30 Aug 2020

காருமில்லே! கட்டிலுமில்லே!


காருமில்லே! கட்டிலுமில்லே!

செய்யு - 549

            மண்டபத்துல என்ன நடக்குதுங்றதெ கொஞ்ச நேரத்துக்குப் புரியல. தாலி கட்டி முடிஞ்சா கலியாணம் முடிஞ்சதா நெனைச்சுக்கிட்டுச் சாப்புட்டுக் கெளம்புறதுல குறியா இருந்துச்சுங்க சனங்க. ஒரு கலியாணத்தோட முடியுறா கலியாணமா அத்து? இன்னொரு கலியாணம் நாகவல்லி முகூர்த்தம்ன்னு ஒண்ணு வேற இருக்கு. அதெயும் எமகண்டத்துல ஆரம்பிச்சி எமகண்டத்துலதாம் முடிக்கப் போறானுவோளான்னு சுப்பு வாத்தியாரு பொருமிகிட்டு இருந்தாரு. அவரோட பொருமலுக்கு அத்து மட்டும், அத்து ஒரு முக்கியமான காரணம்ன்னாலும், வேற பல காரணங்களும் இருந்துச்சு. அந்தக் காரணங்களும் இப்போ அவரோட மனசுக்குள்ள கூட்டுப் போட்டுக்கிட்டுச் சேந்துடுச்சு.

            நேத்திக்கு மண்டபத்துக்கு வந்து சேந்ததிலேந்து விருத்தியூரு பெரிம்மா, பரசு அண்ணன், குமாரு அத்தான், தேன்காடு சித்தி, சாமிமலெ ஆச்சாரி, சிப்பூரு பெரிம்மான்னு ஒருத்தரு பாக்கியில்லாம கார் எங்க? கட்டிலு பீரோ? எங்கன்னு சுப்பு வாத்தியாரையும் வெங்குவையும் கேட்டு தொளைச்சு எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. கலியாணத்துக்கு வர்ற சனங்களுக்கு பொண்ணு மாப்பிள்ளைக்குன்னு செஞ்சு வெச்சிருக்குற சீர் சனத்தியப் பாக்குறதுல எப்பவும் ஒரு ஆர்வம் இருக்கு. அதெ யாரும் கேட்டுத் தெரிஞ்சிக்க அவசியம் இல்லாம மண்டபத்துக்கு மின்னாடியே கண்காட்சியப் போல காட்சிப் பண்ணிருப்பாங்க. ஆனா மண்டபத்துல கலியாணத்துக்கான சாமாஞ் செட்டுக எதையும் காணல.

            ரண்டு நாளைக்கு மின்னாடியே சுப்பு வாத்தியாரு திருவாரூர்லேந்து வாங்கியாந்திருந்த சாமாஞ் செட்டுகள மண்டபத்துல வைக்க ஒரு டாட்டா ஏஸ்ஸப் பிடிச்சிப் பாக்குக்கோட்டைக்கு அனுப்பி வுட்டுருந்தாரு. அதையும் கூட காங்கல, எங்கேயும் வைக்கல. விகடுவையும் ஆளாளுக்கு சனங்க அந்தக் கேள்விகளக் கேட்டு தொளைச்சு எடுத்துச்சுங்க. மண்டபத்துல கூட்டம் அதிகமா வருங்கறதால வைக்க எடம் இருக்காதுன்னு மாப்புள வூட்டுலயே வெச்சிருப்பாங்கன்னு அவனுக்காக தோணுன ஒரு பதிலெ அடிச்சி விட்டாம் விகடு. 

            மாப்புள்ள வூட்டுல இருக்கும்ன்னா மாப்புள வூட்டுக்குன்னு பொண்ணு அழைச்சிட்டுப் போனப்ப எங்காச்சிம் இருந்திருக்கணுமே, அங்கேயும் காங்கலையேன்னு சனங்க திரும்ப தொளைச்சி எடுக்க ஆரம்பிச்சதுங்க. சுப்பு வாத்தியார்ர வுட்டு என்னா ஏது வெவரம்ன்னு கேட்டுக்கிடச் சொன்னுச்சுங்க. பணத்தெ கொடுத்தாச்சு, அதையெல்லாம் சரியா வாங்கியிருப்பாங்கிற நெனைப்புலயே அதெப் பத்தி என்னத்தெ போயிப் பெரிசா கேக்குறதுன்னு யோசனெ பண்ணிட்டு நின்னுகிட்டு இருந்தாரு சுப்பு வாத்தியாரு. பாக்குக்கோட்டை சனங்க வேற கலியாண அலமலப்புல அங்கயும் இங்கயும் அலைஞ்சிக்கிட்டும், திரிஞ்சுகிட்டும் பரபரப்ப இருந்ததெப் பாத்துப்புட்டு இப்பப் போயி என்னத்தெ கேக்குறதுங்ற யோசனையிலயும் கேக்கமா இருந்தாரு சுப்பு வாத்தியாரு. ஆனா நேரம் ஆவ ஆவ சனங்களோட நச்சரிப்பு தாங்க முடியல.

