29 Nov 2019

ஊருக்குள்ள ஒரு பனிப்போர்!



செய்யு - 283

            வேலங்குடி பெரியவருக்கு ஆம்பளைப் புள்ளைங்க கணக்குல அஞ்சும், சின்னவருக்கு ரெண்டும், பொம்பளைப் புள்ளைங்க கணக்குல பெரியவருக்கு மூணும், சின்னவருக்கு மூணும் இருந்துச்சுங்க. ரெண்டு பேருமே போட்டிப் போட்டுகிட்டு புள்ளைங்களப் பெத்தவங்க. காலப்போக்குல அவங்களுக்கு எல்லாத்திலயும் போட்டி வர ஆரம்பிச்சிடுச்சு. பெரியவரு ஊருக்குள்ள ஒரு நிலபுலத்த வாங்குனா சின்னவருக்கும் ஒடனே எங்காச்சிம் ஒரு நிலபுலத்த வாங்கிப் போட்டாத்தாம் தூக்கம் வரும். நமக்குப் பின்னாடி பொறந்த பய நம்ம அளவுக்கு நிலபுலத்த வாங்கிப் போடுறானேன்னு அடுத்த ஒரு நிலபுலத்த வாங்கிப் போடற வரைக்கும் சும்மா இருக்க மாட்டாரு பெரியவரு.
            இப்படி ரெண்டு பேரும் போட்டிப் போட்டுக்கிட்டாலும் ஒரு சில விசயங்கள்ல ஒருத்தர ஒருத்தரு அடிச்சிக்க முடியல. சின்னவரால பெரியவரு அளவுக்கு மாடு கண்ணுகளயோ, நிலபுலங்களையோ பாத்துக்க முடியல. பெரியவரு வூட்டுல இருபது முப்பது மாடுகள்ன்னு நின்னாக்கா சின்னவரு வூட்டுல ரெண்டு மூணுன்னுத்தாம் நிக்கும். பெரியவரு மா நெலத்துக்கு பத்து மூட்டை, பன்னெண்டு மூட்டைன்னு அறுத்தாருன்னா சின்னவருக்கு ஏழெட்டு மூட்டைக் கணக்குலத்தாம் தேரும்.
            பெரியவரு மாரி ஊர்ல ஒரு ஜபர்தஸ்தைச் சின்னவரால உண்டாக்கிக்க முடியல. ஒரு பஞ்சாயத்து பேச்சு வழக்குன்னா பெரியவரு அளவுக்கு சின்னவரால கட்டம் கட்டிப் பேச முடியாம போயிடும். ஊர்ல ஒரு விஷேசம்ன்னா பெரியவரத்தாம் முன்னால கொண்டு போயி நிப்பாட்டிப்பாங்க. மொறையா ஒரு தேவையை எப்படிச் செய்யணுங்றது அவருக்கு அத்துப்படி. கிராமத்துல ஒரு காரியம்ன்னா பெரியவர கலந்துக்காம எதயும் செய்ய மாட்டாங்க. அதுவுமில்லாம பெரியவரு மாடு கண்ணுங்க, வயலுகன்னு வேலைய பாத்துட்டு வூட்டுலயே இருப்பாரா? அது ஒரு தோதா போயிடுச்சி. சின்னவரு அப்படியா? காலையில சூரியன எழுப்பி வுட்டுப்புட்டு வேலைக்குப் போனாருன்னா, சூரியன மறையச் சொல்லிட்டுத்தான வூடு திரும்புவாரு. தூங்குற நேரத்துல ஊருல இருக்குற ஒரு ஆளை வழக்கு, வம்பு, சண்டைன்னா எப்டி ஒடனுக்கு ஒடனே கூப்பிட்டுட்டுப் போவ முடியும்? இந்த விசயம் பெரியவருக்குத் தோதா போயிடுச்சி ஊர்ல எந்தப் பிரச்சனைன்னாலும் ஒடனே கெளம்பிப் போயி பேசிட்டு வர்றதுக்கு.
