28 Feb 2018

தனியுடைமைக்கான வேட்டு!

குறளதிகாரம் - 7.3 - விகடபாரதி
தனியுடைமைக்கான வேட்டு!
            செய்யும் தொழிலே தெய்வம்
            அதில் திறமைதான் நமது செல்வம் என்பது ஒரு திரைப்பாட்டு.
            ஒவ்வொருவருக்கும் செல்வம் அவரவர் செய்யும் தொழிலில் காட்டும் திறமைக்கு ஏற்பவே வருகிறது.
            இந்த உலகின் செல்வம் என்பது மக்கள் உழைப்பால் உருவாக்கிய செல்வம்.    உழைப்புக்கு பின்னே ஒரு பொருளுக்கு மதிப்பு வருகிறது.
            மனிதத் தொழிலாளர்கள் உழைத்துத் தங்கத்தைத் தோண்டி எடுத்து புடம் போடும் வரை அது மதிப்பற்றப் பொருளாகவே பூமியில் கிடக்கிறது. மனிதர்களின் உழைப்பு அதற்கு ஒரு மதிப்பைத் தேடித் தருகிறது.
            மக்கள் இந்த உலகில் தேடிய செல்வம் என்பது அவரவர் உழைப்பால் தேடிய செல்வம். உழைப்பின்றேல் ஊதியமில்லை என்பது நமது பழமொழி.
            ஒவ்வொருவரின் செல்வமும் அவரவர் உழைப்பால், அதாவது அவரவர் செய்யும் தொழிலால், அதாவது அவர் மேற்கொள்ளும் வினையால் வருகிறது.
            சூரியன் கிழக்கே உதிக்கிறது, மேற்கே மறைகிறது என்பது எப்படி ஓர் உலக உண்மையோ அப்படியே உழைப்பே செல்வத்தைத் தருகிறது அதாவது வினையின் மூலமே பொருள் உண்டாகிறது என்பதும் ஆகும்.
            அவரவர் செய்யும் உழைப்புக்கு ஏற்ப, அவரவர் செல்வத்தைப் பெறுவர். அதாவது அவரவர் செய்யும் வினைக்கு ஏற்ப பொருள் உண்டாகும்.
            உழைப்பின் மூலம் பெறும் செல்வம் உன்னதமானதுதான். அதற்கு ஈடான வேறொன்று உண்டா! என்றாலும்,
            என்னதான்,
            ஓடி ஓடி உழைத்தாலும்,
            தேடித் தேடிச் சேர்த்தாலும்,
            கூடிக் கூடிக் குவித்தாலும்,
            நாடி நாடி திரட்டினாலும்,
            கோடி கோடி கொடுத்தாலும்
அவைகள் எல்லாம் குழந்தை செல்வத்துக்கு ஈடாகுமா? குழந்தைச் செல்வம் எனப்படும் மழலைச் செல்வத்துக்கு நிகர் அதுவே.
            இந்த உலகில் ஒவ்வொரு மனிதருக்கும் தம் செல்வம் (அதாவது தம் பொருள்) என்று கொள்ளத்தக்கது தம் பிள்ளைகளே. மற்றச் செல்வம் (அதாவது பொருள்) என்பவைகள் அவரவர் உழைப்பின் மூலம் (அதாவது அவரவர் வினையின் மூலம்) வருபவைகளே.
            இந்த உலகில் உரிமையாக நாம் கொள்ளத்தக்கப் பொருள்கள் என்பது நாம் பெற்ற மக்களே. மற்றப் பொருள்கள் எல்லாம் செய்யும் செயலுக்கு ஏற்ப (அதாவது உழைப்புக்கு) ஏற்ப வருபவைகளே என்று மழலைச் செல்வத்தை வள்ளுவர்,
            தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் தம் தம் வினையான் வரும் என்று உயர்வுபடுத்துகிறார்.
            உழைப்புப் பொதுவானது. அதன் மூலம் எவர் வேண்டுமானாலும் உயர்ந்த செல்வத்தை அடைய முடியும். மக்கட் செல்வம் என்பது உரிமையால் அடையத் தக்கது.
            இல்லற வாழ்வில் வாழ்க்கைத் துணை நலம் ஏற்று உரிமையோடு அடையப்படும் செல்வம் மழலைச் செல்வம் எனும் மக்கட் செல்வம்.
            உரிமையான மக்கட்செல்வம் உழைப்பால் வரும் செல்வத்தைத் தாண்டிக் கொண்டாடப் பட வேண்டியது. குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
            இந்த உலகமே, உரிமையெனக் கொண்டாட வேண்டிய தகுதிக்குரியவர்கள் குழந்தைகள். குழந்தைகளுக்குப் பின்னே வைத்துதான் அவர்கள் சேர்த்த செல்வம் கொண்டாடப்பட வேண்டும்.
            நாம் உரிமையோடு பெற்ற குழந்தைகளையே செல்வமாகக் கொண்டாட வேண்டும். செல்வத்துக்காகக் குழந்தைகளைக் கொண்டாடக் கூடாது. இன்றைய பிறந்த நாள் கொண்டாட்டங்கள், செல்லம் கொடுத்துச் செய்யப்படும் ஆடம்பரங்கள் இவைகள் குறித்துதான் அன்றே சொல்லியிருக்கிறாரோ வள்ளுவர்!
