31 May 2019

தூக்கி உள்ளே போட்டுருவேம் பாத்துக்க!



செய்யு - 101
            வடவாதி போலீஸ் ஸ்டேசனில் கிடக்கும் சைக்கிளை மீட்பது குறித்தே அப்பாவின் சிந்தனை சுழன்று கொண்டிருந்தது. அதற்கு முன்பாகவே சம்பவம் நடந்து ஒரு வாரம் காலம் ஆன நிலையில் அப்பா தெரிந்தவர்களை அழைத்துக் கொண்டு போய் ஸ்டேசனில் விசாரிப்பது என்ற முடிவோடு லாலு மாமா, குமரு மாமா, வீயெம் மாமா மற்றும் தாடி தாத்தாவோடு போய்ப் பார்த்தது.
            ஸ்டேசனில் வெளியே இருந்த வராண்டா போன்ற பகுதியில் ரெண்டு போலீஸ்கள் மட்டும் நின்று கொண்டிருந்தன. அதில் ஒரு போலீஸ் ஒல்லியாகவும், மற்றொரு போலீஸ் குண்டாக, தொப்பையுடன் தலை நரைத்தும், கடா மீசையுமாக  இருந்தது. ஐந்து பேராக ஸ்டேசனில் நுழைந்த இவர்களைப் பார்த்ததும், "என்ன வெசயம்? யார்யா நீங்க?" என்றது ஒல்லியாக இருந்த போலீஸ்.
            ஸ்டேசனில் சைக்கிள் குறித்து விசாரித்ததும் குண்டாக இருந்த போலீஸ், "மாணிக்கநாயகம் அடிபட்டதைக் கேள்விப்பட்டு கலவரத்தைத் தூண்டுறத்துக்காக சைக்கிளில வந்த ஆளுதாம்ல நீயீ!" என்று சொன்னதும் போன எல்லாருக்கும் தூக்கி வாரிப் போட்டது.
            "தற்செயலா கடத்தெரு பக்கம் வந்தவருங்கதாம் வாத்தியாரு! அந்த நேரம் பாத்து கலவரமா ஆயிப் போச்சு. அடிதடின்னு ஆகிப் போகவும் சைக்கிளப் போட்டுட்டு தப்பிச்சோம் பொழச்சோம்னு ஓடியாந்துட்டாப்புல. மத்தபடி வாத்தியாரு சண்டையின்னா நூறு தப்புடி அந்தாண்ட ஓடிருவாப்புல." என்றது தாடி தாத்தா.
            "சைக்கிள்ல வந்தாங்றே! அப்போ சைக்கிள்ல தப்பிச்சுப் போவாம சைக்கிளப் போட்டுட்டா ஓடுவாங்க? யாரு காதுலயா பூவு சுத்துறீங்க?" என்றது அந்தப் போலீஸ்.
            "அப்டிலாம் இல்லீங்கய்யா! இவரு எங்க அக்கா மருமவம்ங்கதாங்க! வாத்தியாரா இருந்தாலும் ரொம்ப கஷ்டங்க. எங்கப் போறது வாரதுன்னாலும் சைக்கிள்தாங்க. ஒரு வாரமா இந்த சைக்கிளு இல்லாமா நடந்தே போயி நடந்தே வந்துட்டு இருக்காருங்க. கொஞ்சம் பெரிய மனசு பண்ணீங்கன்னா நல்லது நடக்குமுங்க!" என்றது லாலு மாமா.
            குண்டாக இருந்த போலீஸ் வராண்டாவிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தது. "யார்கிட்டே? அதாங், யார்கிட்டே?" என்று மிரட்டும் தொனியில் உருமியது. எல்லாருக்கும் ஒரு மாதிரியாக பயம் வந்து விட்டிருந்தது.
            "இந்தாப் பாருங்கப்பா! வெளியில ரண்டு டிவியெஸ், ஒரு எம்யெய்டி கெடக்குது. அதுல வந்துபுட்டு சைக்கிள்ல வாரவங்க மாரி என்ன கதெ அளக்குறீங்க?" என்றது குண்டு போலீஸ்.
            நின்று கொண்டிருந்த அப்பா, லாலு மாமா, குமரு மாமா, வீயெம் மாமா, தாடி தாத்தாவுக்கு மேற்கொண்டு என்ன பேசுவதென்ற புரியாமல் எச்சிலை விழுங்கிக் கொண்டிருக்க வேண்டிய நிலையாகி விட்டது. அவர்கள் அப்படி நிற்பதைப் பார்த்து குண்டு போலீஸே தொடர்ந்து பேசியது.             "கவவரம் பண்ணிட்டு அதுலேந்து தப்பிச்சுப்புடலாம்னு சைக்கிள கேட்டு வந்து நிக்குறீங்களா? எங்களுக்கு இருக்குற ஒரே எவிடென்ஸ் அதுதாம்யா! புரிஞ்சுதா?"
            குமரு மாமாவும் தன் பங்குக்கு ஏதாவது பேச வேண்டும் என்று நினைத்திருக்க வேண்டும். அது பேசியது, "இந்தாருங்க! மாணிக்கநாயகம் யாருன்னு நெனச்சீங்க! நாங்க ரண்டு பேரும் காலுசட்ட போட்ட காலத்துலேந்து உயிர்ச் சிநேகிதங்க. ஒரே தட்டுல சாப்புட்டு ஒண்ணா வளந்தவங்க தெரிஞ்சுக்குங்க. நீங்க இப்படி பேசுறது அவனுக்குத் தெரிஞ்சிச்சு ஸ்டேசன உண்டு இல்லன்னு பண்ணிடுவாம்!"
            "பாத்தியாய்யா! இப்போ புரிஞ்சுதா? இது கலவரம் பண்ண வந்த குரூப்பு. அப்போ தெரியாமப் போச்சு. அந்த எப்.ஐ.ஆர்ர எடுத்து இதுங்க பேருக எல்லாத்தியும் சேத்து மறுபடியும் புதுசா ஒண்ணு போடு! ன்னம்மோ ஸ்டேசன உண்டு ல்லன்னு பாத்துடுங்களும்லா? அதயும்ந்தாம் பாப்பம்!" என்றது அந்த குண்டு போலீஸ் ஒல்லிப் போலீஸைப் பார்த்து.
            "சார்! சார்! இவரு நம்ம அண்ணம்தாங்க சார்! எப்படியாவது சைக்கிள வாங்கிப்புடணும்ங்றதுல நோக்குத் தெரியாம பேசிட்டாம்ங்க சார்! மன்னிச்சுக்கணும் சார்! ஸ்டேசன்ல எஸ்.ஐ. இல்லீங்களா சார்!" என்றது விவரம் தெரிந்தது போல வீயெம் மாமா.
            "ஓகோ! இவரு எல்லாம் தெரிஞ்ச ராமசாமியாக்கும்! எஸ்.ஐ.கிட்டதாம் பேசுவீயோளோ? நம்மகிட்டதாம் பேச மாட்டீங்களாக்கும்! அடிச்சு உள்ள தூக்கிப் போட்டேனா பாத்துக்கோ? நடக்குறதே வேற?" என்று குண்டு போலீஸ் சொன்னதும், ஒல்லி போலீஸ் குறுக்கிட்டு, "வுடுங்கய்யா! வெவரம் தெரியாம பேசிட்டாங்க! நீங்க சித்த காத்தோட்டமா வெளில வாங்க! நாம்ம டீலு பண்ணிக்கிறேம் இவுங்கள!" என்று  குண்டு போலீஸைப் பிடித்து ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த வேப்பமரத்தடிக்குக் கொண்டு போனது ஒல்லி போலீஸ்.
            வேப்பமரத்தடிக்குப் போனதும் குண்டு போலீஸ், "ஸ்... ஸ்... யப்பா! அதுங்க என்ன சொல்லணும்னு நெனைக்குதோ அத அப்படியே ஸ்டேட்மெண்ட்டா எழுதி வாங்கிக்கிய்யா!" என்று ஒல்லி போலீஸிடம் சொன்னது.
            ஒல்லி போலீஸ் உள்ளே வந்தார்.  ஐந்து பேரையும் ரைட்டர் டேபிளுக்கு அருகே அழைத்துச் சென்றவர், "இத்த இத்தோடு விட்டுட்டுப் போயிடுங்க! அவரு சொன்ன மாதிரி ஸ்டேட்மெண்ட் ஏதாச்சு எழுதிக் கொடுத்தீங்கன்னா வெச்சுக்குங்க, கோர்ட்டுக்கு அலயுற மாரி ஆயிடும். ந்நல்லா தெரிஞ்சுக்குங்க... வெசயம் எப்.ஐ.ஆராகி, கோர்ட்டுல கேஸ் ஓடிட்டு இருக்கு. சம்பந்தம் ல்லாம்ம எதயாவது எழுதிக் கொடுத்துட்டு மாட்டிக்காதீங்க. சித்த நேரம் இப்படி நின்னுட்டு ஒண்ணும் தெரியாத மாரி ஓடிப் போயிடுங்க. அதாங் நல்லது. ஏத்தோ நமக்குத் தெரிஞ்சத சொன்னேம். அதுக்கு மேல ஒங்க விருப்பம்!" என்றது ஒல்லி போலீஸ்.
            குழுவாய் ஸ்டேசனுக்குள் போன ஐந்து பேருக்கும் கிலி பிடித்துக் கொண்டது. எப்படியாது ஸ்டேசனை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினாலும் பரவாயில்லை என்று தோன்றியது. ஐந்து பேருக்கும் பாதங்கள் ஸ்டேசனில் ஒட்டிக் கொண்டு நடக்க முடியாதது போல ஒரு பிரமை தட்டியது. ஸ்டேசனுக்கு வெளியே போனால் அந்த குண்டு போலீஸ் கடித்துத் தின்று விடுவாரோ என்பது போன்ற பயம் ஐந்து பேருக்கும் தாட்டிக் கொண்டு வந்தது.
            "நாம்ம ஸ்டேசனுக்கு வந்திருக்குற வண்டிய கிண்டிய புடுங்கிடுவாங்களோ என்னாவோ? போறப் போக்கப் பாத்த ஒழுங்கா வூடு போயி சேருவோமான்னு பயமா இருக்கே!" என்று அவர்களுக்குள் மட்டும் கேட்குமாறு லாலு மாமா உளறிக் கொட்டியது.
            "அதாங் மாமா! நமக்கும் பயமா இருக்கு! கொஞ்சம் பொறுத்திருந்து மாணிக்கநாயகம் வந்தப்புறம் இந்தக் காரியத்த கையில எடுத்துருக்கணும் போலருக்கு. ஆழம் புரியாம கால வுட்ட மாரி இருக்கு!" என்றது சன்னமான குரலில் குமரு மாமா.
            "அதுலாம் வெசயம் ஒண்ணுமில்லீங்க! நம்ம ரகுநாதன கூப்டாந்து இருக்குணும்ங்க. சைக்கிள கொண்டாந்து வூட்டுல வுட்டுட்டுப் போயிருப்பாங்க. நம்ம மேல தப்புல்லன்னு நெனச்சிட்டு வந்தா...நம்மளயே தூக்கி உள்ளப் போட்டுருவாங்க போலருக்கு. நைசா வாங்க! அப்படியே நகந்துட்டு போயிடுவம் வாங்க!" என்றது தாடி தாத்தா.
            ஒரு வழியாக எல்லாரும் எப்படியோ அங்கிருந்த நகர்ந்து வண்டியைக் கிளப்பிக் கொண்டு பேக்டரி பாலத்துக்கு பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வந்துதான் வண்டியை நிறுத்தி இறங்கினர்.
            "எப்படி நவுந்து வந்து வண்டிய எடுத்து வந்தேம்னே புரியல! எல்லாம் ஏத்தோ கனவு மாரி இருக்குது!" என்ற லாலு மாமா, ஆறுதல் சொல்வது போல, "பழைய கலவையான சைக்கிளுதான. எரநூறு, முந்நூறு கூட போவாது. புதுசா ஒண்ணு கம்பெனி சைக்கிளா பாத்து எறக்கிக்கலாம் வுடுங்க!" என்றது.
            "நம்ம சாம்பாத்தியத்துல வாங்குன மொத சைக்கிளா இருக்கேன்னு பாக்கிறேம்! அதாங் மனசு கேக்க மாட்டேங்குது. எப்படியாச்சிம் கொண்டாந்துட்டா தேவலாம்." என்றது அப்பா.
            "இவ்ளோ நடந்தும் அத்தாம் அடங்குதா பாருங்க!" என்றது குமரு மாமா.
            "அட, என்னம்பி நீங்க? ஒங்க அத்தாம் ன்னா தப்பா பண்ணிட்டு! இன்னொருத்தரு காச கொள்ளயடிச்சிட்டு அத்தே கொடுன்னு கேக்குதா? நீங்க வெளிநாடு போயி சம்பாதிச்சு வூடு வாசல்னு ஆயி சுலுவா இருக்கீங்க. ஒங்க அத்தாம் அங்க ன்னா கஷ்டப்படுதுன்னு நமக்குதாம் தெரியும். அன்னிக்கு டிவியெஸ்ஸூக்கு பெட்ரோலுக்குப் போட காசில்லாம்த்தாம் சைக்கிள தூக்கிட்டு விடிஞ்சதும் விடியாததுமா கெளம்பிருக்கு. ஒங்க குடும்பத்துக்காக அத்து எவ்ளோ ஒழச்சி ஓடா தேஞ்சிருக்கு தெரியுமா? அத்து புள்ளிக்காக வூட்டைப் போட்டுட்டு ஊரு வுட்டு ஊரு போயிக் கெடந்ததே. நீங்க வந்துப் பாத்தீங்களா? ரண்டு வார்த்த ஏதாச்சும் சொன்னீங்களா? ஏத்தோ தொணைக்கு போலீஸ் ஸ்டேசன் வந்திட்டோம்னு வாயில வந்து வாக்குல பேசக் கூடாது பாத்துக்குங்க!" என்றது தாடி தாத்தா.
*****

