30 May 2019

ஹார்லிக்ஸ் பாட்டிலில் முடிந்த பஞ்சாயத்து



செய்யு - 100
            திட்டை கடைத்‍தெரு முக்கத்தின் கலவர நிலைமை சற்று சரியான பிறகு அப்பா தாடித் தாத்தாவை அழைத்துக் கொண்டு கடைத்தெரு பக்கம்  போய் தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தது. அருகே நெருங்கிப் போனால் போலீஸ் விசாரிக்கும் என்ற பயம் இருவருக்கும் இருந்தது. கடைத்தெருவே மக்கள் நடமாட்டம் இல்லாமல் துடைத்துப் போட்டது போலிருந்தது. தூரத்திலிருந்து பார்த்த போது சைக்கிளைப் போட்ட இடத்தில் காணவில்லை.
            தாடி தாத்தா அங்கிருந்த அக்கம் பக்கத்து வீட்டில் பேச்சுக் கொடுத்ததில், கடைத்தெருவில் நிறுத்தப்பட்டடிருந்த அத்தனை வாகனங்களையும் போலீஸ் லாரியில் தூக்கிப் போட்டுக் கொண்டு போய் விட்டதாகச் சொன்னார்கள்.
            தாடித் தாத்தாவுக்கும், அப்பாவுக்கும் போலீஸ் ஸ்டேஷன் போய் விசாரித்துப் பார்க்கலாமா என்று தோன்றியது.
            "ஸ்டேசன்ல போயி விசாரிச்சுப் பார்ப்பமா வாத்தியாரே?" என்றது தாடி தாத்தா.
            "இருக்குற நெலமயில விசாரிக்க முடியுமா?" என்றது அப்பா.
            "நாம்ம மட்டும் போனா சரிபட்டு வாராது. ரகுநாதங்கிட்ட காதுல போட்டு அவ்வேம் வழியாப் போனாத்தாம் ஸ்டேசன்ல மரியாதி இருக்கும்! இப்போ போலீஸ் நிக்குறதால ரோட்டுவழியா போக முடியாது. இப்படியே வாய்க்கால வுழுந்து எழுந்திரிச்சி ஏறி, கெழக்கால வயக்காட்டுப் பக்கமா போயி, தெக்க திரும்புனா ரகுநாதம் வீட்டுக்குப் போயிடலாம். அப்படியே ஒரு எட்டுப் போயிட்டு வந்திடலாம் வாத்தியாரே!" என்றது தாடி தாத்தா.
            அப்பாவும், தாடித் தாத்தாவும் வாய்க்காலில் இறங்கி ஏறினார்கள். வாய்க்காலில் கணுக்கால் அளவுக்கு தண்ணீர் இருந்தது. வயக்காட்டு வழியாக நடையைக் கட்டினார்கள். ரகுநாதன் வீட்டில் கூட்டம் பெருங்கூட்டமாக இருந்தது.
            அப்பாவும், தாடித் தாத்தாவும் ரகுநாதனைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும் கூட்டத்தை விலக்கி விட்டு வீட்டுக்குள் அழைத்துப் போனார்கள். ரகுநாதன் அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தது. அப்பாவையும், தாடித் தாத்தாவையும் பார்த்ததும், "நமக்கு என்ன ஏதுன்னு விசாரிக்க வந்துட்டீங்க போலருக்கே! நமக்கு யாருக்கும் ஒண்ணுமில்ல. நம்ம கட்சிப் பயலுக, அந்தக் கட்சிப் பயலுக எல்லாம் சேந்துகிட்டு, நாம்ம இந்தாண்ட வர, அந்தாண்ட பெரச்சின பண்ணிட்டாங்க. பயலுக எல்லாத்தியும் போலீஸூ அரெஸ்ட் பண்ணி மன்னார்குடி கோர்ட்ல ஆஜர் பண்ண கொண்டுட்டுப் போய்ட்டு இருக்காம். அதாங் கெளம்பிட்டு இருக்கேம்."
