28 Nov 2019

பொண்ணு கொடு மச்சானே!



செய்யு - 282

            வேலங்குடி சின்னவரு வூட்டுல நொழைஞ்சா அங்க சின்னவரும், ரசா அத்தையும், "வாங்க! வாஞ்ஞ!" அப்பிடிங்கிறாங்க. ஒரு பாயை எடுத்துப் போட்டு குந்துங்கங்றாங்க. ரசா அத்தை செம்பு நெறைய தண்ணிய கொண்டாந்து கொடுக்குது. பேருக்கு அதெ வாங்கி வாயில ஒரு வாயி ஊத்திக்கிட்டு உக்கார்றாங்க சுப்பு வாத்தியாரும், விகடபிரசண்டரும். வூட்டுல நொழையுறப்ப பொதுவா வாங்க வாங்கன்னுத்தாம் சொல்லுவாங்க. அந்த வூட்டை வுட்டுக் கெளம்புறப்பயும் அதே, "வாங்க! வாங்க!" இருந்தாத்தாம் அந்த வூட்டுல நொழைஞ்சதுக்கு ஓர் அர்த்தம் இருக்கும். முதல்ல வூட்டுல நொழையுறப்ப சொல்ற வாங்கங்றது வூட்டுக்குள்ள வாங்கன்னு அழைக்கிறது. வூட்ட வுட்டுக் கெளம்புறப்ப சொல்ற வாங்கங்றது மறுபடியும் சீக்கிரமே வாங்கங்றது. அதுலத்தாம் உறவுங்றது பலப்படுது. மறுபடியும் மறுபடியும் உறவுகளப் போயி பாக்கணுங்ற உணர்வுங்க உண்டாவுது. இங்க சின்னவரு வூட்டுல என்ன நடக்குதுன்னு பாத்துப்புடுவோம்.
            விகடபிரசண்டரு வாத்தியாரைப் பார்த்ததும், "நீஞ்ஞ இல்லன்னக்கா இன்னிக்கு யம்பீ இல்லங்றது ஒலக்கத்துக்கே தெரியும். யம்பீய நல்ல வெதமா படிக்க வெச்சி, வேலைக்கும் கொண்டு போய்ட்டீங்க. ஒங்களுக்குப் புண்ணியமா போவும். எஞ்ஞ வம்சாவழியே ஒங்களுக்குக் கடம்பட்டுக் கெடக்குதுங்க!" அப்பிடிங்கிறாரு சின்னவரு. இப்படித்தாம் சின்னவரு பேசணும்னு ஆரம்பிச்சா உசத்தித்தாம் பேசுவாரு. பேச பிடிக்கலன்னா வெச்சுக்குங்க மூஞ்சுல அடிச்சாப்புல பேசிடுவாரு.
            "இந்தப் பக்கமா ஒரு சோலியா வந்தேம். அதாம் எல்லாத்தையும் பாத்துப்புடலாம்னு ஒரு எட்டு வந்தாச்சி!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "யங்க அண்ணாச்சி வூட்டுல ரொம்ப நேரம் பேச்சு போல!"ன்னு இப்பத்தாம் பொடியத் தூவுறாரு சின்னவரு.
            "அத்து ஒண்ணுமில்லத்தாம்! ஊருக்குள்ள அஞ்ஞ விருத்தியூர்ல இஞ்ஞ நெலபுலங்க வாங்கிப் போட்டிருக்கிறதா பேச்சு அடிபடுது. வெவரம் ஒண்ணும் நமக்குப் புரியல. அதாம் அத்தான்ன பாத்து பேசிட்டு இருக்குறப்ப அந்த பேச்சு வந்ததும் விசயம் பெரிசா போயி பேச்சு வளந்துப் போச்சுது!"ங்றாரு இப்போ சுப்பு வாத்தியாரு.
            "அதானே பாத்தேம்! ஒண்ணுமில்லாம ஆடுமா சொத்தப் பய குஞ்சு! கதெ தெரியுமில்ல! தெரியாட்டியும் சொல்லுங்க! நாம்ம இப்ப சொல்றேம்! பெரிய மனுஷங்ற பேர்ல அந்த கேடுகெட்ட பயெ பண்ண வண்டவாளத்த!"ங்றாரு சின்னவரு.
