30 Apr 2019

துக்கத் தூக்கத்தில் நடந்தவன்



செய்யு - 70
            ஓர் அகால மரணம் நடந்த ஹாஸ்டல் எப்போதும் அங்கிருப்பவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும். அந்த ஹாஸ்டல் அதற்குப் பின் மனதுக்குள் உருகொள்ளும் தோற்றம் பயங்கரமானது. கயிற்றைக் கட்டித் தொங்க வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் யா‍ரோ ஒருவர் தொங்கிக் கொண்டிருப்பதான மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும். பகலில் இருக்கும் தைரியம் இரவில் இருக்காது. அதையும் தாண்டி இரவில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் தைரியமும் அந்த இரவுகளுக்கென்றே பிரத்யேகமாக மனம் எழுப்பிக் கொள்ளும் கனவுகளுக்குப் பின் இருக்காது.
            அகால மரணமடைந்த ஒரு ஜீவன் நம்மோடு பழகியிருக்கலாம். அன்போடு இருந்திருக்கலாம். அந்த ஜீவனுக்கு ஹாஸ்டலில் இருந்த சக ஜீவன்கள் எந்தத் துன்பமும் செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஹாஸ்டலில் இருந்த ஒவ்வொரு பிள்ளைகளின் மனமும் மரணித்த ஜீவனோடு தொடர்புபடத்தி அவரவர்களை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.
            மர்ம மரணத்தைத் தொடர்ந்து வந்த இரவுகள் ஒவ்வொன்றும் ஹாஸ்டலைத் திகில் பங்களா போல மாற்றிக் கொண்டிருந்தன என்பது வெறும் ஓர் உவமைக்கான வாசகம் மட்டுமன்று. நரிவலம் ஹாஸ்டல் ஓட்டுவீடுதான் என்றாலும் நிகழ்ந்து விட்ட அந்த மரணத்துக்குப் பின் அது பேய் பங்களாவின் தோற்றத்தைக் கூட்டிக் கொண்டு விட்டது.
            அநேகமாக ஒவ்வொரு பிள்ளையின் கனவிலும் வந்து முகிலன் மறுபடியும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான். "எங் கூடயே வந்துடுங்க! ஜாலியா இருக்கலாம்!" என்று கனவில் வந்து பேசுவதாகப் பிள்ளைகள் அரண்டு போய் தூக்கத்திலிருந்து எழுந்தார்கள். மரணம் நடந்தது பகலாக இருந்தாலும் அது அச்சத்தை அள்ளி வீசி ஒவ்வொரு இரவையும் ருத்ர தாண்டவமாடியது.
            இரவு நேரங்களில் ஹாஸ்டலின் பின்பக்கம் லைட்டைப் போட்டு சிறிது தூரம் கடந்துதான் டாய்லெட்டுக்குச் சென்றாக வேண்டும். நடந்து சென்று விடும் தூரம்தான். அதிகபட்சம் இருபது அடிகளுக்கு மேல் இல்லாத தூரம். அந்த இருபதடித் தூரத்தைக் கடந்து சென்ற விடாமல் நிகழ்ந்து விட்ட மரணத்தின் அச்சம் ஒவ்வொரு பிள்ளையின் மனதிலும் பீடித்திருந்தது. ஹாஸ்டலின் பின்பக்கம் செல்லவே பிள்ளைகள் பயந்தார்கள். நிகழ்ந்த மரணம் ஹாஸ்டலுக்கு முன்னே இருந்த விறகுக் கொட்டகையில்தான் என்றாலும் ஹாஸ்டலின் பின்பக்கம் உண்டான பயம் பிள்ளைகளுக்கு அதீதமாய் இருந்தது.
            பின்பக்கமிருந்த டாய்லெட்டைத் தைரியமாய்ப் பயன்படுத்திக் கொண்டிருந்த பிள்ளைகளும் சில நேரங்கள் டாய்லெட் வரைச் செல்ல பயந்து ஹாஸ்டலுக்குப் பக்கத்திலேயே மலத்தைக் கழித்து விட்டு உள்ளே ஓடி வர ஆரம்பித்தனர். பின்பக்கம் செல்லவே பயந்த பிள்ளைகள் ஹாஸ்டலின் முன் லைட் எரிந்து கொண்டிருக்கும் முன்பக்கம் யாரும் பார்க்காத நேரத்தில் மலம் கழித்து விட்டு கமுக்கமாய் வந்து உட்கார்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். உட்கார்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள் என்றால் மலம் கழித்தப் பின் கால் கழுவாமல்தான். ஒவ்வொரு நாளின் காலையிலும் ஹாஸ்டலைச் சுற்றி மலவாடை வீச ஆரம்பித்தது. காலையில் எழுந்து சென்ற பிள்ளைகள் மலத்தில் கால் வைக்காமல் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
            வார்டன் தங்கராசு மலவாடை தாங்க முடியாமல் குமட்டிக் கொண்டு வாந்தியெடுக்க ஆரம்பித்தார். தங்கராசோடு இல்லாமல் ரவுண்ட்ஸ் வரும் சபரி வாத்தியார், சமைக்க வரும் பெண்மணிகள், வாட்ச்மேன் தாத்தா என்று பலரும் சகிக்க முடியாத அருவருப்புக்கு ஆளானார்கள். பிள்ளைகளுக்கு மரண பயம் என்றால் அவர்களுக்கு மல பயம். ஹாஸ்டலில் மலமும் மலம் சார்ந்த பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்தது.
            ஹாஸ்டல் பிள்ளைகளுக்கு அது தங்கள் மலம் என்பதாலோ என்னவோ அது குறித்து அவர்கள் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. தவிரவும் அவர்களுக்கு அப்படி மலம் கழிப்பதுதான் அப்போதிருந்த சூழ்நிலையில் பாதுகாப்பாகப் பட்டது. டாய்லெட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே மலம் கழிப்பது மிகுந்த பயத்தை அளித்தது. அதுவும் ஸீரோ வாட் பல்பு எரியும் டாய்லெட்டுக்குள் இரவில் மரண அச்சத்தை மனதில் சுமந்து கொண்டு மலம் கழிப்பதன் பீதியை எப்படிச் சொல்வது? டாய்லெட்டுக்கு என்றே அந்தக் காலத்தில் ஸீரோ வாட் பல்பைக் கண்டுபிடித்தது யாரோ?
            விசயம் இப்படியான பின் இது ஹெட்மாஸ்டரின் காதுகளுக்கச் செல்லாமல் இருக்குமா? விசயம் ஹெட்மாஸ்டர் வரை சென்றதும் ஹாஸ்டல் சில மாற்றங்களுக்கு உண்டானது. அந்த மாற்றங்களாவன,