அட்வைஸ் செய விரும்பு!



            "மக்கா! நாட்டுல வியாதி கூட வரலாம்! மத்தவங்க அட்வைஸ் பண்ற மாதிரி மட்டும் வியாதி வந்துடக் கூடாதுங்றான்!" நம்ம சம்மட்டிவாயன்.
            இந்தச் சம்மட்டிவாயன் யாருன்னு கேட்டா, நம்ம சண்முகவேலன்தான். அப்போ சண்முகம்னா என்னா? வேலன்னா என்னா? ரெண்டும் ஒண்ணுதானே! ஆனா அவனுக்குப் பேரு அப்படித்தான். இந்தச் சண்முகவேலன்தான் கொஞ்சம் கொஞ்சமா சண்முகவாயன்னா ஆனான். அப்படி வாயனா ஆகுற அளவுக்கு அந்தப் பேச்சு பேசிட்டு திரிஞ்சான். அத்தோடு அவன் வாயி நின்னுருந்தா சண்முகவாயன்னு அவனும் நின்னு போயிருப்பான். ஆனா கெரகம்? விடுமா என்ன? வாயோட ரெண்டு பக்கமும் கிழியற மாட்டுக்கு காளவாய்க் கணக்கா பேச ஆரம்பிச்சான். அதுக்குப்புறம்தான் சண்முகவாயன் சம்மட்டிவாயனா ஆனான்.
            இப்போ நம்ம சம்மட்டிவாயன்கிட்ட,
            "நாட்டுல அந்த அளவுக்கா அட்வைஸ் பண்றவங்க அலயுறாங்க?" ன்னு கேட்டாலே சம்மட்டிவாயன் அலறி அடிச்சிட்டு ஓடுறான். வாயைத் தொறந்தா மூடாத சம்மட்டிவாயனே அலறி அடிச்சிட்டு ஓடுற அளவுக்கு நாட்டுல அட்வைஸ் பண்றவங்க பெருகுறதுக்கு என்ன காரணமா இருக்க முடியும்?
            தமிழ்நாட்டுலதான் "அறம் செய விரும்பு" ன்னு ஆத்திசூடியில ஆரம்பிச்சு ஆயிரெத்தெட்டு அறிவுரை சொல்ற இலக்கியங்கள் இருக்கு. வேற எந்த மொழியிலும் இந்த அளவுக்கு இருக்காங்றது சந்தேகம்தான். அந்த பாரம்பரியம்தான் தமிழ்நாட்டுல பொறந்த ஒவ்வொருத்தரையும் யார பார்த்தாலும் அறிவுரை சொல்ல வைக்குதோ என்னவோ!
            ஒளவைப் பாட்டியே இன்னிய தேதிக்கு, 'அட்வைஸ் செய விரும்பு'னு நியூ ஆத்திசூடி எழுதிருப்பாங்க மாட்டு.
            அதுவும் இந்த நேரம் படிப்புக்கும், பாலிடிக்ஸூக்கும் ஒரே நேரத்துல ரிசல்ட் வந்து போச்சுதா? திரும்புன பக்கமெல்லாம் யாரு மூஞ்சைப் பார்த்தாலும் அட்வைஸா வந்து விழுது.
            அதுவும் பரீட்சைல பாஸ் பண்ணவன், பாஸ் பண்ணாதவன் ஆரம்பிச்சு எல்லாருக்கும் ரக ரகமா, வித விதமா அட்வைஸ் மழையா கொட்டுது. இந்த அட்வைஸ் மழையா கொட்டுறதாலயோ என்னவோ நாட்டுல வானத்து மழையும் பெய்யாம வெக்கைப் பொசுக்கித் தள்ளுது.
            என்ன படிக்கலாம்? என்ன படிக்கக் கூடாதுன்னு எவ்வளவு அட்வைஸ் தெரியுங்களா? இப்படி அட்வைஸ் பண்றாங்க இல்ல, அவங்க காலத்துல எவனாவது அவங்களுக்கு இப்படி அட்வைஸ் பண்ணியிருந்தா அவங்கலாம் படிச்சிருக்கவே மாட்டாங்க ஆமா!ஆனா இந்த புள்ளைங்க ரொம்ப விவரம். இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு அது பாட்டுக்கு போய்ட்டே இருக்குதுங்க. அட்வைஸ் பண்ற மக்களும் நீ போனா எனக்கென்னன்னு இன்னொருத்தன தேடிப் போய் அட்வைஸ் பண்ணிட்டு இருக்குதுங்க.
            இந்த நாட்டுல ஒரு புள்ளை தான் என்ன படிக்கணும்னு தீர்மானிக்க முடியலைன்னா, அந்த புள்ளை இத்தனை வருஷம் படிச்சு என்னத்தான் கத்துகிட்டதோ?
            அந்தப் புள்ளைக்கு தான் என்ன படிக்கணும்னு தீர்மானிக்க சுதந்திரம் கொடுக்குறமோ இல்லியோ, அதே புள்ளைய ஒரு வருஷம் ஆனதும் அதாவது பதினெட்டு வயசு ஆனதும் நீ விரும்புற சின்னத்துல ஓட்டுப் போட்டு உனக்கான தலைவரைத் தேர்ந்தெடுன்னு அந்தச் சுதந்திரத்தைக் கொடுக்கிறோம்!
            அந்தப் புள்ளைங்கள நிப்பாட்டி, "இப்படி அட்வைஸ் பண்ணியே கொல்ற ஒங்க அப்பன், ஆயி, சுத்தி உள்ள பெரிசுகளுக்கு நீங்க என்ன அட்வைஸ் பண்ற விரும்புறீங்க?"ன்னு ஒரு ஹோதாவுல கேட்டுத் தொலைச்சிட்டேன். அதுக்கு அந்தப் புள்ளைங்க சொல்லுது, "இனிமே இது மாதிரி அட்வைஸ் பண்ண வேண்டாங்றதைத்தான்  அட்வைஸா பண்ண விரும்புறோம்! அட்வைஸ் பண்றாங்களே செரி! வாட்ஸ் ஆப்ல ஒரு ‍மெசேஜ் அனுப்பத் தெரியுதா? யாருக்கோ அனுப்ப வேண்டிய மேசேஜைக் குரூப்ல போட்டு மானத்த வாங்குதுங்க!"னு தலையில அடிச்சுக்குதுங்க.
            "அதுவுஞ் செரியாத்தான் இருக்குதுங்க!"னு சொல்லி நாம நைஸா நகரலாம்னு பார்த்தா... அப்படி‍யே நிறுத்தி வெச்சு ஆரம்பிச்சதுங்க பாருங்க... நீங்களே கேட்டுக்குங்க அதை,
            "இப்படி அட்வைஸ் பண்ணுதுகளே... அதுங்களுக்கு,
            1. பெத்த அப்பன், ஆயியை முதியோர் இல்லத்துக்கு அனுப்பாம வீட்டுல வெச்சுக்கோணும்னு யாரு அட்வைஸ் பண்றது?
            2. தாத்தா வயசாகி முடி நரைச்சா அப்படியே விடாம, டை அடிச்சுகிட்டு மாப்பிள்ளை கணக்கா ஜொள்ளு விட்டுகிட்டுத் திரியக் கூடாதுன்னு யாரு அட்வைஸ் பண்றது?
            3. வீட்டுல யாரும் இல்லேன்னு தெரிஞ்சா கண்ட கண்ட சேனலையெல்லாம் மாத்தி கண்ட கண்ட படத்தையெல்லாம் பார்க்கக் கூடாதுன்னு யாரு அட்வைஸ் பண்றது?
            4. ஓட்டுக்குப் பணம் கொடுத்தா அதை விசாரிச்சு அடிச்சு பிடிச்சுகிட்டுப் போயி வாங்கிட்டு வரக் கூடாதுன்னு யாரு அட்வைஸ் பண்றது?
            5. நாற்பதாயிரத்துக்கு செல்லை வாங்கி வெச்சுகிட்டு இதுல மெயில் எப்படி அனுப்புறதுன்னு சின்ன புள்ளைங்ககிட்ட கேட்டுகிட்டு நிற்கக் கூடாதுன்னு யாரு அட்வைஸ் பண்றது?
            6. பேட்டா கடையில கேட்ட காசைக் கொடுத்துப்புட்டு கருவாடு விற்குற கெழவிகிட்ட பேரம் பேசக் கூடாதுன்னு யாரு அட்வைஸ் பண்றது?
            7. ஒரு வேளைச் சாப்பாட்டுச் செலவை மிச்சம் பண்றதா நினைச்சு கோயில்ல போடுற அன்னதானத்தைப் பசித்த ஒருத்தருக்குக் கெடைக்க விடாம தின்னுட்டு வரக் கூடாதுன்னு யாரு அட்வைஸ் பண்றது?
            .... ... ..." இப்படி இப்பிடி அட்வைஸ் பறந்து வந்தா நான் என்ன பண்ணுவேன்? ஓடியாந்துட்டேன்.
*****