            அவரவர் உழைப்பால் வரும் செல்வத்தை விட அவரவர் உரிமையால் வரும் குழந்தைச் செல்வமே அவரவர் செல்வம் என்க. மற்றச் செல்வங்களை உலகப் பொது என்க.
            உழைப்பால் வரும் செல்வம் தமக்கெனக் கொண்டது போக எஞ்சியதெல்லாம் உலகுக்கு. உரிமையால் வரும் மக்கட்செல்வம் முழுமையும் அவரவர்க்கு.
            பொன்னே போல் பாராட்டி, சீராட்டி, போற்றிக் காக்க வேண்டியச் செல்வம் பொன் அல்ல, பொன் போன்ற குழந்தைகளே.
            மேற்கூறியதுதான் 'தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் தம் தம் வினையான் வரும்' என்ற குறளுக்கு நுண்மையான விளக்கமா என்றால்... ஒருவாறானப் புரிதலுக்கு நீங்கள் வர வேண்டும் அல்லவா! அதற்கான விளக்கமே மேற்கூறியது. உண்மையான நுண்மையான விளக்கம் என்னவென்றால்,
            தம் பொருள் என்பது தம் மக்கள். அதை விடுத்து தம் உழைப்பால் வரும் செல்வத்தை மிகச் சிறந்த செல்வம் எனக் கருதி அதை பிள்ளைகளுக்குச் சேர்த்து வைக்கக் கூடாது. ஏனென்றால் அவர் செல்வம் அவரவர் உழைப்பால் அதாவது அவர் வினையால் வர வேண்டும். பெற்றோர் சேர்த்து வைப்பதால் வரக் கூடாது. இப்படி தனியுடைமைப் பொருளாதாரத்துக்கு அன்றே வேட்டு வைத்து இருக்கிறார் வள்ளுவர்.
            உங்கள் குழந்தைகளை உங்கள் செல்வமாகக் கொண்டாடுங்கள். அவர்களுக்கானச் செல்வத்தை அவர்களே உழைத்துச் சேர்க்க விடுங்கள் என்பதைத்தான்,
            தம்பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் தம் தம் வினையான் வரும் என்கிறார் வள்ளுவர்.
            நம் பிள்ளைகள் உழைத்து அவரவர்க்கான செல்வத்தைத் தேடிக் கொள்வார்கள். நீங்கள் சொத்தைக் குவித்து இன்னொருவர் உழைத்துப் பெற வேண்டியச் செல்வத்துக்கு இடையூறாக நிற்காதீர்கள்.
            எல்லா வளமும் இருந்தும் இன்னும் இந்த உலகில் வறுமை நிழலாடுவதற்கு, ஒவ்வொருவரும் அவரவர் சந்ததியினர்க்கெனக் குவித்து வைத்து இருக்கும் செல்வம்தானே காரணம்.
            குழந்தைகளுக்கு உழைக்கக் கற்றுக் கொடுங்கள், உயர்வார்கள்.
            அவர்கள் உழைத்துச் சேர்க்க வேண்டியச் செல்வத்தை நீங்களே சேர்த்து வைப்பதால் அவர்கள் சோம்பேறிகளாகத்தான் ஆவார்கள்.
            மீன்களைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது சிறந்தது என்பதுதானே உலகப் பழமொழி.
            உங்கள் பொருள் உங்கள் பிள்ளைகள் என்பதில் எந்த மாற்றமுமில்லை. அவர்களுக்கானப் பொருள் அவர்களது உழைப்பால் வர வேண்டும் என்பதில் எந்தக் குற்றமுமில்லை. 
            பிள்ளைகளைச் செல்வமெனக் கொண்டாடி அவர்களுக்கானச் செல்வத்தை அவர்களின் உழைப்பினால் தேடிக் கொள்ள வாழ்த்துப் பா பாடி அனுப்பி வையுங்கள். வையகம் தழைக்கும். வையகம் முழுமையும் உழைக்கும்.
            ஒவ்வொரு குழந்தையும் உண்பதற்கான ஒரு வயிற்றோடு மட்டும் பிறக்கவில்லை, உழைப்பதற்கான இரண்டு கைகளோடும்தான் பிறக்கிறது என்ற நேருவின் கூற்றுதான் எவ்வளவு உயர்ந்தது.
            நாமோ குழந்தைகள் உண்பதற்கான வயிற்றோடு மட்டும் பிறந்திருப்பதாக எண்ணிப் பத்து தலைமுறைக்கானச் சொத்தைச் சேர்த்து வைக்க நினைக்கிறோம். அவர்களோ பத்து தலைமுறைக்கும் வேண்டுமானாலும் உழைப்பதற்கான வலுவான இரண்டு கைகளோடு பிறந்திருக்கிறார்கள் என்பதை வசதியாக மறந்து போகிறோம்.
            அவரவர் தலைமுறைக்கு உழைத்து அவரவர் சேர்க்க வேண்டியச் செல்வத்தைச் அவரவர் சேர்த்தால் வருகின்ற தலைமுறைகள் வளமாக இருக்கும், நலமாக இருக்கும்,  பலமாகவும் இருக்கும்.

