29 May 2019

மேனி கருத்த சைக்கிள்



செய்யு - 99
            'தலைவர்கள் கெத்து காட்டி முடிந்ததும் தொண்டர்கள் சும்மா இருப்பதில்லை. அவர்கள் தலைவர்களைத் தொடர்ந்து தங்களின் கெத்தை காட்ட நினைக்கிறார்கள். தலைவர்கள் சண்டை போட்டால் போதுமா? தொண்டர்கள் என்ன பாவம் செய்தார்கள்! அவர்களும் சண்டை போட வேண்டாமா?
            தலைவர்கள் ஒரு பங்கு அளவுக்குச் சண்டை போட்டால் தலைவர்களிடம் இருக்கும் தங்கள் விசுவாசத்தைக் காட்ட தொண்டர்கள் நூறு பங்கு அளவுக்குச் சண்டை போடுகிறார்கள். தலைவர்களின் ஒரு பங்கு சண்டை அப்போது தொண்டர்களின் கலவரமாக வெடிக்கிறது.'
                                                                                    - நவீன சாணக்கியம்
            இப்போது நிலைமையைப் பாருங்கள்!
            கடைத்தெரு முக்கத்தில் அடித்துப் போட்ட ரகுநாதன் வீடு போயிருந்தார். அடிவாங்கிய சாமி.தங்கமுத்தும், மாணிக்கவிநாயகமும் ஆஸ்பிட்டலில் இருந்தனர். கூடியிருந்த பெருங்கூட்டத்துக்கு அமைதியாகக் கலைந்து போகும் எண்ணம் இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
            "எலேய் இந்தச் செல்லையன் கடை மட்டும் இல்லீன்னா இன்னிக்கு அந்த தங்கமுத்துவுக்கு செரியான சம்பவம் ஆயிருக்கும்டா!" என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்ததுதான் தாமதம்.
            "எதுக்குடா செல்லையன் இதுக்குலாம் எடம் கொடுக்குறாம்?" என்று அடுத்தக் குரல் எழுந்தது. அவ்வளவுதான். அதற்குப் பின் குரல் எதுவும் எழவில்லை. செல்லையன் கடை மீது ஒரு கல் விழும் சத்தம் கேட்டது. ஒரு கல் பல கற்களாக மாறி செல்லையன் கடை மீது தொடர்ச்சியாக விழும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. செல்லையன் கடையில் விழுந்து கொண்டிருந்த கற்கள் படிப்படியாக முக்கத்தில் இருந்த ஒவ்வொரு கடையாக விழ ஆரம்பித்தன. கடைகளில் விழ ஆரம்பித்த கற்கள் சுற்றியிருந்த கூட்டத்தின் மேலும் விழ ஆரம்பிக்க கூட்டம் சிதற ஆரம்பித்தது.
            கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும் எதற்காகக் கற்கள் எறிகிறோம் என்று தெரியாமல் கற்களை எடுத்து கண்ட மேனிக்கு எதிரில் படுபவைகள் மேல் வீசி எறிய ஆரம்பித்தனர். கூட்டத்தின் மையத்தில் சிக்கிக் கொண்டிருந்த அப்பாவுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. அவர் கண்களைச் சுழல விட்டு தன் சைக்கிளைப் பார்க்க முயன்றார். அவரால் தன் சைக்கிளைப் பார்க்க முடியவில்லை. வலது கை புறமாக நகர்ந்து போய் பார்த்தால் சைக்கிள் கண்ணில் படும் என்று தோன்றியது. வலது கை புறமாக நகர்ந்தால் கல்லடி பலமாகப் படும் என்பது புரிந்தது. தற்போது கல்லடியிலிருந்து தப்பினால் போதும் என்று அப்பாவுக்குத் தோன்றியிருக்க வேண்டும். இடது கை புறமாக தப்பித்தோம் பிழைத்தோம் என்று நகர ஆரம்பித்தது அப்பா. ரத்தக்காவு இல்லாமல் வீடு போய்ச் சேர முடியுமா என்ற பயம் அப்பாவை ஆட்டிப் படைத்தது.
