30 Apr 2019

துக்கத் தூக்கத்தில் நடந்தவன்



செய்யு - 70
            ஓர் அகால மரணம் நடந்த ஹாஸ்டல் எப்போதும் அங்கிருப்பவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும். அந்த ஹாஸ்டல் அதற்குப் பின் மனதுக்குள் உருகொள்ளும் தோற்றம் பயங்கரமானது. கயிற்றைக் கட்டித் தொங்க வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் யா‍ரோ ஒருவர் தொங்கிக் கொண்டிருப்பதான மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும். பகலில் இருக்கும் தைரியம் இரவில் இருக்காது. அதையும் தாண்டி இரவில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் தைரியமும் அந்த இரவுகளுக்கென்றே பிரத்யேகமாக மனம் எழுப்பிக் கொள்ளும் கனவுகளுக்குப் பின் இருக்காது.
            அகால மரணமடைந்த ஒரு ஜீவன் நம்மோடு பழகியிருக்கலாம். அன்போடு இருந்திருக்கலாம். அந்த ஜீவனுக்கு ஹாஸ்டலில் இருந்த சக ஜீவன்கள் எந்தத் துன்பமும் செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஹாஸ்டலில் இருந்த ஒவ்வொரு பிள்ளைகளின் மனமும் மரணித்த ஜீவனோடு தொடர்புபடத்தி அவரவர்களை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.
            மர்ம மரணத்தைத் தொடர்ந்து வந்த இரவுகள் ஒவ்வொன்றும் ஹாஸ்டலைத் திகில் பங்களா போல மாற்றிக் கொண்டிருந்தன என்பது வெறும் ஓர் உவமைக்கான வாசகம் மட்டுமன்று. நரிவலம் ஹாஸ்டல் ஓட்டுவீடுதான் என்றாலும் நிகழ்ந்து விட்ட அந்த மரணத்துக்குப் பின் அது பேய் பங்களாவின் தோற்றத்தைக் கூட்டிக் கொண்டு விட்டது.
            அநேகமாக ஒவ்வொரு பிள்ளையின் கனவிலும் வந்து முகிலன் மறுபடியும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான். "எங் கூடயே வந்துடுங்க! ஜாலியா இருக்கலாம்!" என்று கனவில் வந்து பேசுவதாகப் பிள்ளைகள் அரண்டு போய் தூக்கத்திலிருந்து எழுந்தார்கள். மரணம் நடந்தது பகலாக இருந்தாலும் அது அச்சத்தை அள்ளி வீசி ஒவ்வொரு இரவையும் ருத்ர தாண்டவமாடியது.
            இரவு நேரங்களில் ஹாஸ்டலின் பின்பக்கம் லைட்டைப் போட்டு சிறிது தூரம் கடந்துதான் டாய்லெட்டுக்குச் சென்றாக வேண்டும். நடந்து சென்று விடும் தூரம்தான். அதிகபட்சம் இருபது அடிகளுக்கு மேல் இல்லாத தூரம். அந்த இருபதடித் தூரத்தைக் கடந்து சென்ற விடாமல் நிகழ்ந்து விட்ட மரணத்தின் அச்சம் ஒவ்வொரு பிள்ளையின் மனதிலும் பீடித்திருந்தது. ஹாஸ்டலின் பின்பக்கம் செல்லவே பிள்ளைகள் பயந்தார்கள். நிகழ்ந்த மரணம் ஹாஸ்டலுக்கு முன்னே இருந்த விறகுக் கொட்டகையில்தான் என்றாலும் ஹாஸ்டலின் பின்பக்கம் உண்டான பயம் பிள்ளைகளுக்கு அதீதமாய் இருந்தது.