            பெரியவரு போல சனங்களை புரிஞ்சிக்கிட்டு அனுசரிச்சிப் போற குணம் சின்னவருக்குக் கம்மித்தாம். சின்னவரு பேசுனா தாந்தாம் எல்லாங்குறது போல பேசுவாரு. பெரியவரு எதுத்தாப்புல இருக்குறவங்களுக்கும் எடம் கொடுத்து சிரிப்பும் வெளையாட்டுமா பேசுவாரு. அதால வம்பு தும்பு பிரச்சனை இல்லன்னாலும் ஊர்ல பெரியவருகிட்ட பேசுறதுக்குன்னே ஒரு கூட்டம் வந்துட்டே இருக்கும்.
            பெரியவருக்கு அப்படிச் சில விஷேசங்க இருந்துச்சுன்னா, சின்னவருக்குன்னு சில விஷேசங்க இருந்துச்சி. சின்னவரைப் போல பெரியவரால மரவேலை செஞ்சு அதிகம் சம்பாதிக்க முடியல. முக்கியமா சின்னவரு புள்ளைங்கள நல்லவிதமா படிக்க வைச்சாரு. சின்னவரு அளவுக்குப் பெரியவரால மெனக்கெட்டுப் புள்ளைங்கள படிக்க வைக்க முடியாட்டியும் புள்ளைங்கள பள்ளியோடத்துக்கு அனுப்பி வைச்சுத்தாம் பார்த்தாரு.  பெரியவரோட புள்ளைங்களும் பெரிசா படிப்புல விரும்பம் இல்ல. பள்ளியோடத்துக்குப் படிக்க அனுப்பிச்சா பள்ளியோடம் போறது போல போயி பசங்கள கூட்டுச் சேத்துக்கிட்டு வயக்காடுகள சுத்திட்டு, காரைச் செடியில காரைக்காயைப் பறிச்சிப் போட்டுகிட்டு, ஆறு கொளத்துல தண்ணி இருந்தா தூண்டில போட்டு மீன பிடிச்சிக்கிட்டு, அதுல விழுந்து நீச்சல அடிச்சிக்கிட்டு, காடு கரைகள்ல வெளையாண்டுகிட்டுப் பள்ளியோடம் வுடுற நேரத்துல வந்துச்சுங்க.
            தன்னோட புள்ளைங்க படிக்கிறதையும், பெரியவரோட புள்ளைங்க தறுதலையா சுத்துறதையும் பத்தி ரொம்ப எளக்காரமா பேசுவாரு சின்னவரு. அதெ பத்தி ஒரு நாளுக்கு பத்து தடவையாவது சொல்லி, "புள்ளீகள பெத்துட்டா ஆயிட்டா? நல்ல வெதமா வளக்குறது இல்லையா? ச்சும்மனாச்சுக்கும் நாலு ஆட்டையும், நாலு மாட்டையும் வளத்துட்டா போதுமா? மாடு மாரியே புள்ளைங்கள வளத்துக்கிட்டு? புள்ளைங்க மாரி மாடுகள வளத்துக்கிட்டு? இவன்லாம் ன்னா சென்மமோ?"அப்பிடின்னு சாடையா காது படவே பேசுவாரு. "வளந்த பிற்பாடு யாரு எப்டி இருக்கா? யாரு உசத்தி? யாரு மட்டங்றத பாப்பேம்? காலம் இப்டியே போயிடுதடா கிறுக்குப் பயலே! ஏம் புள்ளைங்கள எப்பிடிக் கொண்டாரதுன்னு நமக்குத் தெரியும்? அவனவனும் அவனவம் சூத்தப் பாத்துக் கழுவுங்கடா? அடுத்தவேம் சூத்தப் பாத்துகிட்டுக் கெடக்காதீங்கடா!"ன்னு பெரியவரும் சாடையா வுட்டுக் கெழட்டுவாரு.
            அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் நடந்த பனிப்போரு மாரி அண்ணங்காரருக்கும், தம்பிக்காரருக்கும் அப்பிடி இப்பிடின்னு இது ஒரு பனிப்பொரு அப்பப்போ நடந்துட்டு இருக்கும். அண்ணங்காரரும், தம்பிக்காரரும் இப்பிடி போருக்கு நிக்குங்களே தவிர, அக்காக்காரியும், தங்கச்சிக்காரியுமான செயா அத்தையும், ரசா அத்தையும் இந்தக் கூத்த கண்டுக்கிடவே கண்டுக்கிடாதுங்க. அண்ணங்காருரும், தம்பிக்காரரும் இல்லாத நேரங்கள்ல அதுக ரெண்டும் வேலிக்கு இந்தப் பக்கமாவும், அந்தப் பக்கமாவும் நின்னு பேசிக்கிட்டு இருக்கிறதுதாம் வேல. அந்தப் பேச்சுல ரெண்டும் தன்னோட புருஷங்காரங்கள்ல நக்கலும், நையாண்டியும் பண்ணிட்டுப் பேசிக்கிறதுதாம் வேடிக்கை.
            பெரியவரோட புள்ளைங்களுக்கு சரியா படிப்புல கவனம் போகலன்னு சொன்னாலும் எல்லா புள்ளைங்கக்கும் அப்படியே கவனம் போகாம போயிடல. பெரியவரோட புள்ளைங்கள்ல மூத்த பொண்ணு மலரு அத்தாச்சி மட்டும் நல்ல வெதமா பத்தாவது வரைக்கும் படிச்சது. அந்த அத்தாச்சி நல்ல வெதமா படிச்சுப் பத்தாவதுல பள்ளிக்கூடத்துலயே மொதலாவதும் வந்துச்சுங்றத பத்தியும் முன்னாடி பெரியவரே ஓரிடத்துல சொல்லிருக்காரு. அது ஒண்ணுதாம் பெரியவருக்குப் புள்ளைங்க படிப்பால கிடைச்ச பெருமை.

            பெரியவரோட பொண்ணான மலரு அத்தாச்சிப் பண்ண அந்தப் படிப்புச் சாதனைய சின்னவரு புள்ளைங்களால பண்ண முடியல. சின்னவரோட புள்ளைங்க எல்லாம் படிச்சதுங்களே தவிர பள்ளியோட அளவுல மொதலாவதா வர முடியல. அந்த விசயத்துல பெரியவருக்கு ஒரு பெருமைத்தாம். அதுல ரொம்ப குஷியாயி மலரு அத்தாச்சி பத்தாவதுல பள்ளியோட் அளவுல மொதலாவது வந்தததுக்கு பெரிய வாத்தியார்ட்டேயிருந்து பரிசு வாங்குறது போட்டோக்காரரை வெச்சி மெனக்கெட்டு போட்டோ எடுத்து அதெ கொண்டாந்து வூட்டுல ரொம்ப பெருமையா மாட்டி வெச்சாரு பெரியவரு. அந்த அத்தாச்சியைத்தாம் சுப்பு வாத்தியாருக்குக் கட்டிக் கொடுக்கணும்னு நெனைச்சாரு பெரியவரு.  படிப்புக்குப் படிப்பு ரெண்டு பேருக்கும் பொருத்தமா இருக்கும்ணு நெனைச்சாரு பெரியவரு. மத்தபடி அவருக்குக் கடைக்குட்டியா பொறந்த பொண்ணு எட்டாவது வரைக்கும் படிச்சது. மத்தது எல்லாம் நாலாவது, ஆறாவது, ஏழாவதுன்னு இடையில வுட்டதுதாம். ஆம்பளைப் புள்ளைங்க எல்லாம் நாலாவது, மூணாவது வரைக்கும்தாம்.
            பெரியவரோட புள்ளைங்க மாரி இல்லாம தன்னோட புள்ளைங்க நல்ல வெதமாப் போயி பள்ளியோடம் படிக்கிறதுல சின்னவருக்கு ரொம்பவே பெருமைங்றத சொல்லித் தெரிய வேண்டியதில்ல. அதுவும் பெரியவரோட புள்ளைங்க தறுதலையாச் சுத்திட்டுக் கெடக்குறப்போ தன்னோட புள்ளைங்க பள்ளியோடம் போறதுல தாங்க முடியாத புளங்காகிதம் அவரோட மனசுக்குள்ள. புள்ளைங்கன்னா நம்மள மாதிரில்லா கரவு செரவால்ல வெச்சிக்கணும்னு ரொம்ப பெருமையா ஊருல ஒரு எடம் இல்லாம எல்லா இடத்திலயும் நின்னு பீத்திப்பாரு. அவரோட பொம்பளைப் புள்ளைங்க மூணுமே எட்டாவதுக்கு மேல நல்ல வெதமாப் படிச்சி ஒம்போதாவது, பத்தாவதுன்னு அதுகளும் படிப்ப நிறுத்திக்கிடுச்சுங்க. ஆம்பளைப் புள்ளைங்க ரெண்டும் பத்தாவது வரைக்கும் நல்ல வெதமாப் படிச்சி ஐ.டி.ஐ. வரைப் படிச்சதுங்க.