            கிட்டதட்ட எல்லா பக்கமும் கூட்டம் ரெளண்ட்டு கட்டி கூடியிருந்தது. அப்படியே இருபது அடி தூரம் ஆட்களைத் தள்ளிக் கொண்டு நகர்ந்ததில் ரோட்டுக்கு எதிர்புறம் வடவண்டைப் பக்கம் குட்டை இருந்தது. அந்த ஒரு பக்கத்தில்தான் கூட்டம் சிதறியது போல் கொஞ்சம் கம்மியமாக இருந்தது. கல்லடி படாமல் தப்பிப் போவதற்கு அதுதான் சரியான வழியாகப் பட்டது. குட்டை சேறும், சகதியுமாக வெங்காயத் தாமரை மண்டிக் கிடந்தது. அதற்கு மேல் யோசிக்க விரும்பாமல் அப்பா குட்டையில் இறங்கி சேற்றிலும் சகதியிலும் விழுந்து ஓட ஆரம்பித்தது. அப்பாவைப் போல பத்து பதினைந்து பேர் தப்பித்தோம், பிழைத்தோம் என்று குட்டைக்குள் இறங்கி ஓடிக் கொண்டிருந்தனர். குட்டையின் எதிர்கரையைப் பிடித்து அப்பா ஓட்டமும் நடையுமாய் வீடு வந்து சேர்ந்தது. முழங்கால் வரை சேற்றுடன், வெள்ளை வேட்டி, சட்டையெல்லாம் சேற்றுக் கறைகளோடு வீடு வந்த அப்பாவைப் பார்த்து, "ந்நல்லா போயி, இப்பிடி நாசமா வந்து நிக்குறீங்க?" என்றது அம்மா.
            "ச்சேய்! ன்னா நேரத்துல கெளம்புனனோ! சரியான தடே! மாணிக்கநாயகம் ரத்தச் சாடா நிக்குது. செரி! வூட்டுக்குத் திரும்பிடலாம்னா திரும்ப முடியல. கலவரமாப் போச்சு. ஆளு பொழச்சா போதும்னு ஓடியார்ரேம்! இன்னுஞ் செத்த நேரம் இருந்தா மண்டை ஒடைஞ்சுதாம் வாரணும்!" என்றது அப்பா.
            "நடந்தா போனீங்க?" என்றது அம்மா.
            "சைக்கிள்லதாம் போனேம்! இப்போ சைக்கிளு ன்னா கதியில கெடக்கோ தெரியலயே."
            "நம்ம சைக்கிள யாரு தூக்கப் போறா? நமக்கு தெரிஞ்சவங்க வூட்டுக்கே தூக்கியாந்து போடுறாங்களா ல்லையான்னு பாருங்களேம்!" என்றது அம்மா.
            "ம்ஹூம்!" என்று முறுவலித்தது அப்பா.
            அப்பாவுக்கு அந்த சைக்கிளின் ஞாபகம் பெருக்கெடுத்திருக்க வேண்டும். முதன் முதலாக சம்பாதித்து வாங்கிய சைக்கிள் அது. வைத்தித் தாத்தாதான் தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி வைத்து விசாரித்து வாங்கிக் கொடுத்தது. செகண்ட் ஹேண்டில் வாங்கிய சைக்கிள். சுமாராக பதினைந்து பதினாறு வருடத்துக்கு மேலாக ஓடிக் கொண்டிருநத சைக்கிள். விற்றால் அதிகபட்சம் முந்நூறோ நானூறுக்கோ போகும். ஓட்டிக் கொண்டேயிருந்தால் இன்னும் லட்ச ரூபாய்க்குச் சமனாக காலம் முழுதும் ஓடிக் கொண்டிருக்கும். நல்ல ஓட்டமுள்ள சைக்கிள். ஹேண்டில்பார், ரிம், கேரியரைத் தவிர ஒட்டு மொத்த சைக்கிளிலும் துரு ஏறிய நிறத்தில் இருந்தது அது. அந்த சைக்கிள் எந்த நிறுவனத்தின் சைக்கிள் என கண்டுபிடிக்க முடியாதபடி பிரேம் ஒரு சைக்கிள் கம்பெனியுடையதாகவும், ஹேண்டில்பார் ஒரு சைக்கிள் கம்பெனியுடையதாகவும் இருந்ததாக அப்பா சொல்லும். பிரேமில் டி.ஐ. என்ற குறி இருந்தது. மற்றபடி பிரேமிலோ வேறு எந்த பாகத்திலோ கம்பெனியின் பெயர் பார்க்க முடியாத படி அடர் பழுப்பு நிறத்தில் வண்ணம் பூசியது போல துருதுருவென்று அதன் மேனி முழுவதும் துரு ஏறியிருந்தது.
