கலியாண விளையாட்டுகள்!
செய்யு - 550
தண்ணிய ஊத்தி எடுத்தாந்த செப்புக் கொடத்துக்குள்ள
மொதல்ல கையில என்னத்தையோ வெச்சி மறைச்சி உள்ளாரப் போட்டாங்க. ஒரே நேத்துல சட்டுன்னு
பொண்ணு மாப்புள்ளையும் கைய வுடணும். கைய வுட்டு கொடத்துலப் போட்டதெ மொதல்ல யாரு
எடுக்குறான்னு பாத்தாங்க. பாலாமணி பட்டுன்னு கைய விட்டு எடுத்தாம். வெளியில வந்த அவ்வேம்
கையில என்ன இருக்குதுன்னு பாக்க சனங்க அலமோதுனுச்சுங்க. அவ்வேம் கைய விரிக்க, அதெ
பாத்தா அத்து மோதிரம். அடுத்ததா மறுபடியும் கையில மறைச்சி தண்ணிக் கொடத்துக்குள்ள
போட்டு பொண்ணையும் மாப்புள்ளையையும் எடுக்கச் சொன்னாங்க. இந்த மொறை சுதாரிச்சிச்
செய்யு மொதல்ல கைய எடுத்தா. வெளியில வந்த அவ்வே கையில என்னா இருக்குன்னு பாத்தா பாலாடை.
கொழந்தைங்களுக்கு மருந்து கொடுக்க உபயோகம் பண்ணுவாங்களே அந்தப் பாலாடை.
மூணாவது முறையும் கையில மறைச்சி குடத்துக்குள்ளப்
போட்டு எடுக்கச் சொன்னாங்க. மொத முறை மாப்புள்ள எடுத்தாம், ரண்டாவது முறை பொண்ணு
எடுத்தா, மூணாவது முறை யாரு எடுக்கப் போறான்னு மணமேடையில நின்னுகிட்டு இருந்த சனங்களுக்கு
ஆவலா போச்சு. உள்ள போன கையி சட்டுன்னு வெளியில வர்றாப்புல தெரியல. ரண்டு கைகளும்
செப்புக் கொடத்துக்குள்ள துழாவிகிட்டெ இருக்கு. "ஏ சட்டுபுட்டுன்னு கையில எடுடி
செய்யு!"ன்னு ஒரு பக்கத்துப் பொம்பள சனங்க சொல்லுதுங்க. "ஏ ஆம்பளெ சிங்கம்
டாக்கடர்ரு சட்டுப்புடுன்னு எடுய்யா!"ன்னு இன்னொரு பக்கத்துப் பொம்பள சனங்க
சொல்லுது. பொண்ணா? மாப்புள்ளையாங்ற போட்டியாப் போயி குடத்துக்குள்ள ரண்டு கைக சிக்கிச்
சின்னாபின்னப்படுதா? ரண்டு கைகளுக்குள்ள ஒரு குடம் சிக்கிச் சின்னிபின்னாப்படுதான்னு
தெரியல. நேரந்தாம் ஆவுதே தவுர. ரண்டு கையும் வெளியில வர்றாப்புல தெரியல. அப்பதாங் குடத்துக்குள்ள
மறைச்சி கைய வுட்ட ஐயரோட குரலு வருது. குடத்துக்குள்ள இந்த மொறை ஒண்ணும் போடல, ரண்டு
பேத்தும் கைய எடுத்துப்புடுங்கன்னு. வெக்கத்துல ரண்டு பேரும் பட்டுன்னு கைய எடுக்கப்
பாக்குறாங்க. முடியல. ஒண்ணும் அவ்சரமில்ல ஒருத்தரு ஒருத்தரு மொல்லமா எடுங்கோன்னு
இன்னொரு ஐயரோட குரலு வருது. ரண்டு பேத்துக்குமே வெக்கமா போவுது. ஒவ்வொருத்தரா கைய
எடுக்கறாங்க. ரண்டு பேத்துக்குள்ள ஓர் அந்நியோன்யம் உண்டாவுது.
