29 Aug 2020

எமகண்டத்துல கட்டுன தாலி!


எமகண்டத்துல கட்டுன தாலி!

செய்யு - 548

            காலையில விகடு கண்ணு முழிச்சப்போ அதிகாலை நாலு மணி இருக்கும். ரண்டாயிரத்து பதினாலாவது வருஷத்தோட நவம்பர் மாசத்து ரண்டாம் தேதி பொறந்திருந்துச்சு. அப்பத்தாங் நெறைய சனங்களுக்குத் தூக்கம் பிடிச்சிருக்கும் போல. எல்லாம் அசந்துப் போயி கெடந்துச்சுங்க. மண்டபத்து முகப்புல ராசாமணி தாத்தா, சித்துவீரன், லாலு மாமா எல்லாம் உக்காந்து பொட்டணம் போட்டுக்கிட்டும், பைகள நெறைய வெச்சிக்கிட்டு அதுல திணிச்சிக்கிட்டும் இருந்ததுங்க. கலியாணத்துக்குக் கொடுக்குறதுக்குன்னே ஒரு பையி. அதுல பொண்ணு மாப்புள்ளையோட பேரு, கலியாணம் நடக்குற எடம், நாளு இதெல்லாம் போட்டு மணமக்களை வாழ்த்துனதுக்கு நன்றின்னு சொல்லி ராசாமணி தாத்தா, சரசு ஆத்தாவோட பேரு போட்டுருந்துச்சு. பையி ரொம்ப அழகா இருந்துச்சு. சணல்ல செய்யுற வேலைப்பாடான்னு பையின்னு அதெப் பத்திப் பேசிக்கிட்டாங்க. அதுல ராத்திரி வெளியிட்ட 'நூறாண்டு மணமக்கள் ஒன்றாக வாழ!'ங்ற புத்தகம், பாடம் பண்ண தேன்நெல்லி ஒரு பொட்டணம், கருப்பட்டி இனிப்புல செஞ்ச பாடம் பண்ணுன கேரள வாழைப்பழ சிப்புக ஒரு பொட்டணம், நலமாக வாழ ஆயுர்வே வழிகள்ன்னு எழுதப்பட்ட நாலு பக்கத்து அட்டை ஒண்ணு இதையெல்லாம் போட்டு வேல விறுவிறுப்பா நடந்துக்கிட்டு இருந்துச்சு.

            விகடுவெ பாத்ததும் ராசாமணி தாத்தா, "ன்னடா பேராண்டி! கலியாண வூட்டுல இம்மாம் வேல கெடக்கு. நீயி பாட்டுக்கு ந்நல்லா இழுத்துப் போட்டுத் தூங்குதீயே?"ன்னுச்சு.

            "நீங்கல்லாம் ராத்திரி தூங்கலையா?"ன்னாம் விகடு.

            "எங்க தூங்குறது? தூக்கம் தொலைஞ்சு நாளாச்சே. கலியாணத்தெல்லாம் முடிச்சிப் போட்டுத்தாங் தூங்கணும். ஒம் மச்சாங்கார்ரேந்தாம் ஒண்ணுக்குப் பத்தால்லா வேலய வெச்சிருக்காம். பாத்தீல்லா? பாத்து நாளா அவனும் செரியா தூங்கல. கலியாணத்தெ யாரு பண்ணாத வகையில பண்ணிப்புடணும்னு ஒவ்வொண்ணா பாத்து பண்ணிருக்காம். உக்காந்துப் பாரு!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            ராத்திரி வெளியிட்ட புத்தகத்தப் பாத்தாம் விகடு. புத்தகம் முழுக்க தோஷ கதியா இருந்துச்சு. எந்தெந்த தோஷம் இருந்தா எந்தெந்த கோயிலுக்குப் போகணுங்ற விவரம்தாம் புத்தகம் முழுக்க இருந்துச்சு. அதெ அங்கங்க படிச்சப்போ நாட்டுல நெறைய பேத்துக்குத் தோஷம் இருக்குங்றதுக்காகவே கோயில்கள கட்டி வெச்சிருக்கிறதா பட்டுச்சு விகடுவுக்கு. தம்பதிகளுக்குள்ள சின்ன சண்டை வந்ததாலும் எந்தச் சாமியக் கும்படணுங்ற வெவரமும் நெறைய இருந்துச்சு. இவ்வளவு சாமிங்க இருந்துமா நாட்டுல புருஷன் பொண்டாட்டிச் சண்டைக வர்றதும், வெவாகரத்து வாங்குறதும் அதிகமா இருக்குன்னு நெனைச்சாம் விகடு. அதெ கொஞ்சம் விகடுப் படிச்சுப் பாத்ததப் பாத்துட்டு லாலு மாமா கேட்டுச்சு, "பொத்தகம் எப்பிடிடா?"ன்னு. விகடு தலைய மட்டும் ஆட்டுனாம். வேற ஒண்ணுத்தையும் சொல்லல.