            இதென்னடா கேட்க வந்த விவரத்தை நேரடியா கேட்க நினைச்சாக்கா அங்க பெரியவர்கிட்ட சுத்தி வளைச்சு விவரம் வருது. அதே விவரத்தைச் சுத்தி வளைச்சு இங்க சின்னவர்கிட்ட கேட்டாக்க நேரடியாவே விசயம் வெளியில வரப் பாக்குதுன்னு விகடபிரசண்டரு வாத்தியாருக்கு தெகைப்பா இருக்கு. அப்போ மனுஷங்ககிட்ட நேரடியா விசயத்துக்கு வரக் கூடாது, சுத்தி வளைச்சு பொடியப் போடுறாப்புல பேசுனாத்தாம் விசயத்த கறக்க முடியும் போலருக்குன்ன நெனைச்சுக்கிறாரு. நெனைச்சது இல்லாம அவரு, "என்னவோ போங்க! எஞ்ஞ நெலத்த வாங்கிட்டு எங்கேயாவது சந்தோஷமா இருந்தா போதும்ங்க!"ன்னு விகடபிரசண்டரு வாத்தியாரும் சூழ்நிலைக்கு ஏற்ப இப்போ தன்னோட பேச்ச மாத்திக்கிறாரு.
            "எஞ்ஞ நல்லா இருக்குறதுங்றேம்? அதல்லாம் முடியா வாத்தியாரய்யா! அவ்வேம் எண்ணத்துக்கு அவ்வேம் போன போக்க கேட்கலைல்ல நீஞ்ஞ. அதச் சொல்றேம் கேளுங்க. இந்த பயத்தேம் ஏற்பாடு எல்லாம். அஞ்ஞ குழி என்ன வெல? அறுவதுக்கு மேல. அதெ வித்துப்புட்டு இஞ்ஞ வாங்குனா குழிக்குப் பத்து ரூவாயோ, பன்னெண்டு ரூவாயோதானேன்னு வித்துப்புட்டு வாரச் சொல்லிருக்காம் கருங்காலிப் பயெ. அதெ நம்பி எம்மட பெரிய மச்சாம் நெலபுலத்தையெல்லாம் அஞ்ஞ விருத்தியூர்ல வித்துப்புட்டு மடியில முப்பத்தஞ்சாயிரத்த கட்டிட்டு எந் தங்காச்சி பத்மாவ அழைச்சுப்புட்டு இஞ்ஞ வந்துட்டு. குழி பத்து ரூவாய்ன்னா கணக்குப் போடுங்களேம் முப்பத்தஞ்சாயிரத்துக்கு கணக்குப் போடுங்க. ஒன்றரை வேலிக்கு மேல நெலபுலங்கள வாங்கிப் போடலாம்ல. அந்த நெனைப்பு. மொத்தமா சொளையா பணத்தைக் கொடுத்து வாங்குறதால முப்பத்தஞ்சாயிரத்துக்கு ரண்டு வேலி நெலத்த வாங்கு. அப்படி வாங்கித் தர்ற நெலத்துல ரண்டு மா ஒனக்குன்னு எங்க அண்ணாச்சிக்காரனோட ஒரு கணக்கு. அந்தக் கூறுகெட்ட பயலும் ரண்டு மா நெலத்துக்கு ஆசபட்டு பண்ணாம் பாருங்க. அப்படியே வயக்காட்டுப் பக்கமா போனீங்கன்னா உழனிப் போற பக்கமா இருக்குங்க நெலம்ங்க. அதெ வாங்கிக் கொடுத்திருக்காம். யாருக்கு வாங்கிக் கொடுத்திருக்காம்? பெரிய மச்சாங்காரனுக்குத்தான வாங்கிக் கொடுத்திருக்காம். தங்காச்சி வூட்டுக்கார்ரேம்தான ‍பெரிய மச்சாம். அதுல போயி ரண்டு மா நெலத்த எதிர்பாத்துருக்கானே கேடு கெட்டப் பயெ. அக்ரிமெண்டு போடணும்ல. மொத்த நெலத்தையும் யாந் தங்காச்சி பத்மா பேருக்குப் போட்டுருக்கு பெரிய மச்சாம். அதுல அந்தப் பயலுக்குக் கோவம் பாருங்க. ரண்டு மா நெலத்த வுட்டுப்புட்டு மிச்சத்த ஒம் பேர்ல போட்டுக்கோ, ரண்டு மாவா எம் பேர்ல அக்ரிமெண்ட போடுன்னு ஒத்தக் காலுல்ல நின்னுருக்காம் பரதேசிப் பயெ. அதல்லாம் முடியான்னு சொல்லிருக்கு எந் தங்காச்சி. அதுல முறுக்கிக்கிட்டு வந்தப் பயதாம்.