31 Mar 2017

ஆணவத்தில் அடிக்கும் சம்மட்டி


ஆணவத்தில் அடிக்கும் சம்மட்டி
பிரபஞ்சத்தின் இருப்பைப்
பார்க்கையில்
பிச்சையிடும் சல்லிக்காசு
எவ்வளவு எவ்வளவு சிறிது என்று
எண்ணிப் பார்க்க
எங்கே நேரமிருக்கிறது?
அதை விட வேலை
பெரிதாக இருக்கிறது.
அதை விட மேலும் பெரிதாக
பிச்சையிட்ட காசிற்காக
பெருமை பேசிக் கொள்ள
நேரம் போதாமையாக இருக்கிறது.
காற்றும், ஒளியும், நீரும் தந்த
பிரபஞ்சம் எதற்காகத்
தன்னைப் பற்றி பேசிக் கொண்டது?
ஆக்ஸிஜன் சிலிண்டரும்,
மின்சார ஒளியும்,
மினரல் வாட்டரும்
தந்து விட்ட மனிதன்
தன் கைமாறுக்காக
சவாலுக்கு அழைக்கிறான்
ஆணவத்தில் அடிக்கும் சம்மட்டி
பிரபஞ்சத்திடம் இருப்பது புரியாமல்.
*****

அன்ன நடை ஸ்பீடு ஸ்கிரிப்ட்


கேள்வி - பதில்
            "வருசத்துக்கு 500 டாஸ்மாக்கை மூடுனா அஞ்சு வருசத்துக்கு எத்தனை மூடுவாங்க?"
            "அஞ்சு வருசத்துக்கும் காலையில எத்தனை டாஸ்மாக்கைத் திறக்குறாங்களோ, அதைத்தானே ராத்திரி ஆனா மூடுவாங்க சார்!"
*****
அன்ன நடை ஸ்பீடு ஸ்கிரிப்ட்
            மெதுவாக நடந்து வந்த தயாரிப்பாளர் இயக்குநரிடம் கேட்டார், "ஒரு செம ஸ்பீடு ஸ்கிரிப்ட் இருந்தா ஒண்ணு சொல்லுங்க!"
*****
மர்மம்
            தலைவர் சாவில் மர்மம் இருப்பதாகப் புகார் கொடுத்தவர் மறுநாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
*****

ஆண்கள், பெண்கள்


வடிவம்
அங்குசம்
ஒருநாள்
தும்பிக்கையின் வடிவில்
கொல்கிறது
பாகனை.
*****

ஆண்கள், பெண்கள்
தாத்தாவைப் போல்
அப்பா
அப்பாவைப் போல்
மகன்
ஆண்கள் எப்போதும்
ஆண்கள்தான்
அதிகாரம் செய்வதில்.
பாட்டியைப் போல
அம்மா
அம்மாவைப் போல
மகள்
பெண்கள் எப்போதும்
பெண்கள்தான்
பொறுத்துப் போவதில்.
*****

வஞ்சம்
தொங்கலில் விட்டு
சுழல விட்ட பின்
காற்று கொடுக்க ஆரம்பித்தது
மின்விசிறி.
*****

வாக்குமூலம்


காரணம்
            வாங்கிக் கொடுத்த செல்போனை வேண்டாமென்று மறுத்து அதற்கு அப்பா சொன்ன காரணம், "அப்புறம் போன்லேயே பேசிகிட்டு, நேர்ல பார்க்க வர மாட்டீங்கடா!"
*****
வாக்குமூலம்
            ஓட்டுக் கேட்க வந்த வேட்பாளரிடம் எழுதி வாங்கிக் கொண்டனர் வாக்காளர்கள், "சட்டசபைக்குப் போறதுக்கு முன்னாடி ரிசார்ட்டுக்குப் போகக் கூடாது!"
*****
அர்ச்சனை
            "தொகுதிக்கு வந்திருந்தா கூட இவ்வளவு திட்டியிருக்க மாட்டாங்க போலிருக்கு!" என்று சலித்துக் கொண்டார் வாட்ஸ் அப்பிற்கு வந்த தலைவர்.
*****

ஒண்டிகள்


ஒண்டிகள்
ஒண்டிக் கொள்ளும்
கோழிகள்
ஒரு பொழுதும்
கூடுகள் கட்டப் போவதில்லை,
வாடகை வீட்டில்
ஒண்டிக் குடித்தனம்
செய்பவனைப் போல.
*****

சி5
குலை தள்ளிய வாழையின்
அடியில்
அச்சுறுத்தாத
சிங்கங்கள் ஐந்து.
*****

சாப்பாடு
வெள்ளரி விற்பவளின்
மதியச் சாப்பாடு
வெள்ளரி.
*****

30 Mar 2017

தலை தட்டுதல்


தலை தட்டுதல்
குனிய மறந்து செல்கையில்
தலை தட்டும்
நிலை
ஆணவத்தை
சுட்டிக் காட்டுவதாகவும்
இருக்கக் கூடும்.
*****

இடவாசம்
கொல்லை
அம்மாவின் அன்பு வாசம்.
திண்ணை
அப்பாவின் அதிகார வேஷம்.
*****

கழிதல்
யாரோடு பழகாதே
என்று சொன்னேனோ
அவனோடு
ஓடிப் போன மகளின்
நிழலில்
கழியும்
அந்திமக் காலத்தில்
பேரனின் மூத்திரத்தோடு
கழிந்தோடுகிறது
ஜாதிப்பற்று.
*****

அஃது யாதெனின்...