சனங்க எல்லாம் ரண்டு பேத்தையும் பாத்துச்
சிரிக்கிதுங்க. பாலாடைய மொதல்ல செய்யு கையில எடுத்ததால பொறக்கப் போறது பொம்பள புள்ளத்தாம்ன்னு
சில சனங்க சிரிக்குதுங்க. மோதிரத்த மொத மொதலா கையில எடுத்ததால ஆம்பளெ புள்ளன்னுத்தாம்
சில சனங்க சிரிக்குதுங்க. அதெப்படி மோதிரத்துக்கா புள்ளே கணக்கு? பாலாடைக்குத்தாம்
புள்ளெ கணக்கு? பாலாடைய எடுத்தவ பொண்ணுங்குறதால பொண்ணுத்தாம் டாக்கடருக்குப் பொறக்கப்
போவுது. இந்த நிமிஷத்துலேந்து பொண்ணுக்கு நகெயெ சேக்க ஆரம்பிச்சிடுடா டாக்கடர்ருனனு
சனங்கள்ல சில கெக்கெலி கொட்டிச் சிரிக்கிதுங்க. அதெ கேட்டுக்கிட்டு நமக்கு பொம்பளப்
புள்ளத்தாங் வேணுங்றாம் பாலாமணி. அவ்வேம் அப்பிடிச் சொன்னதெ கேட்ட வுடனே சனங்க ஒனக்கென்னடி
செய்யு புள்ளே வேணுங்குதுங்க. அவ்வே வெக்கப்பட்டுக்கிட்டுத் தலையக் குனிஞ்சிட்டுச்
சிரிக்கிறா. பதிலச் சொல்ல மாட்டேங்றா. ஏய் அமுக்குணிப் பொண்ணே சொல்லித் தொலைடி
என்ன புள்ளே வேணும்ன்னு சனங்க சீண்டுதுங்க. ஆம்பளெ புள்ளங்ற செய்யு தலையக் குனிஞ்சிக்கிட்டு.
இப்பவே ஆம்பளெ புள்ள, பொம்பள புள்ளன்னு
கணக்கப் போட ஆரம்பிச்சிட்டியளா? அதல்லாம் இன்னிக்கு ராத்திரிக்கிக் கதெ முடிஞ்சி பத்து
மாசம் ஆன பெற்பாடுதாங், அவ்சரப்படாதீயன்னு அதுக்கும் சில சனங்க கெக்கலிக் கொட்டுதுங்க.
பதிவிசா கேள்வியக் கேக்கறாப்புலயும் கேக்குறது, அதாச்சி என்னவோ எதுவும் தெரியாததப்
போல. அப்பிடிக் கேட்டுப்புட்டு அதுக்கு ஒரு பதில வாங்குனப்ப அதுக்கும் சேத்து பரிகாசம்
பண்ணுறதுதாங் தாலி கட்டி முடிஞ்ச பிற்பாடு நடக்குற கலியாண வெளையாட்டுங்க. மணமேடையில
இதெ நின்னுப் பாக்க பாக்க ஆசையா இருக்கும். மணமேடையில நின்ன உறவுக்கார சனங்களத் தவுர
மித்த சனங்க எல்லாம் சாப்புட்டுக் கெளம்புறதுல குறியா நின்னதுல முக்காவாசி மண்டபம்
காலியாயிருந்துச்சு. மேடைக்கு கீழ இருந்த கொஞ்ச நஞ்ச சனங்களும் அங்க இங்கன்னு வெளியிலயும்
உள்ளயும் அலைஞ்சுகிட்டு கெடந்ததுங்க. இந்த வெளையாட்டுகள மேடையில நின்னுப் பாத்தது ஒறவுக்கார
சனங்க மட்டுந்தாம். அதுவும் கொஞ்சந்தாம்.
