29 Jul 2019

குளம் செத்து மிதந்த கதை



செய்யு - 160
            இங்கே மனுஷன் ரெண்டு விசயங்களுக்காகத்தான் வாழ்கிறான். ஒன்று கல்யாணம், மற்றொன்று பிழைப்பு. வாழ்க்கையில் தப்பிப் பிழைக்க வேண்டுமே என்று கல்யாணத்தைச் செய்து கொள்கிறான் மற்றும் செய்விக்கிறான். அந்தக் கல்யாணத்தைச் செய்ய வேண்டுமே, செய்விக்க வேண்டுமே என்று வாழ்நாள் முழுவதும் பிழைக்கிறான். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி கல்யாணத்துக்காக வாழ்நாள் முழுவதும் சேமிக்கிறான். கல்யாணம் என்ற ஒரு நாள் கூத்தில் அத்தனையையும் பந்தயப் பொருளாய் வைத்து விளையாடுகிறான்.
            ஒரு நல்ல சாப்பாடு ஒரு நாளாவது சாப்பிட்டிருப்பானா இந்த மனுஷன்? கல்யாணத்து அன்று பார்த்தால் நல்ல சாப்பாடு அவ்வளவு வீணாய்ப் போய், மீந்துப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் கிடக்கும்.
            இப்படித்தான் நம்ம திட்டையில் சாம்பமூர்த்தி வீட்டுக் கல்யாணம் நடந்தப்போ நடந்த செய்தியைக் கேள்விப்பட்டிங்கன்னா இதென்னப்பா பைத்தியக்காரதனமான கூத்தா இருக்குன்னு நீங்களே சொல்லிப்புடுவீங்க! சாம்பமூர்த்திக்கு ஒரே பொண்ணு. அதிலும் ஆம்பளப் புள்ளைங்கள பெத்தவங்கள காட்டிலும், பொம்பள புள்ளைங்கள பெத்தவங்க இருக்காங்களே அவங்க பொண்ணு பொறந்த அடுத்த நிமிஷத்துலேந்து பொண்ணோட கல்யாணத்த நெனைச்சிப் பணத்த சேர்க்க ஆரம்பிச்சிடுவாங்க. சாம்பமூர்த்தி பணத்தாளைக் கட்டு கட்டா சேர்த்தார்ன்னா அவரு பொண்டாட்டி கனகசுந்தரி பால் வித்த காசு, மோரு வித்த காசு, வறட்டி வித்த காசுன்னு காசுகள பாத்து ஒரு வாளியில போட்டு சேர்த்துச்சு. இதுக்குன்னே டவுன்ல போயி பத்து பதினைஞ்சு எவர்சில்வர் வாளிகளா பாத்து வாங்கி வந்து சேத்துச்சுன்னா பாத்துக்குங்க. யாராவது நெருங்குன சொந்தம் பந்தம் வந்தா காசு சேத்துருக்கிற அந்த வாளிய கூப்பிட்டுக் காட்டுறது அதுக்கு ஒரு சந்தோஷம். இதென்னப்பா ஒங்க கிராமத்துல இருக்குறதெல்லாம் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகமாக இருக்குன்னு கேட்டீங்கள்ன்னா... இப்படி நிறைய ரகம் ‍இருக்கு. அதை அப்போகைப்போ பாத்துக்கலாம். எல்லா ரகமும் கொஞ்சம் சீரியஸான வேடிக்கையான ரகம்தான்.
