30 Nov 2019

காலக்கட்டுடைப்பு / கவிநிழல் காடு

#kavithai #love
காதலைப் பாடாத கவிதை ஏது? காதலின் ஏக்கத்தை சொல்ல முடியாமல் தவிக்கும் வலியின் ஏக்கம் வழியும் இக்கவிதையின் நுண்மையைக் காதலர்களே அறிவர். காதலைக் காதலிக்கும் ஒவ்வொருக்குமான காணொலி இது.
https://youtu.be/u_KFquhtxXQ



குடி கெடுத்தவன் பொண்ணு வேணாம்!



செய்யு - 284

            தனக்குப் பிரிச்சிக் கொடுக்க வேண்டிய பாகத்த பிரிச்சிக் கொடுக்கக் கூடாதுங்றதுக்காகத்தான் குடும்பச் சொத்துல வர்ற ஆவணத்து நெலத்தை வித்து, வேலங்குடியில நெலத்தை வாங்கியிருக்காங்றது சுப்பு வாத்தியாருக்குப் புரிஞ்சிப் போச்சுது. அதுக்கு வேலங்குடி பெரியவரும், சின்னவரும் உடந்தைங்ற விசயமும் புரியுது. என்ன இருந்தாலும் பாகத்துல வர்ற நெலத்தை விக்குறதும், அதெ வித்த காசை வெச்சி வேலங்குடியில நிலம் வாங்குறதும் தப்புன்னு அவங்க ரெண்டு பேரும் சொல்லலியேன்னு சுப்பு வாத்தியாருக்கு மனசுக்குள்ள ஒரு வருத்தம். பெரிய மச்சான் மட்டும் நல்லா இருந்தா போதும், சின்ன மச்சான் எக்கேடு கெட்டோ போவட்டும்னு விட்டுட்டாங்களேன்னு நெனைச்சு கலங்குறாரு.
            இந்த விசயத்தையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு விருத்தியூருக்கு வந்த சுப்பு வாத்தியாரும், விகடபிரசண்டரு வாத்தியாரும் இது பத்தி செயராமு பெரிப்பாகிட்ட கேட்டாக்க அது ஒரு வார்த்தை கூட வாயைத் தொறந்து பேச மாட்டேங்குது. அப்படியே கல்லுபுள்ளையாராட்டும் உக்காந்திருக்குது. செயராமு பெரிப்பாவோட உருவமும் அப்படித்தாம் ஆஜானுபாகுவா இருக்கும். உக்காந்திருச்சுன்னா ஐயனாரு செல உக்காந்திருக்கிறது மாரியே இருக்கும். "ஒந் தம்பிக்கு சொத்துல பைசா காசி கொடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்க! அதுக்குத் தகுந்தாப்புல என்னென்ன செய்யணுமோ அதெ எல்லாத்தையும் செஞ்சுப் புட்டீங்க! அது செரி! ஊர்ல பஞ்சாயத்த வெச்சா என்ன பண்ணுவீங்க? கொடுத்துதான ஆவணும்?" அப்பிடிங்கிறாரு விகடபிரசண்டரு வாத்தியாரு.
            ஆனா, என்ன பண்ணாலும் சொத்துங்றதுல நயா பைசா கொடுக்கக் கூடாதுங்ற முடிவுல பெரிம்மாவும், பெரிப்பாவும் திடமா இருக்காங்றது தெரிஞ்ச பின்னாடி வலுகட்டாயமா அதெ வாங்குறதுல சுப்பு வாத்தியாருக்கு மனசுக்குள்ள ஒரு நெருடல் வந்துப் போச்சு.
            "அதெல்லாம் வேணாங்கய்யா! நல்லதோ கெட்டதோ அப்பன் இல்லாம போயி, பெறவு ஆயிக ரெண்டும் இல்லாம போயி இருந்த நமக்கு இம்மாம் காலத்துக்கு ஏதோ வழி பண்ணி விட்டுருக்காங்க. தங்காச்சி கலியாணத்தையும் முன்ன நின்னு நடத்திக் கொடுத்திருக்காங்க! அது போதும்! இது வரைக்கும் அண்ணணும் தம்பியுமா எப்டி வம்பு தும்பு இல்லாம, வழக்கு சண்டை இல்லாம இருந்தோமோ அப்டியே இருந்துட்டுப் போயிடுறோங்கய்யா! கடைசீ வரைக்கும் அண்ணங்ற மொறைக்கு அவரு நமக்கு வேணும். தம்பிங்கற மொறைக்கு நாம்ம அவங்களுக்கு வேணும். ஒருத்தருக்கொருத்தரு வேண்டியத்தா இருக்கு. நாளைக்கு முன்ன பின்ன மொகத்தைப் பாக்க வேண்டிதா இருக்கு. சொத்துங்ற பேச்சு வந்து அதயெல்லாம் பிரிச்சிடக் கூடாதுன்னு நெனைக்குறேம்ங்கய்யா! பரவால்ல! நாம்மத்தாம் சர்க்காரு வேலைக்கிப் போயிட்டேம்ல. அதெ வெச்சிப் பாத்துப்பேம்ங்கய்யா!" அப்பிடின்னு சொன்னவருதாம் மேக்கொண்டு எதயும் பேசாம சுப்பு வாத்தியாரு ஒழுகச்சேரி பள்ளியோடத்தப் பாக்கக் கிளம்பிட்டாரு. ஏதோ ஒரு சண்டை நடந்தாவது இந்த விவகாரம் பெரிசா ஆவும்னு எதிர்பார்த்த பெரிம்மாவுக்கும், பெரிப்பாவுக்கும் சுப்பு வாத்தியாரு அப்படிப் பேசிட்டுப் போனதுல சப்புன்னு ஆயிப் போச்சு. ஊர்லயும் பஞ்சாயத்துக்கு வரட்டும் பேசிப்போம்னுத்தாம் இருந்திருக்காங்க. சுப்பு வாத்தியாரு பஞ்சாயத்துக்கு வருவாருன்னு எதிர்பாத்திருக்காங்க. இவரு பஞ்சாயத்துக்குப் போவாம ஒழுகச்சேரிக்குப் போனதுல அவங்களும் விசயம் புரியாம தவிச்சாங்க. கொஞ்ச ஊருக்குள்ள இந்த விசயத்தைப் பத்தியே அப்படியும், இப்படியுமா பேசிப்புட்டு அப்புறம் விட்டுப்புட்டாங்க.