"மணப்பொண்ணும் மாப்புள்ளையும் ஒரே
மாலைய எம்புட்டு நேரமா போட்டுருப்பீயே? ஏ பொண்ணு! நீ ஒம் மாலையத் தூக்கி ஆம்படையான்
கழுத்துல போடு! யப்பா ஆம்படையா ஒம் மாலையத் தூக்கி ஆத்துக்காரிக் கழுத்துல போடு!"ன்னாரு
மூணாவது ஐயரு. ரண்டு பேரும் மாலையக் கழட்டி போட வர்றதுக்குள்ள சுத்தி நின்ன சனங்களப்
பாத்து ஐயரு சொன்னாரு, "என்னா மனுஷாளுங்க நீங்க? ஒங்கப் பொண்ணோட கழுத்துல மாலையப்
போட வர்றாம்! சும்மா இருக்கேளே? அந்தப் பக்கத்துலயும்தாம் கேக்குறேம், ஒரு பொண்ணு
மாலையப் போட வர்றா! சும்மா இருக்கேளே?"ன்னு சொன்னதும்தாம் தாமசம். சனங்க பொண்ணையும்
மாப்புள்ளையையும் மாலையப் போட வுடாம இழுக்குறதும் வுடுறதுமா போக்குக் காட்டுதுங்க.
சரியா மாலையப் போட வர்றப்போ பொண்ணையும் மாப்புள்ளையையும் இழுக்குதுங்க. இவுங்க இழுக்குற
இழுப்புல மாலையப் போட முடியாதுன்னு பொண்ணும் மாப்புள்ளையும் சோந்து போறப்ப பிடியை
விடுதுங்க. சரித்தாம் பிடிய விட்டாச்சேன்னு நெனைச்சு பொண்ணும் மாப்புள்ளையும் மாலையப்
போட வர்றப்ப சட்டுன்னு கையப் பிடிச்சி இழுத்து வுட்டுப்புடுதுங்க. இதெ மாத்தி மாத்திச்
செஞ்சு பொண்ணும் மாப்புள்ளையும் களைச்சுப் போயி இந்த மாலையப் போடவே வாணாம்ன்னு நெனைக்குறப்ப
பிடியை வுட்டுப் போட வைக்குதுங்க. பொண்ணுக்கும் மாப்புள்ளைக்கும் அப்பாடான்னு போவுது.
வெளையாட்டு ஏக தமாசாப் போவுது.
வெளையாட்டு இதெப் போல நெறைய இருக்குதாம்.
ஆன்னா நேரந்தாம் இல்ல. வேக வேகமா பொம்மைய ஒண்ணு வெச்சு கொழந்தெ போறந்தாப்புல அடுத்தாத
ஒரு நாடவத்தெ நடத்துறாரு ஐயரு. நாடவம் நடந்துக்கிட்டு இருக்குறப்பவே ராசாமணி தாத்தா
சத்தத்தெப் போடுது, "போதும் போதும் இனுமே அதெ அவுங்கப் பாத்துப்பாங்க. நேரமாயிடுச்சு.
பொண்ணு மாப்புள்ள சீக்கிரமா சாப்புட்டுக் கெளம்புனாத்தாம் நாலரைக்குள்ள திட்டைக்குப்
பொண்ணு வூட்டுக்கு அழைப்புக்குப் போவ முடியும். சட்டுபுட்டுன்னு முடிச்சி அனுப்புங்க.
பெறவு பந்தியில வேற வெளையாட்டு இருக்கு. படத்தெ எடுக்குறவனுவோ இவ்வேம் அவளுக்கு வூட்டுன்னு
அவ்வேம் இவளுக்கு வூட்டுன்னு அத்து ஒரு அரை மணி நேரம் ஆவும்!"ன்னு சொன்னதும்
எல்லாம் ஒரு முடிவுக்கு வருது.
"ஆத்துக்காரி கையிலயும் ஆம்படையாம்
கையிலயும் அப்பளத்தெ கொடுத்து தலையில உடைச்சிடச் சொல்லிட்டா வெளையாட்டு மூணா முடியும்!"ங்றாரு
ஐயரு.
