31 Aug 2020

மனம் வளர்ப்பவர்கள்

 


அச்சச்சோ

பெரிய மலை

சிறிய பறவை

அச்சச்சோ

அளந்து விடும் சிறிய பறவை

*****

மனம் வளர்ப்பவர்கள்

மனதை வளர்க்கிறாய்

மலை சிறிதாகிறது

கடல் சிறிதாகிறது

பூமி சிறிதாகிறது

வானம் சிறிதாகிறது

பிரபஞ்சம் சிறிதாகிறது

அதற்கு மேல் சிறிதாவது ஏது

மனம் வளர்வதாகிறது பெரிதாகிறது

பிரபஞ்சத்தின் சிறுபுள்ளி

தானென்பது

மறந்து போகிறது

*****

இரைச்சலின் அமைதி

கரையில் ஓலமிடும்

நீர்தான்

நடுகடலில்

அமைதியாக இருக்கிறது

*****

கலியாண விளையாட்டுகள்!

கலியாண விளையாட்டுகள்!

செய்யு - 550

            தண்ணிய ஊத்தி எடுத்தாந்த செப்புக் கொடத்துக்குள்ள மொதல்ல கையில என்னத்தையோ வெச்சி மறைச்சி உள்ளாரப் போட்டாங்க. ஒரே நேத்துல சட்டுன்னு பொண்ணு மாப்புள்ளையும் கைய வுடணும். கைய வுட்டு கொடத்துலப் போட்டதெ மொதல்ல யாரு எடுக்குறான்னு பாத்தாங்க. பாலாமணி பட்டுன்னு கைய விட்டு எடுத்தாம். வெளியில வந்த அவ்வேம் கையில என்ன இருக்குதுன்னு பாக்க சனங்க அலமோதுனுச்சுங்க. அவ்வேம் கைய விரிக்க, அதெ பாத்தா அத்து மோதிரம். அடுத்ததா மறுபடியும் கையில மறைச்சி தண்ணிக் கொடத்துக்குள்ள போட்டு பொண்ணையும் மாப்புள்ளையையும் எடுக்கச் சொன்னாங்க. இந்த மொறை சுதாரிச்சிச் செய்யு மொதல்ல கைய எடுத்தா. வெளியில வந்த அவ்வே கையில என்னா இருக்குன்னு பாத்தா பாலாடை. கொழந்தைங்களுக்கு மருந்து கொடுக்க உபயோகம் பண்ணுவாங்களே அந்தப் பாலாடை.

            மூணாவது முறையும் கையில மறைச்சி குடத்துக்குள்ளப் போட்டு எடுக்கச் சொன்னாங்க. மொத முறை மாப்புள்ள எடுத்தாம், ரண்டாவது முறை பொண்ணு எடுத்தா, மூணாவது முறை யாரு எடுக்கப் போறான்னு மணமேடையில நின்னுகிட்டு இருந்த சனங்களுக்கு ஆவலா போச்சு. உள்ள போன கையி சட்டுன்னு வெளியில வர்றாப்புல தெரியல. ரண்டு கைகளும் செப்புக் கொடத்துக்குள்ள துழாவிகிட்டெ இருக்கு. "ஏ சட்டுபுட்டுன்னு கையில எடுடி செய்யு!"ன்னு ஒரு பக்கத்துப் பொம்பள சனங்க சொல்லுதுங்க. "ஏ ஆம்பளெ சிங்கம் டாக்கடர்ரு சட்டுப்புடுன்னு எடுய்யா!"ன்னு இன்னொரு பக்கத்துப் பொம்பள சனங்க சொல்லுது. பொண்ணா? மாப்புள்ளையாங்ற போட்டியாப் போயி குடத்துக்குள்ள ரண்டு கைக சிக்கிச் சின்னாபின்னப்படுதா? ரண்டு கைகளுக்குள்ள ஒரு குடம் சிக்கிச் சின்னிபின்னாப்படுதான்னு தெரியல. நேரந்தாம் ஆவுதே தவுர. ரண்டு கையும் வெளியில வர்றாப்புல தெரியல. அப்பதாங் குடத்துக்குள்ள மறைச்சி கைய வுட்ட ஐயரோட குரலு வருது. குடத்துக்குள்ள இந்த மொறை ஒண்ணும் போடல, ரண்டு பேத்தும் கைய எடுத்துப்புடுங்கன்னு. வெக்கத்துல ரண்டு பேரும் பட்டுன்னு கைய எடுக்கப் பாக்குறாங்க. முடியல. ஒண்ணும் அவ்சரமில்ல ஒருத்தரு ஒருத்தரு மொல்லமா எடுங்கோன்னு இன்னொரு ஐயரோட குரலு வருது. ரண்டு பேத்துக்குமே வெக்கமா போவுது. ஒவ்வொருத்தரா கைய எடுக்கறாங்க. ரண்டு பேத்துக்குள்ள ஓர் அந்நியோன்யம் உண்டாவுது.

            சனங்க எல்லாம் ரண்டு பேத்தையும் பாத்துச் சிரிக்கிதுங்க. பாலாடைய மொதல்ல செய்யு கையில எடுத்ததால பொறக்கப் போறது பொம்பள புள்ளத்தாம்ன்னு சில சனங்க சிரிக்குதுங்க. மோதிரத்த மொத மொதலா கையில எடுத்ததால ஆம்பளெ புள்ளன்னுத்தாம் சில சனங்க சிரிக்குதுங்க. அதெப்படி மோதிரத்துக்கா புள்ளே கணக்கு? பாலாடைக்குத்தாம் புள்ளெ கணக்கு? பாலாடைய எடுத்தவ பொண்ணுங்குறதால பொண்ணுத்தாம் டாக்கடருக்குப் பொறக்கப் போவுது. இந்த நிமிஷத்துலேந்து பொண்ணுக்கு நகெயெ சேக்க ஆரம்பிச்சிடுடா டாக்கடர்ருனனு சனங்கள்ல சில கெக்கெலி கொட்டிச் சிரிக்கிதுங்க. அதெ கேட்டுக்கிட்டு நமக்கு பொம்பளப் புள்ளத்தாங் வேணுங்றாம் பாலாமணி. அவ்வேம் அப்பிடிச் சொன்னதெ கேட்ட வுடனே சனங்க ஒனக்கென்னடி செய்யு புள்ளே வேணுங்குதுங்க. அவ்வே வெக்கப்பட்டுக்கிட்டுத் தலையக் குனிஞ்சிட்டுச் சிரிக்கிறா. பதிலச் சொல்ல மாட்டேங்றா. ஏய் அமுக்குணிப் பொண்ணே சொல்லித் தொலைடி என்ன புள்ளே வேணும்ன்னு சனங்க சீண்டுதுங்க. ஆம்பளெ புள்ளங்ற செய்யு தலையக் குனிஞ்சிக்கிட்டு.

            இப்பவே ஆம்பளெ புள்ள, பொம்பள புள்ளன்னு கணக்கப் போட ஆரம்பிச்சிட்டியளா? அதல்லாம் இன்னிக்கு ராத்திரிக்கிக் கதெ முடிஞ்சி பத்து மாசம் ஆன பெற்பாடுதாங், அவ்சரப்படாதீயன்னு அதுக்கும் சில சனங்க கெக்கலிக் கொட்டுதுங்க. பதிவிசா கேள்வியக் கேக்கறாப்புலயும் கேக்குறது, அதாச்சி என்னவோ எதுவும் தெரியாததப் போல. அப்பிடிக் கேட்டுப்புட்டு அதுக்கு ஒரு பதில வாங்குனப்ப அதுக்கும் சேத்து பரிகாசம் பண்ணுறதுதாங் தாலி கட்டி முடிஞ்ச பிற்பாடு நடக்குற கலியாண வெளையாட்டுங்க. மணமேடையில இதெ நின்னுப் பாக்க பாக்க ஆசையா இருக்கும். மணமேடையில நின்ன உறவுக்கார சனங்களத் தவுர மித்த சனங்க எல்லாம் சாப்புட்டுக் கெளம்புறதுல குறியா நின்னதுல முக்காவாசி மண்டபம் காலியாயிருந்துச்சு. மேடைக்கு கீழ இருந்த கொஞ்ச நஞ்ச சனங்களும் அங்க இங்கன்னு வெளியிலயும் உள்ளயும் அலைஞ்சுகிட்டு கெடந்ததுங்க. இந்த வெளையாட்டுகள மேடையில நின்னுப் பாத்தது ஒறவுக்கார சனங்க மட்டுந்தாம். அதுவும் கொஞ்சந்தாம்.

            "மணப்பொண்ணும் மாப்புள்ளையும் ஒரே மாலைய எம்புட்டு நேரமா போட்டுருப்பீயே? ஏ பொண்ணு! நீ ஒம் மாலையத் தூக்கி ஆம்படையான் கழுத்துல போடு! யப்பா ஆம்படையா ஒம் மாலையத் தூக்கி ஆத்துக்காரிக் கழுத்துல போடு!"ன்னாரு மூணாவது ஐயரு. ரண்டு பேரும் மாலையக் கழட்டி போட வர்றதுக்குள்ள சுத்தி நின்ன சனங்களப் பாத்து ஐயரு சொன்னாரு, "என்னா மனுஷாளுங்க நீங்க? ஒங்கப் பொண்ணோட கழுத்துல மாலையப் போட வர்றாம்! சும்மா இருக்கேளே? அந்தப் பக்கத்துலயும்தாம் கேக்குறேம், ஒரு பொண்ணு மாலையப் போட வர்றா! சும்மா இருக்கேளே?"ன்னு சொன்னதும்தாம் தாமசம். சனங்க பொண்ணையும் மாப்புள்ளையையும் மாலையப் போட வுடாம இழுக்குறதும் வுடுறதுமா போக்குக் காட்டுதுங்க. சரியா மாலையப் போட வர்றப்போ பொண்ணையும் மாப்புள்ளையையும் இழுக்குதுங்க. இவுங்க இழுக்குற இழுப்புல மாலையப் போட முடியாதுன்னு பொண்ணும் மாப்புள்ளையும் சோந்து போறப்ப பிடியை விடுதுங்க. சரித்தாம் பிடிய விட்டாச்சேன்னு நெனைச்சு பொண்ணும் மாப்புள்ளையும் மாலையப் போட வர்றப்ப சட்டுன்னு கையப் பிடிச்சி இழுத்து வுட்டுப்புடுதுங்க. இதெ மாத்தி மாத்திச் செஞ்சு பொண்ணும் மாப்புள்ளையும் களைச்சுப் போயி இந்த மாலையப் போடவே வாணாம்ன்னு நெனைக்குறப்ப பிடியை வுட்டுப் போட வைக்குதுங்க. பொண்ணுக்கும் மாப்புள்ளைக்கும் அப்பாடான்னு போவுது. வெளையாட்டு ஏக தமாசாப் போவுது.