*****

உத்திகளும் ரகசியங்களும் உங்களுக்காக...

உத்திகளும் ரகசியங்களும் உங்களுக்காக...
            எஸ்.கே.வால் அவரவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லி விட முடிவதில்லை. வாயைப் பிடுங்கி விவகாரத்தில் மாட்ட வைப்பதற்கானக் கேள்விகள் அநேகம்.
            அநேகக் கேள்விகளுக்கு அதனால் பதில் அளிப்பதை விட புன்னகையே மிகச் சிறந்த பதில்.
            எஸ்.கே.விடம் பேசுபவர்கள் உணர்ச்சிகரமாகப் பேசி, அவர்களின் துயரங்களைக் கொட்டி எஸ்.கே.வைச் சுமக்க வைத்து விடுகிறார்கள். அவர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகள். அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு எஸ்.கே. அது சாத்தியமானதில்லை அவனுக்கு
            மற்றவர்கள் விவகாரத்தில் மிக அதிகமாக மூக்கை நுழைக்கக் கூடாது என்பதும், யாரும் தங்கள் சுபாவத்தில் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள் என்பதும், அது தானே தன்னை மற்றவர்களுக்கு எதிரியாக்கிக் கொடுப்பதற்கு வழிவகுக்கும் என்பதும் எஸ்.கே. அறியாததல்ல.
            இதற்காக எஸ்.கே. பார்ப்பவர்களையெல்லாம் புகழ்ந்து பேசுகிறான். தினம் இருபது பேரையாவது புகழ்ந்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். புகழ்ச்சி என்ற மொழி ஒருவனது பல்வேறு உள்நோக்கங்களை மறைத்து விடும். காரியங்களை உள்ளேப் புகுத்தி வெற்றி பெறச் செய்யும். மேலும் புகழ்ந்து பேசினால்தான் அநாவசியமாக யாரும் சந்தேகம் கொள்ள மாட்டார்கள்.
            பல நாள் மனச்சோர்வுக்கு மருந்தாவதும் புகழ்ச்சிதான். எவ்வளவு எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்றாலும் புகழ்ச்சி எல்லாவற்றையும் மாற்றி விடும். எவ்வளவு எதிர்பார்ப்புகள் நிகழ்ந்தாலும் புகழ்ச்சி இல்லையென்றால் ஏமாற்றம் எதிர்கொள்ள முடியாததாகி விடும்.
            இதற்கெல்லாம் மற்றவர்களை எதிர்பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதிலும் தவறு இருக்க முடியாது. யாருக்கும் தெரியாமல் தனக்கு மட்டும் தெரியும் வகையில் அதைச் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை.
            இதில் மற்றுமொரு நிபந்தனை எப்படிப் புகழ்ந்தாலும் சிறியதாக புகழ்ந்து கொள்ள வேண்டும். மன்னரைப் போல பெரிதாக என்றால், படைப் பரிவாரங்கள் இல்லையே என்ற கவலை உண்டாகி விடும். சிறியதன் அழகும் சிறப்பும் அதுதான்.
            இதுபோன்று செய்து கொள்ளும் ரகசியங்களையெல்லாம் இலைமறை காயாக வைத்துக் கொள்ள வேண்டும். முற்றிலும் சிதறு தேங்காய் போல போட்டு உடைத்து விடக் கூடாது. தனது வாழ்க்கை தனக்கே கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் இவைகளெல்லாம் அவசியம்தான்.
            பாதி விசயம் தெரிந்த பிறகு, பாதி விசயம் தெரியவில்லை எனும் போதுதான் உலகம் உங்களைக் கவனிக்கிறது.
            இதையெல்லாம் முன்கூட்டியே அனுமானிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் சொல்லிக் கொடுத்த  பிறகும் நிகழ்த்த முடியவில்லை என்றால் சோகம்தான்.
            உத்திகள் மாபெரும் சக்தி.
            ரகசியங்கள் என்பதும் இன்னும் பெரிய மாபெரும் சக்தி.
            இந்த இரண்டும் இணைந்தால் இந்த உலகில் ஆகாது எதுவுமில்லை என்பதோடு நிறைய சாதிக்கலாம்.
            அப்புறம் இந்த உலகமே நிறைய கட்டுபாடுகளால் ஆனது. அந்தக் கட்டுபாடுகளை யார் நமக்கு விலக்கித் தருகிறார்களோ அவர்கள் என்றும் பாசத்துக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். இது இன்னொரு ரகசியம் மற்றும் உத்தி. உங்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்படுகிறது.

*****

பனிக்காட்டில் குளிர் காய்தல்

பனிக்காட்டில் குளிர் காய்தல்
எரியும் பனிக்காட்டில்
குளிர் காயும் பரவசம்
உன் முத்தத்தின் மின் அதிர்வுகள்
நின்று போகும்
உன் நினைவு குறித்த
ஏக்க ரேகைகள் அதிகமாகும்
முதல் மழையில் துளிர்த்த
முதல் தளிரைத்
தடவித் தடவிப் பார்க்கிறேன்
எங்கிருக்கிறாய் நீயென!

*****

27 Feb 2018

ஏழு தலைமுறைச் சாபம்!