            முதல் மாற்றமாக இரவு முழுவதும் ஹாஸ்டலின் எல்லா லைட்டுகளும் எரிய ஏற்பாடு செய்யப்பட்டது. டாய்லெட்டுகளின் ஸீரோ வாட் பல்புகள் பிடுங்கப்பட்டு அறுபது வாட்ஸ் பல்புகளாக மாற்றப்பட்டன.
            இன்னொரு வாட்ச்மேன் தாத்தா கூடுதலாக நியமிக்கப்பட்டார். இரண்டு வாட்ச்மேன் தாத்தாக்களும் ஒருவர் மாற்றி ஒருவராக பிள்ளைகள் டாய்லெட் போக வேண்டும் என்று சொன்னால், அவர்களை அழைத்துச் சென்று டாய்லெட்டில் விட வேண்டும்.  அவர்கள் டாய்லெட் போய் விட்டு வெளியே வரும் வரை கதவருகே காத்து நின்று மீண்டும் அழைத்துக் கொண்டு ஹாஸ்டலில் கொண்டு வந்து விட வேண்டும். இதுதான் அவர்களுக்குச் செய்யப்பட்டிருந்த பணி வரன்முறை. ஒரு சில நாட்களிலேயே இந்த விசயத்தில் இரண்டு தாத்தாகளுக்கும் சண்டை வர ஆரம்பித்து விட்டது.
            பிள்ளைகள் யாராவது டாய்லெட் போக வேண்டும் என்று சொன்னால் "நீ தொணைக்குப் போ!" என்று ஒரு தாத்தா இன்னொரு தாத்தாவிடம் சொல்வார். "இல்லயில்ல. இப்போதாம் நாம்ம ஒரு புள்ளய அழச்சிட்டுப் போனோம். அதால நீ தொணைக்குப் போ!" என்று இன்னொரு தாத்தா சொல்வார். மூத்திரத்தை அடக்க முடியாதது போல அவசரமாக வரும் டாய்லெட்டை அடக்க முடியாதது என்பதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். இவர்களின் சண்டையைப் பொருட்படுத்த முடியாமலும், இவர்களைச் சமாதானம் செய்விக்க முடியாமலும் வேகமாக ஓடி ஹாஸ்டலுக்குப் பக்கத்திலேயே மலத்தைக் கழித்து விட்டு பிள்ளைகள் வந்து விட ஆரம்பித்தார்கள்.
            இந்த விசயத்தின் தாக்கம் அதாவது போதிய நடவடிக்கைகள் எடுத்த பின் மீண்டும் உண்டான இந்த மலநாற்றத்தின் தாக்கம் ஹெட்மாஸ்டர் ஹாஸ்டலுக்கு நேரடியாக வந்து விசாரிக்க வேண்டிய சூழ்நிலையை உண்டு பண்ணி விட்டது. அவர் வந்து விசாரணையைத் தொடங்கியதுமே எல்லா பிள்ளைகளும், "ந்த ரெண்டு தாத்தாக்களும்தான் ஆஸ்டல சுத்தி அசிங்கம் பண்ணிட்டு அலயுறாங்க. நாங்கலாம் டாய்லெட்டுக்குத்தாம் போறம். இந்த ரெண்டுகளும்தான் வெளியில போயி நாறடிச்சுதுடுங்க சார்!" என்றார்கள் பிள்ளைகள் கோரஸாக.
            "ச்சீ! வெக்கமா யில்ல! ரண்டு பேரயும் வேலய வுட்டு தூக்குனாத்தாம் சரிபட்டு வர்ரும்!" என்று ஹெட்மாஸ்டர் சொன்னதும் அழாக குறையாக ரெண்டு தாத்தாக்களும், "தப்பு நடந்துடுச்சுங்க சார்! இனிமே இப்படி நடக்காம பாத்துக்குறோம்!" என்று அழாக குறையாகச் சொன்னதைப் பார்த்ததும் பிள்ளைகளுக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது.
            ஹெட்மாஸ்டர் பிரச்சனையை ஒரு மாதிரியாக ஊகித்திருக்க வேண்டும். "இனுமே யாரு டாய்லெட் போறன்னாலும் கூட ஒருத்தன தொணைக்குக் கூட்டிட்டுப் போ. கூட தாத்தாவையும் கூட்டிட்டுப் போகணும். இனுமே இது ஒரு பெரச்சனையாகக் கூடாது. ராத்திரி போறது பயமாக இருந்துச்சுன்னா சாயுங்காலமே எல்லாத்தயும் முடிச்சுக்கணும். இப்படி நாறடிக்கக் கூடாது!" என்றபடி அவர் போய் விட்டார்.
            அதன் பின்னும் இந்த மலப் பிரச்சனை அவ்வபோது தலைதூக்கும். அமுங்கிப் போகும். ஆனால் பிள்ளைகள் தூக்கத்திலிருந்து அலறியடித்துக் கொண்டு எழுவது அமுங்கிப் போகாத ஒரு பிரச்சனையாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. இரவு வந்தால் ஹாஸ்டலில் இருப்பது பயமாக இருந்தது. அதை விட இரவில் ஒன்பதரை மணி வரை படிக்க வேண்டும் என்ற ஹாஸ்டலின் விதியைக் கடைபிடிப்பது பிணத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு படிப்பதைப் போலிருந்தது. அதற்குப் பின் இரவில் உறங்குவது என்பது பிணத்தைக் கட்டிக் கொண்டு உறங்குவது போலிருந்தது.
            ஹாஸ்டலின் ஒவ்வொரு பிள்ளையையும் முகிலனின் மரணம் வெவ்வேறு விதமாக பாதித்தது. இப்போதைய நிலையில் சொன்னால் அது ஓர் உளவியல் சிக்கல் சார்ந்த நிலை. மனவியல் மருத்துவரை வைத்து ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் செய்யப்பட வேண்டிய நிலை. அப்போது அது குறித்தெல்லாம் யாருக்கு என்ன தெரிந்தது? விபூதியடித்தால் தீரும் பிரச்சனையாகத்தான் பார்க்கப்பட்டது. அப்போது என்று சொன்னால் அதிகபட்சம் இப்போதிலிருந்து இருபது ஆண்டுகளுக்கு மேற்பட்டிராது. இன்னும் சரியாகச் சொல்வதானால் இரண்டாயிரமாவது ஆண்டைத் தொடுவதற்கான ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பான காலம்தான்.
            அந்தக் காலத்தைப் பற்றிப் பேசுவதை விடவும் அதை விட முக்கியமாக விகடு தூக்கத்தில் நடக்கும் நிலைக்கு ஆளானான். ஒரு நாள் இரவு பூட்டாமல் விட்டிருந்த ஹாஸ்டல் கேட்டைத் திறந்து கொண்டு நடுராத்திரியில் அவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் தூக்கத்தில் நடந்தானோ? துக்கத்தில் நடந்தானோ? நடந்து போய்க் கொண்டிருந்தான்.
*****