            சென்னைப் பட்டணத்துலேந்து அதிகாலை நேரத்துலத்தாம் சந்தானம் அத்தான், ராமு அத்தான், மாரி அத்தான், சுப்புணி அத்தான், மலரு அத்தாச்சி, கார்த்தேசு அத்தான்லாம் கலியாணத்துக்கு வந்துச்சுங்க. வந்ததுங்களும் மொத வேலையா சுப்பு வாத்தியார்ரப் பாத்து காரு எங்க, கட்டிலு பீரோ சாமாஞ் செட்டுக எங்கன்னுத்தாம் கேட்டுச்சுங்க. "இதையெல்லாம் மொத நாளே கலியாண மண்டபத்துக்குக் கொண்டாந்து பார்வைக்கு வெச்சிப்புடுறதுதானே வழக்கம். கலியாண மண்டபத்துல பாத்தா வெத வெதமான அலங்காரங்கத்தாம் இருக்கே தவுர சாமாஞ் செட்டுக எதையும் இந்நேரம் வரைக்கும் காங்கலயே?"ன்னுச்சுங்க அதுங்க.

            அதுக்காக சுப்பு வாத்தியாரு அதெப் பத்தி கேக்காமலயும் இருக்கல. சனிக்கெழம ராத்திரி நடந்த அலமலப்பு கூத்துக முடிஞ்சு சுப்பு வாத்தியாரு ராசாமணி தாத்தாகிட்டெ கேட்டுருக்காரு, "காரு, கட்டிலு, பீரோ, சாமாஞ் செட்டுக எல்லாம் எப்போ வரும் மாமா?"ன்னு நாசுக்கா. அதுக்கு ராசாமணி தாத்தா சொல்லிருக்கு, "யிப்போ எதையும் கேக்காத மாப்ளே! கலியாணம் முடியட்டும் சொல்றேம்! பாத்தீல்லா கலியாண ஏற்பாட்ட? இதெ பண்ணி முடிக்கிறதுக்குள்ளயே தாவு தீந்துப்புடுச்சு! நீயி பாட்டுக்கு எல்லாத்தையும் நம்ம தலையில கட்டிப்புட்டே. பாரு! அதுல சில விசயங்க வேற இருக்கு. இப்போ இந்த எடத்துல அதெப் பத்தி பேச வாணாம் புரிஞ்சிக்கோ. நாம்ம எதெ செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். அத்து இப்போ தெரியாது. பின்னாடித்தாம் தெரிய வரும்! எம் மேல நம்பிக்கெ இருக்குல்லா ஒனக்கு?"ன்னு. அதுக்கு மேல சுப்பு வாத்தியாரு அதெப் பத்திக் கேக்கல. கலியாணம் முடிஞ்சிப் பாத்துக்கிடலாம்ன்னு விட்டுப்புட்டாரு.

            ராத்திரி அப்படி ராசாமணி தாத்தா சொன்னதெ மட்டும் மனசுல வெச்சிக்கிட்டு, "வாங்கிருப்பாங்க போலருக்கு யம்பீ! மண்டபத்துக்குக் கொண்டாரல போல!"ன்னு சந்தானம் அத்தான் கேட்டதுக்குப் பதிலெச் சொன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ன்னா காரு மாமா? ன்னா பிராண்ட்?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "நாமளும் இன்னும் பாக்கல யம்பீ! நமக்கென்ன கார்ரப் பத்தித் தெரியும்? நீஞ்ஞத்தாம் அதெ பாத்துப்புட்டுச் சொல்லணும் ந்நல்ல கார்ரா ன்னான்னு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஆம்மா நீயி கார்ர கண்ணுல காட்டாமலே சம்பந்தம் சம்பந்தம் யில்லாம நாம்ம கேட்டதுக்குப் பதிலச் சொல்லாம நம்மகிட்டெயே கேள்வியக் கேளு? ஒங்கிட்டெ கேட்டா இப்பிடித்தாம் மலுப்பி வுட்டாப்புல பதிலெச் சொல்லுவே! மாப்ள எங்க அவங்கிட்டெ கேட்டாத்தாம் சொல்லுவாம்!"ன்னு விகடுவெ பாத்துச்சு சந்தானம் அத்தான்.