"அதெல்லாம் சாப்புடுற எடத்துல கன்னத்துல,
தலையிலன்னு ஒடைச்சிப்பாங்க!"ங்குது ராசாமணி தாத்தா சிரிச்சிக்கிட்டெ. பொண்ணையும்
மாப்புள்ளையையும் சாப்புடக் கொண்டு போறாங்க. மணமேடை கிட்டதட்ட காலியாவுது. மண்டபத்துல
அங்க இங்கன்னு நின்னுகிட்டு இருந்த எல்லா சனமும் பந்தி பரிமாறுற எடத்துல இருக்குது.
மண்டபத்து வாசல்லு பாத்தா மணமேடையோட ஓரத்துல ரண்டு உருவந்தாம் தென்படுது. ஒண்ணு ராசாமணி
தாத்தா. இன்னொண்ணு சுப்பு வாத்தியாரு. இதெல்லாம் ஓரமா பாத்துட்டு நிக்குறப்ப சுப்பு
வாத்தியாருக்கும் மனசு குளுந்து போவுது. இருந்தாலும் மனசுக்குள்ள உறுத்திக்கிட்டு
இருக்குறதெ யாருகிட்டாச்சும் கேட்டுத்தானே ஆவணும்.
"ன்னா மாமா! தாலி கட்டுனது பன்னெண்டே
காலு! கவனிச்சீயளா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அத்து கணக்குல வாராது மாப்ளே! கலியாணம்
ஆரம்பிச்ச நேரந்தாம் கணக்குல வாரும். கூட்டத்தெ பாத்தீயா? இந்தக் கடைசிலேந்து அந்தக்
கடைசி வரைக்கும் மாங்கல்யத்த தொட்டுக் கொடுத்து அட்சதெய கொடுக்குறதுக்குள்ளாரவே
அரை மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சுல்லா?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
"வாத்தியாருதானே வைக்குறது நம்ம மொற!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"நாம்ம சொல்லிட்டேம்! எங்க ஒம் மாப்புள
கேக்குறாம் மாப்ளே? ஏழு பேத்து ஒரு கலியாணத்தெ நடத்த தேவையா பாரு? நாம்ம ஒரு ஆளே போதும்
மாப்ளே! என்னவோ ஆசப்பட்டு புது மொறையில செய்யணும்ன்னாம். நெலையா நின்னாம். செரி எத்தோ
பண்ணித் தொலைன்னு வுட்டுப்புட்டேம். இப்போ பயலுக்குத் திருப்தியா போயிருக்கும்.
ல்லன்னா மனசுக்குள்ளயே கரிச்சிக்கிட்டுக் கெடப்பாம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
"பன்னெண்டு மணிக்குள்ளயே ஒட்டுமொத்த
கலியாணத்தையும் முடிச்சிருக்கலாம் மாமா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"என்னத்தெ பண்ணச் சொல்றே மாப்புள!
சில சமயம் தேவையில அப்பிடித்தாம் ஆயிப்புடுது!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
கலியாணம் முடிஞ்ச ஒடனே காரு சம்பந்தமாவும்,
கட்டிலு பீரோ சம்பந்தமாவும் ராசாமணி தாத்தா சொல்றார்ன்னு சொன்னது இப்போ நெனைப்புக்கு
வந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு. அதெ பத்தியும் கேட்டுப்புடுவோம்ன்னு நைசா வார்த்தையப்
போட்டாரு சுப்பு வாத்தியாரு.
"ன்னா மாமா! கார்ரு, கட்டிலு, பீரோப்
பத்தி ஏத்தோ கலியாணத்தெ முடிச்சி சொல்லணும்ன்னு சொன்னீயளே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ஆங் சொன்னேம்லா மாப்ளே! அத்து வந்து
ஒண்ணும் நெனைச்சிக்காதே மாப்ளே! மூணு அழைப்பு முடிஞ்சு சென்னைப் பட்டணத்துல குடி வைக்குறப்போ
அதெ முடிச்சி வுட்டுப்புடுவேம். கலியாண அவசரத்துல அதெ போட்டு அலட்டிக்கிட வாணாம்ன்னு
ஒம் மாப்புளத்தாம் சொன்னாம். அதாங் அதெ அப்பிடியே ஒதுக்கி வெச்சிட்டுக் கலியாண காரியத்தெ
மட்டும் பாத்தாச்சு. யிப்போ பாரு நெறைவாப் போச்சுது. ஒமக்கு மனசுல ஒண்ணும் வருத்தமில்லல
மாப்ளே? அத்தெ மட்டும் காரணம்ன்ன நெனைச்சிப்புடாதே மாப்ளே! கிட்டக்க வா! இன்னொரு சங்கதியும்
இருக்கு!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
சுப்பு வாத்தியாரு நெருங்கிப் போனாரு.