            சுப்பு வாத்தியாரு ஒழுகச்சேரிக்குக் கிளம்பிப் போயி ஒரு மாசத்துல செயராமு பெரிப்பாவும், பத்மா பெரிம்மாவும் விகடப்பிரசண்டரு வாத்தியாரை அழைச்சுகிட்டு ஒழுகச்சேரிக்குப் பள்ளியோடத்துக்கு வாராங்க. சுப்பு வாத்தியாரு வேலைக்குச் சேர்ந்த இந்த இத்தனை நாளுல, இப்பதாம் மொத மொதலா அவங்க ஒழுகச்சேரிக்கு வாராங்க. வந்தவங்கள என்ன விசயம்னு கேட்டாக்கா, "நீயி அந்தக் குடி கெடுத்த பயலோட பொண்ண கட்டிக்கக் கூடாது!"ங்குது பத்மா பெரிம்மா.
            "ஆமாம்டாம்பீ! அண்ணம் தம்பி நமக்குள்ள ஆயிரம் இருக்கும்! இந்தக் குடும்பத்துக்கு ஒழைச்சிப் போடுற வரைக்கும் போட்டுட்டுக் கடைசி காலத்துல நாம்ம ஒங் கூடத்தாம் வந்து தங்கப் போறேம்! மட்டரக சாதிக்கார பயலோட பொண்ணுல்லாம் ஒனக்கு வாண்டாம்டா!"ங்குது செயராமு பெரிப்பா.
            தலையும் இல்லாம, வாலும் இல்லாம இப்படி மொட்டையா பேசுனா சுப்பு வாத்தியாருக்கு என்ன புரியும்? ஒண்ணும் புரியாம முழிக்கிறாரு அவரு.
            விகடபிரசண்டரு வாத்தியாருதாம் வெளக்குறாரு. "இந்தாருப்பா! நீயி பாட்டுக்கு வேற சங்கதி எதையும் சொல்லாம இஞ்ஞ வந்துட்டே! அஞ்ஞ வேலங்குடியில ஒங்க பெரிய அத்தாம் பொண்ண பத்தி சேதி சொல்லி விட்டோமேன்னு எதிர்பாத்துட்டு இருந்துருப்பாரு போலருக்கு. சேதி ஒண்ணும் வரலயேன்னு கெளம்பி நம்ம கண்ட்ரமாணிக்கத்துக்கு வந்துப்புட்டாரு. வந்து சேதி ன்னான்னு வெசாரிச்சுச் சொல்லுங்கன்னுட்டாரு. வீடு தேடி வந்துட்டாரேன்னு நாம்ம விருத்தியூர்ல போயி விசயத்தச் சொல்லி வெவரத்தக் கேட்டாக்கா, ஒஞ்ஞ அண்ணியும், அண்ணணும் தாம்தூம்னு குதிக்கிறாங்க. இந்த விசயத்த போயி நம்ம வூட்டுல இருக்குற ஒங்க பெரிய அத்தாம்கிட்ட சொன்னாக்கா, நாம்ம யம்பீக்கிட்டயே பேசிக்கிறேம்னு கெளம்பிட்டாக. அதெ வந்து இஞ்ஞ விருத்தியூர்ல சொன்னாக்கா, ஒங்க பெரிய அத்தாம் முந்தி இஞ்ஞ வார்றதுக்குள்ள நாம்ம இஞ்ஞ வரோணும்ன்னு கெளப்புடா வண்டியன்னு நம்மளயும் தூக்கிப் போட்டுக்கிட்டு இஞ்ஞ வந்திட்டாக. இதாம்யா நெலவரம்!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "அதாம்டாம்பீ வெசயம்! அந்த நாதாரிப் பயெ வந்து இஞ்ஞ ஒம் மனசெ கெடுக்குறதுக்கு மின்னாடி நாம்ம வந்துப்புடணும்னுத்தாம் செஞ்சுகிட்டுக் கெடந்த வேலையெல்லாம் போட்டுட்டு இஞ்ஞ வந்துட்டேம். செரியான பன்னிக்குட்டிக்குப் பொறந்த பயெ! பொண்ணு புள்ளைங்களல ஒண்ணா ரெண்டா பெத்துப் போட்டிருக்காம். அவ்வேம் பொண்ண கட்டுனேன்னு வெச்சுக்க மொத்த குடும்ப சொமையும் ஒந் தலையிலத்தாம் விழுந்துப்புடும். நீயி சம்பாதிச்சு நல்ல வெதமா இரு. நமக்குல்லாம் ஒண்ணும் பண்ண வாணாம். ஒஞ் சம்பாத்தியதிலேந்து ஒத்த பைசா கொடுன்னு நாமளும் கேக்க மாட்டேம். ஆனாக்கா அவ்வேம் பொண்ண கட்டிட்டு சம்பாதிக்கிற காசிய அவ்வேம் குடும்பத்துக்கு அழுதுட்டுக் கெடக்காதே. கூட பொறந்த பொறப்பா போய்ட்டீயா? அதாங் தம்பிக்காரன காப்பாத்திப் போடணும்னு ஆன வேல, ஆவாத வேலன்னு அத்தனையையும் போட்டுட்டு வந்திருக்கேம்டா!"ங்குது செயராமு பெரிப்பா. செயராமு பெரிப்பா கோர்வையா இத்தனை வார்த்தைகளெல்லாம் பேசுற ஆளு கெடையாதுதாம். ஆனா இப்போ பேசுது.
            பத்மா பெரிம்மாவும் விடல. அது பங்குக்கு அது சொல்லுது. "இந்தாருங்க யம்பீ! அவனெ ஒங்களுக்கு ஒங்க அக்காள கட்டுன பின்னாடித்தாம் நல்லா தெரியும். நமக்கு அப்டி இல்ல. அவ்வேம் கூட பொறந்த பொறப்பு மாரி. அவ்வேம் கூடவே இருந்து பாத்தவ. என்னவோ அவந்தாம் பெரியவன்னு பெரிய தாட்டீகம் பண்ணுவாம். ஒங் காசிலயே இன்னும் பெத்து வெச்சிருக்கானே ரண்டு பொட்டப் புள்ளைங்க, ஆட்டுக்குட்டிங்க மாரி ஆம்பளப் புள்ளைங்க அத்தனைக்கும் வழி பண்ணிப்புடுவாம். நம்ம குடும்பத்துலேந்து ரண்டு பொண்ணுங்கள அவனுக குடும்பத்துக்குக் கொடுத்து சின்னாபின்னபட்டது போதும். ஒன்னயையும் போயி அஞ்ஞ வெச்சு அழறதுக்கு நாஞ்ஞ தயாராயில்ல. அவ்வேம் பொண்ண வுட்டுப்புட்டு நீயி எவள வாணாலும் இழுத்துட்டு வா. குலம், கோத்திரம், சாதிச் சழக்குன்னுப் பாக்காம கலியாணத்தப் பண்ணி வைக்கிறேம். அவ்வேம் பொண்ணு மட்டும் வேண்டாம்ங்க யம்பீ! கொலகாரப் பாவி! எந் தலையெழுத்து! நமக்கு அண்ணனா இருக்கணும்னு எழுதித் தொலைச்சிருக்கு! ஒங்களுக்கும் ன்னா தலையெழுத்தா? அவனுக்கு மருமவனா போவணும்னு! அப்டிப் போவணும்னா நம்மட பொணம் வுழுந்த பிற்பாடுத்தாம் போவணும்!" அப்பிடிங்கிது பெரிம்மா.
            அவங்க ரெண்டு பேரும் இப்படிப் பேசுறத பாத்துட்டு சுப்பு வாத்தியாருக்கு யோசனையா இருக்கு. குடும்பச் சொத்துன்னு பைசா காசிக் கொடுக்காம, இப்போ இப்படி வந்து ரொம்ப அக்கறையுள்ளவங்க மாரில்ல பேசுறாங்கன்னு யோசிக்கிறாரு, யோசிக்கிறாரு, யோசிச்சுக்கிட்டே இருக்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தாருடாம்பீ! இதுல யோசிக்கிறதுக்கு ஒண்ணுமில்ல. அண்ணங்கார்ரேம் நாம்ம. ஒம்மட நல்லதுக்குத்தாம் சொல்வேம்! வாத்தியாரு சொன்னாரு! நீஞ்ஞ ரண்டு பேரும் வேலங்குடியில விசாரிச்சதெல்லாம் வாஸ்தவந்தாம். இன்னிய வரைக்கும் அதுல ஒத்த நெலத்த ரீஸ்தரு பண்ண முடியல. பூராவும் கோயிலு நெலம்ங்றாங்க. ஆத்துல தண்ணி வந்தா ஒழுங்கா பாய மாட்டேங்குது. அத்தனையும் பாசனத்துக்கு லாயக்கே இல்லாத நெலம்புலம்ங்க. நமக்கு இருக்குற வேலையில எஞ்ஞப் போயி பாக்க முடியுது? ஒண்ணும் முடியல. பேசாம மாவுக்கு இவ்ளோ நெல்லு கொடுன்னு ஒரு ஆள பிடிச்சி நெலத்த வுட்டுட்டு வந்திருக்கேம்! இத்து எல்லாத்துக்கும் காரணம் அவந்தேம். அந்தக் குடி கெடுத்த பயத்தேம். இஞ்ஞ வித்துட்டு அஞ்சப் போனா வெல சல்லிசா வேலங்குடியில கிடைக்கும்னு கொண்டுட்டுப் போன பயலெ அவம்தாம். எதுக்குக் கொண்டுட்டுப் போனாம்? நாம்ம விருத்தியூர்ல இருக்கம்மா! அம்மாம் தூரம் போயி நாம்ம வெவசாயத்தப் பாக்க முடியான்னு, அவனெ ஒத்த ஆளா இருந்து பாத்துக்கலாம்னு ஆசப்பட்டு செஞ்சிருக்காம். இத்து புரியாம கட்டாந்தரையில படக்குன்னு கால்ல வுழுந்த கணக்கா, அவ்வேம் பேச்சக் கேட்டுப்புட்டு செஞ்சிப்புட்டேம். நாஞ்ஞ அவ்வேம் கணக்குல வுழுந்து ஏமாந்தது இருக்கட்டும்டா! நீயும் போயி மாட்டிக்காதேடா! சூதானமா இரு!"ங்குது செயராமு பெரிப்பா.
            "அஞ்ஞ இருக்குறது யாருன்னே! ஒமக்குத் தங்காச்சி. நமக்கு யக்கா. அதெ ஏம் போயிண்ணே வேண்டாம்னுகிட்டு? நாம்ம வாணாம்ன்னு சொல்லி, அத்தாம் போயி அதெ அடிக்கிறதுக்கா?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அதெ வெச்சிக்கிட்டுதாம்டாம்பீ! அந்தப் பயலுவோ நம்மள மெரட்டிக்கிட்டு இருக்கிறது. அதுக அஞ்ஞ இல்லன்னா அந்த ரண்டு பயலுகளும் குடும்பம் நடத்த முடியா. ச்சும்மா பெனாத்துவானுவோ. அவனுங்களுக்கு ன்னா தெரியும்? ஒண்ணும் தெரியாத பயலுங்க! அதுக்கே இந்தப் போடு போடுறானுவோ! நாம்ம பாக்க காலுசட்டை கூட போட்டுக்கிடாம, மூக்கு ஒழுவி பயலுவோளா நின்னுட்டுக் கெடந்த பயலுவோ! இன்னிக்கு எங்கயிருந்த இந்த மவுசும், பவிசுக்கட்டையும் வந்துச்சாமா? நீயி சர்க்காரு உத்தியோகம் இல்லாம அத்தனை நாளு இருந்தீயே? அப்ப வந்து கேட்டாக்கா என்னவாக்கும்? இப்போ நீயி சர்க்காரு உத்தியோகத்துல இருக்கீயாம். அதாங் வந்து நிக்குறானுவோ பொறுக்கிப் பயலுக! ஏமாத்துக்கார பயலுவோடாம்பீ! சொன்னா ஒனக்குப் புரியாது. அனுபவப்பட்டவேம் நாம்ம. புரிஞ்சிக்கோ. புரிஞ்சி பதனமா நடந்துக்கோ!"ங்குது பெரிப்பா.
*****


18.1



                    புத்திசாலித்தனமான பேச்சுகள் மேடைக்கு உதவலாம். இலக்கியக் கூட்டத்தில் அதிகம் அது எதிர்பார்க்கப்படுவதும், எதிர்பார்ப்பிற்கு உள்ளாவதும் சாசுவதமாக நடக்கும். புத்திசாலித்தனமான பேச்சு நடைமுறை வாழ்க்கைக்கு உதவவே உதவாது. உங்கள் புத்திசாலித்தனமான பதில்களால் நீங்கள் தூக்கி எறியப்படுவீர்கள். நடைமுறை வாழ்வுக்குக் குழைவான பேச்சு வேண்டும். எந்த அளவுக்குக் குழைந்து குழைந்துப் பேசுகிறீர்களோ, அந்த அளவுக்கு எதிரில் நிற்பவர்களை உருக்குழைத்துப் போட முடியும். இதென்ன ஒரு நாவல் சாணக்கியத் தந்திரம் பேசுவதாவது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இதிலென்ன சாணக்கியத் தந்திரம் இருக்கிறது? இலக்கியத்தில் சோபித்தவர்கள் நடைமுறை வாழ்க்கையில் தடுமாறி விழுந்த வரலாற்றைப் படித்திருந்தால், மாபெரும் சபைதனில் மாலை சூடியவர்களுக்கு, வீட்டின் அறைக்குள் செவிட்டு இழுப்பாக அறை வாங்கிய துர்சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். அந்த மிகப்பெரிய வரலாற்றை எழுதுவதானால் நாவல் மிகப்பெரியதாய் நீண்டு விடும் என்ற அச்சத்தில் அந்த வரலாற்றின் பிழியப்பட்ட சாரத்தை மட்டும் நாம் இங்கே பார்க்கிறோம்.