            ரகுநாதன் வீட்டில் இருந்தவர்கள், "நல்ல நேரத்துல வந்தீங்க வாத்தியாரே! நீங்களாவது கொஞ்சம் சொல்லக் கூடாதா? இப்பே இவ்வேம் மன்னார்குடி போனா அங்கேயே வெச்ச அரெஸ்ட் பண்ணிட மாட்டாங்களா? கொஞ்ச நாளுக்கு தலமறவா ஒறவுக்காரங் வூட்டுல இருடான்னு கேக்க மாட்டேங்றாம்!" என்றதும் அப்பாவுக்கும், தாடி தாத்தாவுக்கும் என்ன சொல்வதென்று புரியவில்லை. இருவரும் மெளனமாக நிற்பதைப் பார்த்ததும் ரகுநாதனே பேசியது, "ஒண்ணும் வெசனப்பட ஏதுமில்ல வாத்தியாரே! இவ்ளோ நேரமும் போனும் கையுமா உக்காந்து நம்ம பெரும்புள்ளிகளயும், வக்கீலுங்களயும் பிடிச்சுப் பேசிட்டேம். இந்த நேரத்துல நாம்ம போகலன்னா சரிபட்டு வாராது."
            ரகுநாதன் கிளம்பி வெளியே வந்தது. ரகுநாதனோடு சேர்ந்து அப்பாவும், தாடித் தாத்தாவும் வந்தார்கள். வெளியே வந்த ரகுநாதன் கூட்டத்தைப் பார்த்து, "யாரும் வூட்டுக்கு முன்னாடி நிக்க வாணாம். போலீஸூ இஞ்ஞ நம்மள தேடி வந்தாலும் வாரும். கலஞ்சி வூட்டுக்குப் போயிடுங்க. நாம்ம இப்போ மன்னார்குடி போறேம். யாரும் நம்ம பின்னாடி வர வாணாம். நாம்ம இப்படியே ஊட்டியாணி, சோத்திரயம் போயி அப்படியே ஓகையூரு, மூலங்கட்டளை வழியா மன்னார்குடி ரோட்டப் பிடிச்சுதாம் போவப் போறேம். நேரா போவப் போறதில்ல. இஞ்ஞ நிக்குறது யாருக்கும் நல்லதில்ல. அரெஸ்ட் ஆனாலும் ஆயிடுவீங்க. வெரசா கலஞ்சிப் போயிடுங்க." என்றது.
            "அப்படிலாம் போக முடியாதுங்க! வூட்டுக்கு முன்னாடிதாம் நிப்பேம். யாரு வந்து அரெஸ்ட் பண்றான்னு பாத்துடறேம். ஒங்களயும் மன்னார்குடி போக வுட மாட்டேம். நம்ம எடம், நம்ம கோட்ட. இத வுட்டுட்டு நாமளே வசமா போயிச் சிக்கிக்கிறதா?" என்றது கூட்டம்.
            "யோவ்! சொன்னா கேட்டுத் தொலங்கய்யா! நம்ம ஆட்க அரெஸ்ட் ஆயி மன்னார்குடி போயிட்டு இருக்கு. நாம்ம‍ போகலன்னா சுத்தப்பட்டு வாராது. இஞ்ஞ யாரும் நிக்க வாணாம். கெளம்பிடுங்க." சொல்லி விட்டு ரகுநாதன் புல்லட்டில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்யப் போனது.
            அதுவரை பெஞ்சில் உட்கார்ந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த கிள்ளிவளவன் ஓடி வந்து, "நாமளும் வாறேம்ணே! ஒங்கள அரஸ்ட் பண்ணி உள்ள போட்டா, இஞ்ஞ எல்லாத்தியும் கவனிக்கிறதுக்கு ஆளில்லண்ணே! நீங்க வெளில இருந்தாத்தாம்ணே நெலமய சமாளிக்க முடியும்." புல்லட்டில் ஏறியிருந்த ரகுநாதனைக் கட்டிப் பிடித்தக் கொண்டு அழுதது.
            "ஆனது ஆயிப் போச்சு. ஒண்ணும் பண்றதுக்கில்ல. கோளாறு ஆயிப் போச்சு. நம்மள நெனச்சிட்டு நாலு பேரு அங்க போயிட்டு இருக்காம். அவனுக்கு மின்னாடி நாம்ம போயி அரஸ்ட் ஆகலின்னா அது சுத்தப்பட்டு வாராது. புரிஞ்சுக்கோ. ஒங்ககிட்ட இப்படிப் பேசிப் பேசியே நேரமாயிட்டுப் போகுது. கெளம்ப விடுங்க." என்றது ரகுநாதன்.
            "யாரயாவது அழச்சிட்டுப் போகலாம்ணே! நானே வாரேண்ணே!" என்றது.