சீரியல் பார்ப்பது எப்படி?



எம் இனிய தமிழ்ப் பெருங்குடி மக்களே!

நான் உங்கள் விகடபாரதி பேசுகிறேன்!

            நாட்டில் எது எதற்கோ புத்தகங்கள் இருக்கின்றன. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி? துணிவைப் பெருக்கிக் கொள்வது எப்படி? காசு சம்பாதிப்பது எப்படி? என்று ஆரம்பித்து தக்காளி நறுக்குவது எப்படி? என்பது வரை எவ்வளவு புத்தகங்கள்!
            இவ்வளவு நுணுக்கமான விசயங்களுக்கு எல்லாம் புத்தகம் இருக்கும் போது தமிழர்களின் கலாச்சாரமாக மாறி விட்ட சீரியலைப் பற்றி 'சீரியல் பார்ப்பது எப்படி?' என்ற தலைப்பில் புத்தகம் இல்லாதது தமிழர்களின் தவக்குறைதான். பல துறைகள் குறித்த நூல்கள் உருவாக வேண்டும் தமிழ்ப் பெருங்கனவு இந்த ஒரு குறையால் அடிபட்டுப் போய் விடுகிறது.
            பெண்கள் பொறுமையானவர்கள் என்கிறார்களே! இந்தப் பொறுமையை அவர்கள் எப்படி கற்றுக் கொண்டார்கள்? இந்த அவசர யுகத்திலும் அந்தப் பொறுமையை அவர்கள் எப்படி தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? எல்லாம் சீரியல் பார்த்துதான்.
            இத்தகைய சீரியல் பார்ப்பது குறித்து ஒரு புத்தகம் எழுதாவிட்டாலும் தமிழில் ஒரு பத்தி கூட எழுதப்படாதது தமிழுக்கு ஒரு பெருங்குறைதான். அந்தப் பெருங்குறையைத் தவிர்க்கவே இப்பத்தி எழுதப்படுகிறது.
            சீரியல் பார்ப்பது எப்படி?
            1. தினந்தோறும் யோகா செய்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் எப்படி குறித்த நேரத்தில் தங்களுக்கானப் பயிற்சியை ஆரம்பித்து விடுகிறார்களோ அது போல தினந்தேறும் சீரியல் ஆரம்பிக்கும் குறித்த நேரத்தில் தொலைக்காட்சி முன் ஆஜராகி சீரியல் பார்க்க ஆரம்பித்து விட வேண்டும்.
            குறிப்பாக அந்த நேரத்தில் ஆஜராகாமல் பிறகு யூடியுப்பில் பார்த்துக் கொள்ளலாம் அல்லது நெட்டில் டிவி வெப்ஸைட்டில் போய் பார்த்துக் கொள்ளலாம் அல்லது செட்டாப் பாக்ஸில் பதிவு செய்து பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியம் கூடவே கூடாது.
            2. ஒரு நாள்தானே நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற சோம்பேறித்தனம் சீரியல் பார்ப்பவர்களுக்கு ஆகவே ஆகாது. சோம்பல் மிக கெடுதி பாப்பா என்ற பாரதியாரே சொல்லியிருக்கிறார். அதை அடிக்கடி மனதில் நிறுத்த வேண்டும்.
            3. ‍ஏதோ மறதியில் சீரியல் பார்க்காமல் விட்டு விட்டு பக்கத்து வீட்டு பிரேமாவிடம் கேட்டுக் கொள்ளலாம், எதிர்வீட்டு எலிசாவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை உதவவே உதவாது. கர்ம சிரத்தை ரொம்ப முக்கியம்.
            4. சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் போது விளம்பரம் போடும் நேரங்களில் கையில் ரிமோட்டை வைத்துக் கொண்டு சேனல் சேனலாக மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. சில நேரங்களில் நம் கணிப்பைக் கடந்து விளம்பரங்கள் சீக்கிரமே முடிந்து சீரியல் ஆரம்பித்திருந்தால் இழப்பு பார்க்கின்ற நமக்குதான் என்ற அக்கறை எப்போதும் இருக்க வேண்டும்.
            5. முக்கியமாக விளம்பர நேரங்களை அதுவரை சீரியலில் பார்த்தவைகள் குறித்து ஆழமாகச் சிந்திக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிற்றுண்டி உண்பது, சிறுநீர்க் கழிப்பது போன்ற சிறு சிறு வேலைகள் இருப்பின் அதை அந்த நேரத்தில் வேக வேகமாக முடித்துக் கொள்வதும் உசிதமே.
            6. விளம்பர சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் சினிமாவுக்கு ஒரு இன்டர்வெல் என்றால் சீரியலுக்கு மூன்று நான்கு இன்டர்வெல்கள் என்பதாக அதைப் புரிந்து கொண்டு மனசாந்தி அடைந்து கொள்ள வேண்டும்.
            7. சீரியல் பார்ப்பதை விட பார்த்ததைப் பகிர்ந்து கொள்வதுதான் சீரியலை ஆழமாக மனதில் நிலைநிறுத்தும். ஆகவே கல்யாணம், வரவேற்பு, சாவு, கருமாதி, வளைகாப்பு, பதினாறு என்று போகும் விஷேசங்களில் எல்லாம் கண்ணில் படும் ஒவ்வொருவரிடம் சீரியல் குறித்து விவாதம் நடத்தப் பழகிக் கொள்ள வேண்டும். இதை மேலும் அதிகப்படுத்தும் முயற்சியாக விவாதம் சூடுபிடித்து அதன் விளைவாக கட்டிப் புரண்டு சண்டை பிடித்துக் கொண்டு புரண்டாலும் நல்லதுதான்.
            8. சீரியலைப் பார்க்கும் போது அந்த சீரியலின் பாத்திரமாக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? என்பது குறித்து அடிக்கடிச் சிந்தித்து வைத்துக் கொள்ள வேண்டும். விவாத நேரங்களில் இது குறித்து நீங்கள் பொட்டில் அடித்தாற் போல கேட்பவரின் முகத்தில் முரட்டுக் குத்து குத்திக் கூட பேசலாம். கேட்பவர்கள் உங்கள் தன்னம்பிக்கையைக் கண்டு வியந்து போகும் இந்த வாய்ப்பை நீங்கள் நழுவ விட்டு விடக் கூடாது.
            9. தொடர்ந்து சீரியல் பார்க்க வேண்டிய கட்டாயம் ஒரு நாளின் பத்து மணி நேரத்துக்கும் மேல் இருக்கும் என்பதால் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதற்கான யோகாசனங்களை காலை நேரத்திலேயே செய்து விட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்க்க வேண்டியிருப்பதால் அது தொடர்பான கண் பயிற்சிகளையும் ‍அதே காலை நேரத்தில் செய்து தயார் நிலையில் இருப்பதும் முக்கியம்.
            10. சீரியல் பார்க்கும் நேரத்தில் விருந்தினர்கள் வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம். இதற்காக வாசலில் உங்கள் பெயர் பொறித்த பெயர்ப் பலகையை அமைத்து அதில் இன் அன்ட் அவுட் செட்டிங் செய்து வைத்துக் கொண்டு அவுட் என்ற ஆப்சனை செட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
            11. அதையும் மீறி வரும் உறவினர்களிடம் சீரியலில் வரும் சோகக் கதைகளையும் காட்சிகளையும் சாத்துகுடியைப் பிழிவது போல பிழிந்தெடுத்து அழுது புலம்பினீர்கள் என்றால் அடுத்த முறை அந்த குறிப்பிட்ட நேரத்தில் வரக் கூடாது என்ற அச்சம் அவர்கள் மனதில் பிக்ஸ் ஆகி விடும். அது போன்ற நேரங்களில் வருபவர்களுக்கு டீ, காபி, ஸ்நாக்ஸ் வகையில் கொடுப்பது கர்ம சிரத்தையாக சீரியல் பார்க்கும் நமது பண்பாட்டை நாமே அழித்துக் கொள்வது போலாகி விடும் என்பதால் பச்சைத் தண்ணீர் கொடுப்பது கூட நல்லதல்ல.
            12. சீரியலின் டிவிஸ்டுகளை டைரக்டருக்கே பாடம் எடுப்பது போல, முடிந்தால் அதையும் தாண்டி மரண டிவிஸ்ட்டாக அதை எப்படி வைத்திருக்கலாம் என்பது போல ஒரு ஹோதாவில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். சீரியல் பார்த்து உருப்படாமல் போய் விட்டதாக சொல்பவர்களுக்கு பதிலடி அப்படிதான் நாம் கொடுக்க முடியும்.
            13. சீரியலில் வரும் புடவைகள், நகை செட்டுகள், இன்டீரியர் டிசைன்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் கடைகளுக்குப் போகும் போது பேந்த பேந்த விழித்து அசடு வழியக் கூடாது. எடுத்துக்காட்டாக ஒரு புடவைக் கடைக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் தைரியமாக அந்தச் சீரியலின் பெயரோடு புடவைப் பெயரைச் சொல்லி அதை எடுத்துப் போடுங்கள் என்று கம்பீரமாக சொல்ல வேண்டும்.
            14. குடும்பத்தில் நியூஸ் சேனல் பார்ப்பவர்கள், கிட்ஸ் சேனல் பார்ப்பவர்கள், காமெடி சேனல் பார்ப்பவர்கள், சாங்ஸ் சேனல் பார்ப்பவர்கள் என்று வெரைட்டியாக இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் மதமாற்றம் செய்வது போல மனமாற்றம் செய்து அனைவரையும் சீரியல் பார்ப்பவர்களாக மாற்ற வேண்டும். அப்போதுதான் நினைத்த நேரத்தில் யாருடைய தொந்தரவும் இன்றி சீரியல் பார்ப்பது சாத்தியமாவதோடு குடும்ப ஒற்றுமையும் நிலைநிறுத்தப்படும்.
            15. காலத்திற்கேற்ற அப்டேட் முக்கியம் என்பதால்... சீரியலைப் பற்றி அக்கம் பக்கம், பங்ஷனில் பேசுவதோடு நின்ற விடாமல் பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் என்று ரவுண்ட் கட்டி அடிக்க வேண்டும்.
            16. குழந்தைகளின் பெயர் சூட்டு விழா என்றால் சீரியல் பாத்திரங்களின் பெயர்களைப் பிரசன்ஸ் ஆப் மைண்டில் வருவது போல அடித்து விட்டு பட்டையைக் கிளப்பி பெயர் சூட்டுதலுக்கு உங்களாலான பங்களிப்பை அவசியம் செய்ய வேண்டும். அப்பெயர்க்காரணத்தையும் சரியாகக் கோர்த்துச் சொல்வதும் முக்கியம். சீரியல் ஞானஸ்தானம் அடையும் இடம் இதுதான்.
            17. விடிய விடிய தெருக்கூத்து, நாடகம், சினிமா என்ற பார்த்த நம் தலைமுறையின் மரபோட்டமே நமக்கு இப்போது சீரியல் பார்க்கும் பழக்கமாக வளர்ந்திருக்கிறது. அது நம் ஜீனிலேயே கலந்திருக்கிறது. ஆகவே இது குறித்த குற்றஉணர்ச்சிக்கு ஆளாகி சீரியல் பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளவோ நிறுத்தி விடவோ கூடாது.
            18. ஏதோ ஒரு புத்தாண்டு சபதத்தாலே, பிறந்த நாள் சபதத்தாலே சீரியல் பார்ப்பதை நிறுத்தி அதன் காரணமாக  வருங்காலத் தலைமுறைக்கு ஒரு செம்மாந்த மரபின் தொடர்ச்சி இல்லாமல் போக நாம் காரணமாகி விடக் கூடாது. ஆகவே சீரியல் பார்ப்பது கூடாது என்ற நினைப்போ அது குறித்து சபதம் எடுக்கும் எண்ணமோ கிஞ்சித்தும் வந்து விடக் கூடாது.
            19. நாம் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாளுக்கொரு சேனல் ஆரம்பித்து நாளுக்கொரு சீரியலை தயாரிக்கிறார்கள். அதுவும் போதாதென்று உலக மொழிகளில் உள்ள சீரியல்களை எல்லாம் டிரான்ஸ்லேட் செய்து அதாவது டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். அவர்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போட்டு விடக் கூடாது.
            20. இந்தச் சீரியல் பார்க்க ஆரம்பித்த பிறகுதான் அக்கம் பக்கத்துச் சண்டைகள், குழாயடிச் சண்டைகள், மாமியார் மருமகள் சண்டைகள் இன்னபிற குடும்ப, சமூக மற்றும் உறவுச் சண்டைகள் எல்லாம் குறைந்திருக்கிறது. ஆகவே சீரியல் பார்க்காமல் விட்டு அதனால் உலக சமாதானம் குறைய நாம் காரணமாகி விடக் கூடாது.
            இந்த 20 குறிப்புகளும் உங்களுக்குச் சீரியல் பார்க்க உதவி, நீங்கள் சீரியஸ் சீரியல் பார்ப்பவர்களாக மாறினால் நீங்களும் தமிழரே!
            வாழ்க வாழிய எம் செந்தமிழர்! எம் பைந்தமிழருக்கு வணக்கம்!
*****

