28 May 2019

கம்பு வாத்தியாரின் சிஷ்யப் புள்ள!



செய்யு - 98
            திட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்சி ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பழகுவார்கள். பேச்சு வழக்கில் தி.மு.க.வை அய்யா கட்சி என்றும், அ.தி.மு.க.வை அம்மா கட்சி என்றும் சொல்வார்கள். கட்சி வேலை செய்யாவிட்டாலும், அந்தக் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாவிட்டாலும் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுகிறார்களோ அவர்கள் அந்தக் கட்சி என்று வகை பிரித்து விடுவார்கள்.
            அந்த வகையில் மாணிக்கவிநாயகம் அம்மா கட்சியில் இருந்தது. கட்சி வேலைகளை எடுத்துப் போட்டு செய்வதில் மாணிக்கவிநாயகத்தை அடித்துக் கொள்ள முடியாது. அப்படி வேலை பார்க்கும். அத்துடன் மாணிக்கவிநாயகம் கட்சிப் பொறுப்பிலும் இருந்தது.
            வாத்தியார்மார்களைப் பொருத்த வரை கேட்காமலே ஊரில் அவர்களை அய்யா கட்சி என்று சொல்லி விடுவார்கள். அப்பா இதனால் அய்யா கட்சியின் வகையில் வந்தது. அதற்காக எந்த வாத்தியார்மாரும் கட்சி வேலைகளில் இறங்கியெல்லாம் வேலை செய்ய மாட்டார்கள்.  தங்கள் ஓட்டுகளை அவர்கள் அய்யா கட்சிக்குதான் போடுவார்கள் என்பதால் அவர்கள் அய்யா கட்சியைச் சார்ந்தவர்கள். ஊரில் இப்படி கட்சி ரீதியான முத்திரை இல்லாமல் யாரையும் குறிப்பிட மாட்டார்கள். பேச்சு வாக்கில், "அவ்வேம் அய்யாக்கட்சிக்காரம்ல!", "அவ்வேம் அம்மாக்கட்சிக்காரம்ல!" என்றாலும் யாரையும் யாரும் கட்சியைக் காரணம் காட்டி ஒதுக்கி விட மாட்டார்கள். தேர்தல் நேரங்களில் இந்தப் பேச்சுகளில் தீவிரமும், வெக்கையும் இருந்தாலும், தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்து ஒரு வாரம் ஆகி விட்டால் யார் எந்தக் கட்சி என்று தெரியாத அளவுக்கு ஒருத்தர் மேல் ஒருத்தர் விழுந்து புரளாத குறையாகப் பழகுவார்கள்.
            இப்படியாக, மாணிக்கவிநாயகம் அம்மா கட்சியில் இருந்தாலும், அப்பா அய்யா கட்சியின் வகைமையிலும் வந்தாலும் கட்சி ரீதியாக அவர்கள் எதையும் பேசிக் கொண்டதில்லை. பழக்க வழக்கத்தில் அவ்வளவு கெட்டி. நீங்கள் ஏன் அம்மா கட்சியில் இருக்கிறீர்கள் என்று மாணிக்கவிநாயகத்தை அப்பாவோ, நீங்கள் ஏன் அய்யா கட்சியில் இருக்கிறீர்கள் என்று அப்பாவை மாணிக்கவிநாயகமோ கேட்டுக் கொள்ள மாட்டார்கள்.
            அதனால் கட்சி ரீதியான அடிதடிகள் அதுவரை திட்டைக்கு வந்ததில்லை. முதல் முறையாக அப்படிப்பட்ட அடிதடி மாணிக்கவிநாயகம் அடிவாங்கி ரத்தம் சொட்ட சொட்ட நின்ற அன்றும் அதற்கு முன் ரெண்டு நாளுக்கு முன்பும்தான் நடந்தது. அதையும் கட்சி ரீதியான அடிதடி என்ற வகைக்குள் கொண்டு வர முடியும் என்று சொல்ல முடியாத அளவுக்கு கொஞ்சம் சிக்கல் நிறைந்தது. இருந்தாலும் முழுமையாகப் படித்து விட்டு நீங்களே அது பற்றி ஒரு முடிவு செய்து கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். 