            வெளையாட்டு இதெப் போல நெறைய இருக்குதாம். ஆன்னா நேரந்தாம் இல்ல. வேக வேகமா பொம்மைய ஒண்ணு வெச்சு கொழந்தெ போறந்தாப்புல அடுத்தாத ஒரு நாடவத்தெ நடத்துறாரு ஐயரு. நாடவம் நடந்துக்கிட்டு இருக்குறப்பவே ராசாமணி தாத்தா சத்தத்தெப் போடுது, "போதும் போதும் இனுமே அதெ அவுங்கப் பாத்துப்பாங்க. நேரமாயிடுச்சு. பொண்ணு மாப்புள்ள சீக்கிரமா சாப்புட்டுக் கெளம்புனாத்தாம் நாலரைக்குள்ள திட்டைக்குப் பொண்ணு வூட்டுக்கு அழைப்புக்குப் போவ முடியும். சட்டுபுட்டுன்னு முடிச்சி அனுப்புங்க. பெறவு பந்தியில வேற வெளையாட்டு இருக்கு. படத்தெ எடுக்குறவனுவோ இவ்வேம் அவளுக்கு வூட்டுன்னு அவ்வேம் இவளுக்கு வூட்டுன்னு அத்து ஒரு அரை மணி நேரம் ஆவும்!"ன்னு சொன்னதும் எல்லாம் ஒரு முடிவுக்கு வருது.

            "ஆத்துக்காரி கையிலயும் ஆம்படையாம் கையிலயும் அப்பளத்தெ கொடுத்து தலையில உடைச்சிடச் சொல்லிட்டா வெளையாட்டு மூணா முடியும்!"ங்றாரு ஐயரு.

            "அதெல்லாம் சாப்புடுற எடத்துல கன்னத்துல, தலையிலன்னு ஒடைச்சிப்பாங்க!"ங்குது ராசாமணி தாத்தா சிரிச்சிக்கிட்டெ. பொண்ணையும் மாப்புள்ளையையும் சாப்புடக் கொண்டு போறாங்க. மணமேடை கிட்டதட்ட காலியாவுது. மண்டபத்துல அங்க இங்கன்னு நின்னுகிட்டு இருந்த எல்லா சனமும் பந்தி பரிமாறுற எடத்துல இருக்குது. மண்டபத்து வாசல்லு பாத்தா மணமேடையோட ஓரத்துல ரண்டு உருவந்தாம் தென்படுது. ஒண்ணு ராசாமணி தாத்தா. இன்னொண்ணு சுப்பு வாத்தியாரு. இதெல்லாம் ஓரமா பாத்துட்டு நிக்குறப்ப சுப்பு வாத்தியாருக்கும் மனசு குளுந்து போவுது. இருந்தாலும் மனசுக்குள்ள உறுத்திக்கிட்டு இருக்குறதெ யாருகிட்டாச்சும் கேட்டுத்தானே ஆவணும்.

            "ன்னா மாமா! தாலி கட்டுனது பன்னெண்டே காலு! கவனிச்சீயளா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அத்து கணக்குல வாராது மாப்ளே! கலியாணம் ஆரம்பிச்ச நேரந்தாம் கணக்குல வாரும். கூட்டத்தெ பாத்தீயா? இந்தக் கடைசிலேந்து அந்தக் கடைசி வரைக்கும் மாங்கல்யத்த தொட்டுக் கொடுத்து அட்சதெய கொடுக்குறதுக்குள்ளாரவே அரை மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சுல்லா?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "வாத்தியாருதானே வைக்குறது நம்ம மொற!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நாம்ம சொல்லிட்டேம்! எங்க ஒம் மாப்புள கேக்குறாம் மாப்ளே? ஏழு பேத்து ஒரு கலியாணத்தெ நடத்த தேவையா பாரு? நாம்ம ஒரு ஆளே போதும் மாப்ளே! என்னவோ ஆசப்பட்டு புது மொறையில செய்யணும்ன்னாம். நெலையா நின்னாம். செரி எத்தோ பண்ணித் தொலைன்னு வுட்டுப்புட்டேம். இப்போ பயலுக்குத் திருப்தியா போயிருக்கும். ல்லன்னா மனசுக்குள்ளயே கரிச்சிக்கிட்டுக் கெடப்பாம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "பன்னெண்டு மணிக்குள்ளயே ஒட்டுமொத்த கலியாணத்தையும் முடிச்சிருக்கலாம் மாமா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "என்னத்தெ பண்ணச் சொல்றே மாப்புள! சில சமயம் தேவையில அப்பிடித்தாம் ஆயிப்புடுது!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            கலியாணம் முடிஞ்ச ஒடனே காரு சம்பந்தமாவும், கட்டிலு பீரோ சம்பந்தமாவும் ராசாமணி தாத்தா சொல்றார்ன்னு சொன்னது இப்போ நெனைப்புக்கு வந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு. அதெ பத்தியும் கேட்டுப்புடுவோம்ன்னு நைசா வார்த்தையப் போட்டாரு சுப்பு வாத்தியாரு.

            "ன்னா மாமா! கார்ரு, கட்டிலு, பீரோப் பத்தி ஏத்தோ கலியாணத்தெ முடிச்சி சொல்லணும்ன்னு சொன்னீயளே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஆங் சொன்னேம்லா மாப்ளே! அத்து வந்து ஒண்ணும் நெனைச்சிக்காதே மாப்ளே! மூணு அழைப்பு முடிஞ்சு சென்னைப் பட்டணத்துல குடி வைக்குறப்போ அதெ முடிச்சி வுட்டுப்புடுவேம். கலியாண அவசரத்துல அதெ போட்டு அலட்டிக்கிட வாணாம்ன்னு ஒம் மாப்புளத்தாம் சொன்னாம். அதாங் அதெ அப்பிடியே ஒதுக்கி வெச்சிட்டுக் கலியாண காரியத்தெ மட்டும் பாத்தாச்சு. யிப்போ பாரு நெறைவாப் போச்சுது. ஒமக்கு மனசுல ஒண்ணும் வருத்தமில்லல மாப்ளே? அத்தெ மட்டும் காரணம்ன்ன நெனைச்சிப்புடாதே மாப்ளே! கிட்டக்க வா! இன்னொரு சங்கதியும் இருக்கு!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            சுப்பு வாத்தியாரு நெருங்கிப் போனாரு. குசுகுசுன்னு சொல்லுறாப்புல சொன்னுச்சு ராசாமணி தாத்தா. "நம்ம பயெ சென்னைப் பட்டணத்துல பெரிய டாக்கட்ர்லா! ஏற்கனவே இன்கம்டாக்ஸ் பெரச்சனெ இருக்கு மாப்ளே! அதுல தெரிஞ்ச எவனுக்காச்சும் பத்திரிகெ வைக்கத்தானே வேண்டிக் கெடக்கு. அதுல எவனாச்சும் கலியாணத்துக்கு வந்திருப்பாம். பத்திரிகெ வைக்கலன்னாலும் செரித்தாம். நமக்கும் தெரியாமா வர்றாம இருக்க மாட்டாம். எதுக்குங்றே? கங்காணிக்கத்தாம்! இப்பத்தாம் ஆளாளுக்குக் செல்ல கையில வெச்சிக்கிட்டு கிளிக்கு கிளிக்குன்னு போட்டாவே எடுத்துத் தள்ளுறானுவோளே? அப்பிடி எடுத்து டெல்லிக்கு அனுப்பிப்புட்டாம்ன்னு வெச்சுக்கோ! அதாங் நகெ நட்டு சீரு சனத்தி கலியாண சாமாஞ் செட்டு கட்டிலு பீரோ காருன்னு அதெ படத்தெ பிடிச்சிட்டாம்ன்னா வெச்சுகோ, சோலி முடிஞ்சது மாப்ளே! வெசாரணைன்னு கூப்ட்டு வெச்சு நொங்கு எடுத்துப்புடுவாம். அதுக்குதாங் நகெயெக் கூட போட்டு வுடாம செட்டு நகைய வாடகைக்கு எடுத்து மாட்டி வுடுன்னு ஒரு ஏற்பாட்ட பண்ணி வுட்டது. இப்போ புரியுதா ஒனக்கு? நீயி நாளைக்கு காலையில மொத அழைப்பு முடிஞ்சி அனுப்பி வுடுறப்போ நூத்துப் பவுனு நகையெ லிஸ்ட்டுப் போட்டு ஒரு காயிதத்துல எழுதி ஒம் மாப்புள்ளைக்கிட்டெ கொடுத்துப்புடு மாப்ளே! வந்த ஒடனே மொத வேலையா அதெ பேங்கு லாக்கர்லத்தாம் கொண்டு போயி வைக்கணும்! நகெ நட்டுல்லாம் வெச்சு வூட்டுல பாதுகாப்பு பண்ணிக்கிட்டு கெடக்க முடியாது மாப்ளே! ன்னா சொல்றே மாப்ளே? மித்தபடி எல்லாம் நெறைவுதானே?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            சுப்பு வாத்தியாரு மனசு எதையும் சொல்ல முடியாம பலவெதமா சொழண்டு சொழண்டு அடிச்சிது. "என்னத்தெ நெறைவா முடிஞ்சது கலியாணம்? காலைச் சாப்பாட்ட சாப்புட்டவேம் பாதி, சாப்புடாதவேம் பாதி. மதியானச் சாப்பாட்டுலயும் அதாங் கதி. எம்மாம் கூட்டத்துக்குச் சாப்பாட்டப் போட முடியும்ன்னு கணக்குத் தெரியாம பத்திரிகை வெச்சதுல கூட்டம் குமிஞ்சிப் போயி இந்தக் கூட்டத்துல சாப்புட முடியுமோ? முடியாதோன்னு நெனைச்சு கெளம்பிப் போனவேம் பாதி. கெளம்பிப் போவாம சாப்பாடு கெடைக்காம நின்னவேம் பாதி. இதுல என்னத்தெ நெறைவா பண்ணிப்புட்டாத சொல்றானுவோ?"ன்னு புரியாம முழிச்சாரு சுப்பு வாத்தியாரு.