30 May 2019

ஹார்லிக்ஸ் பாட்டிலில் முடிந்த பஞ்சாயத்து



செய்யு - 100
            திட்டை கடைத்‍தெரு முக்கத்தின் கலவர நிலைமை சற்று சரியான பிறகு அப்பா தாடித் தாத்தாவை அழைத்துக் கொண்டு கடைத்தெரு பக்கம்  போய் தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தது. அருகே நெருங்கிப் போனால் போலீஸ் விசாரிக்கும் என்ற பயம் இருவருக்கும் இருந்தது. கடைத்தெருவே மக்கள் நடமாட்டம் இல்லாமல் துடைத்துப் போட்டது போலிருந்தது. தூரத்திலிருந்து பார்த்த போது சைக்கிளைப் போட்ட இடத்தில் காணவில்லை.
            தாடி தாத்தா அங்கிருந்த அக்கம் பக்கத்து வீட்டில் பேச்சுக் கொடுத்ததில், கடைத்தெருவில் நிறுத்தப்பட்டடிருந்த அத்தனை வாகனங்களையும் போலீஸ் லாரியில் தூக்கிப் போட்டுக் கொண்டு போய் விட்டதாகச் சொன்னார்கள்.
            தாடித் தாத்தாவுக்கும், அப்பாவுக்கும் போலீஸ் ஸ்டேஷன் போய் விசாரித்துப் பார்க்கலாமா என்று தோன்றியது.
            "ஸ்டேசன்ல போயி விசாரிச்சுப் பார்ப்பமா வாத்தியாரே?" என்றது தாடி தாத்தா.
            "இருக்குற நெலமயில விசாரிக்க முடியுமா?" என்றது அப்பா.
            "நாம்ம மட்டும் போனா சரிபட்டு வாராது. ரகுநாதங்கிட்ட காதுல போட்டு அவ்வேம் வழியாப் போனாத்தாம் ஸ்டேசன்ல மரியாதி இருக்கும்! இப்போ போலீஸ் நிக்குறதால ரோட்டுவழியா போக முடியாது. இப்படியே வாய்க்கால வுழுந்து எழுந்திரிச்சி ஏறி, கெழக்கால வயக்காட்டுப் பக்கமா போயி, தெக்க திரும்புனா ரகுநாதம் வீட்டுக்குப் போயிடலாம். அப்படியே ஒரு எட்டுப் போயிட்டு வந்திடலாம் வாத்தியாரே!" என்றது தாடி தாத்தா.
            அப்பாவும், தாடித் தாத்தாவும் வாய்க்காலில் இறங்கி ஏறினார்கள். வாய்க்காலில் கணுக்கால் அளவுக்கு தண்ணீர் இருந்தது. வயக்காட்டு வழியாக நடையைக் கட்டினார்கள். ரகுநாதன் வீட்டில் கூட்டம் பெருங்கூட்டமாக இருந்தது.
            அப்பாவும், தாடித் தாத்தாவும் ரகுநாதனைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும் கூட்டத்தை விலக்கி விட்டு வீட்டுக்குள் அழைத்துப் போனார்கள். ரகுநாதன் அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தது. அப்பாவையும், தாடித் தாத்தாவையும் பார்த்ததும், "நமக்கு என்ன ஏதுன்னு விசாரிக்க வந்துட்டீங்க போலருக்கே! நமக்கு யாருக்கும் ஒண்ணுமில்ல. நம்ம கட்சிப் பயலுக, அந்தக் கட்சிப் பயலுக எல்லாம் சேந்துகிட்டு, நாம்ம இந்தாண்ட வர, அந்தாண்ட பெரச்சின பண்ணிட்டாங்க. பயலுக எல்லாத்தியும் போலீஸூ அரெஸ்ட் பண்ணி மன்னார்குடி கோர்ட்ல ஆஜர் பண்ண கொண்டுட்டுப் போய்ட்டு இருக்காம். அதாங் கெளம்பிட்டு இருக்கேம்."
            ரகுநாதன் வீட்டில் இருந்தவர்கள், "நல்ல நேரத்துல வந்தீங்க வாத்தியாரே! நீங்களாவது கொஞ்சம் சொல்லக் கூடாதா? இப்பே இவ்வேம் மன்னார்குடி போனா அங்கேயே வெச்ச அரெஸ்ட் பண்ணிட மாட்டாங்களா? கொஞ்ச நாளுக்கு தலமறவா ஒறவுக்காரங் வூட்டுல இருடான்னு கேக்க மாட்டேங்றாம்!" என்றதும் அப்பாவுக்கும், தாடி தாத்தாவுக்கும் என்ன சொல்வதென்று புரியவில்லை. இருவரும் மெளனமாக நிற்பதைப் பார்த்ததும் ரகுநாதனே பேசியது, "ஒண்ணும் வெசனப்பட ஏதுமில்ல வாத்தியாரே! இவ்ளோ நேரமும் போனும் கையுமா உக்காந்து நம்ம பெரும்புள்ளிகளயும், வக்கீலுங்களயும் பிடிச்சுப் பேசிட்டேம். இந்த நேரத்துல நாம்ம போகலன்னா சரிபட்டு வாராது."
            ரகுநாதன் கிளம்பி வெளியே வந்தது. ரகுநாதனோடு சேர்ந்து அப்பாவும், தாடித் தாத்தாவும் வந்தார்கள். வெளியே வந்த ரகுநாதன் கூட்டத்தைப் பார்த்து, "யாரும் வூட்டுக்கு முன்னாடி நிக்க வாணாம். போலீஸூ இஞ்ஞ நம்மள தேடி வந்தாலும் வாரும். கலஞ்சி வூட்டுக்குப் போயிடுங்க. நாம்ம இப்போ மன்னார்குடி போறேம். யாரும் நம்ம பின்னாடி வர வாணாம். நாம்ம இப்படியே ஊட்டியாணி, சோத்திரயம் போயி அப்படியே ஓகையூரு, மூலங்கட்டளை வழியா மன்னார்குடி ரோட்டப் பிடிச்சுதாம் போவப் போறேம். நேரா போவப் போறதில்ல. இஞ்ஞ நிக்குறது யாருக்கும் நல்லதில்ல. அரெஸ்ட் ஆனாலும் ஆயிடுவீங்க. வெரசா கலஞ்சிப் போயிடுங்க." என்றது.
            "அப்படிலாம் போக முடியாதுங்க! வூட்டுக்கு முன்னாடிதாம் நிப்பேம். யாரு வந்து அரெஸ்ட் பண்றான்னு பாத்துடறேம். ஒங்களயும் மன்னார்குடி போக வுட மாட்டேம். நம்ம எடம், நம்ம கோட்ட. இத வுட்டுட்டு நாமளே வசமா போயிச் சிக்கிக்கிறதா?" என்றது கூட்டம்.
            "யோவ்! சொன்னா கேட்டுத் தொலங்கய்யா! நம்ம ஆட்க அரெஸ்ட் ஆயி மன்னார்குடி போயிட்டு இருக்கு. நாம்ம‍ போகலன்னா சுத்தப்பட்டு வாராது. இஞ்ஞ யாரும் நிக்க வாணாம். கெளம்பிடுங்க." சொல்லி விட்டு ரகுநாதன் புல்லட்டில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்யப் போனது.
            அதுவரை பெஞ்சில் உட்கார்ந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த கிள்ளிவளவன் ஓடி வந்து, "நாமளும் வாறேம்ணே! ஒங்கள அரஸ்ட் பண்ணி உள்ள போட்டா, இஞ்ஞ எல்லாத்தியும் கவனிக்கிறதுக்கு ஆளில்லண்ணே! நீங்க வெளில இருந்தாத்தாம்ணே நெலமய சமாளிக்க முடியும்." புல்லட்டில் ஏறியிருந்த ரகுநாதனைக் கட்டிப் பிடித்தக் கொண்டு அழுதது.
            "ஆனது ஆயிப் போச்சு. ஒண்ணும் பண்றதுக்கில்ல. கோளாறு ஆயிப் போச்சு. நம்மள நெனச்சிட்டு நாலு பேரு அங்க போயிட்டு இருக்காம். அவனுக்கு மின்னாடி நாம்ம போயி அரஸ்ட் ஆகலின்னா அது சுத்தப்பட்டு வாராது. புரிஞ்சுக்கோ. ஒங்ககிட்ட இப்படிப் பேசிப் பேசியே நேரமாயிட்டுப் போகுது. கெளம்ப விடுங்க." என்றது ரகுநாதன்.
            "யாரயாவது அழச்சிட்டுப் போகலாம்ணே! நானே வாரேண்ணே!" என்றது.
            "மூலங்கட்டளப் போயி வாத்தியாரு இருந்தா அவர மட்டும்னா அழச்சிட்டுப் போறேம். வேற யாரும் வாணாம். சுத்தப்படாது. வூட்டுக்கு முன்னாடி இந்த கூட்டத்த கலச்சி வுடு. வேணுன்னா இந்த வந்திருக்காரே வாத்தியாரு. அவரயும் தாடியையும் சூதனமா வூட்டுல கொண்டு போயி வுட்டுடு. பாத்துப்போம்!" என்று சொல்லி விட்டு பட் பட் என்ற சத்தத்தோடு புல்லட்டில் கிளம்பியது ரகுநாதன்.
            மூலங்கட்டளைக் கம்பு வாத்தியாரை அழைத்துக் கொண்டு போவதாகச் சொன்ன ரகுநாதன் அவரையும் அழைத்துக் கொண்டு செல்லவில்லை. தான் தனியாக மன்னார்குடி போவதாக யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம் என்பதற்காக ரகுநாதன் அப்படிச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் ரகுநாதன் மன்னார்குடி எல்லைக்குள் நுழைந்ததும் கட்சி ஆட்கள் சேர்ந்து கொண்டதாகவும், ஏழெட்டு வக்கீல்களும் தயாராக இருந்ததாகவும், ரகுநாதன் அரெஸ்ட் ஆகி உடனே நிபந்தனை ஜாமீனில் வெளியே வருவதற்கான அத்தனை வேலைகளையும் செய்திருந்ததாகவும், மன்னார்குடிக்குக் கொண்டு செல்லப்பட்ட அத்தனை ஆட்களையும் கட்சி பாகுபாடில்லாமல் அதே போல நிபந்தனை ஜாமீனில் எப்படியோ வெளியில் கொண்டு வந்ததாகவும் பேசிக் கொண்டார்கள். இன்னொரு விதமாக கோர்ட் பக்கமே போகாமல் போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்து சமாதானமாகப் பேசி முடித்து விட்டதாகவும், யாருக்கும் எந்த பாதிப்பும் வராத அளவுக்கு ஒரு வழக்கை மட்டும் பதிவு செய்து கொண்டதாகவும் பேசிக் கொண்டார்கள். இப்படி அப்படியும் இப்படியுமாக இரண்டு விதமானப் பேச்சுகள் ஊரில் உலவியது. என்ன நடந்ததோ? ஏது நடந்ததோ? ஆனால், காலையில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு அரெஸ்ட் ஆகிப் போன அத்தனை ஆட்களும் சாயுங்காலமாக ஒருவரையொருவர் ஒன்றாக கட்டிப் பிடித்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தார்கள்.
            ரகுநாதன் அடித்து ஆஸ்பிட்டலில் இருந்த சாமி.தங்கமுத்துவும், மாணிக்கவிநாயகமும் உடல்நிலைத் தேறி வர ஒரு மாத காலத்துக்கு மேல் ஆகியது. அவர்கள் தேறி வந்ததும் ஊர்ப் பஞ்சாயத்து நடந்தது. ஊர்ப் பஞ்சாயத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் சாமி.தங்கமுத்துவும், மாணிக்கவிநாயகமும் ரகுநாதன் மேல் போலீஸ் ஸ்டேசனில் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை என்று பேசிக் கொண்டார்கள். செல்லையன் கடையை அடித்து உடைத்தது மட்டுமே வடவாதி போலீஸ் ஸ்டேஷனில் வழக்காகப் பதிவாகி மன்னார்குடி ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடந்து கொண்டிருந்தது. 
            ஊர்ப் பஞ்சாயத்து காரசாரமாக மறுபடியும் ஒரு சண்டையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பஞ்சாயத்தில் எந்தப் பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்பதற்காக ரெண்டு தரப்பிலிருந்தும் பஞ்சாயத்துக்கு பெரும் புள்ளிகளையோ, வகைதொகையான ஆட்களையோ அழைத்து வரக் கூடாது என்று முன்கூட்டியே பேசப்பட்டது. ஊர் ஆட்களிலும் காரசாரமாகப் பேசுபவர்களுக்கு எதையும் அநாவசியமாகப் பேசக் கூடாது என்று கட்டுபாடு போடப்பட்டது. ரெண்டு தரப்பும் ஊர்ப் பஞ்சாயத்துக்குக் கட்டுபடாத நிலைமையில் போலீஸில் புகார் செய்து கொள்ளலாம் என்றும் ஆனால் ஊர்ப் பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட்ட நிலைமையில் போலீஸ் ஸ்டேசன் பக்கம் போகக் கூடாது என்று ரெண்டு தரப்பிலும் முன்கூட்டியே ஓங்கு தாங்கலாகச் சட்டமாகப் பேசப்பட்டிருந்தது.
            பஞ்சாயத்துக்கு வந்த சாமி.தங்கமுத்து வந்ததும் வராததுமாக வந்த உடனே, "அண்ணே மேல எந்தத் தப்புமில்ல. அவரு தம்பிய நாம்ம அடிச்சேம். அண்ணே நம்பள அடிச்சிது! இதுல பஞ்சாயத்துக்கு ஒண்ணும் வேலயில்ல!" என்று பேசியதுமே பஞ்சாயத்து புஸ்ஸென்று ஆனது.
            "சாதிக்காரய்ங்க இன்னிக்கு அடிச்சுப்பாங்க! நாளிக்கு கூடிப்பாங்கங்றது உண்மையால்ல யிருக்கு!" என்று பஞ்சாயத்துக்கு வந்தவர்கள் குசுகுசுப்பாய்ப் பேசிக் கொண்டார்கள்.
            "அது செரி! நீயி அடிச்சே. ரகுநாதம் அடிச்சுது. செரி. சம்பந்தமில்லாம மாணிக்கநாயகம் அடி வாங்கிருக்கே. செல்லையம் கடை போயிருக்கே. அதுக்கு யாரு நாயம் பண்றது?" என்றது பஞ்சாயத்தில் ஒரு பெரிசு.
            "தங்கமுத்துக்கான வைத்தியச் செலவு, மாணிக்கநாயகத்துக்கான வைத்தியச் செலவு, செல்லையம் கடைக்கான எழப்பு எல்லாத்தியும் நாமளே ஏத்துக்கிறேம். தண்டம் எவ்ளோன்னு சொன்னீங்கன்னா கட்டிப்புடறேம்!" என்றது ரகுநாதன்.
            "எங்களுக்குப் பைசா காசி வாணாம்!" என்று ஒரே குரலில் சொன்னார்கள் சாமி.தங்கமுத்துவும், மாணிக்கவிநாயகமும்.
            "அதுலாம் நாயமில்ல! அப்படிப் போனா இது பஞ்சாயத்துமில்ல!" என்றது ரகுநாதன்.
            "அப்பிடின்னா ஆளுக்கு ஒரு ஆர்லிக்ஸ் பாட்டிலு மட்டும் தண்டமா வாங்கித் தந்தா போதும்!" என்றது மாணிக்கவிநாயகம்.
            "ன்னா பஞ்சாயத்து இது? அடிச்ச நமக்கு மனசு வலிக்கிற மாரி பண்ணிட்டு இருக்கீங்க!" என்றது ரகுநாதன்.
            யாரிடமும் எந்தப் பேச்சும் எழாமல் பஞ்சாயத்து சில நிமிடங்கள் மெளனமாக இருந்தது.
            "அப்போ செல்லையம் கடைக்கி மட்டும் நாயம் பண்ணி முடிச்சாப் போதுமா?" என்றார்கள் பஞ்சாயத்தார்கள். யாரும் எந்த மறுபேச்சம் பேசாமல் இருக்கவே, செல்லையன் கடைக்கு மட்டும் இழப்பீடு பேசப்பட்டது. இது சம்பந்தமாக நடைபெறும் வழக்கில் பாதமாக செல்லையன் தரப்பிலிருந்து எதுவும் செய்து விடக் கூடாது என்ற நிபந்தனையோடு ஒருவழியாகப் பஞ்சாயத்து முடிவடைந்தது.     
            அதன் பின் செல்லையன் கடை தொடர்பான வழக்கு மட்டும் ஓராண்டுக்கு மேல் நடைபெற்று அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அதையும் ரகுநாதனே எல்லாருக்குமாகச் சேர்த்து கட்டியதாகவும் பேசிக் கொண்டார்கள். அத்தோடு ஊரில் அய்யாக் கட்சிக்கும், அம்மா கட்சிக்கும் இருந்த மனஸ்தாபங்கள் முடிவுக்கு வந்து அரசியல் அரசியலாகவும், பழக்க வழக்கம் பழக்க வழக்கமாகவும் இருக்க வேண்டும் என்ற நிலை அவர்களையும் அறியாமல் ஏற்பட்டு விட்டது.
*****