            காலங்காத்தால வந்திருந்தவங்களுக்குக் காப்பியக் கொடுத்துகிட்டு நின்னவனப் பிடிச்சி கேட்டுச்சு சந்தானம் அத்தான், "எந்த வேலைய நீயிப் பாக்கணும்ன்னு தெரியாம, சமையக்கார வேலையெல்லாம் பாருடா மாப்ளே! வந்தவங்கள வரவேற்கிறதோட நிப்பாட்டிக்கடா மாப்ளே! அத்துச் செரி காரு எங்கடா மாப்ளே?"ன்னு.

            "வெளியிலத்தாம் நெறைய நிக்குதே!"ன்னாம் விகடு சிரிச்சிக்கிட்டே.

            "வெளியில நெறைய நிக்குது செரித்தாம். அதுல ஒந் தங்காச்சிக்கு வாங்கிக் கொடுத்த காரு எஞ்ஞங்றேம்?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "காரு இல்லியா? யப்போ ஒஞ்ஞ கார்ர கொடுத்துட்டுப் போவ வேண்டியதுதாங்!"ன்னாம் விகடு அதுக்கும் சிரிச்சிக்கிட்டெ.

            "இத்து ஒண்ணும் தேறுற குடும்பமில்லே. மாமாவக் கேட்டா வாங்கி மண்டபத்துக்கு வர்லேங்குது. மாப்ளக் கேட்டாக்கா எங் கார்ர கொடுத்துப்புடுவேங்றாம்! என்னத்தெ நெனைச்சிட்டு இருக்குதுங்களோ? இதுககிட்டே பேசுனா மண்டெ கொழம்பிப் போயி நிக்க வேண்டியதுதாங். கலியாணத்துல நிக்க முடியாது!"ன்னு சொல்லிட்டே கலியாணத்துக்குக் குளிச்சித் தயாராவ வேண்டிய வேலையப் பாக்கப் போயிடுச்சு. அத்தோட அப்போ அந்தப் பேச்சு ஒரு முடிவுக்கு வந்துச்சு.

            இந்த விசயத்துல விருத்தியூரு பெரிம்மாவும் ராத்திரிலேந்து விடல, சுப்பு வாத்தியார்கிட்டெயிருந்து அதுக்கு எதிர்பார்த்த சரியான பதிலு கெடைக்கலன்னதும், அது வெங்குவ விட்டு சரசு ஆத்தாகிட்டெ கேக்கச் சொன்னுச்சு. அதுக்கு, "பணத்தெ கொடுத்தாச்சு. அவுங்க வாங்குறாங்களோ? வாங்காம வுடுறாங்களோ? அவுங்க இஷ்டம்!"ன்னுச்சு வெங்கு.

            "அதெப்பிடிம்மா அப்பிடில்லாம் வுட முடியும்? ஊரு ஒலகத்துல யில்லாத மொறையாயில்ல பேசுதே. பணத்தெ கொடுத்துச் சாமாஞ் செட்டுகள வாங்கச் சொன்னம்ன்னா ன்னான்னா வாங்கிருக்காங்றதெ நம்மகிட்டெ அழைச்சாந்துப் போயிக் காட்டணும். இவனுங்க ன்னான்னா அதெ காட்டாம வானவேடிக்கையையும் புஸ்வானத்தையும் காட்டுறானுவோ. கரியையும் பொகையையும் காட்டுனதுதாம் மிச்சம். ரோட்டுல கலர் கலரா என்னத்தையோ கட்டி வெச்சி அதெ காட்டுறானுவோ. கலியாணத்துக்குன்னு வாங்கச் சொன்ன கார்ர காட்ட மாட்டுறானுவோ? செய்யச் சொன்ன கட்டிலு பீரோவ காட்ட மாட்டேன்றானுவோ? நீயி வாங்கி அனுப்புனதா சொன்னா சாமாஞ் செட்டுகளயும் காட்ட மாட்டேன்றானுவோ? கொஞ்ச நஞ்சமா காசியக் கொடுத்தே? கொட்டில்லா கொடுத்தே! அதெ கேக்குறதுக்கு நமக்கு உரிமெ இருக்கு. ஒண்ணு நீயி கேளு. யில்ல நாம்ம கேக்குறேம்!"ன்னுச்சு விருத்தியூரு பெரிம்மா.