            "கலியாணம்லாம் முடிஞ்சித்தாம் காரு, கட்டிலு, பீரோ, நகெ நட்டுக்கான ஏற்பாடுகளப் பண்ணிக்கிடலாம்ன்னா போட்டிருந்த கடனைக் கூட தள்ளிப் போட்டிருக்கலாமே. என்னவோ டாக்கடர்ரு மாப்புள்ளைன்னா மண்டபத்துல கார்ரக் கொண்டாந்து நிறுத்துனாத்தாம் ஆச்சுன்னு கூப்பாடு போட்டானுவோ. இப்போ பாத்தா காருக்குன்னு பணத்தெ வெரட்டி வெரட்டி வாங்கிப்புட்டு ஒண்ணுத்தையும் பண்ணாம அது இதுன்னு சம்பந்தம் இல்லாத வெளக்கத்தைக் கொடுக்குறுனாவோ! கலியாணச் சிலவுக்குன்னு பணத்தெ கொண்டாந்து கொடுத்தப்போ அதெ பாங்கியில போட்டா பெரச்சன ஆவும்ன்னு சொன்னப் பயலுவோ! வூட்டுல இருக்குற பணத்தெ திருட வந்தா அவ்வேம் மொகத்த கனவுல பாத்தே கண்டுபிடிச்சிப்புடுவேம்ன்னு சொன்னவனுவோ! யிப்போ எடுத்த நகெ நட்டெ கூட பொண்ணப் போட வுடக் கூடாதுன்னு சொல்லிப்புட்டு, அதெ வாங்கிட்டுப் போயி பாங்கி லாக்கர்ல வைக்கணும்ன்னு நிக்குறானுவோ.  அதுக்கு திருட்டுப் பயங்ற காரணத்தெ யில்லா முன்னுக்குப் பின்னா சொல்லுறானுவோ. ஏம் இப்போ நகெ நட்டெ திருட வந்தா திருட்டுப்பய மூஞ்சு கனவுல வந்து தெரியாதாக்கும்?"ன்னு சுப்பு வாத்தியாரு வெத வெதமா நெனைச்சாரு.

            எல்லாத்தையும் மனசுக்குள்ள வெத வெதமாத்தாம் நெனைச்சிக்கித்தாம் முடிஞ்சதே தவுர எதெப் பத்தியும் அவரால கேள்வியக் கேக்க முடியல. பேச்சுன்னு வர்றப்போ சம்பந்தம் யில்லாம எதாச்சும் சொல்லி சமாளிக்கத்தாம் அவரால முடிஞ்சிது. ஊமைக்குத்தா கூட விசயத்தெ சொல்ல முடியல. ஒருவேள எதாச்சும் கேட்டு கலியாணம் முடிஞ்ச ஒடனேயே பெரச்சனையா பண்ணுறதா கெளப்பி வுட்டுப்புடுவானுவோளோன்னு பயந்தாரு. கடெசீயா, "செரித்தாம் மாமா! பெரியவுக சொன்னா சரியாத்தாம் இருக்கும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "எம் மாப்புளன்னா மாப்புளத்தாம்! கற்பூரப் புத்தி. பட்டுன்னு புடிச்சிக்குவே! செரி வா! ரவ்வச் சோத்துல ரண்டு அள்ளிப் போட்டுக்கிட்டு அடுத்து ஆவ வேண்டிய வேலையப் பாப்பேம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

*****

30 Aug 2020

அது அது அப்படியே இருக்கின்றன


 அது அது அப்படியே இருக்கின்றன

சூரியன் உதிப்பதாகக் கொள்ளப்படுகிறது

நிலவு தேய்வதும் மறைவதாகவும் கூறப்படுகிறது

விண்மீன்கள் ஒளி விடுவதாகச் சொல்லப்படுகிறது

பூக்கள் மலர்வதாக வியக்கப்படுகிறது

மழை பொழிவதாகப் பேசப்படுகிறது

இரவு பகல் மாறி மாறித் தோன்றுவதாக உணரப்படுகிறது

சூரியன் அப்படியே

நிலவு அப்படியே

விண்மீன்கள் அப்படியே

பூக்கள் அப்படியே

மழை அப்படியே

இரவு பகல் அப்படியே

அப்படியேத்தான் இருக்கின்றன

நீ பார்க்கிறாய்

அப்படி இருப்பதாகச் சொல்கிறாய்

நீ சிந்திக்கிறாய்

அப்படித் தோன்றுவதாகப் பேசுகிறாய்

நீ உணர்கிறாய்

ஆச்சர்யமாய் இருப்பதாய்க் கூறுகிறாய்

நீ

நீ

நீ

அங்கு இருக்கிறாய்

அப்படி அப்படி நிகழ்வதாக மொழிகிறாய்

*****

காருமில்லே! கட்டிலுமில்லே!


காருமில்லே! கட்டிலுமில்லே!

செய்யு - 549

            மண்டபத்துல என்ன நடக்குதுங்றதெ கொஞ்ச நேரத்துக்குப் புரியல. தாலி கட்டி முடிஞ்சா கலியாணம் முடிஞ்சதா நெனைச்சுக்கிட்டுச் சாப்புட்டுக் கெளம்புறதுல குறியா இருந்துச்சுங்க சனங்க. ஒரு கலியாணத்தோட முடியுறா கலியாணமா அத்து? இன்னொரு கலியாணம் நாகவல்லி முகூர்த்தம்ன்னு ஒண்ணு வேற இருக்கு. அதெயும் எமகண்டத்துல ஆரம்பிச்சி எமகண்டத்துலதாம் முடிக்கப் போறானுவோளான்னு சுப்பு வாத்தியாரு பொருமிகிட்டு இருந்தாரு. அவரோட பொருமலுக்கு அத்து மட்டும், அத்து ஒரு முக்கியமான காரணம்ன்னாலும், வேற பல காரணங்களும் இருந்துச்சு. அந்தக் காரணங்களும் இப்போ அவரோட மனசுக்குள்ள கூட்டுப் போட்டுக்கிட்டுச் சேந்துடுச்சு.

            நேத்திக்கு மண்டபத்துக்கு வந்து சேந்ததிலேந்து விருத்தியூரு பெரிம்மா, பரசு அண்ணன், குமாரு அத்தான், தேன்காடு சித்தி, சாமிமலெ ஆச்சாரி, சிப்பூரு பெரிம்மான்னு ஒருத்தரு பாக்கியில்லாம கார் எங்க? கட்டிலு பீரோ? எங்கன்னு சுப்பு வாத்தியாரையும் வெங்குவையும் கேட்டு தொளைச்சு எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. கலியாணத்துக்கு வர்ற சனங்களுக்கு பொண்ணு மாப்பிள்ளைக்குன்னு செஞ்சு வெச்சிருக்குற சீர் சனத்தியப் பாக்குறதுல எப்பவும் ஒரு ஆர்வம் இருக்கு. அதெ யாரும் கேட்டுத் தெரிஞ்சிக்க அவசியம் இல்லாம மண்டபத்துக்கு மின்னாடியே கண்காட்சியப் போல காட்சிப் பண்ணிருப்பாங்க. ஆனா மண்டபத்துல கலியாணத்துக்கான சாமாஞ் செட்டுக எதையும் காணல.

            ரண்டு நாளைக்கு மின்னாடியே சுப்பு வாத்தியாரு திருவாரூர்லேந்து வாங்கியாந்திருந்த சாமாஞ் செட்டுகள மண்டபத்துல வைக்க ஒரு டாட்டா ஏஸ்ஸப் பிடிச்சிப் பாக்குக்கோட்டைக்கு அனுப்பி வுட்டுருந்தாரு. அதையும் கூட காங்கல, எங்கேயும் வைக்கல. விகடுவையும் ஆளாளுக்கு சனங்க அந்தக் கேள்விகளக் கேட்டு தொளைச்சு எடுத்துச்சுங்க. மண்டபத்துல கூட்டம் அதிகமா வருங்கறதால வைக்க எடம் இருக்காதுன்னு மாப்புள வூட்டுலயே வெச்சிருப்பாங்கன்னு அவனுக்காக தோணுன ஒரு பதிலெ அடிச்சி விட்டாம் விகடு. 

            மாப்புள்ள வூட்டுல இருக்கும்ன்னா மாப்புள வூட்டுக்குன்னு பொண்ணு அழைச்சிட்டுப் போனப்ப எங்காச்சிம் இருந்திருக்கணுமே, அங்கேயும் காங்கலையேன்னு சனங்க திரும்ப தொளைச்சி எடுக்க ஆரம்பிச்சதுங்க. சுப்பு வாத்தியார்ர வுட்டு என்னா ஏது வெவரம்ன்னு கேட்டுக்கிடச் சொன்னுச்சுங்க. பணத்தெ கொடுத்தாச்சு, அதையெல்லாம் சரியா வாங்கியிருப்பாங்கிற நெனைப்புலயே அதெப் பத்தி என்னத்தெ போயிப் பெரிசா கேக்குறதுன்னு யோசனெ பண்ணிட்டு நின்னுகிட்டு இருந்தாரு சுப்பு வாத்தியாரு. பாக்குக்கோட்டை சனங்க வேற கலியாண அலமலப்புல அங்கயும் இங்கயும் அலைஞ்சிக்கிட்டும், திரிஞ்சுகிட்டும் பரபரப்ப இருந்ததெப் பாத்துப்புட்டு இப்பப் போயி என்னத்தெ கேக்குறதுங்ற யோசனையிலயும் கேக்கமா இருந்தாரு சுப்பு வாத்தியாரு. ஆனா நேரம் ஆவ ஆவ சனங்களோட நச்சரிப்பு தாங்க முடியல.