வெளங்காமண்டையன் பிள்ளைக்குப் பேர் சூட்டிய வைபவம்!



            நம்ம நண்பர்களில் ஒருத்தன் வெளங்காமண்டையன். இப்படியெல்லாம் பேர் வைப்பார்களா? என்று உங்களுக்கு நம்பிக்கையிருக்காது என்பது தெரியும். பேர் அப்படி வைத்து விட்டார்களே என்ன செய்வது!
            அவன், அதாங் அந்த நண்பன் பிறந்த போது அவன் தலை விளாங்காயைப் போல மண்டையில் பொட்டு மயிர் கூட இல்லாமல் வழுவழுவென்று அழகாக இருந்திருக்கிறது. இப்படி விளாங்காய் மண்டையோடு பிறந்தவனுக்கு விளாங்காய் மண்டையன் என்றுதானே பேர் வைக்க முடியும். அப்படித்தான் அவனுக்கு விளாங்காய் மண்டையன் என பேர் வைத்து... அது காலப்போக்கில் மருவி வெளங்காமண்டையனாகி விட்டது.
            அட்டென்டென்ஸ், செர்டிபிகேட் எல்லாவற்றிலும் அவன் விளாங்காய்மண்டையன்தான். ஊரில், சமூகத்தில் மற்றும் நாங்கள் கூப்பிடும் போது மட்டும் வெளங்காமண்டையன் ஆகி விடுகிறான். அப்படி, இப்படி என எப்படிப் பார்த்தாலும் அவனது முதலெழுத்து ஆங்கிலத்தில் 'வி'தான் இல்லையா. அதில்தான் நண்பனுக்கு வந்தது பிரச்சனை.
            உள்ளபடியே வெளங்காமண்டையனுக்கு இன்ஜினியரிங்கில் செமத்தியான அறிவு. அப்போது அதற்கு என்ட்ரன்ஸ் அது இது என்று ஏகப்பட்ட மண்ணாங்கட்டியெல்லாம் எழுதித் தேர்வானவனுக்கு பேர் 'வி' வரிசையில் வந்ததில் ரேண்டம் எண்ணில் ஏதோ பிசகிப் போய் இன்ஜினியரிங்கில் சேர முடியாமல் போய் விட்டது. இந்த ஏமாற்றமும், அதனால் உண்டான ஆத்திரமும் நண்பனுக்கு நெடுநாள் நீடித்திருந்தது. எல்லாம் இங்கிலிஷ் அல்பெட்டில் கிட்டதட்ட கடைசியில் போய் விட்ட 'வி'இல் பேர் வைத்த வெளங்காத்தனம் என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
            கொஞ்ச நாள் மூஞ்சுக்கு சேவிங் பண்ணாமல், முடி வெட்டாமல் திரிந்து கொண்டிருந்த வெளங்காமண்டையன் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜில் சேர்ந்த படித்து, குரூப் எக்ஸாமில் செலக்ட் ஆகி ஏதோ ஆபிஸரானான்.
            ஆபிஸரானதும் முதல் வேலையாகக் கல்யாணம் செய்து, குழந்தையைப் பெற்று முடித்தான். பெற்று முடித்ததும் எங்கள் எல்லாருக்கும் பத்திரிகை வைத்து பிள்ளைக்குப் பெயர் சூட்டு விழா நடத்தினான். என்ஜினியரிங்கில் 'வி' இல் தன் பெயரால் வாய்ப்பை இழந்ததால்... தன் மகனுக்கு அல்பபெடிக்கலாக ஏ,பி,சி,டி-யில் ஆரம்பிக்குமாறு அன்புபாகன்சித்ரதேவ் என்று ஏ,பி,சி,டி- என்று நான்கு அல்பெபெட்டுகளில் ஆரம்பிக்கும் வகையில் நான்கு பெயர்களை ஒன்றாகச் சேர்த்துச் சூட்டினான். எப்படியும் தன் சீமந்தப் புத்திரனுக்கு பேர் ஆரம்பிக்கும் எழுத்தால் ரேண்டம் எண் அலேகஷனில் எந்தப் பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படிப் பெயர் சூட்டியதாக அந்தப் பெயர் சூட்டு விழாவில் ஒரு பெரிய வியாக்கியானமே சொல்லி முடித்தான்.
            அவனுக்குப் பேர் வைத்த நேரமோ என்னவோ... அன்புகாகன்சித்ரதேவ் வளர்ந்து இன்ஜினியரிங் படிக்க வரும் காலத்திற்கு முன்பாகவே தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இன்ஜினியரிங் காலேஜ் ஆரம்பிக்கப்பட்டு, அட்மிஷனே காற்றாட ஆரம்பித்து விட்டது.
            நான் ஒருத்தன் மட்டும்தான் அன்புபாகன்சித்ரதேவைப் பார்க்க போகும் போது அவனது இன்ஜினியரிங் ஆர்வத்தை வளர்க்கும் விதத்தில் டிசைன் டிசைனாக வீடு கட்டும் விளையாட்டு சாமான்களாலான மாடல்கள் இருக்கிறதே, அதை வாங்கிப் போகிறேன்.
            வெளங்காமண்டையனைக் கேட்டால் தன்னுடைய தவமாய்த் தவமிருந்துப் பெற்ற புத்திரனை இன்ஜினியரிங்கைத் தவிர வேறு எதைப் படிக்க வைக்கவும் தயார் என்கிறான்.
            பாவம் அன்புபாகன்சித்ரதேவ்! நான் ஒருத்தன் மட்டும் அவனுக்கு இன்ஜினியரிங் ஆர்வத்தை ஊட்டினால் போதுமா?! வெளங்காமண்டையனிடம் நீங்களும் கொஞ்சம் எடுத்துச் சொல்லலாம் இல்லையா!
*****