                                                  பேச்சில் ஓர் அழகு இருக்கிறது. அது அதிகம் பேசுவதன்று. அதிகம் கேட்பது. குறைவாக, அதுவும் தேவைக்கும் மிகக் குறைவாகப் பேசுவது. உடனுக்குடன் பேச்சுக்குப் பேச்சு பேதியாகுபவர்கள் அந்தப் பேதியாலேயே காலரா, சீதபேதி வந்து செத்துப் போவக் கடவார்களாக! வள்ளுவர் 'யாகாவராயினும் நாகாக்க' என்பார். அது தனி. அதை விட முக்கியம் நாம் தவறாகப் பேசப் பேச நம்மைத் தவறாக வழிநடத்திக் கொண்டே போக ஆளிருக்கிறார்கள். சரியாக நம் பேச்சைத் திசை திருப்ப ஆட்கள் கம்பி என்பதைப் புரிந்து கொண்டால் பேசுவதைக் குறைத்து விடுவீர்கள். பேச்சைக் குறைத்து விட்டால் அபாயங்கள் கம்பி. பேராபத்துகள் அறவே கிடையாது என்றாகி விடும்.
                 இந்த நாவலைப் படிக்கும் நீங்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். யாரிடமும் எதுவும் சொல்வது ஏற்புடையதன்று. யாரும் சரியான பதிலை நீங்கள் நினைப்பது போல எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கான பதிலை எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தயவுசெய்து இதைப் படித்த பின்பாவது புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருத்தருக்குமான பதில் ஒவ்வொருத்தரைப் பொருத்தும் வேறுபடும். எப்போதும், எல்லா நேரத்திலும் அதை உங்களால் அளிக்க முடியுமா? அளிக்க முடியாது என்றில்லை. ஒன்றே ஒன்றால் மட்டும் அது முடியும். மெளனத்தால் அது முடியும். மெளனம் எல்லாவற்றிற்குமான பதில். கடவுள் ஏன் மெளனமாக இருக்கிறார்? உங்களுக்குப் புரிகிறதா? இப்போது புரிகிறதா? உங்கள் கடவுள் மெளனமாக இருக்க நீங்கள் அதிகமாகப் பேசுகிறீர்கள். அவர் ஒரு போதும் பேச மாட்டார். ஆனால் நீங்கள் அவர் உங்களுடன் பேசியதாக கப்சா அளப்பீர்கள். கயிறு திரிப்பீர்கள். அதற்கான அவரது பதிலும் மெளனம்தான். அதற்கும் சேர்த்து நீங்கள் ஜல்லியடிப்பீர்கள் என்பதை அறிந்தவர்தான் உண்மையான கடவுள்.
                    முன்பெல்லாம் பேசினாலே போதும் என்றிருந்தது. வாயுள்ள பிள்ளைப் பிழைத்துக் கொள்ளும் என்பார்கள். இப்போது மெளனம், ஆழ்ந்த மெளனம் தேவையாக இருக்கிறது. பேசுவது இப்போது பேஷனாகி விட்டது. விதவிதமாகப் பேசுகிறார்கள். மெளனமாக இருப்பவர்கள் ரகசியமாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் பேச்சு எதற்கும் அவர்களைப் பொருத்தவரை உதவாது. மக்கள் உங்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தால் கொள்ளைப் போதலைக் கவனிக்க மாட்டார்கள். கொள்ளைப் போதலைக் கவனித்துக் கொண்டிருந்தால் உங்கள் பேச்சைக் கவனிக்க மாட்டார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? மக்களை உங்கள் பேச்சைக் கவனிக்க வைப்பீர்களா? அல்லது அவர்கள் கொள்ளைப் போதலை உணரச் செய்வீர்களா? ஆகவே ஓர் இலக்கியவாதி நிறைய மெளனங்களை இடையில் வைக்கிறார். அந்த மெளனத்துக்கு பல்வேறு பொருள் கொடுத்து உரையாசிரியர்கள் கிளம்புகிறார்கள். பல்வேறு வகையில் அர்த்தப்படுத்திக் கொண்டு மக்கள் பேசத் தொடங்குகிறார்கள்.
                  ஓர் இலக்கியக் கூட்டத்தில் பேச்சை விட மெளனத்தை அதிகம் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இந்த பாடபேதங்கள் புரிந்தால் நாம் மூன்றாவது இலக்கியக் கூட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கலாம். இதுவரை நடந்திருக்கின்ற இரண்டு கூட்டங்களின் பொருள்களை நீங்கள் அதன் மெளனத்தில் தேட தலைப்படுவீர்கள் என்று நாவலாசிரியர் நம்பத் தலைபடுகிறார். அவ்வாறு நீங்கள் தலைபடாது போயிருந்தால் மீண்டும் ஒருமுறை பின்னோக்கிச் சென்று வாசித்து அதற்கொப்ப தலைபடுவீர்களாக!
*****


29 Nov 2019

ஊருக்குள்ள ஒரு பனிப்போர்!