            சென்னைப் பட்டணத்துலேந்து அதிகாலை நேரத்துலத்தாம் சந்தானம் அத்தான், ராமு அத்தான், மாரி அத்தான், சுப்புணி அத்தான், மலரு அத்தாச்சி, கார்த்தேசு அத்தான்லாம் கலியாணத்துக்கு வந்துச்சுங்க. வந்ததுங்களும் மொத வேலையா சுப்பு வாத்தியார்ரப் பாத்து காரு எங்க, கட்டிலு பீரோ சாமாஞ் செட்டுக எங்கன்னுத்தாம் கேட்டுச்சுங்க. "இதையெல்லாம் மொத நாளே கலியாண மண்டபத்துக்குக் கொண்டாந்து பார்வைக்கு வெச்சிப்புடுறதுதானே வழக்கம். கலியாண மண்டபத்துல பாத்தா வெத வெதமான அலங்காரங்கத்தாம் இருக்கே தவுர சாமாஞ் செட்டுக எதையும் இந்நேரம் வரைக்கும் காங்கலயே?"ன்னுச்சுங்க அதுங்க.

            அதுக்காக சுப்பு வாத்தியாரு அதெப் பத்தி கேக்காமலயும் இருக்கல. சனிக்கெழம ராத்திரி நடந்த அலமலப்பு கூத்துக முடிஞ்சு சுப்பு வாத்தியாரு ராசாமணி தாத்தாகிட்டெ கேட்டுருக்காரு, "காரு, கட்டிலு, பீரோ, சாமாஞ் செட்டுக எல்லாம் எப்போ வரும் மாமா?"ன்னு நாசுக்கா. அதுக்கு ராசாமணி தாத்தா சொல்லிருக்கு, "யிப்போ எதையும் கேக்காத மாப்ளே! கலியாணம் முடியட்டும் சொல்றேம்! பாத்தீல்லா கலியாண ஏற்பாட்ட? இதெ பண்ணி முடிக்கிறதுக்குள்ளயே தாவு தீந்துப்புடுச்சு! நீயி பாட்டுக்கு எல்லாத்தையும் நம்ம தலையில கட்டிப்புட்டே. பாரு! அதுல சில விசயங்க வேற இருக்கு. இப்போ இந்த எடத்துல அதெப் பத்தி பேச வாணாம் புரிஞ்சிக்கோ. நாம்ம எதெ செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். அத்து இப்போ தெரியாது. பின்னாடித்தாம் தெரிய வரும்! எம் மேல நம்பிக்கெ இருக்குல்லா ஒனக்கு?"ன்னு. அதுக்கு மேல சுப்பு வாத்தியாரு அதெப் பத்திக் கேக்கல. கலியாணம் முடிஞ்சிப் பாத்துக்கிடலாம்ன்னு விட்டுப்புட்டாரு.

            ராத்திரி அப்படி ராசாமணி தாத்தா சொன்னதெ மட்டும் மனசுல வெச்சிக்கிட்டு, "வாங்கிருப்பாங்க போலருக்கு யம்பீ! மண்டபத்துக்குக் கொண்டாரல போல!"ன்னு சந்தானம் அத்தான் கேட்டதுக்குப் பதிலெச் சொன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ன்னா காரு மாமா? ன்னா பிராண்ட்?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "நாமளும் இன்னும் பாக்கல யம்பீ! நமக்கென்ன கார்ரப் பத்தித் தெரியும்? நீஞ்ஞத்தாம் அதெ பாத்துப்புட்டுச் சொல்லணும் ந்நல்ல கார்ரா ன்னான்னு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஆம்மா நீயி கார்ர கண்ணுல காட்டாமலே சம்பந்தம் சம்பந்தம் யில்லாம நாம்ம கேட்டதுக்குப் பதிலச் சொல்லாம நம்மகிட்டெயே கேள்வியக் கேளு? ஒங்கிட்டெ கேட்டா இப்பிடித்தாம் மலுப்பி வுட்டாப்புல பதிலெச் சொல்லுவே! மாப்ள எங்க அவங்கிட்டெ கேட்டாத்தாம் சொல்லுவாம்!"ன்னு விகடுவெ பாத்துச்சு சந்தானம் அத்தான்.

            காலங்காத்தால வந்திருந்தவங்களுக்குக் காப்பியக் கொடுத்துகிட்டு நின்னவனப் பிடிச்சி கேட்டுச்சு சந்தானம் அத்தான், "எந்த வேலைய நீயிப் பாக்கணும்ன்னு தெரியாம, சமையக்கார வேலையெல்லாம் பாருடா மாப்ளே! வந்தவங்கள வரவேற்கிறதோட நிப்பாட்டிக்கடா மாப்ளே! அத்துச் செரி காரு எங்கடா மாப்ளே?"ன்னு.

            "வெளியிலத்தாம் நெறைய நிக்குதே!"ன்னாம் விகடு சிரிச்சிக்கிட்டே.

            "வெளியில நெறைய நிக்குது செரித்தாம். அதுல ஒந் தங்காச்சிக்கு வாங்கிக் கொடுத்த காரு எஞ்ஞங்றேம்?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "காரு இல்லியா? யப்போ ஒஞ்ஞ கார்ர கொடுத்துட்டுப் போவ வேண்டியதுதாங்!"ன்னாம் விகடு அதுக்கும் சிரிச்சிக்கிட்டெ.

            "இத்து ஒண்ணும் தேறுற குடும்பமில்லே. மாமாவக் கேட்டா வாங்கி மண்டபத்துக்கு வர்லேங்குது. மாப்ளக் கேட்டாக்கா எங் கார்ர கொடுத்துப்புடுவேங்றாம்! என்னத்தெ நெனைச்சிட்டு இருக்குதுங்களோ? இதுககிட்டே பேசுனா மண்டெ கொழம்பிப் போயி நிக்க வேண்டியதுதாங். கலியாணத்துல நிக்க முடியாது!"ன்னு சொல்லிட்டே கலியாணத்துக்குக் குளிச்சித் தயாராவ வேண்டிய வேலையப் பாக்கப் போயிடுச்சு. அத்தோட அப்போ அந்தப் பேச்சு ஒரு முடிவுக்கு வந்துச்சு.

            இந்த விசயத்துல விருத்தியூரு பெரிம்மாவும் ராத்திரிலேந்து விடல, சுப்பு வாத்தியார்கிட்டெயிருந்து அதுக்கு எதிர்பார்த்த சரியான பதிலு கெடைக்கலன்னதும், அது வெங்குவ விட்டு சரசு ஆத்தாகிட்டெ கேக்கச் சொன்னுச்சு. அதுக்கு, "பணத்தெ கொடுத்தாச்சு. அவுங்க வாங்குறாங்களோ? வாங்காம வுடுறாங்களோ? அவுங்க இஷ்டம்!"ன்னுச்சு வெங்கு.

            "அதெப்பிடிம்மா அப்பிடில்லாம் வுட முடியும்? ஊரு ஒலகத்துல யில்லாத மொறையாயில்ல பேசுதே. பணத்தெ கொடுத்துச் சாமாஞ் செட்டுகள வாங்கச் சொன்னம்ன்னா ன்னான்னா வாங்கிருக்காங்றதெ நம்மகிட்டெ அழைச்சாந்துப் போயிக் காட்டணும். இவனுங்க ன்னான்னா அதெ காட்டாம வானவேடிக்கையையும் புஸ்வானத்தையும் காட்டுறானுவோ. கரியையும் பொகையையும் காட்டுனதுதாம் மிச்சம். ரோட்டுல கலர் கலரா என்னத்தையோ கட்டி வெச்சி அதெ காட்டுறானுவோ. கலியாணத்துக்குன்னு வாங்கச் சொன்ன கார்ர காட்ட மாட்டுறானுவோ? செய்யச் சொன்ன கட்டிலு பீரோவ காட்ட மாட்டேன்றானுவோ? நீயி வாங்கி அனுப்புனதா சொன்னா சாமாஞ் செட்டுகளயும் காட்ட மாட்டேன்றானுவோ? கொஞ்ச நஞ்சமா காசியக் கொடுத்தே? கொட்டில்லா கொடுத்தே! அதெ கேக்குறதுக்கு நமக்கு உரிமெ இருக்கு. ஒண்ணு நீயி கேளு. யில்ல நாம்ம கேக்குறேம்!"ன்னுச்சு விருத்தியூரு பெரிம்மா.

            விருத்தியூரு பெரிம்மா பாட்டுக்கு எதையாச்சும் கேட்டு வில்லங்கமா போயிடுமோன்னு நெனைச்சிக்கிட்டு வெங்குவே போயி சரசு ஆத்தாவப் பிடிச்சிக் கேட்டுச்சு. "ன்னா சின்னம்மா காரு, கட்டிலு பீரோ, சாமாஞ் செட்டுக எல்லாம் வந்துக்கிட்டு இருக்கா?"ன்னு.

