செய்யு - 131
மணி பத்து, பதினொன்று என்று கடந்து பனிரெண்டை
நேருங்கி நிற்கிறது. இனியென்ன செய்வது என்று எல்லாருக்கும் யோசனையாக இருக்கிறது. ஆனது
ஆகி விட்டது! காலைச் சாப்பாடு அவ்வளவு மீந்து கிடக்கிறது. ராத்திரிக்கு இட்டிலிகளைப்
எப்படியாவது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசிக்கிறார்கள். இட்டிலியைப் பயன்படுத்திக்
கொள்ளலாம்! ஆனால் பொங்கலை? மனசு எல்லாருக்கும் பொங்கிக் கொண்டு வருகிறது. எத்தனை
நாட்கள் இப்படிப் பொங்கல் கூட இல்லாமல் பட்டினியாய்க் கிடந்திருப்போம் என்று எல்லாருக்கும்
ஆற்றிக் கொண்டு வருகிறது மனசு.
இப்போது இருக்கின்ற ஆறு பேர் வயிற்றிலும்
அத்தனைப் பொங்கலையும் திணித்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! வயிறு பொங்கிக்
கொண்டு வந்து விடாமல் எவ்வளவு பொங்கலைத் திணிக்க முடியும்? முக்கி முக்கித் தின்று
பார்த்தும் ரெண்டு வாளி பொங்கலில் கால்வாசிக் கூட காலியாகாமல் அப்படியே இருக்கிறது.
இனி மதியானச் சாப்பாட்டுக்கான ஏற்பாட்டைச் செய்வதுதாம் சரியானது என்கிறார் கோவிலான்.
சொன்னதுதாம் வேதவாக்கு என்பது போல சமையல் மாஸ்டர் அவர் பாட்டுக்குச் சமைத்துத் தள்ளி
மூன்று வட்டாவில் சாத வகையறாக்களோடு வந்து நிற்கிறார். காலையில் மீந்த சாப்பாடெல்லாம்
வட்டாவிலும், வாளியிலுமாக ஓரம் கட்டியாகிறது.
மதிய சாப்பாடும் அதே இருநூற்று ஐம்பது
பேரை ரவுண்ட் கட்டி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு நம்பிக்கை! மதியானத்துக்கு எப்படியும்
கூட்டம் வந்து அள்ளாமலா போய் விடும்? மதியத்துக்கு ஒரு நூறு பேர் சாப்பிட்டிருப்பார்கள்.
பாக்கி சாப்பாடு அப்படியே மறுபடியும் மீந்து போகிறது. கோவிலான் விழித்துக் கொள்கிறார்.
ராத்திரி சாப்பாட்டே வேண்டாம். காலை இட்டிலிகளை அப்படியே மறுபடியும் சுட்டுப் போடுவோம்
என்கிறார். விசயம் வெளியே தெரிந்தால் வருகின்ற இருபது முப்பது பேரும் மறுபடியும் கடைக்கு
வர மாட்டான் என்கிறார் நந்தகுமார். அரைத்து வைத்த மாவை என்ன செய்வது? என்று கேள்வி
எழுப்புகிறார் தமன்பிரகாஷ். மாவு ரொம்ப புளித்தால் தோசை போடலாம்? தோசை போடுவதற்கு
கல்? இப்படி யோசனை மேல் யோசனையாகப் போய்க் கொண்டிருக்கிறது.
இப்படியானால் எப்படி இருக்கும்?
மீந்த சாப்பாட்டை வெளியில் கொடுத்தால்
ஹோட்டலில் வியாபாரமாகவில்லை என்று பேராகி விடும் என்று பயம் காட்டுகிறார் கோவிலான்.