            பெரியவரோட மூத்தப் புள்ளயாண்டான் கண்டமேனிக்கு ஊரு சுத்திக்கிட்டு, வூட்டு வேலைகளைப் பாத்துட்டுக் கெடக்குறதப் பார்த்த பெரியவரு அதெ கொண்டு போயி நாகு அத்தையோட கோவில்பெருமாள் ஊர்ல வேலை கத்துக்கிட்டுக் கொழுந்தியாளுக்கு துணையா இருந்துக்கிட்டு எப்படியாவது பொழைச்சிக்கிடட்டும்னு வுட்டாரு. நாகு அத்தைக்கும் ஒரு பொண்ணு பொறந்து, அதுக்குப் பிற்பாடு ஒரு பையன் பொறந்து அதுவும் கொழந்தைய வளர்க்க செரமப்படுதுன்னேன்னு அதயும் நெனைச்சித்தாம் கொண்டு போயி வுட்டாரு. அப்படிக் கொண்டு போயி விட்ட பெரியவரோட அந்த மூத்தப் புள்ளையோட பேரு சந்தானம். அவர்ர எல்லாரும் சந்தானம் அத்தான்னுதான் கூப்புடுறது.
            அத்தோட நாகு அத்தைக் கல்யாணம் ஆயிப் போன கோவில்பெருமாள் ஊர்ல சந்தானம் அத்தான கொண்டுப் போயி விட்டதுல ஒரு காரணம் இருந்துச்சு. நாகு அத்தையோட வூட்டுக்காரரு நாது மாமா நல்ல வேலைக்காரரு. நல்லா வேலையைக் கத்துக்கிடட்டும்னுதான் அங்க கொண்டு போயி விட்டது. ஆனா நாது மாமா வேலைதாம் பார்க்க மாட்டாருங்ற சங்கதி ஒங்களுக்குத் தெரிஞ்சதுதாம். மனசுக்குத் தோணுனா வேலைய பார்ப்பாரு. இல்லாட்டியும் படுத்தப் படுக்கைத்தாம். நாது மாமாவோட வேலைக்கு கிராக்கி இருந்ததால அவரு இழுத்தடிக்கிற இழுப்புக்கெல்லாம் அவர வெச்சி வேலை பாத்துக்கிட்டு இருந்தாங்க கோவில்பெருமாளு சனங்க. அது என்னவோ அந்த சனங்களோட தலையெழுத்தாப் போச்சி, இவர்ர வெச்சி வேலைப் பாக்குறதுங்கறது. அவரு வேலைக்குப் போனா குடும்பம் ஓகோன்னு இருந்திருக்கும். போனாத்தானே இருந்திருக்கும்? அவரு சரியா வேலைக்குப் போவாததால நாகு அத்தைச் செரமப்பட்டுத்தாம் குடும்பத்தை ஓட்டுச்சு. அதுக்கு ஒரு தொணையா இருக்கட்டுமேன்னு கணக்குப் பண்ணித்தாம் சந்தானத்து அத்தான அங்க கொண்டு போயி விட்டதுங்றது இப்போ ஒங்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கும்.