29 Apr 2019

குழந்தைகள் குறித்த கணக்குகள்



செய்யு - 69
            முகிலனின் மரண விசயத்தில் நிகழ்ந்தது கொலையா? தற்கொலையா? என்பது ஹாஸ்டலோடு தொடர்புடைய பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் அது ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியது.
            உண்மையில் குழந்தைகள் தொடர்பான கொலைகளும், தற்கொலைகளும் பரிதபாகரமானவைகள். சில நாட்கள் அது குறித்து உக்கிரமான பேச்சுகளும், கண்டிப்புகளும் உயிரோடு இருந்து பின்பு அவை இறந்து போன குழந்தைகளைப் போல மரித்துப் போய் விடும்.
            இந்த உலகமும் அது குறித்து கவலைப்படுவதில்லை. ஒரு குழந்தைப் போனால் என்ன? இந்த உலகுக்கு ஏராளமான குழந்தைகள் இருக்கின்றன. போய் விட்ட குழந்தையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க முடியுமா? இருக்கின்ற குழந்தைகளைதான் நினைவில் வைத்துக் கொள்ள இந்த உலகுக்கு முடிகிறதா? தத்தித் தப்பி குழந்தைகள் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்றே இந்த உலகம் எதிர்பார்க்கிறது. எதுவாக இருந்தாலும் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டாமா? என்று இந்த உலகம் கேட்கும் கேள்வியில் தற்கொலைகள் மீண்டும் சுருக்கிட்டுக் கொள்வதைத் தவிர வேறு வழியென்ன இருக்கிறது? அது ஒரு கொலையாக இருந்தாலும் நடந்துது நடந்துப் போச்சு என்று துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு இந்த உலகம் சுழல ஆரம்பித்து விடுகிறது.
            உலகமே இப்படி எனும் போது அந்த உலகத்தின் சிறு புள்ளியாக இருந்த பள்ளிக்கூடமும் அப்படித்தான் சிந்தித்தது. அதற்கு தன்னிடம் படிக்கும் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் முக்கியம். ஒரு பிள்ளை தவறி விட்டான் என்பதற்காக அது மற்ற ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைத் துடைத்தெறிந்து விட முடியுமா? அது அந்த ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைக் கேடயமாக வைத்த படியே தவறிப் போன ஒரு பிள்ளையைப் பற்றிப் பேச்செடுக்க விடாமல் செய்தது.
            ஹாஸ்டலைப் பொருத்த வரையில் அங்கிருந்த ஐம்பதுக்கும் குறைவான பிள்ளைகளில் தவறிப் போன முகிலனின் சாவு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. ஹாஸ்டலுக்கும் அதே போன்ற ஒரு கணக்கு இருக்கவே செய்கிறது. அதற்கும் தவறிப் போன ஒரு பிள்ளையைத் தூக்கிக் காட்டுவதை சில நாட்களுக்குப் பிறகு நிறுத்திக் கொண்டு இருக்கின்ற பிள்ளையைத்தான் தூக்கிக் காட்ட ஆரம்பிக்கும்.
            லாவணிப் பாடுவதைப் போல மாறி மாறி நடந்த பேரணிகள் ஹாஸ்டல் பிள்ளைகளின் பெற்றோர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தன. கலவையான பயம் பெற்றவர்களின் மனதில் பரவ ஆரம்பித்தது.
            நடக்கின்ற சம்பவங்களைக் காரணம் காட்டி ஹாஸ்டல் மூடப்பட்டால் என்னாவது என்ற பயம் அதில் முதன்மையானது. ஹாஸ்டலில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்த ஒவ்வொரு பெற்றோரும் ஐந்தாயிரத்தில் தொடங்கி முப்பதாயிரம் வரை இதற்காகக் கொடுத்திருந்தார்கள். ஒருவேளை ஹாஸ்டல் மூடப்பட்டால் கொடுத்தத் தொகையைத் திரும்ப பெற முடியுமோ? முடியாதோ? என்ற சந்தேகப்பாட்டோடு மேற்கொண்டு பிள்ளைகளை எப்படிப் படிக்க வைப்பது என்ற பயமும் அவர்களைக் கூடுதலாகக் கவ்விக் கொண்டது. இந்த சந்தேகப்பாடும், பயமும் முகிலனின் சாவு பற்றிய எந்தக் கேள்வியையும் எழுப்ப விடாமல் செய்தது. இருப்பினும் ஹாஸ்டல் தரப்பில் முகிலனின் சாவு பற்றிப் பொதுவான விளக்கம் தரப்பட்டது. குடும்பப் பிரச்சனையின் காரணமாகத்தான் முகிலன் ஹாஸ்டலில் தூக்கிட்டுக் கொண்டதாக அந்த விளக்கத்தின் சாராம்சம் இருந்தது.
            முகிலனின் சாவு குறித்து சில குறிப்பிட்ட புலனாய்வுப் பத்திரிகையில் வெளியான செய்திகள் ஹாஸ்டலின் பெயரை நாறடித்தது. அந்தப் பத்திரிகைகளில் சில கேள்விகள் முதன்மையாக எழுப்பப்பட்டிருந்தன. அந்த கேள்விகளின் விவரம் வருமாறு,
            1. அவ்வளவு உயரமான கீற்றுக் கொட்டகையில் ஏழாவது வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் எப்படி ஏறி தூக்கிட்டுக் கொள்ள முடியும்?
            2. ஹாஸ்டலுக்கு நோட்டு எடுக்க வந்ததாகச் சொல்லப்படும் மாணவன் மீண்டும் பள்ளிக்கு வந்தானா இல்லையா என்பதைக் கவனிக்கத் தவறியது எப்படி?
            3. மாணவனின் சாவு குறித்து பள்ளியின் தலைமையாசிரியரோ, கரஸ்பாண்டன்டோ, வார்டனோ வாய் திறக்க மறுப்பது ஏன்? பத்திரிகை நிருபர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?
            4. ஹாஸ்டலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விரும்பத்தகாத பல ரகசியங்களை மறைப்பதற்காகவே கொலையைத் தற்கொலை என்று சொல்லப் பார்க்கிறார்களா?
            5. இவ்வளவு நடந்த பின்னும் ஹாஸ்டல் மூடப்படாமல் தொடர்ந்து நடத்தப்படுவதில் ஒளிந்துள்ள மர்மமென்ன?
            இக்கேள்விகளுக்கு மேலாக வார்டனுக்கும், ஹாஸ்டலில் சமையல் செய்யும் பெண்ணுக்கும் இருந்த ரகசியத் தொடர்பை அந்த நேரத்தில் நோட்டு எடுக்க வந்திருந்த முகிலன் பார்த்திருக்க வேண்டும் என்றும் எங்கே அந்த விசயம் வெளியில் தெரிந்து விடுமோ என்று பயந்துதான் வார்டனும், அந்தப் பெண்மணியும் சேர்ந்து முகிலனைக் கொன்று தூக்கில் தொங்க விட்டிருக்க வேண்டும் என்று அந்தப் பத்திரிகைகள் எழுதியிருந்தன.
            நரிவலம் ஹாஸ்டல் பற்றிய செய்தி வெளியாகிறது என்று தெரிந்த பின் நரிவலத்தில் இருந்த ஒவ்வொருவரின் கையிலும் அதைப் பற்றி எழுதிய புலனாய்வு பத்திரிகைகள் அத்தனையும் இருந்தன. மாவட்டம் முழுவதும் பேசப்படும் பேச்சாக நரிவலம் ஹாஸ்டல் விவகாரம் சில வாரங்கள் வரை பூதாகரமாய் இருந்தது.
            இந்தப் புலனாய்வுப் பத்திரிகைகளின் செய்திகளின் தாக்கம் பின்வரும் தாக்கங்களை ஏற்படுத்தியது.
            முகிலனின் கொலை / தற்கொலைச் சம்பவத்தில் வார்டன் முக்கியப் பொறுப்பாளியாகக் கருதப்பட வேண்டிய நிலைமைக்கு உள்ளானார். அதனால் முதலில் வார்டன் அந்தப் பொறுப்பிலிருந்து தூக்கப்பட்டார். அத்துடன் அவர் பள்ளியில் தற்காலிக எழுத்தராகவும் வேலையில் இருந்தார். அந்தப் பணியிலிருந்தும் அவர் விலகிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அவர் இந்தச் சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களிலிருந்து பள்ளிக்கு வரவில்லை. சில மாதங்கள் அவர் எதுவும் செய்யாமல் வீட்டிலேயே இருந்ததாகவும் அதன் பின்னர் நாகப்பட்டணத்தில் ஏதோ வேலைக்குச் செல்வதாகவும் பேசிக் கொண்டார்கள்.
            புதிய வார்டனாக நரிவலம் பள்ளியில் வேலை பார்த்த இன்னொரு எழுத்தர் தங்கராசு என்பவர் நியமிக்கப்பட்டார்.
            முகிலனின் மரணத்தை அவர்களின் பெற்றோர்கள் ஒரு கொலையாகவே பார்த்தனர். இது ஒரு வழக்காகவே நாகப்பட்டிணம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஹெட்மாஸ்டர் பல நாட்கள் இந்த வழக்குக்காக நாகப்பட்டிணம் போவதும் வருவதுமாக இருந்தார். அத்துடன் வார்டனும் அந்த வழக்கில் ஆஜராவதாகப் பேசிக் கொண்டார்கள்.
*****

