31 Oct 2016

கிணற்று நிலாக்கள்


கிணற்று நிலாக்கள்
முகம் பார்க்க
கிணறொன்றைத்
தேடிப் பார்த்து
தேய்கிறது நிலா!
பழங்கனவை
நினைத்தபடியே
குப்பைத் தொட்டியாய்
நிரம்பிக் கிடக்கிறது
பாழுங்கிணறு!
*****

பளிச்சென ஒரு சிரிப்பு
பசிக்குக் குறைவாக
வைக்கப்படும் தட்டுகள்
பளிச்சென்று சிரிக்கின்றன
சாப்பிட்ட பின்பும்!
*****

துக்கம் கடத்தல்
வாட்ஸ் அப்பிலும்
பேஸ்புக்கிலும்
மேய்ந்தபடி இருக்க
சுலுவாக கடந்து விடுகிறது
இழவு வீட்டின் துக்கம்!
*****

5000 மரக்கன்றுகள்


5000 மரக்கன்றுகள்
இந்த ஆண்டும் 5000 மரக்கன்றுகள் நடப்பட்டன சென்ற ஆண்டு நடப்பட்ட அதே குழிகளில் வரிசையாக!
*****

நினைவு
சாவி காணாமல் போன போதுதான் நினைவுக்கு வந்தது லாக் ஆப் செய்யாமல் வந்த பேஸ்புக்.
*****

ஓடி வந்தவன்
கார்ப்பரேஷன் பைப்பை மூடாமல் ஓடி வந்தவன் வேக வேகமாக நிறுத்தினான் வாட்டர் கேனிலிருந்து சொட்டுச் சொட்டாகச் சொட்டிக் கொண்டிருந்த தண்ணீரை!
*****

30 Oct 2016

வேண்டாம் ப்ளீஸ்!

வேண்டாம் ப்ளீஸ்!
"கஞ்சா மட்டும் வேண்டாம்! ப்ளீஸ்!" என்ற புது கேர்ள் பிரெண்ட் நிஷா பெதடின் போட்டுக் கொண்டாள்!
*****

கண்டிஷன்
"விதவையாகி விட்ட வித்யாவிடம், "உன் குழந்தையை விட்டுட்டு வந்தா கல்யாணம் பண்ணிக்கிறேன்!" என்றான் ஆதவ் தன் குழந்தையை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கண்டிஷனோடு!
*****

நன்னயம்
"சின்ன வயசிலேர்ந்து உன்னை கொடுமை பண்ண சித்தியை இன்னம் ஏன் வீட்டுல வெச்சிருக்கே?" என்ற அனிதாவிடம், அமலா சொன்னாள்,
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்."
*****

நாயென்று..

வருத்தம்
பால் கொடுக்கும்
வருத்தம்
கள்ளிச் செடிக்கு!
*****

நாயென்று..
நாயென்று சொல்வதற்கு
நாய் இருக்கும் போது
மனிதன்
நாயென்று சொல்வது
மனிதர்களை!
*****

வெளிச்சம்
கண்களைக் கூசும்
வெளிச்சம்
எரிந்து கொண்டிருக்கிறார்
ஒருவர்
தீக்குளித்து!
*****

பாத்திரங்கள்
வித்தியாசமான பாத்திரங்கள்
வேண்டும்
எனும் நடிகைக்கு
வித்தியாசமான பாத்திரமாகவே
அமைகிறது
வாழ்க்கை!
*****

மனைகள்
விதைப்பார்கள் என்ற நம்பிக்கையில்
இருந்தது வயல்
விதைத்து விட்டுப் போனார்கள்
சிமெண்டையும் கம்பிகளையும்!
*****

29 Oct 2016

முதியோர் இல்லம்


முதியோர் இல்லம்
"தனிக்குடித்தனம் போகலாம்னு..." என்று மகன் தீபக் ஆரம்பித்ததுமே, ‍"வேண்டாம்பா! நாங்க ரெண்டு பேரும் முதியோர் இல்லம் போயிக்கிறோம்!" என்று ஒத்தக்குரலில் சொன்னனர் தீபக்கைப் பெற்றெடுத்த புண்ணியவான்கள் இருவரும்!
*****

பஞ்ச்
"இந்தப் படத்துல பஞ்ச் டயலாக்கே கிடையாது!" என்று டைரக்டர் சொன்னதும், "சூப்பர் சார்! இதையே பஞ்ச் டயலாக்கிப் பேசிடறேன்!" என்றார் சூப்பர் ஆக்டர் ஜிப்ரிஷ்!
*****

சரிதான்
"விளையாடுறேன்னு கை காலை உடைச்சுக்காம இருந்தா சரிதான்!" என்ற மொபைல் கேம் விளையாடும் மகன் தனுஷை ரசித்துக் கொண்டிருந்தார் குருநாத்!
*****

முத்தங்கள் தீர்ந்த பிறகு ...


