26 Feb 2018

பிள்ளையைப் பெற்றால் கண்ணீரா?

குறளதிகாரம் - 7.1 - விகடபாரதி
பிள்ளையைப் பெற்றால் கண்ணீரா?
            அறிய வேண்டியது அறிவை அறியும் அறிவைத்தான் என்பது ஆன்றோர் வாக்கு.
            அறிவு வெற்று அறிவாக ஆகி விடாமல் தனக்கும், சமூகத்துக்கும், வருங்காலத் தலைமுறைக்கும் பயன்தரக் கூடியதா என்பதை, அறிவை அறியும் அறிவால்தான் அறிய முடிகிறது.
            அறிவார்ந்த மக்கள் பலரும் தங்கள் அன்பானப் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும்,
            அறிவார்ந்த பிள்ளைகள் பலரும் பெற்றோரைக் கைவிட்டு உல்லாசமாய் வாழ்வதும்,
            அறிவார்ந்த சந்ததிகள் பலரும் காசு, பணம், சொத்துக்காகப் பெற்றோர்களைக் கண்டும் காணாமலும் நடந்து கொள்வதும் இன்று காணக் கிடைக்கும் காட்சிகளாகி விட்டப் பிறகு வெறும் அறிவு ஒருவரை எதில் கொண்டு சேர்க்கும் என்பது தெளிவாகிறது.
            வெறும் அறிவு ஒருவரைச் சுயநலத்திலும், சுய சுகத்திலும்தான் கொண்டு சேர்க்கிறது.
            உண்மையான அறிவு அன்பில் கொண்டு சேர்க்கும் என்பார் வேர்ட்ஸ்வொர்த். இந்த உலகம் விரும்பும் அறிவு காசு சம்பாதிப்பதற்கான பகட்டு அறிவாக இருப்பதால் இன்று அறிவை, உண்மையான அறிவா, காசு பணத்துக்கானப் பகட்டு அறிவா என்று அறிவை ஆராய வேண்டியச் சூழ்நிலை உண்டாகிறது.
            மருத்துவரின் அறிவு நோயைக் காட்டிக் காசு பறிப்பதற்கும்,
            அரசியல்வாதியின் அறிவு ஆசைக் காட்டி ஊழல் செய்வதற்கும்,
            படித்துப் பணியில் இருப்பவரின் அறிவு சாமர்த்தியம் காட்டி கையூட்டுச் செய்வதற்கும்,
            விஞ்ஞானியின் அறிவு பாதுகாப்பைக் காரணம் காட்டி அழிவுக்கான ஆயுதங்கள் செய்வதற்கும்,
            மேதைகளின் அறிவு பேதைகளின் பின் கைகட்டி அவர்கள் நீட்டும் பணத்துக்கு வாலாட்டி நிற்பதற்கும்...
                        என்று ஆன பின் அறிவை ஆராய வேண்டியிருக்கிறது.
            அறிவை அறிந்த அறிவே அறிவின் பிறழ்வைச் சுட்டிக் காட்டுகிறது. அறிவை அறியாத அறிவு வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழித்த ரசாயன வேளாண்மை போல புற்றீசலாய்க் கிளம்புகிறது.
            அறிவை அறியாத அறிவு சுற்றத்ததை அழித்து இறுதியில் தன்னையும் அழிக்கிறது.
            காட்டைச் சூறையாடிய, வனவிலங்குகளை வேட்டையாடிய, மலைகளைச் சுரண்டிய, மணலை அள்ளிய அறிவு, சந்தேகத்துக்கு இடமில்லாமல் அழிவுக்கான அறிவு நிலைநாட்டப்பட்டு விட்டது.
            பிழைக்கத் தெரிந்தவர் என்று சொல்லப்படுவதற்கான அறிவு வருங்காலத்தில் பிழைப்பிற்கே வழியில்லாமல் செய்து விடும் என்பதை விவசாய விளைநிலங்களை வீட்டு நிலங்களாக்கிய அறிவின் மூலம் உணரப்பட்டு வருகிறது.