இரண்டு துப்பாக்கிகள்



            சோமன், வாமன் இருவர் கையிலும் துப்பாக்கிகள். ஒரே ரக துப்பாக்கிகள்.
            இருவரும் மோசமான அந்தத் துப்பாக்கிச் சண்டைக்குத் தயாராக இருந்தார்கள்.
            சுடுவதில் முந்திக் கொள்பவர் எவரோ அவரே முந்திக் கொண்டவர்.
            விநாடி பிந்தினாலும் பிந்தியவர் கதை முடிந்து விடும்.
            முந்திக் கொண்ட சோமன் தன்னைக் காப்பாற்றியது துப்பாக்கி என்றான்.
            ஒரு நொடி பிந்திய வாமன் தன்னைக் கொன்றது துப்பாக்கி என்ற கடைசி வாசகத்தோடு கண் மூடினான்.
            ஒரே ரக துப்பாக்கிதான். ஒருவனைக் காப்பாற்றுவதாக, இன்னொருவனைக் கொன்றதாக இரண்டு பெயர்களைச் சுட்டுத் தள்ளியது.
*****

மூன்று பேர் - மூன்று சொல்லாடல்கள்



            "கடுமையாக இருப்பதற்காக மன்னியுங்கள். அப்படித்தான் என்னால் இருக்க முடிகிறது" என்றார் அவர்.
            "மென்மையாக இருப்பதற்காக மன்னியுங்கள். அப்படித்தான் என்னால் இருக்க முடிகிறது" என்றார் இவர்.
            "எப்படியுமாக என்னால் இருக்க முடியவில்லை. இந்த முட்டாளை மன்னியுங்கள்" என்றார் அவர்கள் இருவரிடம் மூன்றாமவர்.
            கேட்ட அவரும், இவரும் "எங்களை நாங்களே தீர்மானித்துக் கொண்டதற்காக தயவுசெய்து மன்னியுங்கள்" என்றனர் மூன்றாமவரிடம்.
*****