            "அந்தக் கதையெ ஏம்டி கேக்குறே? கலியாண அலமலப்புல கொஞ்சம் லேட்டாத்தாம் காருக்குப் புக் பண்ணிருக்காம் டாக்கடர்ரு. காசில்லாம் கொடுத்தாச்சுன்னாம். அத்து என்னவோ ஆர்டரு போட்டுத்தாம் வாரணுமாம். டிசைன்னு அப்பிடிப் பாத்துக் கேட்டுருக்காம் மவ்வேம். காரு விக்குறவங்கிட்டெ இருக்குற கார்ல ஒண்ணுத்தெ கேட்டிருந்தா இந்நேரத்துக்கு வந்திருக்கும். இவ்வேம் கேட்ட கார்ர ஆர்டரு பண்ணித்தாம் தரணும்ன்னு சொல்லிருக்காம் காருகார்ரேம். கலியாணத்து அன்னிக்குச் செரியா கொண்டாந்துப்புடலாம்ன்னு பாத்தா கொஞ்ச நாளு தள்ளும் போலருக்கு! கட்டிலு பீரோல்லாம் வேலைய முடிச்சிட்டாம் சித்துவீரன். இன்னும் கொஞ்சம் அதுல ஏத்தோ பினிஷிங் பண்ணத்தாம் ந்நல்லா இருக்கும்ன்னாம். பினிஷிங் இல்லாம கொண்டாந்து வெச்சா நல்லா இருக்காது, பாக்குறவங்க கொறையச் சொல்லுவாங்க, அதால மொறையா வேலைய முடிச்சி நேரா சென்னைப் பட்டணத்துக்கே கொண்டாந்துப்புடுறேம்ன்னாம். கட்டிலு பீரோன்னு இல்லாம சாமாஞ் செட்டுகள மட்டும் கொண்டாந்து வெச்சா நல்லா இருக்காதுன்னு நாம்மத்தாம் நீஞ்ஞ அனுப்பி வுட்ட சாமாஞ் செட்டுகள பக்கத்து வூட்டுல ‍வைக்கச் சொல்லிட்டேம். கலியாணத்துக்குச் சனங்க வந்துட்டும் போயிட்டும் இருக்குங்றதால நம்ம வூட்டுல வெச்சா எடத்தெ அடைக்கும்ன்னு அந்த ஏற்பாடு. போதுமாடியம்மா வெளக்கம்? இன்னும் வாணுமா?"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "ன்னா சின்னம்மா! ஒன்னயச் சந்தேகப்பட்டு கேக்குறாப்புல கேட்டுப்புட்டே? நம்ம என்னத்தெ பண்ணச் சொல்லு? வந்திருக்குற சனங்க எல்லாம் அதெப் பத்தித்தாங் கேக்குது!"ன்னுச்சு வெங்கு.

            "அப்பிடித்தாம் கேக்குமுங்க சனங்க. இனுமே யாரு கேட்டாலும் எல்லாம் வாங்கியாச்சு. மண்டபத்துக்கு கொண்டு வாரலன்னு மட்டும் சொல்லு! அதுவும் நல்லதுக்குதாம்டி தங்கம். எப்பிடின்னு கேக்குதீயா? கலியாணத்துக்கு வர்றதுல ஒண்ணு கண்ணு மாதிரி இன்னொண்ணு இருக்காது. கல்லடியில தப்புனாலும் கண்ணடியில தப்ப முடியாதுடி தங்கம். அதையெல்லாம் கொண்டாந்து வெச்சு கண்ணு முழிப் பட்டுச்சுன்னா வெச்சுக்கோ கதெ கந்தலுதாங். பொண்ணு புள்ளே நல்லா இருக்கணும்ன்னு வாங்கி வைக்கிறேம். அதெ கண்ணடி படாம வாங்கி வைக்குறது கூட நல்லதுதானே? அதால யாரு இனுமே கேட்டாலும் செரித்தாம் வாங்கியாச்சு வாங்கியாச்சு மண்டபத்துக்கு வாரலன்னு மட்டும் சொல்லு! ன்னா புரியுதாடி தங்கம்?"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "அப்பிடியே சொல்லிப்புடுறேம்!"ன்னுச்சு வெங்கு. இதெ அப்பிடியே போயி விருத்தியூரு பெரிம்மாகிட்டெ வெங்கு சொன்னதும், "இந்தாரு நமக்கு ன்னவோ சந்தேகமா இருக்கு. அதால அதல்லாம் வாங்கியாச்சா, செஞ்சாச்சாங்றதெ உறுதிப் பண்ணிக்க வேண்டியது ஒம் பொறுப்பு. கொஞ்ச நஞ்சமல்ல காசிக் கொடுத்துருக்கிறது? அதெல்லாம் எதுக்குன்னா நம்ம பொண்ணுக்குத்தாங். நம்ம பொண்ணுக்கு அதெல்லாம் போயிச் சேரணும்ன்னு பாத்துக்கோ! இந்தக் காலத்துல யாராச்சும் இப்பிடிப் பணத்தெ வெச்சிக்கிட்டு பொருளா வாங்கிக் கொடுத்து வுடாம, பணத்தெ கொடுத்துப் பொருள வாங்கிக்கிங்கன்னு சொல்லிட்டு இப்பிடி இளிச்சவாயிங்களா நிப்பாங்களா? எல்லாம் ஒந் தலையெழுத்து!"ன்னுச்சு பெரிம்மா. மேக்கொண்டு எதையாச்சும் சொல்லி வார்த்தெ வளர வாணாம்ன்னு நெனைச்ச வெங்கு, ஒண்ணுஞ் சொல்லாம செரின்னு தலைய மட்டும் ஆட்டிக்கிட்டுச்சு.

            கலியாணம் முடிஞ்சதும் காரு, கட்டிலு, பீரோ சம்பந்தமா ராசாமணி தாத்தாவப் பாத்துச் சேதி என்னாங்றதெ முழுசா கேட்டுப்புடணும்ன்னு சுப்பு வாத்தியாரு முடிவு பண்ணிருந்தாரு. பன்னெண்டே காலுக்கு எமகண்டத்துல தாலியக் கட்டி முடிச்சதும் அவருக்கு அந்த உக்கிரம் வேற அதிகமா ஏறியிருந்துச்சுல்லா? இவுனுங்க, எதையுமே மொறையா செய்ய மாட்டேங்றானுவோளேன்னு கோவம் எகிறிகிட்டெ இருந்தப்பவே நாகவல்லி முகூர்த்தத்தையும் ஆரம்பிச்சிச் செஞ்சிப்புடலாம்ன்னு மணமேடையில செய்ய ஆரம்பிச்சிப்புட்டாங்க. அதெ பண்ணி முடிச்சிட்டுதாங் பொண்ணு மாப்புள சாப்புடணுங்றது ஒரு சம்பிரதாயம். எமகண்டத்தெப் பாத்துட்டு இருந்தா ஒண்ணரை மணி வரைக்குக் காத்திருந்து பெறவு செய்யணும். ரொம்ப நேரம் காக்க வெச்சா, பெறவு அதுக்குப் பெறவு எல்லாத்தையும் ஆரம்பிச்சி நாகவல்லி முகூர்த்தத்துக்கான இன்னொரு தாலி கட்டி முடிக்கிறதுக்கு எப்படியும் ரண்டு ரண்டரைக்கு மேல ஆயிடும். அதால தொடர்ந்து ஆரம்பிச்சி செஞ்சுட்டு இருந்தா ஒண்ணரைக்குள்ளயே முடிச்சிப்புடலாம்ன்னு அதுக்கான வேலைக ஆரம்பமாயிடுச்சு.

            ஒடனே பொண்ணு மாப்புளைகள அடுத்ததா உடுப்புகள மாத்தி வாரச் சொல்லி வேல வேக வேகமா போனுச்சு. எமகண்டத்துக்கு மின்னாடி தாலியக் கட்ட வேக வேகமா செய்ய வேண்டியதெ, யிப்போ எமகண்டத்துக்குள்ள முடிக்குறாப்புல நாகவல்லி முகூர்த்தத்தெ வேக வேகமா முடிக்கிறாப்புல சடங்குக நடந்துகிட்டு இருந்துச்சு. சுப்பு வாத்தியாருக்கு ஒரு நெனைப்பு இதையாச்சும் கொஞ்சம் தள்ளி எமகண்டம் தாண்டி ஒண்ணரைக்கு மேல தாலியக் கட்டுறாப்புல பண்ணலாம்ன்னு. இந்தக் கலியாணத்தெப் பொருத்த மட்டுல அவரு நெனைச்ச எதுவுமே நடக்காதப்ப இத்து ஒண்ணு மட்டும் எப்பிடிச் சரியா நடந்துப்புடும்? வேக வேகமா சடங்குகள நடத்தி முடிச்சுத் தாலியக் கட்டுனப்போ மணி ஒண்ணே காலுதாங் ஆகியிருந்துச்சு. ஒடனே சனங்க பட்டம் கட்டி, மோதிரம், செயினு‍ போடுறதுன்னு எறங்கிடுச்சுங்க. கிப்ட்டு கொடுக்க வந்த சனங்களும் வரிசெ கட்டி நின்னு கொடுக்க ஆரம்பிச்சிட்டுங்க. சுப்பு வாத்தியாருக்கு வெறுத்துப் போச்சுது.

            மொத தாலி கட்டி முடிச்ச ஒடனே ஊர்லேந்து பஸ்ல வந்தச் சனங்க சாப்பாட்ட முடிச்சி பஸ்ல கெளம்ப தயாரா இருந்துச்சுங்க. பரமுவோட அப்பா வந்து சுப்பு வாத்தியார்கிட்டெ, "பஸ்ஸ எடுத்துப்புடலாமா? எடுத்தா நேரா நேரத்துக்குக் கொண்டுப் போயிச் சேத்துப்புடலாம்!"ன்னாரு.

            "செரி!"ன்னு சுப்பு வாத்தியாரு சுரத்தே இல்லாம தலைய ஆட்டுனாரு.

            "நம்ம ஊரு சனங்க எல்லாம் கெளம்புங்க. பஸ்ஸ எடுத்துப்புடுவேம்!"ன்னு சொல்லி பரமுவோட அப்பா சனங்கள கெளப்புற வழியப் பாக்க ஆரம்பிச்சதும், சில தெருக்காரச் சனங்க வந்து சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "நாம்ம சாப்புடப் போயிட்டு வாரதுக்குள்ள இஞ்ஞ பையில்லாம் தீந்துப் போச்சது. அதுல என்னவோ நல்ல புத்தகம் இருந்துச்சாம். ஒரு சனம் வுடாம பேசிக்கிட்டுச்சுங்க. அத்து நமக்கு வேணுமே. இருந்தா ரண்டு பையி எடுத்து வையுங்க. ஊர்ல வந்து வாங்கிக்கிறேம்!"ன்னுச்சுங்க. அதுக்கும் சுப்பு வாத்தியாரு சுரத்தே யில்லாம செரிங்ற மாதிரித் தலைய ஆட்டிக்கிட்டு இருந்தாரு.