            அந்த அடிதடியின் ஆரம்பத்துக்கும், கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலும் தோன்றுகிறது, இருப்பது போலும் தோன்றுகிறது. அடித்தவரும், அடிபட்டவரும் கட்சி ரீதியாக எதிரெதிர் கட்சியில் இருந்ததால் அது கட்சி ரீதியான அடிதடியாக பெயர் கொண்டதோ என்னவோ! மறுபடியும் சொல்வதென்றால், அந்த அடிதடியின் ஆரம்பமும், முடிவும் எப்படி இருந்தது என்பதைப் பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்வதுதான் சரியாக இருக்கும்.
            இன்னும் சொல்லப்போனால் அந்த அடிதடி ஒரு கட்சிக்குள் ஆரம்பித்து இரண்டு எதிரெதிர்க் கட்சியின் சண்டையாக ஆகிப் போனது.
            திட்டைப் பஞ்சாயத்துக்கு உட்பட்டப் பகுதிக்கு அய்யாக் கட்சியைச் சார்ந்த ரகுநாதன் குடும்பம் செல்வாக்கு. உள்ளாட்சித் தேர்தல் என்று ஆரம்பித்து நடந்த எல்லா தேர்தல்களிலும் ரகுநாதன் குடும்பமே பிரசிடென்டாக இருந்து வந்திருக்கிறது. ரகுநாதன் அப்பா காலத்தில் அவர் பிரசிடெண்ட் என்றால், இப்போது ரகுநாதன் காலத்தில் அவர் பிரசிடெண்ட். அப்படி ஒரு செல்வாக்கு அவர்களின் குடும்பத்திற்கு ஊரில் இருந்தது. ரகுநாதனுக்கு ஒரு தம்பி. ஒரே தம்பி என்றால் ரகுநாதனுக்கு உயிருக்கு உயிரான பாசக்கார தம்பி. தம்பி என்றால் உயிரை விட்டு விடும். அந்தத் தம்பி கிள்ளிவளவனுக்குப் பிரசிடென்ட் ஆக வேண்டும் என்ற ஆசை. அண்ணன் ரகுநாதனிடம் கேட்டிருந்தால் தம்பிக்காக அதைத் தூக்கி எறிந்திருக்கும். 
            தம்பி கிள்ளிவளவனுக்குப் புத்தி வேறு மாதிரி வேலை செய்தது. ஒரே கட்சியில் இருந்த கொண்டு இரண்டு பேரும் எப்படி பிரசிடெண்ட் தேர்தலுக்குப் போட்டிப் போட முடியும்? அதுவும் ஒரே கட்சியில் இருந்து அண்ணனுக்கு எதிராக எப்படிப் போட்டியிடுவது? ஆனால் போட்டியிட்டுதான் பிரசிடெண்டாக வேண்டுமே தவிர, யாரும் தூக்கிக் கொடுத்து பிரசிடெண்ட் ஆகக் கூடாது என்ற நினைப்பில் இருந்திருக்கிறது கிள்ளிவளவன்.
            அதன் தொடர்ச்சியாக கிள்ளிவளவன் செய்ததுதான் ஊரு உலகத்தையே திருப்பிப் போட்டது போல ஆகி விட்டது. கிள்ளிவளவன் அய்யா கட்சியை விட்டு அம்மா கட்சிக்கு மாறியது. ஊரெல்லாம் அப்போது இதே பேச்சாக இருந்தது. ஊரையே அய்யா கட்சிக்கு மாற்றிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்திலிருந்து அம்மா கட்சிக்கு கிள்ளிவளவன் மாறினால் அதைப் பற்றி எப்படிதான் பேசாமல் இருக்க முடியும்?
            தம்பி இப்படிக் கட்சி மாறியதில் ரகுநாதனுக்கு ரொம்பவே மனத்தாங்கல்தான். ஏற்கனவே அவர்களின் குடும்பத்தில் சில பல மனத்தாங்கல்கள் இருந்து கிள்ளிவளவன் வீட்டை விட்டுப் போயிருந்ததால், இது பற்றிக் கிள்ளிவளவனிடம் பேச ரகுநாதனுக்கு தயக்கமாக இருந்தது. கட்சிக்காரர்களும் இது குறித்து ரகுநாதனிடம் பேசி சங்கடப்படுத்த விரும்பவில்லை. ரகுநாதனே கட்சிக்காரர்களிடம் இது குறித்துக் கட்சிக்காரர்களிடம் பேசினால், "உங்கள தெரியாதண்ணே! எல்லாந் புரியுதுண்ணே! ஒங்க தம்பிக்குப் புடிச்சா மொயலுக்கு முணு கால்தாம்ண்ணே! பாத்துக்கலாம் வாங்க!" என்றார்கள் கட்சிக்காரர்கள்.