செய்யு - 283

            வேலங்குடி பெரியவருக்கு ஆம்பளைப் புள்ளைங்க கணக்குல அஞ்சும், சின்னவருக்கு ரெண்டும், பொம்பளைப் புள்ளைங்க கணக்குல பெரியவருக்கு மூணும், சின்னவருக்கு மூணும் இருந்துச்சுங்க. ரெண்டு பேருமே போட்டிப் போட்டுகிட்டு புள்ளைங்களப் பெத்தவங்க. காலப்போக்குல அவங்களுக்கு எல்லாத்திலயும் போட்டி வர ஆரம்பிச்சிடுச்சு. பெரியவரு ஊருக்குள்ள ஒரு நிலபுலத்த வாங்குனா சின்னவருக்கும் ஒடனே எங்காச்சிம் ஒரு நிலபுலத்த வாங்கிப் போட்டாத்தாம் தூக்கம் வரும். நமக்குப் பின்னாடி பொறந்த பய நம்ம அளவுக்கு நிலபுலத்த வாங்கிப் போடுறானேன்னு அடுத்த ஒரு நிலபுலத்த வாங்கிப் போடற வரைக்கும் சும்மா இருக்க மாட்டாரு பெரியவரு.
            இப்படி ரெண்டு பேரும் போட்டிப் போட்டுக்கிட்டாலும் ஒரு சில விசயங்கள்ல ஒருத்தர ஒருத்தரு அடிச்சிக்க முடியல. சின்னவரால பெரியவரு அளவுக்கு மாடு கண்ணுகளயோ, நிலபுலங்களையோ பாத்துக்க முடியல. பெரியவரு வூட்டுல இருபது முப்பது மாடுகள்ன்னு நின்னாக்கா சின்னவரு வூட்டுல ரெண்டு மூணுன்னுத்தாம் நிக்கும். பெரியவரு மா நெலத்துக்கு பத்து மூட்டை, பன்னெண்டு மூட்டைன்னு அறுத்தாருன்னா சின்னவருக்கு ஏழெட்டு மூட்டைக் கணக்குலத்தாம் தேரும்.
            பெரியவரு மாரி ஊர்ல ஒரு ஜபர்தஸ்தைச் சின்னவரால உண்டாக்கிக்க முடியல. ஒரு பஞ்சாயத்து பேச்சு வழக்குன்னா பெரியவரு அளவுக்கு சின்னவரால கட்டம் கட்டிப் பேச முடியாம போயிடும். ஊர்ல ஒரு விஷேசம்ன்னா பெரியவரத்தாம் முன்னால கொண்டு போயி நிப்பாட்டிப்பாங்க. மொறையா ஒரு தேவையை எப்படிச் செய்யணுங்றது அவருக்கு அத்துப்படி. கிராமத்துல ஒரு காரியம்ன்னா பெரியவர கலந்துக்காம எதயும் செய்ய மாட்டாங்க. அதுவுமில்லாம பெரியவரு மாடு கண்ணுங்க, வயலுகன்னு வேலைய பாத்துட்டு வூட்டுலயே இருப்பாரா? அது ஒரு தோதா போயிடுச்சி. சின்னவரு அப்படியா? காலையில சூரியன எழுப்பி வுட்டுப்புட்டு வேலைக்குப் போனாருன்னா, சூரியன மறையச் சொல்லிட்டுத்தான வூடு திரும்புவாரு. தூங்குற நேரத்துல ஊருல இருக்குற ஒரு ஆளை வழக்கு, வம்பு, சண்டைன்னா எப்டி ஒடனுக்கு ஒடனே கூப்பிட்டுட்டுப் போவ முடியும்? இந்த விசயம் பெரியவருக்குத் தோதா போயிடுச்சி ஊர்ல எந்தப் பிரச்சனைன்னாலும் ஒடனே கெளம்பிப் போயி பேசிட்டு வர்றதுக்கு.
            பெரியவரு போல சனங்களை புரிஞ்சிக்கிட்டு அனுசரிச்சிப் போற குணம் சின்னவருக்குக் கம்மித்தாம். சின்னவரு பேசுனா தாந்தாம் எல்லாங்குறது போல பேசுவாரு. பெரியவரு எதுத்தாப்புல இருக்குறவங்களுக்கும் எடம் கொடுத்து சிரிப்பும் வெளையாட்டுமா பேசுவாரு. அதால வம்பு தும்பு பிரச்சனை இல்லன்னாலும் ஊர்ல பெரியவருகிட்ட பேசுறதுக்குன்னே ஒரு கூட்டம் வந்துட்டே இருக்கும்.
            பெரியவருக்கு அப்படிச் சில விஷேசங்க இருந்துச்சுன்னா, சின்னவருக்குன்னு சில விஷேசங்க இருந்துச்சி. சின்னவரைப் போல பெரியவரால மரவேலை செஞ்சு அதிகம் சம்பாதிக்க முடியல. முக்கியமா சின்னவரு புள்ளைங்கள நல்லவிதமா படிக்க வைச்சாரு. சின்னவரு அளவுக்குப் பெரியவரால மெனக்கெட்டுப் புள்ளைங்கள படிக்க வைக்க முடியாட்டியும் புள்ளைங்கள பள்ளியோடத்துக்கு அனுப்பி வைச்சுத்தாம் பார்த்தாரு.  பெரியவரோட புள்ளைங்களும் பெரிசா படிப்புல விரும்பம் இல்ல. பள்ளியோடத்துக்குப் படிக்க அனுப்பிச்சா பள்ளியோடம் போறது போல போயி பசங்கள கூட்டுச் சேத்துக்கிட்டு வயக்காடுகள சுத்திட்டு, காரைச் செடியில காரைக்காயைப் பறிச்சிப் போட்டுகிட்டு, ஆறு கொளத்துல தண்ணி இருந்தா தூண்டில போட்டு மீன பிடிச்சிக்கிட்டு, அதுல விழுந்து நீச்சல அடிச்சிக்கிட்டு, காடு கரைகள்ல வெளையாண்டுகிட்டுப் பள்ளியோடம் வுடுற நேரத்துல வந்துச்சுங்க.
            தன்னோட புள்ளைங்க படிக்கிறதையும், பெரியவரோட புள்ளைங்க தறுதலையா சுத்துறதையும் பத்தி ரொம்ப எளக்காரமா பேசுவாரு சின்னவரு. அதெ பத்தி ஒரு நாளுக்கு பத்து தடவையாவது சொல்லி, "புள்ளீகள பெத்துட்டா ஆயிட்டா? நல்ல வெதமா வளக்குறது இல்லையா? ச்சும்மனாச்சுக்கும் நாலு ஆட்டையும், நாலு மாட்டையும் வளத்துட்டா போதுமா? மாடு மாரியே புள்ளைங்கள வளத்துக்கிட்டு? புள்ளைங்க மாரி மாடுகள வளத்துக்கிட்டு? இவன்லாம் ன்னா சென்மமோ?"அப்பிடின்னு சாடையா காது படவே பேசுவாரு. "வளந்த பிற்பாடு யாரு எப்டி இருக்கா? யாரு உசத்தி? யாரு மட்டங்றத பாப்பேம்? காலம் இப்டியே போயிடுதடா கிறுக்குப் பயலே! ஏம் புள்ளைங்கள எப்பிடிக் கொண்டாரதுன்னு நமக்குத் தெரியும்? அவனவனும் அவனவம் சூத்தப் பாத்துக் கழுவுங்கடா? அடுத்தவேம் சூத்தப் பாத்துகிட்டுக் கெடக்காதீங்கடா!"ன்னு பெரியவரும் சாடையா வுட்டுக் கெழட்டுவாரு.
            அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் நடந்த பனிப்போரு மாரி அண்ணங்காரருக்கும், தம்பிக்காரருக்கும் அப்பிடி இப்பிடின்னு இது ஒரு பனிப்பொரு அப்பப்போ நடந்துட்டு இருக்கும். அண்ணங்காரரும், தம்பிக்காரரும் இப்பிடி போருக்கு நிக்குங்களே தவிர, அக்காக்காரியும், தங்கச்சிக்காரியுமான செயா அத்தையும், ரசா அத்தையும் இந்தக் கூத்த கண்டுக்கிடவே கண்டுக்கிடாதுங்க. அண்ணங்காருரும், தம்பிக்காரரும் இல்லாத நேரங்கள்ல அதுக ரெண்டும் வேலிக்கு இந்தப் பக்கமாவும், அந்தப் பக்கமாவும் நின்னு பேசிக்கிட்டு இருக்கிறதுதாம் வேல. அந்தப் பேச்சுல ரெண்டும் தன்னோட புருஷங்காரங்கள்ல நக்கலும், நையாண்டியும் பண்ணிட்டுப் பேசிக்கிறதுதாம் வேடிக்கை.
            பெரியவரோட புள்ளைங்களுக்கு சரியா படிப்புல கவனம் போகலன்னு சொன்னாலும் எல்லா புள்ளைங்கக்கும் அப்படியே கவனம் போகாம போயிடல. பெரியவரோட புள்ளைங்கள்ல மூத்த பொண்ணு மலரு அத்தாச்சி மட்டும் நல்ல வெதமா பத்தாவது வரைக்கும் படிச்சது. அந்த அத்தாச்சி நல்ல வெதமா படிச்சுப் பத்தாவதுல பள்ளிக்கூடத்துலயே மொதலாவதும் வந்துச்சுங்றத பத்தியும் முன்னாடி பெரியவரே ஓரிடத்துல சொல்லிருக்காரு. அது ஒண்ணுதாம் பெரியவருக்குப் புள்ளைங்க படிப்பால கிடைச்ச பெருமை.