            விருத்தியூரு பெரிம்மா பாட்டுக்கு எதையாச்சும் கேட்டு வில்லங்கமா போயிடுமோன்னு நெனைச்சிக்கிட்டு வெங்குவே போயி சரசு ஆத்தாவப் பிடிச்சிக் கேட்டுச்சு. "ன்னா சின்னம்மா காரு, கட்டிலு பீரோ, சாமாஞ் செட்டுக எல்லாம் வந்துக்கிட்டு இருக்கா?"ன்னு.

            "அந்தக் கதையெ ஏம்டி கேக்குறே? கலியாண அலமலப்புல கொஞ்சம் லேட்டாத்தாம் காருக்குப் புக் பண்ணிருக்காம் டாக்கடர்ரு. காசில்லாம் கொடுத்தாச்சுன்னாம். அத்து என்னவோ ஆர்டரு போட்டுத்தாம் வாரணுமாம். டிசைன்னு அப்பிடிப் பாத்துக் கேட்டுருக்காம் மவ்வேம். காரு விக்குறவங்கிட்டெ இருக்குற கார்ல ஒண்ணுத்தெ கேட்டிருந்தா இந்நேரத்துக்கு வந்திருக்கும். இவ்வேம் கேட்ட கார்ர ஆர்டரு பண்ணித்தாம் தரணும்ன்னு சொல்லிருக்காம் காருகார்ரேம். கலியாணத்து அன்னிக்குச் செரியா கொண்டாந்துப்புடலாம்ன்னு பாத்தா கொஞ்ச நாளு தள்ளும் போலருக்கு! கட்டிலு பீரோல்லாம் வேலைய முடிச்சிட்டாம் சித்துவீரன். இன்னும் கொஞ்சம் அதுல ஏத்தோ பினிஷிங் பண்ணத்தாம் ந்நல்லா இருக்கும்ன்னாம். பினிஷிங் இல்லாம கொண்டாந்து வெச்சா நல்லா இருக்காது, பாக்குறவங்க கொறையச் சொல்லுவாங்க, அதால மொறையா வேலைய முடிச்சி நேரா சென்னைப் பட்டணத்துக்கே கொண்டாந்துப்புடுறேம்ன்னாம். கட்டிலு பீரோன்னு இல்லாம சாமாஞ் செட்டுகள மட்டும் கொண்டாந்து வெச்சா நல்லா இருக்காதுன்னு நாம்மத்தாம் நீஞ்ஞ அனுப்பி வுட்ட சாமாஞ் செட்டுகள பக்கத்து வூட்டுல ‍வைக்கச் சொல்லிட்டேம். கலியாணத்துக்குச் சனங்க வந்துட்டும் போயிட்டும் இருக்குங்றதால நம்ம வூட்டுல வெச்சா எடத்தெ அடைக்கும்ன்னு அந்த ஏற்பாடு. போதுமாடியம்மா வெளக்கம்? இன்னும் வாணுமா?"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "ன்னா சின்னம்மா! ஒன்னயச் சந்தேகப்பட்டு கேக்குறாப்புல கேட்டுப்புட்டே? நம்ம என்னத்தெ பண்ணச் சொல்லு? வந்திருக்குற சனங்க எல்லாம் அதெப் பத்தித்தாங் கேக்குது!"ன்னுச்சு வெங்கு.