            கிள்ளிவளவனின் கணக்கு அம்மா கட்சியில் சேர்ந்து அண்ணன் ரகுநாதனை எதிர்த்து பிரசிடெண்டுக்கு நின்று பிரசிடெண்டாக ஆக வேண்டும் என்பதுதான். அதற்காகதானே பாரம்பரியமான அய்யா கட்சியிலிருந்த குடும்பத்திலிருந்த அம்மா கட்சிக்கு மாறியது கிள்ளிவளவன்! அய்யா கட்சியின் செல்வாக்கான ஆளாக இருந்த சாமி.தங்கமுத்துவுக்கு இது பிடிக்கவில்லை. சாமி.தங்கமுத்துவுக்கு தாம்தான் பிரசிடெண்ட் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற ஆசை. இதனால் சாமி.தங்கமுத்துவுக்கும், கிள்ளிவளவனுக்கும் முட்டிக் கொண்டது. முதலில் சாதாரணமான புகைச்சலாக ஆரம்பித்த இப்பிரச்சனை வாய்த் தகராறாக மாறி, அடிதடி தகறாராக மாறியது. இந்தச் சாமி.தங்கமுத்துவின் விசுவாசமான ஆளாக மாணிக்கவிநாயகம் இருந்தது.
            இப்போது நடந்து கொண்டிருந்த அடிதடிக்குத் தோற்றுவாய் இப்படித்தான் ஆரம்பித்தது.
            இப்போது நடக்கும் அடிதடிக்குச் சரியாக ரெண்டு நாட்களுக்கு முன்பாக திட்டை கடைத்தெரு முக்கத்தில் அம்மா கட்சியின் கொடியேற்றம் நடந்த போது மைக் செட்டெல்லாம் வைத்த பிரமாதமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது கிள்ளிவளவனின் நெருக்கமான ஆள் ஒருவர் மைக் பிடித்த போது, 'வருங்கால பிரசிடெண்ட் கிள்ளிவளவன் அவர்களே!' என்று கிள்ளிவளவனை விளித்திருக்கிறார். உடனே சாமி.தங்கமுத்துவின் நெருக்கமான ஆள் ஒருவர் மைக்கை உடனடியாகப் பிடுங்கி, "உண்மையான வருங்கால பிரசிடெண்ட் அண்ணன் சாமி.தங்கமுத்து அவர்கள்தான் என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் இந்த மாபெரும் கோடியேற்ற விழாவிலே தொண்டர் படை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்!" என்று பேசியிருக்கிறார்.
            அடுத்த பிரசிடெண்ட்டு தேர்தலுக்கு கட்சியின் சார்பாக யார் நிற்பது? என்று வாய் தகராறு ஆரம்பித்தது. கிள்ளிவளவனின் ஆட்கள் கிள்ளிவளவன்தான் அடுத்த பிரசிடெண்ட் என்றும், சாமி.தங்கமுத்துவின் ஆட்கள் சாமி.தங்கமுத்துதான் அடுத்த பிரசிடெண்ட் என்றும் கோஷமிட, "நம்மள எதுத்து நம்ம கட்சியிலயே எவம்டா பிரசிடெண்டுக்கு நிக்க முடியும்?" என்று கரகர குரலில் முழங்கியது சாமி.தங்கமுத்து.
            "கட்சின்னா யாரு வேணாலும் எந்த பதவிக்கு ‍வேணாலும் மனு கொடுக்கலாம். கட்சித் தலமதான் யாரு நிக்கணும், நிக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணணும்!" என்று கட் அண்ட் ரைட்டாக பேசியது கிள்ளிவளவன்.
