30 Nov 2019

குடி கெடுத்தவன் பொண்ணு வேணாம்!



செய்யு - 284

            தனக்குப் பிரிச்சிக் கொடுக்க வேண்டிய பாகத்த பிரிச்சிக் கொடுக்கக் கூடாதுங்றதுக்காகத்தான் குடும்பச் சொத்துல வர்ற ஆவணத்து நெலத்தை வித்து, வேலங்குடியில நெலத்தை வாங்கியிருக்காங்றது சுப்பு வாத்தியாருக்குப் புரிஞ்சிப் போச்சுது. அதுக்கு வேலங்குடி பெரியவரும், சின்னவரும் உடந்தைங்ற விசயமும் புரியுது. என்ன இருந்தாலும் பாகத்துல வர்ற நெலத்தை விக்குறதும், அதெ வித்த காசை வெச்சி வேலங்குடியில நிலம் வாங்குறதும் தப்புன்னு அவங்க ரெண்டு பேரும் சொல்லலியேன்னு சுப்பு வாத்தியாருக்கு மனசுக்குள்ள ஒரு வருத்தம். பெரிய மச்சான் மட்டும் நல்லா இருந்தா போதும், சின்ன மச்சான் எக்கேடு கெட்டோ போவட்டும்னு விட்டுட்டாங்களேன்னு நெனைச்சு கலங்குறாரு.
            இந்த விசயத்தையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு விருத்தியூருக்கு வந்த சுப்பு வாத்தியாரும், விகடபிரசண்டரு வாத்தியாரும் இது பத்தி செயராமு பெரிப்பாகிட்ட கேட்டாக்க அது ஒரு வார்த்தை கூட வாயைத் தொறந்து பேச மாட்டேங்குது. அப்படியே கல்லுபுள்ளையாராட்டும் உக்காந்திருக்குது. செயராமு பெரிப்பாவோட உருவமும் அப்படித்தாம் ஆஜானுபாகுவா இருக்கும். உக்காந்திருச்சுன்னா ஐயனாரு செல உக்காந்திருக்கிறது மாரியே இருக்கும். "ஒந் தம்பிக்கு சொத்துல பைசா காசி கொடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்க! அதுக்குத் தகுந்தாப்புல என்னென்ன செய்யணுமோ அதெ எல்லாத்தையும் செஞ்சுப் புட்டீங்க! அது செரி! ஊர்ல பஞ்சாயத்த வெச்சா என்ன பண்ணுவீங்க? கொடுத்துதான ஆவணும்?" அப்பிடிங்கிறாரு விகடபிரசண்டரு வாத்தியாரு.
            ஆனா, என்ன பண்ணாலும் சொத்துங்றதுல நயா பைசா கொடுக்கக் கூடாதுங்ற முடிவுல பெரிம்மாவும், பெரிப்பாவும் திடமா இருக்காங்றது தெரிஞ்ச பின்னாடி வலுகட்டாயமா அதெ வாங்குறதுல சுப்பு வாத்தியாருக்கு மனசுக்குள்ள ஒரு நெருடல் வந்துப் போச்சு.
            "அதெல்லாம் வேணாங்கய்யா! நல்லதோ கெட்டதோ அப்பன் இல்லாம போயி, பெறவு ஆயிக ரெண்டும் இல்லாம போயி இருந்த நமக்கு இம்மாம் காலத்துக்கு ஏதோ வழி பண்ணி விட்டுருக்காங்க. தங்காச்சி கலியாணத்தையும் முன்ன நின்னு நடத்திக் கொடுத்திருக்காங்க! அது போதும்! இது வரைக்கும் அண்ணணும் தம்பியுமா எப்டி வம்பு தும்பு இல்லாம, வழக்கு சண்டை இல்லாம இருந்தோமோ அப்டியே இருந்துட்டுப் போயிடுறோங்கய்யா! கடைசீ வரைக்கும் அண்ணங்ற மொறைக்கு அவரு நமக்கு வேணும். தம்பிங்கற மொறைக்கு நாம்ம அவங்களுக்கு வேணும். ஒருத்தருக்கொருத்தரு வேண்டியத்தா இருக்கு. நாளைக்கு முன்ன பின்ன மொகத்தைப் பாக்க வேண்டிதா இருக்கு. சொத்துங்ற பேச்சு வந்து அதயெல்லாம் பிரிச்சிடக் கூடாதுன்னு நெனைக்குறேம்ங்கய்யா! பரவால்ல! நாம்மத்தாம் சர்க்காரு வேலைக்கிப் போயிட்டேம்ல. அதெ வெச்சிப் பாத்துப்பேம்ங்கய்யா!" அப்பிடின்னு சொன்னவருதாம் மேக்கொண்டு எதயும் பேசாம சுப்பு வாத்தியாரு ஒழுகச்சேரி பள்ளியோடத்தப் பாக்கக் கிளம்பிட்டாரு. ஏதோ ஒரு சண்டை நடந்தாவது இந்த விவகாரம் பெரிசா ஆவும்னு எதிர்பார்த்த பெரிம்மாவுக்கும், பெரிப்பாவுக்கும் சுப்பு வாத்தியாரு அப்படிப் பேசிட்டுப் போனதுல சப்புன்னு ஆயிப் போச்சு. ஊர்லயும் பஞ்சாயத்துக்கு வரட்டும் பேசிப்போம்னுத்தாம் இருந்திருக்காங்க. சுப்பு வாத்தியாரு பஞ்சாயத்துக்கு வருவாருன்னு எதிர்பாத்திருக்காங்க. இவரு பஞ்சாயத்துக்குப் போவாம ஒழுகச்சேரிக்குப் போனதுல அவங்களும் விசயம் புரியாம தவிச்சாங்க. கொஞ்ச ஊருக்குள்ள இந்த விசயத்தைப் பத்தியே அப்படியும், இப்படியுமா பேசிப்புட்டு அப்புறம் விட்டுப்புட்டாங்க.

