செய்யு - 129
சூளைமேட்டு ரூம்வீட்டில் வாடகை எதுவும்
கொடுக்காமல் பசியும் குடித்தனம் செய்து கொண்டிருக்கிறது. எந்நேரமும் ஆற்ற முடியாத
பசி வயிற்றில் நிலை கொண்டிருக்கிறது. எவ்வளவு சாப்பிட்டாலும் அந்தப் பசியை ஆற்ற முடியாது
என்ற பிரமை தட்டிக் கொண்டிருக்கிறது. லெனின் சென்னைக்கு வந்த போது சில நாட்கள் யோசனைப்
பண்ணி பார்த்து விட்டு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்து விட்டதைப் பற்றிச் சொல்கிறார்.
வேறெந்த வேலையை விடவும் சென்னைக்கு வந்தவர்கள்
ஹோட்டலில் வேலைக்குச் சேர்வதன் செளகரியமாக இரண்டு இருப்பதைப் பற்றி அடுக்குகிறார்.
முதல் செளகரியம் மூன்று வேளைக்கும் சாப்பாடு கிடைத்து விடும். இரண்டாவது செளகரியம்
தங்குவதற்கு ஹோட்டலில் இடமும் கிடைத்து விடும். சென்னையில் இந்த இரண்டும்தான் மிகப்
பெரிய பிரச்சனை. இந்த இரண்டையும் சமாளித்து விட்டால் சென்னையைப் போன்ற சொர்க்கபுரி
எதுவுமில்லை என்று சொல்லிக் கொண்டே போகிறார்.
அதுசரி! அப்புறம் ஏன் லெனின் ஹோட்டல்
வேலையைத் தொடரவில்லை என்று கேட்க நினைக்கிறான் விகடு. கேட்காமலே உட்கார்ந்திருக்கிறான்.
அதைப் புரிந்து கொண்டதைப் போல லெனினே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
"ஓட்டல்ல வேல பாத்தப்ப நல்லாத்தாம் இருந்துச்சி. ன்னா ஒரு பெரச்சினைனா அதத் தவிர
வேற வேலயையே பாக்க முடியாது. எனக்கு இப்படி ஒரு ஆறு மாசம் போயிடுச்சி. எதுக்கு வந்தேனோ
அத வுட்டுட்டு இப்படி பசி தாங்க முடியாம ஓட்டல் வேலய பாத்துட்டு இருக்குறனேன்னு தோணுது.
மூணு வேளையும் சாப்பாடு செர்வ் பண்ணி வேல பாத்ததான் ஒட்டல்ல சாப்பாடு, ஓட்டல்ல இடங்றானுவோ.
பார்ட் டைமா வேல பாக்கணும்னா வெளியில தங்கிக்கணும், சாப்பிடணும்னா காசு கொடுக்கணுங்றானுவோ.
அவனுங்க கொடுக்குற காசுக்கு அவனுவோ ஓட்டல்ல சாப்புட்டா அதுலயே கால்வாசி காசு போயிடும்.
மிச்ச காசுல ரூம் வாடக, மத்த செலவுகள சமாளிக்கிறது ம்ஹூம்! பாத்தேன். பசியத் தாங்கிக்கிறதுன்னு
முடிவு பண்ணிட்டு அலய ஆரம்பிச்சேன். வேற வழியில்ல. ஆனா பெஸ்ட்டு என்னான்னா ஓட்டல் வேலதான்.
சென்னைல ஒருத்தன் பொழைக்கணும்னு நெனச்சா ஓட்டல் வேலைக்குச் சேந்துடணும்! சாப்பாடு
பெரச்சனையும் தீந்துடும். தங்குற பெரச்சனையும் தீந்துடும்."
லெனின் அந்த ஓட்டல் வேலைக்குப் பிறகு வேறு
எந்த வேலையிலும் சேரவில்லை என்கிறார். பசியினால் மனுஷன் செத்துட மாட்டான்ங்றார். இந்தப்
பசியைத் தாங்க தாங்கத்தான் வைராக்கியம் வளரும்ங்றார். வைராக்கியம் வளரலாம். உடம்பு
வளராது. ஏற்கனவே இருந்த உடம்பு சுருங்கிப் போவதோடு, குட்டையாகப் போவது போல ஒரு
தோற்றம் உண்டாகிறதே என்று நினைத்துப் பார்க்கிறான் விகடு. அப்படியென்ன உடம்பை வருத்திக்
கொண்டு, வதைத்துக் கொண்டு ஓர் லட்சியம் என்று நீங்கள் கேட்கலாம். அப்படிப்பட்ட லட்சிய
புருஷர்கள்தான் இந்தக் கோடம்பாக்கம், வடபழனி, சூளைமேடு முழுவதும் தங்கியிருக்கிறார்கள்.