யாராவது நாலு பிச்சைக்காரர்களுக்குப் போட்டால்தான் என்ன என்கிறார் நந்தகுமார். பிச்சைக்கார
ஓட்டல் என்று பேர் வந்து விடும் என்று அதற்கும் பயம் கிளப்புகிறார் கோவிலான். கெளரவமாக
ஹோட்டல் நடத்துவது முக்கியம் என்கிறார் அதே கோவிலான். ஹோட்டல் அனுபவம் இல்லாததால்
லெனினோ, பூரணலிங்கமோ, விகடுவோ ஒன்றும் சொல்லாமல் நிற்கிறார்கள். ஆனால் லெனினுக்குள்
இப்படி ஒரு சுட்சுவேஷன் தனது படத்தில் வந்தால் அடுத்த சீனை எப்படி வைக்கலாம் என்பதாக
சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் விகடுவின் காதைக் கடிக்கிறார். விகடு இப்படி
சுட்சுவேஷன் வந்த படத்தை பாத்திருக்கிறானா என்று ஞாபகப்படுத்திப் பார்க்கிறான். அநேகமாக
இல்லை என்பது போலத்தான் தோன்றுகிறது. முடிவாக ஹோட்டலின் கெளரவம் என்ற கோவிலானின்
கருத்துக்கு மதிப்பளிப்பது என்று முடிவாகி, காலை, மதியம் என்று மீந்தச் சாப்பாட்டை
ஆறு பேரும் உண்டது போக எல்லாவற்றையும் சாக்கடையில் கொட்டி ஆகிறது. ஹோட்டலின் கெளரவத்தை
இப்படியாகக் காப்பாற்றி ஆகிறது.
ஏன் கூட்டம் குறைகிறது என்று மண்டையைப்
பிய்த்துக் கொள்ளாத குறைதான். மண்டையில் இருக்கு நான்கு முடிகளும் கொட்டி முழுமையாக
வழுக்கை ஆவதைப் போல மறுநாளுக்கு மறுநாள் என்று கூட்டம் குறைந்து கொண்டே போகிறதே
தவிர கூட மாட்டேன்கிறது. பத்து பேர், இருபது பேர் என்று சாப்பிட்டு விட்டுச் செல்கிறார்கள்.
இருபது பேருக்கும், முப்பது பேருக்கும் என்று ஐம்பது பேருக்குக் கம்மியாக மாஸ்டரிடம்
சமைக்கச் சொல்லவும் அலுப்பாக இருக்கிறது. மாஸ்டரும் ரெண்டு நாட்களாக பேசியபடி பைசாவை
வெட்டாத கடுப்பில் பேசுகிறார், "இந்தாரு! இவ்ளோ கம்மியா போட்டு அதுக்கு மாஸ்டர்
போட்டு சமைச்சீங்கன்னா அது ஒங்களுக்கும் கட்டுபடியாகாதுடி! சமைக்குற நமக்கும் கட்டுபடியாகாதுடி!
சாப்பிட கூட்டத்தை அதிகம் பண்ணு! இல்லாட்டி கடையை இழுத்து மூடுற வழியைப் பாரு!"
என்கிறார்.
பசி ருசி அறியாது என்பார்கள். அது ரூம்
வீட்டில் இருந்தவர்களைப் பொருத்த வரை உண்மையாகி விட்டது. சமையல் மாஸ்டர் எது சமைத்துப்
போட்டாலும் அது அவர்களுக்கு ஆகா, ஓகோ என்றிருந்திருக்கிறது. ஹோட்டலுக்குச் சாப்பிட
வருபவர்களுக்கு அது அப்படி இல்லாமலிருந்திருக்கிறது. கோவிலான் ஒரு நல்ல சமையல் மாஸ்டரைப்
பிடிப்பதில் தவறி விட்டார்.
அந்த மாஸ்டர் பொங்கலை அவர் கஞ்சி போல்
காய்ச்சி வைத்திருந்தார். இட்டிலி ஒரு நாள் மாவாக இருக்கிறது. மறுநாள் ரோட்டில் கிடக்கும்
கல் தோற்றுப் போய் விடும் போலிருக்கிறது. பிரிஞ்சி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம்
எல்லாம் தர தர தொர தொர ரகமாய் இருக்கிறது.
