27 Jun 2019

முதலில் கேட்ட ஹம்!



செய்யு - 128
            உடம்பு தேறியதும் விகடு ஒவ்வொரு ஆபீஸாக ஏறி இறங்குகிறான். டேரக்டர் வீடு, மியூசிக் டேரக்டர் வீடு, ஆபீஸ் என்று ஏறி இறங்குகிறான். ரூமில் இதற்கென மணிமேகலைப் பிரசுரத்தின் ஒரு புத்தகம் லெனினின் பெட்டியில் இருந்தது. அதில் எல்லா சினிமா பிரபலங்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள் இருந்தன. லெனின் சென்னைக்கு வந்தப் புதிதில் முகவரிகள் தெரியாமல் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார். அப்போது யாரோ ஒருவர் இந்தப் புத்தகத்தைச் சொல்லியிருக்கிறார்கள். லெனின் மணிமேகலைப் பிரசுரத்தின் முகவரியை விசாரித்துக் கொண்டு நடந்தே சென்று வாங்கி வந்த புத்தகம் அது. அதை ஒரு பொக்கிஷம் போல வைத்திருப்பார் லெனின். முகவரிகள் வேண்டும் என்று புத்தகத்தைக் கேட்டால் ஒரு பொக்கிஷத்தை எடுத்து கொடுப்பத போல கொடுப்பார். அதைப் பார்த்து தேவையான முகவரிகளை எழுதிக் கொண்டு ஆன பின் பொக்கிஷத்தைத் திருப்பிக் கொடுப்பது போல கொடுத்து விட வேண்டும்.
            டேரக்டர்கள், மியூசிக் டேரக்டர்களைப் போய் பார்த்தாலே வாய்ப்பு கிடைத்து விடும் என்று நினைத்துக் கிடக்கிறான் விகடு. அவர்களைப் போய்ப் பார்க்கும் போதுதான் கண்ணில் ஒரு நொடி அவர்களைப் பார்ப்பதே பெரும்பாடு என்று புரிகிறது. இப்படி கோடம்பாக்கம், விருகம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம் என்று சுற்றிச் சுற்றிக் கிடக்கிறான். எங்கு போனாலும் நடைதான். பஸ்ஸில் போனால் ஒன்றரை ரூபாய் அல்லது ரெண்டேகால் ரூபாய் டிக்கெட் அப்போது. அதைச் சேர்த்து வைத்தால் டீ குடிக்கலாம் அல்லது ஒரு வேளைக்குச் சாப்பிடலாம் என்ற கணக்குதான் அவனுக்குள் ஓடுகிறது. பஸ்ஸில் போக மனசு வர மாட்டேன்கிறது. அதனால் எங்கு சென்றாலும் நடைதான். சூளைமேட்டிலிருந்து தினமும் தி.நகருக்கு நடந்து செல்வதெல்லாம் அவனுக்குச் சர்வ சாதாரணமாகி விட்டது.
            சாலிகிராமத்தில் அப்போது படம் எடுத்து பிரபலமான ஒரு இயக்குநரைப் போய் பார்த்தால் வாய்ப்பு கிடைக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள். இப்போதும் அவர் பிரபலமான இயக்குநரே. புதிதாக வருபவர்களுக்கு அவர் வாய்ப்பு தருகிறார் என்று விகடுவை ரூம் வீட்டில் இருந்தவர்கள் ஏற்றி விடுகிறார்கள். காலையிலேயே அவரைப் பிடித்த விட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். விகடு நம்பிக்கையோடு கிளம்புகிறான். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி நடந்து ஆறரை மணிக்கெல்லாம் சாலிக்கிராமத்தில் அந்த டேரக்டரின் வீட்டின் முன்னால் நின்றால்... கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம் திருவிழா கூட்டம் போல. எல்லாரும் அந்த டேரக்டரிடம் வாய்ப்பு கேட்க வந்தவர்கள். வெளியே செக்கியூரிட்டி நின்று கொண்டு யாரையும் உள்‍ளே விட மாட்டேங்றார்.