முன் வருதல்
            பிரமாண்ட இயக்குனர் முன் வந்தார் லோ பட்ஜெட் படம் தயாரிக்க.
*****
100 லிருந்து 10
            கிராமத்தில் நூறு நாள் வேலை பார்த்த முனியம்மா டவுன் வந்ததும், பத்துப் பாத்திரங்களைத் தேய்க்கும் வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.
*****
அஃது யாதெனின்...
            வாட்ஸ் அப்பில் காதலித்த ஆனந்தும், பிரியாவும் திருமணத்துக்குப் பின் பேஸிக் மாடல் செல்போன் வாங்கிக் கொண்டார்கள்.
*****

குனிவு


குனிவு
தாத்தாவுக்கு விழுந்த கூன்
நிமிரவேயில்லை
மகன் சம்பாத்யத்தில்
மருமகள் கையால்
சாப்பிட ஆரம்பித்தப் பிறகு.
*****

மட்பாண்டங்கள்
உடைவதோ
உடையாமல் இருப்பதோ
மட்பாண்டங்கள் தாங்கும்
கைகளின் அக்கறையில் இருக்கிறது.
‍உடைந்து விடும்
மட்பாண்டங்களுக்காகத்தான்
என்ன செய்து விட முடியும்
ஒரு புது மட்பாண்டம் வாங்குவதையோ
அல்லது
அதற்குப் பதில்
ஒரு எவர் சில்வர் பாண்டத்தையோ நிரப்புவதைத் தவிர.
எளிதில் உடைந்து விடும்
குழந்தைகள்
மட்பாண்டம் போன்றவர்கள்.
*****

500 குளோஸ்


தியானம்
            "சார் ரொம்ப பிஸியோ?" என்று கேட்ட ராகவனுக்குப் பதில் சொன்னார் பியூன் பரமசிவம், "தியானத்துல இருக்கார் சார்!"
*****
கோடை வாழிடம்
            "இந்த சம்மர்க்கு எங்கப் போகலாம்பா?" என்ற மகனிடம் ரமணன் சொன்னார், "கோச்சிங் கிளாஸ்க்கு!"
*****
500 குளோஸ்
            "இந்த வருஷமும் 500 டாஸ்மாக்கை மூடுறாங்களாம்!" என்றான் ரகு, விசுவிடம் 26 ஜூலை 2050 இல்.
*****

காற்றின் கோடு


காற்றின் கோடு
காற்றில் கிழித்தக்
கோடாய்
அங்கேயே தங்குகிறது
பார்வையற்ற
பிச்சைக்காரன் இசைக்கும்
புல்லாங்குழல் இசை.
*****

பார்வை
ரத்தம் கக்கிச் செத்தவன்
வெறித்துப்
பார்த்துக் கொண்டு இருந்தான்
அய்யனாரை
தானம் செய்த
கண்கள் இரண்டால்.
*****

நடை
கொம்புள்ள மாடு
தலைசாய்த்து
நடக்கிறது.
*****

29 Mar 2017

பொம்மையைக் கொன்றவர்கள்


பொம்மையைக் கொன்றவர்கள்
பொம்மையைக் கொன்றவர்கள்
சுதந்திரமாக
உலவிக் கொண்டிருந்தார்கள்
நடு வீட்டுக்குள்.
*****

கவி
கம்பன் வீட்டுக் கட்டுத்தறிக்கு
நிஜம்
பாடத் தெரியவில்லை.
*****

நாகரிகம்
நாலு எழுத்துப் படிச்சா
நாகரிகம் வரும்
என்றார்கள்.
நாலு எழுத்துப் படித்து
ஐந்து இலக்கத்தில்
முதல் மாதச் சம்பளம் வாங்கியவன்
முதல் வேலையாகச் செய்தான்
அப்பனையும், ஆயியையும்
முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்ப்பதை.
*****

மிக்சர் தலைவர்


மிக்சர் தலைவர்
            "எதற்கெடுத்தாலும் போராடுறாங்க!" என்று சலித்துக் கொண்டார் நியூஸ் சேனலைப் பார்த்துக் கொண்டு மிக்சர் தின்று கொண்டிருந்த தலைவர்.
*****
எங்கப்பன் குதிரில இல்ல!
            "எதைப் பலி கொடுப்பது?" என்று மேலிடம் யோசித்துக் கொண்டிருக்க, "ஒரு தேசம் நல்லா இருக்க ஒரு மாநிலத்தைப் பலி கொடுப்பது தவறில்லை!" என்று பேசிக் கொண்டிருந்தார் தமிழ்நாட்டுத் தலைவர்.
*****
கடைசி யோகி
            காட்டை அழித்துப் பிரமாண்ட சிலையாய் அவதரித்தார் கடைசி யோகி.
*****

தீர்த்தல்


தீர்த்தல்
எதிர்ப்பு வந்த பிறகு
கருத்துரைத்தவன்
திட்டித் தீர்த்தான்
தானுரைத்த
கருத்தை.
*****

அழுகை
பிரசவ வலியில்
அழுதவள்
மீண்டும் அழுதாள்
பிறந்தது
பெண் குழந்தையென
தெரிந்ததும்.
*****

அர்த்தம்
"இன்றைக்கு ஒரு நாள் மட்டும்
அட்ஜஸ்ட் பண்ணிக்கோ!"
என்றவள்
சமைத்துப் போட்டதன் அர்த்தம்
மறுநாள் புரியக்கூடும்.
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...