29 May 2019

மேனி கருத்த சைக்கிள்



செய்யு - 99
            'தலைவர்கள் கெத்து காட்டி முடிந்ததும் தொண்டர்கள் சும்மா இருப்பதில்லை. அவர்கள் தலைவர்களைத் தொடர்ந்து தங்களின் கெத்தை காட்ட நினைக்கிறார்கள். தலைவர்கள் சண்டை போட்டால் போதுமா? தொண்டர்கள் என்ன பாவம் செய்தார்கள்! அவர்களும் சண்டை போட வேண்டாமா?
            தலைவர்கள் ஒரு பங்கு அளவுக்குச் சண்டை போட்டால் தலைவர்களிடம் இருக்கும் தங்கள் விசுவாசத்தைக் காட்ட தொண்டர்கள் நூறு பங்கு அளவுக்குச் சண்டை போடுகிறார்கள். தலைவர்களின் ஒரு பங்கு சண்டை அப்போது தொண்டர்களின் கலவரமாக வெடிக்கிறது.'
                                                                                    - நவீன சாணக்கியம்
            இப்போது நிலைமையைப் பாருங்கள்!
            கடைத்தெரு முக்கத்தில் அடித்துப் போட்ட ரகுநாதன் வீடு போயிருந்தார். அடிவாங்கிய சாமி.தங்கமுத்தும், மாணிக்கவிநாயகமும் ஆஸ்பிட்டலில் இருந்தனர். கூடியிருந்த பெருங்கூட்டத்துக்கு அமைதியாகக் கலைந்து போகும் எண்ணம் இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
            "எலேய் இந்தச் செல்லையன் கடை மட்டும் இல்லீன்னா இன்னிக்கு அந்த தங்கமுத்துவுக்கு செரியான சம்பவம் ஆயிருக்கும்டா!" என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்ததுதான் தாமதம்.
            "எதுக்குடா செல்லையன் இதுக்குலாம் எடம் கொடுக்குறாம்?" என்று அடுத்தக் குரல் எழுந்தது. அவ்வளவுதான். அதற்குப் பின் குரல் எதுவும் எழவில்லை. செல்லையன் கடை மீது ஒரு கல் விழும் சத்தம் கேட்டது. ஒரு கல் பல கற்களாக மாறி செல்லையன் கடை மீது தொடர்ச்சியாக விழும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. செல்லையன் கடையில் விழுந்து கொண்டிருந்த கற்கள் படிப்படியாக முக்கத்தில் இருந்த ஒவ்வொரு கடையாக விழ ஆரம்பித்தன. கடைகளில் விழ ஆரம்பித்த கற்கள் சுற்றியிருந்த கூட்டத்தின் மேலும் விழ ஆரம்பிக்க கூட்டம் சிதற ஆரம்பித்தது.
            கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும் எதற்காகக் கற்கள் எறிகிறோம் என்று தெரியாமல் கற்களை எடுத்து கண்ட மேனிக்கு எதிரில் படுபவைகள் மேல் வீசி எறிய ஆரம்பித்தனர். கூட்டத்தின் மையத்தில் சிக்கிக் கொண்டிருந்த அப்பாவுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. அவர் கண்களைச் சுழல விட்டு தன் சைக்கிளைப் பார்க்க முயன்றார். அவரால் தன் சைக்கிளைப் பார்க்க முடியவில்லை. வலது கை புறமாக நகர்ந்து போய் பார்த்தால் சைக்கிள் கண்ணில் படும் என்று தோன்றியது. வலது கை புறமாக நகர்ந்தால் கல்லடி பலமாகப் படும் என்பது புரிந்தது. தற்போது கல்லடியிலிருந்து தப்பினால் போதும் என்று அப்பாவுக்குத் தோன்றியிருக்க வேண்டும். இடது கை புறமாக தப்பித்தோம் பிழைத்தோம் என்று நகர ஆரம்பித்தது அப்பா. ரத்தக்காவு இல்லாமல் வீடு போய்ச் சேர முடியுமா என்ற பயம் அப்பாவை ஆட்டிப் படைத்தது.
            கிட்டதட்ட எல்லா பக்கமும் கூட்டம் ரெளண்ட்டு கட்டி கூடியிருந்தது. அப்படியே இருபது அடி தூரம் ஆட்களைத் தள்ளிக் கொண்டு நகர்ந்ததில் ரோட்டுக்கு எதிர்புறம் வடவண்டைப் பக்கம் குட்டை இருந்தது. அந்த ஒரு பக்கத்தில்தான் கூட்டம் சிதறியது போல் கொஞ்சம் கம்மியமாக இருந்தது. கல்லடி படாமல் தப்பிப் போவதற்கு அதுதான் சரியான வழியாகப் பட்டது. குட்டை சேறும், சகதியுமாக வெங்காயத் தாமரை மண்டிக் கிடந்தது. அதற்கு மேல் யோசிக்க விரும்பாமல் அப்பா குட்டையில் இறங்கி சேற்றிலும் சகதியிலும் விழுந்து ஓட ஆரம்பித்தது. அப்பாவைப் போல பத்து பதினைந்து பேர் தப்பித்தோம், பிழைத்தோம் என்று குட்டைக்குள் இறங்கி ஓடிக் கொண்டிருந்தனர். குட்டையின் எதிர்கரையைப் பிடித்து அப்பா ஓட்டமும் நடையுமாய் வீடு வந்து சேர்ந்தது. முழங்கால் வரை சேற்றுடன், வெள்ளை வேட்டி, சட்டையெல்லாம் சேற்றுக் கறைகளோடு வீடு வந்த அப்பாவைப் பார்த்து, "ந்நல்லா போயி, இப்பிடி நாசமா வந்து நிக்குறீங்க?" என்றது அம்மா.
            "ச்சேய்! ன்னா நேரத்துல கெளம்புனனோ! சரியான தடே! மாணிக்கநாயகம் ரத்தச் சாடா நிக்குது. செரி! வூட்டுக்குத் திரும்பிடலாம்னா திரும்ப முடியல. கலவரமாப் போச்சு. ஆளு பொழச்சா போதும்னு ஓடியார்ரேம்! இன்னுஞ் செத்த நேரம் இருந்தா மண்டை ஒடைஞ்சுதாம் வாரணும்!" என்றது அப்பா.
            "நடந்தா போனீங்க?" என்றது அம்மா.
            "சைக்கிள்லதாம் போனேம்! இப்போ சைக்கிளு ன்னா கதியில கெடக்கோ தெரியலயே."
            "நம்ம சைக்கிள யாரு தூக்கப் போறா? நமக்கு தெரிஞ்சவங்க வூட்டுக்கே தூக்கியாந்து போடுறாங்களா ல்லையான்னு பாருங்களேம்!" என்றது அம்மா.
            "ம்ஹூம்!" என்று முறுவலித்தது அப்பா.
            அப்பாவுக்கு அந்த சைக்கிளின் ஞாபகம் பெருக்கெடுத்திருக்க வேண்டும். முதன் முதலாக சம்பாதித்து வாங்கிய சைக்கிள் அது. வைத்தித் தாத்தாதான் தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி வைத்து விசாரித்து வாங்கிக் கொடுத்தது. செகண்ட் ஹேண்டில் வாங்கிய சைக்கிள். சுமாராக பதினைந்து பதினாறு வருடத்துக்கு மேலாக ஓடிக் கொண்டிருநத சைக்கிள். விற்றால் அதிகபட்சம் முந்நூறோ நானூறுக்கோ போகும். ஓட்டிக் கொண்டேயிருந்தால் இன்னும் லட்ச ரூபாய்க்குச் சமனாக காலம் முழுதும் ஓடிக் கொண்டிருக்கும். நல்ல ஓட்டமுள்ள சைக்கிள். ஹேண்டில்பார், ரிம், கேரியரைத் தவிர ஒட்டு மொத்த சைக்கிளிலும் துரு ஏறிய நிறத்தில் இருந்தது அது. அந்த சைக்கிள் எந்த நிறுவனத்தின் சைக்கிள் என கண்டுபிடிக்க முடியாதபடி பிரேம் ஒரு சைக்கிள் கம்பெனியுடையதாகவும், ஹேண்டில்பார் ஒரு சைக்கிள் கம்பெனியுடையதாகவும் இருந்ததாக அப்பா சொல்லும். பிரேமில் டி.ஐ. என்ற குறி இருந்தது. மற்றபடி பிரேமிலோ வேறு எந்த பாகத்திலோ கம்பெனியின் பெயர் பார்க்க முடியாத படி அடர் பழுப்பு நிறத்தில் வண்ணம் பூசியது போல துருதுருவென்று அதன் மேனி முழுவதும் துரு ஏறியிருந்தது.
            கேரியரில் தேங்காய்ப்பூ துண்டை நான்காய் மடித்துப் போட்டு அதில் விகடுவை உட்கார வைத்து அவன் கால்களை சக்கரத்தில் விட்டு விடாதபடி மட்கார்டுக்கு இந்தப் பக்கம் பாதங்களைப் பின்னி விட்ட மாதிரி உட்கார வைத்து அப்பா சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டருக்கு மேலாவது ஓட்டியிருக்கும். அவனது சின்ன வயதில் கடைத்தெரு, வயல், பள்ளிக்கூடம் எங்கு சென்றாலும் அந்தச் சைக்கிளில் உட்கார வைத்து அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் ஏங்கி ஏங்கி ஒரு மாதிரியாக மூச்சை வாங்கிக் கொண்டு அழ ஆரம்பித்தான் என்றால் நாள் பூராவும் நினைத்து நினைத்து அழுது கொண்டிருப்பான். அந்தச் சைக்கிளில் அப்பாவோடு பின்னால் உட்கார்ந்து கொண்டு போக அவனுக்கு அவ்வளவு பிரியம் இருந்தது. அவன் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் விடக் கற்றுக் கொண்டது கூட அந்தச் சைக்கிளில்தான்.
            செய்யுவைச் சிறு பிராயத்தில் அப்பா முன்னால் ஒரு கூடை வைத்து அதில் தூக்கி வைத்து அழைத்துச் சென்றது கூட அந்த சைக்கிளில்தான். அவள் வளர வளர கேரியரில் செய்யுவை வைத்து விகடுவும் அந்த சைக்கிளில் அழைத்துச் சென்றிருக்கிறான். திருவாரூர், மாவூர், கூத்தாநல்லூர், மன்னார்குடி வரை கூட அப்பா அந்த சைக்கிளிலில் போய் வந்திருக்கிறது. அப்பா டிவியெஸ் பிப்டி வாங்கும் வரை அதில்தான் சென்று கொண்டிருந்தது. டிவியெஸ் வாங்கிய பிற்பாடு பத்தாம் வகுப்பு முழுவதும்  வைத்து விகடு அந்த சைக்கிளில்தான் ராட்சச வேகத்தில் பள்ளிக்கூடம் சென்று வந்து கொண்டிருந்தான். நரிவலத்துக்குக் குடும்பமே குடி பெயர்ந்த போது இந்த சைக்கிளும் உடன் போனது. நரிவலத்தில் கலர் கலர் குடங்களைத் தண்ணீர் தூக்குவதற்காகக் கட்டிக் கொண்டு போன போது துரு பிடித்திருந்த இந்த சைக்கிள் வண்ண மயமாகக் காட்சி அளித்தது. எத்தனையோ குடங்களில் தண்ணீரைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
            அக்கம் பக்கம் எங்காவது செல்வது என்றாலோ, கடைத்தெருவுக்குச் செல்வது என்றாலோ விகடு மட்டும்தான் இப்போது அந்தச் சைக்கிளை அவ்வபோது பயன்படுத்திக் கொண்டிருந்தான். அதுவும் அரிதாக ஆடிக்கொரு ஒரு தரமோ, அமாவாசைக்கு ஒரு தரமோ என்பது போல. அவனுக்கு சைக்கிளில் போவதை விட நடந்து போவது அதிகம் பிடித்திருந்ததால் ஏதேனும் அவசர கதிக்கு மட்டும்தான் அந்தச் சைக்கிளை எடுப்பதும் போவதுமாக இருந்தான்.
            சைக்கிளை விட்டு விட்டு வந்தது அப்பாவுக்கு பெருத்த மன உறுத்தலாகவே இருந்தது. கிளம்பிப் போய் எப்படியாவது எடுத்து வந்து விடலாமா என்று கூட அப்பாவுக்குத் தோன்றியது.
            கடைத்தெரு பக்கத்திலிருந்த வந்து கொண்டிருந்த ஆட்கள் கடைத்தெருவே ரத்தக் களறியாக ஆகிக் கொண்டிருப்பதாக பேசிக் கொண்டதைக் கேட்டதும், அம்மாவுக்கு அப்பாவை அனுப்ப மனமில்லை. கொல்லைப் பக்கம் போய் கை, கால்களை அலம்பி வந்த அப்பாவுக்கு சேற்றுக் கறை படிந்த வேட்டியையும், சட்டையையும் கூட மாற்ற மனமில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தது. நீண்ட நேரத்துக்கு உட்கார்ந்த படியே யோசித்துக் கொண்டிருந்தது. முகத்தில் ஏகப்பட்ட சோகம் அப்பியிருந்தது. வீட்டில் எல்லாருக்கும் அப்படிதான் இருந்தது.
            ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் கூடி இதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். ஒரு வீடு தள்ளியிருக்கும் தம்மேந்தி ஆத்தா செய்தி கேள்விப்பட்டு வந்த போது சொன்னது, "ஆளு பொழச்சு வந்தத பெரிசா நெனச்சுக்கோங்கம்பி! டவுன்லேந்து போலீஸ் வந்து எறங்குறதா பேசிக்குறாங்கம்பி! கையடி, காலடி, மண்டயடின்னு ஏகப்பட்ட பேரு ஆஸ்பத்திரில கொண்டு போயி போட்டிருக்கதா பேசிக்கிறத கேட்டீங்களாம்பி?"
            "நீங்க சைக்கிள எடுத்துட்டுப் போனதாம்பா கரெக்ட். டிவியெஸ் வண்டிய எடுத்திட்டுப் போயிருந்தீங்ன்னா ன்னா ஆயிருக்கும் பாத்துக்குங்கப்பா!" என்றாள் செய்யு.
            "சின்ன புள்ளனாலும் வெவரமா சொல்லுது பாருங்க!" என்றது தம்மேந்தி ஆத்தா.
            "ஏம்டி சைக்கிளு போனாலும் போயிட்டுப் போறது. பதினாலாயிரம் ரூவாயாம் டிவியெஸ் வண்டிய போகட்டும்னு சொல்றீயாடி?" என்றது அம்மா.
            "அதத்தாம் சொல்றா ஒம்ம மவ்வே. சைக்கிளோட விட்டுச்சே. வண்டி தப்பிச்சேன்னு. ஏத்தோ தலெய்க்கு வந்தது தலப்பாகயோட போச்சுதுன்னு போங்கம்பி! செத்த ஊரு ஒலகம் அடங்கட்டும். போயிப் பாப்பம். நாம்ம ஒழச்சி வாங்குனது நம்ம கைய்ய வுட்டு எங்க போயிடப் போவுது போங்க!" என்றது தம்மேந்தி ஆத்தா.
            "அந்தப் பக்கமே யாரயும் வுட மாட்டேங்றாங்களாம். மீறிட்டுப் போனா வண்டில ஏத்தி ஸ்டேசனுக்குக் கொண்டு போறாங்களாம். ஒரே போலீஸ் கூட்டமா இருக்காம்!" என்று சொல்லியபடி வந்தது எதிர்வீட்டு தாடி தாத்தா.
*****