            வந்தவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்கள். அதில் ஓர் ஆசாமி விகடுவிடம் பேசுகிறான். "நான் சார்ட்ட அஸிஸ்டண்ட் ஆகணும்னு ஒரு மாசமா வந்துட்டு இருக்கேன்! நீங்க எத்தனை நாளா வந்துட்டு இருக்கீங்க?" என்கிறான். ஆள் பார்ப்பதற்கு கர்லிங் முடியோடு நான்கு ஆட்களை அடிக்கும் அளவுக்கு ஆஜானுபாகுவாய் இருக்கிறான். மஞ்சள் டீ சர்ட், ப்ளூ ஜீன்ஸோடு வெள்ளை ஷூ போட்டிருக்கிறான். இது நாள் கணக்கில் வந்து பார்க்க வேண்டிய சமாச்சாரம் போலிருக்கிறதே என தயங்கிய விகடு சொல்கிறான், "இன்றுதான் ஐயா வருகிறேன்! நான் உதவி இயக்குநர் வாய்ப்பிற்காக வரவில்லை. பாடல் ஆசிரியர் வாய்ப்பிற்காக வந்திருக்கிறேன்!" என்கிறான்.
            "ஓ! டயலாக்லாம் செமயா எழுதுவீங்க போலருக்கே! சப்போஸ் நான் டேரக்டரான டயலாக் நீங்கதான்!" என்கிறான் அவன்.
            "ஐயா! மன்னிக்கவும்! நமக்கு வசனமெல்லாம் வராது. ஒன்று பாட்டு. அல்லது கவிதை. வேறு எதுவும் எழுதுவதாக இல்லை." என்கிறான் விகடு.
            "ரொம்ப கிளியரா இருக்கீங்க! தட்ஸ் குட்!" என்று அவன் சொல்லும் போது "டேரக்டர் இன்னும் எழுந்திருக்கல!" என்று சொல்லி விட்டுப் போகிறார் செக்கியூரிட்டி.
            "எப்போ எழுந்திருப்பாங்க சாரு?" என்று கூட்டத்திலிந்து ஒரு குரல் வருகிறது. செக்கியூரிட்டி எந்தப் பதிலும் சொல்லாமல் போகிறார் இறுமாப்போடு.
            "நேத்திக்கு ஏழேகாலு இருக்கும். அதுக்கு முந்தா நாளு எட்டு ஆயிடுச்சு. முந்தா நேத்தி பத்தே காலு. எப்படியும் இன்னிக்கு ஏழரைக்குள்ள எழுந்திரிச்சிடுவாங்க!" என்கிறது கூட்டத்திலிருந்து பதில் அளிக்கும் விதமாக இன்னொரு குரல்.
            "இது வரிக்கும் ரண்டு படம். ரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். நெக்ஸ்ட் விஜய்க்குதாம் படம் பண்ணப் போறதா பேசிக்கிறாங்க. டிஸ்கஷன் போயிட்டு இருக்காம். சூர்யா மூவீஸாம்!" என்றெல்லாம் கூட்டத்திலிருந்து குரல் வருகின்றன. அந்த நேரம் பார்த்து ஒருவர் வருகிறார். அவருக்கு மட்டும் செக்கியூரிட்டி கதவைத் திறக்கிறார். அவர் கதவைத் திறந்து உள்ளே நுழைவதற்குள் கூடியிருந்த கூட்டம் அவரை அப்படியே மொய்த்து, "அண்ணே! அண்ணே!" என்று சுற்றி வளைக்கிறது. "சார்ட்ட அசிஸ்டண்ட்டா சேரணும். பாத்து பண்ணி வுடுங்க!" என்கிறது கூட்டம்.
            "இப்பவே சார்ட்ட பத்தொம்பது அசிஸ்டெண்ட். இருக்குற எங்கள யாரயும் காலி பண்ணிடாம யாரு வேணாலும் சேந்துக்குங்கப்பா!" என்று சொல்லி விட்டு அவர் உள்ளே போகிறார். ஓடிச் சென்று மாடியில் ஏறுகிறார்.
            மேலிருந்து நேரடி ஒளிபரப்பு போல செய்திகள் வர ஆரம்பிக்கின்றன. கூட்டம் ஆங்காங்கே பேசுவதை நிறுத்தி விட்டு உன்னிப்பாய் கவனிக்க ஆரம்பிக்கிறது. டேரக்டர் எழுந்துட்டாருப்பா... டாய்லெட்டு போயிட்டு இருக்காருப்பா... பல்ல துலக்க ஆரம்பிச்சிட்டாருப்பா... குளிக்க ஆரம்பிச்சிட்டாருப்பா... கொஞ்ச நேரத்தில் உள்ளே போன அசிஸ்டெண்ட் டேரக்டரின் ஈர ஜட்டியைத் தூக்கிக் கொண்டு கசக்கிப் பிழிந்து துவைத்துக் காயப் போட ஓடுவது கீழே இருந்து பார்க்கும் போது தெரிகிறது. டேரக்டரின் ஜட்டியைப் பார்க்க முடிந்து விட்டது. டேரக்டரைத்தான் பார்க்க முடியுமா என தெரியவில்லை.