குறளதிகாரம் - 7.2 - விகடபாரதி
ஏழு தலைமுறைச் சாபம்!
            ஒரு தலைமுறையின் பாவம் ஏழு தலைமுறைக்கு என்று கிராமத்தில் ஒரு வழக்கு உண்டு.
            பாவச் செயல்களைத் தாழ்த்திப் பிடிப்பதும், புண்ணியச் செயல்களை உயர்த்திப் பிடிப்பதும் அறத்தை நிலைநாட்டும் கிராம மக்களின் எளிய மொழிகளில் அன்றாடம் கேட்கலாம்.
            இக்கிராமத்து வழக்கு மொழிகள் உளவியல் சார்ந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தாம் செய்த பாவம் தம்மோடு போகாமல் தமக்குப் பின் வரும் தலைமுறையையும் அல்லவா பாதிக்கும் என்ற அக்கறையை விளைவிக்கின்றன.
            ஒரு தலைமுறையின் பாவம் ஏழு தலைமுறைக்கு என்றால், ஒரு தலைமுறையின் புண்ணியம் ஏழு தலைமுறைக்கு அல்லவா! இப்படித்தான் பாவத்தைக் கொய்க, புண்ணியம் செய்க என்ற உளவியல் தாக்கத்தை நிலைநாட்டி அறத்தை நிலைநாட்டுகிறது எளிய மக்களின் வழக்காற்று மொழிகள்.
            வள்ளுவர் அதன் அடியாழத்தைத் தொட முற்படுகிறார்.
            பாவம் என்றால் அதற்குக் காரணம் யாது?
            பழிதான் அல்லவா!
            அப்பழி ஏன் நேர்கிறது?
            பண்பற்ற பாதையில் பயணிப்பதால்தான் அல்லவா!
            அப்பண்பற்றப் பாதையில் பயணிக்கும் நிலை ஏன் ஏற்படுகிறது?
            இளம் வயதிலேயே பண்பானப் பாதையில் செல்ல பழக்கப்படுத்தாததால், பயிற்சிக்கு உட்படுத்தாததால், அதுவே சரியென உளவியல் ரீதியாக நிலைநிறுத்தப்படாததால் அல்லவா ஏற்படுகிறது.
            அதற்கு யார் காரணம்?
            பெற்றோர்கள் அன்றி வேறு யார் காரணம் இருக்க முடியும்?
            பெற்றோர்கள் பெற்றப் பிள்ளைகளைப் பண்புள்ளவர்களாகப் பழக்கப்படுத்த வேண்டும், பயிற்சிக்கு உட்படுத்த வேண்டும், நற்பண்பை உளவியல் ரீதியாக மனதில் நிலைநிறுத்த வேண்டும், தாமே அதற்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும்.
            அப்படி இருந்தால் மட்டுமே பண்புடை மக்கள் உரு பெறுவர்.
            கருவின் உருவை மரபு தீர்மானிக்கிறது என்றால், பண்பின் உருவைப் பெற்றோர்கள் தீர்மானிக்கின்றனர்.
            தன் வாழ்வில் மாபெரும் திருடனாகி மரண தண்டனை பெற்ற மகன், சாவதற்கு முன் கடைசி ஆசையாக தன் தாயைச் சந்திக்க ஆசைப்படும் கதை நாம் அறிந்ததுதான் அல்லவா!
            தாயைச் சந்தித்த மகன் தாயைக் கட்டித் தழுவி அவள் காதைக் கடித்துத் துப்புகிறான்.
            மரண தண்டனைப் பெற்றவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய காவலர்கள் இச்செயலால் அதிர்ச்சியில் உறைகிறார்கள்.
            அப்போது அவன் பேசுகிறான், "நான் முதன் முதலில் பள்ளியில் ஒரு கரிக்கோல் திருடி வந்த போதே என்னைத் திட்டித் திருந்தியிருந்தால் இன்றைக்கு ஒரு மரண தண்டனை கைதியாக உங்கள் முன் நின்றிருக்க மாட்டேன். அப்போது நன்மொழிகளை என் காதுகளில் போடாத என் தாய்க்கு காது இருந்தென்ன? இழந்தென்ன?"
            நல்வழிப்படுத்தாதப் பெற்றோர்கள் பழியை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
            பழி தீயது. தீயது நிழலைப் போல. பின்தொடர்ந்து வரும். எவ்வளவு தூரத்துக்கு வரும்? ஏழு தலைமுறை கால அளவுப் பயணிக்கும் தூரத்துக்குத் தொடர்ந்து வரும். அடேங்கப்பா ரொம்ப மோசம்தான் இந்தத் தீயது!
            ஏழு தலைமுறைக்குத் தொடரும் இந்தத் தீயது தீண்டாதிருக்க என்னதான் செய்வது?
            பிறரால் பழிக்கப்படாத அதாவது பழி பிறங்காப் பண்புடை மக்களாய் பிள்ளைகளை நெறியாள்கை செய்ய வேண்டிய பெரும் பொறுப்பை தலைமேற்கொண்டு தலையாயக் கடமையாகக் கொண்டு ஒழுக வேண்டும் பெற்றோர்கள்.
            அப்படிப் பெற்றோர்கள் இருந்தால் மட்டுமே,
            எழுபிறப்பும் தீயவைத் தீண்டா பழி பிறங்காப் பண்புடை மக்கள் பெறின் என்கிறார் வள்ளுவர்.
            ஒரு பிறப்பு என்பது ஒரு தலைமுறை.
            எழு பிறப்பு என்பது ஏழு தலைமுறை.
            அது என்ன ஏழு தலைமுறை? மூன்று நான்குத் தலைமுறையாக இருக்கக் கூடாதா? ஏழு தலைமுறை என்று ஏன் வள்ளுவர் உச்சபட்ச கணக்குக் காட்ட வேண்டும்? ஏழு தலைமுறை என்பதே குறைந்தபட்ச கணக்குதான் என்பது ஹிட்லரைக் கணக்கில் கொண்டால் புரிய வரும். வரலாறு என்றைக்கும் அதை மறக்கப் போவதில்லை. வரலாறு என்பது எத்தனை தலைமுறை கணக்கு என்பது நமக்குத் தெரியாததில்லை.
            பழிகள் அவ்வளவு எளிதாக மனதிலிருந்து மறைந்து விடுவதில்லை. அவற்றின் பதிவுகள் மரபு வழியாக நீடிக்கின்றன. மரபு வழித் தாக்கத்துக்கு எந்தப் பறவையும் மனிதனை நம்பத் தயாராக இல்லை என்பது ஒரு சான்று. எத்தகைய துன்பங்கள் செய்யாத ஒரு மனிதன் வந்தாலும் வண்ணத்துப் பூச்சிகள் பறந்து ஓடவேச் செய்கின்றன.
            பழிகள் தீயவைகள். தீயவைகள் அழிக்க முடியாத கறைகள். வரலாற்றில் நல்லவர்களைப் போலத் தீயவர்களும் அவர்கள் செய்த பழிக்காகப் பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
            பழிப்பு எனும் தீயது ஏழு தலைமுறை தாக்கம் கொண்டதாக இருப்பதால் பழியற்ற பண்புடை மக்களைத் தர வேண்டியது பெற்றோர்களின் ஒப்பில்லாப் பொறுப்பு.
            வளைந்து செல்லும் மரக்கன்றைத் தோட்டக்காரன் நினைத்தால் மரக்கன்றாக இருக்கும் போதே ‍நேர் செய்து சரி செய்து விடலாம் அல்லவா! மரமாக வளர்ந்து விட்டால் விஞ்ஞானிகள் நினைத்தாலும் வெட்டி எடுக்கத்தான் முடியுமே தவிர நேர் செய்ய முடியாது. இதே கருத்துப் பெற்றோர்களுக்கும் அப்படியேப் பொருந்தும்தானே. இளம் பிராயத்திலேயே திசை மாறும் அவர்களைப் பெற்றோர்கள் நினைத்தால் நேர் செய்து பண்புடை மக்களாய் மாற்றி விடலாம். வளர்ந்து விட்டப் பிறகு யார் நினைத்தாலும் அதனால் நேரப் போகும் பழியை ஏழு தலைமுறை வரை வெட்டி வீழ்த்த முடியாது. ஏழு தலைமுறை கடந்த பின்னும் வெட்டி வீழ்த்த முடியாது.
            தீயது எப்போதும் தீயதே!  ஏழு தலைமுறைக்கும் தொடரும் சாபம் அது!
            அறிவறிந்த மக்கட்பேற்றை முதல் குறளில் சொன்ன வள்ளுவர், அறம் அறிந்த மக்கட்பேற்றை இரண்டாவது குறளிலே வலியுறுத்தி அற அதிகாரம் புரிவது கவனிக்கத்தக்கது.