            "ஓ! அட எங் கருமத்தே! அந்த அளவுக்கு வந்துச்சா! எடுங்கடா கட்டய! நானா? அவனான்னு பாத்துடுவோம்!" என்று சாமி.தங்கமுத்து எங்கேயோ கிடந்த கட்டைக்கழி ஒன்றை எடுத்து வந்து கடைத்தெரு நடுமுக்கத்தில் வைத்து கிள்ளிவளவனை நடுமண்டையில் ஒரு போடு போட்டது. அடித்த அடியில் கிள்ளிவளவன் கேராகி ரத்தம் சொட்ட சொட்ட தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டது. அதற்குப் பின்தான் ரெண்டு பக்கமாக பிரிந்து வாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்த கூட்டம் ஒருவாறாக சுதாரித்து சாமி.தங்கமுத்துவைப் பிடித்துக் கொள்ள, கிள்ளிவளவனை அந்த நேரத்தில் வந்த எட்டாம் நம்பர் பஸ்ஸில் தூக்கிப் போட்டுக் கொண்டு ஆஸ்பிட்டலுக்கு ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த தடி கொண்டு அடித்த அடிதடிச் சம்பவம் அவ்வளவு வேகத்தில் நடந்து முடிந்து, ரெண்டு நாட்கள் கழித்து வேறு விதமாகப் பற்றியது.
            இது ஒரு கட்சி உள்விவகாரப் பிரச்சனை, ஏதோ பேசித் தீர்த்துக் கொள்வார்கள் என்றுதான் ஊரில் ரெண்டு நாட்களாய்ப் பேசிக் கொண்டார்கள்.
            ஆனால் ரெண்டாம் நாள் கருக்கலில்... அதாவது அப்பா மாணிக்கவிநாயகத்தை அழைத்துக் கொண்டு கல்யாண விசயமாக லாலு மாமாவிடம் பேசலாம் என சைக்கிளில் கிளம்பிய நேரத்தில்...
            கிள்ளிவளவனின் அண்ணன் ரகுநாதன் தம்பியைக் கடைத்தெரு முக்கத்தில் வைத்து அடித்ததுக்குப் பழி வாங்கும் விதமாக, டீக்கடைக்கு டீ குடிக்க வந்த சாமி.தங்கமுத்துவை தனியொரு ஆளாக வந்து திட்டையின் கடைத்தெரு முக்கத்தில் வைத்து வெளுத்து வாங்கியது. ரகுநாதன் சண்டையில் பலே ஆள். கம்புச் சண்டையில் ஊரே திரண்டு வந்தாலும் ஒத்த ஆளாய் நின்று சமாளிக்கும்.
            சிலம்பம் கற்றுக் கொள்வதற்காகவே மூலங்கட்டளை கம்பு வாத்தியார் வீட்டில் தங்கி, கம்பு வாத்தியாருக்கு அத்தனைப் பணிக்கைகளையும் செய்து கொடுத்து வித்தையைக் கற்றுக் கொண்ட ஆள் ரகுநாதன். அத்தனைப் பணிக்கைகளையும் என்றால்... கம்பு வாத்தியாரின் சட்டை, துணிமணிகள், கோவணம் உட்பட துவைத்துப் போட்டு வித்தையைப் பிடித்த ஆள் அது. ரகுநாதன் குடும்பம் இருந்த நிலைக்கு அது அந்த அளவுக்கு கம்பு வாத்தியாருக்காக இறங்கிப் பணிக்கை செய்திருக்க வேண்டியதில்லைதான். ரகுநாதனுக்கு கம்பு வித்தை மேல் அவ்வளவு பிரியம் இருந்தது. அதனால் கம்பு வாத்தியார் மேல் அதுக்கு அவ்வளவு பக்தி ஆகி விட்டது. இதனால் இதனால்... அதனால் அதனால்... கம்பு வாத்தியாருக்கும் ரகுநாதன் மேல் அம்புட்டுப் பிரியம் உண்டாகி விட்டது. கம்பு வித்தையின் அத்தனை சூட்சமங்களையும், அத்தனை நெளிவு சுளிவுகளையும், ஏமாற்றி அடிக்கும் அத்தனை ரகசியங்களையும் சொல்லிக் கொடுத்து விட்டார் கம்பு வாத்தியார்.