            மறுபடியும் குரல்கள் மேலிருந்து வர ஆரம்பிக்கின்றன. கூட்டம் மறுபடியும் அமைதியாகிறது. டேரக்டர் ஜட்டிப் போட்டுட்டாருப்பா... டேரக்டர் பனியன் போட்டுட்டுடாருப்பா... தலை வாரியாச்சி... பவுடர் போட்டாச்சி... பேண்ட் போட்டாச்சி... சட்டைப் போட்டாச்சி... இன் பண்ணியாச்சி... டேரக்டர் சாப்பிட உட்கார்ந்துடாரப்பா... ரண்டு இட்டிலி, கொஞ்சம் கெட்டிச் சட்டினி... ஒரு சிகரெட்... டேரக்டர் கிளம்பிட்டாருப்பா... என்றதும் கூட்டம் முண்டியடித்து கேட்டின் முன் திரள்கிறது. செக்கியூரிட்டி வந்து கூட்டத்தை ரெண்டாகப் பிளந்து கார் போகும் அளவுக்கு பிரித்து விடுகிறார்.
            கூடியிருந்த கூட்டம் முழுவதும் பெரும் ஹீரோவைப் பார்ப்பதைப் போல வேடிக்கைப் பார்க்கிறது. டேரக்டர் வெளியே வருகிறார். வேக வேகமாக வந்து காரில் ஏறிக் கொள்கிறார். கார் கேட்டைத் தாண்டி வெளியே வந்ததும் ஒரு சில நொடிகள் கார் நிற்கிறது. "சார் ஒங்ககிட்டதாம் அசிஸ்டெண்ட் ஆகணும்னு ஒரு வருஷமா..." என்று சொல்லியபடி அவர் அருகே பார்க்க வாய்ப்பு கிடைத்தவர்கள் காகிகத்தை நீட்டுகிறார்கள். எல்லாவற்றையும் வாங்கி பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அசிஸ்டெண்டிடம் கொடுத்து விட்டு, "கண்டிப்பா கன்சிடர் பண்றேன்!" என்று அவர் சொன்னதும் கார் நகர ஆரம்பிக்கிறது. அறுபது எழுபது பேரில் ஏழெட்டு பேர் காகிதம் கொடுத்திருப்பார்கள். மற்றவர்களுக்கு எல்லாம் ஏமாற்றம்தான். அவரின் முகத்தைப் பார்த்தவர்கள் முப்பது பேர் வரை இருப்பார்கள். மற்றவர்கள் அவரின் காரைப் பார்த்ததோடு சரி. அந்தப் பார்க்காதவரின் பட்டியலில் விகடுவும் இருக்கிறான்.
            கார் கண்ணிலிருந்து மறையும் வரை கூட்டம் பார்த்துக் கொண்டே நிற்கிறது. அதற்குப் பின்பு செக்கியூரிட்டி வருகிறார். ஒவ்வொருவராய்ப் பார்த்து, "நீ கொடுத்தியா? நீ கொடுத்தியா?" என்று கேட்கிறார். கொடுக்க வாய்ப்பில்லாதவர்களைப் பார்த்து, "நீல்லாம் எதுக்கு லாயக்குடி? ஒங்கிட்ட வந்து கேட்பார்னு பாத்தியா பேமாலி! ஒனக்கு சான்ஸ் வேணுன்னா நீதாம் முட்டி மோதிட்டுப் போயிக் கொடுக்கணும் சாவு கிராக்கி!" என்கிறார். அதைக் கேட்ட ஒருத்தர், "நாளிக்கி எப்படியும் நீட்டிடுவேண்ணே!" என்கிறார். "கிழிச்ச போ! அதுக்குள்ள இன்னம் பத்து பேரு சேந்திடுவான்டா கஸ்மாலம்!" என்கிறார் செக்கியூரிட்டி.
