செய்யு - 159
தேசிகாவை முருகு மாமா வீட்டில் தலையில்
தூக்கி வைத்து கொண்டாடாத குறை. அதுவும் வீரனும் பிறந்த பிற்பாடுதான் முருகு மாமா தலையெடுத்ததாகவும்,
குடும்பம் விளங்கியதாகவும் பேசிக் கொள்வார்கள். வீரன் முருகு மாமாவின் மூன்றாவது பிள்ளை.
தேசிகா நான்காவது பிள்ளை. இந்த இரண்டு பிள்ளைகள்தான் முருகு மாமாவுக்கு அடுத்தடுத்த
ஒரு வருட இடைவெளியில் பிறந்த பிள்ளைகள். மற்றப் பிள்ளைகளுக்கு எல்லாம் நான்கைந்து வருட
இடைவெளிகள் இருக்கும். இந்த இரண்டு பிள்ளைகளின் மேல் முருகு மாமாவுக்கும், நீலு அத்தைக்கும்
தனி பிரியம்தான். அதனால்தான் முருகு மாமா தன் குலதெய்வமான வீரன் சாமி நினைவாக பையனுக்கு
வீரன் என்றும், நீலு அத்தையின் குல தெய்வமான தேசிகாதேவி நினைவாக பெண் பிள்ளைக்கும்
தேசிகா என்றும் பெயர் வைத்தானது. இதில் யாரைப் பற்றி முதலில் பார்ப்பது? யாரைப் பற்றி
இரண்டாவது பார்ப்பது? இந்த ரெண்டு பிள்ளைகளும் உபரியான பாசம், செல்லம் கொடுத்து வளர்ந்த
பிள்ளைகள். இதில் வீரனைப் பற்றி அடுத்தும், தேசிகாவைப் பற்றி முதலிலும் பார்த்து விடுவோம்.
தேசிகாவை முருகு மாமா வீட்டில் தலையில்
வைத்துக் கொண்டாடுவதில் காரணம் இல்லாமல் இருக்காது என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்.
தேசிகாவைப் போன்ற அழகானப் பெண்ணும் இந்த வகையறாவில் கிடையாது. அதைப் போன்று வாய்
துடுக்கானப் பெண்ணும் இந்த வகையறாவில் கிடையாது. முருகு மாமா குடும்பத்தில் தேசிகாவை
அப்படி வளர்த்ததால் என்னவோ அல்லது அதனுடைய இயல்போ அப்படியோ என்னவோ தேசிகாவின் பேச்சிலும்
செயலிலும் ஒரு வித அலட்சியமும், மிடுக்கும் மற்றவர்களை செய்யும் அவமதிப்பும் தூக்கலாகவே
தெரியும்.
"ஏஞ் செல்லம்டா! நீ பேசுடா! நீ பண்ணுடா!"
என்று தேசிகா எது பண்ணினாலும் முருகு மாமாவும் உசுப்பி விடும்.
"ஒம் அழகுக்கு இந்த ஜில்லாவுல ஒன்னய
கட்டிட்டுப் போறதுக்கு எவம்டி இருக்காம் எஞ் செல்லக்குட்டி! பொண்ணு அழகாவும், அறிவாவும்
இருக்குன்னு அவளவளுக்கு ஒரு கண்ணு. ஒன்னய போல புள்ளையப் பெக்க முடியலேன்னு பொறாம
பிடிச்சி அலயுறாளுவோ! இல்லாததயும் பொல்லாததயும் சொல்லிட்டு திரியுறாளுவோ! நிமிஷத்துக்கு
நிமிஷம் சுத்திப் போட்டாலும் கண்ணு திருஷ்டி ஒனக்குக் கொறையாதுடி" என்று தேசிகாவைப்
பற்றி பெரிதாகப் பேசிக் மருகிக் கொண்டிருக்கும் நீலு அத்தை.