*****

நிகழ்கால முயற்சிகள் எப்படி இருக்க வேண்டும்?

நிகழ்கால முயற்சிகள் எப்படி இருக்க வேண்டும்?
            இருக்கின்றவைகள் போதாதா? அதைத் தொடர்ந்து செய்தால் போதாதா? மனதை அலைபாய விட்டு ஆசைகளைப் பெருக்கி வாழ்வைச் சிக்கலாக்கிக் கொள்வதா? தேவையில்லாத பாரங்களுக்கும் சிக்கல்களுக்கும் சிரத்தை எடுத்துக் கொள்வதா? எப்போதும் எண்ணங்களை அதிகரித்துக் கொள்வது குழப்பத்தைத்தான் தரும்.
            எதையும் எவரிடமும் அவசரப்பட்டுக் கூறி விடாதீர்கள். ஆர்வக் கோளாறின் அடிப்படையில் செயல்படுபவர்கள் நாட்டில் அதிகரித்து விட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் எதையாவது ஒன்றைச் செய்து விட்டு அதன் பலனை கடைசியில் தலையில் கட்டி விடுகிறார்கள். அப்படியே அனுபவிக்கும்படி விட்டு விட்டுப் போயும் விடுகிறார்கள்.
            கொடுக்கல் வாங்கல் என்று வரும் போது ஒரு கொழுத்த வியாபாரத்தை நிகழ்த்தி விடுபவர்கள் இங்கு அநேகம்.
            எதையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இயற்கையை நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பது விளங்க வரும். ஆழ்ந்து சிந்திக்காமைதான் பிரச்சனை. எல்லாம் சரியாகத்தான் இருக்கும், இல்லாமலும் இருக்கும். தனிப்பட்ட முறையில் செயல்பட்டு மாற்றும் அளவுக்கு இங்கு எதுவும் இல்லை என்பது மாபெரும் உண்மை. ஒன்று, உன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இரண்டு, கூட்டாகச் சேர்ந்து செயல்பட்டு மாற்ற வேண்டும்.
            இங்கு தேவைப்படுவதெல்லாம் குறைந்தபட்ச கடமைகளை நிறைவேற்றினாலே போதும் என்பதாக இருக்கிறது. எல்லாருடைய முயற்சியும் இயற்கையோடு இயைந்ததாக இருப்பது நல்லதாகத் தோன்றுகிறது. அதைத் தாண்டி ஆர்வக் கோளாறாக எதையும் செய்ய வேண்டியதில்லை என்பதுதான் சங்கதி. அது தேவையும் இல்லை என்பதுதான் அனுபவம்.
            சில நேரங்களில் எப்படிச் செயல்படுவது என்ற கேள்வி குழப்பத்தில் ஆழ்த்தி விடும். அது போன்ற நேரங்களில் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டியதில்லை. இயல்பாக எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்பட்டாலே போதுமானது.
            இப்படி ஒரு கேள்வி மனதுக்குள் எப்போது வருகிறதோ, அப்போதே அதற்கான பதிலையும் மனம் கண்டுபிடித்து விடும். அதற்காக ஒரு புதிய மனதை உருவாக்கிக் கொண்டு விடை தேட வேண்டியதில்லை. சில நேரங்களில் செய்ய வேண்டியது என்னவோ, மேலும் மேலும் சிந்தித்து குழப்பாமல் இருப்பதுதான்.
            எண்ணங்கள் விட்டு விட்டு தொடர்ச்சி இல்லாமல் வரலாம். செயல்களைக் கொஞ்சம் கொஞ்சம் செய்து விட்டு அப்படியேப் போய்க் கொண்டும் இருக்கலாம்.
            மனதுக்குப் பிடித்தம் இல்லாத வேலைகளைச் செய்யும் போது இது போன்ற குழப்பம் ஏற்படுவது இயல்பானதுதான். காரிய விருப்பம் முக்கியம்.
            ஓய்வு ஒழிச்சலற்ற வேலைகளும் காரிய விருப்பத்தைக் காலி செய்து விடும்.
            எது உங்களுக்கு ஏற்புடையதாக இல்லையோ, பெரும் உழைப்பை உங்களிடம் வாங்கிக் கொண்டு, வெகு சிறியப் பலனைத் தருகிறதோ அது உங்களை இல்லாமல் அடித்து விடும். இதற்குக் காரணம் கோழிகள். எதைப் போட்டாலும் அதைச் சீய்த்து எடுத்து விடும். காரியவாதக் கோழிகள் எப்போதும் நம்மைச் சுற்றிக் கொண்டு இருக்கின்றன.
            நிழல் மிகுந்த இடத்தில் எதுவும் சரியாக வளர்வதில்லை. மற்றவர்களின் பாதுகாப்பில் நின்று கொண்டே காரியம் ஆற்றிக் கொண்டு இருக்கக் கூடாது. வெயிலைத் தேடி சில சமயம் கிளைகளை வெட்டி விடத்தான் வேண்டியிருக்கிறது. வெட்டி விடாமல் சில நேரங்களில் வளர்ச்சி இருப்பதில்லை. முதற்கட்டமாக சோம்பல், சலிப்பு, இயலாமையான எண்ணக் கட்டுமானங்களை வெட்டிக் காலி செய்து விடலாம்.
            மனதுக்குள் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசை இருப்பதில் தவறில்லை. ஆனால் அதற்கானச் சூழல்களும் இருக்க வேண்டும். தொடர்ந்து எதிர்நீச்சல் போட முடியாது. அப்படிப் போடுவது என்றால் அவ்வபோது இளைப்பாறிக் கொள்ளவும் வேண்டும்.
            முயற்சிகள் செயல்பாட்டு வடிவத்துக்கு வரும் போது சிறிய அளவில் இருந்தால் போதும், சிறியதே அழகானது என்பது போல. மிக பிரமாண்டமான முயற்சிகளை விட எளிமையான முயற்சிகளே போதுமானது. அது எப்போதும் சாத்தியமாகக் கூடியது. யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காதது. தொடர்ந்து செய்யக் கூடியதும் கூட.
            மாற்றத்திற்காக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் மனதும் மாறினால்தான் அந்த மாற்றம் நிலையானதாக இருக்கும்.

