நம்ம நண்பர்களில் ஒருத்தன் வெளங்காமண்டையன்.
இப்படியெல்லாம் பேர் வைப்பார்களா? என்று உங்களுக்கு நம்பிக்கையிருக்காது என்பது தெரியும்.
பேர் அப்படி வைத்து விட்டார்களே என்ன செய்வது!
அவன், அதாங் அந்த நண்பன் பிறந்த போது
அவன் தலை விளாங்காயைப் போல மண்டையில் பொட்டு மயிர் கூட இல்லாமல் வழுவழுவென்று அழகாக
இருந்திருக்கிறது. இப்படி விளாங்காய் மண்டையோடு பிறந்தவனுக்கு விளாங்காய் மண்டையன்
என்றுதானே பேர் வைக்க முடியும். அப்படித்தான் அவனுக்கு விளாங்காய் மண்டையன் என பேர்
வைத்து... அது காலப்போக்கில் மருவி வெளங்காமண்டையனாகி விட்டது.
அட்டென்டென்ஸ், செர்டிபிகேட் எல்லாவற்றிலும்
அவன் விளாங்காய்மண்டையன்தான். ஊரில், சமூகத்தில் மற்றும் நாங்கள் கூப்பிடும் போது
மட்டும் வெளங்காமண்டையன் ஆகி விடுகிறான். அப்படி, இப்படி என எப்படிப் பார்த்தாலும்
அவனது முதலெழுத்து ஆங்கிலத்தில் 'வி'தான் இல்லையா. அதில்தான் நண்பனுக்கு வந்தது பிரச்சனை.
உள்ளபடியே வெளங்காமண்டையனுக்கு இன்ஜினியரிங்கில்
செமத்தியான அறிவு. அப்போது அதற்கு என்ட்ரன்ஸ் அது இது என்று ஏகப்பட்ட மண்ணாங்கட்டியெல்லாம்
எழுதித் தேர்வானவனுக்கு பேர் 'வி' வரிசையில் வந்ததில் ரேண்டம் எண்ணில் ஏதோ பிசகிப்
போய் இன்ஜினியரிங்கில் சேர முடியாமல் போய் விட்டது. இந்த ஏமாற்றமும், அதனால் உண்டான
ஆத்திரமும் நண்பனுக்கு நெடுநாள் நீடித்திருந்தது. எல்லாம் இங்கிலிஷ் அல்பெட்டில் கிட்டதட்ட
கடைசியில் போய் விட்ட 'வி'இல் பேர் வைத்த வெளங்காத்தனம் என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நாள் மூஞ்சுக்கு சேவிங் பண்ணாமல்,
முடி வெட்டாமல் திரிந்து கொண்டிருந்த வெளங்காமண்டையன் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜில்
சேர்ந்த படித்து, குரூப் எக்ஸாமில் செலக்ட் ஆகி ஏதோ ஆபிஸரானான்.
ஆபிஸரானதும் முதல் வேலையாகக் கல்யாணம்
செய்து, குழந்தையைப் பெற்று முடித்தான். பெற்று முடித்ததும் எங்கள் எல்லாருக்கும் பத்திரிகை
வைத்து பிள்ளைக்குப் பெயர் சூட்டு விழா நடத்தினான். என்ஜினியரிங்கில் 'வி' இல் தன்
பெயரால் வாய்ப்பை இழந்ததால்... தன் மகனுக்கு அல்பபெடிக்கலாக ஏ,பி,சி,டி-யில் ஆரம்பிக்குமாறு
அன்புபாகன்சித்ரதேவ் என்று ஏ,பி,சி,டி- என்று நான்கு அல்பெபெட்டுகளில் ஆரம்பிக்கும்
வகையில் நான்கு பெயர்களை ஒன்றாகச் சேர்த்துச் சூட்டினான். எப்படியும் தன் சீமந்தப்
புத்திரனுக்கு பேர் ஆரம்பிக்கும் எழுத்தால் ரேண்டம் எண் அலேகஷனில் எந்தப் பிரச்சனையும்
வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படிப் பெயர் சூட்டியதாக அந்தப் பெயர் சூட்டு
விழாவில் ஒரு பெரிய வியாக்கியானமே சொல்லி முடித்தான்.
அவனுக்குப் பேர் வைத்த நேரமோ என்னவோ...
அன்புகாகன்சித்ரதேவ் வளர்ந்து இன்ஜினியரிங் படிக்க வரும் காலத்திற்கு முன்பாகவே தமிழகத்தின்
மூலை முடுக்கெல்லாம் இன்ஜினியரிங் காலேஜ் ஆரம்பிக்கப்பட்டு, அட்மிஷனே காற்றாட ஆரம்பித்து
விட்டது.
நான் ஒருத்தன் மட்டும்தான் அன்புபாகன்சித்ரதேவைப்
பார்க்க போகும் போது அவனது இன்ஜினியரிங் ஆர்வத்தை வளர்க்கும் விதத்தில் டிசைன் டிசைனாக
வீடு கட்டும் விளையாட்டு சாமான்களாலான மாடல்கள் இருக்கிறதே, அதை வாங்கிப் போகிறேன்.
வெளங்காமண்டையனைக் கேட்டால் தன்னுடைய தவமாய்த்
தவமிருந்துப் பெற்ற புத்திரனை இன்ஜினியரிங்கைத் தவிர வேறு எதைப் படிக்க வைக்கவும் தயார்
என்கிறான்.
பாவம் அன்புபாகன்சித்ரதேவ்! நான் ஒருத்தன்
மட்டும் அவனுக்கு இன்ஜினியரிங் ஆர்வத்தை ஊட்டினால் போதுமா?! வெளங்காமண்டையனிடம் நீங்களும்
கொஞ்சம் எடுத்துச் சொல்லலாம் இல்லையா!
*****
No comments:
Post a Comment