27 Apr 2019

கண்டன ஆர்ப்பாட்டம்



செய்யு - 67
            நரிவலம் ஹாஸ்டலில் ஒரு பிள்ளை தூக்கில் தொங்கினான் என்ற செய்தி சுற்றுமட்டும் பரவ ஆரம்பித்தது. மறுநாளிலிருந்து பெற்றோர்கள் நரிவலம் ஹாஸ்டலில் வந்து பார்க்கத் தொடங்கினர். சாதாரண நாட்களில் இப்படி எந்தப் பெற்றோரும் பிள்ளைகளை வந்து பார்த்து விட முடியாது. நிகழ்ந்திருந்த அசாதாரணச் சூழ்நிலையால் பெற்றோர்கள் வந்து பிள்ளைகளைப் பார்ப்பது குறித்து ஹாஸ்டல் நிர்வாகத்தால் ஒன்றும் சொல்ல முடியாமல் போய் விட்டது.
            சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கையோடு அழைத்துப் போக விரும்பினார்கள். சில நாட்கள் வீட்டில் வைத்துக் கொண்டு பிறகு கொண்டு வந்து விடுவதாகக் கூறினார்கள். அதற்கும் ஹாஸ்டல் நிர்வாகத்தால் எந்தப் பதிலும் கூற முடியவில்லை.
            ஹெட்மாஸ்டர் தன் அதிகார எல்லைகள் கண் முன்னே காணாமல் போவதாக உணர்ந்திருக்க வேண்டும். அவர் தன் அதிகாரம் எதையும் பிரயோகிக்க முடியாத நிலையில் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் எந்தப் பெற்றோரும் அவரை அணுகி இப்படியெல்லாம் கேட்டு விட முடியாது. பெற்றோர்களின் விருப்பத்துக்கு முதன் முதலாக அவர் அடிபணிந்தார். அடிபணிவது போல நடித்தும் இருக்கலாம்.  இதனால் பிள்ளைகள் வீட்டுக்கும், ஹாஸ்டலுக்கும் மாறி மாறி போய் வந்து கொண்டிருந்தனர். இப்படிப் பிள்ளைகள் தங்கள் போக்குக்குப் போய்க் கொண்டிருப்பது அவருக்கு எரிச்சலைத் தந்திருக்க வேண்டும்.
            நிலைமையின் தீவிரம் எப்படி இருந்தது என்றால் ஹெட்மாஸ்டர் மணிவாசகநாதரைப் பார்த்து தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் போதவில்லை என்று கத்தினார். "இப்போ இருக்குற ஹாஸ்டல் நடைமொறையில எம்ம கைய்ய மொடக்கிப் போட்டிருக்கீங்க. பெரியய்யா இருந்தப்பவே நாமதாம் சொதந்திரமா முடிவெடுத்தோம். எவ்வளவோ மோசமான நெலமைகள சமாளிச்சிருக்கோம். இப்போ நம்ம செயல்பாடு நமக்கேப் புடிக்கல. ரொம்ப கொற மனசோடும் இருக்கேம்!" என்று குறைபட்டுக் கொண்டார்.
            மணிவாசகநாதருக்கு ஹாஸ்டல் நடத்தியதில் இருந்த ஆர்வம் போயிருக்க வேண்டும். "இந்த வருஷம் மட்டும் ஹாஸ்டல் எந்தப் பாடாவது நடந்து ஒழியட்டும். இதல்லாம் நம்மால தூக்கிச் சொமக்க முடியாது. தேவல்லாத சொம. ஒங்களுக்கு என்னக் கொடுக்கணுமோ, என்ன செய்யணுமோ அது கொடுக்கப்பட்டுட்டும் செய்யப்பட்டுட்டுதாம் இருக்கு. இப்போ இருக்குற நெலமயில யாரும் எதுவும் செய்ய வாணாம். அப்படியே அது அது போகுற போக்குல போகட்டும். நீங்க மனக்கொற இல்லாம போயிட்டு வாங்க!" என்பதாகப் பதில் சொன்னார். அதற்கு மேல் ஹெட்மாஸ்டர் இந்த விசயத்தில் எதுவும் பேசவில்லை.