உள்ளதும் போச்சே நொள்ளக்கண்ணான்னு பொலம்பிக்கிட்டு கெடக்குறாம்ங்க! இவம்ல்லாம் ஒரு பொறப்பு? நீஞ்ஞத்தாம் சொல்லோணும் வாத்தியாரே!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "நெலம் இஞ்ஞ வாங்குனது உண்மத்தானா?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "பெறவு? நாம்ம ன்னா பொய்யா சொல்றேம்? அந்தப் பயெ கெழட்டிக்கிட்டதும் தங்காச்சியும், பெரிய மச்சாங்காரரும் நம்ம வூட்டுப் பாத்துல்ல வார்றாங்க. பெறவு நாம்மத்தாம் முன்னாடி நின்னு எல்லாத்தையும் செஞ்சிக் கொடுத்தேம். ஊருல நீஞ்ஞ கிட்டு ஆச்சாரின்னு கேட்டுப் பாருங்க. ஒண்ணுக்குப் போற கொழந்தைக் கூட நிறுத்திப்புடும். பொறந்த கொழந்தைக் கூட எழுந்திரிச்சி நின்னுப்புடும். அப்படி ஒரு பேரு, செல்வாக்கு நமக்கு ஊருக்குள்ள. அதுல ஒரு சிக்கலு வந்துப் போச்சிப் பாருங்க. நெலத்த வாங்கிக் கொடுத்தவேம் எடம் எப்பிடி? ரீஸ்தரு பண்ண முடியுமா?ன்னு பாத்துல்ல வாங்கித் தர்ரோணும். இந்தப் பயெ வாங்கிக் கொடுத்த நெலமெல்லாம் கோயிலு நெலங்களா போயிட்டுதுங்க. அதெ வித்தவம் நைஸா பேசி ரண்டு வேலி நிலமென்னா? அதுக்குக் கூட அஞ்சு மாவ சேத்து எழுதித் தர்றேம்னு ஆசய காட்டிப்புட்டு அக்ரிமெண்டு போட்ட அன்னைக்கே இருபத்தஞ்சாயிரத்தக் கறந்தப்புட்டாம். ரீஸ்தரு பண்ற அன்னிக்கு மிச்ச பணத்தையும் வாங்கிப்புட்டு கோயில் நெலமா இருக்குறதால ரீஸ்தரு பண்ண முடியான்னு நிக்குறாம். பெறவு நாம்மதாம் தலபட்டு ஒரு பத்திரத்த வாங்கியாந்து, அது எப்பிடிங்றீங்க நம்ம கைக்காசப் போட்டு வாங்கியாந்து இன்னின்ன விவரம், இன்னின்ன சங்கதின்னு எழுதி நெலத்த வித்த எனக்கும், எந் தலைமுறைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லன்னு எழுதி வாங்கிப்புட்டேம். அதெ தந்த பிற்பாடுதாம் எந் தங்காச்சி மொகத்துலயும், பெரிய மச்சாங்காரரு மொகத்துலயும் ஒரு சந்தோஷம்னா பாத்துக்குங்களேம். அப்படிப்பட்ட பயெ அவ்வேம்! ஒரு காரியம்னு நம்பி வந்தா கழுத்த அறுத்துப்புட்டு ஓடிப் போயிடுவாங்க அவ்வேம் வாத்தியாரே!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "அப்போ முப்பத்தஞ்சாயிரம் பணம் ஒங்க பெரிய மச்சாங்காரர்ட்ட இருந்தத நீஞ்ஞ பாத்தீங்கத்தான்ன?"ங்றாரு விகடபிரசண்டரு.
            "நல்ல கதெயால்ல இருக்கு? நாந்தாம்னே பெறவு பணத்த வாங்கிக் கொடுத்தது. சாட்சிக் கையெழுத்துல்லாம் நாம்மதான்னே நாலு பேரை ஊர்ல கொண்டாந்து போட்டது. மொதோ சாட்சியே நாம்மத்தான்னே வாத்தியாரே! சொந்த பந்தம்னா நம்மள மாரில்லா இருக்கணும்! நம்ம வூட்டு வாசலத் தேடி வந்துப்புட்டா இந்தக் கிட்டு ஆச்சாரி அதுக்காக உசுரையே கொடுப்பாம் பாத்துக்கோங்க!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.