இத கொஞ்சம் பார்வேர்டு பண்ணுங்க!



            நாட்டுல எதை எதையோ தடுக்க என்னென்னவோ கட்டுபாடு இருக்கு. இந்த வாட்ஸ் ஆப் குருப்ல பார்வேர்டு மெசேஜைத் தடுக்கிறதுக்கு எந்தக் கட்டுபாடும் இல்லாமப் போச்சு. எல்லா குரூப்லயும் ஒரு மாதிரியான பார்வேர்ட்டு மெசேஜைப் பார்த்து கண்ணுவலி கண்டதுதான் மிச்சம்.
            நாட்டுல மெசேஜைப் பார்வேர்டு பண்றதுக்குன்னே ஒரு கூட்டம் கங்கணம் கட்டிட்டு அலயுறாங்கப் போலருக்கு. அதலயும் குழந்தைங்கக் காணாமப் போன மேசேஜை அந்தக் குழந்தையைக் கண்டுபிடிச்ச பின்னாடியும் பார்வேர்டு மேல பார்வேர்டு பண்ணி என்னாச்சுன்னா...
            வீட்டுல இருந்த அந்தக் குழந்தையைத் தூக்கியாந்து போலீஸ் ஸ்டேசன்ல விடுற அளவுக்குப் போயிடுச்சு. வீட்டுல இருந்த குழந்தையை ஏம்டா போலீஸ் ஸ்டேசன்ல கொண்டாந்து விட்டேன்னு கேட்டதுக்கு... இந்தக் குழந்தைதான் காணாமப் போச்சுன்னு வாட்ஸ் ஆப்ல மேசேஜ் வந்துச்சுன்னு சொல்லியிருக்காப்ல.
            அப்புறம் அந்த குழந்தையோடு வீட்டுக்காரங்களும் இதென்ன பெரிய ரோதனையாப் போச்சு அப்படின்னு, என்னிக்கு வாட்ஸ் ஆப்ல அந்த பார்வேர்டு ‍மெசேஜ் நிக்குதோ அன்னிக்கு வந்து குழந்தையைத் தூக்கிட்டுப் போறோம்னு சொல்லி ஸ்டேசன்லயே வுட்டுட்டுப் போனதா பேச்சாகிக் கெடக்கு.
             இந்த 'ரத்தம் தேவை'ங்ற பார்வேர்டு மெசேஜை ரத்தம் வர அளவுக்கோ, பார்க்கிறவங்க ரத்தம் கக்கிச் சாகுற அளவுக்கோ அனுப்புறாங்க. ஏம் இப்படி ரத்தவெறிப் பிடிச்சு அலயுறீங்கன்னு கேட்கணும் போலருக்கு.
            அதுல ஒரு கதை இருக்கு. நம்ம ஆளு ஒருத்தன் இருக்காம். அவன்தான் ரத்தம் தேவைங்கற பார்வேட்டு மேசேஜை அடிக்கடிப் பண்றவன். அந்த 'ரத்தம் தேவை பார்வேர்டு மெசேஜ்'காரனும், நானும் ஒருக்கா நம்ம பிரணெ்டோடு அப்பா ஒருத்தருக்கு ஏதோ ஆபரேசன்னு திருவாரூ ஆஸ்பிட்டலுக்குப் பார்க்கப் போனோம்.
            அந்த நேரம் பார்த்து பிரெண்டோட அப்பாவுக்கு ஏபி பாசிட்டிவ்ங்ற ரத்தம் வேணும்னுட்டாங்க. சரி யாரயாவது ஆளப் பிடிப்போம்னு யோசிச்சி நம்ம 'ரத்தம் தேவை பார்வேர்டு மெ‍சேஜ்'காரன்தான் இதுக்குச் சரிபடுவான்னு ஆளப் பார்த்தா... ஆளக் காணும். எங்கடா போயிருப்பான்னு ஆஸ்பிட்டல் முழுக்கா தேடிப் பார்த்தா ஆளக் கண்டுபிடிக்க முடியல. போன் பண்ணுனா போன் ஸ்விட்ச் ஆப்னு வருது. சரி வாட்ஸ்அப்ல போடுவோம்னு பார்த்தா வாட்ஸ் ஆப் ப்ளூ டிக்கே காட்ட மாட்டேங்குது. அட என்னடா கருமத்தேன்னு அவன தேடுறத வுட்டுப்புட்டு ஒருவழியா அங்க இங்க அலஞ்சிப் பிடிச்சி ஒருத்தர கொண்டாந்து நிறுத்தினோம்.
            அப்புறம் ஒரு பத்து நாளு கழிஞ்சிருக்கும். நம்ம 'ரத்தம் தேவை பார்வேர்ட் மெசேஜ்'காரன் கண்ணுல பட்டான்.
            "அட! எங் கொன்னியா! அன்னிக்கு ஆஸ்பிட்டலேந்து எங்கடா போனே?"ன்னு கேட்டதுக்கு,
            "அது வந்து... நமக்கு ஏபி பாசிட்டிவ் ரத்தம்ணே! எங்கே நம்மள ரத்தம் கித்தம் கொடுக்கச் சொல்லிடுவாங்கன்னு நெனச்சி ஓடிட்டேண்ணே! நமக்கு ரத்தம் கொடுக்குறதுன்னா அவ்ளோ பயம்ணே! தப்பா ஏதும் நெனச்சுகாதீங்க" அப்படிங்றான்.
            "அதுக்கு ஏம்டா வாட்ஸ் ஆப்லேந்தும் ஓடிப் போனே?" அப்படின்னு கேட்டதுக்கு,
            "நாம்ம எங்கண்ணே ஓடிப் போனேம்? வேற நம்பலேர்ந்து வாட்ஸ் ஆப் பண்ணிட்டிருக்கேன்!" அப்பிடிங்றான்.
            "அது செரி! 'ரத்தம் தேவை' மெசேஜையெல்லாம் இப்போ பார்வேடு பண்றதில்லைல?" ன்னு கேட்டதுக்கு,
            "அது எப்புடிண்ணே விட முடியும்? பழக்கமாயிடுச்சே! நம்ம பேரு வாட்ஸ் ஆப்ல இன்ஸ்டான்ட் ப்ளட் ஹெல்பர்தானே" ங்றான்.
*****
            நேற்றைக்குச் சோற்றைப் பற்றி எழுதியிருந்ததால் நம்ம நண்பன் ஒருத்தன், "எப்படிச் சாப்பிடணும்ங்றதைத் தெளிவாச் சொல்லு?" அப்படின்னு கேட்டுட்டான்.
            அட! இவன்லாம் என்ன நண்பனா இருப்பான்! பிறந்ததிலிருந்து இன்னும் சாப்பிடாதவனா இருப்பாம் போலிருக்கு!
            நம்ம கிராமத்துல இப்படிதாம் சொல்வாங்க,
            1. பாதி பசியோட இருக்கிறப்பவே சாப்பாட்டிலிருந்து எழுந்து விட வேண்டும்.
            2. உடம்பு வளைய எவ்வளவு குனிஞ்சு நிமிர முடியுமோ அந்த அளவுக்குதாம் சாப்பிட வேண்டும். அதுக்காக குனிஞ்சு நிமிந்துகிட்டு இருக்காதீங்க. இங்க உடம்பு வளைஞ்சு உழைக்கிறதைத்தான் வழக்குல அப்படிச் சொல்றாங்க.
*****

28 May 2019

கம்பு வாத்தியாரின் சிஷ்யப் புள்ள!