            நல்ல காரியங்கள நல்ல நேரத்துல செய்யணும்ன்னும், ஒரு நாள்ல எந்தெந்த நேரம் நல்ல நேரம்ன்னுல்லாம் பட்டியலப் போட்டு எழுதி ஒரு புத்தகத்தெப் போட்டவனோட கலியாணமே எமகண்டத்துல நடந்து முடிஞ்சது ஒரு பெரிய முரண்பாடுதாங். சனங்கள்ல பல பேத்துக்கு அத்துப் புரியாம அந்தப் புத்தகம் கெடைக்காமப் போயிடுச்சேன்னு நின்னுட்டு இருந்துச்சுங்க. நல்ல வேளையா அந்தப் புத்தகத்தை முழுசா இதுவரைக்கும் சுப்பு வாத்தியாரும் பாக்கல. அவருக்குப் பீறிட்டு வெளியில அடிச்சிருக்க வேண்டிய கோவம், உள்ளுக்குள்ளேய அடிச்சிட்டு இருந்ததுக்கு அந்தப் புத்தகம் கெடைக்காமப் போயி அதெ பாக்காமப் போனதும் ஒரு காரணமா இருந்திருக்கலாம். 

*****

29 Aug 2020

பிழைப்புக்காக என்பவரே...


கொல் கொள்

முடியுமானால்

நாய்களைப் புதைத்து விடு

வால்களை வைத்துக் கொள்

*****

பிழைப்புக்காக என்பவரே...

ஒரு கோப்பைத் தேநீரைக்

குளிர்ச்சியாகவும்

ஒரு குவளை மதுவை

சூடாகவும்

எடுத்து வா

குளிர்ச்சிக்காக

தேநீரில் நஞ்சைக் கொட்டு

சூட்டிற்காக

மதுவில் திராவத்தை ஊற்று

உன் கடமையைச் செய்து விட்டாய்

நீ புறப்படு

*****

கடல் போல மனசு

குளத்தங்கரை போதும்

கடற்கரையாய்

பார்த்துக் கொள்ளும் மனம்

*****

எமகண்டத்துல கட்டுன தாலி!


எமகண்டத்துல கட்டுன தாலி!

செய்யு - 548

            காலையில விகடு கண்ணு முழிச்சப்போ அதிகாலை நாலு மணி இருக்கும். ரண்டாயிரத்து பதினாலாவது வருஷத்தோட நவம்பர் மாசத்து ரண்டாம் தேதி பொறந்திருந்துச்சு. அப்பத்தாங் நெறைய சனங்களுக்குத் தூக்கம் பிடிச்சிருக்கும் போல. எல்லாம் அசந்துப் போயி கெடந்துச்சுங்க. மண்டபத்து முகப்புல ராசாமணி தாத்தா, சித்துவீரன், லாலு மாமா எல்லாம் உக்காந்து பொட்டணம் போட்டுக்கிட்டும், பைகள நெறைய வெச்சிக்கிட்டு அதுல திணிச்சிக்கிட்டும் இருந்ததுங்க. கலியாணத்துக்குக் கொடுக்குறதுக்குன்னே ஒரு பையி. அதுல பொண்ணு மாப்புள்ளையோட பேரு, கலியாணம் நடக்குற எடம், நாளு இதெல்லாம் போட்டு மணமக்களை வாழ்த்துனதுக்கு நன்றின்னு சொல்லி ராசாமணி தாத்தா, சரசு ஆத்தாவோட பேரு போட்டுருந்துச்சு. பையி ரொம்ப அழகா இருந்துச்சு. சணல்ல செய்யுற வேலைப்பாடான்னு பையின்னு அதெப் பத்திப் பேசிக்கிட்டாங்க. அதுல ராத்திரி வெளியிட்ட 'நூறாண்டு மணமக்கள் ஒன்றாக வாழ!'ங்ற புத்தகம், பாடம் பண்ண தேன்நெல்லி ஒரு பொட்டணம், கருப்பட்டி இனிப்புல செஞ்ச பாடம் பண்ணுன கேரள வாழைப்பழ சிப்புக ஒரு பொட்டணம், நலமாக வாழ ஆயுர்வே வழிகள்ன்னு எழுதப்பட்ட நாலு பக்கத்து அட்டை ஒண்ணு இதையெல்லாம் போட்டு வேல விறுவிறுப்பா நடந்துக்கிட்டு இருந்துச்சு.

            விகடுவெ பாத்ததும் ராசாமணி தாத்தா, "ன்னடா பேராண்டி! கலியாண வூட்டுல இம்மாம் வேல கெடக்கு. நீயி பாட்டுக்கு ந்நல்லா இழுத்துப் போட்டுத் தூங்குதீயே?"ன்னுச்சு.

            "நீங்கல்லாம் ராத்திரி தூங்கலையா?"ன்னாம் விகடு.

            "எங்க தூங்குறது? தூக்கம் தொலைஞ்சு நாளாச்சே. கலியாணத்தெல்லாம் முடிச்சிப் போட்டுத்தாங் தூங்கணும். ஒம் மச்சாங்கார்ரேந்தாம் ஒண்ணுக்குப் பத்தால்லா வேலய வெச்சிருக்காம். பாத்தீல்லா? பாத்து நாளா அவனும் செரியா தூங்கல. கலியாணத்தெ யாரு பண்ணாத வகையில பண்ணிப்புடணும்னு ஒவ்வொண்ணா பாத்து பண்ணிருக்காம். உக்காந்துப் பாரு!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            ராத்திரி வெளியிட்ட புத்தகத்தப் பாத்தாம் விகடு. புத்தகம் முழுக்க தோஷ கதியா இருந்துச்சு. எந்தெந்த தோஷம் இருந்தா எந்தெந்த கோயிலுக்குப் போகணுங்ற விவரம்தாம் புத்தகம் முழுக்க இருந்துச்சு. அதெ அங்கங்க படிச்சப்போ நாட்டுல நெறைய பேத்துக்குத் தோஷம் இருக்குங்றதுக்காகவே கோயில்கள கட்டி வெச்சிருக்கிறதா பட்டுச்சு விகடுவுக்கு. தம்பதிகளுக்குள்ள சின்ன சண்டை வந்ததாலும் எந்தச் சாமியக் கும்படணுங்ற வெவரமும் நெறைய இருந்துச்சு. இவ்வளவு சாமிங்க இருந்துமா நாட்டுல புருஷன் பொண்டாட்டிச் சண்டைக வர்றதும், வெவாகரத்து வாங்குறதும் அதிகமா இருக்குன்னு நெனைச்சாம் விகடு. அதெ கொஞ்சம் விகடுப் படிச்சுப் பாத்ததப் பாத்துட்டு லாலு மாமா கேட்டுச்சு, "பொத்தகம் எப்பிடிடா?"ன்னு. விகடு தலைய மட்டும் ஆட்டுனாம். வேற ஒண்ணுத்தையும் சொல்லல.

            "ன்னடா பேராண்டி வாயத் தொறந்து ஒண்ணுத்தையும் சொல்ல மாட்டேங்றே? இக்காக ஒம் மச்சாங்கர்ரேம் எம்மாம் மெனக்கெட்டாம் தெரியுமா?"ன்னுச்சு ராசாமணி தாத்தா. அதுல எந்த வெவரத்தை நெட்டுல தட்டுனாலும் பட்டுன்னு வெவரம் வந்துடுங்றதெ ராசாமணி தாத்தாவுக்குப் புரிய வைக்க முடியாதுங்றதால விகடு ஒண்ணும் சொல்லாம நின்னாம்.

            "அவ்வேம் எப்பிடிச் சொல்லுவாம்? அவ்வேம் ன்னா ஒனக்குப் பேராண்டின்னு நெனைச்சிட்டு இருக்குதீயா? பெரியாருக்குல்லா பேராண்டி! சாமி இல்லன்னு நிக்குறப் எமகாதகப் பயலுவோ! படுபாவியோ! அவ்வேங்கிட்டெ போயி இந்தப் புத்தகத்தெ கொடுத்து கேட்டீன்னா என்னத்தெ பதிலெச் சொல்லுவாம்?"ன்னுச்சு லாலு மாமா சிரிச்சிக்கிட்டெ.

            "செரி அப்பிடின்னா இந்த அட்டையப் படிச்சுப் பாருடா பேராண்டி!"ன்னு நாலு பக்கத்து ஆயுர்வேத குறிப்புகள் எழுதப்பட்ட அட்டையக் கொடுத்துச்சு ராசாமணி தாத்தா. ஒவ்வொரு வேள சாப்பாட்டையும் எப்பிடிச் சாப்புடணும்? சாப்புட்டப் பெறவு எம்மாம் நேரம் கழிச்சி தண்ணிக் குடிக்கணும்? ராத்திரியில ஏம் தண்ணிக் குடிக்கக் கூடாது? ஒரு நாளைக்கு எத்தனெ தடவெ மூத்திரம் போவணும், மலத்தெ கழிக்கணும்? எண்ணெய்க் குளியல் மாசத்துக்கு எத்தனெ தடவெ பண்ணணும்?ன்னு ஏகப்பட்ட தகவல்கள் ஒடம்ப எப்படிச் சரியா வெச்சிக்கிறதுன்னு ரண்டு பக்கமும் தப்பும் தவறுமா அச்சிடப்பட்டு இருந்துச்சு. மருந்துங்ற அதிகாரத்துல இருக்குற பத்து திருக்குறளும் அத்தோட சேத்து ஏகப்பட்ட பிழையோட அச்சாயிருந்துச்சு. ‍அதெ புத்தகத்தப் பாத்து அச்சடிக்கிறவனுவோ அதெ கூடயா தப்புத் தப்பா அச்சடிக்கணும்ன்னு நெனைச்சிக்கிட்டாம் விகடு.