              கனகசுந்தரி ஒரு நல்ல சேலை கட்டிட்டு பார்க்க முடியாது. வெளுத்துப் போன சுருங்கிப் போன பார்க்க சகிக்காத கந்தல் சேலைகளாத்தான் பார்த்து கட்டும். வருஷத்துக்கு ரெண்டு புடவை எடுத்தா அதுல காசு கொறைஞ்சுப் போய் பொண்ணுக்கு கல்யாண முறை செய்யுறதுல குறை வந்துடுமோன்னு அதுக்கு ஒரு நெனைப்பு. வருஷா வருஷம் தீவாளிக்கு மட்டும் ஒரு பீத்த சேலையைப் பேருக்கு எடுத்துக் கட்டிக்கிறதோட சரி. சாம்பமூர்த்தி அதுக்கு மேல. வேட்டிய கட்டுனா அதுக்குத் தொவைக்கிறதுக்கு சவுக்காரம் செலவு ஆகும்னு ஒரு காக்கிக் கலரு டிராயர போட்டுட்டுத் திரிவாரு. அதையும் பத்து மாசத்துகு ஒரு தடவ தொவைக்கிறாரா, இருபது மாசத்துக்கு ஒரு தடவ தொவைக்கிறாரான்னு யாருக்குத் தெரியும் சொல்லுங்க. எப்பயாவது ரொம்ப அதிசயமாக ஊருல ஏதாச்சிம் விஷேசம்னா வேட்டிக் கட்டுவாரு. வேட்டின்னா அதுவும் அழுக்கு வேட்டியத்தான் கட்டுவாரு. மேலுக்கு ஒரு சந்த கலரு சட்டை. அது அழுக்கா இருக்கா சந்தன கலர்ல இருக்கான்னு ஊருக்குள்ள ஒரு சந்தேகம்தான். இந்த சந்தேகத்த யாருகிட்ட போயி தீர்க்க முடியும் சொல்லுங்க. அதனாலயே அவருக்கு அழுக்கு வேட்டி சாம்பமூர்த்தின்னு பேரு வந்திடுச்சுன்னா பாத்துக்குங்களேன். சில பேரு காக்கிக்காலு சட்ட சாம்பமூர்த்தின்னும் சொல்லுவாங்க. எப்படிச் சொன்னாலும் அது திட்டையில சாம்பமூர்த்திதான்.
            இந்த ரெண்டும் அதாங்க புருஷனும் பொண்டாட்டியும் சாப்புடுற கதையைச் சொன்னா வாயிலும் வயித்துலயும் அடிச்சிட்டு அழ மாட்டீங்க அப்படிச் சிரிப்பீங்க. ரெண்டு பேருக்கும் மூணு வேளைக்கும் சேர்த்து கைக்குள்ள வர்ற மாதிரி ஆறு சாப்பாட்டு டப்பா. காலயிலயே சோத்த வடிச்சி புளி சாதமா கெளறி வெச்சி என்னமோ வெளியூரு போற கணக்கா அதுல அடைச்சிக்கிறது. நாட்டுல வாழைக்காயைத் தவிர வேற காய்கறியே இல்லாத மாதிரி தெனமும் ஒரு வாழைக்காயில பாதிய வெட்டிப் போட்டு கறியா செஞ்சு ஆளுக்கு ரெண்டு துண்ட அதுலயே அப்படியே திணிச்சி வெச்சிக்கிறது. அதுதாம் நாளு மாறாம வாரம் எழு நாளைக்கும் சாப்பாடு. எங்கேயாவது கல்யாண கருமாதி விஷேசமோ இல்ல கோயிலு விஷேசம்னோ வெச்சிக்குங்க அப்ப மட்டும் வந்து மூக்கு முட்ட சாப்பிடுறது. சாப்பிடறதோட இல்லாம ரெண்டு மூணு நாளைக்கு அந்த டப்பாக்கள்ல வாங்கி அடைச்சிக்கிறது. இதுலயும் ஒரு வேடிக்கைப் பாருங்க. அவங்கதான் இப்படிச் சாப்பிட்டாங்களே தவிர பொண்ணுக்கு அளவா மூணு வேளைக்கும் அதுக்கு மட்டும் தனியா சமைச்சிப் போட்டுடுவாங்க. இட்டிலின்னா நாலு, தோசைன்னா மூணு, சோறுன்னா அதுக்கு ரெண்டு டபரா கணக்கு, கொழம்புன்னா அதுக்கு ஒன்றரைக் கரண்டின்னு அதுலயும் கணக்கு உண்டு. அதிகமாக சாப்பிட்டு பொண்ணு திம்சு கட்ட கணக்குக்குப் போய்ட்டா எந்தப் பய வந்து பொண்ணு கட்டுவான்னு அதுல ஒரு பயம். அதால டயட் கன்ட்ரோல் மாதிரி அப்பவே அந்த மாதிரி அவங்க பண்ணுனத பார்க்கும் போது இந்தக் காலத்து பொண்ணுங்களோட டயட் கன்ட்ரோலுக்கெல்லாம் அவங்கதான் முன்னோடின்னு ஒரு நெனைப்பு வந்து போறதைத் தடுக்க முடியல பாருங்க!