எவ்வளவு பசியென்றாலும் கோடம்பாக்கம்,
வடபழனி என்று சுற்றி ஒரு ரவுண்ட் அடித்தால் ஏதேனும் ஒரு டீக்கடையில் சினிமா கூட்டம்
தட்டுபட்டு விடும். சினிமாவில் சான்ஸ் தேடுகிறவன் என்பதை மூஞ்சை வைத்தே கண்டுபிடித்து
விடுவார்கள். "வாங்க பாஸூ! பாத்துக்கலாம். நமக்குன்னு ஒரு டைம் வராமலா போயிடும்?
இன்னிக்கு சினிமாவுல இருக்குற அத்தனை பேரும் நம்மள மாரி கஷ்டப்பட்டவனுங்கதாம்! இந்த
எல்லா கஷ்டமும் நாம்ம பண்ணப் போற சினிமாவுக்கான கதை!" என்ற பொதுவான வசனத்தைப்
பேசி விடுகிறார்கள். அப்படியொரு கூட்டம் இங்கே ரொம்ப அதிகமாகத்தான் படுகிறது.
அந்தக் கூட்டத்தில் யாரோ ஒரு கையில் எப்படியும்
கொஞ்சம் பணம் இருக்கும். யாரிடம் பணம் இருந்தாலும் டீ வாங்கிக் கொடுப்பதற்கு மட்டும்
யோசிக்க மாட்டார்கள். என்ன கொஞ்ச நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் தங்கள் கதைகளை வரிசையாக எடுத்து விடுகிறார்கள். நம் பங்குக்கு நாமும்
நம் கதையை எடுத்து விட வேண்டியதாக இருக்கிறது. அப்புறம், ஒரு டீ அடித்து விட்டு வந்து
விடலாம். ரெண்டு டீ லட்சியத்தோடு ஏரியாவையே சல்லடை போட்டு சலிப்பது போல ஒவ்வொரு
டீக்கடையாய் அஞ்சாறு கிலோ மீட்டருக்கு நடந்தால் ஒரு டீ நிச்சயம். நம்முடைய கூட்டம்
கண்ணில் தட்டுப்பட்டு விடும். அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லாம் அசிஸ்டெண்ட்
டேரக்டர்களாக இருக்கிறார்கள். விகடு மட்டுந்தான் பாடலாசிரியர் என்ற தேடலில் இருக்கிறான்.
அவர்கள் இவனையும் முயற்சி செய்து அசிஸ்டெண்ட் டேரக்டர் பக்கம் இழுக்கிறார்கள்.
"அசிஸ்டெண்ட் டேரக்டராகிட்டு கூட பாட்டு எழுதிக்கலாம் பாஸூ!" என்கிறார்கள்.
அதற்கு என்னவோ மிக எளிமையாக வாய்ப்புக் கிடைத்து விடுவதைப் போல, தனக்கு அதெல்லாம்
வராது என்பது போல விகடு விலகிக் கொள்கிறான்.
இங்கே தொடர்புகள், பழக்கங்கள் எல்லாம்
அதிகமாகத்தான் இருக்கிறது. நாளைக்கே ஏன் அடுத்த நொடியே வாய்ப்பு கிடைத்து விடும் என்பதாகத்தான்
பேசிக் கொள்கிறார்கள். ஆனால் வாய்ப்பு கிடைக்க வேண்டுமே! வாய்ப்பு கிடைக்கும் ஒரு
சிலர் பேர் மட்டுமே சரசரவென்று முன்னேறிப் போகிறார்கள். வாய்ப்பு கிடைக்காத பலபேர்
அப்படிப் போகின்ற அவர்களைப் பார்த்துக் கொண்டே நமக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வரப்
போவதாக நம்பிக் கொண்டே வாழ்ந்து விடுகிறார்கள். வாழ்ந்து விடுகிறார்கள் என்பது சரியா
என்று கேட்டால், வாழ்ந்து முடித்தே விடுகிறார்கள் என்பதுதான் சரியாக இருக்கும்.
ரூம் வீட்டில் இருந்த பூரணலிங்கத்துக்கு
எப்படியும் வயது முப்பத்தைந்துக்கு மேல் இருக்கும். டேரக்டராகித்தான் கல்யாணம் என்கிறார்.
வீட்டில் பெண் பார்த்து சோர்ந்து போய் கிடக்கிறார்கள்.
லெனினுக்கு வயது முப்பதை நெருங்கும். வீட்டில்
பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லெனினைக் கேட்டால் டேரக்டராகித்தான் கல்யாணம்
என்பதில்லை, ஆனால் நிலையான வருமானம் வர்ற அளவுக்கு அசிஸ்டெண்ட் டேரக்டர்லயே ஒரு இடத்தைப்
பிடித்து விட்டுதான் கல்யாணம் என்கிறார்.