            கோவில்பெருமாள் ஊரு கும்பகோணத்துக்குப் பக்கத்துல உள்ள ஊருங்றதும், நல்ல செழிப்பான ஊருங்றதும், வெவசாய வேலைகளுக்குப் பஞ்சம் இருக்காதுங்றதும், கறிகாயிப் பறிக்கிறது, பூ பறிக்கிறது, வெதை வெதைக்கிறது, களை பறிக்கிறதுன்னு எந்நேரமும் வேலை இருக்குங்றதும் ஒங்களுக்குத் தெரிஞ்சதுதாம். அந்த வேலைக்கெல்லாம் போயித்தாம் நாகு அத்தைக் குடும்பத்தை வெச்சு காபந்து பண்ணிகிட்டு இருந்துச்சுங்றதும், மத்தபடி நாது மாமாவால குடும்பத்துக்கு எந்த பிரயோசனமும் இல்லங்றதும் கூட ஒங்களுக்குத் தெரிஞ்சதுதாம். நாது மாமா வேலைக்குப் போறப்பல்லாம் சந்தானம் அத்தான கூட அழைச்சிட்டுப் போவாரு. நம்ம ஆளுதாம் ஒரு நாளு வேலைக்குப் போனா நாலு நாளைக்கு இலைக்கொட்டாய்ல சாராயத்தப் போட்டுகிட்டுக் கொட்டாரம் அடிப்பாரே! அப்படி வேலைக்குப் போன பழக்கத்துல நாது மாமா வேலைக்குப் போவாத நாள்லயும் சந்தானம் அத்தான் அந்த வூடுகளுக்குப் போயிக்கிட்டு கெடக்கும்.
            அப்படிப் போயி அந்த வூட்டுக்காரங்களுக்குக் கறிகாயி வாங்கிக் கொடுக்கிறது, மளிகை சாமானுங்கள வாங்கிக் கொடுக்கிறது, வூட்டு வேலைகளப் பாத்துக் கொடுக்கிறதுன்னு எதாச்சிம் வேலைகள செஞ்சிக் கொடுத்துக்கிட்டு அந்த குடும்பங்களோட ஒட்டிக்கும். ஒரு குடும்பம் குட்டின்னு இருந்தாக்கத்தாம் ஆயிரத்தெட்டு வேலைங்க வூட்டுல இருக்கும் இல்லையா! இப்படி ஒத்தாசைக்கு ஒரு பையென் கெடைச்சா யாரு சும்மா விடுவா? அதால ஆவ வேண்டிய மரவேலை ஆவாட்டியும் பராவயில்லன்னு சந்தானத்து அத்தான வுட மாட்டாங்க. சந்தானத்து அத்தானும் அந்த வூட்டுலயே சாப்பிட்டுக்கும். வூட்டுக்குக் கெளம்புற நேரத்துல அவங்களா பிரியமா கொடுக்குற கறிகாயி, சாப்பாட்டுப் பண்டங்கள வாங்கியாந்து அத்தைக்கிட்ட கொடுக்கும். அத்தோடயும் விடாது. ஊர்ல யாராவது வேலைன்னு கூப்புட்டா போதும், அவங்களோட ஒட்டிக்கிட்டு வேலைக்குப் போயி, அதுவாவே வேலையையும் கத்துக்கிடுச்சி. 
            கொஞ்ச நாளு கடையிலேந்து கறிகாயி வாங்கி அது வேலை பாக்குற வூடுகளுக்குக் கொடுத்துட்டு இருந்த சந்தானத்து அத்தானுக்கு ஒரு யோசனை வந்திச்சி. இந்தக் கறிகாய்கள ஏம் கறிகாய்கள போடுற கொல்லைக்காரங்ககிட்டேயிருந்து வாங்கிக் கொடுக்கக் கூடாதுன்னு? அப்டி ஒரு யோசனை வந்ததும், கொல்லைக்காரங்ககிட்டேயிருந்து கறிகாய்கள வாங்கி, அதெ கடைக்காரங்க விக்குற ரேட்டுக்குக் கொடுத்தா கையில ஏகமா காசு பொரள ஆரம்பிக்கிறது புரியுது சந்தானத்து அத்தானுக்கு. அன்னையிலேருந்து மரவேலைக்குப் போற காலை நேரத்துக்குள்ள ஒரு பையில கறிகாய்கள கொல்லைக்காரங்ககிட்டேயிருந்து வாங்கியாந்து வூடு வூடு கொடுத்து காசு பாக்க ஆரம்பிச்சிடுச்சி. அத்தோட பூப்பறிக் கொல்லைகளுக்குப் போயி அதே மாரி பூக்கள வாங்கி அதையும் வூடு வூடா கொடுக்க ஆரம்பிச்சா, ஒண்ணுக்கு ரெண்டா கையில காசு பொரளுது.
*****


No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...