            "ன்னடா பேராண்டி வாயத் தொறந்து ஒண்ணுத்தையும் சொல்ல மாட்டேங்றே? இக்காக ஒம் மச்சாங்கர்ரேம் எம்மாம் மெனக்கெட்டாம் தெரியுமா?"ன்னுச்சு ராசாமணி தாத்தா. அதுல எந்த வெவரத்தை நெட்டுல தட்டுனாலும் பட்டுன்னு வெவரம் வந்துடுங்றதெ ராசாமணி தாத்தாவுக்குப் புரிய வைக்க முடியாதுங்றதால விகடு ஒண்ணும் சொல்லாம நின்னாம்.

            "அவ்வேம் எப்பிடிச் சொல்லுவாம்? அவ்வேம் ன்னா ஒனக்குப் பேராண்டின்னு நெனைச்சிட்டு இருக்குதீயா? பெரியாருக்குல்லா பேராண்டி! சாமி இல்லன்னு நிக்குறப் எமகாதகப் பயலுவோ! படுபாவியோ! அவ்வேங்கிட்டெ போயி இந்தப் புத்தகத்தெ கொடுத்து கேட்டீன்னா என்னத்தெ பதிலெச் சொல்லுவாம்?"ன்னுச்சு லாலு மாமா சிரிச்சிக்கிட்டெ.

            "செரி அப்பிடின்னா இந்த அட்டையப் படிச்சுப் பாருடா பேராண்டி!"ன்னு நாலு பக்கத்து ஆயுர்வேத குறிப்புகள் எழுதப்பட்ட அட்டையக் கொடுத்துச்சு ராசாமணி தாத்தா. ஒவ்வொரு வேள சாப்பாட்டையும் எப்பிடிச் சாப்புடணும்? சாப்புட்டப் பெறவு எம்மாம் நேரம் கழிச்சி தண்ணிக் குடிக்கணும்? ராத்திரியில ஏம் தண்ணிக் குடிக்கக் கூடாது? ஒரு நாளைக்கு எத்தனெ தடவெ மூத்திரம் போவணும், மலத்தெ கழிக்கணும்? எண்ணெய்க் குளியல் மாசத்துக்கு எத்தனெ தடவெ பண்ணணும்?ன்னு ஏகப்பட்ட தகவல்கள் ஒடம்ப எப்படிச் சரியா வெச்சிக்கிறதுன்னு ரண்டு பக்கமும் தப்பும் தவறுமா அச்சிடப்பட்டு இருந்துச்சு. மருந்துங்ற அதிகாரத்துல இருக்குற பத்து திருக்குறளும் அத்தோட சேத்து ஏகப்பட்ட பிழையோட அச்சாயிருந்துச்சு. ‍அதெ புத்தகத்தப் பாத்து அச்சடிக்கிறவனுவோ அதெ கூடயா தப்புத் தப்பா அச்சடிக்கணும்ன்னு நெனைச்சிக்கிட்டாம் விகடு.

