குதிரையா? கழுதையா? – ஒரு குறுங்கதை!
தியாகராஜனின் அப்பா ஒரு பழைய
காலத்து மனிதர். அதாவது, லாபத்தை விட நிம்மதியை அதிகம் நேசிப்பவர். அவரிடம் ஒரு விசித்திரமான
பழக்கம் இருந்தது. பத்து மூட்டை நெல்லைப் பத்து இடங்களில் வைப்பார். ஏம்பா இந்தச் சிதறல்?
என்று கேட்டால், எல்லா எலிக்கும் ஒரே நேரத்துல பசி எடுக்காதுப்பா, என்பார்.
தியாகராஜனுக்கு அது அப்போது
புரியவில்லை. அவன் வளர்ந்தான். முப்பத்தைந்து வயதில் ஒரு வீடு, கொஞ்சம் தங்கம், ஒரு
காலி மனை என்று ஒரு சமநிலையான மனிதனாக ஆனான். அதாவது, போரடிக்கிற அளவுக்கு ஒழுக்கமான
முதலீட்டாளன்.
அப்புறம், அந்தப் பெங்களூர்
பார்ட்டி நடந்தது.
கமலக்கண்ணன் அங்கே ஒரு தீர்க்கதரிசி
போல அமர்ந்திருந்தான். கையில் மதுக்கோப்பை. கண்களில் பங்குச் சந்தையின் பச்சை நிறக்
கனவுகள். தியாகராஜா, நிலம் தங்கம்லாம் வெறும் சென்டிமென்ட் மச்சி. ஓடுற குதிரை மேல
காசைப் போடணும். அதான் இன்னிக்கு ரிலிஜியன், என்றான்.
தியாகராஜனுக்கும அந்த மதம்
பிடித்துக்கொண்டது.
முதலில் பிக்சட் டெபாசிட்டைத்
தியாகம் செய்தான். பிறகு எமெர்ஜென்சி பண்டைக் கொன்றான். பின் மனைவியின் நகைகள் அடகுக்
கடை இருட்டில் தவம் இருக்கப் போயின. கடைசியில், அந்தப் புறநகர் மனையையும் விற்றுச்
சந்தையில் கரைத்தான்.
விரைவில் தியாகராஜன் ஒரு
பங்குச் சந்தைப் புலி என்று ஊருக்குள் வதந்தி பரவியது. சொந்தக்காரர்கள் ஓடி வந்தார்கள்.
இந்தாங்க என் சேவிங்ஸ், இதையும் கொஞ்சம் புலியாக்கிக் கொடுங்க என்றார்கள்.
மற்றவர்கள் பணத்தில் டே டிரேடிங்
செய்வது ஒரு போதை. தியாகராஜனுக்கு அது தலைக்கேறியது. அதுவும் தெரியாத வித்தையைத் தெரிந்ததாக
நினைத்துச் செய்வது தற்கொலைக்குச் சமம். அதையும்தான் செய்து பார்ப்போம் என்று தோன்றியதோ
அவனுக்கு என்று தெரியவில்லை.
தியாகராஜனின் சனி பெயர்ச்சி
சரியில்லையோ என்னவோ? அமெரிக்க ஈரான் போர் தொடங்கியது. சந்தை சீட்டுக்கட்டுகளை விட மோசமாகச்
சரிந்தது. அவன் புலி வேஷம் கலைந்தது. இப்போது நான்கு பக்கமும் செல்போன்கள் அலறுகின்றன.
தூக்கம் போய் நான்கு வாரம். உலகமே ஒரு பெரிய கடன் பத்திரமாகத் தெரிந்தது.
சோகத்தைப் போக்கிக் கொள்ள
பீச் பக்கம் எட்டிப் பார்த்தான். அங்கே கமலக்கண்ணன். பழைய தீர்க்கதரிசியைக் காணோம்.
யாரோ ஒருவனிடம் ஐநூறு ரூபாய்க்குக் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
என்னடா கமலக்கண்ணா? குதிரை
என்னாச்சு? என்றான் தியாகராஜன்.
கமலக்கண்ணன் கசப்பாகச் சிரித்தான்.
குதிரை ஓடுச்சு மச்சி. ஆனா அது என் மேல ஏறி மிதிச்சுட்டு ஓடிருச்சு. ஷேர் மார்கெட்
பிராபிட்ன்னு உங்கிட்ட காட்டிய ஸ்கிரீன் ஷாட்ஸ் அத்தனையும் பேக் கிரியேஷன்ஸ். அன்னைக்கு
நான் உன்கிட்ட அப்படி சீன் போட்டதே, நீயாவது எனக்குக் கொஞ்சம் கைமாத்துக் கொடுப்பேன்னுதான்.
ஆனா நீயும் என் கூடவே நடுத்தெருவுக்கு வந்துட்டியே!
தியகராஜனுக்குச் சிரிப்புதான்
வந்தது. நாம் எப்போதுமே ஒரு பெரிய முட்டாளாக இருக்கும்போது, நம்மை விடப் பெரிய முட்டாளையே
குருவாகத் தேடிக்கொள்கிறோம் என்று தோன்றியது.
வீட்டிற்கு வந்தான். அப்பா
ஈஸி சேரில் அமர்ந்து பழைய கணக்குப் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் முகத்தைப்
பார்த்தார். என்னப்பா, எல்லா மூட்டைக்கும் எலி வந்துருச்சா? என்றார்.
தியாகராஜன் மெல்லத் தலையசைத்தான்.
அப்பா ஒரு பழைய மஞ்சள் பையை
டீப்பாய் மீது தூக்கிப் போட்டார். உள்ளே மஞ்சன் நிறம் மினுமினுக்க தங்கம்.
அன்னைக்கு உன் பெரியப்பா
நிலம் வாங்கச் சொன்னப்ப, நான் வேணாம்னு வாங்கி வச்சது. இதுல உன் நஷ்டமெல்லாம் தீராது.
ஆனா, உன் வீட்டுல இன்னிக்கு அடுப்பு எரியும். முதல்ல கடன்காரங்களைச் சமாளி. அப்புறம்
உழைச்சு இதை மீட்டு வை, என்றார் அப்பா இறுகிப் போன முகத்தோடு.
தங்கத்தின் மஞ்சள் நிறம்
அன்று ஒரு பெரிய உண்மையைச் சொன்னது போலிருந்தது தியாகராஜனுக்கு.
அதாகப்பட்டது, குதிரையை விடக்
கழுதை மேல் சுமை ஏற்றுவது பாதுகாப்பானது. அது மெதுவாகத்தான் போகும், ஆனால் கீழே தள்ளாது.
மயங்கிக் கிடந்தவனுக்குக்
குளுக்கோஸ் டிரிப் ஏற்றியது போல இருந்தது இப்போது தியாகராஜனுக்கு.
*****
