செய்யு - 69
முகிலனின்
மரண விசயத்தில் நிகழ்ந்தது கொலையா? தற்கொலையா? என்பது ஹாஸ்டலோடு தொடர்புடைய பிள்ளைகளுக்கும்,
பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் அது ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியது.
உண்மையில் குழந்தைகள் தொடர்பான கொலைகளும்,
தற்கொலைகளும் பரிதபாகரமானவைகள். சில நாட்கள் அது குறித்து உக்கிரமான பேச்சுகளும்,
கண்டிப்புகளும் உயிரோடு இருந்து பின்பு அவை இறந்து போன குழந்தைகளைப் போல மரித்துப்
போய் விடும்.
இந்த உலகமும் அது குறித்து கவலைப்படுவதில்லை.
ஒரு குழந்தைப் போனால் என்ன? இந்த உலகுக்கு ஏராளமான குழந்தைகள் இருக்கின்றன. போய்
விட்ட குழந்தையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க முடியுமா? இருக்கின்ற குழந்தைகளைதான்
நினைவில் வைத்துக் கொள்ள இந்த உலகுக்கு முடிகிறதா? தத்தித் தப்பி குழந்தைகள் பிழைத்துக்
கொள்ள வேண்டும் என்றே இந்த உலகம் எதிர்பார்க்கிறது. எதுவாக இருந்தாலும் துணிவுடன்
எதிர்கொள்ள வேண்டாமா? என்று இந்த உலகம் கேட்கும் கேள்வியில் தற்கொலைகள் மீண்டும்
சுருக்கிட்டுக் கொள்வதைத் தவிர வேறு வழியென்ன இருக்கிறது? அது ஒரு கொலையாக இருந்தாலும்
நடந்துது நடந்துப் போச்சு என்று துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு இந்த உலகம்
சுழல ஆரம்பித்து விடுகிறது.
உலகமே இப்படி எனும் போது அந்த உலகத்தின்
சிறு புள்ளியாக இருந்த பள்ளிக்கூடமும் அப்படித்தான் சிந்தித்தது. அதற்கு தன்னிடம் படிக்கும்
ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் முக்கியம். ஒரு பிள்ளை தவறி விட்டான் என்பதற்காக
அது மற்ற ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைத் துடைத்தெறிந்து விட முடியுமா?
அது அந்த ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைக் கேடயமாக வைத்த படியே தவறிப் போன
ஒரு பிள்ளையைப் பற்றிப் பேச்செடுக்க விடாமல் செய்தது.
ஹாஸ்டலைப் பொருத்த வரையில் அங்கிருந்த
ஐம்பதுக்கும் குறைவான பிள்ளைகளில் தவறிப் போன முகிலனின் சாவு பெரிய தாக்கத்தை உண்டு
பண்ணியிருந்தது. ஹாஸ்டலுக்கும் அதே போன்ற ஒரு கணக்கு இருக்கவே செய்கிறது. அதற்கும்
தவறிப் போன ஒரு பிள்ளையைத் தூக்கிக் காட்டுவதை சில நாட்களுக்குப் பிறகு நிறுத்திக்
கொண்டு இருக்கின்ற பிள்ளையைத்தான் தூக்கிக் காட்ட ஆரம்பிக்கும்.
லாவணிப் பாடுவதைப் போல மாறி மாறி நடந்த
பேரணிகள் ஹாஸ்டல் பிள்ளைகளின் பெற்றோர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தன.
கலவையான பயம் பெற்றவர்களின் மனதில் பரவ ஆரம்பித்தது.
நடக்கின்ற சம்பவங்களைக் காரணம் காட்டி
ஹாஸ்டல் மூடப்பட்டால் என்னாவது என்ற பயம் அதில் முதன்மையானது. ஹாஸ்டலில் தங்கள் பிள்ளைகளைச்
சேர்த்த ஒவ்வொரு பெற்றோரும் ஐந்தாயிரத்தில் தொடங்கி முப்பதாயிரம் வரை இதற்காகக்
கொடுத்திருந்தார்கள். ஒருவேளை ஹாஸ்டல் மூடப்பட்டால் கொடுத்தத் தொகையைத் திரும்ப
பெற முடியுமோ? முடியாதோ? என்ற சந்தேகப்பாட்டோடு மேற்கொண்டு பிள்ளைகளை எப்படிப்
படிக்க வைப்பது என்ற பயமும் அவர்களைக் கூடுதலாகக் கவ்விக் கொண்டது. இந்த சந்தேகப்பாடும்,
பயமும் முகிலனின் சாவு பற்றிய எந்தக் கேள்வியையும் எழுப்ப விடாமல் செய்தது. இருப்பினும்
ஹாஸ்டல் தரப்பில் முகிலனின் சாவு பற்றிப் பொதுவான விளக்கம் தரப்பட்டது. குடும்பப்
பிரச்சனையின் காரணமாகத்தான் முகிலன் ஹாஸ்டலில் தூக்கிட்டுக் கொண்டதாக அந்த விளக்கத்தின்
சாராம்சம் இருந்தது.