            "எப்பிடிடா பேராண்டி? சனங்களுக்கு உபயோகமா இருக்குமா?"ன்னு கேட்டுச்சு ராசாமணி தாத்தா. அதுக்கும் தலைய ஆட்டுனவேம், "இனுமே தூக்கம் பிடிக்காது! அடுத்தடுத்த‍‍ வேலையப் பாக்குறேம்!"ன்னு கழிவறைப் பக்கமா போனாம். "ன்னடாப்பா இவ்வெம் இதையெல்லாம் காட்டுனா டாய்லெட்டுப் பக்கமா விழுந்தடிச்சு ஓடுறாம்?"ன்னு சொல்லிக்கிட்டு சிரிச்சிச்சு ராசாமணி தாத்தா.

            உள்ளாரப் போன விகடு காலைக் கடனையெல்லாம் முடிச்சி, பல்ல துலக்கி, குளிச்சி முடிச்சி, அவனோட கலியாண நாளுக்கு எடுத்த பட்டு வேட்டியையும், சட்டையையும் போடுக்கிட்டு அஞ்சு மணிக்கெல்லாம் தயாராயி வந்தாம். வேட்டியைக் கொஞ்சம் தூக்கிக் கட்டியிருந்தாம். ரொம்ப எறக்கிக் கட்டுனா தரையில தோய்ஞ்சு மண்ணுல கறையாயிடுமோன்னு. அதெப் பாத்துப்புட்டு கணுக்காலு தெரியாத அளவுக்கு எறக்கிக் கட்டுடான்னுச்சு லாலு மாமா. பெறவு அதெ சரி பண்ணிக்கிட்டாம் விகடு. அப்பத்தாங் சனங்க கொஞ்சம் கொஞ்சமா எழும்ப ஆரம்பிச்சதுங்க. எழும்புன சனங்களுக்கு டாய்லெட்டு எந்தப் பக்கம், குளிக்கிற எடம் எந்தப் பக்கம்ன்னு காட்டி வுட்டுக்கிட்டு, பேஸ்ட்டு சோப்பு எடுத்து வாரதவங்களுக்கு ஒரு பெட்டியில வாங்கி வெச்சிருந்த சின்ன சின்ன பேஸ்ட்டையும், சோப்பையும் எடுத்துக் கொடுத்தாம். குளிச்சிட்டு வந்த சனங்களுக்கு தேங்காய் எண்ணெய், புட்டா மாவுன்னு வெச்சிக்கிட்டு ஒவ்வொருத்தரா கேக்க கேக்கக் கொடுத்தாம். ஆறு மணி வாக்குல காப்பிய ஒரு வாளியில போட்டாந்து மண்டபத்து நடுவுல வெச்சாரு சமையல்காரரு. அதெ எடுத்து பேப்பர் கப்புல ஊத்தி ஊத்தி குளிச்சி முடிச்சி தலைவாரிக்கிட்டு வந்தவங்களுக்குக் கொடுத்தாம்.

            கொஞ்சம் கொஞ்சமா மண்டபம் கலை கட்ட ஆரம்பிச்சது. ஏழு மணி வாக்குல கேரளத்து சேலைகளக் கட்டன பொண்டுக வந்து அலங்கார வேலைய ஆரம்பிச்சி வரவேற்குற எடுத்துல நின்னு வேலைய ஆரம்பிச்சதுங்க. வாசல்லேந்து உள்ளார வர எடத்துக்கு நடுவுல வெங்கலத்துல செஞ்ச அலங்கார பாத்திரத்தெ வெச்சு அதுல தண்ணிய ஊத்தி அதுக்குள்ள பூக்கள மெதக்க விட்டுச்சுங்க. கலியாணம் ஒம்போது மணிக்கு மேலத்தாங்றதால கூட்டம் ஒண்ணும் பெரிசா வாரல. ஒண்ணு ரண்டு பேர்ன்னு வந்துக்கிட்டு இருந்தாங்க. இடையிடையில விகடு செல்போன்ல பரமுவோட அப்பாவுக்குப் போன போட்டு ஊர்லேந்து கலியாணத்துக்கு வர்ற பஸ்‍ஸை எடுத்து கெளம்பியாச்சா என்னான்னு கேட்டுக்கிட்டு இருந்தாம்.