            பெரியவரோட பொண்ணான மலரு அத்தாச்சிப் பண்ண அந்தப் படிப்புச் சாதனைய சின்னவரு புள்ளைங்களால பண்ண முடியல. சின்னவரோட புள்ளைங்க எல்லாம் படிச்சதுங்களே தவிர பள்ளியோட அளவுல மொதலாவதா வர முடியல. அந்த விசயத்துல பெரியவருக்கு ஒரு பெருமைத்தாம். அதுல ரொம்ப குஷியாயி மலரு அத்தாச்சி பத்தாவதுல பள்ளியோட் அளவுல மொதலாவது வந்தததுக்கு பெரிய வாத்தியார்ட்டேயிருந்து பரிசு வாங்குறது போட்டோக்காரரை வெச்சி மெனக்கெட்டு போட்டோ எடுத்து அதெ கொண்டாந்து வூட்டுல ரொம்ப பெருமையா மாட்டி வெச்சாரு பெரியவரு. அந்த அத்தாச்சியைத்தாம் சுப்பு வாத்தியாருக்குக் கட்டிக் கொடுக்கணும்னு நெனைச்சாரு பெரியவரு.  படிப்புக்குப் படிப்பு ரெண்டு பேருக்கும் பொருத்தமா இருக்கும்ணு நெனைச்சாரு பெரியவரு. மத்தபடி அவருக்குக் கடைக்குட்டியா பொறந்த பொண்ணு எட்டாவது வரைக்கும் படிச்சது. மத்தது எல்லாம் நாலாவது, ஆறாவது, ஏழாவதுன்னு இடையில வுட்டதுதாம். ஆம்பளைப் புள்ளைங்க எல்லாம் நாலாவது, மூணாவது வரைக்கும்தாம்.
            பெரியவரோட புள்ளைங்க மாரி இல்லாம தன்னோட புள்ளைங்க நல்ல வெதமாப் போயி பள்ளியோடம் படிக்கிறதுல சின்னவருக்கு ரொம்பவே பெருமைங்றத சொல்லித் தெரிய வேண்டியதில்ல. அதுவும் பெரியவரோட புள்ளைங்க தறுதலையாச் சுத்திட்டுக் கெடக்குறப்போ தன்னோட புள்ளைங்க பள்ளியோடம் போறதுல தாங்க முடியாத புளங்காகிதம் அவரோட மனசுக்குள்ள. புள்ளைங்கன்னா நம்மள மாதிரில்லா கரவு செரவால்ல வெச்சிக்கணும்னு ரொம்ப பெருமையா ஊருல ஒரு எடம் இல்லாம எல்லா இடத்திலயும் நின்னு பீத்திப்பாரு. அவரோட பொம்பளைப் புள்ளைங்க மூணுமே எட்டாவதுக்கு மேல நல்ல வெதமாப் படிச்சி ஒம்போதாவது, பத்தாவதுன்னு அதுகளும் படிப்ப நிறுத்திக்கிடுச்சுங்க. ஆம்பளைப் புள்ளைங்க ரெண்டும் பத்தாவது வரைக்கும் நல்ல வெதமாப் படிச்சி ஐ.டி.ஐ. வரைப் படிச்சதுங்க.
            பெரியவரோட மூத்தப் புள்ளயாண்டான் கண்டமேனிக்கு ஊரு சுத்திக்கிட்டு, வூட்டு வேலைகளைப் பாத்துட்டுக் கெடக்குறதப் பார்த்த பெரியவரு அதெ கொண்டு போயி நாகு அத்தையோட கோவில்பெருமாள் ஊர்ல வேலை கத்துக்கிட்டுக் கொழுந்தியாளுக்கு துணையா இருந்துக்கிட்டு எப்படியாவது பொழைச்சிக்கிடட்டும்னு வுட்டாரு. நாகு அத்தைக்கும் ஒரு பொண்ணு பொறந்து, அதுக்குப் பிற்பாடு ஒரு பையன் பொறந்து அதுவும் கொழந்தைய வளர்க்க செரமப்படுதுன்னேன்னு அதயும் நெனைச்சித்தாம் கொண்டு போயி வுட்டாரு. அப்படிக் கொண்டு போயி விட்ட பெரியவரோட அந்த மூத்தப் புள்ளையோட பேரு சந்தானம். அவர்ர எல்லாரும் சந்தானம் அத்தான்னுதான் கூப்புடுறது.
            அத்தோட நாகு அத்தைக் கல்யாணம் ஆயிப் போன கோவில்பெருமாள் ஊர்ல சந்தானம் அத்தான கொண்டுப் போயி விட்டதுல ஒரு காரணம் இருந்துச்சு. நாகு அத்தையோட வூட்டுக்காரரு நாது மாமா நல்ல வேலைக்காரரு. நல்லா வேலையைக் கத்துக்கிடட்டும்னுதான் அங்க கொண்டு போயி விட்டது. ஆனா நாது மாமா வேலைதாம் பார்க்க மாட்டாருங்ற சங்கதி ஒங்களுக்குத் தெரிஞ்சதுதாம். மனசுக்குத் தோணுனா வேலைய பார்ப்பாரு. இல்லாட்டியும் படுத்தப் படுக்கைத்தாம். நாது மாமாவோட வேலைக்கு கிராக்கி இருந்ததால அவரு இழுத்தடிக்கிற இழுப்புக்கெல்லாம் அவர வெச்சி வேலை பாத்துக்கிட்டு இருந்தாங்க கோவில்பெருமாளு சனங்க. அது என்னவோ அந்த சனங்களோட தலையெழுத்தாப் போச்சி, இவர்ர வெச்சி வேலைப் பாக்குறதுங்கறது. அவரு வேலைக்குப் போனா குடும்பம் ஓகோன்னு இருந்திருக்கும். போனாத்தானே இருந்திருக்கும்? அவரு சரியா வேலைக்குப் போவாததால நாகு அத்தைச் செரமப்பட்டுத்தாம் குடும்பத்தை ஓட்டுச்சு. அதுக்கு ஒரு தொணையா இருக்கட்டுமேன்னு கணக்குப் பண்ணித்தாம் சந்தானத்து அத்தான அங்க கொண்டு போயி விட்டதுங்றது இப்போ ஒங்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கும்.
            கோவில்பெருமாள் ஊரு கும்பகோணத்துக்குப் பக்கத்துல உள்ள ஊருங்றதும், நல்ல செழிப்பான ஊருங்றதும், வெவசாய வேலைகளுக்குப் பஞ்சம் இருக்காதுங்றதும், கறிகாயிப் பறிக்கிறது, பூ பறிக்கிறது, வெதை வெதைக்கிறது, களை பறிக்கிறதுன்னு எந்நேரமும் வேலை இருக்குங்றதும் ஒங்களுக்குத் தெரிஞ்சதுதாம். அந்த வேலைக்கெல்லாம் போயித்தாம் நாகு அத்தைக் குடும்பத்தை வெச்சு காபந்து பண்ணிகிட்டு இருந்துச்சுங்றதும், மத்தபடி நாது மாமாவால குடும்பத்துக்கு எந்த பிரயோசனமும் இல்லங்றதும் கூட ஒங்களுக்குத் தெரிஞ்சதுதாம். நாது மாமா வேலைக்குப் போறப்பல்லாம் சந்தானம் அத்தான கூட அழைச்சிட்டுப் போவாரு. நம்ம ஆளுதாம் ஒரு நாளு வேலைக்குப் போனா நாலு நாளைக்கு இலைக்கொட்டாய்ல சாராயத்தப் போட்டுகிட்டுக் கொட்டாரம் அடிப்பாரே! அப்படி வேலைக்குப் போன பழக்கத்துல நாது மாமா வேலைக்குப் போவாத நாள்லயும் சந்தானம் அத்தான் அந்த வூடுகளுக்குப் போயிக்கிட்டு கெடக்கும்.
            அப்படிப் போயி அந்த வூட்டுக்காரங்களுக்குக் கறிகாயி வாங்கிக் கொடுக்கிறது, மளிகை சாமானுங்கள வாங்கிக் கொடுக்கிறது, வூட்டு வேலைகளப் பாத்துக் கொடுக்கிறதுன்னு எதாச்சிம் வேலைகள செஞ்சிக் கொடுத்துக்கிட்டு அந்த குடும்பங்களோட ஒட்டிக்கும். ஒரு குடும்பம் குட்டின்னு இருந்தாக்கத்தாம் ஆயிரத்தெட்டு வேலைங்க வூட்டுல இருக்கும் இல்லையா! இப்படி ஒத்தாசைக்கு ஒரு பையென் கெடைச்சா யாரு சும்மா விடுவா? அதால ஆவ வேண்டிய மரவேலை ஆவாட்டியும் பராவயில்லன்னு சந்தானத்து அத்தான வுட மாட்டாங்க. சந்தானத்து அத்தானும் அந்த வூட்டுலயே சாப்பிட்டுக்கும். வூட்டுக்குக் கெளம்புற நேரத்துல அவங்களா பிரியமா கொடுக்குற கறிகாயி, சாப்பாட்டுப் பண்டங்கள வாங்கியாந்து அத்தைக்கிட்ட கொடுக்கும். அத்தோடயும் விடாது. ஊர்ல யாராவது வேலைன்னு கூப்புட்டா போதும், அவங்களோட ஒட்டிக்கிட்டு வேலைக்குப் போயி, அதுவாவே வேலையையும் கத்துக்கிடுச்சி. 
            கொஞ்ச நாளு கடையிலேந்து கறிகாயி வாங்கி அது வேலை பாக்குற வூடுகளுக்குக் கொடுத்துட்டு இருந்த சந்தானத்து அத்தானுக்கு ஒரு யோசனை வந்திச்சி. இந்தக் கறிகாய்கள ஏம் கறிகாய்கள போடுற கொல்லைக்காரங்ககிட்டேயிருந்து வாங்கிக் கொடுக்கக் கூடாதுன்னு? அப்டி ஒரு யோசனை வந்ததும், கொல்லைக்காரங்ககிட்டேயிருந்து கறிகாய்கள வாங்கி, அதெ கடைக்காரங்க விக்குற ரேட்டுக்குக் கொடுத்தா கையில ஏகமா காசு பொரள ஆரம்பிக்கிறது புரியுது சந்தானத்து அத்தானுக்கு. அன்னையிலேருந்து மரவேலைக்குப் போற காலை நேரத்துக்குள்ள ஒரு பையில கறிகாய்கள கொல்லைக்காரங்ககிட்டேயிருந்து வாங்கியாந்து வூடு வூடு கொடுத்து காசு பாக்க ஆரம்பிச்சிடுச்சி. அத்தோட பூப்பறிக் கொல்லைகளுக்குப் போயி அதே மாரி பூக்கள வாங்கி அதையும் வூடு வூடா கொடுக்க ஆரம்பிச்சா, ஒண்ணுக்கு ரெண்டா கையில காசு பொரளுது.
*****


17.4



            ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழய்யா கல்வியைக் குறித்துப் பேசுகிறார். இரண்டாவது கூட்டத்தில் ஐயா கல்வியைக் குறித்துப் பேசியதான குறிப்புகள் வருமாறு,

            ஐயா முதலில் முயற்சியைக் குறித்துத் துவங்குகிறார்.
            வாழ்க்கை ஒரு பயணம்
            பயணத்தில் எடுத்து வைக்கும் அடிகள் ஒவ்வொன்றும் முயற்சிகள்
            முயற்சியில் ஊக்கம் ஓர் உந்துதல்
            ஊக்கத்தின் வீரியம் முந்துதலுக்கு வழி
            முந்துதலே வெளிச்சம் விடிவெள்ளி
            அனுபவம் ஒவ்வொன்றும் முயற்சிக்கு அடித்தளமாகிறது
            முயற்சியில் செய்யும் பயிற்சியே செயலுக்கு வடிவம் கொடுக்கிறது
            பயிற்சியின் முதிர்ச்சி வாழ்க்கைக்கான திறவுகோல்
            திறவுகோல் வருங்காலத்தை வசந்தகாலமாக ஆக்குகிறது
            உலகில் இரண்டு விதமான நபர்கள் இருக்கிறார்கள்
            அலுத்துக் கொள்பவர்கள் ஒரு வகை
            அயராது முயல்பவர்கள் இன்னொரு வகை
            முயற்சியை உள்வாங்கியவர் முள்வாங்கியாகிறார்
            முயன்றவர் படிகட்டுகளில் ஏறுகிறார்
            முயலாவர் அடியில் தவழ்கிறார், வாய்ப்புகளை நழுவ விடுகிறார்.
ஐயா, இரண்டாவதாக கல்வியின் ஆணிவேரைத் தேடி அதை அலசுகிறார்.
            மனம் இன்பத்தை நாடும். துன்பத்தை வெறுக்கும்.
            இன்பத்தில் புன்னகை
            துன்பத்தில் கண்ணீர்
            இஃது உலக நியதியாகும்
            வாழ்க்கையின் வேட்கை என்னவென்று நினைக்கிறீர்கள்
            அது தேடல்
            தேடுவது கிடைக்கும்
            இருட்டில் தேட முடியாது
            இருட்டு என்பது இங்கு இருட்டல்ல, அஃது அறியாமை
            இருட்டின் தேடல் வெளிச்சம், அஃது அறிவு
            ஒளியில் பொருட்கள் புலனாகின்றன
            சூழ்ந்திருப்பது எல்லாம் இருட்டு
            செயல் விளைவுகளைத் தருகிறது
            ஊசித் துணியைத் தைக்கிறது
            கத்திரிக்கோல் தைத்த துணியைப் பிரிக்கிறது
            என்றாலும் இரண்டுமே வடிவமைப்புக்கு அடிப்படை
            மன வடிவமைப்புக்கு கல்வி அடிப்படை
            பிறக்கும் போது அழும் அழுகை கல்வியின் தொடக்கம்
            இறப்பின் அழுகை அதன் முற்றுப்புள்ளி
            தாக்கங்கள் நம்மை கல்விப்புலன்களாய் இருந்து வழிநடத்துகிறது
            கருத்துகள் ஒவ்வொன்றுக்கும் தொப்புள் கொடி உறவு இருக்கிறது
ஐயா கட்டுரையின் சாராம்சத்துடன் பேசுகிறார். எழுதிய நாவலாசிரியர் அதைக் கவிதை போன்ற வடிவமைப்பில் கொண்டு வந்து விடுகிறார் இல்லையா! பேச்சுக்கும் எழுத்துக்கும் நேரும் அவலம் இது! வடிவம் ஒன்று வந்ததற்காக வாசகர்கள் மகிழ வேண்டும்.
*****


28 Nov 2019

பொண்ணு கொடு மச்சானே!