            பின்பக்கமிருந்த டாய்லெட்டைத் தைரியமாய்ப் பயன்படுத்திக் கொண்டிருந்த பிள்ளைகளும் சில நேரங்கள் டாய்லெட் வரைச் செல்ல பயந்து ஹாஸ்டலுக்குப் பக்கத்திலேயே மலத்தைக் கழித்து விட்டு உள்ளே ஓடி வர ஆரம்பித்தனர். பின்பக்கம் செல்லவே பயந்த பிள்ளைகள் ஹாஸ்டலின் முன் லைட் எரிந்து கொண்டிருக்கும் முன்பக்கம் யாரும் பார்க்காத நேரத்தில் மலம் கழித்து விட்டு கமுக்கமாய் வந்து உட்கார்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். உட்கார்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள் என்றால் மலம் கழித்தப் பின் கால் கழுவாமல்தான். ஒவ்வொரு நாளின் காலையிலும் ஹாஸ்டலைச் சுற்றி மலவாடை வீச ஆரம்பித்தது. காலையில் எழுந்து சென்ற பிள்ளைகள் மலத்தில் கால் வைக்காமல் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
            வார்டன் தங்கராசு மலவாடை தாங்க முடியாமல் குமட்டிக் கொண்டு வாந்தியெடுக்க ஆரம்பித்தார். தங்கராசோடு இல்லாமல் ரவுண்ட்ஸ் வரும் சபரி வாத்தியார், சமைக்க வரும் பெண்மணிகள், வாட்ச்மேன் தாத்தா என்று பலரும் சகிக்க முடியாத அருவருப்புக்கு ஆளானார்கள். பிள்ளைகளுக்கு மரண பயம் என்றால் அவர்களுக்கு மல பயம். ஹாஸ்டலில் மலமும் மலம் சார்ந்த பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்தது.
            ஹாஸ்டல் பிள்ளைகளுக்கு அது தங்கள் மலம் என்பதாலோ என்னவோ அது குறித்து அவர்கள் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. தவிரவும் அவர்களுக்கு அப்படி மலம் கழிப்பதுதான் அப்போதிருந்த சூழ்நிலையில் பாதுகாப்பாகப் பட்டது. டாய்லெட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே மலம் கழிப்பது மிகுந்த பயத்தை அளித்தது. அதுவும் ஸீரோ வாட் பல்பு எரியும் டாய்லெட்டுக்குள் இரவில் மரண அச்சத்தை மனதில் சுமந்து கொண்டு மலம் கழிப்பதன் பீதியை எப்படிச் சொல்வது? டாய்லெட்டுக்கு என்றே அந்தக் காலத்தில் ஸீரோ வாட் பல்பைக் கண்டுபிடித்தது யாரோ?
            விசயம் இப்படியான பின் இது ஹெட்மாஸ்டரின் காதுகளுக்கச் செல்லாமல் இருக்குமா? விசயம் ஹெட்மாஸ்டர் வரை சென்றதும் ஹாஸ்டல் சில மாற்றங்களுக்கு உண்டானது. அந்த மாற்றங்களாவன,
            முதல் மாற்றமாக இரவு முழுவதும் ஹாஸ்டலின் எல்லா லைட்டுகளும் எரிய ஏற்பாடு செய்யப்பட்டது. டாய்லெட்டுகளின் ஸீரோ வாட் பல்புகள் பிடுங்கப்பட்டு அறுபது வாட்ஸ் பல்புகளாக மாற்றப்பட்டன.
            இன்னொரு வாட்ச்மேன் தாத்தா கூடுதலாக நியமிக்கப்பட்டார். இரண்டு வாட்ச்மேன் தாத்தாக்களும் ஒருவர் மாற்றி ஒருவராக பிள்ளைகள் டாய்லெட் போக வேண்டும் என்று சொன்னால், அவர்களை அழைத்துச் சென்று டாய்லெட்டில் விட வேண்டும்.  அவர்கள் டாய்லெட் போய் விட்டு வெளியே வரும் வரை கதவருகே காத்து நின்று மீண்டும் அழைத்துக் கொண்டு ஹாஸ்டலில் கொண்டு வந்து விட வேண்டும். இதுதான் அவர்களுக்குச் செய்யப்பட்டிருந்த பணி வரன்முறை. ஒரு சில நாட்களிலேயே இந்த விசயத்தில் இரண்டு தாத்தாகளுக்கும் சண்டை வர ஆரம்பித்து விட்டது.
            பிள்ளைகள் யாராவது டாய்லெட் போக வேண்டும் என்று சொன்னால் "நீ தொணைக்குப் போ!" என்று ஒரு தாத்தா இன்னொரு தாத்தாவிடம் சொல்வார். "இல்லயில்ல. இப்போதாம் நாம்ம ஒரு புள்ளய அழச்சிட்டுப் போனோம். அதால நீ தொணைக்குப் போ!" என்று இன்னொரு தாத்தா சொல்வார். மூத்திரத்தை அடக்க முடியாதது போல அவசரமாக வரும் டாய்லெட்டை அடக்க முடியாதது என்பதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். இவர்களின் சண்டையைப் பொருட்படுத்த முடியாமலும், இவர்களைச் சமாதானம் செய்விக்க முடியாமலும் வேகமாக ஓடி ஹாஸ்டலுக்குப் பக்கத்திலேயே மலத்தைக் கழித்து விட்டு பிள்ளைகள் வந்து விட ஆரம்பித்தார்கள்.