குசுகுசுன்னு சொல்லுறாப்புல சொன்னுச்சு ராசாமணி தாத்தா. "நம்ம பயெ சென்னைப்
பட்டணத்துல பெரிய டாக்கட்ர்லா! ஏற்கனவே இன்கம்டாக்ஸ் பெரச்சனெ இருக்கு மாப்ளே! அதுல
தெரிஞ்ச எவனுக்காச்சும் பத்திரிகெ வைக்கத்தானே வேண்டிக் கெடக்கு. அதுல எவனாச்சும் கலியாணத்துக்கு
வந்திருப்பாம். பத்திரிகெ வைக்கலன்னாலும் செரித்தாம். நமக்கும் தெரியாமா வர்றாம இருக்க
மாட்டாம். எதுக்குங்றே? கங்காணிக்கத்தாம்! இப்பத்தாம் ஆளாளுக்குக் செல்ல கையில வெச்சிக்கிட்டு
கிளிக்கு கிளிக்குன்னு போட்டாவே எடுத்துத் தள்ளுறானுவோளே? அப்பிடி எடுத்து டெல்லிக்கு
அனுப்பிப்புட்டாம்ன்னு வெச்சுக்கோ! அதாங் நகெ நட்டு சீரு சனத்தி கலியாண சாமாஞ் செட்டு
கட்டிலு பீரோ காருன்னு அதெ படத்தெ பிடிச்சிட்டாம்ன்னா வெச்சுகோ, சோலி முடிஞ்சது
மாப்ளே! வெசாரணைன்னு கூப்ட்டு வெச்சு நொங்கு எடுத்துப்புடுவாம். அதுக்குதாங் நகெயெக்
கூட போட்டு வுடாம செட்டு நகைய வாடகைக்கு எடுத்து மாட்டி வுடுன்னு ஒரு ஏற்பாட்ட பண்ணி
வுட்டது. இப்போ புரியுதா ஒனக்கு? நீயி நாளைக்கு காலையில மொத அழைப்பு முடிஞ்சி அனுப்பி
வுடுறப்போ நூத்துப் பவுனு நகையெ லிஸ்ட்டுப் போட்டு ஒரு காயிதத்துல எழுதி ஒம் மாப்புள்ளைக்கிட்டெ
கொடுத்துப்புடு மாப்ளே! வந்த ஒடனே மொத வேலையா அதெ பேங்கு லாக்கர்லத்தாம் கொண்டு
போயி வைக்கணும்! நகெ நட்டுல்லாம் வெச்சு வூட்டுல பாதுகாப்பு பண்ணிக்கிட்டு கெடக்க
முடியாது மாப்ளே! ன்னா சொல்றே மாப்ளே? மித்தபடி எல்லாம் நெறைவுதானே?"ன்னுச்சு
ராசாமணி தாத்தா.
சுப்பு வாத்தியாரு மனசு எதையும் சொல்ல
முடியாம பலவெதமா சொழண்டு சொழண்டு அடிச்சிது. "என்னத்தெ நெறைவா முடிஞ்சது கலியாணம்?
காலைச் சாப்பாட்ட சாப்புட்டவேம் பாதி, சாப்புடாதவேம் பாதி. மதியானச் சாப்பாட்டுலயும்
அதாங் கதி. எம்மாம் கூட்டத்துக்குச் சாப்பாட்டப் போட முடியும்ன்னு கணக்குத் தெரியாம
பத்திரிகை வெச்சதுல கூட்டம் குமிஞ்சிப் போயி இந்தக் கூட்டத்துல சாப்புட முடியுமோ?