            சுப்பு வாத்தியாரு ஒழுகச்சேரிக்குக் கிளம்பிப் போயி ஒரு மாசத்துல செயராமு பெரிப்பாவும், பத்மா பெரிம்மாவும் விகடப்பிரசண்டரு வாத்தியாரை அழைச்சுகிட்டு ஒழுகச்சேரிக்குப் பள்ளியோடத்துக்கு வாராங்க. சுப்பு வாத்தியாரு வேலைக்குச் சேர்ந்த இந்த இத்தனை நாளுல, இப்பதாம் மொத மொதலா அவங்க ஒழுகச்சேரிக்கு வாராங்க. வந்தவங்கள என்ன விசயம்னு கேட்டாக்கா, "நீயி அந்தக் குடி கெடுத்த பயலோட பொண்ண கட்டிக்கக் கூடாது!"ங்குது பத்மா பெரிம்மா.
            "ஆமாம்டாம்பீ! அண்ணம் தம்பி நமக்குள்ள ஆயிரம் இருக்கும்! இந்தக் குடும்பத்துக்கு ஒழைச்சிப் போடுற வரைக்கும் போட்டுட்டுக் கடைசி காலத்துல நாம்ம ஒங் கூடத்தாம் வந்து தங்கப் போறேம்! மட்டரக சாதிக்கார பயலோட பொண்ணுல்லாம் ஒனக்கு வாண்டாம்டா!"ங்குது செயராமு பெரிப்பா.
            தலையும் இல்லாம, வாலும் இல்லாம இப்படி மொட்டையா பேசுனா சுப்பு வாத்தியாருக்கு என்ன புரியும்? ஒண்ணும் புரியாம முழிக்கிறாரு அவரு.
            விகடபிரசண்டரு வாத்தியாருதாம் வெளக்குறாரு. "இந்தாருப்பா! நீயி பாட்டுக்கு வேற சங்கதி எதையும் சொல்லாம இஞ்ஞ வந்துட்டே! அஞ்ஞ வேலங்குடியில ஒங்க பெரிய அத்தாம் பொண்ண பத்தி சேதி சொல்லி விட்டோமேன்னு எதிர்பாத்துட்டு இருந்துருப்பாரு போலருக்கு. சேதி ஒண்ணும் வரலயேன்னு கெளம்பி நம்ம கண்ட்ரமாணிக்கத்துக்கு வந்துப்புட்டாரு. வந்து சேதி ன்னான்னு வெசாரிச்சுச் சொல்லுங்கன்னுட்டாரு. வீடு தேடி வந்துட்டாரேன்னு நாம்ம விருத்தியூர்ல போயி விசயத்தச் சொல்லி வெவரத்தக் கேட்டாக்கா, ஒஞ்ஞ அண்ணியும், அண்ணணும் தாம்தூம்னு குதிக்கிறாங்க. இந்த விசயத்த போயி நம்ம வூட்டுல இருக்குற ஒங்க பெரிய அத்தாம்கிட்ட சொன்னாக்கா, நாம்ம யம்பீக்கிட்டயே பேசிக்கிறேம்னு கெளம்பிட்டாக. அதெ வந்து இஞ்ஞ விருத்தியூர்ல சொன்னாக்கா, ஒங்க பெரிய அத்தாம் முந்தி இஞ்ஞ வார்றதுக்குள்ள நாம்ம இஞ்ஞ வரோணும்ன்னு கெளப்புடா வண்டியன்னு நம்மளயும் தூக்கிப் போட்டுக்கிட்டு இஞ்ஞ வந்திட்டாக. இதாம்யா நெலவரம்!"ங்றாரு விகடபிரசண்டரு.