            அன்னிக்கு மழையில்லாம இருந்தது தோதா போச்சு. வானத்தெ பாத்தா மேகமாத்தாம் இருந்துச்சு. ஆனா மழையக் கொட்டாம இருந்துச்சு. திட்டையிலேந்து தெருக்கார சனங்கள ஏத்திக்கிட்டு கெளம்புன பஸ்ஸூ சரியா எட்டரைக்குல்லாம் மண்டபத்துக்கு மின்னாடி வந்து நின்னுச்சு. பரமுவோட அப்பா செரியா வேலையப் பாத்திருந்திருக்காரு. வந்திருந்த ஒவ்வொரு சனத்தையும் வாசல்ல நின்னு வரவேத்தது ‍அதுகளுக்கு ரொம்ப திருப்தியா போனுச்சு. காலைப் பந்தியும் ஆரம்பமாச்சுது. வந்தவங்கள அங்க அழைச்சிட்டுப் போயி சாப்புட வெச்சாம் விகடு. அத்தோட அங்கங்க நின்னுகிட்டு இருந்த சனங்க ஒவ்வொருத்தரையும் போயி பந்தியில சாப்புடச் சொன்னாம். அதுக்குள்ளார சுப்பு வாத்தியாரும், வெங்குவும், ஆயியும் கெளம்பி வந்து மண்டபத்துக்கு மின்னாடி நின்னுகிட்டு வார்றவங்களையெல்லாம் வாங்க வாங்கன்னு சொல்லி பந்திக்கு அழைச்சிட்டுப் போயிட்டு இருந்தாங்க.

            ஒம்போது மணிக்கு மேலத்தாம் பாலாமணி கலியாண மண்டபத்துல நொழைஞ்சாம். அவ்வேம் ஹோட்டல்ல ரூமெ எடுத்து தங்குனதா பேசிக்கிட்டாங்க. அத்தோட வேலன் கார்ல வந்து அங்கயும் இங்கயும் அலைஞ்சிக்கிட்டு இருந்தாம். கலியாணத்துக்கு வர்ற முக்கியமான பெருங்கையிகள ஹோட்டல்ல தங்க வெச்சி மருவாதியா அழைச்சிட்டு வர்ற வேலைய அவ்வேம் பாத்துக்கிடறதா பேசிக்கிட்டாங்க. ஒம்போது மணி வாக்குல ஆரம்பிக்க வேண்டிய கலியாணம் ஒம்போதரைக்கு மேலத்தாம் ஆரம்பமானுச்சு. கூட்டத்தால மண்டபம் நெறைய ஆரம்பிச்சிது. சனங்க திபுதிபுன்னு வந்துக் குவிய ஆரம்பிச்சாங்க.

            பொதுவா ஒவ்வொரு கலியாணத்துலயும் கலியாணச் சடங்கெ நடத்துறதுக்குன்னு வாத்தியாரு ஒருத்தரு இருப்பாரு. அவருதாங் மணமேடையில இருப்பாரு. அவரு ஒருத்தர்தாம் இருப்பாரு. அவருக்குத் தொணைக்கு வேணும்ன்னா அவரா ஒரு சிறுபையனா வெச்சிக்கிட்டா உண்டு. மித்தபடி ரண்டு மூணு வாத்தியாரு வெச்செல்லாம் கலியாணம் நடக்காது, அப்பிடி நடத்துறதும் இல்ல. ஆன்னா இப்போ மேடையப் பாத்தப்போ ஏழு பேரு ஐயருமாருங்க நின்னுகிட்டு இருந்தாங்க. அதுல மூணு பேத்து மேடையில நின்னுகிட்டு மிச்ச நாலு பேத்தையும் மண்டபத்தோட நாலு மூலைக்கும் போவச் சொல்லிட்டு இருந்தாங்க. மேடையில நின்ன மூணு பேத்துல ஒருத்தரு கேரள மாந்திரீகவாதியப் போல இருந்தாரு. இதென்னடா அதிசயமா கோயிலு கும்பாபிஷேகத்தப் போல நெறைய ஐயருமாருங்க நிக்குறாங்கன்னு சனங்களே அசந்துதாங் போனுச்சு.