இருக்கட்டும்
சாப்பிட மறந்த
சாப்பாட்டு பொட்டலத்தை
மறக்காமல்
எடுத்துச் சாப்பிடவாவது
வீட்டில் இருக்கட்டும்
நான்கைந்து எறும்புகள்!
*****

முத்தங்கள் தீர்ந்த பிறகு ...
உன் அன்பான நேசத்தை
என்னால் புரிந்து கொள்ள முடியாமல்
போய் விட்டது.
கட்டுபாடுகள் என்னைச் சுற்றி
முள்வேலி முகாம்கள் போல் இருந்தன.
அப்போதும் உன்னை முத்தமிடும் ஆசை இருந்தது
நான் கொடுக்காமல் விட்டு விட்டேன்.
நீயும் கேட்காமல் இருந்து விட்டாய்,
என்னிடமிருந்து என்னைத் தவிர
வேறு எதையும்
எதிர்பார்க்க விரும்பாத நீ!
*****

சொல்லாதே!
"கிணற்றுத் தவளை என்று
சொல்லாதே!"
"ஏன் என்றேன்?"
"கிணறு எங்கே இருக்கிறது
சொல்?"
என்றது தவளை.
*****

28 Oct 2016

சால்ட் அண்ட் பெப்பர்


வழி
"லைசென்ஸ், இன்ஷ்யூரன்ஸ், ஹெல்மெட் எதுவும் இல்ல! இதுல குடிச்சிட்டு வேற போனா எப்படியும் போலீஸ் பிடிக்கும்!" என்ன செய்வதென்று யோசித்த குமார் டாஸ்மாக்கை மூடச் சொல்லிப் போராட்டம் நடக்கும் தேரடி வீதி வழியாகத் திருப்பினான் டூவீலரை!
*****

சால்ட் அண்ட் பெப்பர்
அஜித் மாதிரி கணவன் வேண்டும் என்று காத்திருந்த ராதிகாவுக்கு பதினொரு வருடங்களுக்குப் பிறகு அவள் எதிர்பார்த்த மாதிரியே கணவனாக வந்தான் தேவானந்த் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்!
*****

கொலை
"சார்! பக்கத்து ப்ளாட்டுல தூக்குப் போட்டு தற்கொலை பண்ணிகிட்டாங்க!" என்று கூச்சல் போட்டவரிடம், "போலீஸ்க்குப் போன் பண்ணுங்க!" என்றார் அதைக் கேட்டவர். "தற்கொலை பண்ணிகிட்டதே அங்க குடியிருந்த போலீஸ்காரர்தான் சார்!" என்றார் கூச்சல் போட்டவர்!
*****

வரலாற்றைச் சுமத்தல்


சுழற்சி
தேய்ந்தாலும்
ஓடிக் கொண்டிருக்கும்
சிறுவர்களின்
கையில் சேர்ந்து விட்ட
டயர்கள்!
*****

மாறும் சித்திரம்
அவர்
இரத்த அழுத்தத்தால் கூட
மயங்கி வீழ்ந்திருக்கலாம்!
சர்க்கரை நோயால் கூட
சரிந்து வீழ்ந்திருக்கலாம்!
அடுத்த நொடியே
அந்த சித்திரத்தை
மாற்றி வரைந்து விடுகிறது
அருகில் இருக்கும்
டாஸ்மாக் கடையொன்று!
*****

வரலாற்றைச் சுமத்தல்
கடை மடை காணாத
நதிகளுக்கு
மனப்பாடமாகத் தெரியும்
அணைக்கட்டுகளின் வரலாறு!
*****

27 Oct 2016

காலடி மண்


காலடி மண்
திருஷ்டிக் கழிக்க காலடி மண் கிடைக்காமல் வீட்டைச் சுற்றி அலைந்தார்கள் மார்பிள்ஸ் போட்ட புது வீட்டில்!
*****

பேச்சு
"எனக்கு ரொம்ப பேச வராது!" மைக் பிடித்தவர் பேசிக் கொண்டே இருந்தார் ஒன்றரை மணி நேரமாக!
*****