            "அதாம்டாம்பீ வெசயம்! அந்த நாதாரிப் பயெ வந்து இஞ்ஞ ஒம் மனசெ கெடுக்குறதுக்கு மின்னாடி நாம்ம வந்துப்புடணும்னுத்தாம் செஞ்சுகிட்டுக் கெடந்த வேலையெல்லாம் போட்டுட்டு இஞ்ஞ வந்துட்டேம். செரியான பன்னிக்குட்டிக்குப் பொறந்த பயெ! பொண்ணு புள்ளைங்களல ஒண்ணா ரெண்டா பெத்துப் போட்டிருக்காம். அவ்வேம் பொண்ண கட்டுனேன்னு வெச்சுக்க மொத்த குடும்ப சொமையும் ஒந் தலையிலத்தாம் விழுந்துப்புடும். நீயி சம்பாதிச்சு நல்ல வெதமா இரு. நமக்குல்லாம் ஒண்ணும் பண்ண வாணாம். ஒஞ் சம்பாத்தியதிலேந்து ஒத்த பைசா கொடுன்னு நாமளும் கேக்க மாட்டேம். ஆனாக்கா அவ்வேம் பொண்ண கட்டிட்டு சம்பாதிக்கிற காசிய அவ்வேம் குடும்பத்துக்கு அழுதுட்டுக் கெடக்காதே. கூட பொறந்த பொறப்பா போய்ட்டீயா? அதாங் தம்பிக்காரன காப்பாத்திப் போடணும்னு ஆன வேல, ஆவாத வேலன்னு அத்தனையையும் போட்டுட்டு வந்திருக்கேம்டா!"ங்குது செயராமு பெரிப்பா. செயராமு பெரிப்பா கோர்வையா இத்தனை வார்த்தைகளெல்லாம் பேசுற ஆளு கெடையாதுதாம். ஆனா இப்போ பேசுது.
            பத்மா பெரிம்மாவும் விடல. அது பங்குக்கு அது சொல்லுது. "இந்தாருங்க யம்பீ! அவனெ ஒங்களுக்கு ஒங்க அக்காள கட்டுன பின்னாடித்தாம் நல்லா தெரியும். நமக்கு அப்டி இல்ல. அவ்வேம் கூட பொறந்த பொறப்பு மாரி. அவ்வேம் கூடவே இருந்து பாத்தவ. என்னவோ அவந்தாம் பெரியவன்னு பெரிய தாட்டீகம் பண்ணுவாம். ஒங் காசிலயே இன்னும் பெத்து வெச்சிருக்கானே ரண்டு பொட்டப் புள்ளைங்க, ஆட்டுக்குட்டிங்க மாரி ஆம்பளப் புள்ளைங்க அத்தனைக்கும் வழி பண்ணிப்புடுவாம். நம்ம குடும்பத்துலேந்து ரண்டு பொண்ணுங்கள அவனுக குடும்பத்துக்குக் கொடுத்து சின்னாபின்னபட்டது போதும். ஒன்னயையும் போயி அஞ்ஞ வெச்சு அழறதுக்கு நாஞ்ஞ தயாராயில்ல. அவ்வேம் பொண்ண வுட்டுப்புட்டு நீயி எவள வாணாலும் இழுத்துட்டு வா. குலம், கோத்திரம், சாதிச் சழக்குன்னுப் பாக்காம கலியாணத்தப் பண்ணி வைக்கிறேம். அவ்வேம் பொண்ணு மட்டும் வேண்டாம்ங்க யம்பீ! கொலகாரப் பாவி! எந் தலையெழுத்து! நமக்கு அண்ணனா இருக்கணும்னு எழுதித் தொலைச்சிருக்கு! ஒங்களுக்கும் ன்னா தலையெழுத்தா? அவனுக்கு மருமவனா போவணும்னு! அப்டிப் போவணும்னா நம்மட பொணம் வுழுந்த பிற்பாடுத்தாம் போவணும்!" அப்பிடிங்கிது பெரிம்மா.
