29 Jun 2019

ரோட்டுல ஒரு ஹோட்டல்!



செய்யு - 130
            'எல்லாரும் சேர்ந்து ஒரு ஹோட்டல் ஆரம்பித்தால் என்ன?' ரூம் வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் யோசிக்கிறார்கள்.
            முக்கியமாக சாப்பாட்டு பிரச்சனை தீர்ந்து விடுகிறது. மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிடலாம். எல்லாருக்கும் ஒரு வேலை கிடைத்தது போலாகி விடுகிறது. மொத்தம் ஏழு பேர் இருப்பதால் மாற்றி மாற்றி ஹோட்டலைப் பார்த்துக் கொள்ளலாம். மாற்றி மாற்றி பார்த்துக் கொள்வதால் அவரவருக்கு விருப்பமான சான்ஸ் தேடும் வேலைகளையும் பார்த்துக் கொள்ளலாம். இப்படியெல்லாம் நாலாபக்கமும் யோசனைகள் வந்து குவிகின்றன.
            இந்தக் கூட்டத்தில் ஓட்டலில் வேலை பார்க்கும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் கோவிலான். சமையல் வேலைகளுக்கான ஏற்பாடுகளை எல்லாம் பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார். இதற்காக வேலையை விட்டு விடவும் தயாராக இருக்கிறார்.
            எலெக்ட்ரிஷியனாக இருக்கும் நந்தகுமார் அவருடைய வேலையை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். மல்டி லெவல் மார்கெட்டிங்கில் இருக்கும் தமன்பிரகாசும் நந்தகுமார் சொன்னதற்கு அப்படியே டிட்டோ அடிக்கிறார். லெனினுக்கு இன்னும் சில வாரங்கள் வரை ஷூட்டிங் ஆரம்பிக்கப் போவதில்லை. லெனினுக்கும் இதில் எந்தப் பிரச்சனையுமில்லை. இதயச்சந்திரன் மட்டும்தான் ஷூட்டிங் போய்க் கொண்டிருந்தார். ஷூட்டிங் போய் விட்டு வந்து இரவு நேரங்களில் தன்னால் பார்த்துக் கொள்ள முடியும் என்பதாகச் சொல்கிறார். அத்தோடு கூடுதலாக ஷீட்டிங் இல்லாத நாட்களில் பகல் பொழுதுகளில் பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார். பூரணலிங்கம் எந்நேரமும் வாய்ப்புத் தேடும் படலத்தில் இருந்ததால் கிடைக்கும் இடைப்பட்ட நேரத்தில் சான்ஸ் தேடுவதைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார். விகடுவுக்கும் அப்படித்தான். அவனுக்கும் சான்ஸ் தேடும் வேலையைத் தவிர வேறு வேலை இல்லாததால் தானும் கிடைக்கும் நேரத்தில் அதைப் பார்த்தக் கொள்வதாகச் சொல்கிறான்.
            ஆர்வம் றெக்கைக் கட்டிப் பறக்காத குறை. இந்த நிமிஷமே ஆரம்பித்து விட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
            ஹோட்டல் ஆரம்பிப்பது என்று ஏகோபித்த ஒரு போர்க்கால நடிவடிக்கைகான முடிவாகி விட்டது. பைசா வேண்டுமே! லெனின், பூரணலிங்கம், விகடுவைப் பற்றிச் சொல்வதற்கில்லை. கையில் பைசா காசில்லாதவர்கள். உதயாவிடம் கணிசமாக தொகை இருந்திருக்க வேண்டும். தவிர மற்ற மூன்று பேரிடமும் கணிசமான தொகை இருக்கிறது. அவர்களிடம் இருந்த தொகையைக் கணக்குப் பார்க்கும் போது இருபதாயிரம் வருகிறது.