            கலியாணச் சடங்குக நடக்குறப்ப மச்சாங்கார்ரங்ற மொறையில விகடுவும் முக்கியமான ஆளு. அவ்வேந்தாம் மாப்புள கையப் பிடிச்சி அழைச்சிட்டுப் போறதிலேந்து  நெருப்புக் குண்டத்தெ சுத்தி வர்ற வரைக்கும் நெறைய வேலைகள செஞ்சாவணும். அவனையும் மணமேடைக்குக் கூப்புட்டு என்னன்னவோ சடங்குகள எல்லாம் பண்ண சொன்னாங்க. ஒரு வாத்தியாரு கலியாணத்த நடத்துறப்போ அவரு ஒருத்தரு சொல்றதெ செஞ்சா போதும். மூணு ஐயருமாருக நிக்குறப்போ அவுங்க மூணு பேரு மூணு வெதமா சொல்றதையெல்லாம் செஞ்கிட்டுக்குக் கெடக்க வேண்டியதா போச்சு. அதெ மேடையில நின்னுகிட்டு செஞ்ச விகடுவுக்கும், அதெ பாத்த சனங்களுக்குமே அலுப்பா இருந்துச்சு. அதெப் பத்தி எழுதிக்கிட்டுப் போனா படிக்குற ஒங்களுக்கும் அலுப்பத்தாம் போவும்.

            மாப்புள காசிக்குக் கோச்சுக்கிட்டுப் போறாப்புலயும், கோச்சுக்கிட்டுப் போற மாப்புள்ளைய சமாதானம் பண்ணிக் கொண்டாறதுங்றது அந்தச் சடங்குகள்ல ஒண்ணு. அப்பிடிப் போன மாப்புள்ளைய பாதத்த கழுவ வுட்டு, சாமிக்குப் பிடிப்பாங்கல ஊர்லவத்தப்போ குடை அந்த மாதிரியான குடைய பிடிக்க விட்டு, சாமிக்கு வீசுவாங்கல சாமரம் அதெப் போல சாமரத்த விசுற விட்டு, அந்தக் காலத்து ராசாக்கப் போடுவாங்கல பாதகொறடு அதெப் போல போட வுட்டு அத்தனெ வேலைகளையும் விகடுவெ விட்டுப் பண்ண விட்டு பாலாமணிய அழைச்சிட்டு வாரச் சொன்னாங்க. விகடுவும் அப்பிடியெல்லாம் பண்ணி முடிச்சுக் கொண்டாந்தாம்.

            ஒரு வாத்தியாரு இருந்த கலியாணச் சடங்கெ பண்ணுறப்பவே ஒண்ணுக்கு ரண்டா நேரம் ஆயி கடெசீ நேரத்துலத்தாம் அவ்சர அவ்சரமா கலியாணம் நடந்து முடியும். இதுல மேடையில மூணு, தெசைக்கு ஒண்ணா நாலு பேத்துன்னு நின்னு பண்ணதுல நேரம் பாட்டுக்கு அடிச்சிக்கிட்டுப் போனுச்சு. அதுக்கு எடையில ஆயி வேற விகடுகிட்டெ ஓடியாந்து காலைச் சாப்பாடு முடிஞ்சிட்டுன்னும், கலியாணத்துக்கு வந்த நெறையப் பேத்து சாப்பாடு இல்லாம உக்காந்திருக்காங்கன்னு சொன்னதும் விகடுவுக்கு வருத்தமா போச்சு. என்னடா இந்தப் பயலுங்க கலியாணத்துக்கு வர்றவங்களுக்கு மருவாதி இல்லாம இவனகளுக்குப் பெரிசா மருவாதியப் பண்ணிட்டு நடத்திட்டுக் கெடக்குறானுவோளேன்னு நெனைச்சாம் விகடு. கலியாணத்துக்கு வந்தவங்கள பசியோட உக்கார வெச்சு கலியாணத்தப் பாக்க வெச்சா சுத்தப்படுமான்னு அவனுக்குத் தோணுச்சு. கலியாணத்தெ சீக்கிரமா முடிச்சாலாச்சும் பதினொண்ணு பதினொண்ணரைக்கு மத்தியானச் சாப்பாட்ட போட்டு வுட்டுப்புடலாம். கலியாணம் நடக்குற வேகத்தப் பாத்தா அத்து பதினொண்ணரைக்குல்லாம் முடியுற பாடா தெரியல. பன்னெண்டு மணிக்கு மேலன்ன ஞாயித்துக் கெழமென்னா எமகண்டம்பானுவோளே, என்ன நடக்கப் போவுதுன்னு புரியல. ஐயரு வர்ற வரைக்கும் அமாவாசைக் காத்திருக்காதுங்றதால மறு அமாவாசை வர்ற வரைக்கும் காரியத்த பண்ண ஐயரு போல சடங்குக நடந்துக்கிட்டு இருந்துச்சு.