முகிலனின் சாவு குறித்து சில குறிப்பிட்ட
புலனாய்வுப் பத்திரிகையில் வெளியான செய்திகள் ஹாஸ்டலின் பெயரை நாறடித்தது. அந்தப் பத்திரிகைகளில்
சில கேள்விகள் முதன்மையாக எழுப்பப்பட்டிருந்தன. அந்த கேள்விகளின் விவரம் வருமாறு,
1. அவ்வளவு உயரமான கீற்றுக் கொட்டகையில்
ஏழாவது வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் எப்படி ஏறி தூக்கிட்டுக் கொள்ள முடியும்?
2. ஹாஸ்டலுக்கு நோட்டு எடுக்க வந்ததாகச்
சொல்லப்படும் மாணவன் மீண்டும் பள்ளிக்கு வந்தானா இல்லையா என்பதைக் கவனிக்கத் தவறியது
எப்படி?
3. மாணவனின் சாவு குறித்து பள்ளியின் தலைமையாசிரியரோ,
கரஸ்பாண்டன்டோ, வார்டனோ வாய் திறக்க மறுப்பது ஏன்? பத்திரிகை நிருபர்களைச் சந்திக்க
மறுப்பது ஏன்?
4. ஹாஸ்டலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
விரும்பத்தகாத பல ரகசியங்களை மறைப்பதற்காகவே கொலையைத் தற்கொலை என்று சொல்லப் பார்க்கிறார்களா?
5. இவ்வளவு நடந்த பின்னும் ஹாஸ்டல் மூடப்படாமல்
தொடர்ந்து நடத்தப்படுவதில் ஒளிந்துள்ள மர்மமென்ன?
இக்கேள்விகளுக்கு மேலாக வார்டனுக்கும்,
ஹாஸ்டலில் சமையல் செய்யும் பெண்ணுக்கும் இருந்த ரகசியத் தொடர்பை அந்த நேரத்தில் நோட்டு
எடுக்க வந்திருந்த முகிலன் பார்த்திருக்க வேண்டும் என்றும் எங்கே அந்த விசயம் வெளியில்
தெரிந்து விடுமோ என்று பயந்துதான் வார்டனும், அந்தப் பெண்மணியும் சேர்ந்து முகிலனைக்
கொன்று தூக்கில் தொங்க விட்டிருக்க வேண்டும் என்று அந்தப் பத்திரிகைகள் எழுதியிருந்தன.
நரிவலம் ஹாஸ்டல் பற்றிய செய்தி வெளியாகிறது
என்று தெரிந்த பின் நரிவலத்தில் இருந்த ஒவ்வொருவரின் கையிலும் அதைப் பற்றி எழுதிய
புலனாய்வு பத்திரிகைகள் அத்தனையும் இருந்தன. மாவட்டம் முழுவதும் பேசப்படும் பேச்சாக
நரிவலம் ஹாஸ்டல் விவகாரம் சில வாரங்கள் வரை பூதாகரமாய் இருந்தது.
இந்தப் புலனாய்வுப் பத்திரிகைகளின் செய்திகளின்
தாக்கம் பின்வரும் தாக்கங்களை ஏற்படுத்தியது.
முகிலனின் கொலை / தற்கொலைச் சம்பவத்தில்
வார்டன் முக்கியப் பொறுப்பாளியாகக் கருதப்பட வேண்டிய நிலைமைக்கு உள்ளானார். அதனால்
முதலில் வார்டன் அந்தப் பொறுப்பிலிருந்து தூக்கப்பட்டார். அத்துடன் அவர் பள்ளியில்
தற்காலிக எழுத்தராகவும் வேலையில் இருந்தார். அந்தப் பணியிலிருந்தும் அவர் விலகிக் கொள்ளும்படி
கேட்டுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அவர் இந்தச் சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களிலிருந்து
பள்ளிக்கு வரவில்லை. சில மாதங்கள் அவர் எதுவும் செய்யாமல் வீட்டிலேயே இருந்ததாகவும்
அதன் பின்னர் நாகப்பட்டணத்தில் ஏதோ வேலைக்குச் செல்வதாகவும் பேசிக் கொண்டார்கள்.
புதிய வார்டனாக நரிவலம் பள்ளியில் வேலை
பார்த்த இன்னொரு எழுத்தர் தங்கராசு என்பவர் நியமிக்கப்பட்டார்.
முகிலனின் மரணத்தை அவர்களின் பெற்றோர்கள்
ஒரு கொலையாகவே பார்த்தனர். இது ஒரு வழக்காகவே நாகப்பட்டிணம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
ஹெட்மாஸ்டர் பல நாட்கள் இந்த வழக்குக்காக நாகப்பட்டிணம் போவதும் வருவதுமாக இருந்தார்.
அத்துடன் வார்டனும் அந்த வழக்கில் ஆஜராவதாகப் பேசிக் கொண்டார்கள்.
*****
No comments:
Post a Comment