            கூட்டல் மெல்ல கலைய ஆரம்பிக்கிறது. விகடுவுக்கு நிற்பதா? கலைவதா? என்ற குழப்பம் சூழ்ந்து கொண்டு கும்மி அடிக்கிறது. மனசு நிலையில்லாமல் தவிக்கிறது. நல்ல வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாலம் விட்டு விட்டோமா என மனசு கிடந்து துடிக்கிறது. தவிரவும் அவரிடம் கொடுப்பதற்கான காகிதமும் எதுவும் இல்லை. பையில் ஒரு இங்க் பேனாவும், கையில் ஒரு கிங் சைஸ் நோட்டும்தான் இருக்கிறது. போட்டிருப்பது ரூமில் இருக்கும் ஒருவரின் பேண்ட். சட்டை இன்னொருத்தரின் சட்டை. பேண்டும், ஜட்டியும்தான் அவனுடையதாக இருந்தன. அது தி.நகர் பாண்டி பஜாரில் அறுபது ரூபாய்க்கு ரண்டு ஜோடிகள் என பேரம் பேசி வாங்கியது. அவனுடைய சட்டையும், பேண்டும் துவைத்துப் போட்டு துணியில் காய்ந்து கொண்டிருக்கின்றன. அவனோடு முன்பு பேசியவன் இப்போது அவன் முன்னால் வருகிறான். "எவரிடே கிரெளட் இன்கிரிஸ் ஆவுதே தவிர டிகிரிஸ் ஆவ மாட்டேங்குது! பட் எப்படியும் ஒரு டேரக்டர் ஆயிடுவேன்னு கான்பிடன்ட் இருக்குது பாஸ்! ஒங்களப் பார்த்தா டேலன்டா தெரியுது. கண்டிப்பா எம் படத்துல ஒங்களுக்கு சான்ஸ் உண்டு! ஒங்க ரிசியூமைக் கொடுங்க பாப்பம்!" என்கிறான்.
            "நம்மிடம் அப்படி ஒன்றும் இல்லை!" என்கிறான் விகடு.
            "கஷ்டம்!" என்று மூச்சை உள்ளிழுத்து பெருமூச்சாக விடுகிறான் அவன்.
            "பாஸூ! இந்தப் பாருங்க! இதுல மை டீடெய்ல்ஸ், ஒரு ஷார்ட் ஸ்டோரி, ஒரு சீன் டெவலப்பிங், அதுக்கு டயலாக் எல்லாம் வெச்சிருக்கேன் பாருங்க. இந்த மாதிரி நீங்க வாட் ஆர் யூ டூயிங்கனா... யூ ஆர் பாடலாசிரியர்... ஸோ ஒரு ஆல்பம் மாதிரி படத்த ஒட்டி அதுக்கு ஆப்போசிட்ல பாட்ட எழுதி வெச்சிருக்கணும். அதாங் ஒங்க விசிட்டிங் கார்டு. அன்டர்ஸ்டாண்ட்!" என்கிறான்.
            விகடு தலையாட்டுகிறான்.
            "லுக் பாஸூ! எம் பேரு செங்குமார்! சினிமாவுக்காக சுகந்தன். ரெட் ஹில்ஸ்லேந்து வாரேன் பாஸூ! எங்கிட்ட ஏகப்பட்ட ஸ்டோரிஸ் பாஸூ! பாலிடிக்ஸ், ரொமான்டிக், டிராஜடி, ஹாரர், காமெடி, திரில்லர்னு ஏகப்பட்ட ஸ்டோரிஸ் பாஸூ! எப்படியும் டேரக்டராகியே தீருவேன். இவனுங்க சான்ஸ் தராட்டியும் ஒரு அடல்ட்ஸ் ஒன்லி மூவி எடுத்தாவது டேரக்டராவேன் பாஸூ! அதுக்கு ஒண்ணும் பெரிசா பட்ஜெட் ஆவுறது இல்ல. ஆக்ட் பண்றவங்ககிட்டயே காசு வாங்கி படத்த எடுத்துடலாம். வில்லனா ஆக்ட் பண்றவங்கிட்ட செம டப்பு வாங்கிடலாம் பாஸூ! அதுக்கு அட்ஜஸ்ட் ஆகுற மாரி ஏகப்பட்ட ரேப் சீனு வெச்சிக் கொடுக்கணும். துட்டா? பணமா? வெச்சிக் கொடுத்துடலாம். பாஸூ! அப்படிப் படம் எடுத்தா நம்ம மூவில பாட்டு எழுத ஒங்களுக்கு ஒண்ணும் அப்ஜெஸன் இல்லல்ல!" என்கிறான் அவன்.
            "படம் எடுப்பதாக முடிவு பண்ணிய பின் நல்ல சமூக படமாக, சமூகத்துக்கு கருத்துள்ள படமாகவே எடுக்கலாமே!" என்கிறான் விகடு.