எல்லாருக்கும் தேசிகாவை நன்றாகப் படிக்க
வைக்க வேண்டும் என்ற ஆசை. தேசிகாவுக்கும் ஆசைதான். படித்து கலெக்டராக வேண்டும் என்பதுதான்
அதன் ஆசை. "ஒண்ணும் இல்லாம இருக்குறப்பவே இவ இந்த ராங்கு பண்றா! இதுல கலெக்டர்
ஆயிட்டா ஊரு தாங்காதுடி ஆமா! இவ்வே பண்ற கோங்குக்கு பூமா தேவி ரண்டா வெடிச்சி செதறிப்
போயிடுவா!" என்று தேசிகாவைப் பற்றிப் பேசாத சொந்தக்கார சனங்கள் கிடையாது.
பஞ்சு மாமா உயிரோடு இருந்த வரை தேசிகாவுக்கு
விளையாட்டுப் பொருளே பஞ்சு மாமாதான். பஞ்சு மாமா நடந்து போய்க் கொண்டிருக்கும் போது
விருட்டென்று ஓடிப் போய் அதன் வேட்டியை அவிழ்த்து விடும். தோளில் துண்டோடு கவுட்டியில்
கோவணத்தோடு பஞ்சு மாமா நிற்பதைப் பார்த்து, "இத்து ன்னா வேட்டி? ஒரே அழுக்கும்
கரியுமா? இப்பதாம் நீயி பாக்குறதுக்கு ந்நல்லா இருக்கே சித்தப்பூ! இந்த கரி வேட்டிய
கட்டுறதுக்கு கட்டாமலே இருக்கலாம்! செமயா இருக்கே சித்தப்பூ!" என்று சொல்லிக்
கொண்டே உருவிய வேட்டியோடு ஓடும். வடவாதி நடுரோட்டில் கோவணத்தோடும், தோளில் துண்டோடும்
நிற்கும் பஞ்சு மாமா தோளில் கிடக்கும் துண்டை உதறி கட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து
வேட்டியைக் கட்டிக் கொண்டு போகும்.
தூரத்தில் ஒளிந்தபடி பஞ்சு மாமா மேல் கல்லை
வீசும் தேசிகா. சரியாக கல் போய் அதன் உடம்பில் பட்டு விட்டால், "ஒடம்பப் பாரேம்
பெரிய பாறாங்கல்லு கணக்கா! தளக் புளக்னு ஆடிட்டு!
ரோட்டுல நடந்தா முக்காவாசி ரோடே மறஞ்சிடுதே! ச்சே! ஏய் ஊள சதெ சித்தப்பூ!"
என்று ஊளையிடும் தேசிகா. பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பஞ்சு மாமாவுக்கு
ஒரு எட்டுப் போய் சாப்பாடு கொடுத்து விட்டு வா என்றால், அந்தச் சாப்பாட்டை வாங்கி
அப்படியே அதில் முகத்துக்கு அடிக்கும் பவுடரை அடித்து எடுத்துக் கொண்டு போய் கொடுத்து
விட்டு வந்து விடும். அது புரியாமல் பஞ்சு மாமா சாப்பிட்டு முடித்தால், "சாப்பாடு
ந்நல்லா வாசமா இருந்துதுல்ல! ஒம் மேல அடிக்கிற நாத்தத்துக்கு அதாஞ் சரி! நாளையிலேந்து
நீ கமகமன்னு வாசமா அடிக்கப் போறப் பாரு!" என்று கெக்கலிக் கொட்டி சிரித்துக்
கொண்டே ஓடி வரும்.
இப்படி தேசிகா பஞ்சு மாமாவைப் படாத பாடு
படுத்தி அடித்த லூட்டிகளைச் சொன்னால் அதற்கே நூறு அத்தியாயங்கள் எழுதினாலும் பத்தாது.
தேசிகா இப்படியெல்லாம் பண்ணியதை யாராவது கண்டித்து இருக்கலாம் என்று இப்போதும் பேசிக்
கொள்வதுண்டு. நீங்களும் கூட அப்படியே நினைக்கலாம். யார் கண்டிப்பது? அது செய்வதைக்
கேள்விபடும் முருகு மாமாவாக இருந்தாலும் சரி, நீலு அத்தையாக இருந்தாலும் சரி, லாலு
மாமாவாக இருந்தாலும் சரி விழுந்து விழுந்து சிரித்தார்கள். அவர்கள் சிரிப்பதைக் கேட்கும்
போது தேசிகாவுக்கு சாதிக்க முடியாத எதையோ சாதித்து விட்ட மதப்பு வந்து விட்டது. முளையிலேயே
கிள்ள வேண்டியதை செடி கிளவைிட்ட பிற்பாடும் அவர்கள் வளர்த்துக் கொண்டே போனார்கள்.