            "எப்பிடிடா பேராண்டி? சனங்களுக்கு உபயோகமா இருக்குமா?"ன்னு கேட்டுச்சு ராசாமணி தாத்தா. அதுக்கும் தலைய ஆட்டுனவேம், "இனுமே தூக்கம் பிடிக்காது! அடுத்தடுத்த‍‍ வேலையப் பாக்குறேம்!"ன்னு கழிவறைப் பக்கமா போனாம். "ன்னடாப்பா இவ்வெம் இதையெல்லாம் காட்டுனா டாய்லெட்டுப் பக்கமா விழுந்தடிச்சு ஓடுறாம்?"ன்னு சொல்லிக்கிட்டு சிரிச்சிச்சு ராசாமணி தாத்தா.

            உள்ளாரப் போன விகடு காலைக் கடனையெல்லாம் முடிச்சி, பல்ல துலக்கி, குளிச்சி முடிச்சி, அவனோட கலியாண நாளுக்கு எடுத்த பட்டு வேட்டியையும், சட்டையையும் போடுக்கிட்டு அஞ்சு மணிக்கெல்லாம் தயாராயி வந்தாம். வேட்டியைக் கொஞ்சம் தூக்கிக் கட்டியிருந்தாம். ரொம்ப எறக்கிக் கட்டுனா தரையில தோய்ஞ்சு மண்ணுல கறையாயிடுமோன்னு. அதெப் பாத்துப்புட்டு கணுக்காலு தெரியாத அளவுக்கு எறக்கிக் கட்டுடான்னுச்சு லாலு மாமா. பெறவு அதெ சரி பண்ணிக்கிட்டாம் விகடு. அப்பத்தாங் சனங்க கொஞ்சம் கொஞ்சமா எழும்ப ஆரம்பிச்சதுங்க. எழும்புன சனங்களுக்கு டாய்லெட்டு எந்தப் பக்கம், குளிக்கிற எடம் எந்தப் பக்கம்ன்னு காட்டி வுட்டுக்கிட்டு, பேஸ்ட்டு சோப்பு எடுத்து வாரதவங்களுக்கு ஒரு பெட்டியில வாங்கி வெச்சிருந்த சின்ன சின்ன பேஸ்ட்டையும், சோப்பையும் எடுத்துக் கொடுத்தாம். குளிச்சிட்டு வந்த சனங்களுக்கு தேங்காய் எண்ணெய், புட்டா மாவுன்னு வெச்சிக்கிட்டு ஒவ்வொருத்தரா கேக்க கேக்கக் கொடுத்தாம். ஆறு மணி வாக்குல காப்பிய ஒரு வாளியில போட்டாந்து மண்டபத்து நடுவுல வெச்சாரு சமையல்காரரு. அதெ எடுத்து பேப்பர் கப்புல ஊத்தி ஊத்தி குளிச்சி முடிச்சி தலைவாரிக்கிட்டு வந்தவங்களுக்குக் கொடுத்தாம்.

            கொஞ்சம் கொஞ்சமா மண்டபம் கலை கட்ட ஆரம்பிச்சது. ஏழு மணி வாக்குல கேரளத்து சேலைகளக் கட்டன பொண்டுக வந்து அலங்கார வேலைய ஆரம்பிச்சி வரவேற்குற எடுத்துல நின்னு வேலைய ஆரம்பிச்சதுங்க. வாசல்லேந்து உள்ளார வர எடத்துக்கு நடுவுல வெங்கலத்துல செஞ்ச அலங்கார பாத்திரத்தெ வெச்சு அதுல தண்ணிய ஊத்தி அதுக்குள்ள பூக்கள மெதக்க விட்டுச்சுங்க. கலியாணம் ஒம்போது மணிக்கு மேலத்தாங்றதால கூட்டம் ஒண்ணும் பெரிசா வாரல. ஒண்ணு ரண்டு பேர்ன்னு வந்துக்கிட்டு இருந்தாங்க. இடையிடையில விகடு செல்போன்ல பரமுவோட அப்பாவுக்குப் போன போட்டு ஊர்லேந்து கலியாணத்துக்கு வர்ற பஸ்‍ஸை எடுத்து கெளம்பியாச்சா என்னான்னு கேட்டுக்கிட்டு இருந்தாம்.

            அன்னிக்கு மழையில்லாம இருந்தது தோதா போச்சு. வானத்தெ பாத்தா மேகமாத்தாம் இருந்துச்சு. ஆனா மழையக் கொட்டாம இருந்துச்சு. திட்டையிலேந்து தெருக்கார சனங்கள ஏத்திக்கிட்டு கெளம்புன பஸ்ஸூ சரியா எட்டரைக்குல்லாம் மண்டபத்துக்கு மின்னாடி வந்து நின்னுச்சு. பரமுவோட அப்பா செரியா வேலையப் பாத்திருந்திருக்காரு. வந்திருந்த ஒவ்வொரு சனத்தையும் வாசல்ல நின்னு வரவேத்தது ‍அதுகளுக்கு ரொம்ப திருப்தியா போனுச்சு. காலைப் பந்தியும் ஆரம்பமாச்சுது. வந்தவங்கள அங்க அழைச்சிட்டுப் போயி சாப்புட வெச்சாம் விகடு. அத்தோட அங்கங்க நின்னுகிட்டு இருந்த சனங்க ஒவ்வொருத்தரையும் போயி பந்தியில சாப்புடச் சொன்னாம். அதுக்குள்ளார சுப்பு வாத்தியாரும், வெங்குவும், ஆயியும் கெளம்பி வந்து மண்டபத்துக்கு மின்னாடி நின்னுகிட்டு வார்றவங்களையெல்லாம் வாங்க வாங்கன்னு சொல்லி பந்திக்கு அழைச்சிட்டுப் போயிட்டு இருந்தாங்க.

            ஒம்போது மணிக்கு மேலத்தாம் பாலாமணி கலியாண மண்டபத்துல நொழைஞ்சாம். அவ்வேம் ஹோட்டல்ல ரூமெ எடுத்து தங்குனதா பேசிக்கிட்டாங்க. அத்தோட வேலன் கார்ல வந்து அங்கயும் இங்கயும் அலைஞ்சிக்கிட்டு இருந்தாம். கலியாணத்துக்கு வர்ற முக்கியமான பெருங்கையிகள ஹோட்டல்ல தங்க வெச்சி மருவாதியா அழைச்சிட்டு வர்ற வேலைய அவ்வேம் பாத்துக்கிடறதா பேசிக்கிட்டாங்க. ஒம்போது மணி வாக்குல ஆரம்பிக்க வேண்டிய கலியாணம் ஒம்போதரைக்கு மேலத்தாம் ஆரம்பமானுச்சு. கூட்டத்தால மண்டபம் நெறைய ஆரம்பிச்சிது. சனங்க திபுதிபுன்னு வந்துக் குவிய ஆரம்பிச்சாங்க.

            பொதுவா ஒவ்வொரு கலியாணத்துலயும் கலியாணச் சடங்கெ நடத்துறதுக்குன்னு வாத்தியாரு ஒருத்தரு இருப்பாரு. அவருதாங் மணமேடையில இருப்பாரு. அவரு ஒருத்தர்தாம் இருப்பாரு. அவருக்குத் தொணைக்கு வேணும்ன்னா அவரா ஒரு சிறுபையனா வெச்சிக்கிட்டா உண்டு. மித்தபடி ரண்டு மூணு வாத்தியாரு வெச்செல்லாம் கலியாணம் நடக்காது, அப்பிடி நடத்துறதும் இல்ல. ஆன்னா இப்போ மேடையப் பாத்தப்போ ஏழு பேரு ஐயருமாருங்க நின்னுகிட்டு இருந்தாங்க. அதுல மூணு பேத்து மேடையில நின்னுகிட்டு மிச்ச நாலு பேத்தையும் மண்டபத்தோட நாலு மூலைக்கும் போவச் சொல்லிட்டு இருந்தாங்க. மேடையில நின்ன மூணு பேத்துல ஒருத்தரு கேரள மாந்திரீகவாதியப் போல இருந்தாரு. இதென்னடா அதிசயமா கோயிலு கும்பாபிஷேகத்தப் போல நெறைய ஐயருமாருங்க நிக்குறாங்கன்னு சனங்களே அசந்துதாங் போனுச்சு.

            கலியாணச் சடங்குக நடக்குறப்ப மச்சாங்கார்ரங்ற மொறையில விகடுவும் முக்கியமான ஆளு. அவ்வேந்தாம் மாப்புள கையப் பிடிச்சி அழைச்சிட்டுப் போறதிலேந்து  நெருப்புக் குண்டத்தெ சுத்தி வர்ற வரைக்கும் நெறைய வேலைகள செஞ்சாவணும். அவனையும் மணமேடைக்குக் கூப்புட்டு என்னன்னவோ சடங்குகள எல்லாம் பண்ண சொன்னாங்க. ஒரு வாத்தியாரு கலியாணத்த நடத்துறப்போ அவரு ஒருத்தரு சொல்றதெ செஞ்சா போதும். மூணு ஐயருமாருக நிக்குறப்போ அவுங்க மூணு பேரு மூணு வெதமா சொல்றதையெல்லாம் செஞ்கிட்டுக்குக் கெடக்க வேண்டியதா போச்சு. அதெ மேடையில நின்னுகிட்டு செஞ்ச விகடுவுக்கும், அதெ பாத்த சனங்களுக்குமே அலுப்பா இருந்துச்சு. அதெப் பத்தி எழுதிக்கிட்டுப் போனா படிக்குற ஒங்களுக்கும் அலுப்பத்தாம் போவும்.