            "அத்துத்தாம்! அத்தேத்தாம்! அதுக்காகத்தாம் நாமளும் ஒஞ்ஞ வூட்டத் தேடி வந்திருக்கோம்! நீஞ்ஞத்தாம் பாத்து ஒங்க சின்ன மச்சாங்காரருக்குச் செஞ்சிப்புடணும்!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "ஏம் சின்ன மச்சானுக்குப் பண்ணாம வேற யாருக்கு நாம்ம பண்ணப் போறேம்? சங்கதிய மட்டும் சொல்லுங்க! பெறவு அத்து நடக்குற வேகத்தப் பாத்து மூக்குல வெரல வெச்சிப்புடுவீங்க! வேலைக்குப் போயிருக்கு சுப்பு. சம்பாதிச்சிருக்கும். அதுக்கு ஏதாச்சிம் நெலபுலத்த இஞ்ஞ வாங்கிப் போடணுமா?"ங்றாரு சின்னவரு.
            "அது கெடக்கட்டும்! விருத்தியூர்ல இருந்த அஞ்சரை மா நெலத்த வித்துப்புட்டு அந்தக் காச தோது பண்ணிட்டுத்தாம் இஞ்ஞ வேலங்குடியில நெலத்த வாங்கியிருக்காங்க ஒங்க தங்காச்சியும், பெரிய மச்சாங்காரரும். அதெ கேட்குறதுக்கு இருக்குற கடம் கப்பியல்லாம் அடைக்குறதுக்குத்தாம் நெலத்தை வித்ததாவும்,‍ நெலத்த வித்த காசுல கடங்கப்பியயெல்லாம் அடைச்சிட்டதாவும் பேச்சாகுது. இஞ்ஞ வந்து விசாரிக்கிறப்ப விவரம் வேற ஆவுது. ஒங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்ல. அஞ்ஞ விருத்தியூர்ல வித்தது பொது சொத்து. ஒங்க மச்சாங்காரவங்க ரண்டு பேருக்கும் அது பொது. அத வித்து அந்தக் காசியில தனக்கு மட்டும் நெலத்த வாங்கிப் போட்டுட்டு, அது சரிப்படுமா? நீஞ்ஞ சொன்ன வெவரமெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் நமக்கு எல்லாத்துக்கும் தெரியும். நீஞ்ஞ சொன்னதுல்ல மொத்ததும் தெரிஞ்சிப் போவுது. நெலத்த வித்த காசியில்ல முப்பதஞ்சாயிரத்துல பாதிக்குப் பாதி கூட வாணாம். இந்தா அஞ்சாயிரத்த வெச்சிக்க அப்பிடின்னு தம்பிக்காரனுக்குக் கொடுக்க மனசில்ல பாருங்க. நீதாம் வாத்தியாரு வேலைக்கிப் போயிட்டீயே! ஒனக்கு எதுக்குச் சொத்துங்ற மாரில்லா கேட்குறாரு ஒங்க பெரிய மச்சாம்? பேருக்காவது ஒரு துண்டு துணி நெலத்தையாவது ஒங்கக் குடும்பத்துல பொறந்த பாவத்துக்குக் கொடுங்கன்னு நாம்ம கேட்டுப் பாத்துட்டேம். ஒங்க பெரிய மச்சாம் செயராமு ஆச்சாரி மசியறாப்புல தெரியல. நெலத்த வித்த காசியில பைசா காசு கையில இல்ல. எல்லா காசியும் கடங்கப்பிக்கங்களுக்கே சரியா போயிடுச்சுன்னு சத்தியம் பண்ணாத கொறையால்ல சொல்றாரு!"ங்றாரு விகடபிரசண்டரு.
            சின்னவருக்கு இப்பத்தாம் விகடபிரசண்டரும், சுப்பு வாத்தியாரும் எங்க வராங்கங்ற விசயம் புரியுது. விசயம் புரிய ஆரம்பிச்சதும் கொஞ்சம் கொஞ்சமா பேச்சை மாத்துறாரு. "இவுங்க குடும்ப விசயமெல்லாம் நமக்கு ன்னா தெரியுங்றீங்க? பொண்ண போயிக் கட்டுனதுத்தாம். வந்ததுத்தாம். ஒரு நல்ல சாப்பாடு கூட அஞ்ஞ சாப்பிட்டதில்ல. பெறவு நமக்கு ன்னாத்த தெரியும்ங்றீங்க?"ங்றாரு சின்னவரு.