            முன்விளைவுகளோடு, பின்விளைவுகளையும் சிந்திக்கும் அறிவானது, அறிவை அறியும் அறிவின் பக்குவத்தாலும், சிந்தனையில் கொள்ளும் நிதானத்தாலும் உருவாகிறது.
            இப்படிப்பட்ட அறிவையே அறிவறிந்த அறிவு என்கிறார் வள்ளுவர்.
            வருமுன் காப்பதும் அறிவுதான். வரும் போது காப்பதும் அறிவுதான். வந்த பின் காப்பதும் அறிவுதான். முக்காலத்துக்கும் காப்பு அறிவுதான் என்றால் எக்காலத்துக்கும் காப்பு அதாவது தலைமுறைகள் கடந்தும் நம் வருங்காலச் சந்ததிக்குமான காப்பு அறிவறிந்த அறிவுதான்.
            அறிவறிந்த அறிவு யாரையும் பரிதவிக்க விடாது.
            அறிவறிந்த அறிவு யாரையும் தெருவில் விடாது (குறிப்பாக பெற்றவர்களைத் தெருவில் விட்டு பிச்சையெடுக்க விடாது)
            அறிவறிந்த அறிவு வருங்காலச் சந்ததிக்கான வாய்ப்புகளை அழித்து விடாது.
            அறிவறிந்த அறிவே வளமான தலைமுறை குறித்து அக்கறை கொள்கிறது. அதற்கான ஆக்கப்பூர்வமானத் தன்மையோடு பொறுமையோடும், பக்குவத்தோடும் செயல்படுகிறது.
            வள்ளுவர் ஒரு சில குறட்பாக்களில் தன்னுடைய கருத்தை மிக ஆழமாக தெரிவிக்கிறார்.
            தன் கருத்தாகப் பதியும் அக்குறட்பாக்களில் அக்கருத்தை மிக அதிகமாக வலியுறுத்தவும் செய்கிறார். அதுதான் உண்மை, அதைத் தவிர வேறு உண்மை இல்லை என்ற இறுதித் தீர்ப்பை எழுதும் கண்டிப்போடு உணர்த்தவும் செய்கிறார்.
            அப்படிப்பட்ட குறட்பாக்களில் ஒன்றுதான்,
            பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.
            அறிவறிந்த பிள்ளைகளைப் பெறுவதே தான் அறிந்த வகையில் மிகச் சிறந்த பேறாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
            ஆம்!
            அறிவறிந்த தலைமுறையை உருவாக்க வேண்டும் பெற்றெடுத்தவர்கள்,
            மாறாகப் படித்த முட்டாள்கள் நிறைந்த தலைமுறையை அன்று என்பதைப் புரிந்து கொண்டால் வள்ளுவரின் அறிவறிந்த மக்கட்பேறு என்பதன் பொருள் புரிபடும்.
            அறிவார்ந்த முட்டாள்களால் இந்த உலகம் அவதிப்பட்டது போதும்.
            அறிவறிந்த பிள்ளைகளால் இந்த உலகம் உவகைப் பெறட்டும்.
            தென்னையை வளர்த்தால் இளநீர், பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்ற நிலை மாறி பிள்ளையைப் பெற்றால் பன்னீர் என்ற நிலை உண்டாகட்டும். அறிவறிந்தப் பிள்ளைகள் தம்மைப் பெற்றவர்களை மட்டுமல்லாது, தாம் உற்றவர்களை மட்டுமல்லாது இந்த உலகில் உள்ள எவரும் கண்ணீர் விட தாம் காரணமாக இருக்க மாட்டார்கள்.
            அறிவறிந்த அறிவு இயந்திர மயமாகச் சிந்திக்காது, இதயப் பூர்வமாகச் சிந்திக்கும். உலகின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சியாகக் கொள்ளம். மாறாக தன் மகிழ்ச்சியே உலகின் மகிழ்ச்சியாக்க கொள்ளம் சிறுமைத்தனமும், கபடத்தனமும் அதனிடம் இருக்காது.
            அறிவறிந்த மக்கட்பேறு பெற்றோர்க்கு மட்டுமன்று அது உலகுக்கேப் பேறு. உலகப் பொதுமறை அப்படித்தானேச் சிந்திக்கும்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...