முடியாதோன்னு நெனைச்சு கெளம்பிப் போனவேம் பாதி. கெளம்பிப் போவாம சாப்பாடு கெடைக்காம
நின்னவேம் பாதி. இதுல என்னத்தெ நெறைவா பண்ணிப்புட்டாத சொல்றானுவோ?"ன்னு புரியாம
முழிச்சாரு சுப்பு வாத்தியாரு.
"கலியாணம்லாம் முடிஞ்சித்தாம் காரு,
கட்டிலு, பீரோ, நகெ நட்டுக்கான ஏற்பாடுகளப் பண்ணிக்கிடலாம்ன்னா போட்டிருந்த கடனைக்
கூட தள்ளிப் போட்டிருக்கலாமே. என்னவோ டாக்கடர்ரு மாப்புள்ளைன்னா மண்டபத்துல கார்ரக்
கொண்டாந்து நிறுத்துனாத்தாம் ஆச்சுன்னு கூப்பாடு போட்டானுவோ. இப்போ பாத்தா காருக்குன்னு
பணத்தெ வெரட்டி வெரட்டி வாங்கிப்புட்டு ஒண்ணுத்தையும் பண்ணாம அது இதுன்னு சம்பந்தம்
இல்லாத வெளக்கத்தைக் கொடுக்குறுனாவோ! கலியாணச் சிலவுக்குன்னு பணத்தெ கொண்டாந்து
கொடுத்தப்போ அதெ பாங்கியில போட்டா பெரச்சன ஆவும்ன்னு சொன்னப் பயலுவோ! வூட்டுல
இருக்குற பணத்தெ திருட வந்தா அவ்வேம் மொகத்த கனவுல பாத்தே கண்டுபிடிச்சிப்புடுவேம்ன்னு
சொன்னவனுவோ! யிப்போ எடுத்த நகெ நட்டெ கூட பொண்ணப் போட வுடக் கூடாதுன்னு சொல்லிப்புட்டு,
அதெ வாங்கிட்டுப் போயி பாங்கி லாக்கர்ல வைக்கணும்ன்னு நிக்குறானுவோ. அதுக்கு திருட்டுப் பயங்ற காரணத்தெ யில்லா முன்னுக்குப்
பின்னா சொல்லுறானுவோ. ஏம் இப்போ நகெ நட்டெ திருட வந்தா திருட்டுப்பய மூஞ்சு கனவுல
வந்து தெரியாதாக்கும்?"ன்னு சுப்பு வாத்தியாரு வெத வெதமா நெனைச்சாரு.
எல்லாத்தையும் மனசுக்குள்ள வெத வெதமாத்தாம்
நெனைச்சிக்கித்தாம் முடிஞ்சதே தவுர எதெப் பத்தியும் அவரால கேள்வியக் கேக்க முடியல.
பேச்சுன்னு வர்றப்போ சம்பந்தம் யில்லாம எதாச்சும் சொல்லி சமாளிக்கத்தாம் அவரால முடிஞ்சிது.
ஊமைக்குத்தா கூட விசயத்தெ சொல்ல முடியல. ஒருவேள எதாச்சும் கேட்டு கலியாணம் முடிஞ்ச
ஒடனேயே பெரச்சனையா பண்ணுறதா கெளப்பி வுட்டுப்புடுவானுவோளோன்னு பயந்தாரு. கடெசீயா,
"செரித்தாம் மாமா! பெரியவுக சொன்னா சரியாத்தாம் இருக்கும்!"ன்னாரு சுப்பு
வாத்தியாரு.
"எம் மாப்புளன்னா மாப்புளத்தாம்!
கற்பூரப் புத்தி. பட்டுன்னு புடிச்சிக்குவே! செரி வா! ரவ்வச் சோத்துல ரண்டு அள்ளிப்
போட்டுக்கிட்டு அடுத்து ஆவ வேண்டிய வேலையப் பாப்பேம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
*****
No comments:
Post a Comment