            "நீஞ்ஞ சொல்றது வாஸ்தவம்தாம். ஒரு தேவதிங்கன்னா கூட வந்துப் பாக்க மாட்டீங்க. வந்துப் பாத்தாலும் குதிகாலுல வெந்நித் தண்ணிய ஊத்துனாப்புல கெளம்பிப்புடுவீங்கன்னு எல்லா தகவலயும் சுப்பு சொல்லிப்புட்டாம். ஏதோ ஒரு பேருக்கு துண்டுதுணி நெலத்தையாவது கொடுக்கலாம்ல? அதுக்கு நீஞ்ஞல்லாம் வந்துப் பேசி ஒத்தாச பண்ணலாமுல்ல?"ங்றாரு விகடபிரசண்டரு.
            "பெரிய மச்சான பத்தி நமக்குத் தெரியும். ஒழைப்பாளின்னா அப்படி ஓர் ஒழைப்பாளி. குடும்பத்த தாங்கி நிக்குற மனுஷம். இதுல அண்ணம் தம்பில்லாம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துத்தாம் போவணும். இன்னிக்கு அவரு இல்லன்னக்கா, வாத்தியாரு வேலையில சின்ன மச்சாங்காரரு நிக்க முடியா. கூட கொறைச்ச எடுத்துக்க அண்ணங்காரனுக்கு உரிமெ இருக்கு. அதெ மறுக்க முடியா. நம்ம கதையெ எடுத்துக்குங்க. எங் அண்ணங்கார்ரேன் இருக்கானே!" அப்பிடின்னு விகடபிரசண்டரு வாத்தியாரு பாயில உக்காந்திருக்கிற பக்கத்துல வந்து மொல்லமா பேசுறாரு சின்னவரு, "இந்த எடம் சுமாருத்தாம். அவ்வேம் அங்கிட்டு இருக்கானே மேக்கால. அத்து நல்ல எடம். அதெ தம் பங்குக்கு ஒதுக்கிப்புட்டு இதெ நம்ம பங்குக்கு ஒதுக்குனாம். ரொம்ப பெரிய மனசு பண்ணிப் பண்றானாம். என்னவோ வயலுவரப்ப நம்ம பேருக்கு எழுதி வைக்கிறேம்னு நல்லா வெளையுற பங்கையல்லாம் அவ்வேம் வெச்சிக்கிட்டு, ஒண்ணுமே வெளையாத பங்குகளா பாத்து நம்ம தலையில கட்டிருக்காம். ஊருக்கார்ரேம் அவனெப் பத்தி பெரமாதமா பேசணும்னு பண்ணாம். அதெ அவ்வேம் பண்ணணுதும் ஒண்ணுத்தாம். பண்ணாம இருந்திருந்தாலும் ஒண்ணுத்தாம். வாயத் தொறந்து ஒரு வார்த்தைய வுடலயே. செரி! ஒனக்குத் தெரிஞ்சது அவ்வளவுத்தாம்ன்னு இருந்துட்டேம். வெவரம் தெரிஞ்ச நம்மள மாரி ஆளுங்க எல்லாம் நப்பித்தனமா போயி நின்னு பேசிட்டு இருக்க முடியா பாருங்க!"ங்றாரு சின்னவரு.
            "நல்லதோ கெட்டதோ ஏத்தோ ஒரு நெலத்த ஒங்களுக்குத் தந்திட்டாரு பாருங்க ஒங்க அண்ணேம்! இவ்வேம் சுப்புவுக்கு அதுவும் இல்லாமல்ல ஓட்டாண்டியால்ல நிக்குறாம். நீங்கள்லாம் பாத்துத்தாம் ஒரு நல்ல வழிய பண்ணி வுடணும்!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "சொல்றத சொல்லிப்புட்டேம். நமக்கு அந்த அசிங்கம் பிடிச்ச வேலையெல்லாம் பண்ண பிடிக்காது வாத்தியாரய்யா! இந்தப் பேச்ச பேசிட்டு வாரதுன்னா நம்ம வூட்டுப் பக்கம் வாராதீங்க! கெட்டக் கோவம் வந்திடும் ஆம்மா!"ங்றாரு சின்னவரு.
            வாங்க வாங்கன்னு கூப்புட்ட சின்னவரா இப்டி வூட்டுப் பக்கம் வாராதீங்கன்னு பொட்டுல அடிச்சாப்புல, மூஞ்சுல அடிக்கிறாப்புல, வெட்டி விடுறாப்புல சொல்றாருன்னு விகடபிரசண்டருக்கு ஒரு மாதிரியா போயிடுது.