            பொதுவாக கம்பு வாத்தியார்கள் கம்புச் சுற்ற கற்றுக் கொள்ள வரும் எல்லாருக்கும் எல்லா வித்தைகளையும் சொல்லிக் கொடுத்து விட மாட்டார்கள். பொதுவாக கம்புச் சுற்றக் கற்றுக் கொடுத்து விட்டு, ரெண்டு மூன்று சூட்சமங்களைச் சொல்லிக் கொடுத்து விட்டு அனுப்பி விடுவார்கள். அவர்களைப் பொருத்த வரையில் கம்பு வித்தையின் எல்லா சூட்சமங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் குருபக்தி அந்த அளவுக்கு இருக்க வேண்டும். அந்த அளவுக்கு குருபக்தியோடு இருந்து ரகுநாதன்தான் அத்தனை வித்தைகளையும் கற்றுக் கொண்டது.
            இப்போதும் தலைக்கு மேல் என்ன வேலை இருந்தாலும் வியாழக் கிழமை என்றால் கம்பு வாத்தியாரின் வீட்டுக்கு பொட்டுக்கடலை, சர்க்கரை, பூ, ஊதுவத்தி, விபூதி, சந்தனம், குங்குமம் எல்லாம் வாங்கிக் கொண்டு போய் கம்புக்குப் போடும் பூசையை முடித்துக் கொண்டுதான் வரும் ரகுநாதன். தீபாவளி, பொங்கல் என்றால் தாம்பாளத் தட்டில் வாத்தியாருக்கும், வாத்தியாரின் குடும்பத்துக்கும் சட்டை துணிமணிகள் எடுத்துக் கொண்டு போய், அதன் மேல் நூறு ரூபாய் நோட்டை வைத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு வரும்.
            இந்தச் சுற்றுவட்டாரத்தில் கம்புச் சுழற்றுவதில் மூலங்கட்டளை கம்பு வாத்தியார்தான் கில்லி. அவருக்கு அடுத்தபடி ரகுநாதன்தான் அதில் கில்லி. கம்பு வாத்தியாரின் அத்தனை ரகசிய கம்பு வித்தைகளையும் தெரிந்த ஒரே ஆள் ரகுநாதன். அத்தோடு கம்பு வாத்தியார் மான் கொம்பு வைத்துக் கொண்டு ஆடுவது, கம்பிச் சுருளை வைத்துச் சுற்றுவதையும் ரகுநாதனுக்கு மட்டும்தான் கற்றுக் கொடுத்திருந்தார். அப்படிப்பட்ட ஆள் கட்டையைச் சுழற்றிக் கொண்டு களத்தில் இறங்கினால் எப்படி இருக்கும்? அது கட்டையைச் சுழற்றிய வேகத்தில் யாரும் கிட்டத்தில் நெருங்க முடியவில்லை. கடைத்தெருவுக்கு வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
            ரகுநாதன் சாமி.தங்கமுத்துவை வெளுத்து வாங்கும் செய்தியறிந்து கட்சி ஆட்கள் திட்டை கடைத்தெரு முக்கத்தில் கூட ஆரம்பித்தார்கள். யார் நெருங்கிப் போய் ரகுநாதனைத் தடுத்து சாமி.தங்கமுத்துவைக் காப்பாற்றுவது என்று தெரியவில்லை. யார் சாமி.தங்கமுத்துவை நெருங்கினாலும் ரகுநாதனின் கட்டையடி நெருங்குபவருக்கு வசமாக விழும் என்ற நிலை. அதுவும் ரகுநாதனிடம் அடி வாங்கி எழுந்து நடமாடுவது அத்தனை சாமானியமா என்ன? அப்படி வர்மம் பார்த்து அடிக்கும் ரகுநாதன் என்பது ஊரறிந்த ரகசியம். எல்லாரும் எட்ட நின்று வேடிக்கைதான் பார்த்தார்கள். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மாணிக்கவிநாயகம்தான் சாமி.தங்கமுத்துவை நெருங்கி அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டது.
            "டேய் மாணிக்கநாயகம் அவனே வுட்டுடு. அவ்வேம் இன்னிக்கு எங் கையால அடிவாங்கிச் சாகப் போறாம்ல. நீயி சம்பந்தம் யில்லாம சிக்கிச் சின்னபின்னமாயிடாத. அவன காப்பாத்தம்னு நெனச்சு நீயி அடிவாங்கிச் செத்திடாத." என்று கட்டையைச் சுழற்றி அடித்ததைக் குறைக்காமல் அடித்துக் கொண்டிருந்தது ரகுநாதன்.