            இதனால் ஹாஸ்டலில் பிள்ளைகளை எழுப்பி விடுவதில் கட்டுபாடு தளர்ந்தது. பிள்ளைகள் குளித்து விட்டு பிரேயருக்கு வந்து அஜராகும் நேரமும் முன்னே பின்னே ஆனது. வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் துணிகளைத் துவைத்து விட்டு பத்து மணிக்குள் வந்து விட வேண்டும் என்ற கால எல்லைகள் காற்றில் பறந்தன. பிள்ளைகள் பதினொன்று, பனிரெண்டு மணி வரை பொறுமையாக துணிகளைத் துவைத்து விட்டு சாவகாசமாக சாப்பிட்டனர்.
            பதினோரு பனிரெண்டு மணிக்கு பிள்ளைகள் துணிகளைத் துவைத்துத் துண்டைக் கட்டிக் கொண்டு வாளியில் எடுத்து வருவதை சமயங்களில் அந்தப் பக்கமாக சைக்கிளில் வரும் ஹெட்மாஸ்டர் பார்த்தும் பார்க்காதது போல போய்க் கொண்டிருந்தார்.
            அநேகமாக எல்லா பெற்றோர்களும் வந்து பார்த்த பிறகு கடைசியாக அதுவும் ஒரு வார காலத்துக்கு மேல் ஆன பின்புதான் அப்பா விடுவை வந்து பார்த்தார். தினத்தாளில் செய்தி பார்த்து வந்ததாக அவர் சொன்னார். அப்பாவுக்கு இனியும் தொடர்ந்து இந்த ஹாஸ்டலில் விடுவைப் படிக்க வைக்க வேண்டுமா என்ற குழப்பம் இருந்திருக்க வேண்டும். விகடுவின் வாயால் நிகழ்ந்த சம்பவத்தைக் கேட்டுக் கொண்டார். தைரியமாக இந்த வருஷம் மட்டும் ஹாஸ்டலில் இருந்து ஓட்டி விடுமாறு அவர் விகடுவிடம் கூறினார்.
            "இஞ்ஞ ல்லா புள்ளைகளும் வூட்டுக்குப் போயிட்டு வாராங்கப்பா!" என்றான் விகடு. அப்பாவுக்கு விகடுவின் ஏக்கம் புரிந்திருக்க வேண்டும். "நீயும் வேணும்னா இருந்துட்டு வாயேம். அழச்சிட்டுப் போறேம்" என்றார்.
            "வேண்டாம்ப்பா!" என்று மறுத்து விட்டான் விகடு.
            விகடு இப்படி மறுத்தாலும் அடுத்து சில வாரங்களுக்குப் பின் ஹாஸ்டல் நிர்வாகத்தின் சார்பில் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை அந்த வாரத்தின் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் மட்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று திங்கள் கிழமை காலையில் கொண்டு வந்து விடுமாறு கடிதம் போட்டார்கள். வழக்கமாக காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு விடுமுறைகளை அறிவித்து இப்படிக் கடிதம் போடுவார்கள். இது போன்று அவர்கள் கடிதம் எழுதியது அவர்களின் ஹாஸ்டல் வரலாற்றில் அதுதான் முதல்முறை. அதற்கு ஒரு காரணம் இருந்தது.
            அகால மரணமடைந்த முகிலனின் அப்பா உழைக்கும் போராளிகள் எனும் கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்தார். அவர் முகிலனின் மரணத்தை அத்தோடு விட்டு விட விரும்பவில்லை. தனது மகனின் மரணத்தை அவர் சந்தேக மரணமாக வழக்கு பதிய வைத்திருந்தார். அத்தோடு நாகப்பட்டிணம் நீதிமன்றத்திலும் வழக்கு பதிந்திருந்தார்.