            பைசா போட்டவர்களும், பைசா போடாதவர்களும் எப்படி சமமான பங்குதாரர்களாக முடியும். அதனால், பைசா போட்டவர்களுக்கு லாபத்தில் பங்கு என்றும், பைசா போடாதவர்களுக்கு மூன்று வேளை சாப்பாட்டோடு, சம்பளமும் என்று முடிவாகிறது. அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வேலை பார்த்துக் கொள்ளலாம் என்பதும், யாருக்கேனும் முக்கியமான சான்ஸ் தேட வேண்டியிருந்தால் அதற்கு முக்கியத்துவம் தந்து அவரை அனுப்பி விட்டு மற்றவர்கள் கடையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத தீர்மானமாகிறது.
            பெரியார் பாதையிலிருந்து வலது புறத்தில் பிரியும் கங்கையம்மன் கோயில் தெருவில் இருந்த ஒரு கடையை வாடகைக்குப் பிடித்தாகிறது. நூறு அல்லது நூற்றைம்பது சதுர அடிக்கு மேல் இருக்காது. அட்வான்ஸ் பதினைந்தாயிரம். மாதா மாதம் ஆயிரத்து ஐநூறு வாடகை கொடுக்க வேண்டும் என்று பேசி முடிவாகிறது. இடம் என்றால் பார்த்தால் ஆட்கள் கூடும் முக்கியமான இடம்தான். எல்லாம் யோசித்து முடித்த ரெண்டே நாட்களில் ஒரு புதிய நட்சத்திரம் உதயமாவது போல ஹோட்டல் ஆரம்பமாகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
            முதலில் வாடகைக்குப் பாத்திரங்களை எடுத்துக் கொள்வோம் என்கிறார் கோவிலான். வாடகைக்கு மூன்று வட்டாக்கள், பெரிய இட்லி பானை, நான்கு வாளிகள், தண்ணீர் பிடித்துக் கொள்ள ஒரு பேரல் எல்லாம் வண்டியில் வந்து கோவிலானின் ஏற்பாட்டில் இறங்கியாகிறது. தட்டுகள், டம்ப்ளர்கள் எல்லாம் ப்ளாஸ்டிக்கில் வாங்கிப் போட்டாகிறது. எல்லாம் ஓட்டலில் வேலை ‍அனுபவத்தால் கோவிலான் பக்காவாக முடிக்கிறார். தன்னுடைய யோசனையால் எல்லாம் எவ்வளவு சீப்பாக முடிகிறது என்பதை கோவிலான் அடிக்கடிக் கோடிட்டுக் காட்டிக் கொண்டு பெருமை பேசிக் கொள்கிறார். மற்றவர்களுக்கும் அது பெருமையாகத்தான் இருக்கிறது. இல்லையென்றால் போட வேண்டிய முதலின் அளவு அதிகமாகத்தான் ஆகி விடும் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
            கோவிலானின் திட்டப்படி சமைப்பதற்கு ஒரு மாஸ்டர் பிடித்தாகிறது. அவருக்கு அன்றன்றைக்குச் சமைப்பதற்கு ஏற்றாற் போல பைசா வெட்டியாக வேண்டும் என்று ஒப்பந்தமாகிறது. காலையில் இட்டிலி, பொங்கல் அதற்கு சட்டினி, சாம்பார், துவையல். இதுதான் காலைச் சாப்பாடு. மதியத்துக்கு பிரிஞ்சி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம். இரவுக்கு இட்டிலி அதற்கு சட்டினி, சாம்பார், துவையல் மட்டும்தான். போகப் போக வெரைட்டிகளை அதிகமாக்கிக் கொள்வது என்று திட்டம் தூள் பறக்கிறது.