செய்யு - 282

            வேலங்குடி சின்னவரு வூட்டுல நொழைஞ்சா அங்க சின்னவரும், ரசா அத்தையும், "வாங்க! வாஞ்ஞ!" அப்பிடிங்கிறாங்க. ஒரு பாயை எடுத்துப் போட்டு குந்துங்கங்றாங்க. ரசா அத்தை செம்பு நெறைய தண்ணிய கொண்டாந்து கொடுக்குது. பேருக்கு அதெ வாங்கி வாயில ஒரு வாயி ஊத்திக்கிட்டு உக்கார்றாங்க சுப்பு வாத்தியாரும், விகடபிரசண்டரும். வூட்டுல நொழையுறப்ப பொதுவா வாங்க வாங்கன்னுத்தாம் சொல்லுவாங்க. அந்த வூட்டை வுட்டுக் கெளம்புறப்பயும் அதே, "வாங்க! வாங்க!" இருந்தாத்தாம் அந்த வூட்டுல நொழைஞ்சதுக்கு ஓர் அர்த்தம் இருக்கும். முதல்ல வூட்டுல நொழையுறப்ப சொல்ற வாங்கங்றது வூட்டுக்குள்ள வாங்கன்னு அழைக்கிறது. வூட்ட வுட்டுக் கெளம்புறப்ப சொல்ற வாங்கங்றது மறுபடியும் சீக்கிரமே வாங்கங்றது. அதுலத்தாம் உறவுங்றது பலப்படுது. மறுபடியும் மறுபடியும் உறவுகளப் போயி பாக்கணுங்ற உணர்வுங்க உண்டாவுது. இங்க சின்னவரு வூட்டுல என்ன நடக்குதுன்னு பாத்துப்புடுவோம்.
            விகடபிரசண்டரு வாத்தியாரைப் பார்த்ததும், "நீஞ்ஞ இல்லன்னக்கா இன்னிக்கு யம்பீ இல்லங்றது ஒலக்கத்துக்கே தெரியும். யம்பீய நல்ல வெதமா படிக்க வெச்சி, வேலைக்கும் கொண்டு போய்ட்டீங்க. ஒங்களுக்குப் புண்ணியமா போவும். எஞ்ஞ வம்சாவழியே ஒங்களுக்குக் கடம்பட்டுக் கெடக்குதுங்க!" அப்பிடிங்கிறாரு சின்னவரு. இப்படித்தாம் சின்னவரு பேசணும்னு ஆரம்பிச்சா உசத்தித்தாம் பேசுவாரு. பேச பிடிக்கலன்னா வெச்சுக்குங்க மூஞ்சுல அடிச்சாப்புல பேசிடுவாரு.
            "இந்தப் பக்கமா ஒரு சோலியா வந்தேம். அதாம் எல்லாத்தையும் பாத்துப்புடலாம்னு ஒரு எட்டு வந்தாச்சி!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "யங்க அண்ணாச்சி வூட்டுல ரொம்ப நேரம் பேச்சு போல!"ன்னு இப்பத்தாம் பொடியத் தூவுறாரு சின்னவரு.
            "அத்து ஒண்ணுமில்லத்தாம்! ஊருக்குள்ள அஞ்ஞ விருத்தியூர்ல இஞ்ஞ நெலபுலங்க வாங்கிப் போட்டிருக்கிறதா பேச்சு அடிபடுது. வெவரம் ஒண்ணும் நமக்குப் புரியல. அதாம் அத்தான்ன பாத்து பேசிட்டு இருக்குறப்ப அந்த பேச்சு வந்ததும் விசயம் பெரிசா போயி பேச்சு வளந்துப் போச்சுது!"ங்றாரு இப்போ சுப்பு வாத்தியாரு.
            "அதானே பாத்தேம்! ஒண்ணுமில்லாம ஆடுமா சொத்தப் பய குஞ்சு! கதெ தெரியுமில்ல! தெரியாட்டியும் சொல்லுங்க! நாம்ம இப்ப சொல்றேம்! பெரிய மனுஷங்ற பேர்ல அந்த கேடுகெட்ட பயெ பண்ண வண்டவாளத்த!"ங்றாரு சின்னவரு.
            இதென்னடா கேட்க வந்த விவரத்தை நேரடியா கேட்க நினைச்சாக்கா அங்க பெரியவர்கிட்ட சுத்தி வளைச்சு விவரம் வருது. அதே விவரத்தைச் சுத்தி வளைச்சு இங்க சின்னவர்கிட்ட கேட்டாக்க நேரடியாவே விசயம் வெளியில வரப் பாக்குதுன்னு விகடபிரசண்டரு வாத்தியாருக்கு தெகைப்பா இருக்கு. அப்போ மனுஷங்ககிட்ட நேரடியா விசயத்துக்கு வரக் கூடாது, சுத்தி வளைச்சு பொடியப் போடுறாப்புல பேசுனாத்தாம் விசயத்த கறக்க முடியும் போலருக்குன்ன நெனைச்சுக்கிறாரு. நெனைச்சது இல்லாம அவரு, "என்னவோ போங்க! எஞ்ஞ நெலத்த வாங்கிட்டு எங்கேயாவது சந்தோஷமா இருந்தா போதும்ங்க!"ன்னு விகடபிரசண்டரு வாத்தியாரும் சூழ்நிலைக்கு ஏற்ப இப்போ தன்னோட பேச்ச மாத்திக்கிறாரு.
            "எஞ்ஞ நல்லா இருக்குறதுங்றேம்? அதல்லாம் முடியா வாத்தியாரய்யா! அவ்வேம் எண்ணத்துக்கு அவ்வேம் போன போக்க கேட்கலைல்ல நீஞ்ஞ. அதச் சொல்றேம் கேளுங்க. இந்த பயத்தேம் ஏற்பாடு எல்லாம். அஞ்ஞ குழி என்ன வெல? அறுவதுக்கு மேல. அதெ வித்துப்புட்டு இஞ்ஞ வாங்குனா குழிக்குப் பத்து ரூவாயோ, பன்னெண்டு ரூவாயோதானேன்னு வித்துப்புட்டு வாரச் சொல்லிருக்காம் கருங்காலிப் பயெ. அதெ நம்பி எம்மட பெரிய மச்சாம் நெலபுலத்தையெல்லாம் அஞ்ஞ விருத்தியூர்ல வித்துப்புட்டு மடியில முப்பத்தஞ்சாயிரத்த கட்டிட்டு எந் தங்காச்சி பத்மாவ அழைச்சுப்புட்டு இஞ்ஞ வந்துட்டு. குழி பத்து ரூவாய்ன்னா கணக்குப் போடுங்களேம் முப்பத்தஞ்சாயிரத்துக்கு கணக்குப் போடுங்க. ஒன்றரை வேலிக்கு மேல நெலபுலங்கள வாங்கிப் போடலாம்ல. அந்த நெனைப்பு. மொத்தமா சொளையா பணத்தைக் கொடுத்து வாங்குறதால முப்பத்தஞ்சாயிரத்துக்கு ரண்டு வேலி நெலத்த வாங்கு. அப்படி வாங்கித் தர்ற நெலத்துல ரண்டு மா ஒனக்குன்னு எங்க அண்ணாச்சிக்காரனோட ஒரு கணக்கு. அந்தக் கூறுகெட்ட பயலும் ரண்டு மா நெலத்துக்கு ஆசபட்டு பண்ணாம் பாருங்க. அப்படியே வயக்காட்டுப் பக்கமா போனீங்கன்னா உழனிப் போற பக்கமா இருக்குங்க நெலம்ங்க. அதெ வாங்கிக் கொடுத்திருக்காம். யாருக்கு வாங்கிக் கொடுத்திருக்காம்? பெரிய மச்சாங்காரனுக்குத்தான வாங்கிக் கொடுத்திருக்காம். தங்காச்சி வூட்டுக்கார்ரேம்தான ‍பெரிய மச்சாம். அதுல போயி ரண்டு மா நெலத்த எதிர்பாத்துருக்கானே கேடு கெட்டப் பயெ. அக்ரிமெண்டு போடணும்ல. மொத்த நெலத்தையும் யாந் தங்காச்சி பத்மா பேருக்குப் போட்டுருக்கு பெரிய மச்சாம். அதுல அந்தப் பயலுக்குக் கோவம் பாருங்க. ரண்டு மா நெலத்த வுட்டுப்புட்டு மிச்சத்த ஒம் பேர்ல போட்டுக்கோ, ரண்டு மாவா எம் பேர்ல அக்ரிமெண்ட போடுன்னு ஒத்தக் காலுல்ல நின்னுருக்காம் பரதேசிப் பயெ. அதல்லாம் முடியான்னு சொல்லிருக்கு எந் தங்காச்சி. அதுல முறுக்கிக்கிட்டு வந்தப் பயதாம்.உள்ளதும் போச்சே நொள்ளக்கண்ணான்னு பொலம்பிக்கிட்டு கெடக்குறாம்ங்க! இவம்ல்லாம் ஒரு பொறப்பு? நீஞ்ஞத்தாம் சொல்லோணும் வாத்தியாரே!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "நெலம் இஞ்ஞ வாங்குனது உண்மத்தானா?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "பெறவு? நாம்ம ன்னா பொய்யா சொல்றேம்? அந்தப் பயெ கெழட்டிக்கிட்டதும் தங்காச்சியும், பெரிய மச்சாங்காரரும் நம்ம வூட்டுப் பாத்துல்ல வார்றாங்க. பெறவு நாம்மத்தாம் முன்னாடி நின்னு எல்லாத்தையும் செஞ்சிக் கொடுத்தேம். ஊருல நீஞ்ஞ கிட்டு ஆச்சாரின்னு கேட்டுப் பாருங்க. ஒண்ணுக்குப் போற கொழந்தைக் கூட நிறுத்திப்புடும். பொறந்த கொழந்தைக் கூட எழுந்திரிச்சி நின்னுப்புடும். அப்படி ஒரு பேரு, செல்வாக்கு நமக்கு ஊருக்குள்ள. அதுல ஒரு சிக்கலு வந்துப் போச்சிப் பாருங்க. நெலத்த வாங்கிக் கொடுத்தவேம் எடம் எப்பிடி? ரீஸ்தரு பண்ண முடியுமா?ன்னு பாத்துல்ல வாங்கித் தர்ரோணும். இந்தப் பயெ வாங்கிக் கொடுத்த நெலமெல்லாம் கோயிலு நெலங்களா போயிட்டுதுங்க. அதெ வித்தவம் நைஸா பேசி ரண்டு வேலி நிலமென்னா? அதுக்குக் கூட அஞ்சு மாவ சேத்து எழுதித் தர்றேம்னு ஆசய காட்டிப்புட்டு அக்ரிமெண்டு போட்ட அன்னைக்கே இருபத்தஞ்சாயிரத்தக் கறந்தப்புட்டாம். ரீஸ்தரு பண்ற அன்னிக்கு மிச்ச பணத்தையும் வாங்கிப்புட்டு கோயில் நெலமா இருக்குறதால ரீஸ்தரு பண்ண முடியான்னு நிக்குறாம். பெறவு நாம்மதாம் தலபட்டு ஒரு பத்திரத்த வாங்கியாந்து, அது எப்பிடிங்றீங்க நம்ம கைக்காசப் போட்டு வாங்கியாந்து இன்னின்ன விவரம், இன்னின்ன சங்கதின்னு எழுதி நெலத்த வித்த எனக்கும், எந் தலைமுறைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லன்னு எழுதி வாங்கிப்புட்டேம். அதெ தந்த பிற்பாடுதாம் எந் தங்காச்சி மொகத்துலயும், பெரிய மச்சாங்காரரு மொகத்துலயும் ஒரு சந்தோஷம்னா பாத்துக்குங்களேம். அப்படிப்பட்ட பயெ அவ்வேம்! ஒரு காரியம்னு நம்பி வந்தா கழுத்த அறுத்துப்புட்டு ஓடிப் போயிடுவாங்க அவ்வேம் வாத்தியாரே!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "அப்போ முப்பத்தஞ்சாயிரம் பணம் ஒங்க பெரிய மச்சாங்காரர்ட்ட இருந்தத நீஞ்ஞ பாத்தீங்கத்தான்ன?"ங்றாரு விகடபிரசண்டரு.
            "நல்ல கதெயால்ல இருக்கு? நாந்தாம்னே பெறவு பணத்த வாங்கிக் கொடுத்தது. சாட்சிக் கையெழுத்துல்லாம் நாம்மதான்னே நாலு பேரை ஊர்ல கொண்டாந்து போட்டது. மொதோ சாட்சியே நாம்மத்தான்னே வாத்தியாரே! சொந்த பந்தம்னா நம்மள மாரில்லா இருக்கணும்! நம்ம வூட்டு வாசலத் தேடி வந்துப்புட்டா இந்தக் கிட்டு ஆச்சாரி அதுக்காக உசுரையே கொடுப்பாம் பாத்துக்கோங்க!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.