            இந்த டிரெஸ் போடுறது சாப்பிடுறதுல புருஷனும் பொண்டாட்டியும்தான் அப்படி இருந்தாங்களே தவிர பொண்ணு சுதந்திரமணியை அப்படியே தங்க விக்கிரகம் கணக்கா சோடிச்சு வெச்சிருப்பாங்க. பொண்ண பாத்துக்குறதுல ரெண்டு பேருக்கும் போட்டா போட்டிதாம். வயசுக்கு வந்ததும் பொண்ணோட படிப்ப நிப்பாட்டிட்டாங்க. சுதந்திரமணிக்கு ரொம்ப படிக்கணும்னு ஆசை. எங்க வயசுக்கு வந்தப் பொண்ண தொடர்ந்து படிக்க வெச்ச அது எவன் கூடயவாது ஓடிப் போச்சுன்னா என்னா ஆவுறதுன்னு ரெண்டு பேருக்கம் கவலை. அதாங் அந்த கவலைய தொடர விடவானேன்னு படிப்பை நிப்பாட்டிப் போட்டாங்க.
            பொண்ணு கல்யாண வயசு வந்து ச்சும்மா அப்படியே தளதளன்னு வளர்ந்து நிக்குது. ஊருல இருக்குற இளந்தாரிப் பசங்களுக்கு சாதி மாறி கல்யாணம் பண்ணாலும் பரவாயில்ல, கட்டுனா சுதந்திரமணியத்தான் கட்டணும்னு மனசுக்குள்ள ஒரு இது வந்துப் போவுது. அது என்னா இதுன்னு கேட்காதீங்க. சுதந்திரமணிய நீங்க நேர்ல பார்த்தாதாம் அது புரியும்.
            இவங்க இப்படிப் காசு பவுனு சேர்த்து பொண்ணு வளர்க்கிறத கேள்விப்பட்டு அவங்க வகையறாவுல நானு நீயின்னு பொண்ணெடுக்க ஓடி வார்றாங்க. அதுல ஒரு நல்ல மாப்பிள்ள பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சாங்க சாம்பமூர்த்தியும் கனகசுந்தரியும். பொண்ணு மாப்ள சோடிப் பொருத்தம் அப்படியே ஊரு கண்ணே படாத கொறைதாம். அட இந்தப் பொண்ண நாம்ம கட்ட முடியாமப் போச்சேன்னே இறுமாந்த இளந்தாரி பசங்கக் கூட அந்த சோடிய பார்த்த பின்னாடி சுதந்திரமணிக்கு அந்த மாப்பிள்ளதாம் சரிபட்டு வருவான்னு அடங்கிப் போயிட்டானுங்க. பொண்ணும் மாப்பிள்ளையும் நெறம்னா நெறம் அப்படி ஒரு நெறம். அது சிவப்பா ரோஸா இல்ல ரெண்டு கலந்த ஒரு புது நெறமான்னு ன்னு பட்டிமன்றம் நடத்திதாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.
            திங்கறதுலயும், உடுத்துறதலயும் பீத்தத் தனமா ரெண்டு பேரும் இருந்தாங்களே தவிர கல்யாணத்த நடத்துனாங்க பாருங்க! ஊருல அப்படி ஒரு கல்யாணம் நடக்கலேங்ற மாதிரி தெருவ அடைச்சிப் பந்தல் போட்டு, பொண்ணு மாப்பிள்ளை ஊர்வலம்னு குதிரை பூட்டுன சாரட் வண்டிய டவுன்லேந்து கொண்டு வந்து, கல்யாணத்துக்கு வந்த எல்லாருக்கும் தலைவாழை இலையில விருந்து பண்ணி... அடெங்கப்பா ஒரு வாரத்துக்கு அசத்தல்தான் பார்த்துக்குங்க. இந்த ஒரு வார காலத்துல திட்டையில எந்த வூட்டுலயும் அடுப்புப் புகையல. ஊரு மக்களுக்கு அவங்க அப்படிக் கல்யாண சாப்பாடு போட்டதுல அவங்க பீத்தாரித் தனமாக சாப்பிட்டு கிடந்தது, உடுத்திட்டுக் கிடந்தது எல்லாம் மறந்துப் போயி ரெண்டு பேரையும் தூக்கிக் கொண்டாடுறாங்க. அவங்க ரெண்டு பேரும் இப்போதான் பாத்தீங்கன்னா பட்டு வேட்டி, பட்டு சேலைன்னு கட்டிட்டு கலக்குறாங்க. இதென்னடா ஊருக்குள்ள வந்த மாயம்னு எல்லாரும் ஆச்சரியமா வேற பாத்துக்குறாங்க.
            இங்கதாம் நம்ம கதையில ஒரு டிவிஸ்ட் வருது பாருங்க!