            கலியாண மண்டபத்துல அந்தாண்ட இந்தாண்ட நவுர முடியல. கூட்டம்ன்னா கூட்டம் தாங்க முடியல. நிமிஷத்துக்கு நிமிஷம் கூட்டம் அதிகமாயிட்டே போனுச்சு. ஆயிரத்து ஐநூத்துப் பேத்துக்கான மண்டபம் ரண்டாயிரம் பேரால நெறைஞ்சிருந்திருக்கணும். கலியாணத்த முடிச்சி மத்தியானப் பந்திய ஆரம்பிச்சாலும் எத்தனெ பேத்து சாப்புடுவாங்க, எத்தனெ பேத்து சாப்புட காத்திருக்காம கெளம்புவாங்கன்னு கணிக்க முடியல. மண்டபத்துல உள்ளார போயிட்டு வெளியில வாரது சாமானியமா இல்ல. மேடையில என்னா நடக்குது, மண்டபத்துக்குள்ள என்னா நடக்குதுன்னு யாருக்கும் ஒண்ணும் தெரியல. அதது பாட்டுக்கு என்னவோ நடந்துச்சு. அதுல மேடையில இருந்தவங்கள மண்டபத்துக்கு வாசலுக்கு வரச் சொல்லு, மின்னாடி இருக்குற புள்ளையாரக் கும்பிட்டுப் போவச் சொல்லுன்னு அங்கங்க நின்ன ஐயருமாருக ஒருத்தருக்கொருத்தரு போன அடிச்சிச் சொன்னதுல ‍மேடைக்கும், மண்டபத்து வாசலுக்கும் போயிட்டு வாரதுலயே நேரம் ரொம்ப சிலவானுச்சு.

            கலியாணச் சடங்கெ பண்ண ஏழு பேத்துக்கும் ஏழு வெதமான மொறைக இருந்திருக்கும் போல. அந்த எழு வெதமான மொறைகள்லயும் எல்லாத்தையும் பண்ணணுங்றதுல பாலாமணி உறுதியா நின்னாம். நேரம் போறதெப் பத்தி அவ்வேம் ஒண்ணும் பெரிசா நினைக்கல. கலியாணத்துக்குன்னு வந்து உக்காந்திருந்த சனங்களுக்குத்தாம் அது பெரிய வாதையா இருந்துச்சு. அப்படி ஒவ்வொண்ணையும் பண்ணிப் பண்ணி கெட்டிமேளம் கொட்டித் தாலியக் கட்டுறப்போ மணி பன்னெண்டே கால் ஆனுச்சு. ஞாயித்துக் கெழமெங்றதால அத்துச் சரியான எமகண்டம்.

