27 Feb 2018

ஏழு தலைமுறைச் சாபம்!

குறளதிகாரம் - 7.2 - விகடபாரதி
ஏழு தலைமுறைச் சாபம்!
            ஒரு தலைமுறையின் பாவம் ஏழு தலைமுறைக்கு என்று கிராமத்தில் ஒரு வழக்கு உண்டு.
            பாவச் செயல்களைத் தாழ்த்திப் பிடிப்பதும், புண்ணியச் செயல்களை உயர்த்திப் பிடிப்பதும் அறத்தை நிலைநாட்டும் கிராம மக்களின் எளிய மொழிகளில் அன்றாடம் கேட்கலாம்.
            இக்கிராமத்து வழக்கு மொழிகள் உளவியல் சார்ந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தாம் செய்த பாவம் தம்மோடு போகாமல் தமக்குப் பின் வரும் தலைமுறையையும் அல்லவா பாதிக்கும் என்ற அக்கறையை விளைவிக்கின்றன.
            ஒரு தலைமுறையின் பாவம் ஏழு தலைமுறைக்கு என்றால், ஒரு தலைமுறையின் புண்ணியம் ஏழு தலைமுறைக்கு அல்லவா! இப்படித்தான் பாவத்தைக் கொய்க, புண்ணியம் செய்க என்ற உளவியல் தாக்கத்தை நிலைநாட்டி அறத்தை நிலைநாட்டுகிறது எளிய மக்களின் வழக்காற்று மொழிகள்.
            வள்ளுவர் அதன் அடியாழத்தைத் தொட முற்படுகிறார்.
            பாவம் என்றால் அதற்குக் காரணம் யாது?
            பழிதான் அல்லவா!
            அப்பழி ஏன் நேர்கிறது?
            பண்பற்ற பாதையில் பயணிப்பதால்தான் அல்லவா!
            அப்பண்பற்றப் பாதையில் பயணிக்கும் நிலை ஏன் ஏற்படுகிறது?
            இளம் வயதிலேயே பண்பானப் பாதையில் செல்ல பழக்கப்படுத்தாததால், பயிற்சிக்கு உட்படுத்தாததால், அதுவே சரியென உளவியல் ரீதியாக நிலைநிறுத்தப்படாததால் அல்லவா ஏற்படுகிறது.
            அதற்கு யார் காரணம்?
            பெற்றோர்கள் அன்றி வேறு யார் காரணம் இருக்க முடியும்?
            பெற்றோர்கள் பெற்றப் பிள்ளைகளைப் பண்புள்ளவர்களாகப் பழக்கப்படுத்த வேண்டும், பயிற்சிக்கு உட்படுத்த வேண்டும், நற்பண்பை உளவியல் ரீதியாக மனதில் நிலைநிறுத்த வேண்டும், தாமே அதற்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும்.
            அப்படி இருந்தால் மட்டுமே பண்புடை மக்கள் உரு பெறுவர்.
            கருவின் உருவை மரபு தீர்மானிக்கிறது என்றால், பண்பின் உருவைப் பெற்றோர்கள் தீர்மானிக்கின்றனர்.
            தன் வாழ்வில் மாபெரும் திருடனாகி மரண தண்டனை பெற்ற மகன், சாவதற்கு முன் கடைசி ஆசையாக தன் தாயைச் சந்திக்க ஆசைப்படும் கதை நாம் அறிந்ததுதான் அல்லவா!
            தாயைச் சந்தித்த மகன் தாயைக் கட்டித் தழுவி அவள் காதைக் கடித்துத் துப்புகிறான்.
            மரண தண்டனைப் பெற்றவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய காவலர்கள் இச்செயலால் அதிர்ச்சியில் உறைகிறார்கள்.
            அப்போது அவன் பேசுகிறான், "நான் முதன் முதலில் பள்ளியில் ஒரு கரிக்கோல் திருடி வந்த போதே என்னைத் திட்டித் திருந்தியிருந்தால் இன்றைக்கு ஒரு மரண தண்டனை கைதியாக உங்கள் முன் நின்றிருக்க மாட்டேன். அப்போது நன்மொழிகளை என் காதுகளில் போடாத என் தாய்க்கு காது இருந்தென்ன? இழந்தென்ன?"
            நல்வழிப்படுத்தாதப் பெற்றோர்கள் பழியை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