            மாஸ்டர் சமைக்க வேண்டியதைச் சமைத்து வைக்கிறார். அதை கடையின் முன்பு வைத்துக் கொண்டாகிறது. சாப்பிட வருபவர்கள் கடைக்கு வெளியே அப்படியே நின்று கொண்டுதான் சாப்பிட வேண்டும். கையேந்தி பவன் என்று இதைச் சென்னையில் சொல்வார்கள். இந்தக் கையேந்தி பவனை ஆனந்த பவன் அளவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று எல்லாருக்கும் விக்ரமன் பட ரேஞ்சுக்கு கண்ணில் கனவு முட்டுகிறது. வாயில் விக்ரமன் படப்பாடல்கள் ஒவ்வொன்றாய் வந்து கதவைத் தட்டுகிறது. பாட்டைத் தங்களையும் அறியாமல் முணுமுணுத்துக் கொள்கிறார்கள்.
            சாப்பிட வருபவர்களுக்கு ப்ளாஸ்டிக் தட்டில் சதுரித்த பாலிதீன் தாளைப் போட்டு கேட்பதை வைத்து அதற்குரிய தொடு வகைகளை வைத்துக் கொடுக்க முதல் நாள் ஹோட்டல் ஆரம்பமாகிறது. ஏழு பேரும் தங்களுக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பார்க்காமல் ஏரியாவையே சலம்பி விட்டதில் கூட்டம் என்றால் தாங்க முடியாத கூட்டம். ஐம்பது அறுபது பேருக்கு மேல் நிற்கிறார்கள். அந்தக் கடைக்கு அது அதிகமான கூட்டமாகப் படுகிறது. காலை ஆறு மணிக்கு திறந்த கடையில் சாப்பிட வந்தவர்களுக்கு கேட்டதை எடுத்துக் கொடுக்க ஏழு பேராலும் முடியவில்லை. கூட்டம் அள்ளுகிறது. சமைத்ததெல்லாம் ஏழு மணிக்கே காலியாகி விடுகிறது. எல்லாருக்கும் சந்தோஷம் என்றால் அப்படி ஒரு சந்தோஷம்.  
            மதியத்துக்கும் கணிசமான கூட்டம்தான். சமைத்ததெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு எல்லாம் காலி. இரவும் கூட்டம் பரவாயில்லை. வேலை ஒன்றும் அதிகமாக இல்லை. ஓட்டலில் வேலை பார்த்த அனுபவத்தில் கோவிலான் கோயம்பேடு போய் காய்கறிகளை வாங்கிக் கொண்டு அப்படியே மளிகை சாமான்களோடு வந்து விடுகிறார். இருக்கின்ற எல்லாரும் மாஸ்டர் சொல்கிறபடி காய்கறிகளை அரிந்து கொடுத்து சில்லுண்டி வேலைகளைப் பார்த்தால் அவர் சமையலை முடித்து விடுகிறார். அதற்குப்புறம் சாப்பாட்டை எடுத்துக் கொடுக்க வேண்டியதுதான்.