மறுபடியும் தேசிகாவின் கலெக்டர் கனவுக்கு
வந்தால் ...
லாலு மாமா அப்போது வடவாதி பள்ளிக்கூடத்தில்
வாத்தியாராக இருந்த போது தேசிகாவை அப்படி இப்படிச் சொல்லி பாஸாக்கிக் கொண்டே வந்தது.
பின்பு அது வேற்குடிக்கு குடி வந்து, திட்டை பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு வந்த பிறகும்
வடவாதி பள்ளிக்கூடத்தில் சொல்லி அப்படி இப்படியென்று எட்டாம் வகுப்பு வரையும் கொண்டு
வந்தது. அப்போது வடவாதி பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு வரைதான் இருந்தது. ஒன்பதாவது
மணமங்கலம் பள்ளிக்கூடத்தில்தான் சேர்க்க வேண்டும். அப்படி இப்படிச் சொல்லி மணமங்கலம்
பள்ளிக்கூடத்திலும் ஒன்பதாவதைத் தேத்தி விடலாம் என நினைத்தது லாலு மாமா. மணமங்கலம்
பள்ளிக்கூடத்தில் லாலு மாமாவின் பேச்சு எடுபடவில்லை. "அது ன்னா சாரு! ஏ, பி, சி,
டி கூட தெரியாம எட்டாப்பு வரயில கொண்டாந்து இருக்கீங்க! கூட்டலு கழித்தலு தெரியுதா?
தமிழுல வாசிக்கத் தெரியுதா? ஒம்பதாவுதுல பாஸூ போட்டா பத்தாவதுல பப்ளிக் எக்ஸாம் தெரியும்ல!
அப்போ யாரப் போயி பாஸூ போடச் சொல்லுவீங்க! போங்க சாரு வேலய பாத்துட்டு!"
என்று சொல்லியிருக்கிறார்கள். தேசிகாவும் அப்போது வயதுக்கு வந்திருந்தது. அத்தோடு
ரெண்டு வருஷம் பெயிலாகி மூன்றாவது வருஷமாக ஒன்பதாவது வகுப்பிலேயே படித்துக் கொண்டிருந்தது.
பெயிலானது குறித்தோ, ஒரே வகுப்பில் ரெண்டு வருஷத்துக்கு மேல் உட்காந்திருக்கிறோம்
என்ற வருத்தமெல்லாம் இல்லாமல்தான் அது மணமங்கலம்
பள்ளிக்கூடத்துக்குப் போய்க் கொண்டிருந்தது.
தேசிகாவின் நேரம் பாருங்கள்! அந்த வருஷம்
தேசிகாவுக்கு ஒரு வரன் வந்தது. தேசிகாவையும் கேட்டுப் பார்த்தார்கள், "படிக்கிறீயா?
கல்யாணத்த கட்டிக்கிறீயா?" என்று. தேசிகா கொஞ்சமும் யோசிக்காமல், "கல்யாணத்த
கட்டிக்கிறேம்!" என்றது. இப்படியாக அதன் கலெக்டர் கனவு ஒரு முடிவுக்கு வந்தது.
நீலு அத்தைக்கு தேசிகாவுக்குக் கல்யாணம்
என்றதும் தாங்க முடியாத பெருமை. ரெண்டு பெண்களில் நாரங்குடி சந்திராவுக்குக் கல்யாணம்
ஆகி தோள் உயரத்துக்கு நெருங்கி வளர்ந்து கொண்டிருந்த பேரன் பேத்திகள் இருக்க, இப்போது
தேசிகாவின் கல்யாணத்தை முடித்து விட்டால் அதன் கடன் முடிந்தது விட்டது போலவும், பாக்கி
இருப்பது ஆண் பிள்ளைகள் என்பதால் அவனுங்க பொழப்பை அவனுங்க எப்படியாவது பாத்துப்பானுங்க
என்பது போலவும் பார்ப்போரிடமெல்லாம் நீலு அத்தை ரொம்ப விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்தது.