28 Apr 2019

பிடுங்க விடுவதா? என்பது குறித்த உரை



செய்யு - 68
            ஹெட்மாஸ்டர் திருஞானம் பேசத் தொடங்கினார். அவரது பேச்சு எப்போதும் உணர்ச்சியைத் தூண்டி ஆவேசத்தை உண்டு பண்ணி விடும். அவரது பேச்சைக் கேட்பதன் அபாயம் அதுதான். அவர் பேச்சின் முடிவில் கத்தியை எடுத்துக் கொண்டு போய் யாரையாவது குத்தி விட்டு வா என்று அவர் சொன்னால் கேட்டவர் எவராயினும் கத்தியோடு கிளம்பி விடும் பேராபத்து எப்போதும் இருக்கும். இதைப் பிள்ளைகள் பாடங்களைப் படிக்க வைப்பதற்கான உத்தியாக நெடுநாள் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இப்போது அவருக்குப் பள்ளிக்கூடத்திற்காக ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியத்துக்காகப் பயன்படுத்த வேண்டியதாகி விட்டது.
            "இஞ்ஞ வந்திருக்கும் வாத்தியார்கள், பிள்ளைகள் எல்லாருக்கும் வணக்கம். நடந்து போன விரும்பதகாத சம்பவம் பத்தி ஒங்க எல்லாருக்கும் தெரியும். அந்தச் சம்பவத்துக்கும் பள்ளியோடத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லேன்னும் ஒங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் அதுக்கு எல்லா விதத்திலும் பொறுப்பேத்துக்க பள்ளியோடம் தயாராவே இருக்கு. என்னென்ன பரிகாரங்க பண்ணணுமோ அத்தனையும் செய்ய நாம்ம தயாராவும் இருக்கோம்.
            சில தீய சக்திகள் இத்த விரும்பல. நாம்ம காலங்காலமா காத்து வெச்ச நம்மோட நல்ல பேர்ர அழிக்குறதுல குறியா இருக்காங்க. கொஞ்ச கொஞ்சமா குருவி சேக்குற மாரி சேத்து வெச்ச நம்மோட பெருமைய்ய குழி தோண்டிப் பொதைக்கக் காத்திருக்காங்க.
            இந்தப் பள்ளியோடத்திலேர்ந்து பல்லாயிரக் கணக்கான புள்ளைக படிச்சுட்டுப் போயி டாக்டரா, எஞ்சினியரா, வாத்தியாரா, விஞ்ஞானியா, அரசாங்கத்துல உத்தியோகதஸ்தர்களா இப்படி பலவிதமாக இருக்காங்க. இன்னும் இந்தப் பள்ளியோடத்திலேர்ந்து டாக்டருங்க, எஞ்சினியருங்கன்னு விதவிதமா உருவாகப் போறாங்க. அப்படியெல்லாம் இந்தப் பள்ளியோடத்திலேர்ந்து உருவாகக் கூடாதுன்னு நம்ம பள்ளியோடத்தப் பிடிக்காதவங்க நாசகார வேலய்கள்ல எறங்கியிருக்காங்க. அதுக்கு நாம்ம எடம் கொடுக்கலாமா? நீங்க எல்லாரும் சொல்லுங்க! அதுக்கு நாம்ம எடம் கொடுக்கலாமா?" ஹெட்மாஸ்டர் பிள்ளைகளிடமிருந்து ஒரு பதிலை எதிர்பார்க்கும் உணர்ச்சி வேகத்தோடு கேட்டார்.
            பிள்ளைகள் சில நொடிகள் அமைதியாக இருந்தனர். சுற்றி நின்ற வாத்தியார்மார்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். "கூடாதுங்க சார்! அதுக்கு எடம் கொடுக்கவே கூடாதுங்க சார்!" என்று சொன்னதும், பிள்ளைகளும் கோரஸாக அதைப் பின்தொடர்ந்து சொல்லத் துவங்கினர். ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட அத்தனைப் பிள்ளைகளின் குரலும் சேர்ந்து முன்னால் இருந்த கட்டிடத்தில் மோதி எதிரொலித்தது. ஹெட்மாஸ்டர் முகத்தில் மின்னலைப் போல ஒரு புன்னகைத் தோன்றி மறைந்தது. அடுத்த நொடியே அவரது முகம் தீவிரமானது.
            "இத்தோ இந்த வேப்ப மரம் பாருங்க! ஒரு சின்ன வெதை. அதிலேர்ந்து உண்டான சின்ன கண்ணு. அப்போ இத்த கொண்டாந்து வச்சது. கொஞ்ச கொஞ்சமாக வளந்தது. சின்ன கண்ணு சிறு மரமாச்சு. சிறு மரம் இப்போ பெரு மரமாச்சு. எவ்ளோ நிழல் கொடுக்குது சின்ன வெதயிலேந்து கெளம்புன மரம். எவ்ளோ காத்தக் கொடுக்குது சின்ன கண்ணுலேந்து உண்டான இந்த மரம். இந்த மரத்த நாம புடுங்கலாமா?"
            "புடுங்கக் கூடாது! புடுங்கவே கூடாது!" என்றார்கள் வாத்தியார்களும், பிள்ளைகளும் ஒரே குரலில்.
            "செர்தான். நாமளும் புடுங்கக் கூடாது. மத்தவங்களயும் புடுங்க வுடக் கூடாது. புடுங்க வுடக் கூடாதுல்ல!"
            "கூடாது! ம்ஹூம் கூடவே கூடாதுங்க சார்!"
            "இந்தக் கட்டடம். ஒவ்வொரு செங்கல்லா வெச்சு கட்டுனக் கட்டடம். எவ்ளோ புள்ளைங்க படிச்சிட்டுப் போன, புள்ளைங்க படிச்சிட்டு இருக்குற, வருங்காலத்துல இன்னும் எத்தனையோ புள்ளைங்க படிக்கப் போற கட்டடம். இத்தோட ஒவ்வொரு செங்கல்லயும் உருவு எறியறன்னு செல பேரு வந்தா வுட்டுடலாமா? எவ்ளோ புள்ளைங்க படிச்ச சத்தத்த, வாத்தியாருமாருக பாடம் நடத்துன சத்தத்த இந்தச் செங்கல்லுங்க ஒவ்வொண்ணும் கேட்டுருக்கும். இத்த நாமளும் உருவு எறிஞ்சிடக் கூடாது. யாரும் உருவி எறியறன்னு வந்தாலும் உருவி எறிஞ்சிட வுட்டுடக் கூடாது. அல்லாருக்கும் இந்த பள்ளியோடம்தான் எல்லாமும். இத்து இருந்தாத்தான் இன்னும் தலமொற தலமொறயா படிக்குறவங்க இங்கேர்ந்து வருவாங்க. இத்து இல்லாமப் போச்சுன்னா வேற ஊர்லேந்தெல்லாம் இஞ்ஞ படிக்க யாரு வரப் போறாங்க? இஞ்ஞ இருக்குறவங்க வேற ஊருக்குப் போயிட்டு வார மாரி ஆயிடும். நாம்மகிட்ட இருக்குற ஒண்ண நாம்ம வுட்டுக் கொடுத்துடலாமா?"
            "கூடாதுங்க சாரு!"
            "கூடாதுல்ல. நம்ம பள்ளியோடத்த வுட்டுக் கொடுத்துடறதுங்றது நம்மள வுட்டுக் கொடுத்துடறது மாரி. நம்மகிட்ட பாதுகாப்பா கொடுத்த பொக்கிஷத்த நாமள அலட்சியமா வீசி எறிஞ்சிட மாரி. எத்தன பேரு வந்தாலும் இந்தப் பள்ளியோடம் புடுங்க முடியாத வேப்பமரம் மாரி. எத்தன பேரு வந்தாலும் இந்தப் பள்ளியோடத்திலேந்து ஒத்த செங்கல்ல உருவி எடுக்க முடியாது. இத்து கோட்ட. இந்தக் கோட்டயிலேந்து ஒருத்தனும் ஒரு புடி மண்ண கூட அள்ளிட்டுப் போவ வுட்டுடக் கூடாது! ஒங்களுக்கு இப்போ வெசயம் புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேம். நம்ம பள்ளியோடத்திலேந்து ஒருத்தனும் எத்தயும் புடுங்கிட்டுப் போயிட முடியாதுங்றது காட்டியாகணும். நம்ம பள்ளியோடத்துக்காக, ஒங்க பள்ளியோடத்துக்காக வர்ற ஞாயித்துக் கெழம நம்ம பள்ளியோடத்து முன்னாடி ஒரு பெருந்திரள் கூட்டத்தக் கூட்டுறோம். அமைதி ஊர்வலத்த ஒண்ணு நடத்துறோம். ந்நல்லா தெரிஞ்சுக்கணும். அந்தக் கூடத்துக்கு ஊர்வலத்துக்கு பிள்ளைங்க நீங்க யாரும் வரக் கூடாது. ஒங்க தாயி தகப்பங்க மட்டுந்தாம் வரணும். அதுக்கும் மேல கிராமத்துல உள்ளவங்கள நம்ம அய்யா கூட்டிப்பாங்க. ஒங்க தாயி தகப்பங்க வர்ற ஞாயித்துக் கெழம கலந்துக்கலாமா? சொல்லுங்க!"
            "கலந்துக்கலாம் சார்!"
            "ஒவ்வொரு புள்ளைக்கும் கட்டாயம் அவங்களோட தாயி, தகப்பங்க ரண்டு பேரும் கலந்துக்கணும். இது ஒனக்காக மட்டுமில்ல. வரக் காலத்துல ஒம்மோட தம்பி, தங்கச்சி, ஏம் ஒம்மோட புள்ள குட்டிங்க, பேரம் பேத்திங்க எல்லாரும் படிக்கணும். இந்தப் பள்ளியோடத்துல படிக்கணும். அதுக்கு இந்தப் பள்ளியோடம் இந்த இடத்துல இந்த நரிவலத்துல இப்ப எப்படி இருக்கோ அப்படி இருந்தாகணும். சில கெட்டச் சக்திங்க நெனக்கிற மாரி இத்து அழிஞ்சிடப் படாது. அழிக்க வுட்டுடவும் கூடாது.
            இந்த வேப்பமரத்த ஆயிரம் கையி சேந்தாலும் பிடுங்கிட முடியாது.
            இந்தக் கட்டடத்த ஒரு லட்சம் கையி சேந்தாலும் அசைச்சிட முடியாது.
            இந்தப் பள்ளியோடத்த கோடி பேரு கூடினாலும் ஒரு மசுரும் புடுங்கிட முடியாது.
            அத்த நீங்கதான் காட்டணும். வூட்டுல ஒவ்வொரு புள்ளையும் சொல்லணும். நம்ம அய்யாவும் ஆள வுட்டு சொல்லச் சொல்லியிருக்காங்க!
            இத்து நம்ம வேப்பமரம். இத்து நம்ம கட்டடம். இத்து நம்ம பள்ளியோடம். நீங்களே சொல்லுங்க! இத்து யாரோட பள்ளியோடம்?"
            "நம்மோட பள்ளியோடம்!"
            "இத்த யாரு பாத்துக்கணும்?"
            "நாம்மத்தாம் பாத்துக்கணும்!"
            "இத்துல யாரயும் கையி வெக்க வுட்டுடலாமா?"
            "வுடக் கூடாது!"
            கேட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்த வாத்தியார்மார்களும், உட்கார்ந்திருந்த ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கும் காட்டுத் தீயைப் போல எரியும் ஆவேசம் உண்டானது.
            நிலைமையின் தீவிரம் அப்போது அப்படி இருந்தது. முகிலனின் அப்பா நடத்திய கண்டனப் பேரணியும், கண்டன ஆர்ப்பாட்டமும் பத்திரிகைச் செய்திகளாகி புலனாய்வுப் பத்திரிகைகளில் விவாதப் பொருளாகி விட்டது. ஹெட்மாஸ்டரின் ஆவேசப் பேச்சின் பின்னாலிருந்து பின்னணி அதுதான்.
            அந்த ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கூடத்தின் முன் பெருங்கூட்டம் கூடியது. ஊரில் இருந்த ஒவ்வொருவருக்கும் நரிவலம் பள்ளிக்கூடம் மூடப்பட்டு விடுமோ என்ற பயம் ஹெட்மாஸ்டரின் பேச்சு மூலம் உருவாகியிருக்க வேண்டும். கண்டியப்பநாதரின் மருமகன் மணிவாசகநாதரும் ஆட்களை விட்டு அப்படி ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டிருக்க வேண்டும். முகிலனின் மரணத்துக்காக அனுதாபப்பட்டவர்களின் மனநிலையில் கணிசமான மாற்றம் உண்டாகியிருக்க வேண்டும்.
            முகிலனின் அப்பாவின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற பேரணி, ஆர்பாட்டத்தைப் போல இதுவும் 'பள்ளியைக் காக்க திரண்ட ஊர் மக்கள்' என்ற தலைப்பில் பத்திரிகை செய்தியானது. புலனாய்வுப் பத்திரிகைகள் இதற்காகச் செய்தி சேகரிக்க வந்திருந்தாலும் அவைகள் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அந்தப் பத்திரிகைகள் இதை ஒரு சாதாரண செய்தியாகக் கூட பிரசுரிக்கவில்லை.
*****