            இந்த விசயத்தின் தாக்கம் அதாவது போதிய நடவடிக்கைகள் எடுத்த பின் மீண்டும் உண்டான இந்த மலநாற்றத்தின் தாக்கம் ஹெட்மாஸ்டர் ஹாஸ்டலுக்கு நேரடியாக வந்து விசாரிக்க வேண்டிய சூழ்நிலையை உண்டு பண்ணி விட்டது. அவர் வந்து விசாரணையைத் தொடங்கியதுமே எல்லா பிள்ளைகளும், "ந்த ரெண்டு தாத்தாக்களும்தான் ஆஸ்டல சுத்தி அசிங்கம் பண்ணிட்டு அலயுறாங்க. நாங்கலாம் டாய்லெட்டுக்குத்தாம் போறம். இந்த ரெண்டுகளும்தான் வெளியில போயி நாறடிச்சுதுடுங்க சார்!" என்றார்கள் பிள்ளைகள் கோரஸாக.
            "ச்சீ! வெக்கமா யில்ல! ரண்டு பேரயும் வேலய வுட்டு தூக்குனாத்தாம் சரிபட்டு வர்ரும்!" என்று ஹெட்மாஸ்டர் சொன்னதும் அழாக குறையாக ரெண்டு தாத்தாக்களும், "தப்பு நடந்துடுச்சுங்க சார்! இனிமே இப்படி நடக்காம பாத்துக்குறோம்!" என்று அழாக குறையாகச் சொன்னதைப் பார்த்ததும் பிள்ளைகளுக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது.
            ஹெட்மாஸ்டர் பிரச்சனையை ஒரு மாதிரியாக ஊகித்திருக்க வேண்டும். "இனுமே யாரு டாய்லெட் போறன்னாலும் கூட ஒருத்தன தொணைக்குக் கூட்டிட்டுப் போ. கூட தாத்தாவையும் கூட்டிட்டுப் போகணும். இனுமே இது ஒரு பெரச்சனையாகக் கூடாது. ராத்திரி போறது பயமாக இருந்துச்சுன்னா சாயுங்காலமே எல்லாத்தயும் முடிச்சுக்கணும். இப்படி நாறடிக்கக் கூடாது!" என்றபடி அவர் போய் விட்டார்.
            அதன் பின்னும் இந்த மலப் பிரச்சனை அவ்வபோது தலைதூக்கும். அமுங்கிப் போகும். ஆனால் பிள்ளைகள் தூக்கத்திலிருந்து அலறியடித்துக் கொண்டு எழுவது அமுங்கிப் போகாத ஒரு பிரச்சனையாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. இரவு வந்தால் ஹாஸ்டலில் இருப்பது பயமாக இருந்தது. அதை விட இரவில் ஒன்பதரை மணி வரை படிக்க வேண்டும் என்ற ஹாஸ்டலின் விதியைக் கடைபிடிப்பது பிணத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு படிப்பதைப் போலிருந்தது. அதற்குப் பின் இரவில் உறங்குவது என்பது பிணத்தைக் கட்டிக் கொண்டு உறங்குவது போலிருந்தது.
            ஹாஸ்டலின் ஒவ்வொரு பிள்ளையையும் முகிலனின் மரணம் வெவ்வேறு விதமாக பாதித்தது. இப்போதைய நிலையில் சொன்னால் அது ஓர் உளவியல் சிக்கல் சார்ந்த நிலை. மனவியல் மருத்துவரை வைத்து ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் செய்யப்பட வேண்டிய நிலை. அப்போது அது குறித்தெல்லாம் யாருக்கு என்ன தெரிந்தது? விபூதியடித்தால் தீரும் பிரச்சனையாகத்தான் பார்க்கப்பட்டது. அப்போது என்று சொன்னால் அதிகபட்சம் இப்போதிலிருந்து இருபது ஆண்டுகளுக்கு மேற்பட்டிராது. இன்னும் சரியாகச் சொல்வதானால் இரண்டாயிரமாவது ஆண்டைத் தொடுவதற்கான ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பான காலம்தான்.
            அந்தக் காலத்தைப் பற்றிப் பேசுவதை விடவும் அதை விட முக்கியமாக விகடு தூக்கத்தில் நடக்கும் நிலைக்கு ஆளானான். ஒரு நாள் இரவு பூட்டாமல் விட்டிருந்த ஹாஸ்டல் கேட்டைத் திறந்து கொண்டு நடுராத்திரியில் அவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் தூக்கத்தில் நடந்தானோ? துக்கத்தில் நடந்தானோ? நடந்து போய்க் கொண்டிருந்தான்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...