*****

நடுச்சாமப் பூனைகள்

நடுச்சாமப் பூனைகள்
சாமத்தில் அலையும் பூனைகளுக்குப்
பகலில் தூக்கம் என்பாய்
நடுவீட்டில் நடுபகலில்
விட்டு விட்டு கேட்டுக் கொண்டிருக்கும்
உன் புருஷனின் குறட்டை ஒலி

*****

இலவச இணைப்புகள்
இதழ்களின் இலவச இணைப்புகள் மேல்
அப்படி ஒரு பேராசை
முத்தத்தின் பின் நிகழும்
ஒரு செல்ல சிணுங்கல்
*****

26 Feb 2018

பிள்ளையைப் பெற்றால் கண்ணீரா?

குறளதிகாரம் - 7.1 - விகடபாரதி
பிள்ளையைப் பெற்றால் கண்ணீரா?
            அறிய வேண்டியது அறிவை அறியும் அறிவைத்தான் என்பது ஆன்றோர் வாக்கு.
            அறிவு வெற்று அறிவாக ஆகி விடாமல் தனக்கும், சமூகத்துக்கும், வருங்காலத் தலைமுறைக்கும் பயன்தரக் கூடியதா என்பதை, அறிவை அறியும் அறிவால்தான் அறிய முடிகிறது.
            அறிவார்ந்த மக்கள் பலரும் தங்கள் அன்பானப் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும்,
            அறிவார்ந்த பிள்ளைகள் பலரும் பெற்றோரைக் கைவிட்டு உல்லாசமாய் வாழ்வதும்,
            அறிவார்ந்த சந்ததிகள் பலரும் காசு, பணம், சொத்துக்காகப் பெற்றோர்களைக் கண்டும் காணாமலும் நடந்து கொள்வதும் இன்று காணக் கிடைக்கும் காட்சிகளாகி விட்டப் பிறகு வெறும் அறிவு ஒருவரை எதில் கொண்டு சேர்க்கும் என்பது தெளிவாகிறது.
            வெறும் அறிவு ஒருவரைச் சுயநலத்திலும், சுய சுகத்திலும்தான் கொண்டு சேர்க்கிறது.
            உண்மையான அறிவு அன்பில் கொண்டு சேர்க்கும் என்பார் வேர்ட்ஸ்வொர்த். இந்த உலகம் விரும்பும் அறிவு காசு சம்பாதிப்பதற்கான பகட்டு அறிவாக இருப்பதால் இன்று அறிவை, உண்மையான அறிவா, காசு பணத்துக்கானப் பகட்டு அறிவா என்று அறிவை ஆராய வேண்டியச் சூழ்நிலை உண்டாகிறது.
            மருத்துவரின் அறிவு நோயைக் காட்டிக் காசு பறிப்பதற்கும்,
            அரசியல்வாதியின் அறிவு ஆசைக் காட்டி ஊழல் செய்வதற்கும்,
            படித்துப் பணியில் இருப்பவரின் அறிவு சாமர்த்தியம் காட்டி கையூட்டுச் செய்வதற்கும்,
            விஞ்ஞானியின் அறிவு பாதுகாப்பைக் காரணம் காட்டி அழிவுக்கான ஆயுதங்கள் செய்வதற்கும்,
            மேதைகளின் அறிவு பேதைகளின் பின் கைகட்டி அவர்கள் நீட்டும் பணத்துக்கு வாலாட்டி நிற்பதற்கும்...
                        என்று ஆன பின் அறிவை ஆராய வேண்டியிருக்கிறது.
            அறிவை அறிந்த அறிவே அறிவின் பிறழ்வைச் சுட்டிக் காட்டுகிறது. அறிவை அறியாத அறிவு வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழித்த ரசாயன வேளாண்மை போல புற்றீசலாய்க் கிளம்புகிறது.
            அறிவை அறியாத அறிவு சுற்றத்ததை அழித்து இறுதியில் தன்னையும் அழிக்கிறது.
            காட்டைச் சூறையாடிய, வனவிலங்குகளை வேட்டையாடிய, மலைகளைச் சுரண்டிய, மணலை அள்ளிய அறிவு, சந்தேகத்துக்கு இடமில்லாமல் அழிவுக்கான அறிவு நிலைநாட்டப்பட்டு விட்டது.
            பிழைக்கத் தெரிந்தவர் என்று சொல்லப்படுவதற்கான அறிவு வருங்காலத்தில் பிழைப்பிற்கே வழியில்லாமல் செய்து விடும் என்பதை விவசாய விளைநிலங்களை வீட்டு நிலங்களாக்கிய அறிவின் மூலம் உணரப்பட்டு வருகிறது.