இதயச்சந்திரனுக்குப் பெண் பார்த்து விட்டார்கள்.
கல்யாணம் கூடிய சீக்கிரத்தில் இருக்கும். அவர் ஒருவர்தான் தொடர்ச்சியாக அசிஸ்டெண்ட்
டேரக்டராக சீரியலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் என்ன சம்பாதிக்கிறார்
என்பதும் புரியாமல்தான் இருக்கிறது. ஒருநாள் கைமாத்தாக விகடுவிடம் நூறு ரூபாய் கேட்ட
போது விகடுவும் குழம்பிப் போகிறான். அவர் என்ன சம்பாதித்தாலும் அவர் ஊதித் தள்ளும்
சிகரெட்டுக்கு அதெல்லாம் பத்தாது என்பதாக நினைத்துக் கொள்கிறான் விகடு.
ஆரம்பத்தில் லெனினும், இதயச்சந்திரனும்
ஒன்றாகத்தான் வாய்ப்பு தேடியிருக்கிறார்கள். ரெண்டு பேரும் ஒன்றாகப் போய் நிற்பதால்தான்
யாரோ ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பு ரெண்டு பேருக்கும் கிடைக்காமல் போய்
விடுகிறது என்ற நினைப்பு அவர்களுக்கு வந்திருக்கிறது. பிரிந்து விட்டார்கள். பிரிந்ததும்
ரெண்டு பேருக்கும் சான்ஸ் கிடைத்திருக்கிறது. அதிலிருந்து அவர்களிடம் தொழில்முறை பிரிவு
தொடர்கிறது. ரூம் வீட்டில் ஒன்றாக இருந்தாலும் அவர் விசயத்தை இவர் பேசுவதில்லை. இவர்
விசயத்தை அவர் பேசுவதில்லை என்றாகி விட்டது. மற்றபடி பேசிக் கொள்வார்கள், சாப்பிட்டாச்சா?
டீ குடிச்சாச்சா? குளிச்சாச்சா? இன்னிக்கு எங்க ஷீட்டிங்? என்பது போல.
இதயச்சந்திரன் ஒரு சில நாட்கள் அவரது ஷீட்டிங்
நடைபெறும் இடத்திற்கு சில நாட்கள் விகடுவை அழைத்துச் செல்கிறார். அது போன்ற நாட்கள்
அமைந்த விட்டால் கொண்டாட்டம்தான். பெரும்பாலும் ஷூட்டிங் ஏ.வி.எம். ஸ்டூடியோவில்தான்
நடக்கிறது. உள்ளே போய் விட்டால் சாப்பாட்டுக்குப் பஞ்சம் இருக்காது. டீ, காபி, பால்
என்று இஷ்டத்துக்கு வாங்கிச் சாப்பிடலாம். சிகரெட்டு புழக்கத்துக்கும் பஞ்சம் இருக்காது.
அதற்காகவே தனக்கு ஷூட்டிங் இல்லாத நாட்களிலும் இதயச்சந்திரன் போகிறார். இதயச்சந்திரன்
விகடுவை அது போன்ற நாட்களில்தான் அழைத்துச் செல்கிறார். அதுவும் அவருக்குத் தோன்றினால்.
அவர் ஏன் ஷீட்டிங் இருக்கும் நாட்களில் அழைத்துச் செல்ல மாட்டேன்கிறார் என்று யோசிக்கிறான்
விகடு. எப்படி அவர் வேலை பார்க்கிறார் என்பதைப் பார்க்கலாமே என்று விகடுவுக்கு ஆசை
எழுகிறது. தன்னை அப்படி ஒரு நாளில் அழைத்துச் செல்லுமாறு விகடு கேட்டுப் பார்க்கிறான்.
இதயச்சந்திரன் அந்த விசயத்தில் ம்ஹூம் ம்ஹூம்தான். இந்த ஒரு விசயம்தான் புரிய மாட்டேன்கிறது
என்று இதயச்சந்திரனைக் கேட்டுப் பார்க்கிறான் விகடு. அவர் சிகரெட்டைப் பற்ற வைத்துக்
கொண்டே சிரிக்கிறாரே தவிர பதில் சொல்ல மாட்டேன்கிறார்.
ஒரு வார்த்தை லெனினிடம் கேட்டுப் பார்க்கிறான்
விகடு. அவர்தான் விளக்கம்சொல்கிறார். "அத மட்டும் செய்யமாட்டோம் விகடு. நாங்க
அங்க டேரக்டர்ட்ட படுற பாட்ட பார்த்தா அதுக்கப்புறம் நீங்க எங்கள மதிக்கவே மாட்டீங்க.