            என்னடா இப்பிடி எமகண்டத்துல போயி தாலியக் கட்டி வுடுறதுக்கு எதுக்குடா ஏழு ஐயருமாருகன்னு சனங்க பேசிக்கிடுச்சு. பன்னெண்டே காலு வரைக்கும் தேவையில்லாதச் சடங்குகளப் பண்ண வெச்சு அந்த நேரத்துல தாலியக் கட்ட விட்டதுல சுப்பு வாத்தியாருக்கும் தாங்க முடியாத கோவம். அவருக்கு அந்த நாள்ல குமரு மாமாவோட கலியாணத்துக்குப் பாட்டிமொகத்துல நாளு குறிச்சிக் கொடுத்த ராசாமணி தாத்தாவோட ஞாபவம் சரியா அந்த நேரத்துல வந்துச்சு. செரியான கூறு கெட்ட பயலுவோளா இருப்பானுவோ போலருக்கு, இவனுவோளப் போயிக் கலியாணத்த நடத்த வுட்டா அப்பிடித்தாம் நடத்துவானுவோன்னு மனசுக்குள்ளயே கருவிக் கொட்டிக்கிட்டாரு.

            "பொண்ணு பாக்குறதுன்னா ஞாயித்துக் கெழமெ, மாப்புள பாக்குறதுன்னா ஞாயித்துக் கெழமெ, மூர்த்தோல எழுதுறதுன்னா ஞாயித்துக் கெழமெ, யிப்போ கலியாணமும் ஞாயித்துக் கெழமெதாம். செர பரவால்ல வந்துட்டுப் போறதுக்குச் செளரியமா இருக்கும் நெறைய சனங்கங்களுக்குன்னாலும் சரியான நேரத்துல சரியா காரியத்தெ செய்யணுமா இல்லியா? இப்பிடியா ஒரு சோசியனா இருக்குற அப்பங்காரனும், டாக்கடர்ர இருக்கற மவனுமா சேந்துக்கிட்டு பண்ணுவானுவோ? இந்த டாக்கடர்பய இருக்கான்னே ஒரு நாளு கூட லீவு போடக் கூடாதுன்னு, அதுவும் கலியாணத்துக்குக் கூட லீவு போடக் கூடாதுன்னு ஞாயித்துக் கெழமயாப் பாத்துட்டு நின்னானே? அப்பிடி இருக்குறப் பயெ கலியாணத்தெ எப்பிடி நேரத்தோட பண்ணணும்ன்னு தெரியாதா? இப்பிடித்தாங் ஏழு பேத்த கொண்டாந்து ஒழுங்கா நடக்க வேண்டிய கலியாணத்தெ கண்ட நேரத்துலயும் நடத்தி முடிப்பானுவோ?"ன்னு சுப்பு வாத்தியாரோட யோசனைக பல வெதமா போனுச்சு. அவ்ளோ கூட்டமா ஆளுக நின்னாலும் தன்னோட மனசுல உள்ளதெ யாருகிட்டெ சொல்றதுன்னு அவரு கலங்கிப் போயி நின்னாரு.

            அத்துச் சரி நமக்கென்ன கலியாணம் முடிஞ்சா சரின்னு இப்போ சனங்க அததுவும் திபு திபுன்னு பந்திய‍ நோக்கிப் போனுச்சுங்க. கூட்டம் கட்டுக்கு அடங்கல. சாப்புட்டு வந்தவங்களுக்கு வாசல்ல நின்னு கலியாணப் பரிசா பையோட புத்தகம், பண்டங்களப் போட்டுக் கொடுக்குற வேலையப் பாத்துட்டு நின்ன சித்துவீரன், சுந்தரியால சமாளிக்க முடியல. பையி நல்ல பையா இருந்ததால சனங்க ஒவ்வொண்ணும் ரண்டு மூணுன்னு வாங்கிட்டுப் போவ பாதிக்கு மேல சனங்களுக்கு பையே இல்லாமப் போனுச்சு. அதுலயும் மண்டபத்து வாசல்ல சனங்க, "நூறாண்டு மணமக்கள் ஒன்றாக வாழ!'ங்ற புத்தகம் மட்டும் ஒண்ணு இருந்தா கொடுங்கன்னு முண்டி அடிச்சிக்கிட்டுக் கெஞ்சிக்கிட்டு நின்னதுங்க.

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...