            கேரியரில் தேங்காய்ப்பூ துண்டை நான்காய் மடித்துப் போட்டு அதில் விகடுவை உட்கார வைத்து அவன் கால்களை சக்கரத்தில் விட்டு விடாதபடி மட்கார்டுக்கு இந்தப் பக்கம் பாதங்களைப் பின்னி விட்ட மாதிரி உட்கார வைத்து அப்பா சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டருக்கு மேலாவது ஓட்டியிருக்கும். அவனது சின்ன வயதில் கடைத்தெரு, வயல், பள்ளிக்கூடம் எங்கு சென்றாலும் அந்தச் சைக்கிளில் உட்கார வைத்து அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் ஏங்கி ஏங்கி ஒரு மாதிரியாக மூச்சை வாங்கிக் கொண்டு அழ ஆரம்பித்தான் என்றால் நாள் பூராவும் நினைத்து நினைத்து அழுது கொண்டிருப்பான். அந்தச் சைக்கிளில் அப்பாவோடு பின்னால் உட்கார்ந்து கொண்டு போக அவனுக்கு அவ்வளவு பிரியம் இருந்தது. அவன் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் விடக் கற்றுக் கொண்டது கூட அந்தச் சைக்கிளில்தான்.
            செய்யுவைச் சிறு பிராயத்தில் அப்பா முன்னால் ஒரு கூடை வைத்து அதில் தூக்கி வைத்து அழைத்துச் சென்றது கூட அந்த சைக்கிளில்தான். அவள் வளர வளர கேரியரில் செய்யுவை வைத்து விகடுவும் அந்த சைக்கிளில் அழைத்துச் சென்றிருக்கிறான். திருவாரூர், மாவூர், கூத்தாநல்லூர், மன்னார்குடி வரை கூட அப்பா அந்த சைக்கிளிலில் போய் வந்திருக்கிறது. அப்பா டிவியெஸ் பிப்டி வாங்கும் வரை அதில்தான் சென்று கொண்டிருந்தது. டிவியெஸ் வாங்கிய பிற்பாடு பத்தாம் வகுப்பு முழுவதும்  வைத்து விகடு அந்த சைக்கிளில்தான் ராட்சச வேகத்தில் பள்ளிக்கூடம் சென்று வந்து கொண்டிருந்தான். நரிவலத்துக்குக் குடும்பமே குடி பெயர்ந்த போது இந்த சைக்கிளும் உடன் போனது. நரிவலத்தில் கலர் கலர் குடங்களைத் தண்ணீர் தூக்குவதற்காகக் கட்டிக் கொண்டு போன போது துரு பிடித்திருந்த இந்த சைக்கிள் வண்ண மயமாகக் காட்சி அளித்தது. எத்தனையோ குடங்களில் தண்ணீரைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
            அக்கம் பக்கம் எங்காவது செல்வது என்றாலோ, கடைத்தெருவுக்குச் செல்வது என்றாலோ விகடு மட்டும்தான் இப்போது அந்தச் சைக்கிளை அவ்வபோது பயன்படுத்திக் கொண்டிருந்தான். அதுவும் அரிதாக ஆடிக்கொரு ஒரு தரமோ, அமாவாசைக்கு ஒரு தரமோ என்பது போல. அவனுக்கு சைக்கிளில் போவதை விட நடந்து போவது அதிகம் பிடித்திருந்ததால் ஏதேனும் அவசர கதிக்கு மட்டும்தான் அந்தச் சைக்கிளை எடுப்பதும் போவதுமாக இருந்தான்.