            முன்விளைவுகளோடு, பின்விளைவுகளையும் சிந்திக்கும் அறிவானது, அறிவை அறியும் அறிவின் பக்குவத்தாலும், சிந்தனையில் கொள்ளும் நிதானத்தாலும் உருவாகிறது.
            இப்படிப்பட்ட அறிவையே அறிவறிந்த அறிவு என்கிறார் வள்ளுவர்.
            வருமுன் காப்பதும் அறிவுதான். வரும் போது காப்பதும் அறிவுதான். வந்த பின் காப்பதும் அறிவுதான். முக்காலத்துக்கும் காப்பு அறிவுதான் என்றால் எக்காலத்துக்கும் காப்பு அதாவது தலைமுறைகள் கடந்தும் நம் வருங்காலச் சந்ததிக்குமான காப்பு அறிவறிந்த அறிவுதான்.
            அறிவறிந்த அறிவு யாரையும் பரிதவிக்க விடாது.
            அறிவறிந்த அறிவு யாரையும் தெருவில் விடாது (குறிப்பாக பெற்றவர்களைத் தெருவில் விட்டு பிச்சையெடுக்க விடாது)
            அறிவறிந்த அறிவு வருங்காலச் சந்ததிக்கான வாய்ப்புகளை அழித்து விடாது.
            அறிவறிந்த அறிவே வளமான தலைமுறை குறித்து அக்கறை கொள்கிறது. அதற்கான ஆக்கப்பூர்வமானத் தன்மையோடு பொறுமையோடும், பக்குவத்தோடும் செயல்படுகிறது.
            வள்ளுவர் ஒரு சில குறட்பாக்களில் தன்னுடைய கருத்தை மிக ஆழமாக தெரிவிக்கிறார்.
            தன் கருத்தாகப் பதியும் அக்குறட்பாக்களில் அக்கருத்தை மிக அதிகமாக வலியுறுத்தவும் செய்கிறார். அதுதான் உண்மை, அதைத் தவிர வேறு உண்மை இல்லை என்ற இறுதித் தீர்ப்பை எழுதும் கண்டிப்போடு உணர்த்தவும் செய்கிறார்.
            அப்படிப்பட்ட குறட்பாக்களில் ஒன்றுதான்,
            பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.
            அறிவறிந்த பிள்ளைகளைப் பெறுவதே தான் அறிந்த வகையில் மிகச் சிறந்த பேறாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
            ஆம்!
            அறிவறிந்த தலைமுறையை உருவாக்க வேண்டும் பெற்றெடுத்தவர்கள்,
            மாறாகப் படித்த முட்டாள்கள் நிறைந்த தலைமுறையை அன்று என்பதைப் புரிந்து கொண்டால் வள்ளுவரின் அறிவறிந்த மக்கட்பேறு என்பதன் பொருள் புரிபடும்.
            அறிவார்ந்த முட்டாள்களால் இந்த உலகம் அவதிப்பட்டது போதும்.
            அறிவறிந்த பிள்ளைகளால் இந்த உலகம் உவகைப் பெறட்டும்.
            தென்னையை வளர்த்தால் இளநீர், பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்ற நிலை மாறி பிள்ளையைப் பெற்றால் பன்னீர் என்ற நிலை உண்டாகட்டும். அறிவறிந்தப் பிள்ளைகள் தம்மைப் பெற்றவர்களை மட்டுமல்லாது, தாம் உற்றவர்களை மட்டுமல்லாது இந்த உலகில் உள்ள எவரும் கண்ணீர் விட தாம் காரணமாக இருக்க மாட்டார்கள்.
            அறிவறிந்த அறிவு இயந்திர மயமாகச் சிந்திக்காது, இதயப் பூர்வமாகச் சிந்திக்கும். உலகின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சியாகக் கொள்ளம். மாறாக தன் மகிழ்ச்சியே உலகின் மகிழ்ச்சியாக்க கொள்ளம் சிறுமைத்தனமும், கபடத்தனமும் அதனிடம் இருக்காது.
            அறிவறிந்த மக்கட்பேறு பெற்றோர்க்கு மட்டுமன்று அது உலகுக்கேப் பேறு. உலகப் பொதுமறை அப்படித்தானேச் சிந்திக்கும்.

