.
            "என்னங்க பேசுறீங்க! அவ்வேம் மாப்பிள்ளகாரனே நகெ கடையில வேலப் பாக்கறவேம். அவ்வேம் பாக்காத நகையா? அப்டியே நகையில பொரளுறவ்வேம் பாத்துக்குங்க. அதுலயே கெடந்து கெடந்து நகெயே பாக்குறதுன்னா ஏத்தோ விரோதிய பாக்கிறவேம் போல பாக்கறாம்னா பாத்துக்குங்களேம்! கட்டிக் கொடுத்தீங்கன்னா வெச்சுக்குங்க அப்டியே பொண்ண தங்கத்தாலயே எழைச்சிடுவாம். அதால பொண்ணு நகெ நட்டுன்னு ஒண்ணு போட்டுட்டு வாரக் கூடாது!" என்கிறது மாப்பிள்ளை தரப்பு.
            "இது என்னடா ஊரு ஒலகம் பாக்காத அதிசயமால்ல இருக்கு!" என்று முருகு மாமா அசராத கொறைதான். "இருந்தாலும் எங்க பொண்ணுக்கு நகெ நட்டு போட்டுப் பாக்கணும்னு எங்களுக்கு ஆசையா இருக்காத யென்ன?" என்கிறது முருகு மாமா.
            "சொல்றத சொல்லிப்புட்டாச்சி. அப்பொறம் ஒங்க விருப்பம். அதுக்குக் குறுக்கா நாங்க நிக்க மாட்டோம். ஒங்க இஷ்டப்படி எரநூறு பவுனோ, முந்நூறு பவுனோ போட்டு அனுப்பி வுடுங்க!" என்கிறது மாப்பிள்ளை தரப்பு.
            அதைக் கேட்டதும் மயக்கம் வராத குறைதான் முருகு மாமாவுக்கு. இருநூறு பவுனுக்கும், முந்நூறு பவுனுக்கும் எங்கே போகும் முருகு மாமா? அதன் மொத்த சொத்தை விற்றாலும் அவ்வளவுதான் தேறும். மொத்த சொத்தும் தேசிகாவின் நகைக்கே போய் விட்டால் மற்ற கல்யாணச் செலவுக்கு என்ன பண்ணுவது? அதுவுமில்லாமல் மொத்த சொத்தும் தேசிகாவுக்கே கல்யாணச் செலவில் போய் விட்டால் ரகு, வீரன், சுமன் என்று இருக்கும் ஆம்பிள்ளைப் பிள்ளைகளுக்கு பாகம் என்று எதைப் பிரித்துக் கொடுப்பது? தேவையில்லாமல் வார்த்தையை விட்டு விட்டோமோ என்று ஒரு நிமிஷம் குழம்பிப் போகிறது முருகு மாமா. லாலு மாமா பேசாமல் இருக்குமாறு முருகு மாமாவின் பக்கத்தில் வந்து அதன் கையை ஒரு நிமிட்டு நிமிட்டுகிறது. முருகு மாமா புரிந்து கொள்கிறது. கூடுதல் புரிதலுக்காக லாலு மாமா முருகு மாமாவின் காதில், "அவ்னோவ்வோ பெரும் புள்ளிகளா இருப்பானுங்க போலருக்கு. அந்த ஓட்டத்துல எரநூறு, முந்நூறுன்னு பேச்சு ஓட்டத்துல சொல்றானுவோ. நாம்ம எவ்ளோ போட்டாலும் அதயெல்லாம் கண்டுக்க மாட்டானுங்க! முடிஞ்சத போட்டு விட்டுட்டு கண்டுக்காம இருந்துகிடணும்! அதால பேசாம இரு!" என்கிறது லாலு மாமா.
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...