            "அத்துத்தாம்! அத்தேத்தாம்! அதுக்காகத்தாம் நாமளும் ஒஞ்ஞ வூட்டத் தேடி வந்திருக்கோம்! நீஞ்ஞத்தாம் பாத்து ஒங்க சின்ன மச்சாங்காரருக்குச் செஞ்சிப்புடணும்!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "ஏம் சின்ன மச்சானுக்குப் பண்ணாம வேற யாருக்கு நாம்ம பண்ணப் போறேம்? சங்கதிய மட்டும் சொல்லுங்க! பெறவு அத்து நடக்குற வேகத்தப் பாத்து மூக்குல வெரல வெச்சிப்புடுவீங்க! வேலைக்குப் போயிருக்கு சுப்பு. சம்பாதிச்சிருக்கும். அதுக்கு ஏதாச்சிம் நெலபுலத்த இஞ்ஞ வாங்கிப் போடணுமா?"ங்றாரு சின்னவரு.
            "அது கெடக்கட்டும்! விருத்தியூர்ல இருந்த அஞ்சரை மா நெலத்த வித்துப்புட்டு அந்தக் காச தோது பண்ணிட்டுத்தாம் இஞ்ஞ வேலங்குடியில நெலத்த வாங்கியிருக்காங்க ஒங்க தங்காச்சியும், பெரிய மச்சாங்காரரும். அதெ கேட்குறதுக்கு இருக்குற கடம் கப்பியல்லாம் அடைக்குறதுக்குத்தாம் நெலத்தை வித்ததாவும்,‍ நெலத்த வித்த காசுல கடங்கப்பியயெல்லாம் அடைச்சிட்டதாவும் பேச்சாகுது. இஞ்ஞ வந்து விசாரிக்கிறப்ப விவரம் வேற ஆவுது. ஒங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்ல. அஞ்ஞ விருத்தியூர்ல வித்தது பொது சொத்து. ஒங்க மச்சாங்காரவங்க ரண்டு பேருக்கும் அது பொது. அத வித்து அந்தக் காசியில தனக்கு மட்டும் நெலத்த வாங்கிப் போட்டுட்டு, அது சரிப்படுமா? நீஞ்ஞ சொன்ன வெவரமெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் நமக்கு எல்லாத்துக்கும் தெரியும். நீஞ்ஞ சொன்னதுல்ல மொத்ததும் தெரிஞ்சிப் போவுது. நெலத்த வித்த காசியில்ல முப்பதஞ்சாயிரத்துல பாதிக்குப் பாதி கூட வாணாம். இந்தா அஞ்சாயிரத்த வெச்சிக்க அப்பிடின்னு தம்பிக்காரனுக்குக் கொடுக்க மனசில்ல பாருங்க. நீதாம் வாத்தியாரு வேலைக்கிப் போயிட்டீயே! ஒனக்கு எதுக்குச் சொத்துங்ற மாரில்லா கேட்குறாரு ஒங்க பெரிய மச்சாம்? பேருக்காவது ஒரு துண்டு துணி நெலத்தையாவது ஒங்கக் குடும்பத்துல பொறந்த பாவத்துக்குக் கொடுங்கன்னு நாம்ம கேட்டுப் பாத்துட்டேம். ஒங்க பெரிய மச்சாம் செயராமு ஆச்சாரி மசியறாப்புல தெரியல. நெலத்த வித்த காசியில பைசா காசு கையில இல்ல. எல்லா காசியும் கடங்கப்பிக்கங்களுக்கே சரியா போயிடுச்சுன்னு சத்தியம் பண்ணாத கொறையால்ல சொல்றாரு!"ங்றாரு விகடபிரசண்டரு.
            சின்னவருக்கு இப்பத்தாம் விகடபிரசண்டரும், சுப்பு வாத்தியாரும் எங்க வராங்கங்ற விசயம் புரியுது. விசயம் புரிய ஆரம்பிச்சதும் கொஞ்சம் கொஞ்சமா பேச்சை மாத்துறாரு. "இவுங்க குடும்ப விசயமெல்லாம் நமக்கு ன்னா தெரியுங்றீங்க? பொண்ண போயிக் கட்டுனதுத்தாம். வந்ததுத்தாம். ஒரு நல்ல சாப்பாடு கூட அஞ்ஞ சாப்பிட்டதில்ல. பெறவு நமக்கு ன்னாத்த தெரியும்ங்றீங்க?"ங்றாரு சின்னவரு.
            "நீஞ்ஞ சொல்றது வாஸ்தவம்தாம். ஒரு தேவதிங்கன்னா கூட வந்துப் பாக்க மாட்டீங்க. வந்துப் பாத்தாலும் குதிகாலுல வெந்நித் தண்ணிய ஊத்துனாப்புல கெளம்பிப்புடுவீங்கன்னு எல்லா தகவலயும் சுப்பு சொல்லிப்புட்டாம். ஏதோ ஒரு பேருக்கு துண்டுதுணி நெலத்தையாவது கொடுக்கலாம்ல? அதுக்கு நீஞ்ஞல்லாம் வந்துப் பேசி ஒத்தாச பண்ணலாமுல்ல?"ங்றாரு விகடபிரசண்டரு.
            "பெரிய மச்சான பத்தி நமக்குத் தெரியும். ஒழைப்பாளின்னா அப்படி ஓர் ஒழைப்பாளி. குடும்பத்த தாங்கி நிக்குற மனுஷம். இதுல அண்ணம் தம்பில்லாம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துத்தாம் போவணும். இன்னிக்கு அவரு இல்லன்னக்கா, வாத்தியாரு வேலையில சின்ன மச்சாங்காரரு நிக்க முடியா. கூட கொறைச்ச எடுத்துக்க அண்ணங்காரனுக்கு உரிமெ இருக்கு. அதெ மறுக்க முடியா. நம்ம கதையெ எடுத்துக்குங்க. எங் அண்ணங்கார்ரேன் இருக்கானே!" அப்பிடின்னு விகடபிரசண்டரு வாத்தியாரு பாயில உக்காந்திருக்கிற பக்கத்துல வந்து மொல்லமா பேசுறாரு சின்னவரு, "இந்த எடம் சுமாருத்தாம். அவ்வேம் அங்கிட்டு இருக்கானே மேக்கால. அத்து நல்ல எடம். அதெ தம் பங்குக்கு ஒதுக்கிப்புட்டு இதெ நம்ம பங்குக்கு ஒதுக்குனாம். ரொம்ப பெரிய மனசு பண்ணிப் பண்றானாம். என்னவோ வயலுவரப்ப நம்ம பேருக்கு எழுதி வைக்கிறேம்னு நல்லா வெளையுற பங்கையல்லாம் அவ்வேம் வெச்சிக்கிட்டு, ஒண்ணுமே வெளையாத பங்குகளா பாத்து நம்ம தலையில கட்டிருக்காம். ஊருக்கார்ரேம் அவனெப் பத்தி பெரமாதமா பேசணும்னு பண்ணாம். அதெ அவ்வேம் பண்ணணுதும் ஒண்ணுத்தாம். பண்ணாம இருந்திருந்தாலும் ஒண்ணுத்தாம். வாயத் தொறந்து ஒரு வார்த்தைய வுடலயே. செரி! ஒனக்குத் தெரிஞ்சது அவ்வளவுத்தாம்ன்னு இருந்துட்டேம். வெவரம் தெரிஞ்ச நம்மள மாரி ஆளுங்க எல்லாம் நப்பித்தனமா போயி நின்னு பேசிட்டு இருக்க முடியா பாருங்க!"ங்றாரு சின்னவரு.
            "நல்லதோ கெட்டதோ ஏத்தோ ஒரு நெலத்த ஒங்களுக்குத் தந்திட்டாரு பாருங்க ஒங்க அண்ணேம்! இவ்வேம் சுப்புவுக்கு அதுவும் இல்லாமல்ல ஓட்டாண்டியால்ல நிக்குறாம். நீங்கள்லாம் பாத்துத்தாம் ஒரு நல்ல வழிய பண்ணி வுடணும்!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "சொல்றத சொல்லிப்புட்டேம். நமக்கு அந்த அசிங்கம் பிடிச்ச வேலையெல்லாம் பண்ண பிடிக்காது வாத்தியாரய்யா! இந்தப் பேச்ச பேசிட்டு வாரதுன்னா நம்ம வூட்டுப் பக்கம் வாராதீங்க! கெட்டக் கோவம் வந்திடும் ஆம்மா!"ங்றாரு சின்னவரு.
            வாங்க வாங்கன்னு கூப்புட்ட சின்னவரா இப்டி வூட்டுப் பக்கம் வாராதீங்கன்னு பொட்டுல அடிச்சாப்புல, மூஞ்சுல அடிக்கிறாப்புல, வெட்டி விடுறாப்புல சொல்றாருன்னு விகடபிரசண்டருக்கு ஒரு மாதிரியா போயிடுது.
            "செரி வாங்கய்யா கெளம்பிடுவோம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு சட்டுன்னு.
            "எலே யம்பீ! இருடா ஒரு வாயி டீத்தண்ணிய குடிச்சிட்டுப் போ!"ங்குது ரசா அத்தை.
            "வேணாம்க்கா! இன்னொரு நாளு வர்ரேம். வாரப்பயே வேல கெடக்குதுன்னு சொல்லிட்டுக் கெடந்தாங்க வாத்தியாரய்யா! நாம்மத்தாம் வம்புப் பண்ணி கையோட அழைச்சிட்டு வந்தேம். ஆவுற சொலியாவது ஆவட்டும். நாங்க இப்ப கெளம்புனாத்தாம் மசங்குற நேரத்துக்குள்ள ஊரு போயிச் சேரலாம்!"ன்னு சொல்லிப்புட்டு அங்கே வூட்டை விட்டு கெளம்பினவர்தாம் சுப்பு வாத்தியாரு. அதுக்குப் பிறவு அவரோட கலியாணப் பத்திரிகையைத் தூக்கிட்டு வேலங்குடிக்குப் போனவருதாம். அப்படிப் போனப்போ, "அன்னிக்கு அப்படி மூஞ்சிய தூக்கி வெச்சிட்டுப் போறப்போ, திரும்ப வாரணுங்றது தோணலயா? அம்மாம் ரோஷம் உள்ள ஆளு அப்படில்லா இருக்கணும். இன்னிக்குப் பத்திரிகைய தூக்கிட்டும் வூட்டுப்பக்கம் வந்திருக்கக் கூடாது. பொண்ணு பாக்கோ, முகூர்த்தம் பண்ண மச்சாங்காரனுங்க தேவையில்ல. மலையேறணும்னாலும் மச்சாங்கார்ரேம் தயவு இருந்தாத்தாம். இல்லாட்டி தலைகுப்புற வுழ வேண்டியத்துதாம். தொரை இவரு கட்டுற தாலிய பாக்குறதுக்கு மட்டும் போயி நிக்குனுமாக்கும்?"ங்றாரு சின்னவரு.
            அவரு அப்படிப் பேசுறதக் கேட்டுட்டு, பத்திரிகைய ஒரு தட்டுல வெச்சி, அதுல ரண்டு வெத்தலை, ஒரு கொட்டைப் பாக்கு, பூவு பழத்த வெச்சி, பதினோரு ரூவாயி பணத்த வெச்சி ரசா அத்தைக்கிட்ட அப்போ அதெ கொடுத்தவருத்தாம் சுப்பு வாத்தியாரு. வந்துட்டாரு.
            "மொத்தக் கணக்குல்ல ஒண்ணுக்கு மூணு முறை இந்த வூட்டுப்பக்கம் வராதேன்னு சொன்னவருதாம் வேலங்குடி சின்ன அத்தாம்!"ன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு சுப்பு வாத்தியாரு. அவரோட மனசுல அது ஆழமா பதிஞ்சிப் போச்சுது. இந்த வூட்டுப்பக்கம் வாராதேன்னு சொன்ன சின்னவரும் சுப்பு வாத்தியாரோட வூட்டுப்பக்கம் தலைவெச்சிக் கூட படுத்தது கிடையாது. ஆனா காலம் அப்படியாவா ஓடும்? ஒரு நாளு வேலங்குடி சின்னவரு சுப்பு வாத்தியாரு வூட்டுல கால எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலையும் வந்துச்சு. சுப்பு வாத்தியாரோட பொண்ணு செய்யு இருக்காளே! அவெ வயசுக்கு வந்த சேதியக் கேட்டு மொத ஆளா வூட்டுக்குள்ள வந்து காலடி வெச்சவரு வேலங்குடி சின்னவருதாம். அப்படி காலடி எடுத்து வெச்சப்பவே தன்னோட ரெண்டாவது மவனுக்குப் பொண்ணு கேட்டுட்டாரு செய்யுவ சின்னவரு. அதுக்கு முன்னாடி சொல்ல வேண்டியதுன்னா ஒரு சில விசயங்கள் இருக்கு. அதெ சொல்லிப்புட்டா நேரா நாம்ம அங்கப் போயி நிக்கலாம். 
*****