முதல் நாள் திறப்பு விழா என்பதால் சாப்பிட்டுப்
பொறுத்துக் கொண்டவர்கள் மறுநாளும் சாப்பாடு எல்லாம் அப்படியே இருக்க சொல்லாமல் கொள்ளாமல்
கடையை மாற்றிக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
மாஸ்டருக்கு அன்றன்றைக்குப் பைசா வெட்டாமல்
போனதில் அவரும் கழன்று கொள்கிறார். ஹோட்டல் ஆரம்பித்த ஐந்தாறு நாட்களிலேயே தள்ளாட
ஆரம்பிக்கிறது. "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பாக்குது!" என்று விக்ரமன்
படப் பாடல் ரேஞ்சுக்கு ஆரம்பித்த ஹோட்டல், "போனால் போகட்டும் போடா!"
என்ற சிவாஜிப் படப் பாடல் ரேஞ்சுக்கு வந்து நிற்கிறது.
ஹோட்டலை இழுத்து மூடி விடுவதுதாம் இந்த
நிலையிலிருந்து தப்பித்துக் கொள்வது சரியாகப் படுகிறது அனைவருக்கும். கோவிலானுக்கு
அப்படி விட மனசில்லை. அவர் இதற்காக வேலையை விட்டிருக்கிறார்.நல்ல வேளையாக வேறு யாருக்கும்
வேலை இல்லாததால் வேலையை விட முடியாமல் போயிருக்கிறது. இல்லையென்றால் கோவிலானுக்கு
நேர்ந்த கதிதான் எல்லாருக்கும் நேர்ந்திருக்கும். இந்த நிலைமையைச் சமாளிப்பதில் அவருக்குதான்
அதிகப் பங்கிருப்பது என்பது போல அவர் நடந்து கொள்கிறார். அவர் தானே முன்வந்து தானே
மாஸ்டர் இல்லாமல் அவரை விட பிரமாதமாகச் சமைத்துப் போடப் போவதாகச் சொல்கிறார். அதையும்தான்
பார்த்து விடுவோம் என்று தோன்றுகிறது ரூம் வீட்டுவாசிகள் எல்லாருக்கும்.
கோவிலானும் சமைத்துப் பார்க்கிறார். கோவிலானின்
சமையலால் மாஸ்டருக்குக் கொடுக்க வேண்டிய காசு மிச்சமாகிறதே தவிர, கூட்டம் திரண்டபாடில்லை.
கோவிலானின் சமையல் பசியோடு இருக்கும் ரூம்வாசிகளுக்குத் தேவாமிர்தமாய் இனிக்காத குறைதான்.
சாப்பிட வருபவர்கள்தான் என்னவோ வேப்பங்காயைக் கடித்து விட்டது போல முகத்தைச் சுளித்துக்
கொண்டு போகிறார்கள்.
ஆட்கள் படிப்படியாகக் குறைந்து ஆட்களின்
வரத்தே இல்லாமல் போவதற்கு முன்பாக ஹோட்டலை மூடி விடுவதுதான் உசிதமாகப் படுகிறது ரூம்வீட்டுவாசிகளுக்கு.
கடைசியில் அந்த தீர்மானமும் ஏகோபித்த ஆதரவுடன் செயல்முறைக்கு வருகிறது.
அதிகபட்சம் ரெண்டு வாரத்துக்குள் ஆரம்பித்த
ஹோட்டல் மூடுவிழா காண்கிறது. திறப்பு விழாவும், மூடு விழாவும் கண்ட ஒரு ஹோட்டல் கடையை
நடத்தி முடித்த பின் அந்த ரூம் வீட்டுவாசிகள் அதற்குப் பின் சம்பாதிப்பதற்கான வேறெந்த
சோதனை முயற்சியிலும் ஈடுபடாமல் எப்படிச் சம்பாதிப்பது என்பது பற்றி காரஞ சாரமாக விவாதிப்பதோடு
நிறுத்திக் கொள்கிறார்கள்.
கடையை இழுத்து மூடியாயிற்று. கடைக்கு கொடுக்க
அட்வான்ஸை வாங்க வேண்டுமே! லேசில் தர மாட்டேன்கிறார் அட்வான்ஸ் வாங்கியவர். பாதித்
தொகைதான் தருவேன் என்று மிரட்டுகிறார். பாதித் தொகையிலும் ஒரு மாத வாடகையைக் கழித்துக்
கொள்வேன் என்கிறார். வேண்டுமானாலும் அட்வான்ஸ் கழியும் அத்தனை மாதங்களுக்கும் கடையை
வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். நடையோ நடை என்று கொடுத்த அட்வான்ஸை வாங்குவதற்காக
அலைந்த அந்த முயற்சியில் கொடுத்த அட்வான்ஸை அரையும் குறையுமாக வாங்கிக் கொண்டு அவரவர்
வேலையை அவரவர்கள் பார்க்கிறார்கள்.