            அவர் தான் சார்ந்திருந்த கட்சியின் சார்பாக தனது மகன் முகிலனின் மரணத்துக்கு நியாயம் கேட்டு அந்த ஞாயிற்றுக் கிழமை அன்று கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆர்ப்பாட்டம் பள்ளியில் தொடங்கி ஹாஸ்டலில் முடியும் வகையில் அவர் திட்டமிட்டிருந்தார். இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் போது ஹாஸ்டலில் பிள்ளைகள் இருப்பதை ஹெட்மாஸ்டரும், மணிவாசகநாதரும் விரும்பாமல் இருந்திருக்கலாம். இந்தக் கண்டனப் பேரணி மற்றும் ஆர்பாட்டத்துக்கு அவர்கள் தடையாணை பெற முயன்றதாகவும் ஆனால் அது முடியாமல் போய் விட்டதாகவும் நரிவலத்தில் ஒரு பேச்சு அடிபட்டது. அத்துடன் முகிலனின் அப்பாவோடு சமரசப் பேச்சிலும் ஈடுபட்டுப் பார்த்தார்கள். அதுவும் எடுபடாமல் போய் விட்டது.
            அந்த சனி, ஞாயிறன்று விகடு உட்பட எல்லா பிள்ளைகளும் ஹாஸ்டலை விட்டு பெற்றோர்களோடு அவரவர் வீடுகளுக்குப் போயிருந்தனர். திங்கள் கிழமை காலையில்தான் பிள்ளைகள் ஹாஸ்டலுக்கு வந்தனர். நரிவலம் முழுவதும் ஹாஸ்டலும், பள்ளிக்கூடமும் பெயர்ந்து விழுந்து விட்டது போல பேசிக் கொண்டிருந்தார்கள். நரிவலத்தில் கூடிய கண்டனக் கூட்டம் பெருங்கூட்டமாக இருந்ததாகவும், பள்ளி நிர்வாகத்தையும், ஹாஸ்டல் நிர்வாகத்தையும் ஒழித்துக் கட்டும் வகையில் கூடியவர்கள் முழக்கமிட்டதாகவும் பேசிக் கொண்டார்கள். அவ்வளவு ஆட்களை முகிலனின் அப்பா எங்கிருந்து திரட்டிக் கொண்டு வந்தால் என்று நரிவலமே ஆச்சரியப்பட்டுப் போனது. அவர் சொத்துபத்தில் கூடுதல் குறைச்சல் இருந்தாலும் செல்வாக்கான ஆளாகத்தான் இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.
            நரிவலத்தில் பெரும்புள்ளியாக மணிவாசகநாதரும், ஆண்டியப்பநாதரும் இருந்த போதும் இதை அவர்களால் தடுக்க முடியாமல் போனது பெரும் பின்னடைவாகவும் பேசப்பட்டது. ஆண்டியப்பநாதர் கையில் தற்போது பள்ளியின் நிர்வாகம் இல்லாமல் இருந்ததால் இந்த விசயத்தில் அவர் அதிகம் பட்டுக் கொள்ளவில்லை என்றும் பேசப்பட்டது.
            இந்தப் பின்னடைவைச் சாதாரணமாக விட்டு விடக் கூடியவரா ஹெட்மாஸ்டர். அவரின் அபாரமான மூளை கண்டமேனிக்கு யோசித்துக் கொண்டிருந்தது. அவர் இந்தக் கண்டனக் கூட்டம் மற்றும் பேரணிக்கு எதிராக அமைதிப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்ய திட்டமிட்டார். அதற்காக அவர் பிள்ளைகள் மத்தியில் பேசினார். வழக்கமாக நடைபெறும் வழிபாட்டுக் கூட்டம் போல் அல்லாமல் மதியம் நான்கு மணி வாக்கில் பள்ளிக்கூடத்தின் எல்லா பிள்ளைகளையும் பிரதானக் கட்டிடத்தின் முன்பாக அவர் கூட்டினார். பிள்ளைகள் வகுப்புவாரியாக வரிசையாக வேப்பமர நிழலில் அமர்ந்திருந்தார்கள். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பிள்ளைகளுக்குப் பின்பாக நின்று கொண்டிருந்தனர். அன்று அவர் பேசியது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உரை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் பேசி முடித்ததும் பிள்ளைகள் அவ்வளவு உணர்ச்சிவயப்பட்டிருந்தார்கள். ஆசிரியர்களும்தான்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...