செய்யு - 98
            திட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்சி ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பழகுவார்கள். பேச்சு வழக்கில் தி.மு.க.வை அய்யா கட்சி என்றும், அ.தி.மு.க.வை அம்மா கட்சி என்றும் சொல்வார்கள். கட்சி வேலை செய்யாவிட்டாலும், அந்தக் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாவிட்டாலும் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுகிறார்களோ அவர்கள் அந்தக் கட்சி என்று வகை பிரித்து விடுவார்கள்.
            அந்த வகையில் மாணிக்கவிநாயகம் அம்மா கட்சியில் இருந்தது. கட்சி வேலைகளை எடுத்துப் போட்டு செய்வதில் மாணிக்கவிநாயகத்தை அடித்துக் கொள்ள முடியாது. அப்படி வேலை பார்க்கும். அத்துடன் மாணிக்கவிநாயகம் கட்சிப் பொறுப்பிலும் இருந்தது.
            வாத்தியார்மார்களைப் பொருத்த வரை கேட்காமலே ஊரில் அவர்களை அய்யா கட்சி என்று சொல்லி விடுவார்கள். அப்பா இதனால் அய்யா கட்சியின் வகையில் வந்தது. அதற்காக எந்த வாத்தியார்மாரும் கட்சி வேலைகளில் இறங்கியெல்லாம் வேலை செய்ய மாட்டார்கள்.  தங்கள் ஓட்டுகளை அவர்கள் அய்யா கட்சிக்குதான் போடுவார்கள் என்பதால் அவர்கள் அய்யா கட்சியைச் சார்ந்தவர்கள். ஊரில் இப்படி கட்சி ரீதியான முத்திரை இல்லாமல் யாரையும் குறிப்பிட மாட்டார்கள். பேச்சு வாக்கில், "அவ்வேம் அய்யாக்கட்சிக்காரம்ல!", "அவ்வேம் அம்மாக்கட்சிக்காரம்ல!" என்றாலும் யாரையும் யாரும் கட்சியைக் காரணம் காட்டி ஒதுக்கி விட மாட்டார்கள். தேர்தல் நேரங்களில் இந்தப் பேச்சுகளில் தீவிரமும், வெக்கையும் இருந்தாலும், தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்து ஒரு வாரம் ஆகி விட்டால் யார் எந்தக் கட்சி என்று தெரியாத அளவுக்கு ஒருத்தர் மேல் ஒருத்தர் விழுந்து புரளாத குறையாகப் பழகுவார்கள்.
            இப்படியாக, மாணிக்கவிநாயகம் அம்மா கட்சியில் இருந்தாலும், அப்பா அய்யா கட்சியின் வகைமையிலும் வந்தாலும் கட்சி ரீதியாக அவர்கள் எதையும் பேசிக் கொண்டதில்லை. பழக்க வழக்கத்தில் அவ்வளவு கெட்டி. நீங்கள் ஏன் அம்மா கட்சியில் இருக்கிறீர்கள் என்று மாணிக்கவிநாயகத்தை அப்பாவோ, நீங்கள் ஏன் அய்யா கட்சியில் இருக்கிறீர்கள் என்று அப்பாவை மாணிக்கவிநாயகமோ கேட்டுக் கொள்ள மாட்டார்கள்.
            அதனால் கட்சி ரீதியான அடிதடிகள் அதுவரை திட்டைக்கு வந்ததில்லை. முதல் முறையாக அப்படிப்பட்ட அடிதடி மாணிக்கவிநாயகம் அடிவாங்கி ரத்தம் சொட்ட சொட்ட நின்ற அன்றும் அதற்கு முன் ரெண்டு நாளுக்கு முன்பும்தான் நடந்தது. அதையும் கட்சி ரீதியான அடிதடி என்ற வகைக்குள் கொண்டு வர முடியும் என்று சொல்ல முடியாத அளவுக்கு கொஞ்சம் சிக்கல் நிறைந்தது. இருந்தாலும் முழுமையாகப் படித்து விட்டு நீங்களே அது பற்றி ஒரு முடிவு செய்து கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். 
            அந்த அடிதடியின் ஆரம்பத்துக்கும், கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலும் தோன்றுகிறது, இருப்பது போலும் தோன்றுகிறது. அடித்தவரும், அடிபட்டவரும் கட்சி ரீதியாக எதிரெதிர் கட்சியில் இருந்ததால் அது கட்சி ரீதியான அடிதடியாக பெயர் கொண்டதோ என்னவோ! மறுபடியும் சொல்வதென்றால், அந்த அடிதடியின் ஆரம்பமும், முடிவும் எப்படி இருந்தது என்பதைப் பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்வதுதான் சரியாக இருக்கும்.
            இன்னும் சொல்லப்போனால் அந்த அடிதடி ஒரு கட்சிக்குள் ஆரம்பித்து இரண்டு எதிரெதிர்க் கட்சியின் சண்டையாக ஆகிப் போனது.
            திட்டைப் பஞ்சாயத்துக்கு உட்பட்டப் பகுதிக்கு அய்யாக் கட்சியைச் சார்ந்த ரகுநாதன் குடும்பம் செல்வாக்கு. உள்ளாட்சித் தேர்தல் என்று ஆரம்பித்து நடந்த எல்லா தேர்தல்களிலும் ரகுநாதன் குடும்பமே பிரசிடென்டாக இருந்து வந்திருக்கிறது. ரகுநாதன் அப்பா காலத்தில் அவர் பிரசிடெண்ட் என்றால், இப்போது ரகுநாதன் காலத்தில் அவர் பிரசிடெண்ட். அப்படி ஒரு செல்வாக்கு அவர்களின் குடும்பத்திற்கு ஊரில் இருந்தது. ரகுநாதனுக்கு ஒரு தம்பி. ஒரே தம்பி என்றால் ரகுநாதனுக்கு உயிருக்கு உயிரான பாசக்கார தம்பி. தம்பி என்றால் உயிரை விட்டு விடும். அந்தத் தம்பி கிள்ளிவளவனுக்குப் பிரசிடென்ட் ஆக வேண்டும் என்ற ஆசை. அண்ணன் ரகுநாதனிடம் கேட்டிருந்தால் தம்பிக்காக அதைத் தூக்கி எறிந்திருக்கும். 
            தம்பி கிள்ளிவளவனுக்குப் புத்தி வேறு மாதிரி வேலை செய்தது. ஒரே கட்சியில் இருந்த கொண்டு இரண்டு பேரும் எப்படி பிரசிடெண்ட் தேர்தலுக்குப் போட்டிப் போட முடியும்? அதுவும் ஒரே கட்சியில் இருந்து அண்ணனுக்கு எதிராக எப்படிப் போட்டியிடுவது? ஆனால் போட்டியிட்டுதான் பிரசிடெண்டாக வேண்டுமே தவிர, யாரும் தூக்கிக் கொடுத்து பிரசிடெண்ட் ஆகக் கூடாது என்ற நினைப்பில் இருந்திருக்கிறது கிள்ளிவளவன்.
            அதன் தொடர்ச்சியாக கிள்ளிவளவன் செய்ததுதான் ஊரு உலகத்தையே திருப்பிப் போட்டது போல ஆகி விட்டது. கிள்ளிவளவன் அய்யா கட்சியை விட்டு அம்மா கட்சிக்கு மாறியது. ஊரெல்லாம் அப்போது இதே பேச்சாக இருந்தது. ஊரையே அய்யா கட்சிக்கு மாற்றிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்திலிருந்து அம்மா கட்சிக்கு கிள்ளிவளவன் மாறினால் அதைப் பற்றி எப்படிதான் பேசாமல் இருக்க முடியும்?
            தம்பி இப்படிக் கட்சி மாறியதில் ரகுநாதனுக்கு ரொம்பவே மனத்தாங்கல்தான். ஏற்கனவே அவர்களின் குடும்பத்தில் சில பல மனத்தாங்கல்கள் இருந்து கிள்ளிவளவன் வீட்டை விட்டுப் போயிருந்ததால், இது பற்றிக் கிள்ளிவளவனிடம் பேச ரகுநாதனுக்கு தயக்கமாக இருந்தது. கட்சிக்காரர்களும் இது குறித்து ரகுநாதனிடம் பேசி சங்கடப்படுத்த விரும்பவில்லை. ரகுநாதனே கட்சிக்காரர்களிடம் இது குறித்துக் கட்சிக்காரர்களிடம் பேசினால், "உங்கள தெரியாதண்ணே! எல்லாந் புரியுதுண்ணே! ஒங்க தம்பிக்குப் புடிச்சா மொயலுக்கு முணு கால்தாம்ண்ணே! பாத்துக்கலாம் வாங்க!" என்றார்கள் கட்சிக்காரர்கள்.
            கிள்ளிவளவனின் கணக்கு அம்மா கட்சியில் சேர்ந்து அண்ணன் ரகுநாதனை எதிர்த்து பிரசிடெண்டுக்கு நின்று பிரசிடெண்டாக ஆக வேண்டும் என்பதுதான். அதற்காகதானே பாரம்பரியமான அய்யா கட்சியிலிருந்த குடும்பத்திலிருந்த அம்மா கட்சிக்கு மாறியது கிள்ளிவளவன்! அய்யா கட்சியின் செல்வாக்கான ஆளாக இருந்த சாமி.தங்கமுத்துவுக்கு இது பிடிக்கவில்லை. சாமி.தங்கமுத்துவுக்கு தாம்தான் பிரசிடெண்ட் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற ஆசை. இதனால் சாமி.தங்கமுத்துவுக்கும், கிள்ளிவளவனுக்கும் முட்டிக் கொண்டது. முதலில் சாதாரணமான புகைச்சலாக ஆரம்பித்த இப்பிரச்சனை வாய்த் தகராறாக மாறி, அடிதடி தகறாராக மாறியது. இந்தச் சாமி.தங்கமுத்துவின் விசுவாசமான ஆளாக மாணிக்கவிநாயகம் இருந்தது.
            இப்போது நடந்து கொண்டிருந்த அடிதடிக்குத் தோற்றுவாய் இப்படித்தான் ஆரம்பித்தது.
            இப்போது நடக்கும் அடிதடிக்குச் சரியாக ரெண்டு நாட்களுக்கு முன்பாக திட்டை கடைத்தெரு முக்கத்தில் அம்மா கட்சியின் கொடியேற்றம் நடந்த போது மைக் செட்டெல்லாம் வைத்த பிரமாதமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது கிள்ளிவளவனின் நெருக்கமான ஆள் ஒருவர் மைக் பிடித்த போது, 'வருங்கால பிரசிடெண்ட் கிள்ளிவளவன் அவர்களே!' என்று கிள்ளிவளவனை விளித்திருக்கிறார். உடனே சாமி.தங்கமுத்துவின் நெருக்கமான ஆள் ஒருவர் மைக்கை உடனடியாகப் பிடுங்கி, "உண்மையான வருங்கால பிரசிடெண்ட் அண்ணன் சாமி.தங்கமுத்து அவர்கள்தான் என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் இந்த மாபெரும் கோடியேற்ற விழாவிலே தொண்டர் படை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்!" என்று பேசியிருக்கிறார்.
            அடுத்த பிரசிடெண்ட்டு தேர்தலுக்கு கட்சியின் சார்பாக யார் நிற்பது? என்று வாய் தகராறு ஆரம்பித்தது. கிள்ளிவளவனின் ஆட்கள் கிள்ளிவளவன்தான் அடுத்த பிரசிடெண்ட் என்றும், சாமி.தங்கமுத்துவின் ஆட்கள் சாமி.தங்கமுத்துதான் அடுத்த பிரசிடெண்ட் என்றும் கோஷமிட, "நம்மள எதுத்து நம்ம கட்சியிலயே எவம்டா பிரசிடெண்டுக்கு நிக்க முடியும்?" என்று கரகர குரலில் முழங்கியது சாமி.தங்கமுத்து.
            "கட்சின்னா யாரு வேணாலும் எந்த பதவிக்கு ‍வேணாலும் மனு கொடுக்கலாம். கட்சித் தலமதான் யாரு நிக்கணும், நிக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணணும்!" என்று கட் அண்ட் ரைட்டாக பேசியது கிள்ளிவளவன்.