            மாணிக்கநாயகம் சாமி.தங்கமுத்துவைக் கட்டிப் பிடித்ததை விடவில்லை. ரகுநாதனின் அத்தனைக் கட்டை அடிகளும் மாணிக்கநாயகத்தின் முதுகில் விழுந்து கொண்டிருந்தன. மாணிக்கவிநாயகம் அப்படியே கட்டிப்பிடித்தபடியே தரையில் உருண்டு கொண்டு போய் தென்னண்டைப் பக்கம் இருந்த செல்லையன் மளிகைக்கடையின் உள்ளே தங்கமுத்துவைத் தள்ளி கதவைப் போட்டு பூட்டிக் கொண்டு, கதவுக்கு வெளியே நின்றது. மாணிக்கவிநாயகம் இடையில் புகுந்து தடுக்கவில்லையென்றால் சாமி.தங்கமுத்து அன்று கண்டமாகியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
            ரகுநாதன் கட்டைக்கழியைச் சுழற்றியபடிச் செல்லையன் கடையை நெருங்கி வந்தது.
            "வேணாம்ணே! உங்ககிட்ட அடிவாங்கி உசுரு பொழக்க முடியாது. அதுவும் அடிச்சுது, நீங்களும் அடிச்சிட்டீங்க. இத்தோட முடிச்சிக்கலாம்ணே. தாயா புள்ளய பழகிட்டு இத்தெல்லாம் வேணாம்ணே. நடந்தது நடந்து போச்சி. நாளிக்கு ஒருத்தரு முகத்துல ஒருத்தரு முழிக்கணும்ணே." என்று மாணிக்கவிநாயகம் கையெடுத்துக் கும்பிட்டது.
            "நீயி ஏம்டா அவனே அடிக்கிறப்ப குறுக்க வந்து பாயுறேங்றேம்? அடிதடில எறங்குறது தப்புடா! எறங்கிப்புட்டு பெற்பாடு அடிதடிய நிப்பாட்டுங்றது ரொம்ப தப்புடா!" என்றது ரகுநாதன்.
            "தப்புதாண்ணே! வுட்டுடலாம்ணே!" என்றது மாணிக்கவிநாயகம்.
            "ஏலேய் தங்கமுத்தேய்ய்! இத்தாம் கடெசி. ஒழுங்கு மரியாதியா இருந்துக்கோணும். ல்லே இத்தாம் நடக்கும் பாத்துக்கோ!" என்ற ரகுநாதன் கட்டைக்கழியை செல்லையன் கடைக்கு மேலே வீசியெறிந்தது. புல்லட்டில் ஏறி உட்கார்ந்தது. அஞ்சு நிமிஷ நேரத்துக்கு ஆக்ஸிலேட்டரை முறுக்கி விட்டு பட் பட் என்ற புல்லட் சத்தத்தோடு எல்லாரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தது. எல்லாரும் பயந்த மங்கலமாய் நின்றார்கள். அதற்குப் பின்தான் புல்லட்டைக் கிளம்பிக் கொண்டு ரகுநாதன் வீட்டுக்குப் போனது. செய்தி நாலா திசைகளிலும் பரவி பெருங்கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது.
            மாணிக்கவிநாயகம் ரத்தம் சொட்ட சொட்ட கடைத்தெரு முக்கத்தில் வந்து நின்றது. அப்போதுதான் அப்பா மாணிக்கவிநாயகத்தைப் பார்த்தது. சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு மாணிக்கவிநாயகத்தை நோக்கி ஓடியது அப்பா. அதற்குள் செல்லையன் கடைக்குள் கிடந்த சாமி.தங்கமுத்துவை வெளியே தூக்கிக் கொண்டு வந்து, மாணிக்கவிநாயகத்தையும் இழுத்து டயர் வண்டியில் போட்டுக் கொண்டு ஆஸ்பிட்டலுக்கு விரைந்தனர் தங்கமுத்துவின் ஆட்கள்.
            ஓடிப் போய் அதிர்ச்சியில் நின்ற அப்பா எந்தப் பக்கம் நகர்வதென்று புரியாமல் அப்படியே சிலை போல நின்றது.
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...