மீண்டும் ஒருமுறை சாப்பிடுங்கள்!



            இந்தப் பதவியை எங்கே விட முடிகிறது? வேண்டாம் என்று ஓய்வு கொடுத்து அனுப்பிய ஓய்வுக்குப் பின்னும் பதவியை எழுதி அடைப்புக்குறிக்குள் ஓய்வு என்று எழுதிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது! பதவி படுத்தும் பாடு சாமான்யப்பட்டதா என்ன?!
*****
            கொள்ளை இட்டதில் நல்லது எது? கெட்டது எது?
            உழைத்ததில் கெட்டது எது? நல்லது எது?
            இந்த உழைப்பு கொள்ளையிட்டதற்காக உழைத்தது.
            கொள்ளைக்காரனிடம் கணக்குப் பிள்ளை வேலை பார்ப்பதும், கணக்குப் பிள்ளை கொள்ளைக்காரனாய் இருப்பதும் ஒன்றா? இரண்டா? இரண்டும் வெவ்வேறா?
*****
            இந்த நேரம் வீணாகி விட்டது. நல்லது. இந்த நேரத்தின் சிறப்பே அதுதான். இந்த நேரத்தை இன்னொரு முறை நீ வீணாக்க முடியாது. அத்தோடு முடிந்தது.
*****
            எப்படி இருப்பதிலும் ஒரு பிரச்சனையில்லை. அப்படி இருப்பதாக நினைத்துக் கொள்வதில்தான் எல்லா பிரச்சனைகளும் இருக்கிறது. ஒரு மரத்துக்கு தான் மரமாக இருப்பது புரியுமோ என்னவோ! அது மரமாக இருக்கிறது. அவ்வளவுதான்.
*****
            நீங்கள் சாப்பிடும் போது தண்ணீர் டம்ப்ளர் தட்டின் இடது புறம் இருந்ததா? வலது புறம் இருந்ததா? அல்லது தண்ணீர் டம்ப்ளரே இல்லையா? உங்களுக்கு மறந்து விட்டது என்றால், நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை என்றால் தயவுசெய்து மீண்டும் ஒருமுறை சாப்பிட்டு வாருங்கள். தண்ணீர் டம்ப்ளர் நழுவி எங்கே விழுந்தது என்று கண்டுபிடியுங்கள்.
*****