அந்த அளவோடெல்லாம் விடக் கூடிய ஆளா நீலு அத்தை, "பொண்ணுன்னா என்னய போல பெக்கணும்.
ரெண்டுக்கும் நாம்ம எந்த மெனக்கெடலும் மெனக்கெடலயே. அவனுங்களா வந்தானுங்க. பொண்ணு
பிடிச்சிருக்குன்னு கல்யாணத்த கட்டிட்டுப் போயிட்டே இருக்கானுங்க. இன்னும் பத்துப்
பொண்ணுங்கன்னாலும் அப்படித்தாம் நம்ம வயத்துல வந்து பொறந்ததுக்கு நடக்கும். ஊரு ஒலகத்துல
இருக்குற மாரியா? இருவது வயசுக்கு அப்புறமும் கல்யாணம் நடக்காம கெடக்குறதுக்கு? நாம்ம
பெத்தது ஒவ்வொண்ணும் தங்க விக்ரகமில்ல. அள்ளிட்டுப் போயிடுவானுங்க!"
தேசிகாவுக்குக் கல்யாணம் என்றதும் உடம்பு
அப்போது ஒரு சுற்று பெருத்துதான் போனது. அதிகபட்சமாக அப்போது தேசிகாவுக்கு பதினாறு
பதினேழு வயசுக்கு மேல் இருக்க முடியாது. பார்ப்பதற்கு அது இருபது வயசுக்கு மேலுள்ள
கல்யாணம் ஆக வேண்டிய யுவதியைப் போலவே இருந்தது. நீலு அத்தைச் சொல்வது போல அது அழகு
குறையாத தங்கச் சிலைதான். பார்ப்பவன் அப்படியே கொத்திக் கொண்டுதான் போவான்.
முருகு மாமா தேசிகாவின் கல்யாணத்தை ரொம்பவும்
தடபுடலாகப் பண்ணியது. கல்யாணம் திருவாரூரில் நாகப்பட்டிணம் ரோட்டில் இருந்த சத்திரம்
போன்ற ஒரு கல்யாண மண்டபத்தில்தான் நடந்தது. இந்தக் கல்யாணதுக்காக சொந்த பந்தங்களை
அழைத்துப் போவதற்காக பஸ் பிடித்தது முருகு மாமா. பொதுவாக வேன்தான் பிடிப்பார்கள்.
ஒரு வேன் போதவில்லை என்றால் ரெண்டு வேன் பிடிப்பார்கள். முதன் முதலாக இந்த வகையறாவில்
பஸ் பிடித்து மூக்கின் மேல் விரலை வைக்க வைத்தது முருகு மாமா.
தேசிகாவுக்கு ஏற்ற மாதிரியே மாப்பிள்ளையும்
கொள்ளை அழகுதான். பார்க்க செக்கச் செவேலென்று அப்படி ஒரு சிவப்பை பார்க்க முடியாது
என்பது போல இருந்தது. முகத்தை ஷேவிங் பண்ணாமல் முடியை டிரிம் செய்து விட்டிருந்தது.
பின்னால் ஸ்டைலாக முடியைப் பின்னி ரிப்பன் போட்டிருந்தது. இந்த ஏரியாவுக்கும் தனக்கும்
சம்பந்தம் இல்லாதது போல கோர்ட் சூட்டில் காலில் ஷூவுடன் தேசிகாவைப் பெண் பார்க்க
மாப்பிள்ளை வந்து இறங்கிய போது சுற்றியிருந்த நாங்களெல்லாம் பெண் பார்க்க வருவதற்காகத்தான்
மாப்பிள்ளை இந்தக் கோலத்தில் வந்திருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் மாப்பிள்ளை
எந்நேரமும் இந்தக் கோலத்தில்தான் இருக்கும் என்று பேசிக் கொண்டதைக் கேட்ட போது அதுவும்
ஓர் ஆச்சரியமாகத்தான் போனது.