            கல்யாணமெல்லாம் நல்லவிதமா முடிஞ்சி ஊருல இருக்குற குளங் குட்டைகளப் பாத்தா மீனெல்லாம் செத்து செத்து மிதக்குது. என்னடா இது ஊருல ஒரு குடும்பத்துல நல்ல காரியம் நடந்து முடிஞ்சி இந்த மாதிரி நடக்குதேன்னு எல்லாருக்கும் வருத்தமாப் போயிடுச்சி. சரி இதுக்கு என்னடா காரணம்னு ஆய்வு பண்ணிப் பார்த்தா அதுக்குக் காரணமே அந்தக் கல்யாணச் சாப்பாடுதாம்னு புரியுது. சாம்பமூர்த்தியும் கனகசுந்திரியும் ரொம்ப கட்டுப்பெட்டியா சாப்பிட்டு உடுத்தியிருந்தாலும் கல்யாணத்துல சாப்பாட்டுல யாருக்கும் எந்த கொறையும் வந்துடக் கூடாது, சாப்பாட்டுல யாருக்கும் எதுவும் இல்லாமப் போயிடக் கூடாதுன்னு அளவுக்கு அதிகமா சமைக்கச் சொல்லியிருக்காங்க. ஊரே இவங்க வூட்டுக் கல்யாணத்துல சாப்பிடறதால மீஞ்சிப் போனத யாருக்குக் கொண்டு போய்க் கெடக்குறதுன்னு தெரியாம அது பயன்படாமப் போயிடக் கூடாதுன்னு சேத்து சேத்து வெச்சி குளங் குட்டையில இருக்குற மீனுங்களாவது சாப்பிட்டுத் தொலயட்டும்னு கொண்டு போயி அஞ்ஞ கொட்டியிருக்காங்க. மீந்துப் போயி சேத்து சேத்து வெச்சதால அந்த சாப்பாட்டுல புட் பாய்சன் ஆயிருந்துச்சோ என்ன ஆயிருந்துச்சோன்னு தெரியல. அதுகள சாப்பிட்ட மீனுங்க செத்து செத்து மெதக்குதுங்க. இப்பிடி மீனு செத்து மெதக்கிறதப் பார்த்த ஊருகாரங்க சில பெருக்கு அந்தச் சாப்பாட்டதாமே நாம்ம சாப்பிட்டோம், நாமளும் மீனு மாதிரி குடும்பத்தோடு கொத்துக் கொத்தா செத்து மெதப்போமான்னு ஒரு பயம் வேற வந்து தொலைக்குது. நல்லவேளை அப்படில்லாம் நடக்கல.
            அடப்பாவிங்களா காலத்துக்கும் நல்ல சாப்பாடு சாப்பிடாம, கல்யாணத்துக்குன்னு இப்படிச் சேத்து வெச்சி ஊருக்கே நல்ல சாப்பாடு போட்டும் இப்படி அநியாயமா குளங் குட்டையில இருக்குற மீனுங்களெயெல்லாம் சாவடிச்சிப் போட்டீங்களேன்னு ஊரு சனம் வருத்தத்தோடு பேசிட்டுத் திரிஞ்சிது. அதுல என்ன கூடுதல் வருத்தம்னா அந்த வருஷ கோடையில ஊரு குளம் குட்டை மீனு பிடிக்கிறப்ப ஒவ்வொரு வூட்டுக்கும் ஒரு பங்கு வரும். அன்னிக்கு பாத்தீங்கன்னா ஊரே மீனு குழம்பு வாசமா மணக்கும். மீனு கொழம்பு வாசம் மட்டுமா வறுவல், பெரட்டல் அது இதுன்னு ஊரே சோத்தச் சாப்பிடாம பேருக்குத் தொட்டுக்கிறதுக்கு சோத்தப் போடடுகிட்டு மீனா மட்டும் சாப்பிட்டு ஏப்பம் விடும். இந்த வருஷத்துக்கு அது இல்லாம போயிட்டேங்ற வருத்தம்தான் ஊரு காரங்களுக்கு. ஒரு வாரத்துக்கு விருந்து போட்டுட்டு ஊரு பங்குல சாப்புடுற மீனு கொழம்ப இந்த வருஷத்துக்கு இல்லாம பண்ணிட்டான்னே சாம்பமூர்த்தின்னு அது ஒரு கெட்ட பேருதாம் சாம்பமூர்த்திக்கு.