*****

எஸ்.கே.வின் பிரத்யேகச் சிந்திக்கும் செயல்முறைகள்

எஸ்.கே.வின் பிரத்யேகச் சிந்திக்கும் செயல்முறைகள்
            சிந்தித்தோம் என்றால் நிறைய வழிகள் புலப்படும். ஊக்கம் குறையாமல், நம்பிக்கை இழக்காமல் சிந்திக்க வேண்டும். சிந்தித்ததைச் சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு செயல்படுத்திப் பார்க்க வேண்டும்.
            சிந்தனை என்பது சிந்திக்க சிந்திக்கத்தான் வருகிறது. அப்படியே அமர்ந்திருந்தால் அதுவும் அப்படியே இருக்கிறது.
            சிந்திப்பதில் சோர்வு என்பது இல்லை. இது உயர்வானச் சிந்தனை, இது தரம் குறைந்தச் சிந்தனை என்று தடைகளை அள்ளி ஆரம்பத்திலே போட்டுக் கொள்ள வேண்டியதில்லை. சிந்தித்தப் பிறகு தரம் பிரித்துக் கொள்ளலாம், வெளிப்படுத்தும் முன் சென்சார் செய்யும் வேலையைச் செய்து கொள்ளலாம். சிந்திக்கத் தொடங்குகிறோம் என்ற உணர்வில் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் சிந்திப்பதற்கு தடையேதும் இல்லை.
            சிந்திக்கும் போது கோபம் மட்டும் வேண்டாம். அது சிந்தனையின் நேர்மறைச் சக்தியை அழித்து விடுகிறது. தோன்ற இருக்கின்ற மாற்று வழியையும் தடுத்து விடுகிறது. எல்லையற்ற பொக்கிஷமான பொறுமையை அது ஒரு நொடியில் தூள் தூளாக்கி விடுகிறது.
            பொறுமை ஆயிரம் நல்ல வழிகளைத் திறந்து விடும்.
            கோபத்தால் முடிந்தது எல்லாம் ஒரு கெட்ட வழியை அதுவும் மாபெரும் மோசமான மட்டரகமான ஒரு கெட்ட வழியைத் திறந்து விடுவது மட்டுமே.
            கோபமாக இருக்கும் போது என்ன செய்வது? சிந்திக்காமல் இருப்பது சாலச் சிறந்தது. உறங்கி விடுவது ரொம்ப உத்தமம். தூக்கத்தைக் கடந்து எந்தக் கோபமும் நிலைப்பதில்லை.
            இந்த உலகோடு எப்படி இயைந்து போவது என்பது குறித்தும் ஒரு லெளகிக மனிதன் அதிகம் சிந்திக்க வேண்டும்.
            யாரையும் புகழ்ந்தால் இயைந்துப் போய் விடலாம். காசா? பணமா? புகழ..? அவருக்கும் மனக்குறை இருக்காது. நாமும் அவரன் மனபேதத்துக்கு ஆளாக வேண்டியதில்லை.
            இந்த உலகில் பல விசயங்களைப் பயந்தது போலக் காட்டிக் கொண்டுதான் காரியம் ஆற்ற வேண்டியிருக்கிறது. துணிந்தவன் போல் காட்டிக் கொண்டு செயலாற்றினால் செயல்படாமல் விடுவதற்கான அத்தனைக் காரியங்களையும் பார்க்கிறார்கள்.
            துணிச்சல் மற்றவர்களிடம் இருப்பது மற்றவர்களுக்கு அறவே பிடிக்காது.
            மீண்டும் சிந்திப்பது குறித்தும் நிறைய சிந்திக்க வேண்டும்.
            குறிப்பாக,
            சிந்திக்க சிந்திக்க அது வந்து கொண்டே இருக்கும். என்ன வரப் போகிறது என்பது பிரபஞ்ச ஆச்சர்யம். படைப்பின் ரகசியம்.
            யாரும் அங்கீகரிக்கவில்லை என்பதற்காக சிந்திக்காமல் இருந்து விடக் கூடாது. சிந்திப்பது என்பது சிந்திப்பதில் கிடைக்கும் மன (அப்படியென்றால்...?) திருப்திக்கும், அது தரும் நன்மைக்காகவும்தான். சிந்தித்துச் சிந்தித்துதான் நீங்கள் உங்கள் மனத்துன்பத்திலிருந்து விடுபட முடியும். கடைசியில் எதையும் சிந்திக்காமல் இருந்தால்தான் எதிலிருந்தும் விடுபட முடியும் என்பதாக அது முடியும் என்றாலும் ஆரம்பத்தில் அது அடைதலுக்குச் சாத்தியம் இல்லாதது. ஆகவே சிந்திக்கத் தொடங்குவதை ஆரம்பத்திலேயே நிறுத்தி விட முடியாது. கடைசியில் அடையப்பட வேண்டியதை துவக்கத்தில் அடைந்து விட முடியாது.
            சின்னச் சின்ன விசயங்கள் குறித்து நாம் என்னச் சிந்திக்கிறோம் என்பது கூட மனதில் மிகப்பெரிய மாற்றத்தை விளைவிக்கக் கூடியது.
            சிந்திக்கச் சிந்திக்கத்தான் அது வருகிறது. அதை முன்னால் தீர்மானிக்க முடியாது.
            நம்மிடமிருந்து நன்மை பிறக்கிறது என்றால் அதை செய்துதான் ஆக வேண்டும். சிந்திக்கச் சிந்திக்க அதிலிருந்து ஒன்று புதிதாகப் பிறந்து கொண்டே இருக்கிறது.
            முடிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளலாம், எளிமையாக விளக்குவதில்தான் எல்லாம் அடங்கி இருக்கிறது.
            இச்சமூகத்தைப் புதிய கோணத்தில் அணுகலாம். அப்படியேச் சிந்திக்கலாம்.
            எது சிறந்தது என்று தீர்மானிப்பது அவ்வளவு எளிதில் முடியாது. சிறந்தது, செய்தவற்கு இடையே வருகிறது.
            இதை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்வீர்கள்?
            சிறந்தது,
            செய்வதற்கு இடையே வருகிறது - இப்படி இரண்டு வரிகளாக்கினால் புரிந்து கொள்ள முடிகிறதா எனப் பாருங்கள். இதுதான் விசயம்.
            மற்றபடி என் போக்குக்கு எனக்குத் தெரிந்ததையெல்லாம் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். ஏன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உட்பட எல்லாவற்றையும் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். இது அதைச் செய்வதால் கிடைக்கும் பலனுக்காக அல்ல. ஏதோ ஒரு மனத்திருப்திக்காக அப்படி ஒரு திருப்தி இல்லையென்றாலும்.
            குறைவாகச் சிந்தித்தாலும் அதைத் தொடர்ந்து செய்து கொண்டு இருப்பேன் என்பதுதான் சிந்திப்பதில் ஒரு நேர்த்தியை உருவாக்குகிறது.
            புதிதாக ஒன்றைத் தெரிந்து கொள்கிறேன் என்ற திருப்திதான் தொடர்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது.
            இச்சிந்தனைக்கானச் செயல்முறைகளை நீங்களும் ஒருமுறை பரிசீலித்துப் பாருங்கள். அது குறித்து எதுவும் தோன்றினால் எழுதுங்கள். நாம் ஒரே மாதிரியாகவா அல்லது வேறு மாதிரியாகவா எப்படிச் சிந்திக்கிறோம் என்பதை ஒரு கை பார்த்து விடலாம்.

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...