மாப்பிள்ளை திருச்சியில் இருந்த ஒரு பெரிய
நகைக் கடையில் வேலை பார்ப்பதாகவும், தினமும் திருவாரூரிலிருந்து திருச்சிக்குப் போய்
வரும் என்றும் பேசிக் கொண்டார்கள். அதென்ன தினமும் திருவாரூரிலிருந்து திருச்சிக்கு
என்றால்... மாப்பிள்ளைக்கு திருவாரூர் வீட்டுக்கு வந்துப் படுத்தால்தான் தூக்கம் வருமாம்!
அதனால் பயணம் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் தினமும் திருச்சி போய் வருமாம். இப்படி
ஒன்றா இரண்டா? என்னென்னவோ பேசிக் கொண்டார்கள். மாப்பிளளை வேலை பார்க்கும் அந்த திருச்சி
நகைக்கடைக்காரர்கள் கூடிய சீக்கிரத்தில் திருவாரூரிலும் ஒரு நகைக்கடை ஆரம்பிக்க இருப்பதாகவும்,
அப்படி ஆரம்பித்தால் அதற்கு மாப்பிள்ளையைத்தான் பொறுப்பாய் போட்டு ஆரம்பிப்பார்கள்
என்றும் மாப்பிள்ளையைப் பற்றி ஏகத்துக்கும் பேசிக் கொண்டார்கள். மாப்பிள்ளை அந்தக்
கடைக்கு வேலைக்குப் போகவில்லை என்றால் கடையில் எதுவும் நடக்காது என்றும் அளந்து கொட்டினார்கள்.
ஆக சம்பந்தமும் பெரிய சம்பந்தமாகத்தான்
அப்போது தெரிந்தது. முருகு மாமாவுக்கு ஏணி வைத்தாலும் எட்டாத சம்பந்தம் என்று பேசிக்
கொண்டார்கள். தேசிகாவின் அழகைத் தவிர அந்த சம்பந்ததுக்கு வேறு காரணம் எதுவும் இருக்க
முடியாது என்று வேறு இந்தச் சம்பந்தத்தைப் பற்றி பேச்சு அடிபட்டது. வந்திருந்த சொந்தப்
பந்தங்களுக்கு அதுவும் ஒரு சந்தேகந்தான், "சொல்றதப் பாத்தா பெரும்புள்ளியா இருப்பாம்
போலருக்கு! இவ்வேம் எப்டி முருகு மாமாவோட பொண்ண கட்டணும்னு ஒத்தக் கால்ல நிக்குறாம்?
முருகு மாமாவுக்கு ஜாக்பாட்டுதாம்!" என்று வரிந்து கட்டிக் கொண்டு பேசிக் கொண்டன.
பெண் பார்த்தலுக்குப் பிறகு மாப்பிள்ளை
வீடு பார்க்கச் செல்லும் வழக்கம் உண்டு. அதற்குப் பின் கலந்து பேசி முகூர்த்த ஓலை எனும்
நிச்சயதார்தத்தைச் செய்வது பழக்கம். மாப்பிள்ளையைப் பார்த்து பிரமித்துப் போய் விட்ட
முருகு மாமாவும், லாலு மாமாவும் அவர்களாகவே தன்னார்வத்தோடு முன்வந்து, "எதுக்கு
மாப்பிள்ளை பாக்குறது, நிச்சயம் பண்றதுன்னு காசிய கண்டமேனிக்கு செலவு பண்ணிட்டு! ரெண்டு
பக்கத்துக்கும் எல்லாம் ஒத்துப் போச்சி. நேரா கல்யாணத்தயெ அந்த காசிக்கெல்லாம் சேத்து
பிரமாதமா பண்ணிப் புடுவோம்!" என்றன.
"கல்யாணத்த பொண்ணு வூட்டுல பண்ற
வழக்கம் நம்மகிட்ட இல்லே. கல்யாணத்தெ நாங்கதாம் பண்ணுவோம்!" என்கின்றது மாப்பிள்ளை
வீட்டு தரப்பு.
முருகு மாமாவுக்குப் போதாதா றெக்கை கட்டிப்
பறக்க? "அப்டின்னா பொண்ணுக்கு நாங்க ன்னா பண்ணணும்னு சொல்லுங்க!" என்கிறது
முருகு மாமா.
"கட்டுன பொடவையோட பொண்ணு வூட்டுக்கு
வந்தா போதும்! அந்தப் பொடவைய கூட நாங்க எடுத்துத் தந்துடுவேம்!" என்கிறது மாப்பிள்ளை
தரப்பு.