அவ்ளோ கேவலமா பேசுவானுங்க. திட்டுவானுங்க. சமயத்துல செவுட்டு அறை வாங்குறதும் உண்டு.
உங்கள கூப்பிட்டு வெச்சிட்டு நாங்க அவனுங்ககிட்ட திட்டு வாங்க முடியுமா? செவுட்டு அறை
வாங்க முடியுமா?"
அதைக் கேட்டு விட்டு, "ஏன் ஐயா? இப்படி
திட்டும், செவுட்டு அறையும் வாங்கிக் கொண்டு இப்படி ஒரு வேலை பார்க்க வேண்டுமா?"
என்கிறான் விகடு.
"ந்நல்லா கேட்டீங்க பாருங்க ஒரு கேள்வி!
இத சுத்திலும் பாத்துட்டு இவ்வேம் எப்போ வெளில போவாம், உள்ள நாம்ம எப்ப நுழையலாம்னு
பத்துப் பாஞ்சி பேராவது காத்திட்டு நிப்பானுங்க பாருங்க! இங்க இப்படித்தான்! எடம் எப்போ
காலியாகும்? நாம்ம எப்போ பந்தில உக்காரலாம்னு இருப்பானுங்க!" என்கிறார்.
இதயச்சந்திரனோடு போகும் நாட்களில் இன்னொரு
நன்மையும் கிடைக்கத்தான் செய்கிறது விகடுவுக்கு. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பத்தாத போது
இவனையும் கூப்பிட்டு நிறுத்திக் கொள்கிறார்கள். அதில் பெரும்பாலும் கூட்டத்தோடு கூட்டமாக
ஒரு ஆளாக சேர்த்துக் கொள்கிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொள்ள வேண்டும்.
அல்லது உட்கார்ந்து கொள்ள வேண்டும். டயலாக்குகள் எதுவும் இருக்காது. ஆனால் நாள் பூராவும்
உட்கார வைத்து விடுகிறார்கள் அல்லது நிற்க வைத்து விடுகிறார்கள். அப்படி நாள் முழுக்க
உட்கார அல்லது நிற்க வைத்து எடுத்த அதை நீங்கள் நான்கைந்து நொடிகளுக்குத் திரையில்
பார்த்தால் அரிது. அதற்கு ஷீட்டிங் முடியும் போது நூறு ரூபாய் கொடுக்கிறார்கள். சாப்பாடும்
போட்டு, டீ, காபி, பால் இதில் வேண்டியதை இஷ்டத்துக்குக் குடிக்க வாய்ப்பும் கொடுத்து
நூறு ரூபாய் என்றால்... நன்றாகத்தான் இருக்கிறது விகடுவுக்கு. ஆனால், இப்படி ஒரு ஷூட்டிங்
எப்போதும் வர வேண்டுமே! சில நாட்கள் ஷூட்டிங்தான் அப்படி இருக்கிறது. மற்றபடி ரெண்டு
பேரோ, மூன்று பேரோ அல்லது நான்கைந்து பேரோ பேசிக் கொண்ட்டே... இருக்கிறார்கள்,
திட்டிக் கொண்ட்டே... இருக்கிறார்கள், அழுது கொண்ட்டே... இருக்கிறார்கள், அவர்களின்
முகத்துக்கு நேரே க்ளோஸ்அப்பில் கேமரா போய்க் கொண்டிருக்கிறது அல்லது லாங் ஷாட்டில்
கேமரா போய்க் கொண்டே இருக்கிறது. இதில் டேக் சரியாக வராவிட்டால், அவர்கள் அந்த கொண்ட்டேவைக்
கொண்ட்ட்ட்ட்ட்டேதான் இருக்க வேண்டும். இப்படித்தான் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.
இதயச்சந்திரன் விகடுவைப் புரிந்து கொண்டது
போலச் சொல்கிறார். "இந்தாருங்க விகடு! ஒங்கள அழச்சிட்டுப் போகணும்னு நெனக்கிறது
புரியுது. கூட்டத்தோடு கூட்டமா நின்னு நூறு ரூபாய் சம்பாதிக்கிறதுலயே நின்னுடுவீங்க
போலருக்கு. இஞ்ஞ அப்படி நின்னுப் போனவங்க நெறய பேரு. அப்படியே நின்னு போயிட வேண்டியதுதாம்.
அதுக்கு மேல வளர விட மாட்டாங்க. இப்படின்னு ஆளு சேக்கறதுக்கு, சேரறதுக்குன்னு இஞ்ஞ
ஒரு கூட்டமே இருக்குன்னு சொன்னா நம்ப மாட்டீங்க! அதனால இனுமே நம்ம கூட ஷூட்டிங் வாராதீங்க!
போயி சான்ஸ் தேடுற வழியப் பாருங்க!" என்கிறார்.
*****
No comments:
Post a Comment