            "செரி வாங்கய்யா கெளம்பிடுவோம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு சட்டுன்னு.
            "எலே யம்பீ! இருடா ஒரு வாயி டீத்தண்ணிய குடிச்சிட்டுப் போ!"ங்குது ரசா அத்தை.
            "வேணாம்க்கா! இன்னொரு நாளு வர்ரேம். வாரப்பயே வேல கெடக்குதுன்னு சொல்லிட்டுக் கெடந்தாங்க வாத்தியாரய்யா! நாம்மத்தாம் வம்புப் பண்ணி கையோட அழைச்சிட்டு வந்தேம். ஆவுற சொலியாவது ஆவட்டும். நாங்க இப்ப கெளம்புனாத்தாம் மசங்குற நேரத்துக்குள்ள ஊரு போயிச் சேரலாம்!"ன்னு சொல்லிப்புட்டு அங்கே வூட்டை விட்டு கெளம்பினவர்தாம் சுப்பு வாத்தியாரு. அதுக்குப் பிறவு அவரோட கலியாணப் பத்திரிகையைத் தூக்கிட்டு வேலங்குடிக்குப் போனவருதாம். அப்படிப் போனப்போ, "அன்னிக்கு அப்படி மூஞ்சிய தூக்கி வெச்சிட்டுப் போறப்போ, திரும்ப வாரணுங்றது தோணலயா? அம்மாம் ரோஷம் உள்ள ஆளு அப்படில்லா இருக்கணும். இன்னிக்குப் பத்திரிகைய தூக்கிட்டும் வூட்டுப்பக்கம் வந்திருக்கக் கூடாது. பொண்ணு பாக்கோ, முகூர்த்தம் பண்ண மச்சாங்காரனுங்க தேவையில்ல. மலையேறணும்னாலும் மச்சாங்கார்ரேம் தயவு இருந்தாத்தாம். இல்லாட்டி தலைகுப்புற வுழ வேண்டியத்துதாம். தொரை இவரு கட்டுற தாலிய பாக்குறதுக்கு மட்டும் போயி நிக்குனுமாக்கும்?"ங்றாரு சின்னவரு.
            அவரு அப்படிப் பேசுறதக் கேட்டுட்டு, பத்திரிகைய ஒரு தட்டுல வெச்சி, அதுல ரண்டு வெத்தலை, ஒரு கொட்டைப் பாக்கு, பூவு பழத்த வெச்சி, பதினோரு ரூவாயி பணத்த வெச்சி ரசா அத்தைக்கிட்ட அப்போ அதெ கொடுத்தவருத்தாம் சுப்பு வாத்தியாரு. வந்துட்டாரு.
            "மொத்தக் கணக்குல்ல ஒண்ணுக்கு மூணு முறை இந்த வூட்டுப்பக்கம் வராதேன்னு சொன்னவருதாம் வேலங்குடி சின்ன அத்தாம்!"ன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு சுப்பு வாத்தியாரு. அவரோட மனசுல அது ஆழமா பதிஞ்சிப் போச்சுது. இந்த வூட்டுப்பக்கம் வாராதேன்னு சொன்ன சின்னவரும் சுப்பு வாத்தியாரோட வூட்டுப்பக்கம் தலைவெச்சிக் கூட படுத்தது கிடையாது. ஆனா காலம் அப்படியாவா ஓடும்? ஒரு நாளு வேலங்குடி சின்னவரு சுப்பு வாத்தியாரு வூட்டுல கால எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலையும் வந்துச்சு. சுப்பு வாத்தியாரோட பொண்ணு செய்யு இருக்காளே! அவெ வயசுக்கு வந்த சேதியக் கேட்டு மொத ஆளா வூட்டுக்குள்ள வந்து காலடி வெச்சவரு வேலங்குடி சின்னவருதாம். அப்படி காலடி எடுத்து வெச்சப்பவே தன்னோட ரெண்டாவது மவனுக்குப் பொண்ணு கேட்டுட்டாரு செய்யுவ சின்னவரு. அதுக்கு முன்னாடி சொல்ல வேண்டியதுன்னா ஒரு சில விசயங்கள் இருக்கு. அதெ சொல்லிப்புட்டா நேரா நாம்ம அங்கப் போயி நிக்கலாம். 
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...