            "ஓ! அட எங் கருமத்தே! அந்த அளவுக்கு வந்துச்சா! எடுங்கடா கட்டய! நானா? அவனான்னு பாத்துடுவோம்!" என்று சாமி.தங்கமுத்து எங்கேயோ கிடந்த கட்டைக்கழி ஒன்றை எடுத்து வந்து கடைத்தெரு நடுமுக்கத்தில் வைத்து கிள்ளிவளவனை நடுமண்டையில் ஒரு போடு போட்டது. அடித்த அடியில் கிள்ளிவளவன் கேராகி ரத்தம் சொட்ட சொட்ட தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டது. அதற்குப் பின்தான் ரெண்டு பக்கமாக பிரிந்து வாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்த கூட்டம் ஒருவாறாக சுதாரித்து சாமி.தங்கமுத்துவைப் பிடித்துக் கொள்ள, கிள்ளிவளவனை அந்த நேரத்தில் வந்த எட்டாம் நம்பர் பஸ்ஸில் தூக்கிப் போட்டுக் கொண்டு ஆஸ்பிட்டலுக்கு ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த தடி கொண்டு அடித்த அடிதடிச் சம்பவம் அவ்வளவு வேகத்தில் நடந்து முடிந்து, ரெண்டு நாட்கள் கழித்து வேறு விதமாகப் பற்றியது.
            இது ஒரு கட்சி உள்விவகாரப் பிரச்சனை, ஏதோ பேசித் தீர்த்துக் கொள்வார்கள் என்றுதான் ஊரில் ரெண்டு நாட்களாய்ப் பேசிக் கொண்டார்கள்.
            ஆனால் ரெண்டாம் நாள் கருக்கலில்... அதாவது அப்பா மாணிக்கவிநாயகத்தை அழைத்துக் கொண்டு கல்யாண விசயமாக லாலு மாமாவிடம் பேசலாம் என சைக்கிளில் கிளம்பிய நேரத்தில்...
            கிள்ளிவளவனின் அண்ணன் ரகுநாதன் தம்பியைக் கடைத்தெரு முக்கத்தில் வைத்து அடித்ததுக்குப் பழி வாங்கும் விதமாக, டீக்கடைக்கு டீ குடிக்க வந்த சாமி.தங்கமுத்துவை தனியொரு ஆளாக வந்து திட்டையின் கடைத்தெரு முக்கத்தில் வைத்து வெளுத்து வாங்கியது. ரகுநாதன் சண்டையில் பலே ஆள். கம்புச் சண்டையில் ஊரே திரண்டு வந்தாலும் ஒத்த ஆளாய் நின்று சமாளிக்கும்.
            சிலம்பம் கற்றுக் கொள்வதற்காகவே மூலங்கட்டளை கம்பு வாத்தியார் வீட்டில் தங்கி, கம்பு வாத்தியாருக்கு அத்தனைப் பணிக்கைகளையும் செய்து கொடுத்து வித்தையைக் கற்றுக் கொண்ட ஆள் ரகுநாதன். அத்தனைப் பணிக்கைகளையும் என்றால்... கம்பு வாத்தியாரின் சட்டை, துணிமணிகள், கோவணம் உட்பட துவைத்துப் போட்டு வித்தையைப் பிடித்த ஆள் அது. ரகுநாதன் குடும்பம் இருந்த நிலைக்கு அது அந்த அளவுக்கு கம்பு வாத்தியாருக்காக இறங்கிப் பணிக்கை செய்திருக்க வேண்டியதில்லைதான். ரகுநாதனுக்கு கம்பு வித்தை மேல் அவ்வளவு பிரியம் இருந்தது. அதனால் கம்பு வாத்தியார் மேல் அதுக்கு அவ்வளவு பக்தி ஆகி விட்டது. இதனால் இதனால்... அதனால் அதனால்... கம்பு வாத்தியாருக்கும் ரகுநாதன் மேல் அம்புட்டுப் பிரியம் உண்டாகி விட்டது. கம்பு வித்தையின் அத்தனை சூட்சமங்களையும், அத்தனை நெளிவு சுளிவுகளையும், ஏமாற்றி அடிக்கும் அத்தனை ரகசியங்களையும் சொல்லிக் கொடுத்து விட்டார் கம்பு வாத்தியார்.
            பொதுவாக கம்பு வாத்தியார்கள் கம்புச் சுற்ற கற்றுக் கொள்ள வரும் எல்லாருக்கும் எல்லா வித்தைகளையும் சொல்லிக் கொடுத்து விட மாட்டார்கள். பொதுவாக கம்புச் சுற்றக் கற்றுக் கொடுத்து விட்டு, ரெண்டு மூன்று சூட்சமங்களைச் சொல்லிக் கொடுத்து விட்டு அனுப்பி விடுவார்கள். அவர்களைப் பொருத்த வரையில் கம்பு வித்தையின் எல்லா சூட்சமங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் குருபக்தி அந்த அளவுக்கு இருக்க வேண்டும். அந்த அளவுக்கு குருபக்தியோடு இருந்து ரகுநாதன்தான் அத்தனை வித்தைகளையும் கற்றுக் கொண்டது.
            இப்போதும் தலைக்கு மேல் என்ன வேலை இருந்தாலும் வியாழக் கிழமை என்றால் கம்பு வாத்தியாரின் வீட்டுக்கு பொட்டுக்கடலை, சர்க்கரை, பூ, ஊதுவத்தி, விபூதி, சந்தனம், குங்குமம் எல்லாம் வாங்கிக் கொண்டு போய் கம்புக்குப் போடும் பூசையை முடித்துக் கொண்டுதான் வரும் ரகுநாதன். தீபாவளி, பொங்கல் என்றால் தாம்பாளத் தட்டில் வாத்தியாருக்கும், வாத்தியாரின் குடும்பத்துக்கும் சட்டை துணிமணிகள் எடுத்துக் கொண்டு போய், அதன் மேல் நூறு ரூபாய் நோட்டை வைத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு வரும்.
            இந்தச் சுற்றுவட்டாரத்தில் கம்புச் சுழற்றுவதில் மூலங்கட்டளை கம்பு வாத்தியார்தான் கில்லி. அவருக்கு அடுத்தபடி ரகுநாதன்தான் அதில் கில்லி. கம்பு வாத்தியாரின் அத்தனை ரகசிய கம்பு வித்தைகளையும் தெரிந்த ஒரே ஆள் ரகுநாதன். அத்தோடு கம்பு வாத்தியார் மான் கொம்பு வைத்துக் கொண்டு ஆடுவது, கம்பிச் சுருளை வைத்துச் சுற்றுவதையும் ரகுநாதனுக்கு மட்டும்தான் கற்றுக் கொடுத்திருந்தார். அப்படிப்பட்ட ஆள் கட்டையைச் சுழற்றிக் கொண்டு களத்தில் இறங்கினால் எப்படி இருக்கும்? அது கட்டையைச் சுழற்றிய வேகத்தில் யாரும் கிட்டத்தில் நெருங்க முடியவில்லை. கடைத்தெருவுக்கு வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
            ரகுநாதன் சாமி.தங்கமுத்துவை வெளுத்து வாங்கும் செய்தியறிந்து கட்சி ஆட்கள் திட்டை கடைத்தெரு முக்கத்தில் கூட ஆரம்பித்தார்கள். யார் நெருங்கிப் போய் ரகுநாதனைத் தடுத்து சாமி.தங்கமுத்துவைக் காப்பாற்றுவது என்று தெரியவில்லை. யார் சாமி.தங்கமுத்துவை நெருங்கினாலும் ரகுநாதனின் கட்டையடி நெருங்குபவருக்கு வசமாக விழும் என்ற நிலை. அதுவும் ரகுநாதனிடம் அடி வாங்கி எழுந்து நடமாடுவது அத்தனை சாமானியமா என்ன? அப்படி வர்மம் பார்த்து அடிக்கும் ரகுநாதன் என்பது ஊரறிந்த ரகசியம். எல்லாரும் எட்ட நின்று வேடிக்கைதான் பார்த்தார்கள். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மாணிக்கவிநாயகம்தான் சாமி.தங்கமுத்துவை நெருங்கி அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டது.
            "டேய் மாணிக்கநாயகம் அவனே வுட்டுடு. அவ்வேம் இன்னிக்கு எங் கையால அடிவாங்கிச் சாகப் போறாம்ல. நீயி சம்பந்தம் யில்லாம சிக்கிச் சின்னபின்னமாயிடாத. அவன காப்பாத்தம்னு நெனச்சு நீயி அடிவாங்கிச் செத்திடாத." என்று கட்டையைச் சுழற்றி அடித்ததைக் குறைக்காமல் அடித்துக் கொண்டிருந்தது ரகுநாதன்.
            மாணிக்கநாயகம் சாமி.தங்கமுத்துவைக் கட்டிப் பிடித்ததை விடவில்லை. ரகுநாதனின் அத்தனைக் கட்டை அடிகளும் மாணிக்கநாயகத்தின் முதுகில் விழுந்து கொண்டிருந்தன. மாணிக்கவிநாயகம் அப்படியே கட்டிப்பிடித்தபடியே தரையில் உருண்டு கொண்டு போய் தென்னண்டைப் பக்கம் இருந்த செல்லையன் மளிகைக்கடையின் உள்ளே தங்கமுத்துவைத் தள்ளி கதவைப் போட்டு பூட்டிக் கொண்டு, கதவுக்கு வெளியே நின்றது. மாணிக்கவிநாயகம் இடையில் புகுந்து தடுக்கவில்லையென்றால் சாமி.தங்கமுத்து அன்று கண்டமாகியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
            ரகுநாதன் கட்டைக்கழியைச் சுழற்றியபடிச் செல்லையன் கடையை நெருங்கி வந்தது.
            "வேணாம்ணே! உங்ககிட்ட அடிவாங்கி உசுரு பொழக்க முடியாது. அதுவும் அடிச்சுது, நீங்களும் அடிச்சிட்டீங்க. இத்தோட முடிச்சிக்கலாம்ணே. தாயா புள்ளய பழகிட்டு இத்தெல்லாம் வேணாம்ணே. நடந்தது நடந்து போச்சி. நாளிக்கு ஒருத்தரு முகத்துல ஒருத்தரு முழிக்கணும்ணே." என்று மாணிக்கவிநாயகம் கையெடுத்துக் கும்பிட்டது.
            "நீயி ஏம்டா அவனே அடிக்கிறப்ப குறுக்க வந்து பாயுறேங்றேம்? அடிதடில எறங்குறது தப்புடா! எறங்கிப்புட்டு பெற்பாடு அடிதடிய நிப்பாட்டுங்றது ரொம்ப தப்புடா!" என்றது ரகுநாதன்.
            "தப்புதாண்ணே! வுட்டுடலாம்ணே!" என்றது மாணிக்கவிநாயகம்.
            "ஏலேய் தங்கமுத்தேய்ய்! இத்தாம் கடெசி. ஒழுங்கு மரியாதியா இருந்துக்கோணும். ல்லே இத்தாம் நடக்கும் பாத்துக்கோ!" என்ற ரகுநாதன் கட்டைக்கழியை செல்லையன் கடைக்கு மேலே வீசியெறிந்தது. புல்லட்டில் ஏறி உட்கார்ந்தது. அஞ்சு நிமிஷ நேரத்துக்கு ஆக்ஸிலேட்டரை முறுக்கி விட்டு பட் பட் என்ற புல்லட் சத்தத்தோடு எல்லாரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தது. எல்லாரும் பயந்த மங்கலமாய் நின்றார்கள். அதற்குப் பின்தான் புல்லட்டைக் கிளம்பிக் கொண்டு ரகுநாதன் வீட்டுக்குப் போனது. செய்தி நாலா திசைகளிலும் பரவி பெருங்கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது.
            மாணிக்கவிநாயகம் ரத்தம் சொட்ட சொட்ட கடைத்தெரு முக்கத்தில் வந்து நின்றது. அப்போதுதான் அப்பா மாணிக்கவிநாயகத்தைப் பார்த்தது. சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு மாணிக்கவிநாயகத்தை நோக்கி ஓடியது அப்பா. அதற்குள் செல்லையன் கடைக்குள் கிடந்த சாமி.தங்கமுத்துவை வெளியே தூக்கிக் கொண்டு வந்து, மாணிக்கவிநாயகத்தையும் இழுத்து டயர் வண்டியில் போட்டுக் கொண்டு ஆஸ்பிட்டலுக்கு விரைந்தனர் தங்கமுத்துவின் ஆட்கள்.
            ஓடிப் போய் அதிர்ச்சியில் நின்ற அப்பா எந்தப் பக்கம் நகர்வதென்று புரியாமல் அப்படியே சிலை போல நின்றது.
*****

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...