            சைக்கிளை விட்டு விட்டு வந்தது அப்பாவுக்கு பெருத்த மன உறுத்தலாகவே இருந்தது. கிளம்பிப் போய் எப்படியாவது எடுத்து வந்து விடலாமா என்று கூட அப்பாவுக்குத் தோன்றியது.
            கடைத்தெரு பக்கத்திலிருந்த வந்து கொண்டிருந்த ஆட்கள் கடைத்தெருவே ரத்தக் களறியாக ஆகிக் கொண்டிருப்பதாக பேசிக் கொண்டதைக் கேட்டதும், அம்மாவுக்கு அப்பாவை அனுப்ப மனமில்லை. கொல்லைப் பக்கம் போய் கை, கால்களை அலம்பி வந்த அப்பாவுக்கு சேற்றுக் கறை படிந்த வேட்டியையும், சட்டையையும் கூட மாற்ற மனமில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தது. நீண்ட நேரத்துக்கு உட்கார்ந்த படியே யோசித்துக் கொண்டிருந்தது. முகத்தில் ஏகப்பட்ட சோகம் அப்பியிருந்தது. வீட்டில் எல்லாருக்கும் அப்படிதான் இருந்தது.
            ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் கூடி இதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். ஒரு வீடு தள்ளியிருக்கும் தம்மேந்தி ஆத்தா செய்தி கேள்விப்பட்டு வந்த போது சொன்னது, "ஆளு பொழச்சு வந்தத பெரிசா நெனச்சுக்கோங்கம்பி! டவுன்லேந்து போலீஸ் வந்து எறங்குறதா பேசிக்குறாங்கம்பி! கையடி, காலடி, மண்டயடின்னு ஏகப்பட்ட பேரு ஆஸ்பத்திரில கொண்டு போயி போட்டிருக்கதா பேசிக்கிறத கேட்டீங்களாம்பி?"
            "நீங்க சைக்கிள எடுத்துட்டுப் போனதாம்பா கரெக்ட். டிவியெஸ் வண்டிய எடுத்திட்டுப் போயிருந்தீங்ன்னா ன்னா ஆயிருக்கும் பாத்துக்குங்கப்பா!" என்றாள் செய்யு.
            "சின்ன புள்ளனாலும் வெவரமா சொல்லுது பாருங்க!" என்றது தம்மேந்தி ஆத்தா.
            "ஏம்டி சைக்கிளு போனாலும் போயிட்டுப் போறது. பதினாலாயிரம் ரூவாயாம் டிவியெஸ் வண்டிய போகட்டும்னு சொல்றீயாடி?" என்றது அம்மா.
            "அதத்தாம் சொல்றா ஒம்ம மவ்வே. சைக்கிளோட விட்டுச்சே. வண்டி தப்பிச்சேன்னு. ஏத்தோ தலெய்க்கு வந்தது தலப்பாகயோட போச்சுதுன்னு போங்கம்பி! செத்த ஊரு ஒலகம் அடங்கட்டும். போயிப் பாப்பம். நாம்ம ஒழச்சி வாங்குனது நம்ம கைய்ய வுட்டு எங்க போயிடப் போவுது போங்க!" என்றது தம்மேந்தி ஆத்தா.
            "அந்தப் பக்கமே யாரயும் வுட மாட்டேங்றாங்களாம். மீறிட்டுப் போனா வண்டில ஏத்தி ஸ்டேசனுக்குக் கொண்டு போறாங்களாம். ஒரே போலீஸ் கூட்டமா இருக்காம்!" என்று சொல்லியபடி வந்தது எதிர்வீட்டு தாடி தாத்தா.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...