            பழி தீயது. தீயது நிழலைப் போல. பின்தொடர்ந்து வரும். எவ்வளவு தூரத்துக்கு வரும்? ஏழு தலைமுறை கால அளவுப் பயணிக்கும் தூரத்துக்குத் தொடர்ந்து வரும். அடேங்கப்பா ரொம்ப மோசம்தான் இந்தத் தீயது!
            ஏழு தலைமுறைக்குத் தொடரும் இந்தத் தீயது தீண்டாதிருக்க என்னதான் செய்வது?
            பிறரால் பழிக்கப்படாத அதாவது பழி பிறங்காப் பண்புடை மக்களாய் பிள்ளைகளை நெறியாள்கை செய்ய வேண்டிய பெரும் பொறுப்பை தலைமேற்கொண்டு தலையாயக் கடமையாகக் கொண்டு ஒழுக வேண்டும் பெற்றோர்கள்.
            அப்படிப் பெற்றோர்கள் இருந்தால் மட்டுமே,
            எழுபிறப்பும் தீயவைத் தீண்டா பழி பிறங்காப் பண்புடை மக்கள் பெறின் என்கிறார் வள்ளுவர்.
            ஒரு பிறப்பு என்பது ஒரு தலைமுறை.
            எழு பிறப்பு என்பது ஏழு தலைமுறை.
            அது என்ன ஏழு தலைமுறை? மூன்று நான்குத் தலைமுறையாக இருக்கக் கூடாதா? ஏழு தலைமுறை என்று ஏன் வள்ளுவர் உச்சபட்ச கணக்குக் காட்ட வேண்டும்? ஏழு தலைமுறை என்பதே குறைந்தபட்ச கணக்குதான் என்பது ஹிட்லரைக் கணக்கில் கொண்டால் புரிய வரும். வரலாறு என்றைக்கும் அதை மறக்கப் போவதில்லை. வரலாறு என்பது எத்தனை தலைமுறை கணக்கு என்பது நமக்குத் தெரியாததில்லை.
            பழிகள் அவ்வளவு எளிதாக மனதிலிருந்து மறைந்து விடுவதில்லை. அவற்றின் பதிவுகள் மரபு வழியாக நீடிக்கின்றன. மரபு வழித் தாக்கத்துக்கு எந்தப் பறவையும் மனிதனை நம்பத் தயாராக இல்லை என்பது ஒரு சான்று. எத்தகைய துன்பங்கள் செய்யாத ஒரு மனிதன் வந்தாலும் வண்ணத்துப் பூச்சிகள் பறந்து ஓடவேச் செய்கின்றன.
            பழிகள் தீயவைகள். தீயவைகள் அழிக்க முடியாத கறைகள். வரலாற்றில் நல்லவர்களைப் போலத் தீயவர்களும் அவர்கள் செய்த பழிக்காகப் பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
            பழிப்பு எனும் தீயது ஏழு தலைமுறை தாக்கம் கொண்டதாக இருப்பதால் பழியற்ற பண்புடை மக்களைத் தர வேண்டியது பெற்றோர்களின் ஒப்பில்லாப் பொறுப்பு.
            வளைந்து செல்லும் மரக்கன்றைத் தோட்டக்காரன் நினைத்தால் மரக்கன்றாக இருக்கும் போதே ‍நேர் செய்து சரி செய்து விடலாம் அல்லவா! மரமாக வளர்ந்து விட்டால் விஞ்ஞானிகள் நினைத்தாலும் வெட்டி எடுக்கத்தான் முடியுமே தவிர நேர் செய்ய முடியாது. இதே கருத்துப் பெற்றோர்களுக்கும் அப்படியேப் பொருந்தும்தானே. இளம் பிராயத்திலேயே திசை மாறும் அவர்களைப் பெற்றோர்கள் நினைத்தால் நேர் செய்து பண்புடை மக்களாய் மாற்றி விடலாம். வளர்ந்து விட்டப் பிறகு யார் நினைத்தாலும் அதனால் நேரப் போகும் பழியை ஏழு தலைமுறை வரை வெட்டி வீழ்த்த முடியாது. ஏழு தலைமுறை கடந்த பின்னும் வெட்டி வீழ்த்த முடியாது.
            தீயது எப்போதும் தீயதே!  ஏழு தலைமுறைக்கும் தொடரும் சாபம் அது!
            அறிவறிந்த மக்கட்பேற்றை முதல் குறளில் சொன்ன வள்ளுவர், அறம் அறிந்த மக்கட்பேற்றை இரண்டாவது குறளிலே வலியுறுத்தி அற அதிகாரம் புரிவது கவனிக்கத்தக்கது.

*****

2 comments:

  1. அருமை.தான், பெற்றோர் ,சமுதாயம் மூவருக்குமே பங்கு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ஏழு தலைமுறை நன்றி தங்களின் மேலானப் பகிர்வுக்கு!

      Delete

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...