            "அப்பிடித்தாம் கேக்குமுங்க சனங்க. இனுமே யாரு கேட்டாலும் எல்லாம் வாங்கியாச்சு. மண்டபத்துக்கு கொண்டு வாரலன்னு மட்டும் சொல்லு! அதுவும் நல்லதுக்குதாம்டி தங்கம். எப்பிடின்னு கேக்குதீயா? கலியாணத்துக்கு வர்றதுல ஒண்ணு கண்ணு மாதிரி இன்னொண்ணு இருக்காது. கல்லடியில தப்புனாலும் கண்ணடியில தப்ப முடியாதுடி தங்கம். அதையெல்லாம் கொண்டாந்து வெச்சு கண்ணு முழிப் பட்டுச்சுன்னா வெச்சுக்கோ கதெ கந்தலுதாங். பொண்ணு புள்ளே நல்லா இருக்கணும்ன்னு வாங்கி வைக்கிறேம். அதெ கண்ணடி படாம வாங்கி வைக்குறது கூட நல்லதுதானே? அதால யாரு இனுமே கேட்டாலும் செரித்தாம் வாங்கியாச்சு வாங்கியாச்சு மண்டபத்துக்கு வாரலன்னு மட்டும் சொல்லு! ன்னா புரியுதாடி தங்கம்?"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "அப்பிடியே சொல்லிப்புடுறேம்!"ன்னுச்சு வெங்கு. இதெ அப்பிடியே போயி விருத்தியூரு பெரிம்மாகிட்டெ வெங்கு சொன்னதும், "இந்தாரு நமக்கு ன்னவோ சந்தேகமா இருக்கு. அதால அதல்லாம் வாங்கியாச்சா, செஞ்சாச்சாங்றதெ உறுதிப் பண்ணிக்க வேண்டியது ஒம் பொறுப்பு. கொஞ்ச நஞ்சமல்ல காசிக் கொடுத்துருக்கிறது? அதெல்லாம் எதுக்குன்னா நம்ம பொண்ணுக்குத்தாங். நம்ம பொண்ணுக்கு அதெல்லாம் போயிச் சேரணும்ன்னு பாத்துக்கோ! இந்தக் காலத்துல யாராச்சும் இப்பிடிப் பணத்தெ வெச்சிக்கிட்டு பொருளா வாங்கிக் கொடுத்து வுடாம, பணத்தெ கொடுத்துப் பொருள வாங்கிக்கிங்கன்னு சொல்லிட்டு இப்பிடி இளிச்சவாயிங்களா நிப்பாங்களா? எல்லாம் ஒந் தலையெழுத்து!"ன்னுச்சு பெரிம்மா. மேக்கொண்டு எதையாச்சும் சொல்லி வார்த்தெ வளர வாணாம்ன்னு நெனைச்ச வெங்கு, ஒண்ணுஞ் சொல்லாம செரின்னு தலைய மட்டும் ஆட்டிக்கிட்டுச்சு.

            கலியாணம் முடிஞ்சதும் காரு, கட்டிலு, பீரோ சம்பந்தமா ராசாமணி தாத்தாவப் பாத்துச் சேதி என்னாங்றதெ முழுசா கேட்டுப்புடணும்ன்னு சுப்பு வாத்தியாரு முடிவு பண்ணிருந்தாரு. பன்னெண்டே காலுக்கு எமகண்டத்துல தாலியக் கட்டி முடிச்சதும் அவருக்கு அந்த உக்கிரம் வேற அதிகமா ஏறியிருந்துச்சுல்லா? இவுனுங்க, எதையுமே மொறையா செய்ய மாட்டேங்றானுவோளேன்னு கோவம் எகிறிகிட்டெ இருந்தப்பவே நாகவல்லி முகூர்த்தத்தையும் ஆரம்பிச்சிச் செஞ்சிப்புடலாம்ன்னு மணமேடையில செய்ய ஆரம்பிச்சிப்புட்டாங்க. அதெ பண்ணி முடிச்சிட்டுதாங் பொண்ணு மாப்புள சாப்புடணுங்றது ஒரு சம்பிரதாயம். எமகண்டத்தெப் பாத்துட்டு இருந்தா ஒண்ணரை மணி வரைக்குக் காத்திருந்து பெறவு செய்யணும். ரொம்ப நேரம் காக்க வெச்சா, பெறவு அதுக்குப் பெறவு எல்லாத்தையும் ஆரம்பிச்சி நாகவல்லி முகூர்த்தத்துக்கான இன்னொரு தாலி கட்டி முடிக்கிறதுக்கு எப்படியும் ரண்டு ரண்டரைக்கு மேல ஆயிடும். அதால தொடர்ந்து ஆரம்பிச்சி செஞ்சுட்டு இருந்தா ஒண்ணரைக்குள்ளயே முடிச்சிப்புடலாம்ன்னு அதுக்கான வேலைக ஆரம்பமாயிடுச்சு.