            "இதுவும் சோசியல் படம்தான் பாஸூ! இடையில அப்படி இப்படி காட்டுனாலும் கிளைமேக்ஸ்ல குட் மேசேஜ் இருக்கும் பாஸூ! வில்லன் எல்லாத்தியும் ஹீரோயின் டொப்பு டொப்புன்னு பிஸ்டல்ல போட்டு தள்ளுவா பாருங்க பாஸூ! அங்க வைக்கிறோம் டைட்டில் கார்டு பெண்மையின் சக்தி பாரடா! அப்படின்னு! தட்ஸ் வாட் ஐ சே! சீப்பா நெனச்சிபுடாதீங்க பாஸூ!"
            தலைசுற்றாத குறையாக நிற்கிறான் விகடு. பார்க்க வந்த டேரக்டரைப் பார்க்க முடியாமல் போனது மனதின் ஒரு பக்கம் இழுக்கிறது. ரெட்ஹில்ஸ் செங்குமார் என்ற சுகந்தனின் பேச்சு தெறிக்க விடுகிறது.
            "பேசுங்க பாஸூ! இந்த பீல்டுல எதக் கேட்டாலும் சம்பந்தம் இல்லாம பேசணும்! இப்டிலாம் ஏஜ் அட்டெண்ட் புள்ளயாட்டம் நிக்ககக் கூடாது. அதுங்களே ன்னா பேச்சு பேசுதுங்க. ரவுசு வுடுதுங்க. கம். ஒரு டீ அடிப்போம். நான் ஒரு டம்மி ஹம் பண்றேன். நீங்க அதுக்கு தகுந்த மாதிரி எழுதுங்க. கையிலதாம் நோட்டு ரெடியா வெச்சிருக்கீங்களே!"
            டீ வருகிறது. சாயுங்காலம் வரைக்கும் இந்த ஒரு டீ போதும் என்று நினைத்துக் கொள்கிறான் விகடு. டம்மி ஹம் ஆரம்பமாகிறது. "கீனா கவனிங்க பாஸூ! அச்சக் பச்சக் அச்சக் - இச்சக் பச்சக் இச்சக் - அச்சக் பச்சக் இச்சக் - இச்சக் பச்சக் அச்சக் - ஹே ‍ஹே ஹே அச்சக் அச்சக் அச்சக் - பச்சக் பச்சக் பச்சக் - இச்சக் இச்சக் இச்சக்" நல்லா ராகமாகத்தான் இழுத்து ஹம் செய்கிறார் செங்குமார். கேட்கும் போதே ஒரு கிறக்கம் உண்டாகிறது. படிக்கும் போது உங்களுக்கும் உண்டாகியிருக்கலாம்.
            இதற்கு எப்படிப் பாட்டெழுதுவது என்று தெரியாமல் முழிக்கிறான் விகடு. "உடனடியாக எழுத முடியுமா என்று தெரியவில்லை. கொஞ்சம் நேரம் தேவைப்படும் என்று நினைக்கிறேன்!" என்கிறான் விகடு.
            "டேக் யுவர் ஓன் டைம் பாஸூ! பாட்டுதாம் முக்கியம் பாஸூ! ஒரு பாட்டுன்னாலும் மரண ஹிட் அடிக்கணும். ஒங்களுக்கு டியூனுக்கு பாட்டு எழுத வராதுன்னு நெனைக்கிறேன். அதாங் மெயினு பாஸூ! லேர்ன் பண்ணுங்க. ஒங்க போன் நம்பர் கொடுங்க! நான் கான்டாக்ட் பண்றேன்." என்கிறார் செங்குமார்.
            விகடு வீட்டு ஓனரின் போன் நம்பரைக் கொடுக்கிறான். "திஸ் இஸ் மை நம்பர்!" என்று ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுக்கிறார் செங்குமார்.
            செங்குமார் அதற்குப் பின் வீட்டு ஓனரின் நம்பரைத் தொடர்பு கொண்டாரோ? யாருடா நீ கஷ்மாலம்? என்று திட்டு வாங்கினாரோ தெரியவில்லை. இந்தச் சம்பவத்தை ரூம் வீட்டுக்கு வந்து விகடு சொல்ல சொல்ல எல்லாரும் சிரித்தச் சிரிப்பைப் பார்த்து விகடு செங்குமாரின் கார்டை சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் போடுகிறான். ஆனால் ஒரு வாரத்துக்கு, "போறப் போக்க பாத்தா விகடு மலையாளப் படத்துக்கே பாட்டு எழுதிடுவாம் போலருக்கு!" என்று அங்கு விகடு பற்றிய பேச்சாகவே இருக்கிறது ரூம் வீட்டில்.
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...