            சரி இப்படிதாம் ஆயிப் போச்சேன்னு சாம்பமூர்த்தியும் கனகசுந்தரியும் கல்யாணத்துக்குப் பிற்பாடாவது திருந்தானுங்களான்னு பார்த்தீங்கன்னா, பொண்ணு சுதந்திரமணிக்கு பொண்ணு பொறந்தத பார்த்துட்டு திரும்பவும் பேத்திக்கு பொண்ண விட ரொம்ப சிறப்பா கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பழைய நிலையை விட ரொம்ப மோசமான நிலைக்கு எறங்கி உண்ணுறதுலயும், உடுத்துறதுலயும் கறார் காட்டி பணத்த சேத்துட்டு இருக்காங்க. இதுகள திருத்த முடியாதுன்னு ஊருல ஒரு பேச்சு இருந்தாலும் அவங்களோட பேத்தியோட கல்யாணம் எப்ப வரும்னு ஊருக்குள்ள அவனவனும் ஒரு கணக்குப் பண்ணிட்டுதான் இருக்கான். ஒரு வார விருந்து சாப்பாடுல்ல. அதால எவம் அதெ நெனக்காம கணக்கு பண்ணாம இருப்பாம் சொல்லுங்க. அதுல ஒரு விசயம் பாருங்க! அவங்களோட பேத்திக்குக் கல்யாணம் நடந்து விருந்து மீந்துப் போயி அத குளம் குட்டையில அதப் போட்டு வருங்காலத்துல மீனு செத்து மெதக்காதுங்றது மட்டும் உறுதி. அத எப்பூடி அவ்ளோ உறுதியா சொல்றேன்னு கேக்குறீங்களா? ஊருல இருந்த பண்ண குட்டை, பரியாரி குட்டை, செட்டியாரு கொளம், வாளவாய்க்கா கொளம், கோணகாத்தாங் கொளம், சாம்பாரு குட்டை, சவுக்கண்டி குட்டை, வழிச்சாங் கொளம், தேங்காதண்ணி குட்டை, எடத்தெரு கொளம்னு ஒரு குளம், குட்டை பாக்கியில்லாம எல்லாத்தையும் தூத்துப் புட்டுச்சுங்க ஊரு சனம். இதெ கேட்டாக்க சாம்பமூர்த்தியும், கனகசுந்தரியும் கல்யாண விருந்த‍ வெச்சு குளம் குட்டையில் இருக்குற மீனுங்களயெல்லாம் கொன்னுபுடும்னேதாம் குளம், குட்டையெல்லாம் தூர்த்து மூடியாச்சின்னு பிலாக்கணம் பேசும்ங்க இந்த ஊரு சனங்க. போனது போயிப் போச்சி. ஊருல இந்தப் பெருமாளு குளமும், ஈசுவரன் குளமும்தான் குளமா கொஞ்சம் நஞ்சம் திடகாத்திரமாக வெங்காயத் தாமரை மண்டிப் போயி ஏதோ உசுர கையில பிடிச்சிட்டு நின்னுட்டு இருக்குது. அதயாவது ஊரு சனம் ரொம்ப தூர்த்திடாம பாதுகாக்கணும். மீனு செத்து மெதந்தா பரவாயில்ல, மறுவருஷம் பார்த்துகலாம். குளம், குட்டைங்க செத்து மிதந்தா? அப்படி மிதக்கக் கூடாதுல்ல. அதையும் தாண்டி அப்படி நடந்தா ஊரு சனங்கல்ல கோடையில தண்ணிக்குத் தவிச்சிப் போயி நிக்கும்!
            அட பாத்தீங்களா! தேசிகாவோட கல்யாணத்தப் பார்க்க கூட்டிட்டு போறத விட்டுட்டு ஊருல நடந்த வேற ஒரு கல்யாணத்துக்கு உங்கள எல்லாத்தியும் கூட்டிட்டுப் போயி  அதெ விட்டாச்சி! சரி வாங்க! அதயும் ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்திடுவோம்! இந்தக் கதையை எல்லாம் வெங்குவும், தம்மேந்தி ஆத்தாவும் செய்யு வூட்டு பைப்படியில உட்கார்ந்துகிட்டு நேரம் தெரியாம பேசிட்டு இருக்காங்றது உங்களுக்கு ஞாபவம் இருக்கும்னு நெனைக்கிறேம். கதெ இன்னும் முடியலீயே! அதால அவங்க பேசிட்டு இருக்காங்க. முடியற வரைக்கும் கேட்டுட்டு இருப்போம்!
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...