            ஒடனே பொண்ணு மாப்புளைகள அடுத்ததா உடுப்புகள மாத்தி வாரச் சொல்லி வேல வேக வேகமா போனுச்சு. எமகண்டத்துக்கு மின்னாடி தாலியக் கட்ட வேக வேகமா செய்ய வேண்டியதெ, யிப்போ எமகண்டத்துக்குள்ள முடிக்குறாப்புல நாகவல்லி முகூர்த்தத்தெ வேக வேகமா முடிக்கிறாப்புல சடங்குக நடந்துகிட்டு இருந்துச்சு. சுப்பு வாத்தியாருக்கு ஒரு நெனைப்பு இதையாச்சும் கொஞ்சம் தள்ளி எமகண்டம் தாண்டி ஒண்ணரைக்கு மேல தாலியக் கட்டுறாப்புல பண்ணலாம்ன்னு. இந்தக் கலியாணத்தெப் பொருத்த மட்டுல அவரு நெனைச்ச எதுவுமே நடக்காதப்ப இத்து ஒண்ணு மட்டும் எப்பிடிச் சரியா நடந்துப்புடும்? வேக வேகமா சடங்குகள நடத்தி முடிச்சுத் தாலியக் கட்டுனப்போ மணி ஒண்ணே காலுதாங் ஆகியிருந்துச்சு. ஒடனே சனங்க பட்டம் கட்டி, மோதிரம், செயினு‍ போடுறதுன்னு எறங்கிடுச்சுங்க. கிப்ட்டு கொடுக்க வந்த சனங்களும் வரிசெ கட்டி நின்னு கொடுக்க ஆரம்பிச்சிட்டுங்க. சுப்பு வாத்தியாருக்கு வெறுத்துப் போச்சுது.

            மொத தாலி கட்டி முடிச்ச ஒடனே ஊர்லேந்து பஸ்ல வந்தச் சனங்க சாப்பாட்ட முடிச்சி பஸ்ல கெளம்ப தயாரா இருந்துச்சுங்க. பரமுவோட அப்பா வந்து சுப்பு வாத்தியார்கிட்டெ, "பஸ்ஸ எடுத்துப்புடலாமா? எடுத்தா நேரா நேரத்துக்குக் கொண்டுப் போயிச் சேத்துப்புடலாம்!"ன்னாரு.

            "செரி!"ன்னு சுப்பு வாத்தியாரு சுரத்தே இல்லாம தலைய ஆட்டுனாரு.

            "நம்ம ஊரு சனங்க எல்லாம் கெளம்புங்க. பஸ்ஸ எடுத்துப்புடுவேம்!"ன்னு சொல்லி பரமுவோட அப்பா சனங்கள கெளப்புற வழியப் பாக்க ஆரம்பிச்சதும், சில தெருக்காரச் சனங்க வந்து சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "நாம்ம சாப்புடப் போயிட்டு வாரதுக்குள்ள இஞ்ஞ பையில்லாம் தீந்துப் போச்சது. அதுல என்னவோ நல்ல புத்தகம் இருந்துச்சாம். ஒரு சனம் வுடாம பேசிக்கிட்டுச்சுங்க. அத்து நமக்கு வேணுமே. இருந்தா ரண்டு பையி எடுத்து வையுங்க. ஊர்ல வந்து வாங்கிக்கிறேம்!"ன்னுச்சுங்க. அதுக்கும் சுப்பு வாத்தியாரு சுரத்தே யில்லாம செரிங்ற மாதிரித் தலைய ஆட்டிக்கிட்டு இருந்தாரு.

            நல்ல காரியங்கள நல்ல நேரத்துல செய்யணும்ன்னும், ஒரு நாள்ல எந்தெந்த நேரம் நல்ல நேரம்ன்னுல்லாம் பட்டியலப் போட்டு எழுதி ஒரு புத்தகத்தெப் போட்டவனோட கலியாணமே எமகண்டத்துல நடந்து முடிஞ்சது ஒரு பெரிய முரண்பாடுதாங். சனங்கள்ல பல பேத்துக்கு அத்துப் புரியாம அந்தப் புத்தகம் கெடைக்காமப் போயிடுச்சேன்னு நின்னுட்டு இருந்துச்சுங்க. நல்ல வேளையா அந்தப் புத்தகத்தை முழுசா இதுவரைக்கும் சுப்பு வாத்தியாரும் பாக்கல. அவருக்குப் பீறிட்டு வெளியில அடிச்சிருக்க வேண்டிய கோவம், உள்ளுக்குள்ளேய அடிச்சிட்டு இருந்ததுக்கு அந்தப் புத்தகம் கெடைக்காமப் போயி அதெ பாக்காமப் போனதும் ஒரு காரணமா இருந்திருக்கலாம். 

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...