            "மூலங்கட்டளப் போயி வாத்தியாரு இருந்தா அவர மட்டும்னா அழச்சிட்டுப் போறேம். வேற யாரும் வாணாம். சுத்தப்படாது. வூட்டுக்கு முன்னாடி இந்த கூட்டத்த கலச்சி வுடு. வேணுன்னா இந்த வந்திருக்காரே வாத்தியாரு. அவரயும் தாடியையும் சூதனமா வூட்டுல கொண்டு போயி வுட்டுடு. பாத்துப்போம்!" என்று சொல்லி விட்டு பட் பட் என்ற சத்தத்தோடு புல்லட்டில் கிளம்பியது ரகுநாதன்.
            மூலங்கட்டளைக் கம்பு வாத்தியாரை அழைத்துக் கொண்டு போவதாகச் சொன்ன ரகுநாதன் அவரையும் அழைத்துக் கொண்டு செல்லவில்லை. தான் தனியாக மன்னார்குடி போவதாக யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம் என்பதற்காக ரகுநாதன் அப்படிச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் ரகுநாதன் மன்னார்குடி எல்லைக்குள் நுழைந்ததும் கட்சி ஆட்கள் சேர்ந்து கொண்டதாகவும், ஏழெட்டு வக்கீல்களும் தயாராக இருந்ததாகவும், ரகுநாதன் அரெஸ்ட் ஆகி உடனே நிபந்தனை ஜாமீனில் வெளியே வருவதற்கான அத்தனை வேலைகளையும் செய்திருந்ததாகவும், மன்னார்குடிக்குக் கொண்டு செல்லப்பட்ட அத்தனை ஆட்களையும் கட்சி பாகுபாடில்லாமல் அதே போல நிபந்தனை ஜாமீனில் எப்படியோ வெளியில் கொண்டு வந்ததாகவும் பேசிக் கொண்டார்கள். இன்னொரு விதமாக கோர்ட் பக்கமே போகாமல் போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்து சமாதானமாகப் பேசி முடித்து விட்டதாகவும், யாருக்கும் எந்த பாதிப்பும் வராத அளவுக்கு ஒரு வழக்கை மட்டும் பதிவு செய்து கொண்டதாகவும் பேசிக் கொண்டார்கள். இப்படி அப்படியும் இப்படியுமாக இரண்டு விதமானப் பேச்சுகள் ஊரில் உலவியது. என்ன நடந்ததோ? ஏது நடந்ததோ? ஆனால், காலையில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு அரெஸ்ட் ஆகிப் போன அத்தனை ஆட்களும் சாயுங்காலமாக ஒருவரையொருவர் ஒன்றாக கட்டிப் பிடித்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தார்கள்.
            ரகுநாதன் அடித்து ஆஸ்பிட்டலில் இருந்த சாமி.தங்கமுத்துவும், மாணிக்கவிநாயகமும் உடல்நிலைத் தேறி வர ஒரு மாத காலத்துக்கு மேல் ஆகியது. அவர்கள் தேறி வந்ததும் ஊர்ப் பஞ்சாயத்து நடந்தது. ஊர்ப் பஞ்சாயத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் சாமி.தங்கமுத்துவும், மாணிக்கவிநாயகமும் ரகுநாதன் மேல் போலீஸ் ஸ்டேசனில் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை என்று பேசிக் கொண்டார்கள். செல்லையன் கடையை அடித்து உடைத்தது மட்டுமே வடவாதி போலீஸ் ஸ்டேஷனில் வழக்காகப் பதிவாகி மன்னார்குடி ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடந்து கொண்டிருந்தது. 
            ஊர்ப் பஞ்சாயத்து காரசாரமாக மறுபடியும் ஒரு சண்டையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பஞ்சாயத்தில் எந்தப் பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்பதற்காக ரெண்டு தரப்பிலிருந்தும் பஞ்சாயத்துக்கு பெரும் புள்ளிகளையோ, வகைதொகையான ஆட்களையோ அழைத்து வரக் கூடாது என்று முன்கூட்டியே பேசப்பட்டது. ஊர் ஆட்களிலும் காரசாரமாகப் பேசுபவர்களுக்கு எதையும் அநாவசியமாகப் பேசக் கூடாது என்று கட்டுபாடு போடப்பட்டது. ரெண்டு தரப்பும் ஊர்ப் பஞ்சாயத்துக்குக் கட்டுபடாத நிலைமையில் போலீஸில் புகார் செய்து கொள்ளலாம் என்றும் ஆனால் ஊர்ப் பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட்ட நிலைமையில் போலீஸ் ஸ்டேசன் பக்கம் போகக் கூடாது என்று ரெண்டு தரப்பிலும் முன்கூட்டியே ஓங்கு தாங்கலாகச் சட்டமாகப் பேசப்பட்டிருந்தது.