            சாப்பிட்டு முடித்தவர்கள் மேலிருக்கும் பாலிதீன் தாளை அப்படியே எடுத்து ஓரத்தில் வைத்திருந்த தொட்டியில் போட்டு விட்டு தட்டை அப்படியே ஓரமாக வைத்து விட்டு, பேரலில் ப்ளாஸ்டிக் தம்பளரில் தண்ணீரை மோண்டு கையை அலம்பி விட்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள். கோவிலானின் ஏற்பாட்டின் படி பாத்திரங்களை அலம்பித் தருவதற்கென்று ஒரு பெண்மணியைப் போட்டாயிற்று. அந்த பெண்மணிக்கும் அன்றன்றே பைசா வெட்டியாக வேண்டும் என்பது ஒப்பந்தம். அதிகபட்சம் அன்று மூன்று மணி நேரமோ அல்லது நான்கு மணி நேரமோ வியாபாரம் பார்த்திருந்தால் அதிகம். இவ்வளவு எளிமையாகச் சம்பாதிக்க முடியுமா என்று எல்லாருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
            முதல் நாள் வியாபாரத்தில் கணக்குப் பார்த்தால் நல்ல லாபம்தான். செலவு எல்லாம் போக, மாஸ்டருக்கும், பாத்திரம் அலம்பும் பெண்மணிக்கும் அன்றைய கணக்கை வெட்டியது போக அறுநூற்று ஐம்பது ரூபாய்க்கு மேல் லாபம் நிற்கிறது. எப்படியும் மூன்று வே‍ளைகளுக்கும் கணக்குப் பார்த்தால் நானூறு, ஐநூறு பேருக்கு மேல் சாப்பிட்டு இருப்பார்கள். இனிமேல் வேளைக்கு நூறு சாப்பாடு, நூற்றம்பைது என கணக்குப் பார்த்துப் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது என்கிறார் நந்தகுமார். இனி ஆயிரம் ஐநூறுதான் என்று ஆர்வ மிகுதியில் பேசுகிறார் தமன்பிரகாஷ். அதில் ஆயிரமா? ஐநூறா? என்று விவாதமே கிளம்புகிறது. சாப்பாடு விற்று ஆகி விட்டது என்பதால்தானே ஒரு மணி நேரத்துக்கு அப்புறம் வந்தவர்களையெல்லாம் திருப்பி அனுப்ப வேண்டியதாகி விட்டது. ஆகவே ஆயிரம் போட்டால் அத்தனையும் காலியாகி விடும் என்று ஒரு பக்கம் சிலர் பேசுகிறார்கள். சமயத்தில் கூட்டம் வராமல் போய் விட்டால் சங்கடமாகி விடும் என்பதால் முந்நூறோ, நானூறோ போதும் என்று இன்னொரு பக்கம் சிலர் பேசுகிறார்கள். சரி ஆயிரமும் வேண்டாம், முந்நூறும், நானூறும் வேண்டாம் வேளைக்கு இருநூற்று ஐம்பது  போட்டுப் பார்ப்போம் என்று முடிவாகிறது.
            காலைச் சாப்பாடு பொங்கலும், இட்டிலியும் இருநூற்று ஐம்பது பேர் அளவுக்கு போட்டாகிறது. "கூட்டம் கும்மப் போவுது. நேத்திக்கு மாரி சாப்பாடு ல்லாம ஆளுங்க திரும்புனா கூட்டம் பெறவு வாராது!" என்கிறார் தமன்பிரகாஷ்.
            "நேத்தி மாரி ஆளாளுக்கு சாப்பாட எடுத்துக் கொடுத்து காச வாங்க வாணாம். எங்கிட்ட சாப்பாட சொல்லுங்க. பக்கவா எடுத்துத் தர்றேன். தமனு நீங்க கல்லாவுல நில்லுங்க. பைசா வாங்கிப் போடுங்க. நந்து, லெனின், பூரணம் மூணு பேரும் சாப்பாட்ட வாங்கிக் கொடுக்கட்டும்." என்கிறார் கோவிலான். "இந்த ஏற்பாடு நன்றாக இருக்கிறது. நேற்றே இதைச் செய்திருக்க வேண்டும். பரவாயில்லை அது தொடக்கவிழா. அப்படித்தான் இருக்கும். இதுதான் சரி. இன்றிலிருந்து இப்படித் தொடங்குவதுதான் சரி!" என்கிறான் விகடு. கோவிலானுக்கு பெருமிதத்தால் கண்கள் பனிக்கிறது. இதயம் இனிக்கிறது.
            நேற்று போல் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வரவில்லை. ஒருவர் இருவராக வருகிறார்கள். நேற்று ஏழு மணிக்கெல்லாம் முடிந்த சாப்பாடு பத்து மணி ஆகிறது. இன்னும் முடிந்த பாடில்லை. அறுபது எழுபது பேருக்கு மேல் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். ஆட்கள் வராமல் சும்மாவே நிற்பது அலுப்பாய் இருக்கிறது எல்லாருக்கும்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...