பிரேக்
"ஆப்டர் தி பிரேக்!"  இடைவெளியில் பாலூட்ட விரைந்தாள் நிரஞ்சனா!
*****

அப்பால்


அப்பால்
தெரியாமல் அழைத்து விட்ட
ஒரு பொழுதில்
சரியாகத்தான் சொன்னது
தொடர்பு எல்லைக்கு
அப்பால் இருப்பதாக
விபத்தொன்றில்
அகால மரணமடைந்து விட்ட
நண்பனின் அலைபேசி எண்!
*****

கொடுத்திருக்கலாம்
முப்பது வருடமாய்
விரதமிருந்து
அலகு குத்தும்
பக்கதனுக்காக
வாடகை வீட்டையாவது
சொந்த வீடாக
மாற்றிக் கொடுத்திருக்கலாம்
கடவுள்!
*****

நோட்டு
பிள்ளைகளின் பழைய நோட்டு
அம்மாக்களின்
கோல நோட்டு!
*****

26 Oct 2016

மறத்தல்


மறத்தல்
பறத்தலை மறந்த கிளி
ஜோசியம்
பார்க்க ஆரம்பித்தது!
*****

முடிவில்...
கண்களை
மூட வைக்கும்
மின்னல்
காதுகளைப்
பொத்த வைக்கும்
இடி!
முடிவில்
பெய்கிறது
மனதைக் குளிர வைக்கும்
மழை!
*****

அறிமுகம்
தூரத்துச் சொந்தம் என
பத்து பதினைந்து பேர்களாவது
தேர்கிறார்கள்!
பக்கத்துச் சொந்தம் என
தேர்வதற்குதான் இல்லை
யாரும்!
*****

ப்ரபோஸ்


ப்ரபோஸ்
காதலில் மட்டும் தோற்கக் கூடாது என்ற வெறியில் ப்ரதீப் நன்கு யோசித்து ப்ரபோஸ் செய்தான் ஒரே நேரத்தில் ராகவிக்கும், ரஞ்சனாவுக்கும்!
*****

ஹன்ஸ், நயன் மாதிரி
"ஹன்சிகா மாதிரி, நயன்தாரா மாதிரி பொண்ணு இருக்கணும்!" என்று சிவா கண்டிஷன் போட, "ஆளானப்பட்ட சிம்புவுக்கு நயன்தாராவும் கிடைக்கல, ஹன்சிகாவும் கிடைக்கல! இவனுக்கெல்லாம்..." என்று உதடு வரை வந்ததை மறைத்துக் கொண்டு, "பார்க்கலாம் தம்பி!" என்றார் தரகர் தங்கச்சாமி!
*****

என்ன பண்றேன் பார்!
தன்னிடம் தொழில் கற்று, தனக்கு எதிரே கடை விரித்த முகுந்தனை என்ன செய்வதென்று யோசித்த, முடிவில் மருமகனாக்கிக் கொண்டார் ராமசாமி!
*****

25 Oct 2016

விளக்கேற்றி வை!


நிவர்த்தி
குளம் இல்லாத ஊரில்
வீடு தோறும்
மீன் தொட்டி!
*****

விளக்கேற்றி வை!
விளக்கேற்றி வை
விடிய விடிய எரியட்டும்
இந்த
மின்வெட்டு நாள்களில்
வரப் போகும் நாள்களெல்லாம்
அப்படியே ஆகட்டும்!
*****

அப்போதும் இப்போதும்
முன்பெல்லாம்
நொடிக்கொரு தரம்
கண்ணாடி பார்ப்பார்களாம்!
இப்போதெல்லாம்
நோடிக்கொரு தரம்
செல்பி எடுத்துப் பார்ப்பார்களாம்!
*****

ட்ரீட்மெண்ட்


ட்ரீட்மெண்ட்
"எனக்கு என்ன பண்ணுது டாக்டர்?" என்றவரிடம் சிரித்துக் கொண்டே, "யூ ஆர் ஆல்ரைட்!" என்றார் சைக்கியாட்ரிஸ்ட் ஆனந்த் அபிமன்யூ!
*****

பாஸின் மனைவி
தான் காதலித்து ஏமாற்றிய திவ்யாவை இரண்டாண்டுகளுக்குப் பின் திவாகர் சந்தித்தான் தன் பாஸின் மனைவியாக!
*****

நான்கு நண்பர்கள்
நான்கு நண்பர்களில் ஒருவன் பெரும் குடிகாரனாகி இருந்தான். இரண்டாமவன் அரசியல்வாதியாகி இருந்தான். மூன்றாமவன் கள்ள மார்க்கெட்டில் புழங்கிக் கொண்டிருந்தான். நான்காமவன் மட்டும் மூன்று பேரின் மனைவிமார்களிடமும் கள்ளத்தனம் பண்ணிக் கொண்டிருந்தான்!
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...