புத்திசாலித்தனமான
பேச்சுகள் மேடைக்கு உதவலாம். இலக்கியக் கூட்டத்தில் அதிகம் அது எதிர்பார்க்கப்படுவதும்,
எதிர்பார்ப்பிற்கு உள்ளாவதும் சாசுவதமாக நடக்கும். புத்திசாலித்தனமான பேச்சு நடைமுறை
வாழ்க்கைக்கு உதவவே உதவாது. உங்கள் புத்திசாலித்தனமான பதில்களால் நீங்கள் தூக்கி எறியப்படுவீர்கள்.
நடைமுறை வாழ்வுக்குக் குழைவான பேச்சு வேண்டும். எந்த அளவுக்குக் குழைந்து குழைந்துப்
பேசுகிறீர்களோ, அந்த அளவுக்கு எதிரில் நிற்பவர்களை உருக்குழைத்துப் போட முடியும்.
இதென்ன ஒரு நாவல் சாணக்கியத் தந்திரம் பேசுவதாவது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இதிலென்ன
சாணக்கியத் தந்திரம் இருக்கிறது? இலக்கியத்தில் சோபித்தவர்கள் நடைமுறை வாழ்க்கையில்
தடுமாறி விழுந்த வரலாற்றைப் படித்திருந்தால், மாபெரும் சபைதனில் மாலை சூடியவர்களுக்கு,
வீட்டின் அறைக்குள் செவிட்டு இழுப்பாக அறை வாங்கிய துர்சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது
என்பதைப் புரிந்து கொள்வீர்கள். அந்த மிகப்பெரிய வரலாற்றை எழுதுவதானால் நாவல் மிகப்பெரியதாய்
நீண்டு விடும் என்ற அச்சத்தில் அந்த வரலாற்றின் பிழியப்பட்ட சாரத்தை மட்டும் நாம் இங்கே
பார்க்கிறோம்.
பேச்சில்
ஓர் அழகு இருக்கிறது. அது அதிகம் பேசுவதன்று. அதிகம் கேட்பது. குறைவாக, அதுவும் தேவைக்கும்
மிகக் குறைவாகப் பேசுவது. உடனுக்குடன் பேச்சுக்குப் பேச்சு பேதியாகுபவர்கள் அந்தப்
பேதியாலேயே காலரா, சீதபேதி வந்து செத்துப் போவக் கடவார்களாக! வள்ளுவர் 'யாகாவராயினும்
நாகாக்க' என்பார். அது தனி. அதை விட முக்கியம் நாம் தவறாகப் பேசப் பேச நம்மைத் தவறாக
வழிநடத்திக் கொண்டே போக ஆளிருக்கிறார்கள். சரியாக நம் பேச்சைத் திசை திருப்ப ஆட்கள்
கம்பி என்பதைப் புரிந்து கொண்டால் பேசுவதைக் குறைத்து விடுவீர்கள். பேச்சைக் குறைத்து
விட்டால் அபாயங்கள் கம்பி. பேராபத்துகள் அறவே கிடையாது என்றாகி விடும்.
இந்த நாவலைப்
படிக்கும் நீங்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். யாரிடமும் எதுவும் சொல்வது
ஏற்புடையதன்று. யாரும் சரியான பதிலை நீங்கள் நினைப்பது போல எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருவரும்
தங்களுக்கான பதிலை எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தயவுசெய்து இதைப் படித்த பின்பாவது
புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருத்தருக்குமான பதில் ஒவ்வொருத்தரைப் பொருத்தும் வேறுபடும்.
எப்போதும், எல்லா நேரத்திலும் அதை உங்களால் அளிக்க முடியுமா? அளிக்க முடியாது என்றில்லை.
ஒன்றே ஒன்றால் மட்டும் அது முடியும். மெளனத்தால் அது முடியும். மெளனம் எல்லாவற்றிற்குமான
பதில். கடவுள் ஏன் மெளனமாக இருக்கிறார்? உங்களுக்குப் புரிகிறதா? இப்போது புரிகிறதா?
உங்கள் கடவுள் மெளனமாக இருக்க நீங்கள் அதிகமாகப் பேசுகிறீர்கள். அவர் ஒரு போதும் பேச
மாட்டார். ஆனால் நீங்கள் அவர் உங்களுடன் பேசியதாக கப்சா அளப்பீர்கள். கயிறு திரிப்பீர்கள்.
அதற்கான அவரது பதிலும் மெளனம்தான். அதற்கும் சேர்த்து நீங்கள் ஜல்லியடிப்பீர்கள் என்பதை
அறிந்தவர்தான் உண்மையான கடவுள்.
முன்பெல்லாம்
பேசினாலே போதும் என்றிருந்தது. வாயுள்ள பிள்ளைப் பிழைத்துக் கொள்ளும் என்பார்கள்.
இப்போது மெளனம், ஆழ்ந்த மெளனம் தேவையாக இருக்கிறது. பேசுவது இப்போது பேஷனாகி விட்டது.
விதவிதமாகப் பேசுகிறார்கள். மெளனமாக இருப்பவர்கள் ரகசியமாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் பேச்சு எதற்கும் அவர்களைப் பொருத்தவரை உதவாது. மக்கள் உங்கள் பேச்சைக் கவனித்துக்
கொண்டிருந்தால் கொள்ளைப் போதலைக் கவனிக்க மாட்டார்கள். கொள்ளைப் போதலைக் கவனித்துக்
கொண்டிருந்தால் உங்கள் பேச்சைக் கவனிக்க மாட்டார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? மக்களை
உங்கள் பேச்சைக் கவனிக்க வைப்பீர்களா? அல்லது அவர்கள் கொள்ளைப் போதலை உணரச் செய்வீர்களா?
ஆகவே ஓர் இலக்கியவாதி நிறைய மெளனங்களை இடையில் வைக்கிறார். அந்த மெளனத்துக்கு பல்வேறு
பொருள் கொடுத்து உரையாசிரியர்கள் கிளம்புகிறார்கள். பல்வேறு வகையில் அர்த்தப்படுத்திக்
கொண்டு மக்கள் பேசத் தொடங்குகிறார்கள்.
ஓர் இலக்கியக்
கூட்டத்தில் பேச்சை விட மெளனத்தை அதிகம் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு
இந்த பாடபேதங்கள் புரிந்தால் நாம் மூன்றாவது இலக்கியக் கூட்டத்திற்குள் அடியெடுத்து
வைக்கலாம். இதுவரை நடந்திருக்கின்ற இரண்டு கூட்டங்களின் பொருள்களை நீங்கள் அதன் மெளனத்தில்
தேட தலைப்படுவீர்கள் என்று நாவலாசிரியர் நம்பத் தலைபடுகிறார். அவ்வாறு நீங்கள் தலைபடாது
போயிருந்தால் மீண்டும் ஒருமுறை பின்னோக்கிச் சென்று வாசித்து அதற்கொப்ப தலைபடுவீர்களாக!
*****
No comments:
Post a Comment