27 Apr 2019

கண்டன ஆர்ப்பாட்டம்



செய்யு - 67
            நரிவலம் ஹாஸ்டலில் ஒரு பிள்ளை தூக்கில் தொங்கினான் என்ற செய்தி சுற்றுமட்டும் பரவ ஆரம்பித்தது. மறுநாளிலிருந்து பெற்றோர்கள் நரிவலம் ஹாஸ்டலில் வந்து பார்க்கத் தொடங்கினர். சாதாரண நாட்களில் இப்படி எந்தப் பெற்றோரும் பிள்ளைகளை வந்து பார்த்து விட முடியாது. நிகழ்ந்திருந்த அசாதாரணச் சூழ்நிலையால் பெற்றோர்கள் வந்து பிள்ளைகளைப் பார்ப்பது குறித்து ஹாஸ்டல் நிர்வாகத்தால் ஒன்றும் சொல்ல முடியாமல் போய் விட்டது.
            சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கையோடு அழைத்துப் போக விரும்பினார்கள். சில நாட்கள் வீட்டில் வைத்துக் கொண்டு பிறகு கொண்டு வந்து விடுவதாகக் கூறினார்கள். அதற்கும் ஹாஸ்டல் நிர்வாகத்தால் எந்தப் பதிலும் கூற முடியவில்லை.
            ஹெட்மாஸ்டர் தன் அதிகார எல்லைகள் கண் முன்னே காணாமல் போவதாக உணர்ந்திருக்க வேண்டும். அவர் தன் அதிகாரம் எதையும் பிரயோகிக்க முடியாத நிலையில் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் எந்தப் பெற்றோரும் அவரை அணுகி இப்படியெல்லாம் கேட்டு விட முடியாது. பெற்றோர்களின் விருப்பத்துக்கு முதன் முதலாக அவர் அடிபணிந்தார். அடிபணிவது போல நடித்தும் இருக்கலாம்.  இதனால் பிள்ளைகள் வீட்டுக்கும், ஹாஸ்டலுக்கும் மாறி மாறி போய் வந்து கொண்டிருந்தனர். இப்படிப் பிள்ளைகள் தங்கள் போக்குக்குப் போய்க் கொண்டிருப்பது அவருக்கு எரிச்சலைத் தந்திருக்க வேண்டும்.
            நிலைமையின் தீவிரம் எப்படி இருந்தது என்றால் ஹெட்மாஸ்டர் மணிவாசகநாதரைப் பார்த்து தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் போதவில்லை என்று கத்தினார். "இப்போ இருக்குற ஹாஸ்டல் நடைமொறையில எம்ம கைய்ய மொடக்கிப் போட்டிருக்கீங்க. பெரியய்யா இருந்தப்பவே நாமதாம் சொதந்திரமா முடிவெடுத்தோம். எவ்வளவோ மோசமான நெலமைகள சமாளிச்சிருக்கோம். இப்போ நம்ம செயல்பாடு நமக்கேப் புடிக்கல. ரொம்ப கொற மனசோடும் இருக்கேம்!" என்று குறைபட்டுக் கொண்டார்.
            மணிவாசகநாதருக்கு ஹாஸ்டல் நடத்தியதில் இருந்த ஆர்வம் போயிருக்க வேண்டும். "இந்த வருஷம் மட்டும் ஹாஸ்டல் எந்தப் பாடாவது நடந்து ஒழியட்டும். இதல்லாம் நம்மால தூக்கிச் சொமக்க முடியாது. தேவல்லாத சொம. ஒங்களுக்கு என்னக் கொடுக்கணுமோ, என்ன செய்யணுமோ அது கொடுக்கப்பட்டுட்டும் செய்யப்பட்டுட்டுதாம் இருக்கு. இப்போ இருக்குற நெலமயில யாரும் எதுவும் செய்ய வாணாம். அப்படியே அது அது போகுற போக்குல போகட்டும். நீங்க மனக்கொற இல்லாம போயிட்டு வாங்க!" என்பதாகப் பதில் சொன்னார். அதற்கு மேல் ஹெட்மாஸ்டர் இந்த விசயத்தில் எதுவும் பேசவில்லை.
            இதனால் ஹாஸ்டலில் பிள்ளைகளை எழுப்பி விடுவதில் கட்டுபாடு தளர்ந்தது. பிள்ளைகள் குளித்து விட்டு பிரேயருக்கு வந்து அஜராகும் நேரமும் முன்னே பின்னே ஆனது. வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் துணிகளைத் துவைத்து விட்டு பத்து மணிக்குள் வந்து விட வேண்டும் என்ற கால எல்லைகள் காற்றில் பறந்தன. பிள்ளைகள் பதினொன்று, பனிரெண்டு மணி வரை பொறுமையாக துணிகளைத் துவைத்து விட்டு சாவகாசமாக சாப்பிட்டனர்.
            பதினோரு பனிரெண்டு மணிக்கு பிள்ளைகள் துணிகளைத் துவைத்துத் துண்டைக் கட்டிக் கொண்டு வாளியில் எடுத்து வருவதை சமயங்களில் அந்தப் பக்கமாக சைக்கிளில் வரும் ஹெட்மாஸ்டர் பார்த்தும் பார்க்காதது போல போய்க் கொண்டிருந்தார்.
            அநேகமாக எல்லா பெற்றோர்களும் வந்து பார்த்த பிறகு கடைசியாக அதுவும் ஒரு வார காலத்துக்கு மேல் ஆன பின்புதான் அப்பா விடுவை வந்து பார்த்தார். தினத்தாளில் செய்தி பார்த்து வந்ததாக அவர் சொன்னார். அப்பாவுக்கு இனியும் தொடர்ந்து இந்த ஹாஸ்டலில் விடுவைப் படிக்க வைக்க வேண்டுமா என்ற குழப்பம் இருந்திருக்க வேண்டும். விகடுவின் வாயால் நிகழ்ந்த சம்பவத்தைக் கேட்டுக் கொண்டார். தைரியமாக இந்த வருஷம் மட்டும் ஹாஸ்டலில் இருந்து ஓட்டி விடுமாறு அவர் விகடுவிடம் கூறினார்.
            "இஞ்ஞ ல்லா புள்ளைகளும் வூட்டுக்குப் போயிட்டு வாராங்கப்பா!" என்றான் விகடு. அப்பாவுக்கு விகடுவின் ஏக்கம் புரிந்திருக்க வேண்டும். "நீயும் வேணும்னா இருந்துட்டு வாயேம். அழச்சிட்டுப் போறேம்" என்றார்.
            "வேண்டாம்ப்பா!" என்று மறுத்து விட்டான் விகடு.
            விகடு இப்படி மறுத்தாலும் அடுத்து சில வாரங்களுக்குப் பின் ஹாஸ்டல் நிர்வாகத்தின் சார்பில் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை அந்த வாரத்தின் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் மட்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று திங்கள் கிழமை காலையில் கொண்டு வந்து விடுமாறு கடிதம் போட்டார்கள். வழக்கமாக காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு விடுமுறைகளை அறிவித்து இப்படிக் கடிதம் போடுவார்கள். இது போன்று அவர்கள் கடிதம் எழுதியது அவர்களின் ஹாஸ்டல் வரலாற்றில் அதுதான் முதல்முறை. அதற்கு ஒரு காரணம் இருந்தது.
            அகால மரணமடைந்த முகிலனின் அப்பா உழைக்கும் போராளிகள் எனும் கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்தார். அவர் முகிலனின் மரணத்தை அத்தோடு விட்டு விட விரும்பவில்லை. தனது மகனின் மரணத்தை அவர் சந்தேக மரணமாக வழக்கு பதிய வைத்திருந்தார். அத்தோடு நாகப்பட்டிணம் நீதிமன்றத்திலும் வழக்கு பதிந்திருந்தார்.
            அவர் தான் சார்ந்திருந்த கட்சியின் சார்பாக தனது மகன் முகிலனின் மரணத்துக்கு நியாயம் கேட்டு அந்த ஞாயிற்றுக் கிழமை அன்று கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆர்ப்பாட்டம் பள்ளியில் தொடங்கி ஹாஸ்டலில் முடியும் வகையில் அவர் திட்டமிட்டிருந்தார். இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் போது ஹாஸ்டலில் பிள்ளைகள் இருப்பதை ஹெட்மாஸ்டரும், மணிவாசகநாதரும் விரும்பாமல் இருந்திருக்கலாம். இந்தக் கண்டனப் பேரணி மற்றும் ஆர்பாட்டத்துக்கு அவர்கள் தடையாணை பெற முயன்றதாகவும் ஆனால் அது முடியாமல் போய் விட்டதாகவும் நரிவலத்தில் ஒரு பேச்சு அடிபட்டது. அத்துடன் முகிலனின் அப்பாவோடு சமரசப் பேச்சிலும் ஈடுபட்டுப் பார்த்தார்கள். அதுவும் எடுபடாமல் போய் விட்டது.
            அந்த சனி, ஞாயிறன்று விகடு உட்பட எல்லா பிள்ளைகளும் ஹாஸ்டலை விட்டு பெற்றோர்களோடு அவரவர் வீடுகளுக்குப் போயிருந்தனர். திங்கள் கிழமை காலையில்தான் பிள்ளைகள் ஹாஸ்டலுக்கு வந்தனர். நரிவலம் முழுவதும் ஹாஸ்டலும், பள்ளிக்கூடமும் பெயர்ந்து விழுந்து விட்டது போல பேசிக் கொண்டிருந்தார்கள். நரிவலத்தில் கூடிய கண்டனக் கூட்டம் பெருங்கூட்டமாக இருந்ததாகவும், பள்ளி நிர்வாகத்தையும், ஹாஸ்டல் நிர்வாகத்தையும் ஒழித்துக் கட்டும் வகையில் கூடியவர்கள் முழக்கமிட்டதாகவும் பேசிக் கொண்டார்கள். அவ்வளவு ஆட்களை முகிலனின் அப்பா எங்கிருந்து திரட்டிக் கொண்டு வந்தால் என்று நரிவலமே ஆச்சரியப்பட்டுப் போனது. அவர் சொத்துபத்தில் கூடுதல் குறைச்சல் இருந்தாலும் செல்வாக்கான ஆளாகத்தான் இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.
            நரிவலத்தில் பெரும்புள்ளியாக மணிவாசகநாதரும், ஆண்டியப்பநாதரும் இருந்த போதும் இதை அவர்களால் தடுக்க முடியாமல் போனது பெரும் பின்னடைவாகவும் பேசப்பட்டது. ஆண்டியப்பநாதர் கையில் தற்போது பள்ளியின் நிர்வாகம் இல்லாமல் இருந்ததால் இந்த விசயத்தில் அவர் அதிகம் பட்டுக் கொள்ளவில்லை என்றும் பேசப்பட்டது.
            இந்தப் பின்னடைவைச் சாதாரணமாக விட்டு விடக் கூடியவரா ஹெட்மாஸ்டர். அவரின் அபாரமான மூளை கண்டமேனிக்கு யோசித்துக் கொண்டிருந்தது. அவர் இந்தக் கண்டனக் கூட்டம் மற்றும் பேரணிக்கு எதிராக அமைதிப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்ய திட்டமிட்டார். அதற்காக அவர் பிள்ளைகள் மத்தியில் பேசினார். வழக்கமாக நடைபெறும் வழிபாட்டுக் கூட்டம் போல் அல்லாமல் மதியம் நான்கு மணி வாக்கில் பள்ளிக்கூடத்தின் எல்லா பிள்ளைகளையும் பிரதானக் கட்டிடத்தின் முன்பாக அவர் கூட்டினார். பிள்ளைகள் வகுப்புவாரியாக வரிசையாக வேப்பமர நிழலில் அமர்ந்திருந்தார்கள். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பிள்ளைகளுக்குப் பின்பாக நின்று கொண்டிருந்தனர். அன்று அவர் பேசியது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உரை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் பேசி முடித்ததும் பிள்ளைகள் அவ்வளவு உணர்ச்சிவயப்பட்டிருந்தார்கள். ஆசிரியர்களும்தான்.
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...