17.3



            மொத்த மக்கள்தொகை நூறு என்றால் கவிஞர்கள் மொத்தம் நூற்று பத்துப் பேர் இருப்பார்கள் புனைப்பெயர்களைச் சேர்த்து. கவிதை எழுதாமல் நேரடியாக எழுத்தாளர்களாக அவதரித்தவர்கள் சொற்பம்.

            நாடு - வீடு - காடு - ஓடு என்ற நான்கு சொற்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கவிதையை உருவாக்கி விடலாம்.
            உதாரணத்திற்கு இப்படி,
            நாட்டைக் காப்போம்
            நலமுடன் இருப்போம்
            வீட்டைக் காப்போம்
            வீரர்களாய் இருப்போம்
            காட்டைக் காப்போம்
            கண்ணியவான்களாய் இருப்போம்
            ஓட்டைக் காப்போம்
            ஒற்றுமையாய் இருப்போம்.
கட்டுரை அப்படியன்று. கொஞ்சம் மெனக்கெட வேண்டும். சிறுகதை இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். நாவலுக்கு ரொம்பவே மெனக்கெடல் அதிகம். கவிதை எழுதி ஒரு நம்பிக்கை பிறந்து விட்டால், அங்கே இங்கே என்று வரிகளைப் பிய்த்துப் போட்டு மேற்கோள் காட்டி விட்டு கட்டுரையைத் தயார் செய்து விடலாம். கட்டுரையில் ஆங்காங்கே சில பெயர்களைத் தூவி விட்டு, இரட்டை மேற்கோள் குறிகளைச் செருகி விட்டால் சிறுகதை தயார் ஆகி விடும். ஒரு கதையாய் ஓடும் சிறுகதைக்குள் நான்கைந்து கிளைக்கதைகளைப் புகுத்தி விட்டால் சுடச் சுட நாவல் தயார்.
            ஓர் எழுத்தாளர் ஆவது சுலபம். அதை விடச் சுலபம், எதையாவது படம் பிடித்துப் போட்டு ஒரு காணொலிக்கான இயக்குனர் ஆவது. விருப்பம் அவரவரைப் பொருத்தது. மொத்தத்தில் உங்களை ஒரு கவிஞராய் ஆக்கியதில் இந்த நாவலுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதை உங்களால் மறுக்க முடியாது. நீங்கள் உங்கள் வருங்கால எழுத்தில் அதைக் குறிப்பிடுவீர்கள் என்று நாவலாசிரியர் நம்புகிறார்.
*****


மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...