            அவங்க ரெண்டு பேரும் இப்படிப் பேசுறத பாத்துட்டு சுப்பு வாத்தியாருக்கு யோசனையா இருக்கு. குடும்பச் சொத்துன்னு பைசா காசிக் கொடுக்காம, இப்போ இப்படி வந்து ரொம்ப அக்கறையுள்ளவங்க மாரில்ல பேசுறாங்கன்னு யோசிக்கிறாரு, யோசிக்கிறாரு, யோசிச்சுக்கிட்டே இருக்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தாருடாம்பீ! இதுல யோசிக்கிறதுக்கு ஒண்ணுமில்ல. அண்ணங்கார்ரேம் நாம்ம. ஒம்மட நல்லதுக்குத்தாம் சொல்வேம்! வாத்தியாரு சொன்னாரு! நீஞ்ஞ ரண்டு பேரும் வேலங்குடியில விசாரிச்சதெல்லாம் வாஸ்தவந்தாம். இன்னிய வரைக்கும் அதுல ஒத்த நெலத்த ரீஸ்தரு பண்ண முடியல. பூராவும் கோயிலு நெலம்ங்றாங்க. ஆத்துல தண்ணி வந்தா ஒழுங்கா பாய மாட்டேங்குது. அத்தனையும் பாசனத்துக்கு லாயக்கே இல்லாத நெலம்புலம்ங்க. நமக்கு இருக்குற வேலையில எஞ்ஞப் போயி பாக்க முடியுது? ஒண்ணும் முடியல. பேசாம மாவுக்கு இவ்ளோ நெல்லு கொடுன்னு ஒரு ஆள பிடிச்சி நெலத்த வுட்டுட்டு வந்திருக்கேம்! இத்து எல்லாத்துக்கும் காரணம் அவந்தேம். அந்தக் குடி கெடுத்த பயத்தேம். இஞ்ஞ வித்துட்டு அஞ்சப் போனா வெல சல்லிசா வேலங்குடியில கிடைக்கும்னு கொண்டுட்டுப் போன பயலெ அவம்தாம். எதுக்குக் கொண்டுட்டுப் போனாம்? நாம்ம விருத்தியூர்ல இருக்கம்மா! அம்மாம் தூரம் போயி நாம்ம வெவசாயத்தப் பாக்க முடியான்னு, அவனெ ஒத்த ஆளா இருந்து பாத்துக்கலாம்னு ஆசப்பட்டு செஞ்சிருக்காம். இத்து புரியாம கட்டாந்தரையில படக்குன்னு கால்ல வுழுந்த கணக்கா, அவ்வேம் பேச்சக் கேட்டுப்புட்டு செஞ்சிப்புட்டேம். நாஞ்ஞ அவ்வேம் கணக்குல வுழுந்து ஏமாந்தது இருக்கட்டும்டா! நீயும் போயி மாட்டிக்காதேடா! சூதானமா இரு!"ங்குது செயராமு பெரிப்பா.
            "அஞ்ஞ இருக்குறது யாருன்னே! ஒமக்குத் தங்காச்சி. நமக்கு யக்கா. அதெ ஏம் போயிண்ணே வேண்டாம்னுகிட்டு? நாம்ம வாணாம்ன்னு சொல்லி, அத்தாம் போயி அதெ அடிக்கிறதுக்கா?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அதெ வெச்சிக்கிட்டுதாம்டாம்பீ! அந்தப் பயலுவோ நம்மள மெரட்டிக்கிட்டு இருக்கிறது. அதுக அஞ்ஞ இல்லன்னா அந்த ரண்டு பயலுகளும் குடும்பம் நடத்த முடியா. ச்சும்மா பெனாத்துவானுவோ. அவனுங்களுக்கு ன்னா தெரியும்? ஒண்ணும் தெரியாத பயலுங்க! அதுக்கே இந்தப் போடு போடுறானுவோ! நாம்ம பாக்க காலுசட்டை கூட போட்டுக்கிடாம, மூக்கு ஒழுவி பயலுவோளா நின்னுட்டுக் கெடந்த பயலுவோ! இன்னிக்கு எங்கயிருந்த இந்த மவுசும், பவிசுக்கட்டையும் வந்துச்சாமா? நீயி சர்க்காரு உத்தியோகம் இல்லாம அத்தனை நாளு இருந்தீயே? அப்ப வந்து கேட்டாக்கா என்னவாக்கும்? இப்போ நீயி சர்க்காரு உத்தியோகத்துல இருக்கீயாம். அதாங் வந்து நிக்குறானுவோ பொறுக்கிப் பயலுக! ஏமாத்துக்கார பயலுவோடாம்பீ! சொன்னா ஒனக்குப் புரியாது. அனுபவப்பட்டவேம் நாம்ம. புரிஞ்சிக்கோ. புரிஞ்சி பதனமா நடந்துக்கோ!"ங்குது பெரிப்பா.
*****


No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...