            மாப்புள காசிக்குக் கோச்சுக்கிட்டுப் போறாப்புலயும், கோச்சுக்கிட்டுப் போற மாப்புள்ளைய சமாதானம் பண்ணிக் கொண்டாறதுங்றது அந்தச் சடங்குகள்ல ஒண்ணு. அப்பிடிப் போன மாப்புள்ளைய பாதத்த கழுவ வுட்டு, சாமிக்குப் பிடிப்பாங்கல ஊர்லவத்தப்போ குடை அந்த மாதிரியான குடைய பிடிக்க விட்டு, சாமிக்கு வீசுவாங்கல சாமரம் அதெப் போல சாமரத்த விசுற விட்டு, அந்தக் காலத்து ராசாக்கப் போடுவாங்கல பாதகொறடு அதெப் போல போட வுட்டு அத்தனெ வேலைகளையும் விகடுவெ விட்டுப் பண்ண விட்டு பாலாமணிய அழைச்சிட்டு வாரச் சொன்னாங்க. விகடுவும் அப்பிடியெல்லாம் பண்ணி முடிச்சுக் கொண்டாந்தாம்.

            ஒரு வாத்தியாரு இருந்த கலியாணச் சடங்கெ பண்ணுறப்பவே ஒண்ணுக்கு ரண்டா நேரம் ஆயி கடெசீ நேரத்துலத்தாம் அவ்சர அவ்சரமா கலியாணம் நடந்து முடியும். இதுல மேடையில மூணு, தெசைக்கு ஒண்ணா நாலு பேத்துன்னு நின்னு பண்ணதுல நேரம் பாட்டுக்கு அடிச்சிக்கிட்டுப் போனுச்சு. அதுக்கு எடையில ஆயி வேற விகடுகிட்டெ ஓடியாந்து காலைச் சாப்பாடு முடிஞ்சிட்டுன்னும், கலியாணத்துக்கு வந்த நெறையப் பேத்து சாப்பாடு இல்லாம உக்காந்திருக்காங்கன்னு சொன்னதும் விகடுவுக்கு வருத்தமா போச்சு. என்னடா இந்தப் பயலுங்க கலியாணத்துக்கு வர்றவங்களுக்கு மருவாதி இல்லாம இவனகளுக்குப் பெரிசா மருவாதியப் பண்ணிட்டு நடத்திட்டுக் கெடக்குறானுவோளேன்னு நெனைச்சாம் விகடு. கலியாணத்துக்கு வந்தவங்கள பசியோட உக்கார வெச்சு கலியாணத்தப் பாக்க வெச்சா சுத்தப்படுமான்னு அவனுக்குத் தோணுச்சு. கலியாணத்தெ சீக்கிரமா முடிச்சாலாச்சும் பதினொண்ணு பதினொண்ணரைக்கு மத்தியானச் சாப்பாட்ட போட்டு வுட்டுப்புடலாம். கலியாணம் நடக்குற வேகத்தப் பாத்தா அத்து பதினொண்ணரைக்குல்லாம் முடியுற பாடா தெரியல. பன்னெண்டு மணிக்கு மேலன்ன ஞாயித்துக் கெழமென்னா எமகண்டம்பானுவோளே, என்ன நடக்கப் போவுதுன்னு புரியல. ஐயரு வர்ற வரைக்கும் அமாவாசைக் காத்திருக்காதுங்றதால மறு அமாவாசை வர்ற வரைக்கும் காரியத்த பண்ண ஐயரு போல சடங்குக நடந்துக்கிட்டு இருந்துச்சு.

            கலியாண மண்டபத்துல அந்தாண்ட இந்தாண்ட நவுர முடியல. கூட்டம்ன்னா கூட்டம் தாங்க முடியல. நிமிஷத்துக்கு நிமிஷம் கூட்டம் அதிகமாயிட்டே போனுச்சு. ஆயிரத்து ஐநூத்துப் பேத்துக்கான மண்டபம் ரண்டாயிரம் பேரால நெறைஞ்சிருந்திருக்கணும். கலியாணத்த முடிச்சி மத்தியானப் பந்திய ஆரம்பிச்சாலும் எத்தனெ பேத்து சாப்புடுவாங்க, எத்தனெ பேத்து சாப்புட காத்திருக்காம கெளம்புவாங்கன்னு கணிக்க முடியல. மண்டபத்துல உள்ளார போயிட்டு வெளியில வாரது சாமானியமா இல்ல. மேடையில என்னா நடக்குது, மண்டபத்துக்குள்ள என்னா நடக்குதுன்னு யாருக்கும் ஒண்ணும் தெரியல. அதது பாட்டுக்கு என்னவோ நடந்துச்சு. அதுல மேடையில இருந்தவங்கள மண்டபத்துக்கு வாசலுக்கு வரச் சொல்லு, மின்னாடி இருக்குற புள்ளையாரக் கும்பிட்டுப் போவச் சொல்லுன்னு அங்கங்க நின்ன ஐயருமாருக ஒருத்தருக்கொருத்தரு போன அடிச்சிச் சொன்னதுல ‍மேடைக்கும், மண்டபத்து வாசலுக்கும் போயிட்டு வாரதுலயே நேரம் ரொம்ப சிலவானுச்சு.

            கலியாணச் சடங்கெ பண்ண ஏழு பேத்துக்கும் ஏழு வெதமான மொறைக இருந்திருக்கும் போல. அந்த எழு வெதமான மொறைகள்லயும் எல்லாத்தையும் பண்ணணுங்றதுல பாலாமணி உறுதியா நின்னாம். நேரம் போறதெப் பத்தி அவ்வேம் ஒண்ணும் பெரிசா நினைக்கல. கலியாணத்துக்குன்னு வந்து உக்காந்திருந்த சனங்களுக்குத்தாம் அது பெரிய வாதையா இருந்துச்சு. அப்படி ஒவ்வொண்ணையும் பண்ணிப் பண்ணி கெட்டிமேளம் கொட்டித் தாலியக் கட்டுறப்போ மணி பன்னெண்டே கால் ஆனுச்சு. ஞாயித்துக் கெழமெங்றதால அத்துச் சரியான எமகண்டம்.

            என்னடா இப்பிடி எமகண்டத்துல போயி தாலியக் கட்டி வுடுறதுக்கு எதுக்குடா ஏழு ஐயருமாருகன்னு சனங்க பேசிக்கிடுச்சு. பன்னெண்டே காலு வரைக்கும் தேவையில்லாதச் சடங்குகளப் பண்ண வெச்சு அந்த நேரத்துல தாலியக் கட்ட விட்டதுல சுப்பு வாத்தியாருக்கும் தாங்க முடியாத கோவம். அவருக்கு அந்த நாள்ல குமரு மாமாவோட கலியாணத்துக்குப் பாட்டிமொகத்துல நாளு குறிச்சிக் கொடுத்த ராசாமணி தாத்தாவோட ஞாபவம் சரியா அந்த நேரத்துல வந்துச்சு. செரியான கூறு கெட்ட பயலுவோளா இருப்பானுவோ போலருக்கு, இவனுவோளப் போயிக் கலியாணத்த நடத்த வுட்டா அப்பிடித்தாம் நடத்துவானுவோன்னு மனசுக்குள்ளயே கருவிக் கொட்டிக்கிட்டாரு.

            "பொண்ணு பாக்குறதுன்னா ஞாயித்துக் கெழமெ, மாப்புள பாக்குறதுன்னா ஞாயித்துக் கெழமெ, மூர்த்தோல எழுதுறதுன்னா ஞாயித்துக் கெழமெ, யிப்போ கலியாணமும் ஞாயித்துக் கெழமெதாம். செர பரவால்ல வந்துட்டுப் போறதுக்குச் செளரியமா இருக்கும் நெறைய சனங்கங்களுக்குன்னாலும் சரியான நேரத்துல சரியா காரியத்தெ செய்யணுமா இல்லியா? இப்பிடியா ஒரு சோசியனா இருக்குற அப்பங்காரனும், டாக்கடர்ர இருக்கற மவனுமா சேந்துக்கிட்டு பண்ணுவானுவோ? இந்த டாக்கடர்பய இருக்கான்னே ஒரு நாளு கூட லீவு போடக் கூடாதுன்னு, அதுவும் கலியாணத்துக்குக் கூட லீவு போடக் கூடாதுன்னு ஞாயித்துக் கெழமயாப் பாத்துட்டு நின்னானே? அப்பிடி இருக்குறப் பயெ கலியாணத்தெ எப்பிடி நேரத்தோட பண்ணணும்ன்னு தெரியாதா? இப்பிடித்தாங் ஏழு பேத்த கொண்டாந்து ஒழுங்கா நடக்க வேண்டிய கலியாணத்தெ கண்ட நேரத்துலயும் நடத்தி முடிப்பானுவோ?"ன்னு சுப்பு வாத்தியாரோட யோசனைக பல வெதமா போனுச்சு. அவ்ளோ கூட்டமா ஆளுக நின்னாலும் தன்னோட மனசுல உள்ளதெ யாருகிட்டெ சொல்றதுன்னு அவரு கலங்கிப் போயி நின்னாரு.

            அத்துச் சரி நமக்கென்ன கலியாணம் முடிஞ்சா சரின்னு இப்போ சனங்க அததுவும் திபு திபுன்னு பந்திய‍ நோக்கிப் போனுச்சுங்க. கூட்டம் கட்டுக்கு அடங்கல. சாப்புட்டு வந்தவங்களுக்கு வாசல்ல நின்னு கலியாணப் பரிசா பையோட புத்தகம், பண்டங்களப் போட்டுக் கொடுக்குற வேலையப் பாத்துட்டு நின்ன சித்துவீரன், சுந்தரியால சமாளிக்க முடியல. பையி நல்ல பையா இருந்ததால சனங்க ஒவ்வொண்ணும் ரண்டு மூணுன்னு வாங்கிட்டுப் போவ பாதிக்கு மேல சனங்களுக்கு பையே இல்லாமப் போனுச்சு. அதுலயும் மண்டபத்து வாசல்ல சனங்க, "நூறாண்டு மணமக்கள் ஒன்றாக வாழ!'ங்ற புத்தகம் மட்டும் ஒண்ணு இருந்தா கொடுங்கன்னு முண்டி அடிச்சிக்கிட்டுக் கெஞ்சிக்கிட்டு நின்னதுங்க.

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...