"அட இது யென்ன பெருங்கூத்தால்ல இருக்கு!
பொண்ணுக்கு நக நெட்டு சீரு சனத்தியப் பத்தி ஒரு வார்த்த சொல்லிட்டீங்கன்னா ந்நல்லா
இருக்கும்!" என்றது லாலு மாமா.
"என்னங்க பேசுறீங்க! அவ்வேம் மாப்பிள்ளகாரனே
நகெ கடையில வேலப் பாக்கறவேம். அவ்வேம் பாக்காத நகையா? அப்டியே நகையில பொரளுறவ்வேம்
பாத்துக்குங்க. அதுலயே கெடந்து கெடந்து நகெயே பாக்குறதுன்னா ஏத்தோ விரோதிய பாக்கிறவேம்
போல பாக்கறாம்னா பாத்துக்குங்களேம்! கட்டிக் கொடுத்தீங்கன்னா வெச்சுக்குங்க அப்டியே
பொண்ண தங்கத்தாலயே எழைச்சிடுவாம். அதால பொண்ணு நகெ நட்டுன்னு ஒண்ணு போட்டுட்டு வாரக்
கூடாது!" என்கிறது மாப்பிள்ளை தரப்பு.
"இது என்னடா ஊரு ஒலகம் பாக்காத அதிசயமால்ல
இருக்கு!" என்று முருகு மாமா அசராத கொறைதான். "இருந்தாலும் எங்க பொண்ணுக்கு
நகெ நட்டு போட்டுப் பாக்கணும்னு எங்களுக்கு ஆசையா இருக்காத யென்ன?" என்கிறது
முருகு மாமா.
"சொல்றத சொல்லிப்புட்டாச்சி. அப்பொறம்
ஒங்க விருப்பம். அதுக்குக் குறுக்கா நாங்க நிக்க மாட்டோம். ஒங்க இஷ்டப்படி எரநூறு
பவுனோ, முந்நூறு பவுனோ போட்டு அனுப்பி வுடுங்க!" என்கிறது மாப்பிள்ளை தரப்பு.
அதைக் கேட்டதும் மயக்கம் வராத குறைதான்
முருகு மாமாவுக்கு. இருநூறு பவுனுக்கும், முந்நூறு பவுனுக்கும் எங்கே போகும் முருகு
மாமா? அதன் மொத்த சொத்தை விற்றாலும் அவ்வளவுதான் தேறும். மொத்த சொத்தும் தேசிகாவின்
நகைக்கே போய் விட்டால் மற்ற கல்யாணச் செலவுக்கு என்ன பண்ணுவது? அதுவுமில்லாமல் மொத்த
சொத்தும் தேசிகாவுக்கே கல்யாணச் செலவில் போய் விட்டால் ரகு, வீரன், சுமன் என்று இருக்கும்
ஆம்பிள்ளைப் பிள்ளைகளுக்கு பாகம் என்று எதைப் பிரித்துக் கொடுப்பது? தேவையில்லாமல்
வார்த்தையை விட்டு விட்டோமோ என்று ஒரு நிமிஷம் குழம்பிப் போகிறது முருகு மாமா. லாலு
மாமா பேசாமல் இருக்குமாறு முருகு மாமாவின் பக்கத்தில் வந்து அதன் கையை ஒரு நிமிட்டு
நிமிட்டுகிறது. முருகு மாமா புரிந்து கொள்கிறது. கூடுதல் புரிதலுக்காக லாலு மாமா முருகு
மாமாவின் காதில், "அவ்னோவ்வோ பெரும் புள்ளிகளா இருப்பானுங்க போலருக்கு. அந்த
ஓட்டத்துல எரநூறு, முந்நூறுன்னு பேச்சு ஓட்டத்துல சொல்றானுவோ. நாம்ம எவ்ளோ போட்டாலும்
அதயெல்லாம் கண்டுக்க மாட்டானுங்க! முடிஞ்சத போட்டு விட்டுட்டு கண்டுக்காம இருந்துகிடணும்!
அதால பேசாம இரு!" என்கிறது லாலு மாமா.
*****
No comments:
Post a Comment