எல்லாருக்கும் மனசுக்குள் கொஞ்சம் வருத்தம்
இருந்தாலும் கங்கையம்மன் கோயில் தெரு வழியாக ஹோட்டல் வைத்த கடையைத் தாண்டிப் போகையில்
சிரிப்புதான் வருகிறது. சொல்லிச் சொல்லி சிரிக்கிறார்கள். "அட்ரா சக்கை! நாமளும்
ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சி நடத்திருக்கோம்!" என்று அதில் கொஞ்சம் பெருமிதம் வேறு.
ஆனால் காலக்கொடுமையை நீங்கள் பார்க்க வேண்டும்! அதே இடத்தில் அடுத்த மாதத்தில் இன்னொரு
குரூப் ஹோட்டல் ஹோட்டல் தொடங்கி சக்கைப் போடு போடுகிறது. அந்த ஹோட்டலில் கோவிலான்
வேலைக்கும் சேர்ந்து விட்டார். முதல் போட்ட வகையில் கோவிலான், நந்தகுமார், இதயச்சந்திரன்
மற்றும் தமன் பிரகாஷூக்கு இழப்புதான். அந்த இழப்பை அவர்கள் பல நாட்கள் சொல்லிப் புலம்பிக்
கொண்டிருக்கிறார்கள். விகடுவுக்கோ, லெனினுக்கோ, பூரணலிங்கத்துக்கோ இழப்பதற்கு இழப்பைத்
தவிர வேறு எதுவுமில்லை என்பதால் திறந்த ஹோட்டலைத் திறந்த வேகத்தில் மூடி விட்டோமே
என்பதற்காக மட்டும் கவலைபட்டுக் கொள்கிறார்கள்.
ஹோட்டல் திறந்து மூடியதைப் பற்றி ஒரு
கதை பண்ணி படம் பண்ண வேண்டும் என்கிறார் பூரணலிங்கம். அவரை ஆச்சரியத்தோடு பார்க்கிறான்
விகடு. இதுதான் இழப்பிலும் இருப்பைப் பார்ப்பதோ என்பதாக நினைத்துக் கொள்கிறான் விகடு.
"இந்தக் கதைய செகண்டாத்தாம் பண்ணணும்.
பர்ஸ்ட் கதெ பக்காவா ஒண்ணு வெச்சிருக்கேன்! கேட்குறீங்களா விகடு!" என்கிறார் பூரணலிங்கம்.
ரூம் வீட்டில் சமயத்தில் பொழுது போகவில்லை என்றால் இப்படி யாராவது கதை சொல்ல ஆரம்பித்து
விடுகிறார்கள், லெனினைத் தவிர. அவர் கதை சொல்ல மாட்டார். சொன்னால் அவரது கதையை யாராவது
திருடி விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு உள்ளூர இருக்கிறது. அவர் இதற்காகவே கதை எழுதிய
லாங் சைஸ் நோட்டை பெட்டியில் வைத்து பூட்டி வைத்திருக்கிறார். பூரணலிங்கம் அப்படியில்லை.
அவர் தன் கதையை கோடம்பாக்கம், வடபழனி, சூளைமேட்டு ஏரியாக்களில் மைக் வைத்து அனெளன்ஸ்
பண்ணாத குறையாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
அவ்வளவு நாட்கள் பூரணலிங்கத்தோடு இருந்து
அவர் கதையைக் கேட்காமல் இருப்பது அபூர்வம். இப்போதே விகடு வந்து நாட்கள் கடந்து நிறைய
கடந்திருக்கிறது. அந்த அபூர்வம் இதற்கு மேல் தாமதப்பட முடியாது என்பது போல நடக்க ஆரம்பிக்கிறது.
பூரணலிங்கம் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
*****