            பஞ்சாயத்துக்கு வந்த சாமி.தங்கமுத்து வந்ததும் வராததுமாக வந்த உடனே, "அண்ணே மேல எந்தத் தப்புமில்ல. அவரு தம்பிய நாம்ம அடிச்சேம். அண்ணே நம்பள அடிச்சிது! இதுல பஞ்சாயத்துக்கு ஒண்ணும் வேலயில்ல!" என்று பேசியதுமே பஞ்சாயத்து புஸ்ஸென்று ஆனது.
            "சாதிக்காரய்ங்க இன்னிக்கு அடிச்சுப்பாங்க! நாளிக்கு கூடிப்பாங்கங்றது உண்மையால்ல யிருக்கு!" என்று பஞ்சாயத்துக்கு வந்தவர்கள் குசுகுசுப்பாய்ப் பேசிக் கொண்டார்கள்.
            "அது செரி! நீயி அடிச்சே. ரகுநாதம் அடிச்சுது. செரி. சம்பந்தமில்லாம மாணிக்கநாயகம் அடி வாங்கிருக்கே. செல்லையம் கடை போயிருக்கே. அதுக்கு யாரு நாயம் பண்றது?" என்றது பஞ்சாயத்தில் ஒரு பெரிசு.
            "தங்கமுத்துக்கான வைத்தியச் செலவு, மாணிக்கநாயகத்துக்கான வைத்தியச் செலவு, செல்லையம் கடைக்கான எழப்பு எல்லாத்தியும் நாமளே ஏத்துக்கிறேம். தண்டம் எவ்ளோன்னு சொன்னீங்கன்னா கட்டிப்புடறேம்!" என்றது ரகுநாதன்.
            "எங்களுக்குப் பைசா காசி வாணாம்!" என்று ஒரே குரலில் சொன்னார்கள் சாமி.தங்கமுத்துவும், மாணிக்கவிநாயகமும்.
            "அதுலாம் நாயமில்ல! அப்படிப் போனா இது பஞ்சாயத்துமில்ல!" என்றது ரகுநாதன்.
            "அப்பிடின்னா ஆளுக்கு ஒரு ஆர்லிக்ஸ் பாட்டிலு மட்டும் தண்டமா வாங்கித் தந்தா போதும்!" என்றது மாணிக்கவிநாயகம்.
            "ன்னா பஞ்சாயத்து இது? அடிச்ச நமக்கு மனசு வலிக்கிற மாரி பண்ணிட்டு இருக்கீங்க!" என்றது ரகுநாதன்.
            யாரிடமும் எந்தப் பேச்சும் எழாமல் பஞ்சாயத்து சில நிமிடங்கள் மெளனமாக இருந்தது.
            "அப்போ செல்லையம் கடைக்கி மட்டும் நாயம் பண்ணி முடிச்சாப் போதுமா?" என்றார்கள் பஞ்சாயத்தார்கள். யாரும் எந்த மறுபேச்சம் பேசாமல் இருக்கவே, செல்லையன் கடைக்கு மட்டும் இழப்பீடு பேசப்பட்டது. இது சம்பந்தமாக நடைபெறும் வழக்கில் பாதமாக செல்லையன் தரப்பிலிருந்து எதுவும் செய்து விடக் கூடாது என்ற நிபந்தனையோடு ஒருவழியாகப் பஞ்சாயத்து முடிவடைந்தது.     
            அதன் பின் செல்லையன் கடை தொடர்பான வழக்கு மட்டும் ஓராண்டுக்கு மேல் நடைபெற்று அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அதையும் ரகுநாதனே எல்லாருக்குமாகச் சேர்த்து கட்டியதாகவும் பேசிக் கொண்டார்கள். அத்தோடு ஊரில் அய்யாக் கட்சிக்கும், அம்மா கட்சிக்கும் இருந்த மனஸ்தாபங்கள் முடிவுக்கு வந்து அரசியல் அரசியலாகவும், பழக்க வழக்கம் பழக்க வழக்கமாகவும் இருக்க வேண்டும் என்ற நிலை அவர்களையும் அறியாமல் ஏற்பட்டு விட்டது.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...